Friday, May 27, 2005

நீதி வென்றது???

பிந்துனுவெவ படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை.

"இதற்கெல்லாம் சட்டம் சரிவராது என்றால் சன்னம்தான் சரிவரும் என்று முடிவெடுப்பதில் தவறென்ன? அந்த நிலைமையைத் தோற்றுவித்தவர் யார்? "

சிறிலங்காவில் பிந்துனுவெவ எனும் இடத்தில் சிறைச்சாலையொன்று உள்ளது. அங்கு சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 27 இளைஞர்கள் ஒரே இரவில் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 17 வயதுக் “குழந்தையும்” அடங்கும். அதில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 41 பேரில் நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 2003 இல் தீர்ப்பளிக்கப்பட்டது. நேற்று அவர்களின் தண்டனைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. சட்டத்தரணிகளின் கூற்றுப்படி இனி மேல்முறையீடு செய்ய ஏதுநிலைகளில்லை. ஐ.நா. வில் மனுச்செய்யலாம் என்கிறார்கள். எதிர்பார்த்த முடிவுதான்.


இதுபோலவே ராஜபக்ச எனும் இராணுவ வீரனும் அவனுடன் சேர்ந்த மேலும் மூவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைவழக்கில் இத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னாலுள்ள மற்ற விதயங்கள் அப்படியே அடங்கிப்போய்விட்டன. அந்த இராணுவ வீரன் “தன் மேலதிகாரிகள் கொன்ற 400 பேர் வரையான சடலங்ளை தான் செம்மணியிற் புதைத்திருக்கிறேன்” என்று நீதிமன்றில் வைத்துச் சாட்சியம் சொல்லியும், எந்தப் பயனுமில்லை. இன்றுவரை யாழ்ப்பாணத்தில் 1996 இல் இராணுவத்தாற் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன எழுநூறு வரையான இளைஞர் யுவதிகளின் முடிவுகள் தெரியாது. அவர்களில் ஆக 16 பேர் மட்டும் கொல்லப்பட்டு விட்டார்களென்று ஆணைக்குழு கூறியுள்ளது. (மிகச்சாதாரணமாப் போய்விட்டது அந்தக்கொலைகள்) எட்டு வருடங்களாக அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறவோ அதைப்பற்றி அரசுக்கு அழுத்தங்கொடுக்கவோ எவரும் தயாரில்லை. மனித உரிமை பேசும் அமைப்புக்களும் நாடுகளும் வாளாவிருக்கின்றன. ஏறத்தாள அனைவரும் இறந்துவிட்டனர் என்ற நிலைமைக்கு அந்தப் பெற்றோர்கள் வந்து விட்டனர்.
வன்னியில் மன்னார்கடலிலும் முல்லைத்தீவுக் கடலிலும் அடைந்துவந்த சடலங்கள் சிலவற்றைக் கண்டெடுத்த போதே எமக்குப் புரிந்து விட்டது, அவை யாழில் கைதுசெய்யப்பட்ட சிலரினதுதான் கடலில் கொண்டுபோய் வீசப்பட்டிருக்கின்றனவென்பது. அப்பட்டமான ஒரு மனித அழிவை எல்லோரும் வேடிக்கை பார்த்துநிற்கும் கொடுமை இது. இதற்கு அரசியல் வழியில் நீதிகிடைக்குமென்பதெல்லாம் வெறும் பகற்கனவு. அவர்கள் கொல்லப்படவில்லையென்றால் எங்கே வைத்திருக்கிறார்கள்? எழுநூறு பேர் என்பது மிகச்சிறிய கணக்குப்போலும். அல்லது ஏதாவது படித்துப் பட்டம்பெற்றவர்களாயும் மனித உரிமைபற்றிக் கதைத்தவர்களாயுமிருக்க வேண்டும்போலும். இல்லை புலிகளை எதிர்த்து ஏதாவது கதைத்திருந்தால் இவ்விடயத்தில் ஏதாவது செய்யலாமென்று நினைக்கிறார்கள்போலும்.

இப்போது பிந்துனுவெவ படுகொலைகள் பற்றிய தீர்ப்பு இன்னொருமுறை நீதியை நிலைநாட்டியிருக்கிறது. அப்பட்டமான ஒரு படுகொலையைச் சாதாரணமாக முடித்துவிட்டார்கள். சிறைச்சாலைக்குள்ளேயே அனைவரும் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளார்கள். தப்பிய பலர் வாக்குமூலமும் கொடுத்துவிட்டார்கள். நீதிமன்றில் குற்றவாளிகளில் நால்வருக்கு மரணதண்டனையும் விதித்துவிட்டார்கள். இப்போது அனைத்தையும் திருப்பிவிட்டார்கள். அப்போ அந்தக் கொலைகளுக்கு முடிவென்ன? எதுவுமில்லை. ஆத்திரமடைந்த சில பொதுமக்களால் அந்தப் 27 பேரும் கொல்லப்பட்டார்கள். அவ்வளவே. இதில் குற்றம்சாட்டவோ தண்டனையளிக்கவோ எதுவுமில்லை.

2003 இல் இந்நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்ட போது ஈழநாதத்தில் 'பிரபுத்திரன்' எழுதிய பத்தியில் “இத்தண்டனை வெறும் கண்துடைப்புத்தான். இன்னும் இருவருடத்தில் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான பேரங்கள் பேசி முடிந்தபின்புதான் இத்தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தண்டனை மூலம் தமிழர்கள் மேல் மேலும் அரசபயங்கரவாதம் தன் கோரமுகத்தைக் காட்டப்போகிறது.” என்று எழுதப்பட்டிருந்தது. எவ்வளவு சரியான வார்த்தைகள்? 90 இல் காரைநகர் கற்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் இளைஞன் ஒருவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது சிறிலங்கா நீதிமன்றம். அவர்களின் நோக்கம் தெளிவானது. அதைப்பார்த்து வாய்மூடியிருக்கும்- ஆனால் ஒருதரப்புக்கு மட்டும் மனிதநேயத்தையும், ஜனநாயகத்தையும் போதிக்கும் சக்திகளின் நோக்கமும் தெளிவானது.

நீங்களே சொல்லுங்கள், இத்தனைக்குப்பிறகும் ஒருவனுக்கு (அவன் அடக்கட்படும் தமிழனாயிருக்கும் பட்சத்தில்) ஜனநாயகத்திலும் நீதியமைப்பிலும் நம்பிக்கை வருமா? பிந்துனுவெவப் படுகொலைக்கு என்ன முடிவு?

நீதிமன்றம் அவர்களைத் தண்டனையிலிருந்து மீட்டுவிடலாம். ஆனால் அவர்களால் மீள முடியாது. எங்காவது வெளிநாடு சென்று வாழ்வது உத்தமம். இன்றேல் தண்டனை அவர்களைத் தேடிவரும். இதற்கெல்லாம் சட்டம் சரிவராது என்றால் சன்னம்தான் சரிவரும் என்று முடிவெடுப்பதில் தவறென்ன? அந்த நிலைமையைத் தோற்றுவித்தவர் யார்? தோற்றுவித்துக்கொண்டிருப்பவர்கள் யார்?

இதே சிறைப்பொறுப்பதிகாரி ‘இனந் தெரியாதவர்களால்’ கொல்லப்படும்போது பல உலக நாடுகளும் அமைப்புக்களும் கூக்குரல் இடப்போவது மட்டும் உறுதி. அவர்களுக்கென்ன வாங்கும் சம்பளத்திற்குக் கூப்பாடு போடவேண்டியது கடமை. இதே சம்பவத்திற் கொல்லப்பட்ட 17 வயதுக் “குழந்தை” பற்றி எந்த அக்கறையும் அவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் இதே காரணிகளிலிருந்து தன்னையும் தான் சார்ந்தவர்களையும் காக்க ஆயுதமேந்தும் “குழந்தை” மட்டுந்தான் அவர்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். ஏனெனில் அவர்கள் உயிரை இழப்பதொன்றும் பெரிய விசயமில்லை. தமது 'சிறுபராயத்தை' இழக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை. அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. (இன்னும் குழந்தை என்ற சொல்லைத் தமிழில் இவர்களைக் குறிக்கப் பாவித்துக்கொண்டிருக்கும் பண்டிதர்களைக் குறித்தும் கேட்கிறேன்)

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.abc.net.au/ra/news/stories/s1379012.htm
http://www.news.tamilcanadian.com/news/2000/12/20001203_5.shtml
http://www.tamilcanadian.com/pageview.php?ID=2105&SID=257
http://www.tamilcanadian.com/page.php?index=342
http://www.news.tamilcanadian.com/news/2001/09/20010928_1.shtml

Labels: , ,


Saturday, May 21, 2005

J.V.P.--- சமகாலப் பார்வை.

தம்கருவிலே தம்மையே கருவறுக்க தாமே கருக்களைக் காவுவோர் -2 -
க.வே.பாலகுமாரன்-

J.V.P. புரட்சி செய்ய முயன்ற ஒவ்வொரு முறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டும் எதிர்மறை நிலையெடுத்ததே அவர்கள் வரலாறாகிவிட்டது.

இதன் முதற்பாகம் இங்கே.

இப்போது தமது மூன்றாவது எழுச்சிக் காலகட்டத்துள் ஜே.வி.பியினர் பிரவேசித்துள்ளனர். 1971ஆம் ஆண்டு காட்டிய அதே முனைப்போடு அதே தமிழ்மக்கள் மீதான காழ்ப்போடும் அன்றும் அப்போதிருந்ததைவிட உறுதியான கட்டமைப்போடும் அதிகரித்த செல்வாக்கோடும் இன்று அவர்கள் செயற்படுகின்றனர்.

நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியல் மயப்பட்டும் சில விடயங்களிற்கு மிகச் சரியான நிலைப்பாடோடும் அவர்கள் செயற்படுவதாக மாமனிதர் சிவராம் போன்றோரே கருதுமளவு அவர்கள் தீவிரமாக இன்று இயங்கி சிங்களத்தின் மரபுசார்ந்த கட்சிகளை முடக்கிவிட்டுள்ளனர். எனவே இன்று எழுந்துள்ள கேள்வி இம்முறையாவது அவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவார்களா? இல்லவே இல்லை.

அவர்கள் ஒரு அரசியல் விபத்து. அவர்களைப் பார்த்துக் கலங்கவோ, கற்கவோ என்னவுள்ளது? என கேட்பாருமுள்ளனர். எனவே உண்மை நிலையென்ன? இலக்கை அடைவார்களா? அல்லது ஏலவே இரண்டுதடவை நிகழ்ந்தது போன்று விபரீதத்தினை உருவாக்கப் போகின்றார்களா? வரலாறு சொல்லும் செய்தியென்ன? ஜே.வி.பியின் வரலாற்றினை எழுதியோர் சொல்வதென்ன?

'சிறிலங்கா: ஒரு தோற்ற புரட்சி" என்கிற நூலில் பயங்கரவாதம் அதன் முறியடிப்பு என்கிற மேற்குலகின் மிக விருப்பத்திற்குரிய துறைகளில் ஈடுபட்டு பிரபலமானவரான றோகன் குணரத்தின ஜே.வி.பியின் 1989ஆம் ஆண்டு வன்முறைக்காலம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'சர்வதேச அளவில் 20ம் நூற்றாண்டின் ஈவு இரக்கமற்ற குழுக்களில் ஜே.வி.பியும் ஒன்று. சிறிலங்காவின் மக்கள் வாழ்விலே முன்னெப்போதுமில்லாத அச்சத்தையும் ஒப்பிட முடியாதளவு பயங்கரவாதத்தையும் அது செலுத்தியது." அப்படி என்னதான் ஜே.வி.பி செய்தது என்கிற கேள்விக்கான பதில் மிகுந்த அவலத்தை, கலக்கத்தினை, வெறுப்பினை, அச்சத்தை ஏற்படு த்தவல்லது.

அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்ற தடம்புரண்டு தயக்கமின்றி எதனையும் செய்ய ஜே.வி.பி ஆயத்தமாக இருப்பதையும் இருக்கிற அதிகாரத்தை காப்பாற்ற எந்த அளவு அரச பயங்கரவாதத்தினையும் பிரயோகிக்க மரபுசார் சிறிலங்கா அரசியலாளர் எவ்விதத் தயக்கமுமின்றி செயற்படுவர் என்பதையும் 1989ம் ஆண்டின் வரலாறு நிரூபித்தது. எமக்கு மீண்டும் நினைவிற்கு வருவது "வரலாற்றின் அதிசயம் என்னவென்றால் அது திரும்பத் திரும்ப நிகழ்வதுதான் 'திரும்பிப்பார். எதிர்காலமென்று ஒன்றில்லை. ஏனெனில் இந்தக் காலமே எதிர்காலமாக உன்முன் வந்து நிற்கின்றது" என்கின்ற கூற்றுக்களே.

எனவே இம்முறை நடக்கப்போவது என்னவென்பதை நாம் இப்போதே உணர்கின்றோம். இத் துன்பியல் நிகழ்வுகள் சிங்கள மக்கள் மீது இடியாக இறக்கப்போகும் பேரிடர்களை நினைத்து உண்மையிலே நாம் வேதனைப்படுகின்றோம். இவ் வரலாற்றினை மீளவும் வாசிக்கும்பொழுதும் எழுதும்பொழுதும் இழக்கப்பட்ட, இழக்கப்படுகின்ற வாய்ப்புக்களையெண்ணி மேலும் மனத்துயர் அடைகின்றோம். ஏலவே நடந்த கிளர்ச்சிகளின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. 1971ம் ஆண்டு ஏப்பிரல் கிளர்ச்சியின் விளைவுகள் 15,000 உயிர்கள் இழக்கப்பட்டதும் இலங்கையின் பொருண்மியம் பின்னடை வைச் சந்தித்ததும் 400 மில்லியன் பெறுமதியான அரசாங்க சொத்துக்கள் அழிக்கப்பட்டதும்தான்.

மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஜே.வி.பியினர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் 390 பேர்வரை சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் றோகண உட்பட ஐவருக்கு ஆயுட்கால தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கதை இத்தோடு முடியவில்லை. 1988, 89களில் ஜே.வி.பியினர் செய்த இரண்டாவது கிளர்ச்சியின் விளைவுகள் எண்ணிலடங்காதவை.

1987ம் ஆண்டின் பின்னரைப் பகுதியில் நாளாந்தம் சராசரி 10பேர்வரை கொல்லப்பட்டனர். 1988 டிசம்பரின் பின் அது நாளாந்தம் 100 பேர் வரை யானது. அரச பயங்கரவாதமும் ஜே.வி.பியினரின் பயங்கரவாதமும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு 70-80 ஆயிரத்திற்கும் இடைப்பட்டோர் உயிர்களைப் பறித்ததாகக் கருதப்படுகின்றது. அரசாங்க உடமைக்கேற்பட்ட சேதவிபரமோ மிகப் பாரியவை. 9000மில்லியன் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றினைவிட சோமவன்ச தவிர்ந்த றோகண, உபதிஸ்ஸ கமநாயக்க, கீர்த்தி விஜயபாகு போன்ற அனைத்து ஜே.வி.பியினரின் மத்திய குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இவற்றினைவிட ஜே.வி.பியினரின் இரண்டாவது கிளர்ச்சி விளைவித்த மனவடுக்கள் சிறிலங்கா வரலாற்றின் மிகமிக இருண்ட பக்கங்கள். இரண்டாவது கிளர்ச்சி தாம் இனி ஒருபோதும் இராணுவ ரீதியாக செயற்பட்டு அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முடியாதென்பதையாவது ஜே.வி.பியினருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். இத்தனை இழப்பும் ஜே.வி.பியினருக்கு எதனையாவது உணர்ந்தியிருக்கின்றதா? எதுவுமேயில்லை.

எப்படியாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் மட்டும் அவர்கள் குறி மேலும் இறுக்கமடைந்ததைத் தவிர. இதற்குக் காரணமென்ன? இதற்கான பதிலை றோகன் தனது நூலில் தருகின்றார். பொதுவாக சிங்கள அரசியலாளர் குறித்தும் சிறிலங்காவின் எதிர்காலம் குறித்தும் தனது நூலின் முடிவிலே அவர் புகழ்பெற்ற ஐரோப்பிய தத்துவஞானியான ஜோர்த் சத்நாயானாவின் (geroge satnayana) கூற்றினை மேற்கோள் காட்டுகிறார். "வரலாற்றின் பாடங்களை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டிருக்கின்றார்கள்."

1988, 89ஆம் ஆண்டு நிகழ்வுகளை இங்கே மீள் நினைவூட்டிப் பார்ப்பதன்மூலம் சிறிலங்காவில் இனிமேல் நடக்கப்போகும் இழுபறியின் உச்சத்தை 2500 ஆண்டு காலமாக வளர்த்தெடுத்த பூதத்திற்கு இவர்கள் யாவரும் இரையாகப்போகும் வினாசத்தை எம் மக்கள் உணர்வர். அந்தப் பொழுதே தமிழ்பேசும் மக்களின் விடிவின் பொழுது. சிங்கள அரசியலாளனின் முண்ணான் எலும்பு மையத்திற்குள் பிரவேசித்த சன்னமாக, மூளைக்குள் புகுந்துவிட்ட அகற்றமுடியாத நச்சுக் கிருமியாக தொண்டைக்குள் சிக்கிவிட்ட கூர்முள்ளாக ஜே.வி.பி மாறிவிட்டது. ஆறுவருட சிறைவாசத்தின் பின் 1977 நொவம்பர் 20ஆம் திகதி சுதந்திர மனிதனாக றோகண வெளியில் வருகின்றார்.

எவ்வாறு அவர் வெளியில் வந்தார்? 1977ம் ஆண்டு ஏனைய தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று பதவியேறிய ஜே.ஆர் நிரந்தர மன்னனாக முடிசூட முடிவெடுத்தார். சுதந்திரக் கட்சியை முற்றாக அழிக்க ஜே.வி.பியினரை வெளியில் விடுவதே பொருத்தமென நினைத்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். றோகணவை வெளியில் விடாதிருந்தால் அவர் இன்னொரு மண்டேலாவாகியிருப்பார் என பகிடி வேறு விட்டார்.

அவர் எதிர்பார்த்தது நடந்தது; எதிர்பார்க்காததும் நடந்தது. சுதந்திரக் கட்சியோடு ஜே.வி.பி முழுதாக முரண்பட்டது. அவர் எதிர்பார்த்தது. ஆனால் ஜே.வி.பியினரின் ஏறுமுக வளர்ச்சி அவரால் பொறுக்கமுடியாதது. 1987இல் ஒரு உடன்பாட்டின் பொழுது ஜே.வி.பியோடு மறைமுக உடன்பாட்டிற்கு சுதந்திரக் கட்சியினர் வந்ததும் ஜே.ஆர் முழுத்தோல்வியை இறுதியில் சந்தித்ததும் 'கெடுவான் கேடு நினைப்பான்" கதையின் மறுவடிவம்தான்.

அளவிற்கு மீறிய சாணக்கியம் ஜே.ஆரை இறுதியில் அரசியற் சாக்கடைக்குள் தள்ளியது. ஜே.வி.பியினரின் இரண்டாம் கிளர்ச்சிக்கு வழி வகுத்தது. 1983, யூலை 31ஆம் திகதி ஜே.வி.பியினரை ஜே.ஆர் தடைசெய்தார். அரசாங்கத்தினைக் கவிழ்க்க சதி, யூலைக் கலகத்திற்கு பொறுப்பு என்பது இந்தச் சாட்டு. ஆனால் 1989களில் உண்மையிலே அரசாங்கத்தினை அவர்கள் கவிழ்க்க முயன்றனர்.

தனது அரசியல் இருப்பிற்காக தான் சார்ந்த சமூகத்தின் நிறைவேறாத கனவுகளின் ஏற்றத்தாழ்வின் வறுமையில் பிள்ளைகளையே பகடையாக அவர் பயன்படுத்த முயன்றமை வரலாற்றின் பாரிய தவறு. இதனை ஜே.ஆர் இறக்கமுன்னர் தன்னிடம் ஏற்றுக்கொண்டதாக றோகன் கூறுகின்றார். எனவே 1983-87ஆம் ஆண்டிற்கிடைப்பட்ட காலகட்ட தலைமறை செயற்பாட்டின் வீச்சின் விளைவாக 1987களில் பலம்பெற்று ஆயத்த நிலையை ஜே.வி.பியினர் அடைந்தனர். பெருமளவு நிதியை கொள்ளைகள் மூலம் கையகப்படுத்தினர்.

உள்வீட்டு உதவியோடு கணிசமான ஆயுதங்களை சேகரித்தனர். DJV என பிற்காலத்தில் பெருமச்சத்தோடு சிங்களவரால் அறியப்பட்ட தேசப்பிரேமி சனதா வியாபாரய (மக்கள் தேசப்பற்று இயக்கம்) தமது இராணுவப் பிரிவினை கட்டியெழுப்பினர். தமக்கும் தமது தந்தையர் தாய்மாருக்கும் சிங்கள முதலாளிய ஆட்சியாளர் செய்த அநீதிகளுக்குப் பழிவாங்க பெருமளவு அச்சமூட்டும் வன்முறை வடிவங்களைக் கைக்கொண்டனர். அச்சமூட்டி செயற்கையாக மக்களை தம்பக்கம் சேர்க்கலாமென எண்ணினர். ஜே.வி.பியினரின் போக்கு எப்போதுமே மாறும் நிலைமகளுக்கேற்ப தமது கருத்தியலை மாற்றி புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்து அதன்மூலம் தமது இலக்கை அடைய முயல்வது என்பது இப்போது அவர்கள் பற்றிய ஆய்வுகளின் முடிவு. இதற்கேற்ப தமிழ்மக்கள் மனதுணர்வினை புறம்தள்ளி ஒடுக்கி இறுக்கினர். முற்றிலும் விருப்பமில்லாமல் வேண்டாவெறுப்பாக இல - இந்திய உடன்பாட்டில் கைச்சாத்திட ஜே.ஆரின் இரண்டக கையறுநிலையைப் பயன்படுத்தினர். (இப்பொழுது சந்திரிக்கா அம்மையாரினதும் நிலையுமிதுவே. புலிகளோடு வேண்டாவெறுப்பாக இணைந்து செயற்படுவது பற்றிய கருத்தும் அதனை ஜே.வி.பினர் பயன்படுத்துவதும் பழைய கதைதான்).

இம்முறை இந்திய ஏகாதிபத்திய விரிவாக்க எதிர்ப்புக் கருத்தியலால் புண்பட்ட சிங்கள தேசப்பற்றின் உணர்வுகளை நன்கு கிளறினர். எனவே இந்திய எதிர்ப்புவாதம் பேரினவாதம் இரண்டையும் சம விகிதத்திற் கலந்து இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் 'ஏவல் நாய்களுக்கு எதிராக" கிளர்ந்தெழுந்து ஒருவகை ஒத்துழையாமை இயக்கத்தினை நடத்தி 1989 யூலை மாதமளவில் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டம் ஆயத்தமானது. இதற்கான வெளியரங்கம், ஊடரங்கு, கடையடைப்பு, அரசாங்க நிருவாகச் செயலிழப்பு, அச்சமூட்டும் வன்முறைவடிவப் பிரயோகம் என விரிந்தது.

இவ்வாறாக 1989களில் இன்னொரு அரசாங்கமாக ஜே.வி.பி மாறியது. தமது இறுதிக்கட்ட நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினரை குறிப்பிட்ட திகதிக்குள் (1989 ஆகஸ்ட் 20) பதவி விலகுமாறு இறுதியறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதனை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்கிற அவர்கள் அச்சுறுத்தல் நடைமுறையில் இராணுவத்தினரின் உறவுகளை கொல்லுமளவிற்குச் சென்றது.

ஆனால் ஜே.வி.பியினர் எதிர்பார்த்தது இம்முறையும் நடக்கவேயில்லை. மாறாக நடந்ததென்ன? 1989 நவம்பர் 12ம் திகதி உலப்பனை தோட்ட வீட்டில் மறைந்திருந்த றோகண கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து சோமவன்ச தவிர்ந்த மத்தியகுழுவினர் யாவரும் கொல்லப்படுகின்றனர். மீண்டும் நிறைவேறாத கனவுகளுக்காக செயற்கையான கிளர்ச்சி நிலையைத் தோற்றுவிக்க அச்சமூட்டி அணிதிரட்டிய சிங்களத்தின் புதல்வர்கள் தம் குருதியால் தம் தேசத்தைக் கழுவினர். ஆயினும் நிறைவேறாத புரட்சியின் கனவுகள் அவர்கள் கண்களிலே இறந்தபின்னும் ஒளிர்கின்றது. எனவே இவர்கள் கொள்கை மூன்றாவது புரட்சியை (?) நடத்த சோமவன்ச மட்டும் இரண்டாம் தடவையும் உயிர்தப்பி விடுகின்றார்.

இவரைக் காப்பாற்றி இந்தியா கொண்டுசென்று பின் அவர் பிரான்சு செல்ல உதவியது இந்திய உளவமைப்பான 'றோ" என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியது.

பல்வேறு காரணங்களால் இரண்டாம் புரட்சியும் தோற்றாலும் இவர்கள் உடனடி அழிவுக்கு ஜனாதிபதி பிறேமதாசா கைக்கொண்ட தனிமைப்படுத்தும் உத்தியே காரணம். இவ்வுத்தியை உணர்ந்த புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் ஜே.வி.பியினரால் இதைத் தடுக்கமுடியவில்லை. இந்திய எதிர்ப்புவாதத்தினை தானே கையாலெடுத்து புலிகளோடு இணக்கத்திற்கு வந்து பிறேமா ஜே.வி.பியினரின் அழிவிற்கு வழிவகுத்தார். எனவே சிங்கள சமூகத்தின் அடிப்படை முரண்பாட்டினை ஜே.வி.பியினர் பிரதிபலித்தாலும் வரலாற்றின் இயங்குவிதிகளை அவர்கள் புரியவில்லை. அவர்கள் என்றும் புரியமாட்டார்கள் என்பதற்கு இம்முறை அவர்கள் அரசியலுத்திகள் சான்றாகவுள்ளன.

எனவே இப்பொழுது சோமவன்சவின் முறை. வெளுத்துக்கட்டுகின்றார். 1971இல் புரட்சியில் தொடங்கிய பயணம் அமைச்சரவையில் வந்துநிற்கின்றது. 1964 சண்முகதாசனின் கட்சிக்குள் ஊடுருவத் தொடங்கிய உத்தி சிறிலங்கா சுதந்திரக்கட்சியைப் பணயக் கைதியாக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிங்கள பேரினவாதப் பயணமோ இப்போது PNM எனப்படும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தில் வந்துநிற்கின்றது. ஆனால் தாம் புரட்சி செய்ய முயன்ற ஒவ்வொரு முறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டும் எதிர்மறை நிலையெடுத்ததே அவர்கள் வரலாறாகிவிட்டது. எனவே இம்முறையோ அவர்கள் எதிர்நிலைச் செயற்பாடு சர்வதேசத்தின் முன் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டின் நியாயத்தினை உணர்த்தவும் வரலாற்றின் ஆபூர்வ தருணங்களில் எடுக்கப்படும் அரியதொரு முடிவிற்கு அவர்கள் வந்தடையவும் வழியை பிறப்பித்ததுமாக அமைந்துவிட்டது. உலகின் முதல் மனிதப் பேரழிவாக வருணிக்கப்படும் சுனாமி ஆழிப்பேரலை அழிவுகூட எம்மை மாற்றமுடியாது என்பதை எவ்வளவு தெளிவாக உரத்து உலகிற்குக் கூறிவிட்டீர்கள். எனவே நாம் செய்கின்றோம் 'நன்றி". நண்பர்களே அடுத்த முறையாவது உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எம்முடன் நிழல்போரை நிறுத்திவிட்டு நேரடியாக உங்கள் எதிரிகளோடு மோதுங்கள். ஏனெனில் எங்கள் தலைகளை அடுத்தமுறை உருட்ட வாய்ப்பிராது. அம்முறை நாங்கள் அருகிலிருக்க மாட்டோம். 'அண்டை நாட்டிலிருப்போம்".
-------------------------------------------------------------------
நன்றி: சித்திரை-வைகாசி மாத 'விடுதலைப்புலிகள்" ஏடு

Labels: , ,


Wednesday, May 18, 2005

குளக்கோட்டனும் புத்தனும்

திருகோணமலையில் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டது சம்பந்தமாகப் பதற்றம் தோன்றியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரசபைக்குச் சொந்தமான பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தம்மிடம் எதுவும் சொல்லப்படவில்லையென்றும் தகுந்த அனுமதி பெறப்படவில்லையென்றும் நகரசபைச் செயலர் க.விபுலானந்தன், உத்தியோகத்தர் சுந்தரம் அருனமநாயகம் ஆகியோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.


நிற்க, "இச்சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையென்றால் தாம் தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என "குளக்கோட்டன் படை" என்ற பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லாளன் படை, சங்கிலியன் படை என்பவற்றின் தொடர்ச்சியாகவே நான் இந்தக் குளக்கோட்டன் படையைக் கருதுகிறேன். ஆக, ஏதோ வில்லங்கமாக நடக்கப்போகிறது. இதற்கிடையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர் ஒருவர் சிங்களக் கும்பலொன்றினால் காது துண்டிக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் இச்சிலை சம்பந்தமாக அப்பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தாலேயே எனவும் சொல்லப்படுகிறது.

புத்தர் சிலையென்பது தனியே மதச்சின்னம் என்பதையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. எனவே இச்சிலை சம்பந்தமாக கடும் விசனம் தமிழர் தரப்பிலிருந்து வெளிப்படும் என்பது திண்ணம். இந்த சிக்கலான நேரத்தில் இப்படியொரு பிரச்சினையைக் கிளறி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமொன்று கிளம்பிவிட்டது. குளக்கோட்டன் படை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நிலமை சுமுகமாக இல்லையென்பதையே காட்டுகிறது.

நன்றி: தமிழ் நெட், சங்கதி.

Labels: , ,


Friday, May 13, 2005

வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

இன்று மே 13. ஈழப்போராட்ட வரலாற்றில் எவருமே மறக்க முடியாத முக்கியமான நாள். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பொருள்தரும் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதையொன்றை அமைப்பதை நோக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. ஏறத்தாள இரண்டரை ஆண்டுகாலம் நடத்தப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை தமிழர்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரத்தடையும் மருந்துத்தடையும் ஒரு பக்கம், தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மறுபக்கம், அடிக்கடி குண்டுவீச்சுக்களும் எறிகணை வீச்சுக்களும் இன்னொரு பக்கமென எமது மக்கள் பட்ட வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. அவற்றுக்குள்ளும் நிமிர்ந்து நின்று அப்போரை வென்றார்கள். அந்த ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட நாள் தான் மே 13.

1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம்; ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.


ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்திலிருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.


போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.


கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறியபோதுதான் பெண்புலிகளின் பெயர்பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.

பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.

சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.

இதற்கிடையில் மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்ற நடவடிக்கை மூலம் ஒட்டிசுட்டான் இராணுவத்தாற் கைப்பற்றப்பட்டது.

றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.

முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.

இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.

மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.

நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.


2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.

இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.

இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.

இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.

வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.

ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.

ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.

Labels: , , ,


Thursday, May 12, 2005

ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமை

அருணனின் வலைப்பதிவில் 'சாள்ஸ் அன்ரனி'யைப் பற்றிப் பதிவொன்று எழுதப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.

தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி 'நாராயணசாமியும்' எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.

இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)

புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)


அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, 'அதோ அந்தப்பறவை போல…'. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.

புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் 'இதயச்சந்திரன்'. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.

புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.
சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.
-----------------------------------------------------
சீலனினதும் ஆனந்தினதும் நினைவாக மீசாலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடமும் சிறுவர் பூங்காவும் சிங்களப் படையினரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த இடத்தில் நினைவிடம் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நினைவிடமே இது.

படங்கள்:- தமிழ்நெற்.

Labels: , ,


Friday, May 06, 2005

ஏற்றம்!

இவற்றைப் பார்த்துவிட்டு,
இன்னாருக்குப் போட்டியாகத்தான் இதைப் போட்டதாக நினைக்க வேண்டாம்.
அன்னாரோடு போட்டி போட யாராலும் முடியாது.




Labels: ,


Sunday, May 01, 2005

தராகி வலைப்பதிவு.

வணக்கம்!
படுகொலை செய்யப்பட்ட தராகி எனப்படும் மாமனிதர் சிவராமின் பெயரில் வலைப்பதிவொன்று மதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சிவராம் எழுதிய ஆக்கங்கள், அவரது செவ்விகள், ஒலி ஒளிப்பதிவுகள் என்பன சேர்க்கப்படும் திட்டமுண்டு. அவரைப் பற்றிப் பிறர் எழுதியவையும் சேர்க்கப்படும். இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட இம்முயற்சி மேலும் சிறப்பாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

http://taraki.yarl.net
அதில் சிவராமின் ஒளிப்பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாம் அரசபடைகளாற் குறிவைக்கப்பட்டுள்ளதை அவரே சொல்கிறார்.

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]