Tuesday, June 28, 2005

கௌசல்யன் மருத்துவமனையின் பணி

ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும்லெப்.கேணல் கௌசல்யன் மருத்துவமனையின் பணி.

(ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்று இங்கே படியெடுத்துப் போடப்படுகிறது.)

போர்க்களங்களில் விழுப்புண்ணடைந்த தமது தோழர்களுக்கு மருத்துவப் பணிகளையாற்றி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப்போராளி மருத்துவர்களின் பணி போர்நிறுத்த காலத்திலும் ஓய்வடைந்து விடவில்லை. இவர்களின் பணி பல நவீன வசதிகளை உள்வாங்கியவாறு தமது தேச உறவுகளின் துயரைத் தீர்ப்பதற்கான தீவிர செயற்பாட்டினை மேற்கொள்ளத் தூண்டுதல் அளித்துள்ளது. மக்களுக்காக களத்தில் நின்று எதிரியிடமிருந்து உயிர்காத்த வீரர்கள் இன்று மக்களின் உயிரைக் காவு கொள்ளவரும் நோய்களிலிருந்து காக்கும் பணியை சுமந்தவாறு மக்களைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான லெப் . கேணல் கௌ சல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவையானது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளி மருத்துவர்களினால் பின் தங்கிய கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. பெருந்தொகையான போராளி மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மருத்துவத் தேவையைக் கண்டறிந்து பூர்த்தி செய்து வருகின்றன. இவ்வாறு தமது சேவையினை கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு பாலமோட்டை கிராம மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போராளி மருத்துவக்குழுவின் மருத்துவரான தூயவனைச் சந்தித்து அவர்கள் செய்தபணிகளையும், அக்கிராமத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளும் முகமாக கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.


கடந்த இரண்டு நாட்களாக லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட இந்நடமாடும் மருத்துவ சேவையானது இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்களின் மருத்துவதேவையினை நிவர்த்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இந்தப் போராட்டத்திற்கு பக்கபலமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்டு வரும் இப்பிரதேச மக்கள் எதிரியின் எல்லைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவர்கள் மருத்துவ ரீதியான வசதிகள் அற்று இதனைக் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக மருத்துவ ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். எனவே இதனை நிவர்த்தி செய்வதற்காகவும் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருந்த இம்மருத்துவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவும் இதனைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்குமாக தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்த மருத்துவ சேவையின் மூலம் இங்கு சேவையினை வழங்கி வருகின்றோம். இதில் குறிப்பிடக் கூடியதென்ன வென்றால் நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெறவிரும்புபவர்கள் வைத் தியசாலைகளையும், வைத்திய நிபுணர்களையும் தேடிச் செல்வது தான் வழக்கம். இங்கு மக்களை நாடி நோயாளிகளைத் தேடி வைத்தியர்களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்கள், சத்திர சிகிச்சைக்கூடங்கள், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அதாவது குழந்தை வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சைக்கான வைத்திய நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், பெண்நோயியல் மருத்துவ நிபுணர்கள், தோல், கண், மூக்கு, தொண்டை போன்ற வைத்திய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், போராளிமருத்துவர்கள் என பெருந்தொகையான வைத்திய நிபுணர்கள் வந்திருக்கின்றார்கள். இது எமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் மக்கள் சுகதேகிகளாக இருக்கின்ற பொழுது தேசத்தின் வளர்ச்சிக்கு அது படிக்கல்லாக அமையும்.

எங்கள் இந்த சேவையினை ஆரம்பித்து செய்கின்ற பொழுது பல்வேறுபட்ட பிரச்சினைகளை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. தனிய மருத்துவம் சம்பந்தமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளார்கள். இதற்கு யுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது யுத்தம் தவிர்க்க முடியாததொன்றாக இருந்த காரணத் தினால் இவர்கள் பொருளாதார ரீதியாக, மருத்துவரீதியாக மட்டுமன்றி பல பக்கங்களாலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் அரசியல் ஸ்திரமின்மை என்பதே வெளிப்படையானது. அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதென்றால் அதற்காக மக்கள் நலமானவர்களாகவும், சுகதேகிகளாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றதனால் மருத்துவரீதியாக நாங்கள் எமது பணியை ஆற்றுகின்றோம். எனவே எம்மை பின்பற்றி ஏனைய சேவைகளும் இம்மக்களைத் தேடி வந்து உதவிபுரியும் என நம்புகின்றோம். அத்தோடு இந்த சேவையினை தொடர்ந்து நாங்கள் இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம்.

இந்தப்பகுதியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதான மருத்துவ வசதிகள் எவ்வாறிருந்ததென்பதைக் கூறமுடியுமா?

ஆம்- நாங்கள் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்த போது அவர்கள் கூறிய சில சம்பவங்களை இங்கு நான் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை மூன்று மணிபோல் ஒரு எட்டுவயதுச் சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையை நோக்கி சரியான பயணத்தினை மேற்கொள்ள முடியாமலிருந்த காரணத்தினால், அதாவது அன்று மழை பெய்து கொண்டிருந்தது. வாகனப் போக்கு வரத்து இங்கில்லை. மோட்டார் சைக்கிளிலே ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வீதியால் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் வழி விடவில்லை. இதன் காரணமாக அச்சிறுவன் இறந்துவிட்டான். இரண்டு மணித்தியால பயணத்தூரத்தில் இருக்கின்ற வைத்தியசாலையை சென்றடைய முடியாத காரணத்தினால் சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படக் கூடிய அச்சிறுவன் இறந்திருக்கிறான் இதுபோன்று ஏராளமான பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. உதாரணமாக மார்புப்புற்று நோயுடைய ஒரு பெண்மணி அதற்கான சிகிச்சை பெறுவதற்கான இடத்திற்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதை விட உயர்குருதியமுக்கம், நீரிழிவு போன்ற நோயாளிகளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நோய்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தை கூட்டக் கூடியதாக விருக்கும். அவ்வாறு தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன.

இந்நடமாடும் மருத்துவ சேவையினை செய்வதற்காக நீங்கள் உரிய பகுதிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றீர்கள்? இவ்வாறு துயருறும் ஏனைய பகுதிகளுக்கும் இச்சேவைகள் சென்றடைய வாய்ப்புள்ளதா?

பொதுவாக மருத்துவ வசதிகள் குறைவான இடங்கள், போக்குவரத்து பிரச்சினையாகவுள்ள இடங்கள் விரைவாக வைத்தியசாலைகளை வந்தடைய முடியாத இடங்கள் போன்ற பகுதிகளுக்கு நாம் முன்னதாகவே துறைசார்ந்தவர்களை அனுப்பி இந்தப்பிரச்சினைகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருத்துவ தேவை பற்றி ஆலோசித்த பின்பே நாம் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம்.

நடமாடும் சேவையாக பணிபுரியும் இந்த மருத்துவ சேவை இது போன்ற பின்தங்கிய கிராமங்களில் நிரந்தரமான செயற்பாட்டினைக் கொண்டதாக அமைப்பதற்கான ஒழுங்குகள் ஏதும் உண்டா?

ஆம்- நாங்கள் இவ்வாறான பிரதேசங்களை அலசி ஆராய்கின்ற பொழுது அதாவது பிரதான மருத்துவ நிலையங்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கின்ற போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் திலீபன் மருத்துவமனையினை அமைக்கின்றோம். அங்கு உடனடி உயிர்காப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் மேலதிக சிகிச்சைக்காக அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் என்றார்.


[வான்மதி]
இதேபோன்று இதேபணியில் ஈடுபட்ட போராளி மருத்துவர் வான்மதி இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் குறித்து எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

இந்த கௌசல்யன் நடமாடும் சேவையானது, மக்களை ஓர் இடத்திற்கு அழைத்து அங்கு வைத்து வைத்தியம் பார்ப்பதோடு நின்று விடாமல் இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் பன்னிரண்டு குழுக்களாக நாங்கள் பிரிந்து மக்களின் வீடுகளில் வைத்தே அவர்களை பரிசோதித்து வந்தோம். இதைத்தவிர ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று பற்சிகிச்சைளையும் ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். இதை விட நாம் வீடுகளுக்குச் சென்று நோயாளிகள் என இனங்கண்டவர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். இதனூடாக அவர்களை அழைத்துவந்து இங்கு சத்திரசிகிச்சை, பற்சிகிச்சை கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம்.

இவ்வாறான நவீன வசதி களைக் கொண்டதான இந்த நடமாடும் மருத்துவ சேவையினை மருத்துவப்பிரிவினர் ஆரம்பிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த காரணி என்னவென்று கூறமுடியுமா?

எமது பிரதேசமானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதனால் தற்போது மீள்குடியமர்விற்குட்பட்டு வருகின்ற நேரத்தில் அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளான வைத்திய வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதோடு மருத்துவ வசதி கூட போதிய அளவு கிடைக்கவில்லை. மிக நீண்ட தூரப் பயணத்தின் பின்பு தான் அவர்கள் மருத்துவத்தை பெறக்கூடியதாக இருப்பதனாலே உயிர் ஆபத்து ஏற் படுகின்ற கட்டங்களில் மட்டும் தான் அவர்கள் வைத்தியசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றதே தவிர, சிறிய நோய்களையோ அல்லது பாரதூரமாக வருகின்ற நீண்டகால நோய்களை குணப்படுத்தவோ இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது.இதைவிட இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற் கொருமுறை மருத்துவர்கள் பாட சாலைகளை தரிசிப்புச் செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்குள்ள நோய்களை இனங்காணுதல், சிகிச்சை யளித்தல், பற்சிகிச்சையளித்தல் என் பன நடைமுறையில் இருக்க வேண் டிய விடயங்கள். ஆனால் எமது பிரதேசங்கள் பின்தங்கிக் காணப்படுவதாலும் போரினால் பாதிக்கப்பட்டதனாலும் அரசாங்கமே இவர்களை பின்னடைவுக்குள்ளாக்கியதனாலும் இந்நடைமுறை பாடசாலைகளில் இல்லாதுள்ளன. எனவே கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையினூடாக நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று இச்சேவையை செய்து வருவதோடு பின்தங்கிய பகுதியாதலால் பற்தூரிகை மூலம் பல்துலக்கும் முறையினையும் கற்பித்து பற்பசை, பற்தூரிகை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.

இப்பகுதி மக்களினுடைய எதிர்கால மருத்துவத்தேவைகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இப்பகுதி மக்களுக்கான மருத்துவத் தேவை என்பது இரண்டு அல்லது ஐந்து வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இத்தேவையினைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவை எமக்கு நிச்சயமாக உண்டு. ஏனெனில் முற்றாக போக்குவரத்து வசதியற்ற நிலை காணப்படுவதும் வைத்தியசாலைகள் மிகத்தொலைவிலிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு இப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகள் என்று எதுவுமே இயங்கவில்லை. தியாகதீபம் திலீபன் மருத்துவமனை மட்டுமே இயங்கு கிறது. ஆகவே இப்பிரதேசத்தின் மிக அவசிய தேவை கருதி ஓரளவேனும் வசதியுடைய மருத்துவமனையையாவது அமைக்க வேண்டும் என்றார். இதேவேளை தாம் எதிர்பாராத வகையில் தமது மருத்துவத்தேவைகள் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டதை எண்ணிப் பெருமிதமடைந்த நிலையில் பாலமோட்டை, பனிச்சங்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் இம்மருத்துவர்களின் சேவை பற்றி இவ்வாறு கூறினார்.

நாங்கள் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து இப்போது மீளக் குடியமர்ந்து வருகின்றோம். ஆனால் எமது பகுதிக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளோ, மருத்துவ வசதிகளோ, ஏனையவசதிகளையோ செய்து தர எவரும் முன்வரவில்லை. நாங்கள் மிகநீண்ட தூரம் பயணம் செய்தபின்பே மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மிக அவசரமான ஆபத்தான வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்கின்ற நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து போகின்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. வவுனியா அல்லது மல்லாவி வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் மருந்து பெற முடியாத நிலைகளும் ஏற்படுவதுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மருத்துவப்பிரிவினர் இப்பகுதிக்கு வந்து எமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து வருவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ போராளிகள் வந்து எமது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றார்கள். அத்தோடு நாம் மிக நீண்ட தூரம் சென்றாலும் செய்யமுடியாத சத்திரசிகிச்சைகளைக் கூட இங்கு இலகுவாக செய் துள்ளோம் எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளுக்கு இவ்வாறான சேவையைச் செய்ய வேண்டுமென அவர்களை நான் கேட்டுக்கொள்ளதோடு இவர்களின் இந்த சேவைக்கு நன்றி யையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

எனவே லெப்.கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் இம் மருத்துவப்பணியானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியில் பெரும் பயனாற்றி வருகின்றதென்பது மட்டுமன்றி இதன் பணி மூலம் எதிர்காலத்தில் தமிழீழ மக்களின் மருத்துவக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

நன்றி:- ஈழநாதம்.

Labels: , , , ,


Thursday, June 23, 2005

குழந்தைகளின் உலகம்.


“இந்த மரத்தின்ர விளிம்புகள் பச்சை நிறமா இருக்கு. இது இங்க நிண்டபடி வானத்துக்கு உயந்துகொண்டு போகுது. காத்து கடந்துபோகேக்க அதோட ரகசியம் பேசுது.
‘எங்கெங்க போனனீயெண்டு எனக்குச் சொல்லு; என்னென்ன கண்டனீ; என்னால அரக்க ஏலாது; ஏனெண்டா என்ர வேருகள் என்னை நிலத்தோடக் கட்டிப்போட்டிருக்குதுகள்; நெடுக இஞ்சதான் நிக்கவேணும்' எண்டு அந்த மரம் காத்திட்ட கேக்குது.
அதுக்குக் காத்து மரத்தோட ரகசியமா கதைக்கும்.
‘நான் ஒரு இடத்தில நிக்கமாட்டன்; என்னால அப்படி நிக்க ஏலாது; நான் போய்.. போய்.. போய்க் கொண்டேதான் இருப்பன்; உன்னோட நிண்டு கதைக்க ஏலாது’
எண்டு சொல்லிப்போட்டு சிரிச்சுக்கொண்டே போகுது.
அதுக்கு மரம்,
‘உன்னோட வர விருப்பமாயிருக்கு; இப்பிடியே நிக்க எரிச்சலாயிருக்கு; நீ எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய்@; ஆனா நான்….ஓ’
எண்டு பெருசா அழுகுது.”

இது சிறுவனொருவனின் மரமொன்றைப்பற்றிய விவரணம். இன்று சஞ்சிகையொன்றைப் படித்தேன். அதில் “மூடுபனிக்குள் ஒரு தேடல்” என்ற பெயரில் தமிழாக்கத்தொடர் நவீனமொன்று வெளிவருகிறது. அதன் ஐம்பதாவது அத்தியாயம் தான் நான் வாசித்த பகுதி. அதில் கதைசொல்லி ஒரு சிறுவனோடு உரையாடுகிறார். வாசித்தஅளவில் அவன் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாயிருக்க வேண்டும். அவன் பெயர் ‘டிப்ஸ்’.
ஜேன், ஹெடா, ஜேக், மில்லி, போன்ற பாத்திரங்கள் வருகின்றன.

டிப்ஸ் குறிப்பிட்ட அந்த மரத்தை மிகவும் நேசிக்கிறான். தோட்டக்காரன் ஜேக் அவனுக்குச் சொல்கிறான்,
‘இது 200 வருசமா இஞ்ச நிக்குது, ஆனா ஒருத்தரும் உன்னைப்போல இந்த மரத்தை நேசிக்கேல’.
அம்மரத்தின் கிளைகள் வீட்டுச் சுவரைத் தொடுகிறது என்று அக்கிளைகளை வெட்டிவிடும்படி டிப்ஸின் தந்தை தோட்டக்காரனைக் கேட்க, அவனும் கிளைகளை வெட்டுகிறான். தன் யன்னலின் பக்கமிருக்கும் கிளையை வெட்ட வேண்டாமெனக் கெஞ்சும் டிப்சுக்காக ஜேக் (தோட்டக்காரன்) அதை வெட்டாமல் விடுகிறான். ஆனால் தந்தை விடாப்பிடியாக நிற்க, ஜேக்,
‘கிளை சுவரில் தேய்க்காதவாறு, அனால் டிப்ஸ் எட்டித் தொட்டு விளையாடக் கூடியதாக விட்டு வெட்டிவிடுவாதாகச்’ சொல்கிறான்.
ஆனால் தந்தை விடாப்பிடியாக அக்கிளையை முழுவதுமாக வெட்டுவிக்கிறார்.

அந்தக் கிளை தன்னைத் தொடுவதாலேயே (கவனிக்க: தான் கிளையைத் தொடுவதாகச் சிறுவனாற் சொல்லப்படவில்லை) தன்தந்தைக்கு எரிச்சல் என்று தனக்குள் அனுமானித்துக்கொள்கிறான். தான் டிப்சுக்காக நிறைய விளையாட்டுப் பொருட்கள் வைத்திருப்பதாச் சொல்லி அவற்றைக் கொடுக்கிறார் தந்தை. அத்தனையும் செயற்கை விளையாட்டுப் பொம்மைகள். முதற்பார்வையிலேயே அவற்றில் வெறுப்பையும், மரக்கிளை மீதான நேசிப்பையும் சிறுவன் வெளிப்படுத்துகிறான். வெட்டப்பட்ட அக்கிளைநுனியை ஜேக் சிறுவனிடம் கொடுக்கிறான்.

இவ்வளவும் போன வருசம் நடந்ததாகவும் தான் இப்போதும் அக்கிளையை வைத்திருப்பதாகவும் அதை வேறு யாரும் தொடவிடுவதில்லையென்றும் கதைசொல்லிக்குச் சொல்கிறான் சிறுவனான டிப்ஸ். (சமயத்தில் அதைத் தொட்ட யாருக்கோ கடித்துவிட்டதாவும் சொல்கிறான்) அவன் வெளியுலகத்தையும் அம்மரத்தையும் ரசித்த அந்த யன்னலும் முற்றாகப் பூட்டப்படுகிறது.

சிறுவனின் நெருங்கிய நண்பன் தோட்டக்காரனான அந்த ஜேக் மட்டுமே. சிறுவனே சொல்கிறான்,
“ஜேக்கை விட எனக்கு நண்பர்கள் இல்லை. மற்ற மனுசரவிட எனக்கு மரங்களும் காக்கா, குருவி போல பறவையளுந்தான் சிநேகிதங்கள்.”

அத்தனையும் குழந்தை மனதொன்றில் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவன் ஒரு பாட்டை முனுமுணுக்கிறான். இது எங்க படிச்சனியள்? என்று கேட்கப்படும் கேள்வியில்தான் அனைத்தும் தொடங்குகிறது. வழமையாக குழந்தைகள் போலவே, ரீச்சர் பற்றித் தொடங்கி அப்படியே சுத்தி மரம்பற்றி, ஜேக் பற்றி, கிளை வெட்டப்பட்டது பற்றியென்று எல்லாக் கதையும் வருகிறது. இடையில் கதைசொல்லி வேறு கதைக்குத் தாவினாலும், சிறுவன் மரத்தைப்பற்றியே கதைக்கிறான்.

இது எந்தப் புத்தகத்தின் தமிழாக்கமோ தெரியவில்லை. மூலப்புத்தகத்தின் பெயர் போடப்படவில்லை. மொழி பெயர்ப்பவர், வின்சன்ட் ஜோசப். இவர்தான் எக்ஸோடஸ் எனும் இஸ்ரேலியர் பற்றிய புத்தகத்தைத் தமிழில் ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்று மொழியாக்கம் செய்தவர். இவரைப்பற்றி முன்பும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இந்த மொழியாக்கத்தில் அச்சிறுவனின் சிந்தனைகள், மொழி நடை, கதை சொல்லும் பாங்கு என்பன நன்கு பிடித்துள்ளது. தங்களுக்குள் பெரியளவு வேற்றுமைகள் இல்லையெனவும், பெரியவர்களிடத்தில் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகமாக உள்ளது என்பது போலவும் ஓரிடத்தில் சொல்கிறான். அவன் பாவிக்கும் வார்த்தைகள், ‘வளந்த பொம்பிளையள், வளந்த ஆம்பிளையள்’. இது ஓர் உளவியல் நவீனம் என்று தலைப்புப் போடப்படுகிறது. நவீனம் முழுவதும் குழந்தைகளின் உளவியல்தான் நிறைந்திருக்குமென்று படுகிறது.

இலையுதிர்க் காலத்தில் உதிராமல் மீதியாயிருந்த ஓர் இலை, தன்னை ஏன் ஒருத்தரும் கூட்டிக்கொண்டு போக வரேல எண்டு அழுகுதாம். காத்து வந்து அந்த இலையை உலகம் முழுக்கக் கூட்டிக்கொண்டு போகுதாம். கடசியா தன்ர முற்றத்திலயே வந்து இறக்கிவிட்டுட்டுப் போச்சுதாம். நல்லாக் களைச்சுப்போன அந்த இலையை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சிருக்கிறதாக கதைசொல்லிக்கு அவன் சொல்கிறான். மேலும் அந்த இலை எங்கெங்கெல்லாம் போய் வந்திருக்குமெண்டு யோசிச்சு அந்தந்த நாடுகளப்பற்றியெல்லாம் தான் அறிந்துகொள்வதாகவும் சொல்கிறான்.

குழந்தைகளின் கதையாடல் நன்றாக இருக்கிறது. ஒரு மழலை கதைக்கும் போது ஆசையாகக் கேட்டுக்கொண்டிருப்போமே, அதே சுவாரசியத்தோடு இந்தப் பகுதியைப் படித்தேன். இது அந்தத் தொடரின் ஐம்பதாவது பகுதி. முழுவதும் படிக்கக் கிடைக்காதா என்று ஏக்கமாயிருக்கு.

இது வன்னியிலிருந்து வரும் ஈழநாதத்தின் வார சஞ்சிகையான வெள்ளி நாதத்தில் வந்திருந்தது. வெள்ளி நாதத்தைப் பார்க்கும்போது மனத்துக்கு இனிமையாக இருக்கிறது. மிகத்தரமான வடிவில் வருகிறது. நிறைவான ஆக்கங்கள், எந்த வியாபார சமரசமுமில்லாமல் வெளிவருகிறது. இதுபற்றிக்கூட நேரமிருந்தால் எழுத வேண்டும்.

Labels: , , ,


Tuesday, June 14, 2005

ஈழப்போராட்டக் காரணிகள் -2.

மாணவர்கள் மேல் பாய்ந்த அச்சட்டம் தான் தரப்படுத்தல் சட்டம்.
இச்சட்டத்தின்படி, பல்கலைக்கழகம் நுழைய வேண்டுமானால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது எல்லாப்பாடங்களுக்கும் பொருந்தும். கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்படும் புள்ளிகள் 1970 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழகம் புகவேண்டிதற்காகப் பெற்றிருக்க வேண்டிய புள்ளிகள்.



இதன்படிப்பார்க்கும்போது எவ்வளவு தூரம் தமிழ்மாணவர்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பது புரியும். பின்னர், இத்தரப்படுத்தல் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டதாக அறிகிறேன். இன்றிருக்கும் முறை தொடக்கத்திலிருந்து வேறுபட்டுள்ளது.


எழுபதுகளின் ஆரம்பத்தில் சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை தொடக்கப்பட்டது. அது படிப்படியாக மாற்றமடைந்து பல இயக்கங்கள் உருவாகின. 1972 இல் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு உருவானது. பின் அது 1976 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரைப் பெற்றது.

ஆரம்பகாலங்களில் ஆயுத வழியிற்போராடப் புறப்பட்டவர்களில் முக்கியமானவர் பொன்.சிவகுமாரன். தான் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டார். பின் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் இறந்தார். சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட முதலாவது போராளி பொன்.சிவகுமாரன் ஆவார்.

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.tamilnation.org/indictment/indict010.htm
http://www.tamilnation.org/selfdetermination/tamileelam/7409tulfmemorandum.htm
http://www.tamilnation.org/indictment/indict033.htm

இப்பதிவில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Labels: , , ,


ஈழப்போராட்டக் காரணிகள்.

வணக்கம்!
ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத் தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன முயற்சியிது.

முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்காட்டியும் மற்றவர்களை வந்தேறு குடிகளாகவும் துரத்தப்பட வேண்டியவர்களாகவும் கதை கட்டமைக்கப்பட்டு காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இடையில் இவ்வுணர்வு தொய்யும் போதெல்லாம் யாராவது வந்து எண்ணெய் ஊற்றி எரித்து விடுவார்கள். இன்றும் கூட தங்கள் வரலாற்று நூலாகச் சிங்களவர் அடையாளங்காட்டும் 'மகா வம்சம்' என்ற நூல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

முதலில் மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக அடையாளங்காட்டுதலே சுத்த காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமுமாகும். அப்படிப் பார்க்கப்போனால் இராமாயணம் மகாபாரதங்களைக்கூட யாரும் தமக்கேற்றபடி வரலாற்று நூற்களாகக் கட்டமைத்து எதையும் கதைக்க முடியும். காம வேட்கையுற்ற சிங்கமொன்றினால் உருவாக்கப்பட்டு ஒரே தாய்வயிற்றில் பிறந்த ஆண்-பெண் கூடி உருவாக்கப்பட்ட இனம் தான் இந்தச் சிங்கள இனமென்றும், புத்தரால் அவர்களுக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீவுதான் இந்த இலங்கை என்றும், அவர்களை அங்கே குடியேற்றுவதற்காக 'வாக்களிக்கப்பட்ட' தீவிலிருந்தவர்களை புத்தர் வெருட்டிக் கலைத்தார் என்றும் கதை சொல்கிறது மகாவம்சம். நிறைய மாயாஜாலச் சம்பவங்களைக் கொண்ட இந்நூல்தான் அவர்களின் வரலாற்று நூலாம். (இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பகுதிகளை வன்னியில் வாசித்தேன். முழு மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் வெளியிட்டுவிட்டார்களா தெரியவில்லை. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்)

இதன்பின் அவ்வப்போது தமிழர்களுக்கும் சிங்களவருக்குமிடையில் போர்கள் நடந்தன. போர்த்துக்கேய வருகைவரை தனித்தனி இராச்சியங்கள் இருந்துள்ளன. வெள்ளையரிடம் இறுதியாக இழக்கப்பட்ட இன்றைய மத்திய இலங்கையான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஒரு தமிழன் என்ற தகவல் வியப்பானது.
ஆகவே இந்த இனப்பிரச்சினையின் வேர் ஆயிரமாண்டுகளாக ஊட்டியூட்டி வளர்க்கப்பட்ட இனவெறியில் தங்கியுள்ளது. அதிகம் கிளறாமல் நான் சொல்லவந்த விசயத்துக்கு வருகிறேன்.

ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது எழுபதுகளில், அது முனைப்புப்பெற்றது எண்பதுகளின் தொடக்கத்தில். இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியான வன்முறைகளையும் அழிவையும் சந்தித்து வந்தார்கள். அவ்வப்போது நடந்த இனப்படுகொலைகள் (இனக்கலவரம் என்பது பிழையான சொல்லாடல்) இதற்குச் சான்று. அடக்குமுறைக்கு மொழி முக்கிய மூல காரணியானது. மொழி மூலமே முதன்மையான அடக்குமுறையை எதிர்கொண்டனர் தமிழர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முக்கிய விடயம். (அந்த நேரத்தில் எவன் தமிழனை அதிகமாக வதைக்கிறானோ, அல்லது வதைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறானோ அவனே தேர்தலில் வெல்வான் என்ற நிலையிருந்தது. அதன் உச்சபட்ச தேர்தல் வாக்குறுதியே '24 மணிநேரத்தில் தனிச்சிங்களச் சட்டம்' என்ற தேர்தல் கோசமும் அதைத் தொடர்ந்த வெற்றியும்.)



இந்த நேரத்தில் தமிழ் மாணவர்களை வதைக்கும், தமிழ் மக்களின் கல்வித்திறன் மேல் கைவைக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆயுதப்போராட்டப் பொறி பற்றுவதற்கான முதன்மைக்காரணியும் இதுவே. இச்சட்டம் குறிப்பாக இளம் தமிழ் மாணவரை நேரடியாகப் பாதித்தது. இச்சட்டம் மூலம் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு செய்த மோசடியும், அது எவ்வளவு தூரம் மாணவரைப் பாதித்தது என்பதையும் அது எவ்வாறு ஆயுதப்போராட்டத்துக்கு இட்டுச்சென்றது என்பதையும் அடத்த பதிவில் தருகிறேன்.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இனப்படுகொலைகள் பற்றி இங்கே எழுதத்தேவையில்லையென்று நினைக்கிறேன். சிங்களம் மட்டும் சட்டத்தின் கொடூர முகம் பற்றி வேறு யாரேனும் எழுதுங்களேன். நாங்கள் தான் வயதாற் சிறியவர்கள். புலிவிமர்சனத்தை மட்டும் கருப்பொருளாய் வைத்து பதிவு எழுதும் நேரத்தில் இப்படியாக ஆயுதப்போராட்டத்துக்கு முந்தைய நிலையினையும் நீங்கள் எழுதலாம் என எமது மூத்தவர்கள் சிலரைக் கேட்கிறேன். புலியைப்பற்றி எழுதப்போனால் தான் உங்களுக்குச்சிக்கல். இனச்சிக்கல்களின் தொடக்ககாலத்தைப்பற்றி நீங்கள் எழுதலாம் தானே.

Labels: , , , ,


Monday, June 13, 2005

வழமைகள் பொய்க்கும் புள்ளி.


அயுத உதவிகளும் ஈழத்தவனின் பெருமையும்.

வணக்கம்!
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற தொனியில் வலைச் சண்டை நடந்துவருகிறது. பிறகு வழமைபோலவே வேறு திசை நோக்கிச் செல்கிறது. அப்பதிவைப்பற்றி வாதிக்க எதுவுமில்லை. வை.கோ. சிறையிலடைக்கப்பட்டது சரியே என நிறுவும் அப்பதிவர் மேலும் சொல்லும் விசயங்கள் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, அவரின் துவேசத்தை. (தான் சரியாக வெளிப்படுத்தவில்லையெனச் சொல்லி அவர் தப்பிக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் சரியாகவே சொல்லியுள்ளார், எது தனது நிலைப்பாடு என.) சரி அதைவிட்டு நான் எழுதவந்த விசயத்துக்கு வருகிறேன். அப்பதிவைப் பார்த்தபோது, எனக்கு எழுந்த கருத்தொன்றைப் பதிவு செய்வதே இப்பதிவின் நோக்கம்.

வழமையாக 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியில் கடந்தகால உலக நடப்புக்கள் இருந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இத்தொனியைத் தெளிவாகக் காணலாம். ஏறத்தாள முழு விடுதலைப் போராட்டங்களும் (வெற்றி பெற்ற, பெறாத) பிற சக்தியின் அல்லது சக்திகளின் உதவியுடன் செயற்பட்டுள்ளன. (சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் வெளியில் தெரிந்தவரை இல்லை)

எரித்திரியப் போராட்டத்துக்கு ரஸ்யாவின் ஆதரவு. (இது பின்னர் எதிர்ப்பாக மாறியதும் வரலாறு.)
கியூபா அமெரிக்காவை எதிர்த்த போது ரஸ்யாவின் ஆதரவு.
வியட்கொங்குகளுக்கு சீனா உள்ளிட்டவைகளின் ஆதரவு.
ஐரிஸ்களுக்கு அமெரிக்கச் சக்திகளின் பின்னணி.
ஏன் இந்தியச் சுதந்திரப்போராட்டத்துக்கு (சுபாஸ் சந்திரபோசின்) யப்பான், இத்தாலி முதலிய வெளியாரின் ஆதரவு.
மேற்குறிப்பிட்டவைகள் ஆயுத, இராணுவ, பொருளாதார உதவிகள்.

இவையாவும் போராடுபவர்கள் மேல் கொண்ட அன்பினால் அன்று. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியினால் தான். இது முஹாஜுதீன்கள், தலிபான்கள் முதற்கொண்டு ஒசாமாபின்லேடன் வரைகூடப் பொருந்தியது. இது நாடுகளுக்கு உதவுவதிலும் உண்டு. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இக்கொள்கை எதிர்மாறாகக் கடைப்பிடிக்கப்டுகிறது. அதாவது எதிரிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தரப்புக்கு உதவுவது. முதன்மையான எதிரி மட்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவினான், எதிரியின் எதிரி நண்பன் என்ற தொனியை வைத்து. ஆம் பிரேமதாசா தான் அவர். பிரேமதாசா புலிகளுக்கு உதவியதைவிட இப்படியான நோக்கத்தை வைத்து வேறு சந்தர்ப்பங்கள் இல்லை. இங்கே இந்தியா ஆயுதங்களும் பயிற்சிகளும் தந்ததைச் சொல்லலாம். ஆனால் அது தொடர்ச்சியான நிகழ்வாய் இருக்கவில்லை. மேலும் ஆயுதங்களைத் திருப்பி வாங்கிவிட்டதாலும் இது பொருந்துமா என்ற கேள்வி உண்டு. எனினும் இலங்கையைத் தன் காலடியில் விழவைக்க இந்தியா ஆயுத உதவிகளும், பயிற்சிகளும் கொடுத்து குழுக்களை வளர்த்துவிட்டது என்பது உண்மை.

இங்கே எல்லா எதிரிகளும் சேர்ந்து ஈழத்தமிழருக்கெதிரான யுத்தத்துக்கு உதவினார்கள், உதவுகிறார்கள் என்பது ஒரு நகைமுரண். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை முதன்மைப் பங்காளிகள். எப்போதும் இரு துருவங்களான ரஸ்யாவும், இஸ்ரேலும் இவ்யுத்தத்தில் தீவிரமாக உதவி வழங்குபவர்கள். சிறிலங்காவின் வான், மற்றும் கடல் படை வலிமை இவ்விரண்டு நாடுகளிலுமே பெரிதும் தங்கியுள்ளது. போதாததுக்கு அமெரிக்கா, பிரிட்டன் என்பனவும் உள்ளடக்கம். குறிப்பாகப் புலனாய்வு வலைப்பின்னலில் யோசிக்காமல் அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து செயற்படுகின்றனர். இது இப்படியிருக்க எந்த நாடும் தமிழர் தரப்புக்கு உதவிகள் வழங்குவதில்லை.

ஈழப்போராட்டமென்பது இத்தனை எதிரிகளையும் சமாளித்துத்தான் வளர்ந்தது; வளர்கிறது. புலிகளின் கடல் வழி வினியோகத்தைத் தடுக்க சர்வதேச அளவில் முக்கிய நாடுகள் புலனாய்வு வழியிலும், கடலில் இந்தியா தன் நேரடிக் கண்காணிப்பிலும், நேரடி மோதலாலும் உதவகின்றன. இந்தியாவால் நேரடியாக மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் இதற்குச் சான்று. (கிட்டு உட்பட). தனியே சிறிலங்காவின் படைப்பலமோ பொருளாதார பலமோ ஈழப்போராட்டத்துக்கு ஒரு பொருட்டேயன்று என்பது வெளிப்படையான உண்மை.

எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் தமிழரை அழிக்க உதவி செய்கின்றனர். அதை வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கப்படுகிறார்கள் என்பது தான் வேதனையாயிருக்கிறது. இங்கே வலைப்பதிவிலும் அதுதான் நடக்கிறது. பலரின் ஆழ்மன எண்ணங்கள் அவர்களே அறியாமல் வெளிப்படுகின்றன.

வங்காளதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பரப்புரை செய்யப்படுகிறது. ஏன் கொடுத்தது என்பதற்கு விடை, அம்மக்கள் மேல் கொண்ட பாசத்தினாலாம். ஆனால் ஏன் கொடுத்தோம் என்பதற்கான சரியான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் ஒருவரின் வலைப்பதிவில் இப்படி வெளிப்படுகிறது பாருங்கள்:
"பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த" என்று விழிக்கிறார். நாம் போட்ட பிச்சையில் பிறந்த வங்கதேசம், நாம் போடும் கட்டளைகளைக் கேள்வியின்றி செய்ய வேண்டுமென்ற தொனியில் அவரது கருத்து இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத வகையில் பலரின் எண்ண ஓட்டங்களை அது வெளிப்படுத்துகிறது.

ஈழத்தவரைப்பார்த்தும் இப்படித்தான் சொல்ல நினைத்தீர்களோ தெரியாது. எனினும் ஆண்டாண்டுக்கும் அந்த இழிச்சொல்லைக் கேட்பதிலிருந்து தப்பிவிட்டோமென்ற நிம்மதியுண்டு. எந்த நாட்டினதும் உதவியுமின்றி, சொந்த மக்களினதும் புலம்பெயர்ந்தவர்களினதும் பலத்தால் மட்டுமே வளர்ந்த போராட்டம் என்று பெருமைப்பட எங்களுக்கு உரிமையுண்டு. குறிப்பாக பக்கத்து நாடுகளே அஞ்சும் வண்ணம் (இவற்றில் பெருமளவு மக்களைப் பேய்க்காட்ட வடிவமைக்கப்பட்ட அச்சங்கள்) கடல், வான் படைகளைக் கட்டமைத்த போராட்டம் என்பதில் பெருமையும் ஆணவமும் கொள்ள எங்களுக்கு இடமிருக்கிறது.

Labels: , ,


Sunday, June 12, 2005

சூகை தெரியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்திருந்த காலம். வந்த புதுசில காடு சார்ந்த ஓரிடத்திலதான் இருந்தம். அப்ப காட்டுக்குள்ள போறதெண்டா கொள்ளைப் பிரியம்; கூடவே பயமும். சிலர் கரடி நிக்கும் எண்டு பயப்படுத்தியிருந்தினம். எண்டாலும் காடு பாக்கிற சந்தோசம் விடுமோ? காடு பாக்கிறதைப்பற்றி பிறகு ஒருக்கா எழுதிறன்.

நாங்கள் வந்து ரெண்டு நாளில சின்ன பத்தையள வெட்டி ஒரு வெளியாக்கி அதில கூடாரங்கள் போட்டு இருந்தம். என்ன இருந்தாலும் அதுவும் ஒரு இனிமையான வாழ்க்கைதான். அனுபவித்தவைக்குப் புரியும். அப்ப எங்களோட அந்த இடத்து ஆக்கள் ரெண்டுமூண்டுபேரும் தங்கிறவை. ஒருநாள் இரவு. ஒரு குறிப்பிட்ட இடத்தில சனம் துள்ளிக்குதிக்குது. ரெண்டு மூண்டு சின்னனுகளும் அழுகிதுகள். என்னெண்டா எறும்புக் கடிச்சுப்போட்டுதாம்.

பாத்தா நிறைய கட்டெறும்புகள் குவியலா நிக்குதுகள்.
"உங்க பார், எவ்வளவு கட்டெறும்புகள்!" எண்டேக்கதான் சொன்னாங்கள் அது கட்டெறும்பில்லையாம், சூகையாம் எண்டு. நாங்கள் கட்டெறும்பு எண்டுறத இவங்கள் சூகை எண்டுறாங்கள் எண்டிட்டு படுத்தாச்சு.

அடுத்த நாள் பாத்தா அந்த இடத்தவிட்டு அதுகள் போகேல்ல. எக்கச்சக்கமா நிக்குதுகள். அதுகளக் கலைக்கிற முயற்சியல நாங்கள் நாலைஞ்சு பொடிப்பிள்ளைகள் இறங்கினம். அப்பதான் தெரிஞ்சுது அதுகளின்ர பலம். முதல் கடியோடயே விளங்கீட்டுது உதுகள் கட்டெறும்பு வகைக்குள்ள வராதெண்டு. என்ன செய்ய? உதுகள் அந்த வகைக்குள்ள வராதுகள் எண்டு கணிக்கிறதுக்குள்ள உயிர் போயிட்டுது. அப்பிடிக் கடி. ஒரு பத்துச் செக்கன்கூட இல்ல, போர்க்களத்திலயிருந்து வெளியில வாறதுக்கு. அதுக்குள்ள முப்பது முப்பந்தைஞ்சு எறும்பு காலில ஏறீட்டுது. அண்டைக்கே ஊர் ஆக்களப்பிடிச்சு சூகையைப் பற்றி அறிஞ்சன்.

யாழ்ப்பாணத்தில இப்பிடியொரு எறும்பைப் பாத்ததில்ல. பாக்க கட்டெறும்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா செயற்பாடுகளில மாற்றம். சூகையெண்ட சொல்லையும் நாங்கள் அங்க கேள்விப்படேல. சரி, இது வன்னியில இருக்கிற ஒரு வகையெண்டு நினைச்சிருந்தன். முந்தநாள் இயக்குநர் சேரனின்ர நிகழ்ச்சியொண்டைத் தொலைக்காட்சியில காணுற சந்தர்ப்பம் கிடைச்சுது. அதுல பாத்தா, அட எங்கட சூகை!
அவரும் சூகை எண்டுதான் சொல்லுறார். அப்ப தமிழ்நாட்டிலயும் இந்தச் சூகை இருக்கு. ஆனா இதே மோசமான சூகை தானோ எண்டது சந்தேகம்.

இனி சூகை பற்றி சில அனுபவங்கள். இத நாங்கள் 'கொமாண்டோஸ்' எண்டும் சொல்லுறனாங்கள். ஏனெண்டா அவ்வளவு வேகம். சூகை வரிசையாப் போய்கொண்டிருக்கிற இடத்தால வேகமா நீங்கள் நடந்து போனாக்கூட எப்பிடியும் உங்கட காலில ஏறீடும். கண்ணிமைக்கும் நேரத்தில ஏறிக்கடிச்சிடும். அந்தக்கடியை அனுபவிச்ச ஆக்களுக்குத்தான் அதின்ர வலி தெரியும். எங்கட நெருப்பெறும்பு, கட்டெறும்பெல்லாம் பிச்ச வாங்கோணும். அதவிட அது ஒரு இரைச்சல் போடும் பாருங்கோ. இரவில நல்ல நிசப்தமா இருந்தா அந்த இரைச்சல் கேட்கலாம். அவயள் பவனி வந்தா அந்த இரைச்சல் கட்டாயம் வரும். இரவில கொட்டிலுகளுக்குள்ள எல்லாம் அதுகள் வந்திடும். முதல் கொஞ்சநாள் கொட்டிலச் சுத்தி நெருப்புத்தணல் கொட்டி விடுறனாங்கள். பிறகு பழகிவிடும்.

இரவில வெளிச்சமில்லாமல் நடந்தா, முன்னுக்குப்போறவர் வேணுமெண்டே ஒரு இடத்தில நாலைஞ்சுதரம் கால உதைஞ்சுட்டுப்போவார். (உண்மையில சூகை இருந்திருக்காது). பின்னால வாற ஆக்களும் அந்த இடத்தில வேகமா துள்ளிப் போவினம். பிறகு அங்கால போய் சிரிக்கிறது.

எங்கயாவது பதுங்குகுழிகள் வெட்டினா கட்டாயம் சூகையின்ர தொல்லையிருக்கும். நிறைய நேரத்தை அது மினக்கெடுத்தும்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்ர ஒரு வருட வெற்றிநாளுக்கு நாங்கள் சந்திச்ச களப்போராளியள் சிலரோட கதைச்சம்.
"இஞ்ச உங்களுக்கு ஆகக் கஸ்டமாயிருக்கிற விசயம் எது?"
எண்டு அவயளக் கேட்டம். (எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், குடிதண்ணியில இருந்து எதிரியின்ர சினைப்பர் தாக்குதல்கள், சாப்பாட்டுப்பிரச்சினை எண்டு நிறைய சிக்கல்கள்.) ஆனா அவயள் சொல்லீச்சினம்:
"உவன் ஆமியக்கூட சமாளிச்சிடலாம். ஆனா உந்த சூகையத்தான் சமாளிக்க எலாது."

இப்பிடி சூகையின்ர நினைவுகள் கனக்க இருக்கு. சேரனின்ர நிகழ்ச்சியைப் பாத்த உடன, தமிழகத்திலயும் இந்த சூகை இருக்கெண்ட உடன இந்தப் பதிவ எழுத வேணும்போல இருந்திச்சு. அவ்வளவு தான்.

Labels: , , , ,


Saturday, June 04, 2005

எழுத்தாளர் நந்தி காலமானார்.

முதுபெரும் தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் நந்தி சி.சிவஞானசுந்தரம் (வயது 77) நேற்று சனிக்கிழமை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தமிழ் இலக்கியத்திற்காக அவர் நந்தி எனும் புனைபெயரில் பாரிய பங்காற்றியவர்.
மருத்துவ அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் மேல்மாகாணத்திலும் யாழிலும் பணியாற்றினார். பின்னர் யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தொடங்குவதற்கு பெரும் முன்முயற்சிகளை மேற்கொண்டவர் நந்தி சிவஞானசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி - புதினம்.

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]