Friday, September 29, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.


பகுதி 7


பகுதி 8


பகுதி 9 (இறுதிப்பகுதி)



முந்தைய பதிவுகள்

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1


_____________________________________________

Labels: , , ,


யாழ்தேவி முறியடிப்பு

'யாழ்தேவி' என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும்.

28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய பெரும் படைநகர்வொன்றை சிறிலங்கா அரசபடை செய்தது. அந்தப் படை நடவடிக்கைக்கு அரசு சூட்டிய பெயரும் "யாழ்தேவி" தான்.

இராணுவம் முன்னேற எடுத்துக்கொண்ட நிலப்பகுதி தமிழர் சேனைக்குச் சாதகமற்ற பகுதி. முதன்மைச் சாலையான A-9 பாதையூடாக முன்னேறாமல் கடற்கரைப் பக்கமாக, முழு வெட்ட வெளிக்குள்ளால் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டது. அந்த வெட்டையில் இராணுவத்தை எதிர்த்து கடும்சமர் புரிவதென்பது புலிகளுக்கு மிகவும் பாதகமான நிலை. ஆனாலும் புலிகள் அச்சமரை எதிர்கொண்டனர்.

அந்த நடவடிக்கை நடந்தபோது புலிகள் பெரியதொரு வலிந்த தாக்குதலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான 'தவளைப் பாய்ச்சல்' நடவடிக்கைக்கான ஆயத்தமே அது. அணிகள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருந்த சமயம் எதிரி புதிய களமுனையொன்றைத் திறந்திருந்தான். எப்படியும் இந்த முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை இருந்தது.
தவளைப் பாய்ச்சலுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த அணிகளை ஒருங்கிணைத்து தளபதி பால்ராஜ் முறியடிப்புத் தாக்குதலை நடத்துகிறார்.

புலோப்பளை வெட்டையில் புலியணிகள் மிக நன்றாக உருமறைத்துப் பதுங்கியிருந்தன. எந்தக் காப்புமற்ற வெட்டவெளி. முன்னேறிய படையினர் அன்று காலையும் தொடர்ந்து முன்னேறினர். பதுங்கியிருந்த புலியணிகளை அவர்கள் காணவில்லை. அவ்வளவு திறமையான உருமறைப்பு. கைகலப்பு நடக்குமளவுக்கு மிக நெருக்கமாக வந்தபின் இராணுவத்தினர் மீது புலியணிகள் கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. உச்சபட்ச திகைப்புத் தாக்குதலாக அமைந்த அந்த அதிரடியில் நிலைகுலைந்தது சிறிலங்கா அரசபடை. அவர்கள் சுதாரித்து அணிகளை ஒழுங்கமைத்து புலிகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்குள் கணிசமான இராணுவத்தினரை இழந்திருந்தனர்.

தன்னை மீளமைத்துக்கொண்ட இராணுவம் தொடர்ந்தும் மிக மூர்க்கமாகத் தாக்கியபடி முன்னேறியது. புலோப்பளை வெட்டையில் மிகக்கடுமையான சமர் நடந்தது. அரசபடையினரின் முக்கிய பலமாகக் கருதப்பட்ட டாங்கிகளில் இரண்டை புலிகள் அழித்தனர். எதிரித்தரப்பில் இழப்புகள் அதிகமாகிக்கொண்டு வந்தது. இறுதியில் தனது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு பழையபடி இயக்கச்சிக்கே திரும்பியது இராணுவம்.

வெற்றிகரமாக அந்த "யாழ்தேவி" நடவடிக்கை புலிகளால் அன்று முறியடிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி திட்டமிட்டபடி பூநகரி மீதான தமது பாய்ச்சலையும் நடத்தினர் புலிகள்.
புலோப்பளைச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. அதாவது முழுமையாக தமக்குச் சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்.

இதில் கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ் /நாயகன் உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________________

Labels: , , ,


வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

பகுதி 5



பகுதி 6



வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

_____________________________________________

Labels: , , ,


Tuesday, September 26, 2006

கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்

இன்று ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

இன்று கிளிநொச்சி தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.

தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தலமாக இந்நகரம் இருந்துவந்தது.

1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.

முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.

இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.

1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.
1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் ஒன்பதாவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.

3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).

அச்சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.

புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்கா களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.


_____________________________________________

Labels: , , , , ,


Monday, September 25, 2006

கேணல் சங்கர் - நினைவுநாள்

இன்று தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுநாள். கூடவே இன்னொரு முக்கிய தளபதியின் வீரச்சாவு நாளும் இன்றுதான்.

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், புலிகளின் விமானப்படை உருவாக்கம், மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டு உழைத்தவருமான கேணல் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளும் இன்றாகும்.
வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் அரசபடையின் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய கிளைமோர்த் தாக்குதில் இவர் கொல்ப்பட்டார் (26.09.2001).

இவரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடலொன்றை இங்கே தருகிறேன்.






_____________________________________________

Labels: , ,


Friday, September 01, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

நெல்லையில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் வை.கோ பேசியவற்றிலிருந்து முதலாம் பாகம் (பதினைந்து நிமிடங்கள்) ஏற்கனவே பதிவாக்கட்டிருக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களைக் கொண்ட இரண்டாம் பாகம் இப்பதிவில் வருகிறது.


பகுதி - 3



பகுதி - 4

Labels: , , ,


மூதூர் - சம்பூர் - திருமலை. நடப்பவை - மறைக்கப்பட்டவை.

மூதூர் என்றதுமே பலருக்கு ஞாபகம் வருவது முஸ்லீம்கள்தாம்.
மூதூரில் தமிழர்களே இல்லை என்றும், மூதூர்ச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் மட்டுமே என்றும், அனைத்துக்கும் காரணம் புலிகள்தான் என்றும் சிலரால் திட்டமிட்டும், சிலரால் அறியாத்தனமாகவும் படிமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நடுநிலை வலைப்பதிவாளர்கள் சிலர்கூட இக்கதைகளாற் குழம்பிப்போயினர் என்றே நினைக்கிறேன்.
பலர் தமது புலி மற்றும் ஈழத்தமிழர் எதிர்ப்புக்கு அதை வாய்ப்பாக்கிக் கொண்டனர், இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லீம்களைக் கொன்றது சிங்கள இராணுவம்தான் என்பதைச் சொல்லிய முஸ்லீம்கள்கூட சிங்கள அரசபயங்கரவாதத்தை எதிர்த்து ஏதும் செய்ததாய் அல்லது சொல்லியதாய்த் தெரியவில்லை (பாராளுமன்றில் ரவூப் சத்தம் போட்டது மட்டும் புறநடை). அனைத்தையும் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே சரி. இங்கென்னவென்றால் முஸ்லீம்களைக் கொன்றது புலிகள்தான் என்று அப்பட்டமான பொய்யைப் புனைந்து உலவ விட்டனர் சிலர்.

இங்கே அவற்றை விவரிப்பது நோக்கமன்று. மூதூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசித்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். இன்று அத்தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசபயங்கரவாதத்தை, அம்மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வை, பாடுகளை யாரும் பேசக் காணவில்லை. இத்தமிழர்களின் பாடுகளோடு ஒப்பிடும்போடு மற்றவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது எது என்றால் இம்மக்களின் பாடுகள்தாம். அப்போது விழுந்துவிழுந்து கூத்தாடிய ஊடகங்களும்சரி, எழுத்தாள மூர்த்திகளும்சரி, அதைவிடக் கொடூரமானவை ஏவப்படும் மக்களைப் பற்றியோ, அவர்கள் பாடுகளைப் பற்றியோ எதுவும் பறையவில்லை. பறையப்போவதுமில்லை.

என்ன நடக்கிறது மூதூர் சம்பூர் உள்ளிட்ட புலிகளின் பகுதியில்?

இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா அரசபடையால் கடுமையான போரொன்று அப்பிரதேசத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கைப்பற்றுவது தமது நோக்கன்று என்று விழுந்தடித்து அரசதரப்பில் சிலர் சொன்னாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் வாயிலிருந்தே அதைக் கைப்பற்றும் நோக்கு வெளிவந்துவிடுகிறது. இராணுவத் தளபதி மிகத் தெளிவாக அதைச் சொல்லிவிட்டார்.
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை இராணுவம் முன்னேறியுள்ளதை புலிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

சம்பூர் மீதான அண்மைய இராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டபோது 20 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசபடையால் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மக்களை வெளியே செல்லவிடாமல் முக்கிய பாலமொன்றைத் தாக்கிச் சேதப்படுத்தியது அரசவான்படை. அதன்பின் வெளியேற முடியாமலிருந்த மக்கள் மீது குண்டுபோட்டுப் படுகொலை செய்துள்ளது.

இப்பகுதி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் இப்போதுதான் ஏவப்பட்டது என்றில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே (இப்போதும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். நான் சொல்வது இருதரப்பும் சுமுகமாக இருந்த காலத்தை) அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ரணில் காலத்தில், புலிகள் வெளிநாடுகளில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூர்ப்பகுதி மக்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கட்டடப் பொருட்களுக்கான தடை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசபடையால் தடைசெய்யப்படுவதும் பின் மக்கள் போராட்டம் நடத்தி அவற்றைப் பெறுவதுமாகக் கழிந்த காலமுண்டு.

பின் அரசியல் நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய காலத்தில் இப்பகுதி மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இம்மக்கள் மேல் முழு அளவில் தன் படுகொலை அரசியலைத் தொடங்கியது அரசபடை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின் அரசபடையால் நடத்தப்பட்ட முதல் வான்தாக்குதல் இப்பகுதி மக்கள்மேல்தான் நடத்தப்பட்டது. இதில் பதினாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்போதும் புலிகளைத்தான் கொன்றோம் என்று அரசபடை சொல்லிக்கொண்டது, உலகமும் நம்பியது என்றுதான் நினைக்கிறேன்.

அன்று தொடங்கிய பிரச்சினை தொடர்ந்தது. அப்பகுதி மீது தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாகவே பெருந்தொகை மக்கள் அப்பிரதேசத்தைவிட்டு ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றார்கள். முதல் கிழமையில் மட்டும் அப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் 28 ஆயிரம்பேர்.

அன்று தொடக்கம் இன்றுவரை அப்பகுதி மக்கள் ஓடிக்கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்று வாகரையில் குந்தியிருக்கும் சம்பூர்க்குடும்பங்கள் சில இந்தக்காலத்துள் பத்துத் தடவையாவது இடம்மாறியிருக்கின்றன. பத்துத் தடவைகள் இடம்பெயர்வதென்பது எங்களுக்குச் சாதாரணமானதுதான். வன்னியில் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று. ஆனால் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தவை. மேலும் வன்னியி்ல் ஓரளவுக்கு சமாளிக்கும் வல்லமையிருந்தது. இங்கே, நாலு மாதத்துள் நடந்த இடப்பெயர்வுகள் பெரியவை. ஏப்ரலில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் தமது சொந்த வீட்டைப் பார்க்கக்கூட வழியில்லை. தம்மோடு ஒன்றாக ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் எங்கே என்றே தெரியாமல் பலர். யார் செத்தார்கள், காயப்பட்டார்கள் என்றே விவரம் தெரியாமல் அங்குமிங்குமாகச் சிதறியிருக்கிறது அச்சமூகம். ஓடும் இடமெல்லாம் அரசபடை தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயரும் மக்களைக் குறிவைத்துக்கூட தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயர்வதற்கிருக்கும் வழிகளைத் தாக்கியழிக்கிறது. இலங்கைத்துறை பாலத்தைத் தாக்கியதும், வெருகல் பாதையைத் தாக்கியழித்ததும் இப்படித்தான். இவ்வளவு கொடுமையையும் நடந்துகொண்டிருப்பது, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்ற ஒன்று நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், பன்னாட்டுச் சக்திகள் 'கண்காணிப்பதாய்'ச சொல்லிக்கொள்ளும் காலத்திலும்தான்.

இன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. இன்று அம்மக்களுக்கு இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' தான். (அந்நிறுவனத்தைப் பயங்கரவாத நிறுவனமாகச் சித்திரித்து நடத்தப்படும் பரப்புரைகூட மிக நேர்த்தியான ஒரு திட்டமிட்ட ஈழத்தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைதான்).

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற தொண்டு நிறுவனங்களையும், தனியார்களையும் தடுத்து வைத்திருந்தது அரசபடை. காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தச் சென்ற நோயாளர் காவுவண்டியைக்கூட சிலநாட்களாக அனுமதிக்கவில்லை அரசு. சிலநாட்களின்பின் பத்து லொறியில் உணவுப்பொருட்களை அரசு அனுமதித்தபோது "ஆகா என்னே ஒரு கரிசனையாக அரசு!" என்று ராஜபக்சவைப் புகழ்ந்து பதிவுகள் வந்தபோது இந்தப் 'பயங்கரவாதி' களை நினைத்து உண்மையில் பயம்தான் வந்தது. [தொண்டு நிறுவனங்களை சேவையிலிருந்து வெளியேற்றும் மிகக் கோரமான திட்டதுடன் அரச பயங்கரவாத இயந்திரம் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவருவது அறிந்ததே. அதற்கு ஏதுவாக அத்தொண்டு நிறுவனங்களும் தமது 'சேவையை' நிறுத்திவிட்டு மூட்டை முடிச்சுடன் வெளிக்கிடுகிறார்கள்.]

இன்று, திருமலையிலும்சரி, மட்டக்களப்பு -அம்பாறையிலும்சரி, தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அரசபயங்கரவாதம் பெருமளவு வெளியில் தெரிவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் செய்தியாகவாவது வரும். புலிகள் தரப்போ புலியெதிர்ப்புத் தரப்போ போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவார்கள். அதைவிட கிறிஸ்தவ மதபீடத்தின் மூலமும் பிரச்சினைகள் வெளிவரும். மேலும் பன்னாட்டுப் பார்வையும், அதன் நிறுவன அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அங்கு நடப்பவற்றுக்கு ஒரு 'விலை' உண்டு.

ஆனால் இப்போது கிழக்கில் நடப்பதற்குப் 'பெறுமதி' இல்லையோ என்ற ஐயம் வருகிறது. நாயைப் போலச் சாகடிக்கப்படும், நடத்தப்படும் மக்களின் துன்பங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை. கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக்கூட சும்மா கைக்கணக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்று அரசபடை கடும் யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மூதூர் - சம்பூர்ப்பகுதி மிகக்குறுகிய பகுதி. வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டால் இடம்பெயர அந்தப் பகுதிக்குள் இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சகல வழிகளையும் அடைத்து, வெளியுலகத்திலிருந்து அப்பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு அங்குப் பெரிய மனித அவலத்தை விதைத்துள்ளது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் கொடூரமான வான்தாக்குலும், பிரதேசங்களைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையும் அரசபடையால் நடத்தப்படுகிறது. இன்னும் கண்காணிப்புக்குழுவும் நடுவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைத் தடுப்பதையும், மக்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்துக்கொல்வதையும் எவரும் பெரிய பிரச்சினையாக்கிய மாதிரித் தெரியவில்லை. மூதூரிலிருந்த 'இராணுவ முகாம்களை' புலிகள் தாக்கிய போதுமட்டும் உலகத்துக்கும் நடுவர்களுக்கும் 'மனிதாபிமானம், யுத்தநிறுத்த ஒப்பந்தம்' என்பவை ஞாபகம் வந்து பின் மறந்து போயின. புலிகளிடமிருந்து எப்போதாவது ஒருநாள் எதிர்நடவடிக்கை வரத்தான் போகிறது. அப்போது பார்ப்போம் இந்தக் கோமாளிகளின் கூத்தை.

இன்று என் யாசகம் இதுதான்.
மறந்தும்கூட புலிகள் முஸ்லீம்களோ சிங்களவர்களோ இருக்கும் பிரதேசத்திலுள்ள 'இராணுவ முகாம்கள்' மீது தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது. அரசபடையினரை நோக்கியும் என் வேண்டுகோள் இதுதான். அவர்களும் முஸ்லீம்கள்மீதோ சிங்களவர்கள்மீதோ தாக்குதல் நடத்திவிடக்கூடாது.
ஏனென்றால் அரபடை தாக்குதல் நடத்திக் கொன்றால்கூட அதற்கும் புலிகளைக் காரணம் சொல்லி "மனிதாபிமான, மக்கள் நேய"ப் பதிவுகளை எழுதவேண்டிய நிலைக்குச் சக பதிவர்கள் ஆளாகிவிடக்கூடாதென்ற நல்ல நோக்கத்திற்றான்.
அவர்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். எதற்கு அவர்களையெல்லாம் நேரம் மினக்கெட்டு பதிவு போட வைப்பான்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்கு மாகாணத்தின் மக்கள் அவலங்கள் பற்றி D.B.S. Jeyaraj ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இடப்பெயர்வு விவரங்கள் பற்றியும் சில தகவல்கள் சொல்லியுள்ளார்.
அவரின் முழுமையான கட்டுரைக்கு:
Wretched of the North-East Lanka earth


_____________________________________________

Labels: , , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]