Sunday, April 03, 2005

பழைய, புதிய புரட்சி.

வணக்கம்!
விடுதலைப்புலிகள் ஏட்டில் பாலகுமாரனின் கட்டுரையொன்று வந்துள்ளது. ஜே.வி.பி. இன் பண்டைய புரட்சி பற்றியும் அவர்களின் தற்கால புரட்சி பற்றியும் எழுதிச்செல்லும் இத்தொடர் சுவாரசியமாக உள்ளது (எனக்குத்தான்). அதை இங்கே தருகிறேன். தமிழ்நாதத்துக்கு நன்றி.

தம்கருவிலே தம்மையே கருவறுக்க தாமே கருக்களைக் காவுவோர்
-க.வே.பாலகுமாரன்-


வரலாற்றில் சில அபூர்வமான தருணங்கள் வாய்ப்பதுண்டு. அத்தருணங்களில் வரலாற்றின் பாய்ச்சலைத் தடுக்கும் சக்திகளே அதனை தூண்டும் கருவிகளாக மாறிவிடும். ஒரு விடுதலை அமைப்பினை அழிப்பதாகக் கருதி எதிரியே அவ்வமைப்பு மீதமாக நிறைவேறப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கு தகுந்த வாய்ப்பினை வழங்கிவிடக்கூடும். எனவே விடுதலைப்புலிகள் தமது இலக்கினை அடைய எடுக்கும் முயற்சிகளை தாமே தடுத்து நிறுத்தி வருகின்றோம் என மார்பு தட்டும் ஜே.வி.பியே விடுதலைக்கான மிகுதி நிகழ்ச்சி நிரலையும் பூரணப்படுத்த எமக்கு உதவக்கூடும். மார்ச் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு விகாரமா தேவி வெளியரங்கில் ஜே.வி.பியின் முன்னணி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய அமைப் பால் (PNM-PATRIOTIC NATIONAL MOVEMENT) பெருமெடுப்பில் எதிர்ப்பியக்கமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2005: மீள் குடியேற்றவாத எதிர்ப்பியக்க ஆண்டு என்கிற இவ்வியக்கம் வெளிநாட்டவர் மீதான கடுமையும் காழ்ப்புணர்ச்சியும் மிக்க பரப்புரையை தீவிரமாக செய்யத்தொடங்கியுள்ளது.

போர்த்துக்கேயர் வருகையின் 500வது ஆண்டு நிறைவின் ஆண்டாக 2005ஐப் பிரகடனம் செய்தது. குடியேற்றவாதம், ஏகாதிபத்தியம் என்பவற்றிற்கெதிரான எதிர்ப்பினைத் தேசியவாதமும் முற்போக்கும் கலந்த கலவையாக்கி அதனடிப்படையில் தமிழர் மீதான காழ்ப்பை, வெறுப்பினை விதைக்கும் நிகழ்ச்சியை மறைத்து ஜே.வி.பியினர் போடும் ஆட்டம் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. இது கண்டு அம்மையாரே அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிகின்றது. இன்று சிறிலங்காவிலே ஜக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எல்லா ஆயுதங்களையும் ஜே.வி.பியிடம் பறிகொடுத்து அம்மணமாக நிற்கின்றன. தொடக்கத்தில் வி.ஜே.பி இந்தியாவில் வெறித்தனமாக செயற்பட்டது போல, தலிபான்களின் அடிப்படை வாதப்போக்கின் நிழல்போல ஜே.வி.பி செயற்படுவது இப்போது பலராலும் மிகக்கவலையோடு அவதானிக்கப்பட்டு வரப்படுகின்றது. எனவே கடந்த இரண்டாம் திகதியன்று இந்நிகழ்ச்சியில் விமல் வீரவன்ச உதிர்த்த வரலாற்று வாசகங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

"1505 ஆம் ஆண்டு கடற்கொந்தழிப்புக் காரணமாக போர்த்துக்கேயரான லொறன்சோத அல்மேய்தா இலங்கை வந்தடைந்தார். இன்று கடல்கோள் காரணமாக உதவி வழங்கும் போர்வையில் எம் நாட்டினை அடிமைப்படுத்த பலர் வந்துள்ளனர்." 'இன்று சூல்கெய்ம் கண்டி சென்று மகாநாயக்கர்களை வணங்குகின்றார். சிங்களப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றார். இவை யாவும் அன்பின் விளைவல்ல. இவையாவும் நஞ்சு. இதுபோலத்தான் அன்று யோன் டொய்லி என்கிற ஆங்கிலேயர் கண்டி சென்று மகாநாயக்கர்களைச் சந்தித்தார்... சிறி விக்கிரமராயசிங்கனோடு பழகி அவனை மதுவருந்தப் பழக்கினார், பின் கழுத்தறுத்தார். கண்டியை அன்று காட்டிக்கொடுத்த டொய்லியின் வேலையைத்தான் இன்று அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்து வருகின்றன." 'பௌத்த இராச்சியத்தை அழித்துவிட்டு தமிழ்க் கிறிஸ்தவ தமிழீழத்தை உருவாக்கவே சர்வதேசமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அதற்கான நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன."

விமல் கூறிய இன்னொரு விடயத்தினை கவனத்தில் நாம் கொள்ளவேண்டும். 'விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும். சுனாமியின் பின் 5,6 நாட்கள் புலிகள் காணாமல் போயிருந்தார்கள். இந்த அரசாங்கம்தான் அவர்களுக்கு மூச்சு வழங்கியது." (தினக்குரல் 04-03-2005)

பிறக்கும்போதே அழிவதற்கான சாபத்தோடு பிறந்தவர்கள் என கதைகளிற்றான் வாசித்துள்ளோம். கருவிலேயே தன்னையே கருவறுப்பதற்கான கருக்களைக் கொண்டு பிறந்த ஒரு விசித்திர முற்போக்கு(?) அமைப்பொன்றினை இப்போது தான் காண்கிறோம். 1505 ஆம்; ஆண்டிற்கு முன் செல்வோம்; அழிக்கப்பட்ட 250 விகாரைகள் உட்பட அனைத்திற்கும் நட்டஈடு போர்த்துக்கேயரிடம் கோருவோம் என்கிற இக்கருத்துக்கள் உண்மையிலேயே மிக ஆழமான அருத்தங்களை கொண்டவை. உண்மையிலே எமது விடுதலையின் ஆதார நிலைப்பாடுகளும் தார்மீக வலுக்களும் இவ்வாதங்களிலுள்ளன. 1505 முன்னுள்ள நிலைக்கு சென்றால் தமிழ் இராச்சியமும் தமிழ்மக்களின் பண்பாட்டு, பொருண்மிய மரபுகளுமல்லவா முதலில் மீட்கப்படவேண்டும். போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட 500 ஆலயங்களுக்கும் சேர்த்து அல்லவா நட்டஈடு கோரப்படவேண்டும். கிக்கடுவை சிறி சுமங்கல தேரரின் நாட்டுப்பற்று பற்றி வீரவன்ச பேசும்போது சங்கிலி மன்னன் பற்றியும் அல்லவா அவர் பேசவேண்டும்? ஏன் இவை நிகழவில்லை? சிறிலங்காவின் முழுமையான நாசத்திற்குக்காரணமாகப் போகும் இக்காரணம் பற்றி இத்தீவில் கவலைப்படுவர் யார்?

எமது முழுக்கவனமும் நிகழ்காலத்தில் ஜே.வி.பி இழைத்து வரும் மாபெரும் தவறு பற்றியதாகவே உள்ளது. ஜே.வி.பி ஏலவே இழைத்த தொடர் தவற்றின் மூன்றாவதும் இறுதியுமாக போகும் இத்தவறு இவ்வுலகின் மனிதநேயமிக்கோரால், விடுதலையுணர்வு கொண்டோரால், முற்போக்காளரால் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாததான பெரும் அவலம் நிரம்பிய நினைவுகளாகப் போகின்றன. ஏனெனில் மிகச்சரியான, மிக நீதியான சமூகக் காரணங்களோடு ஒரு மாற்றம் நடப்பதற்கான அகப், புறச்சூழல் தோற்றம் பெற்ற காலகட்டத்திலே ஜே.வி.பி தோற்றம் பெற்றது. சுதந்திரம் பெற்ற மறுகணமே ஏழைச் சிங்கள மக்களை ஏய்த்து அவர்கள் வளமான வாழ்வைப்பறித்த சிங்கள ஆளும் மேட்டுக் குடிக்கெதிராக முழு இளைஞர் தொகையில் 76 விழுக்காடு கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாய, பாட்டாளிகளின் மைந்தர்கள் கிளர்ந்ததை எவரும் எவ்வாறு பிழையென சொல்ல முடியும்?

எனவே தனது முதலாவது கிளர்ச்சியை நடத்த முன்னரே சிறைப்பிடிக்கப்பட்ட றோகன விஜேயவீரா குற்றவியல் நீதி ஆணைக் குழுவின் முன் பேசினார். (மொன்காடா கோட்டை தாக்குதலின் பொழுது சிறையாகியிருந்த பிடல் நீதிமன்றில் வரலாறு என்னை விடுவிக்கும் எனப் பேசியதன் சாயலில்) இங்கே நடப்பது என்னவென்றால் ஒரு சமூக வருக்கத்தின் பிரதிநிதி இன்னொரு வருக்க பிரதிநிதி நோக்கி உரையாடுவதுதான். ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளான வருக்கத்தின் பிரதிநிதி ஒடுக்கும் சுரண்டும் வருக்கப்பிரதிநிதி நோக்கி விளிப்பதுதான். 'நானொரு மார்க்சியவாதி; நானொரு நவீன போல் சுவிச்; நானொரு பாட்டாளி வருக்கப் புரட்சியாளன்."

எத்தகைய உயரிய வார்த்தைகள்? இவற்றினை உச்சரிக்க தன்னும் இவருக்குத் தகுதியிருந்ததா. இவையாவுமே உண்மையாகவிருந்தால் இத்தீவில் இருநாடுகள் அருகருகே அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்? றோகண உயிருடன் வாழ்ந்திருப்பார், ஒரு புரட்சியாளனாக அவர் உலகால் போற்றப்பட்டிருப்பார்?

ஆனால் நடந்ததென்ன? 1971 ஏப்பிரலில் நடைபெற்றிருக்க வேண்டிய புரட்சி கிளர்ச்சியாகியது. அரசையே கைப்பற்றத்திட்ட மிட்ட ஆயுதப்புரட்சி 53 இராணுவத்தினரை 37 பொலிசுக்காரரை கொன்று 35 காவல் நிலைகளைச் சிலமணிநேரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததோடு முடிவிற்கு வந்தது. இங்கேயொரு குறிப்பினை வாசகர்களுக்கு சொல்லவேண்டும். ஜே.வி.பியினர் நிறைவேற்றாத புரட்சி தோற்றதற்கு என்ன காரணமென்பதை ஆராய்வதோ அவர்களது இராணுவச் செயற்பாட்டினை விமர்சிப்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் எத்தனை மோசமான இராணுவத் திட்டமிடலடிப்படையில் செயற்பட்டுத்தோற்ற இவர்கள் இன்று எல்லாவற்றிற்கும் பிறர்மீது குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் மீதே பெரும் பழிசுமத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. புரட்சியை நடத்த வேண்டிய புரட்சித்தலைவர் புரட்சிக்கு முன்னரே கைதாகி விடுகின்றார். புரட்சிக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்ய 1971 மார்ச்சில் மாவட்டங்களுக்குப் பயணித்த ரோகண அம்பாறையில் வைத்துக் கைதாகி யாழ்ப்பாணச் சிறைக்குள் தள்ளப்படுகின்றார்.

இந்நிலையில் வித்தியோதயப் பல்கலைக்கழக விகாரையில் கூடிய ஏனைய தலைவர்கள் ஏப்ரல் 5இல் சகல காவல்நிலையங்களையும் தாக்க முடிவெடுத்தனர். அரசைக் கைப்பற்றும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. தகவல் பரிமாற கருவிகளற்ற நிலையில் தொடர்புகளை ஏற்படுத்துவதிலேற்பட்ட தவறு காரணமாக இரவு தாக்கப்பட வேண்டிய வெல்லவாய காவல்நிலையம் அதிகாலை 5.20க்கு தாக்கப்பட்டது. மொனறாகலை ஜே.வி.பியினருக்கு தாக்குதலைத் தொடங்குமாறு உத்தரவு தந்தி வழியே வழங்கப்பட்டது. புகழ்பெற்ற இத்தந்தி 'ஜே.வி.பி அப்புகாமி இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு 5" என்றமைந்தது. இதனை தவறுதலாக விளங்கி அதிகாலையிலேயே தாக்குதல் ஒரு பொலிசு நிலையம் மீது நிகழ்த்தப்பட்டது. எனவே பொலிஸ் தலைமைப்பீடம் விழிப்படைந்தது. இங்கு நகை என்னவென்றால் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான முன்னறிவிப்பு கிடைத்த நிலையிலும் பொலிசுக்காரர்களால் தங்களை முற்றாகப்பாதுகாக்க முடியாமல் போனதுதான். இவ்வாறாக ஒரு தந்தியால் புரட்சி கிளர்ச்சியான கதையிது.

மிகுதிக்கதையையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திவிடுகின்றோம். கொழும்பு அரசினையும் கைப்பற்றத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. பிரதான இராணுவ முகாமான பனாகொடையைத் தாக்க 800 மாணவர்கள் 25பேர் கொண்ட குழுக்களாகப்பிரிக்கப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தனர். பனாகொடை முகாம் பற்றிய வரைபடமும் கையில் இருந்தது. ஆனால் தாக்குதல் நிகழ்த்தப்படவேயில்லை. ஏனெனில் தாக்குதல்காரர்கள் பனாகொடைப் பக்கம் செல்லவேயில்லை. அது போலத்தான் கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதலும் நடக்கவேயில்லை. அதுபோலவே கொழும்பை கைப்பற்றவும் பெருந்திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சென்று விஜேவீரவை மீட்கும் திட்டமும் தோல்வி கண்டது. நாட்டின் பிரதம மந்திரியான சிறிமாவைக் கடத்துவது அல்லது கொல்வதென்றும் திட்டமிருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் சோமவன்ச அமரசிங்க. நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளரான இவர் 5ம்திகதி இரவே கைதானார். ஊடரங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் தாக்குதலுக்குப் பொறுப்பானோர் நகரமுடியவில்லை. இச் சோமவன்ச வேறு யாருமில்லை. இன்றைய ஜே.வி.பியின் தலைவர்; சவடால் மன்னன்; மார்க்சியத்தை தெருப்புழுதிக்குள் வீசி நாசமாக்கிய மன வக்கிரக்காரன். மார்க்சை இரண்டாம் தடவை கொன்றவன்.

எனவே ஜே.வி.பியினரின் முதற்புரட்சி இவ்வாறு இடை நடுவில் முடிந்தது. இதற்கு ஜே.வி.பியினரின் திறனற்ற இராணுவ மூலோபாயங்கள் உத்திகள் மட்டுமா காரணம்? விடுதலை, புரட்சி போன்ற உயரிய கருத்தமைவுகளை இவர்கள் புரிந்து கொண்டவிதம் அவர்கள் இவற்றினை அபத்தமாக கையாண்டமை எல்லாமே அவர்கள் செய்யக்கிளம்பிய புரட்சிக்கே எதிரானவை. மாற்றத்தினைக் கொண்டு வர தடையான மாறாத நிலைப்பாடுகள், இயங்கியல் என்னும் சமூக அசைவியக்கத்தினை பின்தள்ளும் காரணிகள்.

எனவே மார்க்சை, ஏங்கல்சை லெனினை, கரைத்துக்குடித்து சேயை, பிடலை மோசமாக மனதில் உருவகப்படுத்திய றோகணவிக்கு மிக மோசமாகச் சுறண்டப்பட்ட ஏழைப்பாட்டாளியான, மலையக மக்கள் இந்தியாவின் விரிவாக்கக் கைக்கூலிகளாகத் தெரிந்தனர். மலையக மக்களை முன்னனிப்படையாகக் கருதிய சண்முகதாசன் ஒரு இனவாதி. ஒடுக்குமுறைக்குட்பட்ட தமிழ்மக்கள் கிள்ளுக்கீரைகள். இவை யாவற்றினையும் விட 1970களில் தமிழ் இளைஞர் மனதிலே கனன்று கொண்டிருந்த விடுதலைத்தீயை அடையாளம் காண முடியாத அகக்குருடர்கள் இவர்கள்.

இவர்கள் எவ்வாறு புரட்சி செய்வது? ஒருபொழுதும் முடியாது என்பதற்கு நெறி கெட்டு அலங்கோலமாகிய 2வது(?) புரட்சியே இன்னொரு சான்று-

(தொடரும்)...

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: மகிழன்

ம். நான் தமிழ்நாதத்திலயும் வாசிச்சனான். அவயின்ர திருகுதாளங்களப் பற்றிப் படிக்க நலலாயிருக்கு. எப்ப அடுத்த தொடர் வருமெண்டு ஆவலாயிருக்கு.


19.40 4.4.2005
 
எழுதிக்கொள்வது: ஒருவன்

இன்றுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். நன்றாயிருக்கிறது.


1.38 14.5.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]