Monday, April 30, 2007

விமானம் வீழ்த்தப்பட்டது - வரலாற்று நிகழ்வு

நேற்று (30.04.2007) அன்று சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிக்-27 இரக குண்டுவீச்சு விமானமொன்று வன்னிப்பகுதியில் வைத்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.
அவ்விமானம் வீழ்ந்துவிட்டதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அரசதரப்போ அதைப்பற்றி மூச்சும் விடவில்லை. அதன்காரணத்தால் மற்றச் செய்தி நிறுவனங்களும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
விமானம் எங்கு வீழ்ந்தது? வானோடிக்கு என்ன நடந்தது? போன்றவற்றுக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.
கடலுக்குள் விழுந்திருக்க வேண்டுமென்று புலிகள் தரப்புச் செய்திகள் சொல்கின்றன.

விமானம் தாக்குதலுக்குள்ளாகி புகைகக்கியவாறு திரும்பியதை வன்னிமக்கள் பார்த்திருக்கிறார்கள். கக்கிய புகையின் அடிப்படையில் அவ்விமானம் மீளமுடியாத நிலையிலிருந்ததாகவே கருதப்படுகிறது. அதேநேரம் கொழும்பு வான்படைத்தளத்திலோ அல்லது வேறெங்குமோ புகைகக்கியபடி விமானமொன்று தரையிறங்கியதாகத் தகவலில்லை. பொதுமக்களுக்குத் தெரியாமல் தரையிறங்கக்கூடிய எவ்விடமும் சிறிலங்கா அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குளில்லை.
எனவே புலிகளின் செய்தியை நம்பாத நடுநிலையாளர்கள்கூட விமானம் எங்கோ வீழ்ந்திருக்கிறது என்று தாராளமாகக் கருதலாம்.

மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து இரண்டு அவ்ரோ இரக விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இவ்விரு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஈழப்போராட்டத்தில் விமான எதிர்ப்பில் புதிய எழுச்சியொன்று அத்துடன் தொடங்கியது. பன்னிரண்டு ஆண்டுகளின்பின் அதே நாட்களில் மிகையொலி விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டு புதியமுறையிலான வடிவமொன்றைக் கொடுத்துள்ளது.

*****************
இதுவொரு வரலாற்று நிகழ்வு. ஈழப்போராட்டத்தில் முதன்முதலாக மிகையொலி குண்டுவீச்சு விமானமொன்று களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.
மிகையொலி விமானங்கள் இலங்கையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கடந்த பதினைந்தாண்டுகாலத்தில் ஒருதடவைகூட இவ்வகை விமானங்கள் களத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டதில்லை - ஏன் சேதமாக்கப்பட்டதுகூட இல்லை.

1993 ஆம் ஆண்டு இவ்வகை விமானங்கள் ஈழப்போரில் குதித்தன. இவ்விமானங்கள் ஏற்படுத்திய முதலாவது அவலமாக 1993 நவம்பரில் நடைபெற்ற யாழ்ப்பாணம் - யாகப்பர் ஆலயம் மீதான தாக்குதலைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். (அதற்கு முன் ஏதாவது தாக்குதல் இவ்விமானங்களால் நடைபெற்றிருந்தால் அறியத்தரவும்).
இவ்விமானங்களின் வருகைக்கு முன், விமானச் சத்தத்தைக் கேட்டு, அது வட்டமிடுவதைப் பார்த்து, எங்கே குண்டுவிழப்போகிறதென்று ஊகித்துத்தான் மக்கள் காப்புத் தேடிக்கொள்வார்கள். ஆனால் இவற்றின் வருகைக்குப்பின் குறிப்பிட்ட காலம் அப்படியெல்லாம் செய்யமுடியாமற் போனது. இவற்றின் வேகம் காரணமாக சத்தத்தைக்கொண்டு விமானத்தைக் கணிக்க முடியாதிருந்தது. இதன் இரைச்சலே மக்களைக் கிலிகொள்ள வைத்தது. தொடர்ந்த போராட்டத்தில், இவ்வகை மிகையொலி விமானங்களே குண்டுவீச்சில் முதன்மைப் பங்கை வகித்தன. மிக அதிகளவான சேதத்தையும் ஏற்படுத்தின.

புலிகளால் அவ்வப்போது குண்டுவீச்சு விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படும். மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கியபோது அடுத்தடுத்து சில விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. ஆனால் மிகையொலி விமானங்களெவையும் வீழ்த்தப்படவில்லை. இவற்றின் அதிகூடிய வேகம், தானியங்கியாகச் செயற்படும் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை என்ற காரணிகளால் இதன்மீதான தாக்குதல்கள் அனைத்தும் முழுவெற்றியை அளிக்கவில்லை. தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் - குறிப்பாக ஓயாத அலைகள் - 2 க்குப்பின்னான காலப்பகுதியில் இவ்வகை விமானங்களை குறிப்பிட்ட உயரத்தின்கீழ் தாழப்பதிந்து குண்டுபோட முடியாமல் செய்வதில் மட்டுமே எதிர்ப்புத் தாக்குதல்கள் வெற்றீட்டின. இதன்மூலம் குண்டுவீச்சைத் துல்லியமற்றதாக்கியது பெரும் அனுகூலமாக அமைந்தது. எனினும் எல்லாநேரத்திலும் எதிர்ப்புத் தாக்குதல் நடத்தும் சாத்தியமிருக்கவில்லை. எதிர்ப்புத் தாக்குதலுக்கு ஆகும் மிகப்பெரிய செலவு ஒருகாரணம்.

ஒருகட்டத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்துமளவுக்குச் சென்றிருந்தது. நேற்றுவரை, தாம் தாக்கப்படுவோமென்ற பயமேதுமின்றித்தான் விமானங்கள் குண்டுவீச்சை நடத்திக்கொண்டிருந்தன. இடைப்படட காலத்தில் மிகப்பெரிய அழிவை இவ்விமானங்கள் தமிழர் தரப்புக்கு - மக்களுக்கு மட்டுமன்றி போராளிகளுக்கும் ஏற்படுத்தியிருந்தன. இவ்வகை விமானங்களிலொன்று நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்டது.
***********************

மிகையொலி விமானங்களில் 'கிபிர் (Kfir) எனப்படும் இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்கள் யாழ்ப்பாண இடப்பெயர்வை ஒட்டிய காலத்தில் சிறிலங்கா அரசபடையால் பயன்படுத்தப்பட்டத் தொடங்கின. தொன்னூறுகிளின் இறுதியில்தான் ரஸ்யத் தாயரிப்பான மிக் இரக விமானங்கள் களத்துக்கு வந்தன.
கிபீர் ஒப்பீட்டளவில் வேகம் கூடியது. அதனால் இரைச்சலும்கூடியது. மக்களை உளவியல் ரீதியில் அதிகம் வெருட்டியது கிபிர் விமானம்தான். ஆனால் மிக் வகையோடு ஒப்பிடும்போது துல்லியம் குறைவாகவே இருந்தது. இரைச்சல் மூலமும் வேகம் மூலமும் பெரும் பயத்தை உண்டுபண்ணினாலும் துல்லியக்குறைவு காரணமாக இது அதிகளவில் பாதிப்புக்களைத் தரவில்லையென்று சொல்லலாம்.

மிக் விமானம் ஒப்பீட்டளவில் வேகம் குறைவென்றாலும் தாக்குதல்திறன் அதிகமானது. போராளிகளுக்கு அதிகம் சிக்கலைக் கொடுத்தது மிக் விமானம்தான். துல்லியமாக பல தாக்குதல்களை அவ்வகை விமானங்கள் நடத்தியிருந்தன. வேகம் குறைவென்றபோதும் இதுவரையான அனைத்து விமான எதிர்ப்பு நடவடிக்கைகளின்போதும் தப்புவதற்கு அவ்வேகம் போதுமானதாக இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசபடையினரின் வான்டையினரின் தாக்குதல்கள் என்றுமில்லாத வகையில் மிகக்கடுமையாக இருந்தன என்பதோடு பாரியளவில் சேதத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அண்மைக்காலத்தில் அரசவான்படை ஏற்படுத்திய கிலியைப் போலவோ சேதத்தைப்போலவோ முன்னர் இருந்ததில்லை. வெல்லப்பட முடியாத சக்தியாகவே இது இருந்தது.

நேற்றுச் சுட்டுவீழ்த்தப்பட்ட நிகழ்வோடு தற்காலிகமாகவேனும் சிறிலங்கா வான்படையின் தாக்குதல்ளும் செயற்பாடுகளும் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்படும். இவ்வகையான வெற்றிகள் தொடர்ந்தும் கிடைக்குமா அல்லது அரசவான்டை தொடர்ந்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபடுமா என்பது கேள்விக்குறியே.

எனினும் முதன்முதலில் மிகையொலி விமானமொன்றைச் சுட்டுவீழ்த்திய நிகழ்வு, ஈழப்போராட்டத்தில் ஒரு மைல்கல் என்பதை மறுக்க முடியாது. அதைப்பதிவாக்கவே இவ்விடுகை.

Labels: ,


Tuesday, April 24, 2007

ஆனையிறவும் அந்த நாட்களும்...

(ஆனையிறவு பற்றிய நினைவலைகள்)

உண்ணி வெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.

பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம், 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில்.

ஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம்.

எங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஓர் அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு விழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும்.

மட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்துமுடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான்.

வியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களைச் சுடுவது வெயில் மட்டுமன்று . சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம்.


சற்றுத் தூரத்தே ஒரே ஓர் ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒருகாய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவைஎம்மேல் ஏறுகின்றனவோ?

அணிந்திருக்கின்ற ஒற்றைஉடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது பெரிய சோதனை.

உண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும்? கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும். அந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்...?

********************************************
அந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம். தோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும். தலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் பிளந்தபடி ஒருவர் வருகின்றாரா? ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார்.

பாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆகா! அதுவே போதும்.

தென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும்.

அதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (துரவு கிடைத்த பின்னர் மட்டும்தான். முன்னர் "கழுவுவது" என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம்.

அன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது. காப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம்.

ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை. வழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை பாய்ந்து துப்பினார். ‘கள்ளுக் குடிச்சமாதிரிக் கிடக்கு” அதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும்? குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லாம் இனி இரவுதான். தண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை. இருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது. அடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின. எதைச் சொல்ல?

ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல? எதை விட?
**************************************
இப்போது "பலவேகய-02" நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை. அன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம்.

திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோலப் பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்திக் குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம்.

"மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம். வருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.? இயற்கைக்கு நன்றி சொன்னோம். மழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம்.

வானிலே பேரொலி எழுந்தது. Y-12 (குண்டுவீச்சு விமானம்) வருகின்றது.
அருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை.

எல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன. அது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்தால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும். ஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது.

Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது.
“ இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ?”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக! நாசமாய்ப்போக! எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை.
சிரித்துக் கூக்குரலிட்டோம்.
கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம்.

“இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. அது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல். இன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை, நாங்களுமில்லை. அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக.


மலைமகள்.
(மகளிர் படையணி)

நன்றி:
விடுதலைப் புலிகள். குரல்-123.
******************************
ஏற்கனவே 'படிப்பதிவுகள்' என்ற இன்னொரு வலைப்பதிவில் இடப்பட்ட பதிவுதான் இது. நாள் நேரம் கருதி இங்கே மீள் பிரசுரமாகிறது.

Labels: , ,


ஆனையிறவு

இன்று ஆனையிறவுப் படைத்தளம் தமிழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் "வீழ்த்தப்பட முடியாத தளம்" என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.

1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, 'புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்' என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.

1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். 'ஆனையிறவு' என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.

ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. புநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.
அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.

ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.

1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி - ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.

உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் "ஆகாயக் கடல் வெளிச் சமர்" என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.

அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி "யாழ்தேவி" என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.

யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.

இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.
ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக அனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.

ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு - வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.

பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, 'முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்' என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.


தரையிறக்கத்துக்குத் தயாரானநிலையில் புலியணியின் சிறப்புப் பிரிவொன்று.
பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மாமுனைத் தரையிறக்கம்' புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.
முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கி நீரேரியூடாக நகர்கின்றன.


தளபதி பால்றாஜ் அவர்களோடு ஏனைய போராளிகள்.


இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.

இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2001 22.04.2000 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.


மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.
ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.

ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது.
ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.
****************************************
வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் 'ஆனையிறவு'தான். ஆனால் வந்த பதில், 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர்'.
***************************************
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.
***************************************
ஆனையிறவு வெற்றியையொட்டி நிறையப்பாடல்கள், கவிதைகள் எல்லாம் வந்துவிட்டன. நீங்கள் ஒரு பாடலைக் கேளுங்கள். எனக்குப்பிடித்த பாடல்.
பாடலைப் பாடியோர்: சாந்தன், சுகுமார்.

"அந்த மாதிரி" என்று இப்பாடலில் வரும் சொல்லுக்கு விளக்கம் பலருக்கத் தெரியாமலிருக்கலாம்.
'சூப்பர்" என்று சொல்லப்படுவதற்கிணையாக எங்கள் வழக்கிலுள்ள சொல் இதுவாகும்.

ஈடுவைத்து_ஈடுவைத்த...
___________________________
இதுவொரு மீள்பதிவு

Labels: , , ,


தீச்சுவாலை முறியடிப்புச் சமர்.

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் அப்பகுதிகளில் இருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.

அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓர் இராணுவநகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை நீடித்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்தநிலையில் ஆனையிறவு நோக்கி பெரியளவில் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்தநிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி "அக்கினி கீல" அதாவது 'தீச்சுவாலை' என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்தபகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச்சூட்டு வலிமை அரசபடைக்கும் வெளியுலகுக்கும் - ஏன் தமிழ் மக்களுக்கும்கூட தெரிந்தது அச்சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. சிறிலங்கா வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில், எந்தநேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்டபடி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா மீதான தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான். வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடுகொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டுபோட்டுத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப்பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.

இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்துவிட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன். பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரணும் அதனைச் சூழக்கிடந்த ஏறத்தாழ இருபது இராணுவ உடல்களும். தாம் முற்றுமுழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அப்பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போது களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

அச்சமர்தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. பின்னாளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காரணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல். இன்று தீச்சுவாலை முறியயடிப்புச் சமர் ஆரம்பித்ததன் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்த நேரத்தில் அம்முறியடிப்புச் சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.
________________________________________

தீச்சுவாலை முறியடிப்புச்சமர் நினைவாக வெளிவந்த பாடல்களில் இருந்து ஒருபாடலை இப்போது கேளுங்கள்.
பாடலைப் பாடுபவர்களுள் ஒருவர் தமிழ்க்கவி.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: தீக்குளித்த நேரம்

ஊரைச்சேர்த்து_ஆடுவ...

Labels: , , , , ,


Thursday, April 19, 2007

நாட்டுப்பற்றாளர்

ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , ,


மூன்றாம் கட்ட ஈழப்போர்

இன்றைய நாளுக்கு முக்கியத்துவமுண்டு. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 'மூன்றாம் கட்ட ஈழப்போர்' தொடங்கியதும் இன்றைய நாளில்தான்.

1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது அரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.

இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த "ரணசுறு", "சூரயா" என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.

இவர்கள் பற்றிய நினைவுப்பாடலைக் கேளுங்கள்.

குரலுக்குச் சொந்தக்காரன் மேஜர் சிட்டு.

விழியில்_சொரியும்...

படங்களுக்கு நன்றி: அருச்சுனா.

Labels: , , , ,


அன்னை பூபதி

இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.


நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.

**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
***************************************

படம்: தமிழ்நெட்

Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]