Thursday, October 26, 2006

புலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: நாதன் - கஜன்

இன்று (26.10.2006) லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகிய வேங்கைகளின் பத்தாம் ஆண்டு நினைவுநாள்.
சரியாகப் பத்து வருடங்களின் முன்பு பிரான்சின் பாரீஸ் நகரில் வைத்து இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.லெப்.கேணல் நாதன் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடங்கப்பட்டதன் அடித்தளம். நீண்டகாலமாக பன்னாட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர். அனுபவம் வாய்ந்த மூத்த போராளி.

கப்டன் கஜன், ஈழமுரசு பத்திரிகையை நடத்தி வந்தவர்.

மேற்குலக நாடொன்றில் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இவர்கள்.

இவர்களின் பத்தாமாண்டு நினைவில் இவர்களுக்கு எமது அஞ்சலிகள்.

Labels: ,


Monday, October 23, 2006

இருகட்சிக் கூட்டு - மிளகாய் அரைப்பு

சிறிலங்காவில் முக்கிய இரு கட்சிகளும் கூட்டு ஒப்பந்தமொன்றிற் கையெழுத்திட்டுள்ளன. பெரும்பாலான ஊடகங்களும் ஆய்வாளர்களும் இதை 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த' நிகழ்வு என்று வர்ணிக்கிறார்கள். சிலர், இதோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிட்டது என்றவாறு கதைவிடக்கூடத் தயங்கவில்லை. ஆனால் உண்மையில் இது எப்படிப்பட்டது?
சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்கள் தலையில் மிளகாய் அரைக்க முற்பட்டுள்ளார்கள்.

இனப்பிரச்சினை தொடர்பில் இரு கட்சிகளுக்குமே பெரியளவில் வேறுபாடு எதையும் காணமுடியாது. தமிழின அழிப்பு என்று எடுத்துக்கொண்டால் சுதந்திரக்கட்சியும் சரி, ஐக்கிய தேசியக்கட்சியும் சரி ஏட்டிக்குப்போட்டியாக சளைக்காமற் செயற்பட்டுள்ளன. கடந்த அறுபதுவருட வரலாற்றில் இருகட்சியும் ஒரேகொள்கையுடன்தான் இனப்பிரச்சினையை அணுகின.
இப்போது அதே இருகட்சிகளும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளதான தோற்றத்தைத் தருகிறார்கள்.

இதை 'வரலாற்று முக்கியத்துவமானது' என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளும் ஒரு காரணம், இதுவரை ஒருகட்சி கொண்டுவரும் தீர்வை எதிர்க்கட்சி எதிர்த்துக்கொண்டிருந்தது, இனிமேல் அப்பிடியில்லாமல் இருகட்சிகளும் ஒருமித்து அதைப் பாராளுமன்றில் நிறைவேற்றுவார்களாம்.

தற்போதைய நிலையில் ஒரு தீர்வை எதிர்க்க எதிர்க்கட்சி தேவையில்லை. ஒரு வழக்குப் போதும். பேச்சுவார்த்தையைத் தோல்விக்குள்ளாக்கவும் தமிழருக்கான நியாயத்தைக் கிடைக்கவிடாமற் செய்யவும் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்துவது நீதித்துறையைத்தான். குறைந்தபட்சம் இரு வழக்குகளில் நீதித்துறை இதை நிரூபித்திருக்கிறது.
முதலாவது சுனாமிப் புனரமைப்புக்கான பொதுக்கூட்டமைப்பு தொடர்பிலான வழக்கில்.
இரண்டாவது வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பான வழக்கில்.
இன்றைய நிலையில் ஊழல்மிக்க, பேரினவாதம் புழுத்துப்போன நிலையில்தான் சிறிலங்கா நீதித்துறை உள்ளது.
புலிகளும் அரசும் பேசி எடுக்கும் எந்த முடிவையும், தீர்வையும் மிக இலகுவாக சிறிலங்கா நீதித்துறையால் தடைசெய்ய முடிகிறது. அந்தத் துணிவில்தான் குறைந்தபட்ச விட்டுக்கொடுப்பையாவது செய்ய சிங்களத்தரப்பு முன்வருகிறது.

நியாயமான தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால் முதலில் இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதற்குரிய பெரும்பான்மை இப்போது கிடைத்திருக்கும் நிலையிற்கூட இவர்கள் இதைச் செய்யப்போவதில்லை. அரசியலமைப்பை தமிழருக்கு நியாயம் வழங்கும் அடிப்படையில் மாற்றுவதென்பது சிங்களத் தலைமையால் நினைத்துப்பார்க்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.

சரி, மிக இலகுவான கேள்வியொன்றைக் கேட்போம்.
இருகட்சிகளும் கூட்டுச் சேர்ந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கும்படி தற்போதைய ஆளுங்கட்சிக்கு ரணிலின் கட்சி அறிவுறுத்துமா? வடக்கு - கிழக்கில் அரசபடை நிகழ்த்தும் விமானத்தாக்குதல்களை நிறுத்தும்படி ஓர் அறிக்கையாவது வெளிவிடுமா? கொழும்பில் அரசவன்முறைக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழர்களைக் (சந்தேகமில்லாமல் இவர்கள் அனைவரும் ஐ.தே.க வின் வாக்கு வங்கிகள்) காப்பாற்ற ஏதாவது செய்வார்களா? முழுக்க முழுக்க அரச ஒத்துழைப்போடு கடத்தப்படும், பணயக் கைதியாக்கிச் சூறையாடப்படும் தனது கட்சிக்கான நிரந்தர வாக்காளர்களாகிய தென்னிலங்கைத் தமிழர்களைக் காக்க ஏதாவது செய்வார்களா?
மாட்டார்கள். செய்யவே மாட்டார்கள். செய்யவும் முடியாது.
குறைந்தபட்சம் யாழ்ப்பாண மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றக்கூட ரணிலின் ஐ.தே.க உருப்படியான முயற்சி செய்யவில்லை, செய்யாது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தவர்களைக் கொண்ட கட்சியுடன், அந்த ஒப்பந்தத்தை ஏற்று கையொப்பமிட்ட ரணிலும் அவர் கட்சியும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். அப்படியானால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து வந்துவி்ட்டதா? யார் தமது முடிவை மாற்றினார்கள்?

சரி, இனப்பிரச்சினை விதயத்துக்கே வருவோம்.
விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன்தான் இவர்கள் தீர்வு பற்றிக் கதைக்க வேண்டும். புலிகளுடன்தான் பேசி ஒரு தீர்வு காணவேண்டும்.
புலிகளுடன் பேசுவதென்றால் அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அதன்படி சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளைவிட்டுப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் அப்படியே பேணப்பட வேண்டும்.
எனவே (மக்களுக்கான அத்தியாவசியப் பிரச்சினைகள், மனிதாபிமானப் பிரச்சினைகளை அடுத்து) இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மிகமிக அவசியமான, அவசரமான முதலாவது நடவடிக்கை என்னவென்றால் இராணுவம் ஆக்கிரமிப்பைக் கைவிட்டுப் பழைய நிலைகளுக்குத் திரும்புதல்தான்.

இப்போது கேள்வி, சம்பூரை விட்டு இராணுவம் பின்வாங்கி தனது பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ரணிலின் ஐக்கியதேசியக்கட்சி முன்வைக்குமா? தற்போது ஆட்சியிலிருக்கும் தனது புதிய கூட்டுக்கட்சிக்கு இதை அறிவுறுத்துமா? அனைத்து இராணுவ நடவடிக்கைக்கும் முழுப்பொறுப்பான தளகர்த்தர் மற்றும் முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்சவுக்கு ரணில் அறிவுறுத்துவரா? இதைச் செய்யமுடியாவிட்டால், "இனப்பிரச்சினைக்கான ஆக்கபூர்வமான கூட்டு" என்ற கோசம் நாறிப்போய்விடும்.
ஆனால் ரணில் செய்ய மாட்டார். ஐக்கிய தேசியக் கட்சி செய்யாது.
அவர்களால் அப்படிச் செய்யவோ சொல்லவோ முடியாது.
மீறினால் வெடிவிழும். அது சிங்களவன் ஒருவனின் கையிலிருக்கும் துப்பாக்கியிலிருந்து வரும்.

___________________________________________________
சரி, இந்தக் கூட்டுக்கு என்ன காரணம்?
மேற்குலக, இந்திய அழுத்தங்களால் வந்ததே இக்கூட்டு என்ற காரணத்தைச் சிலர் சொல்கிறார்கள். இங்கே இருகட்சிகள், பல கட்சிகள் என்ற கோணத்தில் அலசுவதைவிட யதார்த்தப்போக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சி என்ற அடிப்படையில் பார்க்கலாம்.
இவ்வருடத் தொடக்கத்தில் க.வே.பாலகுமாரன் சொன்னார்:
"அங்கே சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உறுமய என்று பலகட்சிகள் இல்லை. எல்லாம் ஒரே கட்சிதான். மகிந்த சிந்தனை, ரணில் சிந்தனை, சோமவன்ச சிந்தனை என்றில்லை. எல்லாம் ஒரே சிந்தனைதான். அது சிங்கள - பெளத்த - பேரினவாத சிந்தனை"

அது இன்று மெய்ப்பட்டு நிற்கிறது.
இக்கூட்டு என்ற நாடகம் சிங்கள - பெளத்த - பேரினவாதக் கட்சியின், சிந்தனையின் வெளிப்பாடே.
இதன்மூலம் என்ன செய்ய நினைக்கிறது?

இக்கூட்டு கைச்சாத்தானபின் மகிந்த சொல்கிறார், "இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இன்னும் இருவருடத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவோம்"
இந்த இருவருடங்களும் தமிழர்கள் என்ன செய்வது? சிங்களவன் போடும் பிச்சைக்கு வாய் பார்த்துக்கொண்டு, பட்டினிக்குப் பலிகொடுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் நாலைந்து பேரென்று செத்துக்கொண்டு, கடத்திப் பணம் பறிக்கும் அரசவன்முறையாளரிடம் சொத்து முழுவதையும் இழந்துகொண்டு, பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசங்களை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டு...... இருக்க வேண்டும்.

கடந்த மாவீரர் தின உரையில் பிரபாகரனால் மிகத் தெளிவான முறையில் சிங்கள தேசத்துக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. தமிழர்களுக்கான தீர்வாக சிங்கள தேசம் என்ன தீர்வைத் தர முன்வருகிறீர்கள் என்பதை முன்வைக்கும்படி அவ்வேண்டுகோள் இருந்தது. இன்றுவரை எதுவுமில்லை. சமஸ்டியையே ஏற்றுக்கொள்ள முடியாது, ஒற்றையாட்சியே தீர்வு என்ற கோசம் இதே ஆளும் தரப்பால் வைக்கப்பட்டது. ஆளும் தரப்பிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் கருத்துச் சொன்னார்கள். கூட்டுக் கழித்துப்பார்த்தால் மிஞ்சுவது, அவர்களிடம் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் ஏதுமில்லை என்பதே. இப்போது இறுதியாக இந்தியப் பஞ்சாயத்து முறை பற்றிய ஆராய்ச்சி என்றளவில் புதிதாக ஒரு புரளியைக் கிழப்பியிருக்கிறார்கள்.
இந்தியப் பஞ்சாயத்து முறைக்கும் ஈழத்தமிழனின் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

இதோ, இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த மாவீரர் நாள். சிங்களத் தலைமைக்கு தேவைக்கு அதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டாயிற்று. இன்னும் எந்தத் தீர்வுமில்லை. மாறாக அவலங்களையே கடந்த ஒருவருடத்தில் தந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லப்படும் சர்வதேசம்கூட சிங்கள இனவெறிச்செயலை ஆதரித்து ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தாம் விரும்பாத ஒன்று இலங்கையில் நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் காலம் கடத்த எடுத்த முயற்சிதான் இந்தக் கூட்டு.
இதன்மூலம் இன்னும் இரண்டு வருடங்கள் என்ற காலத்தைச் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு வருடங்கள் இப்படியே காலத்தைக் கழிக்க முற்படுகிறார்கள். ஆனால் இனிமேல் இவர்களுக்கான காலஅவகாசம் வழங்கப்படும் ஏதுநிலைகள் தமிழர் தரப்பில் இல்லை என்றே சொல்லலாம்.

சிங்களதேசத்தினதும் சர்வதேசத்தினதும் இந்தப் பொறியிலிருந்து ஓரளவாவது மீளவைக்க - குறைந்தபட்சம் ஒரு சாட்டாகவாவது சொல்வதற்கு தமிழர் தரப்பிடம் இருக்கும் ஓர் ஆயுதம் "சம்பூர்". தாம் விரும்பிய நேரத்தில், 'சம்பூரை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும்' என்பதை ஒரு காட்டமான - காலக்கெடுவுடன்கூடிய கோரிக்கையாக முன்வைக்கக்கூடிய நிலை தமிழர் தரப்புக்கு இருக்கிறது. சிங்களத் தரப்பால் ஒருபோதுமே -கனவிற்கூட நிறைவேற்ற முடியாத கோரிக்கை அது.


_____________________________________________

Labels: ,


Wednesday, October 04, 2006

பன்னிரு வேங்கைகள் நினைவாக....

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி மாண்டநாள் இன்று.

தமிழீழக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, பின் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் நிலை வந்தபோது அவர்கள் நஞ்சருந்தி 05.10.1987 அன்று வீரச்சாவடைந்தார்கள்.
எட்டு நாட்களின் முன்தான் இந்தியப்படைகளுக்கெதிராக பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து தியாகி திலீபன் உயிர் நீத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடந்த இப்பன்னிரு வேங்கைகளின் சாவுகள் தமிழர் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின.

இவ் வேங்கைகளின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவுநாளான இன்று அவர்கள் நினைவாக வெளிவந்த பாடலொன்றை இங்குத் தருகிறேன்.


______________________________________
பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.


_____________________________________________

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]