Thursday, September 27, 2007

கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்

இன்று (27 செப்ரெம்பர்) ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

இன்று கிளிநொச்சியானது தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.

பின்னணி

தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது.

1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.

இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.

முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.

இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.

இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.

1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பாதுகாப்புப் பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். (ஆனால் யாரோ கண்டி தலதா மாளிகைக்கு வெடிகுண்டுப் பாரவூர்தியை அனுப்பிவிட்டார்கள்) அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.

கிளிநொச்சி மீட்பு

1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் பதினோராவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.

3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து 15 கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).
ஆனையிறவையும் கிளிநொச்சிப் படைத்தளத்தையும் ஊடறுத்து பரந்தனில் நிலைகொண்டிருந்த புலியணியைத் தாண்டி கிளிநொச்சியில் எஞ்சியிருந்த சிங்களப்படைகள் ஓட்டம் பிடித்தன. ஆடுமாடுகள் பட்டிவிட்டு ஓடுவதுபோல் நூற்றுக்கணக்கில் கும்பலாக ஓடித்தப்பிய படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சில வீரவரலாறுகள் புலிகளால் எழுதப்பட்டன.

புலிகளின் மகளிர் படையணியொன்றின் தளபதியாக களத்தில் நின்ற லெப்.கேணல் செல்வி, எறிகணைகளை எதிரிகளுக்கிடையில் வீழ்த்த ஆள்கூறுகளையும் திருத்தங்களையும் பீரங்கிப்டையணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். அதில் கொல்லப்பட்டவர்கள் போக மிகுதி இராணுவத்தினர் செல்வியையும் தாண்டி ஆனையிறவு நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
துப்பாக்கியால் சண்டைபிடிக்க முடியாதளவுக்கு கொத்துக் கொத்தாக இராணுவத்தினர்.
செல்வியின் பீரங்கிப்படைக்கான அறிவுறுத்தல் இப்படியாக இருந்தது.

"என்னைச்சுத்தி ஆமிதான் நிக்கிறான். என்னால இனி ஒண்டும் செய்ய ஏலாது. என்னைப்பற்றிக் கவலைப்படாமல் நான் நிக்கிற இடத்துக்கு செறிவா குத்துங்கோ...."

அச்சமரில் லெப்.கேணல் செல்வி வீரச்சாவடைந்திருந்தார்.

இதே போன்றதொரு சம்பவம் மீண்டும் 11.08.2006 அன்று யாழ்ப்பாணம் மீது புலிகளால் நடத்தப்பட்ட சமரிலும் நடந்தது.


ஓயாத அலைகள் -2 சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.

புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்காககக் களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவோர் மீள்பதிவு
_____________________________________________

Labels: , , , ,


Wednesday, September 26, 2007

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் - 26.09.1987

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது!திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.


கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல்,
"நவீனன்" என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ?ஜில்? லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.
மனம் 'பட பட' வென்று அடிக்கத் தொடங்கியது?
மீண்டும் 'நவீனன்' என்று அழைத்தேன்.
நவீனன் எழும்பி விட்டான்.

ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது? மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது? ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது.


பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது. திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன். அது மிகவும் குறைவாக இருக்கிறது. 50 என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும்.

உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது. திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.

அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் - அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?.......
எது?
ஆம்.
சத்தியம்! என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ?அகிம்சை? என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான். கடமை ? கண்ணியம் - கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், 'கட்டுப்பாடு' என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே பலி கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை.
என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன்.


திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

'புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை'


இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, புலிகள் பொய்யர்கள் என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.
எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம். ஆனால் முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான்.
உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்?

265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09.1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.
ஆம். தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்?

எங்கும் அழுகைச் சத்தம். விம்மல் ஒலி. சோக இசை. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு!
காலை 11 மணிக்கு "என்பார்ம்" செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம்.

பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் - கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, 'லெப்டினன்ட் கேணல்' என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.

அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய முடியும்?

அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் 'ஓ' என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது.

பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர்.
ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.

திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்? அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

----------------------------
பட உதவி: அருச்சுனா.
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


திலீபனுடன் மூன்றாம் நாள் -17-09-1987

காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது. முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது. நாக்கும் வறண்டுபோயிருந்தது. இந்த நிலையில் அவரின் பற்களைச் சுத்தம் செய்ய முடியாது. எதற்கும் அவரின் விருப்பத்தைக் கேட்டுவிடுவோமே என்று அவரைப் பார்த்துக் கேட்கிறேன்.

"பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?"
"இல்லை வாஞ்சியண்ணை... வேண்டாம்."
கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை.
"வெளிக்குப் போகேல்லையோ?"
என்று மெதுவாகக் கேட்கிறேன்.
"போகவேணும் போலதான் இருக்கு."
"சரி கீழே இறங்கி வாருங்கோ" என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன்.

"வேண்டாம் விடுங்கோ......நானே வருகின்றேன்" என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்...
மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.
மறைவிடத்துக்குச் சென்ற அவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார்.
5 நிமிடம்......
10 நிமிடம்......
15 நிமிடம்......
20 நிமிடம்......
நிமிடங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவித பயனும் ஏற்படவில்லை. அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் கண்கள் என்னையறியாமலே கலங்குகின்றன. மேடையின் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன், தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து உரையாடத் தொடங்கினார். "கண்டபடி பேசினால் களைப்பு வரும்… கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ…" என்று அவரைத் தடுக்க முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. தனக்கே உரிய சிரிப்பை என் வார்த்தைகளுக்குப் பதிலாக்கிவிட்டுத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.


கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்தப்போகிறார்?
இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ? என்று எண்ணிய நான், அவரின் காதுக்குள் குசு குசுக்கிறேன்.
"என்ன பகிடியா பண்ணுறீங்க?...... ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினனான். பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற கேட்டீங்க?"…
என்று ஆவசத்துடன் என்மீது பாய்கிறார்.
"இல்லை…… இப்பவே உங்களுக்குச் சலம் போறது நின்று போச்சு…… இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும் கஷ்டமாக இருக்குமே…… அதுக்காகத்தான் கேட்டனான்……"
என்று அசடு வழியக் கூறிவிட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

அவரின் பேச்சில் இருந்த உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால், திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது. அதை இப்படி வருந்த விடுவதா? என்ற ஏக்கத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்
நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப் பாண நகரத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக, வெள்ளைச் சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர்.

திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒர் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு, "தமிழ் இனத்தின் பிரதிநிதி" என்ற எண்ணம்தான் அந்தச் சனக்கூட்டத்தினர் மத்தியில் நிறைந்திருந்தது. தாய்க்குலம் - திலீபன் வாடி வதங்கியிருந்த கோலத்தைக் கண்டு கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் மழையில் இதயம் கனிந்து விட்ட வருணபகவான் கூடத் தீடீரென்று பலமாகக் கண்ணீர் சொரியத் தொடங்கிவிட்டான்.

ஆம் !
அனலாகக் கொதித்துக்கொண்டிருந்த சூரியன், ஒரு பிள்ளையின் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத், தன்னைத் தானே கருமேகத்தின் போர்வைக்குள் மூடிக்கொண்டான் மழைநீர் கோவில் மைதானத்தில் ஆறாக ஒடிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களில் ஓருவர்கூட எழும்பால் அப்படியே இருந்தனர். அப்பப்பா! மக்களின் உணர்வு மழைக்கு முன்னிலையில் அந்த வருணனின் மழைநீர் வெகு சாதாரணமானது என்ற எண்ணம் நிதர்சனமாகத் தெரிந்தது.
வாடிய நிலையிலும், சோர்ந்த நிலையிலும் தன் உயிரினும் மேலான மக்கள் மழையில் நனைவதைக் கண்ட திலீபன், அவர்களை சனைய வேண்டாம் என்று கைகளை அசைத்துச் சைகை காட்டினார். ஆனால், அவர்களோ அசைவதாக இல்லை. "உன்னால் மட்டும் தானா தமிழினத்துக்காக மெழுகாக உருக முடியும்? …… உன் உயர்ந்த இலட்சியத்துக்கு முன் இந்த மழை வெகு சாதாரணமானது!" என்று கூறுவதுபோல், அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
முரளியும் - நிரஞ்சனும், வேறு சிலரும் படங்குகளை விரித்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.
ஒலிபெருக்கியில் காசி ஆனந்தனின் கவிதையொன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.
"திலீபன் அழைப்பது சாவையா? - இந்தசின்ன வயதில் இது தேவையா?"

மூன்றாம் நாளான இன்று இராண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும், கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும், எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் இப்படிப் பேசினார்:
"தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் தமிழ் இனத்துக்கே சொந்தமானவர். அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும். இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல. இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான்."

அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன். தான் பேசப்போவதாகக் கூறினார். அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன்.
"இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்." அவர் பேசி முடித்ததும், மழை ஓய்ந்துவிட்டது.

திலீபனுடன் சேர்ந்து அவன் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினமும் நல்லூர்க் கோவில் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்போர் தொகை அதிகாரித்துக் கொண்டே வந்தது.
பலர் தாமும் சாகும்வரை திலீபனைப்போல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா- -விரதம் இருக்க விரும்புவதாக,எம்மிடம் வந்து கூறினர். அவர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் திணறினோம்.

செல்வி. சிவா துரையப்பா என்ற பெண் அச்சுவேலியைச் சேர்ந்தவர். 17.09.1987 இல் திலீபனுக்கு ஆதரவாக மூன்றாவது (சிறிய) மேடை ஒன்றில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டார். வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரைப் பிரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால், திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும், சிகிச்சையும் தான் இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாதென்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அன்று அவர் கஷ்டப்பட்டு உறங்கும்போது நேரம் நள்ளிரவு 1.00 மணி.
அவரின் நாடித்துடிப்பு :- 11,
சுவாசம் - 24.

பயணம் தொடரும்........
-----------------------------------------------------
படஉதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


Tuesday, September 25, 2007

திலீபனுடன் பதினோராம் நாள் - 25.09.1987

இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. கோமா வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில் ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.
"சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?" என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்? அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம். அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்? மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர். ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.
இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.
இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.
அதேபோல் திருக்கோணமலையிலும் "கிருபா" என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை, முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ?டொலர் பாம், கென்ற் பாம் ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ?காந்தியவாதி? என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் தமிழர் நலம் காப்பதுஎன்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?
ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு ? திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் தமிழீழத்தைப் பிரித்துத் தா என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு. இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை.
நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் - கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயபூர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.
நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் 'நிதர்சனம்' தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.
அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

ஒ! மரணித்த வீரனே!
உன்ஆயுதங்களை எனக்குத் தா
உன்சீருடைகளை எனக்குத் தா
உன்பாதணிகளை எனக்குத் தா
(ஓ?. மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.
அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

-------------------------------------------
பயணம் தொடரும்........

பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


Monday, September 24, 2007

திலீபனுடன் பத்தாம் நாள் -24-09-1987

பெற்றோர் – பிள்ளைகள் - சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.

ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. ஆத்துனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.


அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருருமால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன்.

நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் - உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அமிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.

ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…. ஆதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?

இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நும்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.

அப்படியிருக்க........... கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?
திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்பது புரிந்துவிட்டது.
அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?
இரத்தமா?
அந்த "மனிதன்" இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?
அடுத்து வேறு ஓரு உருவம்!
அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…
ஏன்…….
ஏன்…..?

இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன…..
நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.

நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.

சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா?
அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.

"நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…"

இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும்.
கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்மிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.

கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்……

இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து அவகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த 'பண்டிதர்'.

இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழியிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் " அன்பு"

இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.

இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்?
இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும்.

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.

பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன.
நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.

'திலீபன்' என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்."மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

பயணம் தொடரும்........

--------------------------------------------------------
பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


Sunday, September 23, 2007

திலீபனுடன் ஒன்பதாம் நாள் -23-09-1987

அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. கூ.......கூ.....குக்….கூ....... அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், தலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
ஆனால் இந்தக் குயில்…?

எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?

திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.
அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.
உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.
உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.
கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.
இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.

பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் !
கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.

இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.

திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.


யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.
சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.

எங்கும் - எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.
திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

1. யாழ் பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)
2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)
3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்
4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்
5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.

இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.

இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-

*தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்
* இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்
* அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்
* பிரிகேடியர் பெர்னான்டஸ்
l* இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்
விடுதலைப் புலிகளின் தரப்பில்:-
** தலைவர். திரு. வே. பிரபாகரன்
**பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).
** திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)
** திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)
** திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்.
எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.

இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.

ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.


பயணம் தொடரும்........

-------------------------------------------
பட உதவி: அருச்சுனா.
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


Saturday, September 22, 2007

திலீபனுடன் எட்டாம்நாள்.-22.09.1887

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.



மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..
லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.


திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?
வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத் தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர் என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..
பேச முடியவில்லை……
சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?
முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்
சிவந்த தமிழ் மண்ணில்
சந்ததி ஒன்று
சரித்திரம் படைக்க….
முந்திடும் என்பதால்….
முளையிலே கிள்ளிட…..
சிந்தனை செய்தவர்
சிறுநரிக் கூட்டமாய்….
‘இந்தியப்படையெனும்’
பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற…
திலீபனின் உயிரைப்
பறித்திட எண்ணினால்…..
பாரிலே புரட்சி…..
வெடித்திடும் என்று….
வெறியுடன் அவர்களை…..
எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
இரத்த அழுத்தம் - 80/50
நாடித் துடிப்பு – 140
சுவாசம் - 24

தொடரும்.
-----------------------------------------------------------
பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை

Labels: , ,


Friday, September 21, 2007

திலீபனுடன் ஏழாம் நாள் -21-09-1987

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின.
நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது. காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை.

ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதர்ஷனின் வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.
“இந்தியா ருடே” நிருபர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.
‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார்.




அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தைம் யோகியும் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார். பேசச் சக்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை உதிர்த்தது.

எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”
ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.
படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார்.
1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.

திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தார் .யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள்
பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்களான பிரச்சினைகள், கடை முதலாளிகள் - தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் - ரக்சிக்கரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், வைத்தியர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.

யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்திகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர். திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான். அது.

மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை.
அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வருவார். ஆந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக் களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்துக் கொண்டிருக்கின்றாரே? ஏத்தனையே பேரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப் போகின்றார்கள்.

சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ?
சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ?
கோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்….
விரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ?
காலனெனும் கொடும் கயவனின் கையினால்..
கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ?
நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ..?
நாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…?

“ஈழமுரசு” பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப்பார்க்கின்றேன்.
வாரா வாரம் பத்திர்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன்.

தலைவர் பிரபாகரன் “முன்னுரை” எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

தலைவர் பிரபா ஒர் “இலக்கிய ரசிகன்” என்பது பலருக்குத் தெரியாது.
அந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத்திட்டங்களும், அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும் - இலக்கியக் குவியல்களும் - மலை போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா! ஏராளம் ஏராளம்.! அப்படிப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது.

பயணம் தொடரும்........
--------------------------------------------------------------

பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை

Labels: , ,


Thursday, September 20, 2007

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது.

அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..

என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா? திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
ஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.



நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்.

ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும்? நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் - பூரிப்பும் எப்பொழுது மலரும்?

அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.

ஆனால் நமது மண்ணில் அப்படியா?
எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?

அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?
அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !

இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்? சிங்களப் பேரினவாதம்தான் !

இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !
தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…”

போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.
உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.
இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.

இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.
அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.

“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர்.
திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை
இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.

அவரின் இரத்த அழுத்தம் 85 . 60
நாடித்துடிப்பு- 120
சுவாசம் -22

பயணம் தொடரும்........
--------------------------------------------------------

பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை

Labels: , ,


Wednesday, September 19, 2007

திலீபனுடன் ஐந்தாம் நாள் -19-09-1987

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிககளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.
இன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். ஆவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.

“திலீபன் உடல்நிலை மோசமாகி வருகிறது. ஆவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது….. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால், அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்” என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.

“திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப்போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்…. அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்”.

பத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது….. தலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது.

அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பது தான் அது. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்பிரதமர் ராஜீவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன்.


அங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…” என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும் ஆனால்…?

விதியே ! உன் கரங்கள் இத்தனை கொடியதா? பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா? ஆப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்?

தமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா?
தமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா?
தமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா?
தமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா?
தமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா?
எது குற்றம்?

வானத்தைக் பார்த்து வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.
கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது? இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….? திலீபனுக்காக…… தமிழினத்துக்காக…..
அப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…? ஏன்?

உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா?
அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…?

ஏத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறார்.
எண்பத்து மூன்றாம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தடீரென இரண்டு ஜீப்வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றி வளைத்து விட்டதை உணர்ந்த தலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார்…. ஆவரின் மதிநுட்பம் மிகத்தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.
அவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய “சூட்கேஸ்” ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஜீப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்து பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் தலீபன். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.


மறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத் தொடங்கின. அவரது கையொன்றைத் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. இரத்தம் சிந்தச் சிந்த மனதைத் திடமாக்கிக் கொண்டு வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்தார் தலீபன். இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொது மக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர்.

1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் - சிறீலங்கா இராணுவ மோதலின் போது, திலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவரின் குடலைச் சிதைத்து விட்டது.
யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் குடலில் 14 அங்குல நீளத் துண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். ஆந்தப் பெரிய சத்திர சிகிச்சையின்போது அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்தக் காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளைச் செய்த பின்பே அவர் பூரண குணமடைந்தார். சுமார் மூன்று மாதங்களாக அவரின் வாழ்வு வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று.

இப்படி எத்தனையோ துன்பங்களைத் தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்..
ஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை பரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார்.
இன்று மாலை இந்தியப் சமாதானப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினூடே வரும்போது பல தாய்மார் அவர் மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள்.

திலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் பொது மக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.

பயணம் தொடரும்........
------------------------------------

பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை

Labels: , ,


Tuesday, September 18, 2007

திலீபனுடன் நான்காம் நாள் -18-09-1987

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் என்வாய்க்கு பூட்டுப்போட்டதே தவிர வேறு ஓன்றுமே இல்லை.

கடந்த மூன்று நாள்களாக ஒன்றுமே நான் உண்ணாமல் அருந்தாமால் இருந்தது சிறிது களைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் திட மனத்துடன் அதைச்சமாளித்துக் கொண்டேன். நான்காம நாளான இன்றுதான் எனக்குச் சற்று நாவறர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அதைப்பொருட்படுத்தாமல் யாரிடமும் என் விரதத்தைப்பற்றிக் கூறாமல் இருந்தேன். இரண்டு மூன்று முறை ராஜனும் - நவீனும் என்னைச் சாப்பிட அழைத்த போது நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.

ராஐன், மாத்தயா அண்ணையிடம் இன்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை மாத்தயா அண்ணை என்னை மேடைக்குப் பின்புறமிருந்த வீட்டிற்கு அழைத்துப் பேசியதிலிருந்து அறிந்து கொண்டேன். என்னை வீணாகப் பட்டினி இடக்க வேண்டாம் என்று மாத்தயா வேண்டிக் கொண்டார். திலீபன் இருக்கும் நிலையைப் பார்க்கும் போது என்னால் எதுவும் அருந்த முடியவில்லை என்று மாத்தயாவிடம் கூறிய போது என்னால் தாங்க முடியவில்லை. விம்மி விம்மி அழத்தொடங்கி விட்டேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சோகச் சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. ஓன்றுக்குமே நான் அழுததில்லை. இன்று?... மாத்தயா என்னை அதன் பின் வற்புறுத்தவில்லை.

ஆனால் இன்று காலை 10 மணியளவில் தலைவர் பிரபாகரன் என்னை அழைத்துவரச் சொன்னதாக மாத்தயா என்னிடம் கூறியபோது, என் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
தலைவர் மிகவும் கண்டிப்பானவர். ஏன்ன சொல்லப்போகிறாரோ என்ற கேள்வியை எனக்குள் பலமுறை கேட்டுக் கொண்டேன்.
தலைவரின் அறைக்குள் பயத்துடன் சென்றேன்.
“இருங்க வாஞ்சி அண்ணா” என்ற அன்பான குரல் என்னை வரவேற்றது – ஆச்சரியத்தால் என் கண்கள் அகன்றுவிட்டன. சாப்பிடாத மயக்கத்தில் என் கண்களும் மயங்கிவிட்டனவா என்று, ஒருகணம் சிந்தித்தேன்.
இல்லை !
என் முன் இருப்பவர், தலைவர் பிரபாகரன் தான் !
துறு, துறுவென்று பார்க்கும் அதே கண்கள். வட்ட முகம், கூரிய அழகான பெரிய மூக்கு,
அளவாக – அழகாக நறுக்கிவிடப்பட்ட நீண்ட மீசை.

“நீங்க படிச்சவர். வயதில் மூத்தவர். நான் சொல்ல வேண்டியதில்லை. திலீபனில் அன்பு இருக்கவேண்டியது தான். அதற்காக இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் எதுவும் குடிக்காமல், சாப்பிடாமல் இருப்பது? நீங்கள் அவரைப் பார்க்க வேண்டியவர். உங்கள் உடம்பில் சக்தி இருந்தால்தான் அதற்கு உங்களால் முடியும். நான் தலீபனில் அன்பில்லாதவன் என்றா நினைத்திருக்கிறீர்கள்? திலீபன் என் பிள்ளையைப் போன்றவன். நானே அவனை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதித்திருக்கிறேனென்றால் என் மனத்தைக் கல்லாக்கித்தான் அதைச் செய்திருக்கிறேன். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேவையான மனோதிடம் திலீபனிடம் இருப்பதனால்தான், உண்ணாவிரதத்தை அவன் நடத்த விரும்பியபோது நான் அதற்குச் சம்மதித்தேன். ஒவ்வொருவராக இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதுதான் நல்லது. திலீபனுக்கு அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்குத்தர முயற்சிக்கிறேன். அதுமட்டும் நீங்கள் வழக்கம்போல் சாப்பிட்டு, குடித்து இருக்கவேண்டும். திலீபனை வடிவாகக் கவனித்துக் கொள்ளுங்கள். இப்போது எதையாவது குடித்து உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள்.”
என்று கூறிய தலைவர், சொர்ணனை அழைத்து குளுக்கோசும் எலுமிச்சம் பழமும் வரவழைத்து, தானே தன் கைப்படக் கரைத்து, அந்தக் கிளாசை என்னிடம் நீட்டினார். ஆவ்வளவு கூறியபின் என்னால் எதுவும் திருப்பிக் கூற முடியவில்லை.மடமடவென்று வாங்கிக் குடித்தேன்.

தலைவர் பிரபாகரன் கண்டிப்பானவர் என்பது தெரியும். ஆனால் அவரின் அன்பான வார்த்தைகள் எமது வாயைத் தானாகவே அடைக்கச் செய்துவிடும் என்பது எனக்கு இன்றுதான் புரிந்தது.

திலீபனின் உண்ணாவிரதச் செய்தி இலங்கையில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், அரபு நாடுகளிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டேயிருந்தன.
ஏன்? இந்தியாவின் தமிழகத்திலும் இந்தச் செய்தி, உணர்வு அலைகளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட பல நாட்டுப் பத்திரிகைகள் திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகத் தலைப்புச் செய்திகளைப் போட்டிருப்பதாக, எமது தகவல் தொடர்பு அறிக்கைகள் கூறுகின்றன.

இன்று திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்து நான்காவது நாள், அவரது உடல் மிகவும் அசதியாகக் காணப்பட்டது…..பயற்றங்காயைப்போல் வாடி வதங்கி, கட்டிலின்மேல் அவர் சுருண்டு கிடந்த தோற்றம், பார்ப்பவர் நெஞ்சங்களைப் பதை பதைக்க வைத்தது. அப்படியிருந்தும் அவர் இன்று மக்கள் முன் உரையாற்றினார். அவரின் உரை பின்வருமாறு:

அன்பார்ந்த தமிழீழ மக்களே !
விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும்.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. முக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்”.


நேற்று இரவு முழுவதும் அவர் ஆழ்ந்து தூங்கினார். இன்று காலை ஒன்பது மணி ஆகியும் தூக்கத்தைவிட்டு அவர் எழுந்திருக்கவில்லை.
இளைஞர்களான ‘நவீனன்கள்’ இருவரும், அவரின் இடப் பக்கத்திலும் வலப்பக்கத்திலுமாக அமர்ந்திருந்து விசிறியால் ஆள்மாறி ஆள் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு வழக்கத்தைவிட நாடித்துடிப்பு 110 ஆக அதிகரித்திருந்ததில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்படையத் தொடங்கிவிட்டது என்பதை நான் அறிந்து கொண்டேன்.
சூரியனின் கதிர்கள் பூமியெங்கும் வியாபித்திருந்தன.
அவரருகே சென்று அவரின் நாடித்துடிப்பை மெதுவாகப் பரிசோதித்துக் கொண்டு சுவாசத்தையும் எண்ணுகின்றேன்.

நாடித்துடிப்பு – 120
சுவாசத்துடிப்பு – 24

ஆம். சாதாரண நிலையிலிருந்து மிகவும் அசாதாரணமாகக் கூடிக்கொண்டிருக்கிறது நாடித்துடிப்பு.
(நாடித்துடிப்பு – சாதாரணம் 72-80)(சுவாசம் - 16-22)

நான்கு நாட்களாக நீராகாரம் உட்கொள்ளாத காரணத்தினால் உடலில் திரவநிலை குறையத் தொடங்கிவிட்டதால், இருதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவும், கனமும் குறையத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இருதயமும், சுவாசமும் பலமாக வேலை செய்யத் தொடங்கியிருந்தன. இதைவிட இரண்டு நாட்களாகச் சிறுநீர் கழியவில்லை.
தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்குச் சிறுநீர் கழியாமல் இருக்குமானால் சிறுநீரகத் தளர்ச்சி (Kidney Failiure) ஏற்படலாம். ‘கிட்னி பெயிலியர்’ ஏற்படுமானால் அது இருதயத்தில் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இறப்பை உண்டுபண்ணலாம்.

எனக்கு தெரிந்தவரை வழக்கமான நடைபெறக்கூடி இந்த நிகழ்சிகளினால் திலீபனின் உயிர் பறிக்கப்பட்டக்கூடிய வாய்பு எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
நல்லூர்க்கந்தனிடம் முறையிட்ட மக்கள் நாச்சிமார் கோயில் அம்மனிடமும் மனமார வேண்டுவதைக் காதல் கேட்கிறேன்.
“தாயே உன் பிள்ளையொன்று உணவில்லாமல் செத்துக் கொண்டிருக்கிறது. அதை நீதானம்மா கடைசிவரையும் காப்பாற்ற வேண்டும்….”
நீண்ட, நாட்களுக்குப்பின், திலீபனுக்காக மக்களுடன் சேர்ந்து நானும் இப்படி வேண்டிக்கொள்கின்றேன்.
வெகு நேரத்தின்பின் கண் விழித்த திலீபன், எழும்புவதற்குச் சத்தியின்றி படுக்கையிலேயே கிடக்கிறார்.

மைதானம் சனக்கூட்டத்தினால் நிரம்பிக்கொண்டிருக்கிறது.
தீபனைப் பார்ப்பதற்குகாக அணியணியாக மேடைக்கு முன் புறம் மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்………. ஓருவர் முகத்திலாவது மகிழ்ச்சி இல்லை. சில தாய்மார்கள் திலீபன் படுத்திருக்கும் பரிதாப நிலை கண்டு பொறுக்க முடியாடல் விம்மி விம்மி அழுகின்றனர்.

கிறிஸ்தவ பாதிரியாரும் - பல வருடங்காய் சிறையில் அடைபட்டுத் தாங்க முடியாத சித்திரவதைகளை அனுபவித்தவரும், 1983 ஜூலையில் வெளிக்கடைச் சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதினள் சிங்கள இனவாதப் பூதங்கால் கொல்லப்பட்ட சமயம் எதிர்பாராத விதமாகத் தம்பியவரும் ஆகிய, வண, பிதா சிங்கராயர் அவர்கள், திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வந்தார்.
ஓரு துறவியாக இருந்தாலும் திலீபனின் கோலத்தைக் கண்டதும் அவர் அழுதே விட்டார். திலீபனின் கரங்ளைப் பற்றி அவர் அன்போடு வருடினார்.
உடல் சோர்வுற்று இருந்தபோதிலும் திலீபன் அவருடன் மனம் திறந்து வெகுநேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்.
தீலீபனின் பிடிவாதத்தையும், திடமனத்தையும் நன்கு அறிந்தவர் துறவி அப்படிருத்தும் திலீபன் படுத்திருக்கம் கோலத்தைக் கண்டு பொறுக்க முடியாடல் விசும்பினார்.
கொஞ்சமாவது தண்ணீர் அருந்திவிட்டு உண்ணாவிரதத்தைத் தொடருமாறு அவர் வற்புறுத்தினார்.

பாதர் சிங்கராயர்மீது திலீபனுக்கு எப்போதும் மிகுந்த மதிப்பும் பாசமும் உண்டு. அப்படியிருந்தும் தனக்கே உரிய புன்முறுவலைக் காட்டி- அதையே அவரின் - வேண்டுகோளுக்குப் பதிலாக்கிவிட்டு- மௌனமாகினார்- திலீபன்.
பாதர் சிங்கராயர் சென்ற பின் ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமாரும், இயக்க யாழ். மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளரும் ‘பரா’ வும் வந்தனர்.
எந்த இயக்கத்தவர்களானாலும் அவர்ளுடன் சகஜமாகப் பேசுவதில் திலீபனுக்கு நிகர் திலீபன்தான்.
அவர்களும் திலீபனைத் தண்ணீராவது அருந்தும்ப டிவற்புறுத்தினார். அனால், அவர்களுக்குக் கிடைத்த பதிலும் மௌனம்தான்.

செல்வி குகசாந்தினி, திருமதி நல்லையா ஆகிய இரு பெண்கள் திலீபனுக்கு ஆதரவாக, சாகும்வரையிலான உண்ணாநோன்பினை ஆரம்பித்தனர். ஆத்துடன், வல்வெட்டித்துறையயில் 05 தமிழர்கள் ஏற்கெனவே உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

இன்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், திலீபனை வந்து சந்தித்தார். இந்திய அரசிடமிருந்தோ, இந்தியத் தூதுவரிடமிருந்தோ இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று. அவர் திலீபனிடம் கூறினார். அவருடன் திரு யோகியும் வந்திருந்தார்.

தீலீபனின் பொறுப்புக்களையெல்லாம் தன் தலைமீது சுமந்து கொண்டிருப்பவர் யோகி.சில நாட்களுக்குமுன் இந்திய அமைதி காக்கும் படையின் பாரபட்சமான நடவடிக்கைகளையும் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவான நடவடிக்கைளையும் கண்டித்து, ஓரு நாள் அடையாள மறியற் போராட்டம், சகல இராணுவ முகாம்களிலும் பொது மக்களால் நடத்தப்பட்டபோது, யாழ் கோட்டையின் முன்பாக அன்றைய மறியல் போராட்டத்தை முடித்துவைத்து திலீபன் பேசிய பேச்சு என்நினைவுக்கு வருகின்றது.

இந்த யாழ்ப்பாணக் கோட்டையியே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்த அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக்கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அந்த தமிழ்க்கொடியைப் பறக்க விடுவதற்காக, ஒவ்வொருவரும் எமது உயிரை அர்பணித்துக்கொண்டு வருகிறோம். அதில் என் பங்கு எப்போது……? என்பதுதான் எமது கேள்வியாக இருக்க வேண்டும் தவிர, பதவிகள் எமக்கு பெரியதல்ல.. பதவிகளைத்தேடிச் செய்பவர்கள் புலிகள் அல்ல. அதற்கு வேறு ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்!”
அந்த தீர்க்கரிசனப் உயிர்வடிவம் கொடுப்பதற்குற்காகத்தான், திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்.
திலீபன் ஓரு சிறப்பான சதுரங்க வீரன். தனது பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளை இதற்காக அவர் பெற்றுள்ளார். ஆரசியலில் எந்த காயை எப்படி, எந்த நேரத்தில், நகர்த்த வேண்டும் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரிந்துருக்க வேண்டும்.
அகிம்சைப் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் இந்திய நாட்டின் சமாதான படையினரின் கண்களைத் திறப்பதற்கு, இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தது முற்றிலும் பொருத்தமானதே. இந்தியா உள்ப்பூர்வமாக அண்ணல் காந்தியைப் பின்பற்றும் நாடாக இருந்தால், நிச்சயம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லையேல் உலகத்தின் பார்வையில் இருந்து அது தப்பவே முடியாது.


அன்றிரவு திலீபனுக்குத் தெரியாமல் அவரது இரத்த அழுத்தத்தைப் பதிவு செய்து விட்டேன். அது 100/65
நாடித்துடிப்பு – 114சுவாசம் - 25
இந்தியா என்ன செய்யப்போகிறது? ஏனக்கு ஒன்றும் புரியவில்லை. “வெள்ளையனே வெளியேறு” என்று ஆங்கிலேயரை வெளியேற்றுவதற்கதாகப் போராட்டம் நடாத்திய காந்தி இன்று இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஆனால் திலீபனோ இந்தியப் படையை வெளியேறு என்று கூடக் கேட்கவில்லையே! இவர்கள் திலீபனின் சாதாரண கோரிக்கைகளுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? எனக்கு எதுவும் புரியவில்லை.

பயணம் தொடரும்........
-----------------------------------------------------------
பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை

Labels: , ,


Sunday, September 16, 2007

திலீபனுடன் இரண்டாம் நாள் -16-09-1987

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார்.
சிறுநீர் கழித்தார், ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்குத் "தேவர்" தலைமைதாங்கிக் கொண்டிருந்தார்.

கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டிருந்தனர். "நிதர்சனம்" ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா, நாலா பக்கங்களிலும் சுழன்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. மேடையில் கவிதைகள் முழங்கி கொண்டிருந்தபோது திலீபன் என் காதுக்குள் குசுகுசுத்தார்.

"நான் பேசப்போகின்றேன். மைக்கை வாங்கித் தாருங்கோ வாஞ்சியண்ணை"
"சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறீங்கள், களைத்து விடுவீங்கள்"
என்று அவரைத் தடுக்க முயன்றேன்.
"இரண்டு நிமிசம் மட்டும் நிற்பாட்டிவிடுவேன். பிளீஸ்…… மைக்கை வாங்கித் தாங்கோ"
என்று குரல் தளதளக்கக் கூறினார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கண்கள் குழிவிழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்தப் பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.

"இரண்டு நிமிடத்துக்கு மேல் பேசக்கூடாது" என்ற நிபந்தனையுடன், மேடையில் நின்ற தேவரிடம் மைக்கைப் பெற்றுக் கொடுக்கிறேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.
திலீபன் பேசுகிறார்.!

"எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனோ என்பது தெரியாது. அதனால் அன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன்.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம், அறுநூற்று ஐம்பது பேர் இன்று வரை மரணித்துள்ளோம். மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதிவரை இருந்தேன்.

"நான் எனது தாய்நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்" என்று கூறிவிட்டு, வெடிமருந்து நிரபப்பிய லொறியை எடுத்துச் சென்றான். இறந்த அறுநூற்று ஐம்பது பேரும் அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்கமாட்டேன்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தலைவரின் அனுமதியினைக் கேட்டேன். அப்போது தலைவர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன.
"திலீபன்! நீ முன்னால் பேர் நான் பின்னால் வருகிறேன்" என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.


அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். இதனை வானத்தில் இருந்து, இறந்த அறுநூற்று ஐம்பது போராளிகளுடன் சேர்ந்து, நானும் பார்த்து மகிழ்வேன்.

நான் மன ரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.
விடுதலைப் புலிகள் உயிரிலும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கின்றார்கள். உண்மையான, உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்
."

மிகவும் ஆறுதலாக – சோர்வுடன் -- ஆனால், திடமாகப் பேசிய அவரின் பேச்சைக் கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர்.


அன்றிரவு தலைவர் வந்து திலீபனைப் பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையை அவர் தன் கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் - தாயின் பாசத்தையும் ஒன்றாகக் குழைத்தது போன்றிருந்தது அந்த வருடல், இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன.
இரவு 12 மணிக்கு திலீபன் உறங்கத் தொடங்கினார். நானும் அவர் அருகிலேயே படுத்துவிட்டேன்.

٭٭
திலீபனின் வீட்டில் குணபாலன் என்ற சிறுவன் வேலை செய்வதற்காக இருந்தான். அவனது வறுமை நிலையைக் கண்ட திலீபன் தன் கையில் கிடைக்கும் பணத்தை அவனிடம் அடிக்கடி கொடுப்பார்.
யாழ். இந்துவில் அவர் படிக்கும்போது, வீட்டுக்கு வரும்போதெல்லாம் குணபாலனுக்காக கைநிறைய "டொபி"களுடன் வருவார். குணபாலனுக்கு ரீ.வி. பார்க்கும் பழக்கம் இருந்தது. தன் வேலைகளை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்குப்பின், பக்கத்துவீட்டிற்குச் சென்று அவன் ரீ.வி. பார்ப்பது வழக்கம்.

குணபாலனுக்காகத் திலீபன் தன் தந்தையிடம் ஒரு ரீ.வி. வாங்கி வைக்குமாறு பலமுறை கெஞ்சிக் கேட்டார். இவரது தொல்லை தாங்கமுடியாமல் இராசையா ஆசிரியர் ஒருநாள் ரீ.வி. யை வாங்கி வந்துவிட்டார். குணபாலனும் அன்றிலிருந்து எதுவித சிரமமுமின்றி ரீ.வி. பார்த்துவரத் தொடங்கினான்.

யார் மீதும் எளிதில் அன்பு வைப்பதிலும், இரக்கம் காட்டுவதிலும் திலீபனுக்கு நிகர் அவரேதான். அதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
திலீபன் யாழ். இந்துவில் படிக்கும் போது அவரது நெருங்கிய நண்பனாக இருந்தவர்களில் கணேசன் என்பவரும் ஒருவர்: இவர் இப்போது ஒரு டொக்ரராக இருக்கின்றார்.
ஒருநாள் திலீபன், கணேசன் மற்றும் சிலர் ஊரெழுவிலுள்ள திலீபனின் வீட்டுக்கு வந்தனர். அப்போது யாழ். இந்துவில் பொருட்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
திலீபனின் வீட்டிலே சில மாதங்களுக்குமுன் ஒரு நாய் செத்து விட்டதால், அதை ஒரு மரத்தின் கீழ் கிடங்கு வெட்டித் தாட்டிருந்தார்கள். திலீபனும் நண்பர்களும் அந்தக் கிடங்கைக் கிண்டி நாயின் எலும்புக் கூட்டை வெளியில் எடுத்துத் துப்புரவு செய்தார்கள்.


அப்போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே போனாலும், திலீபனும் நண்பர்களும் அதைப் பொருட்படுத்தாமல் தமது வேலையை முடித்துவிட்டு, அந்த எழும்புக்கூட்டை அன்றே எடுத்துச்சென்று பொருட்காட்சியில் வைத்தனர்.
எதையும் ஆராய்ச்சி செய்துபார்ப்பதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் தான் இந்த உண்ணவிரதப் போராட்டத்தில் இறக்க நேரிட்டால் தனது உடலை யாழ். வைத்திய பீடத்துக்கு ஆராய்ச்சிப் படிப்புக்காக அனுப்பிவைக்கும்படி அவர் கூறினார் போலும்?

பயணம் தொடரும்........
-----------------------------------------------------------
படஉதவி: அருச்சுனா.
பதிவுதிவி: தமிழோசை

Labels: , ,


Saturday, September 15, 2007

திலீபனுடன் முதலாம் நாள் -15-09-1987

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

காலை 9.30 மணி!
பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார்.

காலை 9.45 மணி !
"வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம்.
ஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர். வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.


வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா, தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார்.
சுற்றியிருந்த "கமெரா"க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் "கிளிக்" செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார்.

காலை 9.45 மணி !
உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள். எனக்கு அப்போது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலுக்கு முன்பாக கப்டன் மில்லரிடம் திட்டத்தை ஒப்படைத்து, வழியனுப்பி வைக்கிறார் மாத்தையா. அன்று மில்லர் வீரத்துக்குக் காவியம் ஒன்றையே படைத்துவிட்டு வீரமரணம் அடைந்தான். இன்று திலீபன்…?

திலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன:

1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

பிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது…


பிற்பகல் 2.00 மணி !
திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி- -யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது.
"படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்" என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன்.
நான் ராஐனிடம் சொல்கிறேன்.

பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார்.
பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும். "பலஸ்தீனக் கவிதைகள்" என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று.


பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார்.

"அண்ணா திலீபா !
இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக……
நீ தவமிருக்கும் கோலத்தைக்காணும்
தாய்க்குலத்தின் கண்களில்
வடிவது……செந்நீர் !.......


சுசீலாவின் விம்மல், திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது.
கவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார்.
அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை.
ஏத்தனை இளகிய மனம் அவருக்கு? இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது?

அகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்!
ஏன்? ஐரிஷ் போராட்ட வீரன் "பொபி சாண்ட்ஸ்" என்ன செய்தான்?
சிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார்.
1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 63 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது).
பகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன).

ஆனால் நம் திலீபன்?
உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார்.
அப்படியானால் அந்த முதல் நபர் யார்?
அவர் வேறு யாருமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்!
1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும்.

இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார். இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார்.
திலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன்.
அவரது கோரிக்கைகள் நிறைவேறுமா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல்? அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான்.
உலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் "சிருஷ்டி கர்த்தா" என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா?
"இறைவா ! திலீபனைக் காப்பாற்றிவிடு!"
கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன்.

பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது………
ஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன்.

அப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான்.
" திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்.
எந்த காரணத்தாலாவது இதை இந்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும், ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூறமுடியும்"

அவரின் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த மக்கள், அந்தப் பேச்சை வரவேற்பதுபோல் கைகளைத்தட்டி ஆரவாரஞ் செய்கின்றனர்.
அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடிக்கின்றது.
அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே.பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர்.


வெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்ருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச்சென்றார்.
அன்றிரவு பத்திரிகை நிருபர்களும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். "முரசொலி" ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதனால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன்.
இரவு 11.30 மணியளவில் கஷ்டப்பட்டு சிறிநீர் கழித்துவிட்டு, சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.
ஆவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி.அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன்.

நாடித்துடிப்பு :- 88
சுவாசத்துடிப்பு :- 20

அவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க- -மாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார்.
அவன் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருந்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாதென்று, முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார்.
நானும் ராஐனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு "நவினன்களும்" படுக்கைபோட்டனர்.
மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொது மக்களும் கொட்டக் கொட்ட கண் விழித்துக் கொண்டிருந்தனர்.

பயணம் தொடரும்........
-------------------------------------------------------------
படஉதவி: அருச்சுனா.
பதிவுதவி: தமிழோசை.

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]