Thursday, September 27, 2007
கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்
இன்று கிளிநொச்சியானது தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.
பின்னணி
தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது.
1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.
இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.
முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.
இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.
1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பாதுகாப்புப் பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். (ஆனால் யாரோ கண்டி தலதா மாளிகைக்கு வெடிகுண்டுப் பாரவூர்தியை அனுப்பிவிட்டார்கள்) அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.
கிளிநொச்சி மீட்பு
1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் பதினோராவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.
3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து 15 கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).
ஆனையிறவையும் கிளிநொச்சிப் படைத்தளத்தையும் ஊடறுத்து பரந்தனில் நிலைகொண்டிருந்த புலியணியைத் தாண்டி கிளிநொச்சியில் எஞ்சியிருந்த சிங்களப்படைகள் ஓட்டம் பிடித்தன. ஆடுமாடுகள் பட்டிவிட்டு ஓடுவதுபோல் நூற்றுக்கணக்கில் கும்பலாக ஓடித்தப்பிய படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சில வீரவரலாறுகள் புலிகளால் எழுதப்பட்டன.
புலிகளின் மகளிர் படையணியொன்றின் தளபதியாக களத்தில் நின்ற லெப்.கேணல் செல்வி, எறிகணைகளை எதிரிகளுக்கிடையில் வீழ்த்த ஆள்கூறுகளையும் திருத்தங்களையும் பீரங்கிப்டையணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். அதில் கொல்லப்பட்டவர்கள் போக மிகுதி இராணுவத்தினர் செல்வியையும் தாண்டி ஆனையிறவு நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
துப்பாக்கியால் சண்டைபிடிக்க முடியாதளவுக்கு கொத்துக் கொத்தாக இராணுவத்தினர்.
செல்வியின் பீரங்கிப்படைக்கான அறிவுறுத்தல் இப்படியாக இருந்தது.
"என்னைச்சுத்தி ஆமிதான் நிக்கிறான். என்னால இனி ஒண்டும் செய்ய ஏலாது. என்னைப்பற்றிக் கவலைப்படாமல் நான் நிக்கிற இடத்துக்கு செறிவா குத்துங்கோ...."
அச்சமரில் லெப்.கேணல் செல்வி வீரச்சாவடைந்திருந்தார்.
இதே போன்றதொரு சம்பவம் மீண்டும் 11.08.2006 அன்று யாழ்ப்பாணம் மீது புலிகளால் நடத்தப்பட்ட சமரிலும் நடந்தது.
ஓயாத அலைகள் -2 சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.
புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்காககக் களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவோர் மீள்பதிவு
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர், வன்னி
Thursday, August 30, 2007
வன்னியனும் வரலாற்றுத் தொடர்ச்சியும்.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.
யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.
முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுறாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என மாற்றப்பட்டது.
ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?
அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசு நடந்துவந்தது.
வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாகக் குறிப்புக்களுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி இன்று மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டு நிற்கிறது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்துள்ளது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளன.
தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்கு சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் விழுந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளையுமே பயன்படுத்தி வந்தார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்தது பண்டாரவன்னியின் நினைவுநாளாக ஓகஸ்ட் 25 ஆம் நாள்.
விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் சங்கரும் கேணல் ராயுவும் முக்கியமானவர்கள்.

புலிகளின் ஆட்லறிப்படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதல் சம்பவத்திலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். இன்றுவரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே உள்ளது.
யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே நிறையதரம் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி.
இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.
ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்பு அளவிட முடியாதபடி உள்ளது.
தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருக்கும் 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்திதாம்.
அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.
விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக 'சிறுத்தைகள்' என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்த சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகி சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.
இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நாளிலேயே -25.08.2002 அன்று சாவடைந்தார்.
மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடர்புடைய சுட்டி: கேணல் ராயு
Labels: களவெற்றி, சமர் நினைவு, நினைவு, படைபலம், மாவீரர், வரலாறு
Thursday, August 02, 2007
பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2
1993 நவம்பரில், 'தவளைப் பாய்ச்சல்' என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் சில தவறுகளால் எதிர்பாராத விதமாக அத்தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தாக்குதலுக்காக கிட்டத்தட்ட 30 பேர் கொண்ட பெரிய அணி ஊடுருவியிருந்தது. அச்சண்டையில் 13 பேர் வீரச்சாவடைய மிகுதிப்பேர் தளம் திரும்பினர்.
அந்தத் திட்டத்திலிருந்த தவறுகள் களையப்பட்டு, சிறப்பான வேவுத் தரவுகளோடு சிறிய அணியொன்று தாக்குதலுக்குத் தயாரானது. கெனடி எனப்படும் நிலவன் தலைமையில் அவ்வணி தாக்குதலுக்கு நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் எதிரிகளிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)
பலாலி விமானப்படைத்தளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது இடையில் மாவிட்டபுரத்தில் எதிரியோடு மோதவேண்டிய நிலை வந்தது. அம்மோதலில் எதிரியின் பவள் கவசவாகமொன்று அழிக்கப்பட்டது. புலிகளின் அணியில் எவரும் எவ்வித காயமுமில்லை. ஆனால் அணி சிதைந்துவிட்டது. அணித்தலைவன் நிலவனோடு சிலரும், ஏனையவர்கள் இரண்டு மூன்றாகவும் சிதறிவிட்டனர்.
தன்னோடிருந்தவர்களை அழைத்துக்கொண்டு பலமைல்கள் தள்ளியிருந்த விமானப்படைத்தளம் நோக்கி மிகவேகமாக நகர்ந்தார் அணித்தலைவர் நிலவன். எதிரி உஷாராகிவிட்டான். தமது எல்லைக்குள் புலியணி ஊடுருவிட்டதையும், அவர்களின் இலக்கு பலாலி விமானப்படைத்தளம் தான் என்பதையும் எதிரி உடனே புரிந்துகொண்டான். எதிரி முழு அளவில் தன்னைத் தயார்ப்படுத்துவதற்கும் தாக்குதலை நடத்திவிட வேண்டுமென்பதே அணித்தலைவனின் குறிக்கோளாக இருந்தது.
அதன்படி மிகவேகமாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவி சண்டையைத் தொடங்கியது புலியணி. இடையிலேயே அணி குலைந்துபோய் பலம் குறைந்த நிலையிலிருந்தாலும், இருக்கும் வளத்தைக்கொண்டு அதிர்ச்சித் தாக்குதலைத் தொடுத்தது புலியணி. அத்தாக்குதல் தொடங்கியதும், ஏற்கனவே ஆயத்த நிலையில் எதிரியிருந்ததால் இரண்டொரு விமானங்கள் ஓடுபாதையை விட்டுக் கிழம்பி தம்மைக் காத்துக்கொண்டன. மேலெழும்புவதற்கு முன்னரே புலிகளால் 'பெல் 212' ரக உலங்குவானூர்தியொன்று அழிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் வீரச்சாவடைந்தனர்.
அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் ஒருவாறு தளம் திரும்பினர்.
இந்தக் கரும்புலித் தாக்குதலில்
கரும்புலி கப்டன் திரு
கரும்புலி மேஜர் திலகன்
கரும்புலி லெப். ரங்கன்
கரும்புலி கப்டன் நவரட்ணம்
கரும்புலி மேஜர் ஜெயம்
ஆகிய கரும்புலி மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.





____________________________________
படங்கள்: அருச்சுனா
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர்
Wednesday, August 01, 2007
ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு
இன்று அவரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணன் பாடிய பல பாடல்கள் உள்ளன. இங்கும் சில பாடல்களைத் தருகிறேன்.
சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.
கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
ஓட்டிகளே படகோட்டிகளே
நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று
புலியொரு காலமும் பணியாது
சின்ன சின்ன கூடுகட்டி
குனியாது கடல்வேங்கை ஒருநாளும்
கடலின் அலைவந்து கரையில் விளையாடும்
விழியில் சொரியும் அருவிகள்
Labels: ஈழ இலக்கியம், சமர் நினைவு, துயர் பகிர்தல், மாவீரர்
Tuesday, July 31, 2007
மறக்க முடியாத யூலைகள் - ஒரு தொகுப்பு
1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் "பண்டா - செல்வா ஒப்பந்தம்" என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.
“கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.
அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதிலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.
அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபலமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனாவால் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.
1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். இது பற்றிய பதிவு இங்கே.
அதே யூலை இறுதியில்தான் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதைத் தொடர்ந்து நடந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே.
1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. யூலை பத்தாம் நாள் முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.
1990 யூலை பதினோராம் நாள் கண்டிவீதியில் குந்தியிருந்த முக்கியமான சிங்களப் படையினரின் முகாமொன்று புலிகளால் தாக்கி வெற்றி கொள்ளப்பட்ட நாள். கொக்காவில் முகாம் தாக்கப்பட்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தாக்குதல் இதுவாகும். வன்னியை ஆங்காங்கே ஊடறுத்திருந்த படைமுகாம்களைக் களைந்து வன்னியைத் தக்கவைக்கும் தூரநோக்குடன் புலிகள் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு இது.
1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாழ ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.
1992 யூலை ஐந்தாம் நாள். கரும்புலிகள் நாளன்று இயக்கச்சிப் பகுதியில் வான்படையின் வை-8 ரக விமானமொன்று வீழ்த்தப்பட்டது.
1993 யூலை 25ஆம் நாள் ஈழப்போராட்டத்தில் முக்கியமான தாக்குதலொன்று நடைபெற்ற நாள். மணலாற்றின் மண்கிண்டிமலை என்ற முக்கியமான இராணுவத் தளம் புலிகளால் தாக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் நவீன கருவிகளையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இத்தாக்குதலுக்கு "இதயபூமி-1" என்று புலிகள் பெயரிட்டிருந்தனர். மணலாற்றின் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியதோடு அங்குக் கைப்பற்றப்பட்ட நவீன தளபாடங்களின் உதவியுடன் புலிகள் அடுத்த பாய்ச்சலுக்குப் பேருதவியாக அமைந்ததால் இத்தாக்குதல் மிகமுக்கியத்துவமானது. மிகக்குறைந்த இழப்புக்களுடன் பெரியதொரு வெற்றியை ஈட்டியிருந்தனர் புலிகள்.
1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாழ 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.
1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் 5 பாரிய இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.
1995 யூலை 30ஆம் நாள் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான "லெப்.ஜெனரல் நளின் அங்கமன" கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்
1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது தொடர்பான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர்.
பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.
அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாழ யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்கு மட்டுமே சொந்தமானவை. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.
ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.
______________________________________________________
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் எழுச்சி, மக்கள் துயரம், வரலாறு
Tuesday, July 24, 2007
கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ
1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.
உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2
-இதுவொரு மீள்பதிவு
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் துயரம், வரலாறு
Thursday, July 19, 2007
ஓயாத அலைகள்: -வெற்றிகளின் ஆணிவேர்...
இன்று (18 July) விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின்பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.
ஏறத்தாழ இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.
இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் புலிகளால் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.
திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.
கடலில் 'ரணவிறு' என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முலலைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.
அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.
எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.
தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாய்ப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.
அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)
இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.
இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.
முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது.
இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.
ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.
முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.
--------------------------------------------------------
இதையொட்டிய சம்பவமொன்று:
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.
கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றைய நாளில் கிழக்கின் மீதான தனது ஆக்கிரமிப்பை பெரு வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
உண்மையில் தமிழர் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்.
எதிரி முட்டாள்தனமாகச் செயற்படுகிறான்; அகலக்கால் வைக்கிறான்; அடிவாங்கப் போறான் போன்ற அலம்பல்களைத் தாண்டி, இது உண்மையில் மிகப்பெரிய - ஆனால் தவிர்க்கப்பட முடியாத பின்னடைவுதான்.
யாழ்ப்பாணத்தை நாம் இழந்தபோதும் இதேபோல் பெரியதொரு வெற்றிவிழா சிங்களத் தரப்பால் கொண்டாடப்பட்டது. இன்றும் ஈழத்தமிழரைச் சினமூட்டி இக்கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
இதை மீறி உயித்தெழ வேண்டியது எமது கடமை.
எப்படியும் இவர்களைப் பூண்டோடு அழித்துவிடுவதென்று சிங்களத் தரப்புக்கு இணையாக சர்வதேசமும் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.
களத்தின் வெற்றி தோல்விகள்தான் சர்வதேசத்திலும் எதிரொலிக்குமென்பது கடந்த கால வரலாறு.
இவர்கள் மீண்டும் இறங்கி வருவார்கள். கைகுலுக்குவார்கள்.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, வரலாறு, வன்னி
Thursday, June 28, 2007
மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் நினைவுநாள்
1995 ஆம் ஆண்டு யூன் மாதம் இருபத்தியெட்டாம்நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப்பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ். குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும் - குடாநாடு மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.
மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' நடவடிக்கையின்பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.
இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.
திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான்.
இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான 'இதயபூமி' தாக்குதல் உள்ளது.
மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.
************************
தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ்.குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.
Labels: களவெற்றி, சமர் நினைவு, வரலாறு
Sunday, June 10, 2007
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது.
13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.
முன்னணிப்பகுதியான ஓமந்தையை அப்படியே விட்டுவிட்டு, பின்தளமான தாண்டிக்குளத்தின் மீது புலிகள் புலிகள் தாக்குதலை நடத்தினர். ஓரிரவு மட்டுமே நடத்தப்பட்ட இவ்வதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதோடு, படையினரில் வினியோகத்துக்கான ஆயுதக்களஞ்சியமொன்று வெடித்துச் சிதறியிருந்தது. புலிகளால் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அரசவான்படையின் MI-25 தாக்குதல் உலங்குவானூர்தியொன்று புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
இத்தாக்குதல் மூலம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அதன் தொடக்கத்தின்போதே ஆட்டம்காணத் தொடங்கியது. மூர்க்கமான முன்னேற்ற முயற்சிகள் சிறிதுகாலம் பிற்போடப்பட்டன. அதன்பின் சீரான இடைவெளிகளில் அவ்வப்போது ஜெயசிக்குறு இராணுவத்தினர் மீது புலிகளின் வலிந்த அதிரடித்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதலில் மூன்று கரும்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். புலிகளால் உரிமைகோரப்பட்டதன் அடிப்படையில் முதலாவது பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி இத்தாக்குதலில்தான் வீரச்சாவடைந்தார். அவருடனிணைந்து மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
கரும்புலிகள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலை 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் கேட்கலாம்.
திருவுடலில் வெடிசுமந்து
இத்தாக்குதலில் அம்மூன்று கரும்புலிகளோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.
கரும்புலிகளின் புகைப்படங்கள்



படங்கள்: அருசு்சுனா
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர், வரலாறு, வன்னி
Wednesday, May 16, 2007
வென்ற சமரின் பத்தாம் ஆண்டு நினைவு.
1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம்; ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்திலிருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.

போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. அதேநேரம் நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் நோக்கிய நகர்வு கேணல் ஜெயம் அவர்களின் தலைமையில் எதிர்கொள்ளப்பட்டது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.

கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறியபோதுதான் பெண்புலிகளின் பெயர்பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.
பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.
சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.
இந்நிலையில் இராணுவத்தளபதி மிக மோசமான செயலொன்றைச் செய்தார். மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிட்ட புலிகளுடன் பேரம் பேசினார். புலிகள் தங்கள் முன்னணி நிலைகளிலிருந்து 5 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றால் தாம் மக்களுக்கான பாதையைத் திறப்பதாகப் பேரம் பேசினார். சண்டையிட்டுப் பாதைபிடிக்க முடியாத இராணுவம் கேவலாமான நிலைக்கு இறங்கியது. இதுநடந்தது 1998 செப்ரெம்பர் மாதம். ஆனால் புலிகள் தெளிவாக மறுத்ததுடன், வேறொரு திட்டம் தீட்டினர்.
மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்று பெயரிட்டு இரவோடு இரவாக இரகசியமாய் நகர்ந்து சண்டையேதுமின்றி ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது சிறிலங்கா இராணுவம்.
றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.
முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.
இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.
மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.
நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.
2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.
இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.
இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.
இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.
வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.
ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.
ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.
************************
ஜெயசிக்குறு நடவடிக்கை மீதான முதலாவது வலிந்த தாக்குதல் 10.06.1997 அன்று தாண்டிக்குளம் படைமுகாம் மீது நடத்தப்படட தாக்குதல். அத்தாக்குதல் வெற்றி நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
************************
மேற்கண்ட பதிவு கடந்த வருடம் எழுதப்பட்டது. சில மாற்றங்களுடன் மீள்பதிவாக இடப்படுகிறது.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, வரலாறு, வன்னி
Tuesday, April 24, 2007
ஆனையிறவும் அந்த நாட்களும்...
உண்ணி வெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.
பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம், 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில்.
ஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம்.
எங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஓர் அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு விழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும்.
மட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்துமுடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான்.
வியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களைச் சுடுவது வெயில் மட்டுமன்று . சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம்.
சற்றுத் தூரத்தே ஒரே ஓர் ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒருகாய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவைஎம்மேல் ஏறுகின்றனவோ?
அணிந்திருக்கின்ற ஒற்றைஉடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது பெரிய சோதனை.
உண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும்? கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும். அந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்...?
********************************************
அந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம். தோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும். தலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் பிளந்தபடி ஒருவர் வருகின்றாரா? ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார்.
பாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆகா! அதுவே போதும்.
தென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும்.
அதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (துரவு கிடைத்த பின்னர் மட்டும்தான். முன்னர் "கழுவுவது" என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம்.
அன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது. காப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம்.
ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை. வழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை பாய்ந்து துப்பினார். ‘கள்ளுக் குடிச்சமாதிரிக் கிடக்கு” அதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும்? குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.
புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லாம் இனி இரவுதான். தண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை. இருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது. அடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின. எதைச் சொல்ல?
ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல? எதை விட?
**************************************
இப்போது "பலவேகய-02" நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை. அன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம்.
திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோலப் பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்திக் குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம்.
"மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம். வருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.? இயற்கைக்கு நன்றி சொன்னோம். மழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம்.
வானிலே பேரொலி எழுந்தது. Y-12 (குண்டுவீச்சு விமானம்) வருகின்றது.
அருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை.
எல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன. அது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்தால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும். ஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது.
Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது.
“ இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ?”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக! நாசமாய்ப்போக! எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை.
சிரித்துக் கூக்குரலிட்டோம்.
கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம்.
“இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. அது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல். இன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை, நாங்களுமில்லை. அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக.
மலைமகள்.
(மகளிர் படையணி)
நன்றி:
விடுதலைப் புலிகள். குரல்-123.
******************************
ஏற்கனவே 'படிப்பதிவுகள்' என்ற இன்னொரு வலைப்பதிவில் இடப்பட்ட பதிவுதான் இது. நாள் நேரம் கருதி இங்கே மீள் பிரசுரமாகிறது.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு
ஆனையிறவு
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் "வீழ்த்தப்பட முடியாத தளம்" என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.
1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, 'புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்' என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.
1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். 'ஆனையிறவு' என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.
ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. புநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.
அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.
ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.
1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி - ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.
உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் "ஆகாயக் கடல் வெளிச் சமர்" என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.
அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி "யாழ்தேவி" என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.
யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.
இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.
ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக அனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.
ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு - வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.
பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, 'முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்' என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.
வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.
தரையிறக்கத்துக்குத் தயாரானநிலையில் புலியணியின் சிறப்புப் பிரிவொன்று.
பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மாமுனைத் தரையிறக்கம்' புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.
முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கி நீரேரியூடாக நகர்கின்றன.
தளபதி பால்றாஜ் அவர்களோடு ஏனைய போராளிகள்.
இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.
இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.
ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.
ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது.
ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.
****************************************
வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் 'ஆனையிறவு'தான். ஆனால் வந்த பதில், 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர்'.
***************************************
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.
***************************************
ஆனையிறவு வெற்றியையொட்டி நிறையப்பாடல்கள், கவிதைகள் எல்லாம் வந்துவிட்டன. நீங்கள் ஒரு பாடலைக் கேளுங்கள். எனக்குப்பிடித்த பாடல்.
பாடலைப் பாடியோர்: சாந்தன், சுகுமார்.
"அந்த மாதிரி" என்று இப்பாடலில் வரும் சொல்லுக்கு விளக்கம் பலருக்கத் தெரியாமலிருக்கலாம்.
'சூப்பர்" என்று சொல்லப்படுவதற்கிணையாக எங்கள் வழக்கிலுள்ள சொல் இதுவாகும்.
| ஈடுவைத்து_ஈடுவைத்த... |
___________________________
இதுவொரு மீள்பதிவு
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, வரலாறு
தீச்சுவாலை முறியடிப்புச் சமர்.
அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓர் இராணுவநகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை நீடித்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்தநிலையில் ஆனையிறவு நோக்கி பெரியளவில் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்தநிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.
எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி "அக்கினி கீல" அதாவது 'தீச்சுவாலை' என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்தபகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.
புலிகளின் பீரங்கிச்சூட்டு வலிமை அரசபடைக்கும் வெளியுலகுக்கும் - ஏன் தமிழ் மக்களுக்கும்கூட தெரிந்தது அச்சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. சிறிலங்கா வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில், எந்தநேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்டபடி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா மீதான தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான். வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடுகொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டுபோட்டுத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப்பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.
இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்துவிட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன். பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரணும் அதனைச் சூழக்கிடந்த ஏறத்தாழ இருபது இராணுவ உடல்களும். தாம் முற்றுமுழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அப்பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போது களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.
அச்சமர்தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. பின்னாளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காரணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல். இன்று தீச்சுவாலை முறியயடிப்புச் சமர் ஆரம்பித்ததன் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்த நேரத்தில் அம்முறியடிப்புச் சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.
________________________________________
தீச்சுவாலை முறியடிப்புச்சமர் நினைவாக வெளிவந்த பாடல்களில் இருந்து ஒருபாடலை இப்போது கேளுங்கள்.
பாடலைப் பாடுபவர்களுள் ஒருவர் தமிழ்க்கவி.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: தீக்குளித்த நேரம்
| ஊரைச்சேர்த்து_ஆடுவ... |
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, படைபலம், மக்கள் எழுச்சி, வரலாறு
Thursday, April 19, 2007
மூன்றாம் கட்ட ஈழப்போர்
1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது அரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.
இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த "ரணசுறு", "சூரயா" என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.
இவர்கள் பற்றிய நினைவுப்பாடலைக் கேளுங்கள்.
குரலுக்குச் சொந்தக்காரன் மேஜர் சிட்டு.
| விழியில்_சொரியும்... |

Labels: ஈழ அரசியல், ஒலி, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர்
Wednesday, March 28, 2007
பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு
குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.
குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.
சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.
ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.
தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.
பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படங்கள் அருச்சுனா
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, வரலாறு
Subscribe to Posts [Atom]



