Thursday, May 12, 2005

ஈழப்போராட்டத்தில் சீலன் என்ற ஆளுமை

அருணனின் வலைப்பதிவில் 'சாள்ஸ் அன்ரனி'யைப் பற்றிப் பதிவொன்று எழுதப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது தாக்குதல் தளபதியான இவர் சிறந்த ஆளுமையுள்ளவர்.

தலைவர் பிரபாகரன் தன் பதின்ம வயதிலேயே போராடத்துவங்கி தமிழ்மாணவர் பேரவையில் இணைந்து தனியாளாய்ச்சென்று பேருந்து எரித்துத் தனது போராட்டத்தைத் தொடங்கினார். மிக இளம்வயதில் இப்போராட்டம் தொடங்கியபோதே தன்னையும் தன்சார்ந்தவர்களையும் காக்கும்பொருட்டு தனக்கான தடயங்களை அழித்தார். வீட்டிலிருந்த தனது புகைப்படங்களையும் தன்னோடு பிறர் நிற்கும் புகைப்படங்களையும் அழித்தார். இது பற்றி 'நாராயணசாமியும்' எழுதியுள்ளார். அச்செய்கையின் விளைவுகள் காத்திரமானவை. பிரபாகரனின் உருவம் இராணுவத்துக்கோ காவல்துறைக்கோ புலனாய்வாளர்களுக்கோ ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பிரபாகரனைத் தேடி யாழ்ப்பாணம் எங்கும் வலைவிரித்த போதும் அவர்களுக்கு இது தெரிந்திருக்கவில்லை. ஒருமுறை குறிப்பிட்ட பேருந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து அப்பேருந்து மானிப்பாயில் மறிக்கப்பட்டது. பேருந்துக்குள் சோதனை செய்தவர்கள் பிரபாகரனின் பக்கத்தில் அமர்ந்திருந்தவரைக் கைதுசெய்துகொண்டு மற்றவர்களை விட்டுவிட்டனர். (வழமையில் வேட்டி சட்டையுடன் வரும் பிரபாகரன் அன்று நீளக்காட்சட்டை அணிந்து வந்ததும், பக்கத்திலிருந்த அப்பாவி வேட்டிசட்டை அணிந்துவந்ததும் தற்செயலானது). இப்படி தன் உருவத்தை வெளியில் விடாத காரணத்தால்தான் தொடக்ககாலத்தில் அவரால் தப்பித்திரியக் கூடியதாயிருந்தது.

இதை ஏன் இங்கே சொன்னேனென்றால் சீலனின் வாழ்க்கையும் இப்படித்தான். திருகோணமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி தன் பதின்ம வயதிலேயே சிங்களத்துக்கு எதிரான தனது போராட்டத்தைத் தனித்துத் தொடங்கிவிட்டவர் அவர். தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் தலைமறைவு வாழ்க்கைதான். அக்காலத்தில் தன் வீட்டிலிருந்த தன்னைப்பற்றிய சகல ஆவணங்களையும் எரித்தழித்தார். பாடசாலைச் சான்றிதழ்கள் புகைப்படங்கள் என்று எதுவுமே விட்டுவைக்கவில்லை. இங்கேயும் அடையாள அழிப்பு முக்கியத்துவப்படுகிறது. மிக இளவயதினனாக இருந்தபோதும் தீர்க்கமாய்ச் சிந்தித்துச் செயற்பட்ட ஆளுமைதான் பின்னர் தலைமை நாட்டில் இல்லாத போதும் இயக்கத்தைக் கட்டிக்காத்ததோடு தாக்குதல்களைத் தலைமையேற்றுச் செய்யவும் துணைபுரிந்தது. சீலன் சாகும்வரை அவரது புகைப்படமோ அங்க அடையாளங்களோ எதிரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. சீலன் இறந்தபோதுகூட சாறத்தைத் தூக்கிப்பார்த்து தொடையில் வரிசையாக இருந்த 5 சூட்டுக்காயங்களை வைத்துத்தான் இறந்தது சீலன் தான் என இராணுவம் உறுதிப்படுத்தியது. (இது சாவகச்சேரி காவல்நிலையத் தாக்குதலின்போது இறந்துவிட்டான் எனக்கருதப்பட்ட எதிரியொருவன் சுட்டதில் வந்த காயம்.)

புலிகளின் அமைப்பில் முதலாவது தாக்குதல் தளபதியாகப் பொறுப்பேற்று பணியைச் செவ்வனே செய்து வந்தார். இறக்கும்போது 23 வயதுதான் சீலனுக்கு. வயதை மீறிய உடல்வளர்த்தியைப்போலவே மனவளர்ச்சியும் கொண்டவர். தீவிர பொதுவுடமைவாதி. அவரது சகோதரியின் கூற்றுப்படி வீட்டிலிருக்கும்போதே வித்தியாசமான போக்கைக்கொண்டவர். கடவுள் மறுப்பு, பொதுவுடமை ஈடுபாடு என்பவற்றோடு தீவிர வாசிப்புப் பழக்கமும் கொண்டவர். (அவர் பற்றிய மேலதிக தகவல்களையும் அவரின் குடும்பத்தினரின் செவ்விகளையும் சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)


அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு, 'அதோ அந்தப்பறவை போல…'. தானே தாளம்தட்டித் தன் தோழர்களோடு அடிக்கடி பாடும் பாட்டு இதுதானாம். தலைவரின் மிகுந்த நேசத்துக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாயிருந்த சீலனின் இழப்பு அந்த நேரத்தில் மிகப்பெரியதாகவே இருந்திருக்கும். அவரின் சாவுகூட வித்தியாசமானது. மீசாலைச் (யாழ்ப்பாணம்-தென்மராட்சி) சுற்றிவளைப்பில், தன்னால் தப்பியோட முடியாது என்ற நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடும்படி சக போராளியைப் பணித்தார். அவர் மறுக்கவே இது என் கட்டளை எனக் கடுமையாகச் சொல்லி தன்னைச் சுட வைத்து மாண்டார் லெப்.சீலன். அச்சம்பவத்திலேயே அதே போல் ஆனந்தும் வீரச்சாவடைந்தார். இராணுவம் அது சீலன்தான் என உறுதிப்படுத்தியபின் அடிய கூத்துக்கள், அவ்வளவு நாளும் அந்த வீரன் அவர்களை எவ்வளவுக்கு ஆட்டிப்படைத்திருந்தான் என்று காட்டியது.

புலிகளை உலகுக்கு அடையாளங்காட்டியதும் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாயிருந்ததுமான ‘திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட தாக்குதல் (July 83)’ பற்றி ஒரு செவ்வியில் பிரபாகரன் சொல்லும்போது, சீலனின் சாவுக்கு ஒரு பதிலடி கொடுப்பதும் இத்தாக்குதலுக்கான காரணிகளில் ஒன்று என்றார். சீலனின் சாவின்பின் ஒரு கிழமையில் நடத்தப்பட்டதே திருநெல்வேலித் தாக்குதல். பிரபாகரன் ஆசையாக சீலனுக்கு வைத்த பெயர் 'இதயச்சந்திரன்'. அவரைக் கூப்பிடுவதும் இந்தப்பெயரைச் சொல்லித்தான்.

புலிகளின் முதலாவது மரபுவழிப்படையணியின் பெயர் இவரின் பெயராலேயே சாள்ஸ் அன்ரனி என்று அழைக்கப்படுகிறது. அவரைப்போலவே இப்படையணியும் போர்க்களத்தில் வீரியமாகச் சாதித்துள்ளது.
சாள்ஸ் அன்ரனி எனும் சீலன் ஈழப்போராட்டத்தில் மறக்க முடியாத ஓர் ஆளுமை.
-----------------------------------------------------
சீலனினதும் ஆனந்தினதும் நினைவாக மீசாலையில் நிறுவப்பட்டிருந்த நினைவிடமும் சிறுவர் பூங்காவும் சிங்களப் படையினரால் அழித்து நிர்மூலமாக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த இடத்தில் நினைவிடம் மட்டும் நிறுவப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நினைவிடமே இது.

படங்கள்:- தமிழ்நெற்.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

மிகவும் ஆழமான பதிவு தந்த வன்னியனுக்கு நன்றிகள்.


18.46 13.5.2005
 
ஆழமான பதிவு.
தந்த வன்னியனுக்கு நன்றி.
 
எழுதிக்கொள்வது: ஈழநாதன்

வசந்தன் இன்றும் இலங்கை இராணுவத்தினருக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கும் படைப்பிரிவுகளில் ஒன்று அதிரடிப் படை(கொமாண்டோ)யான சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவுதான்.

அருணனைக் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் ஒருவர் கேட்டிருந்தார்.எதற்காக பிரபாகரன் தனது பிள்ளைக்கு ஆங்கிலப் பெயர் வைத்திருக்கிறார் என.இதே விளக்கத்தையே நானும் கொடுத்தேன்.

சாள்ஸ் அன்ரனி மட்டுமல்ல மற்றைய இரு பிள்ளைகளின் பெயரும் போராளிகளது பெயர்தான்

17.38 13.5.2005
 
எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தன் முன்பு அங்கு பூங்காவும் நினைவுத்தூபியும் இருந்தது. அதை இராணுவம் அழித்துவிட்டது. படத்திலுள்ளது தற்போதுள்ளது அமைக்கப்பட்டு என நினைக்கிறேன்

13.39 13.5.2005
 
எழுதிக்கொள்வது: kulakaddan

படத்தில் காட்டியுள்ளது தற்போது மீள அமைக்கப்பட்டது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் அழகிய பூங்கா இருந்தது. அதை இராணுவத்தினர் உழுது அழித்துவிட்டார்கள்

13.44 13.5.2005
 
தகவலுக்கு நன்றி குழைக்காட்டான்.
இப்போது மாற்றிவிட்டேன்.
 
எழுதிக்கொள்வது: Bala

மிக்க நன்றி

8.6 13.5.2005
 
/ தனக்கிருந்த இரசாயன அறிவைக்கொண்டு பாடசாலையில் சிங்களத் தேசியக்கொடியேற்றும் வைபவத்தில் அக்கொடியை எரித்தவர். அதைச் செய்தது இவர்தான் என்பதும் தெரிந்துவிட்டது./
சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இரண்டு மாணவர்களும் இதிலே சம்பந்தப்பட்டிருந்தார்கள்; மற்ற இருவருக்கும் எதேச்சையாக இதிலே அகப்பட்டுக்கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். அதிபரும் தேசியக்கொடியினைக் குடியரசுதினத்தன்று கட்டுவதற்குப் பொறுப்பாக இருந்த இன்னோர் ஆசிரியரும் (அவர் மேற்கூறிய மாணவர்களிலே ஒருவரின் தந்தை) இம்மாணவர்களோடு இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

பொஸ்பரசினைத் தேசியக்கொடியுள்லே வைத்தார்கள் என்றும் அரசாங்க அதிபர் கயிறிழுத்து ஏற்றப்போனபோது, அது பற்றிக்கொண்டதென்றும் சொன்னார்கள். இதற்கு முதல்நாள் ஆசிரியரின் கட்டளையின்பேரிலே அந்தக்கொடியேற்றக்கம்பம் நிறுத்த தண்ணீர் ஊற்றி ஊற்றி சிரட்டையாலே நிலங் கிண்டி குழி தோன்றிய சில மூன்று வகுப்பு குறைவாகக் கற்ற எங்களுக்கு என்ன நடந்ததென்று ஓர் இழவும் தெரியாது. மாணவராக இருந்த சார்ள்ஸ் அன்ரனியின் முகங்கூட ஞாபகமில்லை. பாடசாலையாலே இடைநிறுத்தப்பட்ட மற்ற அனைவரினையும் நன்றாகத் தெரிந்தபோது.

சீலன் சாவகச்சேரியிலே இறந்தபோது, அன்று யாழ்ப்பாணத்திலேயிருந்து வந்த அப்பா சொன்னார் (அவருக்குச் சீலன் ஆரென்று தெரியாது; எங்களைப் போன்ற காபொத உயர்தரம் முடித்துவிட்டிருந்த மாணவர்களுக்கும் சீலனும் அவரைப் போன்றே மற்ற இயக்கங்களிலேயும் இருந்த வேறு சிலரும் செவிவழிச்சேதிகளிலே கதாநாயக அந்தஸ்து பெற்றவர்கள்).

கந்தர்மட வாக்குச்சாவடியிலே சீலன் சென்று புள்ளடிபோட்டே கொழும்பிலிருந்து வந்த ஜனாதிபதி வாக்குப்பெட்டிகளைச் சிதைத்தது குறித்து உருத்திரகுமார் விஸ்வநாதன் (தற்போதைய புலிகளின் அமெரிக்கா வாழ் சட்டத்தரணியும் முன்னைய யாழ் நகரத்தந்தை இராஜா விஸ்வநாதனின் மகனும்) எழுதியது soc.culture.tamil இலே 1995/1996 இலே உலாவியது. ஆனால், புளொட்டின் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) இனை யாழ் சித்திரா அச்சகத்திலே வைத்துச் சுட்டதும் சீலனே என்று முன்னர் எங்கோ வாசித்தேன் ("மக்கள் பாதை மலர்கிறது" என்ற புளொட்டின் அன்றைய மாத இதழிலிலா வந்தது??) அப்போது, பிரபாகரன் கூட்டணியின் செல்லப்பிள்ளையாக இருந்த காலம். இவை எல்லாம் உண்மையா பொய்யா என்பது தெரியாது. அங்குமிங்கும் வாசித்ததே.
 
'.........'ம் சுந்தரம் உயிர்வாழ்ந்திருந்தால் நமது போராட்டம் இன்னும் கௌரவமாக நகர்ந்திருக்கும்!மிக மிக நேர்த்தியாக,எல்லோருக்குமானவொரு நாட்டை நாம் அண்மித்திருப்போம்! 'ம்'... எல்லாம் நாசாமாய்ப்போனதுதாம்!
 
எழுதிக்கொள்வது: -வன்னியன்-

அநாமதேயம், சிறிரங்கன்!
கருத்துக்களுக்கு நன்றி
-வன்னியன்-

11.18 14.5.2005
 
எழுதிக்கொள்வது: Thavabalan

புளொட் சுந்தரம் செய்த சில துரோகத்தனங்களுக்காகவே சுடப்பட்டார். அவைபற்றி திரும்ப திரும்ப கதைத்து கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை. அது அந்த காலத்தில் தவிர்க்கமுடியாத வரலாற்று நிர்ப்பந்தம்.

முன்னாள் புளொட் உறுப்பினர்கள் கூட அதனை பின்னர் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

13.33 14.5.2005
 
இங்கே பதின்மூன்றாம் பக்கத்திலிருந்து வாசிக்கவும்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]