Sunday, August 09, 2009

பத்மநாதன் கைதுக்கு யார் காரணம்?

கடந்த 05-08-2009 அன்று கே.பி எனப்படும் செல்லத்துரை பத்மநாதன் அவர்கள் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டுக் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார்.

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு பெரும் பின்னடைவு இது.

நீண்டகாலம் ஆயுதவழியில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை கடந்த மேமாதம் அழிக்கப்பட்டதோடு அவ்வியக்கம் தளத்தில் செயலிழந்தது. ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்ற அறிவிப்போடு அவ்வியக்கம் தமது ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டது.

இந்நிலையில் கே.பியைத் தலைமைச் செயலராகக் கொண்டு வன்முறையற்ற வழியில் தொடர்ந்தும் செயற்படும் நிலைப்பாட்டை புலிகள் அமைப்பு எடுத்தது. இது புலத்திற் செயற்பட்டுக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினராலும், தொடர்ந்தும் களத்திலிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தொடக்கத்தில் மிகச்சிலரால் சலசலப்புக்கள் ஏற்படுத்தப்பட்டபோதும்கூட அவை சரிப்படுத்தப்பட்டு அவ்வியக்கம் ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அவ்வியக்கத்துக்கு மட்டுமன்றி, அவ்வியக்கத்தைச் சார்ந்த தமிழ்மக்களும் பேரதிர்ச்சியே.

இந்த நிலைமைக்கு யார் காரணம்?

கே.பியின் அதிகரித்த நகர்வுகள், பகிரங்கமான நடமாட்டங்கள், நேர்காணல்கள், ஏராளமான சந்திப்புக்கள் என்பவை அவருக்கு ஆபத்தானவையாக அமைந்தன. ஆனால் அவர் அப்படிச் செயற்பட வேண்டி வந்ததற்கான காரணகர்த்தாக்கள் வேறுயாருமல்ல, நாம்தாம்.

கே.பி மீதான அவதூறுகள், வசைபாடல்கள், கயமைத்தனமான விமர்சனங்களை நோக்கினால் அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய காரணிகளை அறியலாம்.
'நிழல் மனிதர்', 'அனாமதேயப் பேர்வழி' போன்ற சொற்களால் அவர் குறிப்பிடப்பட்டார். அவரது மறைப்புத்தன்மையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரது தலைமையை எதிர்க்கச் சிலர் கிளம்பினர். அது படிப்படியாகக் குறைந்தபோதும் இன்றுவரை அந்த விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாத இவரா எமக்குத் தலைமை என ஒரு கூட்டம் கிளம்பியது. இதைவிட, மக்களோடு தொடர்பிலில்லாத மர்ம மனிதர் அவர், எப்படி இவரால் ஒழுங்காகக் செயற்பட முடியுமென்ற விமர்சனம் வைக்கப்பட்டது. கே.பிக்கான ஒத்துழைப்பு சரியாக வழங்கப்படவில்லை. வீம்புக்காக அவரை எதிர்த்து நின்ற கூட்டம் தொடர்ச்சியான அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.

இவ்வளவும் புலிகள் இயக்க உறுப்பினர்களால் செய்யப்பட்டவையல்ல. (ஆம், புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் உறுப்பினர் சிலர் முரண்பட்டது உண்மையே! அவர்களின் எதிர்ப்பில் சில நியாயமான சந்தேகங்கள் இருந்தன. அதைவிட அவர்களுக்கு அந்த அருகதை இருந்தது. இறுதியில் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள்.) புலிகள் அமைப்பின் உறுப்பினரல்லாத, ஆனால் தாம்தான் இயக்கம் என்ற மாயையை ஏற்படுத்தி வைத்திருந்த நபர்கள்தாம் இதில் முக்கியமானவர்கள்.
அவர்கள் "பலர்" வியாபாரிகளாயிருந்தார்கள், ஊடகவியலாளராய் இருந்தார்கள், இராணுவ /அரசியல் ஆய்வு என்ற பேரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பவர்களாய் இருந்தார்கள், இயக்கம் தனது செயற்பாட்டு வசதிக்காக ஏற்படுத்திய மக்கள் அமைப்புக்களில் அங்கத்தவராய் அல்லது பொறுப்பாளராய் இருந்தார்கள், யுத்தநிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குப் போய் நாலு புகைப்படம் பிடித்துக் கொண்டு வந்தவர்களாய் இருந்தார்கள், பொறுப்புக்காகவும் நாலுபேரை மேய்க்கும் மனமகிழ்ச்சிக்காகவும் ஈழப்போராட்டத்தின் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துபவர்களாய் இருந்தார்கள்.
இவர்கள் தமக்குத் தெரிந்த நாலுபேரையும், பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் வைத்தே இயக்கத்தை அறிந்திருந்தார்கள். கே.பி ஏதோ இவ்வளவுநாளும் ரொட்டிக்கடை நடத்திக் கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரெனத் தலைமைக்கு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், அப்படியே மற்றவர்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

வேறு "சிலர்" உண்மையில் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் அயோக்கியத்தனமான காரணங்களால் கே.பியின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; குழப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நபர்களின் திருகுதாளங்களால் மக்கள் குழப்பமடைந்தார்கள். கே.பிக்குக் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவர் தனது கூண்டுக்குள்ளிருந்து வெளிவர வேண்டியிருந்தது. மர்ம மனிதர், நிழல் மனிதர், அனாமதேயப் பேர்வழி போன்ற வசைகளை எதிர்கொள்ள அவர் ஓரளவு வெளிப்படையாகச் செயற்பட வேண்டியிருந்தது; ஊடகங்களோடு உரையாட வேண்டியிருந்தது; பலரோடு நேரடிச் சந்திப்புக்களைச் செய்ய வேண்டியிருந்தது. குழப்ப நிலையிலிருந்த பல செயற்பாட்டாளரை நேரடியாகச் சந்தித்துக் கதைத்ததன் மூலமே அவர் பல சிக்கல்களைத் தீர்த்து முன்னேறினார். செயற்பாட்டு மந்தநிலையைக் களைய தானே நேர்நின்று செயற்பட வேண்டுமெனத் தீர்மானித்தார்.

தான் யாரென்பதையும் தானொரு முக்கியமானவர் என்பதையும் தானே சொல்ல வேண்டிய அவலநிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். மிகச்சிலரைத் தவிர எல்லோராலும் இது வோறோர் ஆள் என்று இதுவரை காலமும் இனங்கண்டுகொண்டிருந்த புகைப்படங்களில் நிற்பது தானேதான் என்ற உண்மையை அவரே புகைப்படங்களை வெளியிட்டுச் சொல்ல வேண்டி வந்தது. (காட்டுக்குள் பாலா அண்ணை, சங்கர் அண்ணை, தலைவரோடு நிற்பது மு.வே.யோ வாஞ்சிநாதன் என்பதாகவே- கே.பியையும் வாஞ்சிநாதனையும் தெரிந்தவர்களைத் தவிர்த்து- பெரும்பாலானவர்களால் இதுவரை காலமும் நினைக்கப்பட்டு வந்தது.)

இவ்வாறான செயற்பாடுகள் தனது பாதுகாப்புக்குப் பாதகமென்பதை அவர் நன்கு அறிந்தேயிருந்தார். ஆயினும் அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவரது பாதுகாப்புக் குறித்து எச்சரித்தவர்களிடம், தான் இந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டதை விசனத்தோடு குறிப்பிட்டுத்தான் அவர் தொடர்ந்தும் செயற்பட்டார். தனது இயலாத உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர் உழைத்தார். இறுதியில் அவரும் மற்றவர்களும் பயந்தது போலவே மாட்டுப்பட்டுப் போனார்.

அவரை இந்நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை சுடுமென்று தெரியவில்லை. பலருக்கு இதுவொரு விடயமேயன்று. மூன்றாந்தரப்பாக நின்று 'அப்பிடியாம், இப்பிடியாம்' என்று விண்ணாணம் பேசிக்கொண்டு அடுத்த 'மேய்ப்பு'க்குக் கிளம்பிவிடுவார்கள்.

வழிநடத்துபவருக்கான ஆபத்தையும் அவரின் மறைப்புத்தன்மைக்கான தேவையையும் நன்கு அறிந்திருந்தும்கூட அதைக்கொண்டே அவரைச் சீண்டி மாட்டுப்பட வைத்தவர்கள் கொஞ்சநேரம் கண்களை மூடி யோசிப்பார்களாக.


===============
*இக்கட்டுரையில் கே.பி என்ற பெயர் மூலமே திரு. பத்மநாதன் குறிப்பிடப்படுவது தற்செயலானதன்று. அப்பெயருக்கான வலு உறைக்க வேண்டும். ஈழப்போராட்டத்தில் இராணுவ வெற்றிகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அழப்பரியது. அப்பங்களிப்புக்கள் யாவும் கே.பி என்ற பெயரூடாகவே சாத்தியமாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனால் இன்று அதே புலத்தில்தான் கே.பி பந்தாடப்பட்டார்.

Labels: , , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]