Friday, July 29, 2005

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தமிழீழத் தொலைக்காட்சி.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஒளிபரப்பாகிவரும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஓளிபரப்புக்கள் ஆகஸ்ட் முதலாம் நாள் முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.முற்பகல் 10.00 மணியளவில் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள் அடங்கிய கோவையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா ஊடகவியலாளர்களிடம் வழங்கினார்.


"நிதர்சனம்" நிறுவனமானது 1987 பெப்ரவரி 14 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலமாக இயங்கி வந்த இச்சேவை, 1987 ஒக்டோபர் 11 இல் இந்திய இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது.
இவ் ஒளிபரப்பு 2005ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாளிலிருந்து தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஐரோப்பிய நாடுகளில் ஒரு மணித்தியால ஒளிபரப்பாக இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட முதலாம் நாள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது ஒளிபரப்புச் சேவையினை தொடக்கவுள்ளது.


இவ்வொளிபரப்புப் பற்றி இந்தியா இன்னும் கருத்து எதுவுஞ் சொல்லவில்லை. நிச்சயம் இதைக் கடுமையாக எதிர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பு இந்தியாவை எட்டும்போதே தனது கடுமையான எதிர்ப்பை இந்தியா காட்டியது. இது தொலைக்காட்சிச் சேவை. எனவே இன்னும் கடுமையாக நடந்துகொள்ளும். ஆனால் இவற்றைத்தாண்டி இச்சேவை நடத்தப்பட வேண்டுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நன்றி:- புதினம், மட்டக்களப்பு ஈழநாதம்.

Labels: ,


Wednesday, July 27, 2005

வவுனியா பேராளர் பிரகடனம்.

இலங்கையில் மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்கிற சர்வதேச கோட்பாடுகளில் அடிப்படையில் தமிழர்கள் நடாத்துகிற இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று வவுனியா பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.


தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வவுனியா பிரகடன விவரம்:

தென்னிலங்கையில் இன்று பயங்கரமான சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இது தமிழ்பேசும் மக்களின் சனநாயக வழியில் அமைந்த எந்தவொரு தீர்வுக்குமான கதவுகளையும் முற்றாக மூடியுள்ளது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களாகிய நாம் இன்று அடைந்துள்ள அவலமானதும் ஆபத்தானதுமான நிலையை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தையும் அங்கீகாரத்தையும் கோருகின்றோம்.

தமிழ்பேசும் மக்களாகிய நாம் இலங்கையினை ஐரோப்பியர் ஆக்கிரமிக்க முன்னர் தனியரசாக இருந்து வந்துள்ளோம். 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையில் ஒற்றையாட்சி முறையைப் புகுத்தியபோது தமிழர் தாயகம் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டது.

அப்பொழுது அது தன் இறைமையை இழந்ததையும், அதன்பின் 1948 இல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர் வெளியேறியபோது தமிழ்பேசும் மக்களின் இறைமையை எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவரிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு சிங்களச் சமூகம் முறையற்ற வகையில் பெற்றுக்கொண்ட இறைமையின் மூலம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மிக அநாகரிகமான முறையில் தமிழ்பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். குடியுரிமை சட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தனிச்சிங்கள சட்டத்தின் மூலம் மொழியுரிமையும், வேலைவாய்ப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.

கல்வித்தரப்படுத்தல் சட்டம் மூலம் கல்வி உரிமை மறுக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன மூலம் முழு மனித உரிமையும் மறுக்கப்பட்டது.

எமது பாரம்பரிய வாழ்விடங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக நிலச் சூறையாடலுக்குட்பட்டு எமது குடித்தொகைப் பரம்பல் முற்றாகச் சிதைக்கப்பட்டது.

இவ்வாறாகத் தமிழ்பேசும் மக்களாகிய எமது வாழ்வுரிமை பறிக்கப்பட்டது.

சட்டங்கள் மட்டுமன்றி இலங்கையின் அரசியல் யாப்புக்களுமே இனவாத ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன.

சோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட 29 ஆவது பிரிவு பின்னர் 72 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசு யாப்பின் மூலம் நீக்கப்பட்டது.

இந்த யாப்பில் பௌத்த மதம் அரசாங்க மதமாக்கப்பட்டு இன ஒடுக்குமுறைக்கான யாப்பு வடிவமாக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பிலும் இது மேலும் தீவிரமாக்கப்பட்டது. எனவே நீதி வழங்கப்பட வேண்டிய அரசியல் யாப்பு அநீதியின் உறைவிடமானது.

இத்தகைய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ்பேசும் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை அங்கீகரிக்கப்பட்ட நாகரீகமான அரசியல் வழிமுறைகளையும் மென்முறைப் போராட்ட வடிவங்களையும் கைக்கொண்டது.

அவற்றினைத் தணிவிக்கும் முகமாகச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒப்பந்தங்கள் செய்வதையும் பின் அவற்றினைக் கிழித்தெறிவதையும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

1957 ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தையும்

1965 ஆம் ஆண்டு டட்லி - செல்வா உடன்படிக்கையையும்

இதற்குச் சான்றாக வைக்கின்றோம்.

இவ்வாறாக மென்முறைப் போராட்ட வடிவங்களைக் கைக்கொண்ட பொழுது எம்மக்கள் மீது மிக மோசமாக வன்முறைகள், இனப்படுகொலைகள், பாலியல் கொடூரங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் 70 களின் முற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ் மக்களின் தற்காப்புக்கும் விடுதலைக்குமான போராட்டத்துக்கு தமிழர் தரப்பு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

எனவே, அமைதிவழியில் அரசியல் தீர்வுகளை எட்டுவது இயலாது என்பதை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், 1976ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

பின்னர் அரசியல் அரங்கில் அதற்கான மக்கள் ஆணையை 1977 ஆம் அண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டனர்.

ஆயுதம் தாங்கி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் தமிழ் மண்ணையும் தமிழ்பேசும் மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஆற்றல் மிகுந்த சிறந்த ஒரு தேசியத் தலைவரையும் ஒரு மரபுவழிப் போரை நடத்தவல்ல படையணிகளையும் கண்டு நிமிர்ந்தெழுந்தோம்.

இதன்மூலம் இலங்கையில் ஒரு தனித்தேசிய இனமாகத் தமிழ்மக்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்னும் உண்மையை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தோம்.

இப்போராட்ட காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பும் இன அழிப்பும் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டன.

கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுக்கள், ஆகியன பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அடிக்கடி நடத்தப்பட்டு எமது மக்கள் பச்சிளம் பாலகர் முதல் முதியோர் வரை கோரமாகப் பலியெடுக்கப்பட்டனர்.

பலவிதமான இராணுவ நடவடிக்கைகளாலும் சொந்த மண்ணிலிருந்து தமிழ்மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு, அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டனர். இத்தகைய அரச பயங்கரவாதக் கொடூரங்களையெல்லாம் 'அரசு' என்ற முகத்திரை கொண்டு சர்வதேச சமூகத்திற்கு முன் சிங்கள பௌத்த பேரினவாதம் மூடி மறைத்தது.

ஆயினும், எமது விடுதலைப் போராட்டம் ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றிகளைக் குவித்தது. இந்த வெற்றிகளின் பின்னால் தமிழ்மக்கள் அனைவரும் பொங்கு தமிழர்களாய் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப்போருக்குத் தோள்கொடுத்தனர்.

இந்த வரலாற்றுப் போக்கில் தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு என்றொரு நடைமுறை அரசுக்கான கட்டுமானங்கள் நேர்த்தியான முறையில் கட்டியெழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தினால் வெல்லமுடியாது என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்து கொண்டது. சமகாலத்தில் சர்வதேச சமூகம் இவ் இன முரண்பாட்டை அமைதிவழியில் தீர்ப்பதற்கான வாய்ப்பை எமது தேசியத் தலைமையிடம் கோரியது.

எமது தேசியத் தலைமை தாமாக முன்வந்து யுத்தநிறுத்தம் செய்துகொண்டது.

வேறு வழியின்றியும் சர்வதேச அழுத்தம் காரணமாகவும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்த உடன்பாடு செய்ய முன்வந்தது.

அதன்படி 22.02.2002 ஆம் நாளில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் கையொப்பமிட்டு ஒரு யுத்தநிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடாத்தப்பட்டன. இப்பேச்சுக்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களைச் சிங்கள அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. இதனால் நேரடிப் பேச்சுக்கள் நின்றுபோக இடைக்கால யோசனையாக இடைக் காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு முன் வைக்கப்பட்டது.

இதுபற்றியும் தொடர்ந்து பேச சிறிலங்கா அரசு முன்வராததால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதற்கான சாத்தியங்கள் முற்றாக அருகிப்போயின.

இவ்வாறாக கடந்த மூன்றரை ஆண்டுகளாய் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வுக்கான எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப் போய்விட்டன. சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் வளம் நிறைந்த எமது சொந்த நிலங்களும் செல்வம் கொழிக்கும் எமது கடல் வளமும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ளது.

இறுதியாக உலகை உலுக்கிய ஆழிப்பேரலைப் பேரழிவுக்குப் பின்னரும் சிங்கள மேலாதிக்கப் போக்கு மாறவில்லை என்பதை ஆழிப்பேரலை நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு நேர்ந்த விபத்து நிரூபித்தது.

மனிதப் பேரழிவு அவலங்களால்கூட சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்குள் இறுகிப்போயிருக்கும் நெஞ்சுகளை மாற்றமுடியாது என்பதனை உலகம் கண்டு கொண்டுள்ளது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பதவிக்கான போட்டியில் சிங்கள அதிகார வர்க்கம் முற்றாகச் சிக்கியுள்ளது. மீண்டும் ஒரு யுத்தத்தின் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதற்கான படைக்கலப் பெருக்க நடவடிக்கைகளையும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் அவர்கள் செய்து வருகின்றார்கள்.

இவை யாவும் சமாதான நடைமுறைக்கான சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கின்றோம்.

இந்த உண்மைகளை சர்வதேச சமூகமும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கால நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொண்டிருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

இந்த உண்மை நிலையின் காரணத்தினால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

எனவே எமது தாயக நிலத்தையும் கடலையும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவம் எமது மண்ணை, கடலை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்றும்,

எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும்,

அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் இவ் எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும்

அதேவேளை,

தமிழ்பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும் சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு எமது மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும் எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையில் தமிழீழத் தனி அரசே தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் வவுனியா பிரகடனமோ தமிழீழத் தனிஅரசு கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழத் தேசிய இனம் நடத்துகிற தமிழர்களின் இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்து உரிய நீதி வழங்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு பேரெழுச்சியோடு தொடங்கியது!!

வவுனியா மாநாட்டைச் சீர்குலைக்க சிங்களப் படை சதி: வவுனியாவில் குண்டுவெடிப்பு!!

சர்வதேச சமூகமே தலையிடு அல்லது போரின் மூலம் உரிமையை வெல்வோம்: ஜோசப் ஆண்டகை
விழாப்படங்களைக் காணமீண்டும் ஓர் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டால் அது இந்த நாடு முழுவதையும் அதிரச்செய்யும் - பெ.சந்திரசேகரன்

பேராளர் மாநாட்டின் சகல நோக்கங்களும் வெற்றியடைய தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து

வவுனியா பேராளர் மாநாட்டில் பெருந்திரளானோர் பங்கேற்பு
நன்றி: புதினம், சங்கதி.

Labels: , ,


Sunday, July 24, 2005

மறக்க முடியாத யூலைகள்.

யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.

கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.

அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.


அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று அறைகூவல் விடுத்தார் ஜே.ஆர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரனையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.


1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினான். இது பற்றிய பதிவு இங்கே.

1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.

1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாள ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக் கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண் பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.

1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாள 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.

1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் பாரிய 5 இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.

1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது சம்பந்தமான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழந்ததால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர். பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.

அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாள யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சொந்தமானவை மட்டுமே. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.


Labels: , , , , , ,


Monday, July 18, 2005

ஓயாத அலைகள்: -வெற்றிகளின் ஆணிவேர்...

ஓயாத அலைகள் வெற்றிநாள்.

இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.

ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.

இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முலலைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.

அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடிhயமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.

--------------------------------------------------------
இதையொட்டிய சம்பவமொன்று:

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்;ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).


கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

Labels: , , , ,


Friday, July 15, 2005

சீலன் எனும் ஆளுமை பற்றி பிரபாகரன்.

வணக்கம்.

இன்று மாவீரன் லெப்.சீலனின் இருபத்தியிரண்டாவது நினைவுதினம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.

நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? இப்போது கைவசம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சீலன் பற்றிச் சொல்லும் காட்சிப்பதிவு கிடைத்தது. நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.

ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகள் கேட்க முடியாமலிருக்கும் பட்சத்தில் இரண்டு நாள் சென்ற பின் முயற்சிக்குமாறு கேட்கிறேன்.


திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:
சீலனின் விளையாட்டுத்தனங்கள்:
சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:

இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று.
இணைப்பு இரண்டு.
அல்லது இங்கே

நன்றி: விடுதலைத் தீப்பொறி-II
Labels: , ,


Sunday, July 10, 2005

இரு நினைவு கூரல்கள்

வயிறெரிந்து வெந்ததும், பகைவிரட்டி வென்றதும்


நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.

1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.

ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.

ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.

எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.

யார்யார் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.

(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)

மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.

மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நேற்று.

***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.

“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.

அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.

Labels: , , , , ,


Thursday, July 07, 2005

கரும்புலிகள் பற்றி பொட்டு அம்மான்...

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் கரும்புலிகளுடனான தனது அனுபவங்கள் இரண்டைத் தனது குரலிலேயே சொல்கிறார். இந்த இணைப்பைப் பயன்படுத்திக் கேட்கவும். இதிற் சொல்லப்படும் நபர்கள் வெளித்தெரியாமல் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

இதில் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் இடமுள்ளது. உயிர்கள் பற்றிய தன் கருத்தை மாமிசம் உண்ணாத அக்கரும்புலி வீரன் சொல்வதும், பின்னொரு நாளில் எதிரிகள் பலரை அளிப்பதும் தான் அது. ஆனால் யதார்த்தம் மிக எளிமையானது. எதிரிகளைக் கொன்றுதான் தன் சமூகத்தைக் காக்க வேண்டுமெனில், உணவுக்காகக் கொல்லப்படும் மீனையும் மிருகத்தையும்விட எதிரிகளின் உயிர்களின் மதிப்புக் குறைவுதான் போலும்.

ஒலிப்பதிவின் தொடக்கத்தில் அரை நிமிட விளம்பரம் வரும். பொறுத்தருள்க.

நன்றி-
பதிவுகள் தளம்.

Labels: , ,


Tuesday, July 05, 2005

அழகுமாணிக்கங்களாயல்ல, அத்திவாரக் கற்களாய்...

கரும்புலிகள் நாள்.


யூலை-5. கரும்புலிகள் நாள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
“விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன. இப்போது எப்படியோ தெரியவில்லை. இத்தாக்குதல் பற்றிய முழுவிவரத்துக்கும் மில்லரின் தாயாரின் கருத்துக்களை அறியவும் இங்கே செல்லவும். சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்தருள்க.

அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களிலேயே இந்திய ராணுவம் வந்துவிட்டது.
அதன் பின் இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990 ஆனி) தொடங்கிய கையோடு சில இராணுவ முகாம்கள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டன. முதலில் கொக்காவில், பின் மாங்குளம். இரண்டுமே கண்டிவீதியை மறித்து நின்ற முகாம்கள். (கண்டிவீதியின் இருப்பு போராட்டத்தில் எவ்வளவு முக்கியம் என்பது அன்றுமுதலே நிறுவப்பட்டு வந்திருக்கிறது) இதில் மாங்குளம் மீதான தாக்குதலின்போது மில்லர் பாணியிலேயே வாகனக் கரும்புலித்தாக்குதல் ஒன்று நிகழ்த்தப்படத் திட்டமிடப்பட்டது. ஆள் தேர்வுக்கு முன்னமேயே அந்நேரத்தில் வன்னியின் துணைத் தளபதியாயிருந்த போர்க் அப்பணியை ஏற்பதாகச் சொன்னார். அது மறுக்கப்பட்டபோதும் அடம்பிடித்து அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார். 3 நாள் கடும் சமரின்பின் கரும்புலி லெப்.கேணல். போர்க்கின் அத்தாக்குதலோடு முகாம் கைப்பற்றப்படுகிறது. (இன்று கண்டி வீதியாற் செல்பவர்கள் போர்க் வெடித்த அவ்விடத்தைப் பார்க்கலாம்.)அதே நேரம் கடலிலும் இத்தாக்குதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேஜர் காந்தரூபன், மேஜர் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வெடிமருந்து நிரப்பிய படகொன்றினால் மோதி கட்டளைக் கப்பலொன்றின் மீதான தாக்குதலைச் செய்தனர். அது தாக்கிச் சேதமாக்கப்பட்டது. பின் கடலில் நிறையத் தற்கொடைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுவிட்டன. ஏராளமான டோரா ரக வேகப்படகுகள் தாக்கியழிக்கபட்டுவிட்டன. கடற்புலிகளின் பெரும்பலம் இந்தக் கரும்புலிப்படகுகள் தான் என்றால் மிகையாகாது.

வெடிமருந்து வாகனத்தோடு சென்று வெடிக்கும் வடிவம் சிலாவத்துறை முகாம் மீதான மேஜர் டாம்போவின் தாக்குதலோடு மாற்றமடைந்தது. தரையில் அவ்வடிவம் மாற்றம் பெற்று தாக்குதலணியாகச் சென்று தாக்கியழிக்கும் வடிவுக்கு மாற்றமடைந்தது. பலாலி விமாத்தளத்தின் மீதான தாக்குதல் தொடக்கம் இன்றுவரை பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆண்கள் பெண்கள் என இருநூற்றைம்பதுக்கும் அதிகமான வீரர் வீராங்னைகள் தற்கொடைத்தாக்குதல் மூலம் வீரச்சாவடைந்துள்ளார்கள். இதைவிட வெளிவிடப்படாத தாக்குதல்கள் நிறைய.

பெண்களின் பங்களிப்பு இத்தாக்குதல்களில் சரிசமமாயுள்ளது. (பெண்களைக் குறித்துத் தனியே, சிறப்பாகச் சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எனக்குள்ளுண்டு. ஆனால் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி இன்னும் அப்படிச் சொல்லப்படவேண்டிய தேவை வன்னியில் இல்லையென்றாலும் பிற இடங்களில் உண்டென்றே கருதுகிறேன்.) முதற் பெண் கடற்கரும்புலி கட்பன் அங்கயற்கண்ணி. முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.

பல வல்லரசுகளின் துணையோடு போரிடும் ஒரு நாட்டுப் படைக்கு எதிராக தன் மக்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு விடுதலை இயக்கம் போராடும்போது அது சில அதீதமான செயல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. மனஉறுதியும் தியாகமுமே அவ்விரு படைகளுக்குமிடையிலான வித்தியாசமாகும். தற்கொடைத்தாக்குதல் வடிவம் ஓரளவுக்கு இராணுவச் சமநிலையைப் பேணியது என்றுதான் சொல்ல வேண்டும். தலைவர் பிரபாகரன் சொல்கிறார்:
பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்

போராட்டம் இக்கட்டுக்குள்ளான பல நேரங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தான் போர்க்களத்திலும் அரசியலிலும் வெற்றியைத் தேடித்தந்தது. இன்றுவரை சிங்களக் கடற்படையின் போக்குவரத்துக்களைக் குலைத்து அவர்களின் மேல் பெரும் அழுத்தத்தைப் பிரயோகித்தது கடற்புலிகள் அணி. இதைவிட முக்கியமாக போராட்டதுக்கான முழு வினியோகமும் கடல்வழி மூலந்தான். அதைச் சரியாகச் செய்துவந்ததும் கடற்புலிகள் அணி. பல கடற்கலங்களை மூழ்கடித்து பெரும்பொருளாதார இழப்பைக் கொடுத்ததும் இந்தக் கடற்புலிகள் அணிதான். மீனவரின் கடற்றொழிலுக்குப் பாதுகாப்பளித்ததும், மக்களின் போக்குவரத்துக்குப் பாதுகாப்பளித்ததும் கடற்புலிகள் அணிதான். இவையெல்லாவற்றிலும் கடற்கரும்புலிகள் பங்கு நீக்கமற நிறைந்திருக்கிறது. கடற்புலிகள் பலம் பெற்ற பின், முல்லைத்தீவைத் தாண்டிச் செல்லும் எந்தக் கப்பல் தொடரணியும் (ஆம் தனியே எந்தக் கலமும் செல்வதில்லை. பெரும் அணியாகத்தான் செல்வார்கள். அப்படியிருக்க பல தடவை இந்த அணிகள் தாக்கியழிக்கட்டிருக்கின்றன.) 90 கடல் மைல்களுக்குள் -கிட்டத்தட்ட 160 கிலோ மீற்றருக்குமதிகம்- சென்றது கிடையாது. அவ்வளவு பயம். ஆனால் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின்பின் ஒரு கடல்மைல் வரை வந்து மீனவரை வெருட்டி படகுகளை இடித்து சேட்டை செய்தது சிங்களக் கடற்படை. கடற்புலிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தது தான் காரணம்.)

பெடியன்களால் என்ன செய்ய முடியுமென்ற புத்தஜீவிகளின் கேள்விக்கு விடை கூறப்பட்டது முதலாவது தற்கொடைத்தாக்குதல் மூலம். இன்று சிங்களத்தின் பொருளாதாரம் முதல் அனைத்தும் தீர்மானிக்கப்படுவது இத்தற்கொடைத்தாக்குதல் மூலந்தான். முக்கியமான பல தருணங்களில் அவ்வப்போது நடத்தப்பட்ட சில உரிமை கோராத தாக்குதல்கள் தான் சிங்களத்தின் அத்திவாரத்தை அசைத்தது. பொருளாதாரமென்றாலும் சரி, சில முக்கிய தலைகளை உருட்டுவதென்றாலும் சரி இத்தாக்குதல்கள் தான் போராட்டப்பாதையை செப்பனிட்டன. “தடை நீக்கிகள்” என்று இவர்களைச் சொல்வது சாலப்பொருத்தம். கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் தான் சிங்களம் ஓரளவாவது இறங்கிவரக் காரணமாயமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.

----------------------------------------------------
எதிரியின் குகைக்குள்ளேயே திரிந்து, கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் வழுவத் தூண்டும் அத்தனை ஆடம்பர, ஆபாசப் புறச்சூழலுக்குள்ளும் வருடக்கணக்கில் இருந்து திட்டத்தைச் சரிவரச் செய்து உயிர்நீத்துப்போன அந்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கும் புகழ் மீது ஒரு மயக்கமிருக்கும். களத்தில் போராடிச் சாகும் ஒருவருக்குக்கூட கல்லறையும் மாவீரர் பட்டடியலில் அவர் பெயரும் இருக்கும். நினைவு தினங்கள் அனுட்டிக்கப்டும். இறந்தபின்னும் புகழ் இருக்கும். ஆனால் முகமே தெரியாமல், இறந்த செய்திகூட யாருக்கும் தெரியாமல், கல்லறையுமில்லாமல், போராளியாயிருந்தான் என்ற அடையாளங்கூட இல்லாமல் சுயமே அழிந்து போகும் இவர்கள் வித்தியாசமானவர்கள்தான். எதிரியாற்கூட இவர்களை இன்னார் என்று அடையாளப்படுத்த முடியாத படிதான் தம்மையும் தம் சுயத்தையும் அழித்துக் கொள்கிறார்கள். மிகமிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இவர்கள் அடையாளங் காணப்பட்டனர். அப்படியே தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்."
----------------------------------------------------
பல சந்தர்ப்பங்களில் கரும்புலி அணியைக் கலைத்துவிடும்படி உலக நாடுகளும் சிங்கள அரசும் வற்புறுத்துவதிலேயே தெரிகிறது இப்போர்முறை வடிவத்தின் வெற்றி. இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம் தான்.

புலிகளால் வெளியிடப்பட்ட கரும்புலிகளின் விவரங்கள்:
கடற்கரும்புலிகள் 186.
தரைக் கரும்புலிகள் 79.
மொத்தம் 265.

கரும்புலிகள் நாளான இன்று அனைவரையும் நினைவு கூர்வோம்.

Labels: , , , ,


Monday, July 04, 2005

தமிழீழக் கடற்படையின் பாடற் காட்சி.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் படகுக்காட்சிகள் பாடலொன்றுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்க்க விரும்புகிறவர்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

தரவிறக்கப்பக்கத்திற்குச் சென்றபின் 45 வினாடிகளின்பின் தரவிறக்குவதற்கான இணைப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
நன்றி.

Labels:


Sunday, July 03, 2005

விடுதலைப் புலிகளின் உந்துருளிப் படையணி

விடுதலைப் புலிகளின் உந்துருளிப் படையணியின் இரண்டாவது அணி பயிற்சி முடித்து வெளியேறியுள்ளது. அதன் பயிற்சி நிறைவு நிகழ்வு வன்னியில் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே ஓர் உந்துருளிப் படையணி பயிற்சி முடித்து வெளியேறி கடமையிலீடுபட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் படைப்பலமே ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கும் பேரம் பேசும் பலத்துக்கும் அடிப்படையாகும். படைப்பலம் கட்டியெழுப்பப்படாதவிடத்து உலகநாடுகளும் சேர்ந்து மிளகாயரைத்து விடுவார்கள். இன்றைய போர்நிறுத்த நிலையில் புலிகள் ஏன் படைவலுவைப் பெருக்கிறார்கள் என்ற விமர்சனம் (விசமத்தனம்) பலரால் வைக்கப்படுகிறது. அடிப்படையில் போர் தொடங்காமலிருப்பதற்குக் கூட படைப்பலப் பெருக்கம் அவசியம். சிங்கள அரசோ யுத்தகாலத்தைப் போலவே தன் படைப்பலப்பெருக்கத்தைச் செய்து வருகிறது. பிறநாடுகளுடனான கூட்டு ஒப்பந்தங்களும் செய்யப்படுகின்றன. ஆயுதக் கொள்வனவுகளும் நடைபெறுகின்றன. இதற்குச் சமாந்தரமாகவேனும் புலிகள் தம் படைப்பலத்தைப் பெருக்காத பட்சத்தில் அசட்டுத்துணிவில் போரைத் தொடங்க சிங்களம் முயலும்.

யுத்தத்தைத் தவிர்க்கக்கூட யுத்தக்கட்டமைப்பு வளர்ச்சிகளும் படைப்பெருக்கமும் உதவக்கூடும். தமிழர் படையின் படைவலு அதிகரிப்பதையிட்டுக் கொள்ளை மகிழ்ச்சிதான்.

“பலம் பலத்துக்கு மரியாதை செய்யும்.”
மேலதிகச் செய்திக்கும் படங்களுக்கும் இங்கே செல்லவும்.
நன்றி- புதினம்.

Labels: , , ,


Friday, July 01, 2005

கால்கள் பற்றி ஆதவனின் 3 கவிதைகள்

அந்த நிலவும் அவளும்...

தெளிந்த நிலவில்
நட்சத்திரங்கள் கூடிய ஒரு பொன்னிரவில்
உண்மையில்-
'வா ஓடிப்போவோம்'
என்றாள் என் மைதிலி.

வருகிறேன் செல்லமே!
காலம் பூராவும்
இதற்காகத்தானே காத்துக் கிடந்தேன்.
என் மைதிலியே!
ஒரேயொரு திருத்தம்

என்னால் ஓட முடியாது.
ஏற்பாயா?


கால்கள் பற்றி மேலும் சில வரிகள்...

நண்பனே!
நினைவு கொள்கிறாயா
நாம் கிளித்தட்டு விளையாடியதை?

ஒரு கோட்டில்...
சமாந்தரமாய் இருகால்களும் நிற்கவேண்டும்
அப்போதுதான் 'அடி' சரி.

இப்போது நிற்க முடிகிறதா உன்னால்?

உணர்வு எங்கோ போகிறது.
கால்கள் எங்கோ போகிறது.
எனது கால்கள் எனக்கே சொந்தமில்லை.
யாரோ வைத்தகால்; அப்படித்தானே?

இருக்கட்டுமேன்...
அதனாலென்ன?
இதயத்தையும் உணர்வையுமா
இழந்து தொலைத்தேன் நான்?

ஒரு கோட்டில் சமாந்தரமாய்
என்னுடைய 'எல்லாமுமே' நிற்கும்.
நான் அடிக்கிற 'அடி' சரிதான்.


ஓசையின் உறுதி

செவ்வரத்தம் பூவுக்கும்
காலடிகளின் சத்தம் கேட்கிறதாம்...
ஆரோ ஒரு அயல்நாட்டு விஞ்ஞானி
ஆய்வுசெய்து சொல்கிறான்.

என் காலடியோசை
என் நிலமெங்கும் கேட்கும் என்பதற்கு
விஞ்ஞானிகளின்
ஆய்வு ஒன்றும் தேவையில்லை.

நீ புதைத்த மிதிவெடியில்
போகவில்லையடா என் கால்கள்
நான் வரிந்த
இதய உறுதியில் போயிற்று.
இதய அடிகளின் சத்தம் இருக்கும்வரை
என் காலடியோசை
உன்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.

க. அதவன்.

நன்றி
வெள்ளி நாதம்.

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]