Monday, July 09, 2007
மூன்று நினைவு கூரல்கள்
இன்று (09/07/2007) நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு பன்னிரண்டாம் நினைவுநாள் இன்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாட் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பிற்போடப்பட்டது.
***********************************************
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் இருநூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
Labels: அனுபவம், களவெற்றி, துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு
Monday, January 01, 2007
கிளாலிப் படுகொலையும் அது சார்ந்தவையும்
1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும்.
முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம்.
***
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் 'கேரதீவு - சங்குப்பிட்டி' என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.
முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.
இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.
தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.

[பெரிதாய்ப் பார்க்க படத்திற் சொடுக்கவும்.]
தொடக்கத்தில் பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.
இந்நிலையில் மக்கள்மீதான தாக்குதலை நடத்தும் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதலொன்றை அதே கிளாலிக் கடற்பரப்பில் வைத்து நடத்தினர்.
26.08.1993 அன்று போக்குவரத்திலீடுபட்ட மக்களைத் தாக்கவென நாகதேவன்துறையிலிருந்து வந்த கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரு கரும்புலிப் படகுகள் கடற்படையினரின் இரு படகுகள் மீது மோதி அவற்றைத் தகத்து மூழ்கடித்தன. இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
அன்றுடன் கிளாலிக் கடற்பரப்பில் நிலைமை மாறியது. மக்களுக்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். மக்களைத் தாக்கவென வந்த கடற்படையினருடன் சில சண்டைகள் நடைபெற்றன. இக்கடல்வழிப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் சாள்ஸ், மக்களுக்கான பாதுகாப்புச் சமரொன்றில் அதே கிளாலிக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்தார்.


1993 நவம்பரில் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது 'தவளைப் பாய்ச்சல்' என்ற பேரில் பெரும் நடவடிக்கையொன்றை புலிகள் மேற்கொண்டு அத்தளத்தை அழித்துப் பின்வாங்கினர்.
அதன்பின் சீராக, ஆபத்தின்றி கிளாலிக் கடற்பயணம் தொடர்ந்தது. யாழ்-வலிகாம இடப்பெயர்வைத் தொடர்நது பெருமளவான மக்கள் வன்னிக்கு வந்ததும் இதே பாதைவழியாற்றான். 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரிடம் வீழும்வரை கிளாலிக் கடற்பரப்பால் பயணங்கள் ஆபத்தின்றி நடந்தவண்ணமேயிருந்தன.
_______________________
படங்கள்: அருச்சுனா, Google
Labels: அனுபவம், ஈழ அரசியல், மக்கள் துயரம்
Monday, July 10, 2006
மூன்று நினைவு கூரல்கள்
நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு நினைவுநாள் நேற்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
***********************************************
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் நூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
பாடல் கேட்க முடியாவிட்டால் இங்கே தரவிறக்கிக் கேளுங்கள்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.
Labels: அனுபவம், இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் எழுச்சி, மக்கள் துயரம்
Monday, June 26, 2006
எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு.
பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றும் போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.
மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (தேன்மொழி) அப்போது போராளியாக இருந்தார்.
போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவ 'ரீச்சர்'. எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.
அப்போது "யாழ்செல்லும் படையணி" என்று ஒரு படையணி இருந்தது. (அண்மையில் வன்னியில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.
அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.
இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.
இன்றைக்குச் சரியாக ஏழு ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.
ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.
பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. 'தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர்' என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,
"எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே" என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் 'மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது' என்று.
'எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்' என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.
இன்றும்கூட அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.
*************************************************************
வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று. இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.
*************************************************************
லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி தமிழ்க்கவி அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும். ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று..
**************************************************************
ஏழு வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.
**************************************************************
புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான். ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.
Labels: அனுபவம், ஆதரவாளர், சமர் நினைவு, மக்கள் எழுச்சி, மாவீரர்
Saturday, April 22, 2006
ஆனையிறவும் அந்த நாட்களும்...
**********நட்சத்திரப் பதிவு - 11**********
உண்ணி வெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.
பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம், 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில்.
ஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம்.
எங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஓர் அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு விழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும்.
மட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்துமுடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான்.
வியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களைச் சுடுவது வெயில் மட்டுமன்று . சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம்.
சற்றுத் தூரத்தே ஒரே ஓர் ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒருகாய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவைஎம்மேல் ஏறுகின்றனவோ?
அணிந்திருக்கின்ற ஒற்றைஉடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது பெரிய சோதனை.
உண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும்? கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும். அந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்...?
********************************************
அந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம். தோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும். தலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் பிளந்தபடி ஒருவர் வருகின்றாரா? ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார்.
பாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆகா! அதுவே போதும்.
தென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும்.
அதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (துரவு கிடைத்த பின்னர் மட்டும்தான். முன்னர் "கழுவுவது" என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம்.
அன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது. காப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம்.
ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை. வழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை பாய்ந்து துப்பினார். ‘கள்ளுக் குடிச்சமாதிரிக் கிடக்கு” அதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும்? குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.
புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லாம் இனி இரவுதான். தண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை. இருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது. அடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின. எதைச் சொல்ல?
ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல? எதை விட?
**************************************
இப்போது "பலவேகய-02" நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை. அன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம்.
திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோலப் பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்திக் குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம்.
"மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம். வருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.? இயற்கைக்கு நன்றி சொன்னோம். மழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம்.
வானிலே பேரொலி எழுந்தது. Y-12 (குண்டுவீச்சு விமானம்) வருகின்றது.
அருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை.
எல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன. அது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்தால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும். ஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது.
Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது.
“ இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ?”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக! நாசமாய்ப்போக! எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை.
சிரித்துக் கூக்குரலிட்டோம்.
கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம்.
“இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. அது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல். இன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை, நாங்களுமில்லை. அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக.
மலைமகள்.
(மகளிர் படையணி)
நன்றி:
விடுதலைப் புலிகள். குரல்-123.
******************************
ஏற்கனவே 'படிப்பதிவுகள்' என்ற இன்னொரு வலைப்பதிவில் இடப்பட்ட பதிவுதான் இது. நாள் நேரம் கருதி இங்கே மீள் பிரசுரமாகிறது.
Labels: அனுபவம், இராணுவ ஆய்வு, சமர் நினைவு, நட்சத்திரம், படைபலம், வரலாறு
Friday, April 21, 2006
போராளிகளின் குறிப்புக்கள்.
உலக மட்டத்தில் போர்வீரர்களின் குறிப்புக்களுக்கிருக்கும் மரியாதையும் பெறுமதியும் உயர்வானவை. காலங்கடந்தும் வாழ்பவை. அவ்வீரர்களின் நாட்டிலோ சமூகத்திலோ மட்டுமன்றி உலகம் முழுதும் போற்றப்படும் போர்விரர்களின் எழுத்துக்கள் நிறைய உள்ளன. "ஸ்டாலின் கிராட்" போன்ற படைப்புக்கள் நிகழ்த்திய தாக்கம் யாவரும் அறிந்ததே.
இவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல ஈழப்போராட்ட அனுபவங்கள். அவர்களுக்கு "ஸ்டாலின் கிராட்", எங்களுக்கு 'இத்தாவில்'.
ஆனால் அவற்றை ஆவணப்படுத்துவதுதான் முக்கியம்.
புலிகளின் மிகப்பெரிய தரையிறக்கம் 'மாமுனைத் தரையிறக்கம்'. ஏறத்தாழ 1200 போராளிகளை, பல மைல்கள் நீளமான - எதிரியின் வலிமையான கடற்கரையரணைத் தாண்டி எதிரியின் பகுதிக்குள்ளேயே தரையிறக்கியது அந்நிகழ்வு. முழுப்பலத்துடனான எதிரியின் கடற்படையுடனான கடுமையான கடற்சண்டையின் மத்தியில் அவர்களுக்கான விநியோகத்தையும் செய்தது தமிழரின் கடற்படை. தரையிறங்கிய அணிகள் கண்டிவீதியை மறித்து சிறியதொரு கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டைபிடித்து அப்பகுதியைக் காப்பாற்றி வைத்திருந்தன. இத்தாவில் என்ற அப்பகுதியில் புலிகளின் அணி இருக்கும்வரை ஆனையிறவுக்கு ஆபத்து என்தையுணர்ந்த எதிரியின் மூர்க்கத்தனமான தொடர்தாக்குதல்களின் மத்தியிலும் அச்சிறுபகுதியை எதிரியிடம் இழக்கவில்லை. எதிரி இழந்ததோ அதிகம். இரட்டை இலக்கத்தில் இராணுவ டாங்கிகளை இழந்தது அரசபடை.
ஒரு சதுர மீற்றருக்கு ஓர் எறிகணை என்ற வீதத்தில் அச்சிறு பகுதி குண்டுகளால் துவைத்தெடுக்கப்பட்டது. இன்றும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் இத்தாவில் என்ற குறிப்பிட்ட பகுதியைக் கடந்துசெல்லும்போது அச்சண்டைக்குச் சாட்சியாக தலைதறிக்கப்பட்டபடி நிற்கும் தென்னைகளையும், வீதிக்கரையில் புலிகளால் தகர்க்கப்பட்ட டாங்கிகள் ஒன்றிரண்டையும் காணாமற் செல்ல முடியாது. தளபதி கேணல் பால்றாஜ் நேரடியாகவே தரையிறக்க அணியுடன் நின்று அவர்களை வழிநடத்தினார். மகிளிரணித் தளபதிகள் கேணல் துர்க்கா, கேணல் விதுசா போன்றோரும் நேரடியாக நின்ற களமது. இதோ பால்றாஜ் உயிரோடு பிடிபட்டாரென்று முழக்கமிட்டுக் கொக்கரித்தபடி செய்திக்காகக் காத்திருந்த கொழும்புக் கட்டளையகம் ஆனையிறவு பறிபோனதைத் தான் செய்தியாகப் பெற்றது. இதுபற்றி இக்பால் அத்தாஸ் விரிவாக எழுதியுள்ளாரென்று நினைக்கிறேன்.
இவ்விதத்தில், ஒப்பிட்டுச் சொல்லமுடியாத மாபெரும் சமர்க்களத்தையும் அதன் வெற்றியையும் பற்றி முறையான நூலொன்று இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவைதாம் உள்ளன. அதுவும் இத்தாவில் களத்தில் களமாடிய எல்லைப்படை வீரர்களைப் பதிவாக்கும்போது வெளிவந்த தகவல்களே கணிசமானவை.
அதன்பின்னரான காலங்களில் அக்களத்திலிருந்த முக்கியமானவர்கள் - தளபதிகள் உட்பட பலர் களச்சாவடைந்துவிட்டனர். லெப்.கேணல் இராசசிங்கன் என்ற தளபதி அச்சமரில் மிகமிக முக்கியமானவர். பின்னொரு நாள் இரணைமடுக் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்துபோனார். அவரோடு இத்தாவில் சமர்க்களத்தின் பெரியதொரு வரலாறும் மூழ்கிப்போனது.
பெரிய தொகுப்புக்கள் வராவிட்டாலும் தனிப்பட்டவர்களின் குறிப்புக்கள் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வெளிவந்தவற்றில் மிகமிக முக்கியப் படைப்பாக கப்டன் மலரவனின் "போர் உலா" என்ற புத்தகத்தைச் சொல்லலாம். முழுக்க முழுக்க அவரது கள அனுபவத்தைச் சொல்லும் படைப்பு அது. மாங்குளம் படைமுகாம் தகர்ப்புக்காக மணலாற்றுக்காட்டிலிருந்து "உருப்படி"யுடன் புறப்பட்டதிலிருந்து, அத்தாக்குதல் முடிந்து அடுத்த தாக்குதலான சிலாவத்தை புறப்படும் வரையான பதிவு அது. 'உருப்படி' என்பது அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்துக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த 'பசீலன் 2000' என்ற புலிகளின் சொந்தத் தயாரிப்பு எறிகணை செலுத்தி. மலரவன் அந்த எறிகணை செலுத்தி அணிக்குப் பொறுப்பாளனாகச் செயற்பட்டவர். அவர் எழுதி வைத்ததை அவர் வீரச்சாவடைந்த பின்பு (1992 இல் வளளாய்க் காவலரண் தகர்ப்பில்) வெளியிட்டார்கள். மிக இயல்பாகச் சொல்லப்பட்ட படைப்பு அது. இப்படைப்பு தொடர்பான எனது ஒரே விமர்சனம், "அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரச் சொல்லாடலை அப்படியே பதிவு செய்திருக்கலாம்" என்பதுதான். அருமையான நாவல் போன்ற வாசக அனுபவத்தைத் தரக்கூடியது.
இவற்றைப் போல் நிறையப் படைப்புக்கள் வெளிவர வேண்டும். முக்கியமாக தாக்குதலணித் தலைவர்களும் தளபதிகளும் நிறைய எழுத வேண்டும். இங்கிருக்கும் முக்கிய பிரச்சினை புலிகளின் தளபதிகள், அணித்தலைவர்கள் எல்லோருமே பாடசாலைக் கல்வியில் நிறைவானவர்களில்லையென்பது. அதாவது அரச இராணுவக்கட்டமைப்பில் அணித்தலைமைக்கு கல்வித்தகமை முக்கியமானது. ஆனால் புலிகளின் அணித்தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஏன் மூத்த தளபதிகள் என்று பார்த்தாற்கூட பெரும்பான்மையானோர் பாடசாலைக் கல்வியறிவில் முதிர்ச்சியானவர்களில்லை. தேர்ந்த, கவர்ச்சியான எழுத்துநடையுடன் அவர்களால் சம்பவங்களைக் கொண்டுவர முடியாதநிலையுண்டு. இது, ஏனைய நாட்டுப் போர்வீரர்களுடனும் அவர்களின் எழுத்துக்களுடனும் ஒப்பிடும்போது தெரியும் வித்தியாசப் பண்பென்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே எழுதக்கூடியவர்கள் என்ற நிலையில், இலக்கியத்திறம், கவர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொள்ளாமல் குறிப்புக்களைத் தொகுக்க முடியும்.
இதைவிட்டுப்பார்த்தால், எழுதுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லையென்பதுதான் முக்கிய சிக்கலென்பது என் கருத்து. பொட்டம்மான் மிகமிக அருந்தலாக எழுதிய வெகுசில ஆக்கங்கள் மிகமிகக் காத்திரமான படைப்புக்கள். லெப்.கேணல் இராஜன் பற்றிய 'குருதிச்சுவடுகள்', வெளிச்சம் பவழ இதழில் வெளிவந்த இரு ஆக்கங்கள் என்பவை நானறிந்தவை. அதிகம் பேசாமல், அதிகம் எழுதாமல் இருப்பதே தன்பணிக்குச் சிறந்ததென்று இருக்கிறாரோ என்னவோ?
புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல் புலேந்திரன் அவர்கள் 1984, 85 காலப்பகுதியில் வெறும் 25 பேருடன் திருமலைக் காடுகளில் அலைந்துதிரிந்து பணியாற்றிய நேரத்தில் காட்டுவாழ்க்கையை ஒளிப்பதிவாக ஆவணப்படுத்தியதை அறிந்தபோது ஆச்சரியமாயிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துடன் ஒளிப்பதிவுக் கருவிக்கான மின்கலங்களையும் காவித்திரிந்து ஆவணப்படுத்தியுள்ளார். அருவியில் குளிப்பது, கொக்குச் சுட்டு வாட்டுவது, காட்டுக்குள் பாட்டுப்பாடி கும்மாளமடிப்பது, தடிவெட்டிப் பரணமைப்பது, கொட்டில் போடுவது, தேன் எடுப்பது என்பதுட்பட அழகான இயற்கைக் காட்சிகள், பறவைகள், மிருகங்கள் என்வற்றையும் காட்சிப்படுத்தியதோடு தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என்பவற்றையும் வீடியோப் பதிவாக்கியுள்ளார். ஆனால் எழுத்தில் எதுவும் செய்யவில்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது.
*************************************
போராளிகளின் குறிப்புக்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன. ஈழநாதம் பத்திரிகையிலும், புலிகளின்குரல் வானொலியிலும் இவை வெளிவருவதுண்டு (நான் இவர்கள் படைக்கும் கவிதை, சிறுகதை நாடகம் போன்ற ஆக்கங்களைச் சொல்லவில்லை.) கரும்புலிகளிற் சிலர் இப்படி சம்பவக் குறிப்புக்களை எழுதியுள்ளதாக அறிகிறோம். எப்போதாவது அவை வெளிவருமென்ற நம்பிக்கையுண்டு.
வெளிவருகிறதோ இல்லையோ, போராளிகள் தங்களின் குறிப்புக்களை எழுதவேண்டும். என்றோ ஒருநாள் அவை உதவக்கூடும். முறையான தணிக்கையொன்றினூடாக அவை வெளியிடப்படவேண்டும்.
*************************************
இவ்வாறு, ஒருதாக்குதல் சம்பவம் பற்றி எழுதப்பட்ட போராளியின் குறிப்பொன்று இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறப்புக் கனரக ஆயுதமொன்றுடன் சென்று தாக்குதல் நடத்திவிட்டு வந்த சம்பவத்தைப்பற்றிய பதிவிது. சில எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் எனக்கு வாசிக்க அலுக்கவில்லை. சில போரியற் சொற்கள் சிலருக்குப் புரிபடாமற் போகலாம்.
Labels: அனுபவம், ஈழ இலக்கியம், நட்சத்திரம், நினைவு, மாவீரர், வரலாறு
Tuesday, April 18, 2006
குறிதவறிய சூடும் திருவள்ளுவரும்.
"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.
சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது."
வன்னியில நடந்த முசுப்பாத்தியொண்டைச் சொல்லலாமெண்டு நினைக்கிறன்.
நண்பர் வட்டத்துக்குள்ள நடந்த சம்பவம்.
1999 ஆம் ஆண்டு. வன்னியில இளந்தாரியள் எல்லாருக்கும் ஆயுதப்பயிற்சியள் நடந்த காலம். இளந்தாரியள் தானெண்டு இல்லாம கிழடுகட்டையள் கூட ஆர்வமா வந்து பயிற்சியெடுத்தவை. புலிகளின் அதிமுக்கியமான தந்திரமும், ஈழப்போராட்டத்தை மிகப்பெரிய தோல்வியிலிருந்தும் பொறியிலிருந்தும் காத்த உடனடி நடவடிக்கைதான் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி. (அதுபற்றிய சின்னதொரு பதிவை பிறகு எழுதுகிறேன். விரும்பியவர் வாசித்துச் செல்க. )
தொடக்கத்தில எல்லாச்சனத்துக்கும் பொதுவான சில உடற்பயிற்சியள் தான் நடந்தது. அப்ப கொட்டனுகளக் கொண்டு தொடங்கின பயிற்சி பிறகு துவக்கு வடிவுக்கு மெல்லமெல்ல மாறீச்சு. (இதுபற்றி அப்பா துவக்குச் செய்வார் எண்ட பதிவில எழுதியிருக்கிறன்)
பிறகு ஆக்களைத் தெரிஞ்செடுத்து சூட்டுப்பயிற்சியள்கூட குடுக்கத் துவங்கீச்சினம். அப்ப சனத்துக்குப் பேப்புழுகு, தாங்களும் துவக்குத் தூக்கிச் சுடுறமெண்டு. பயிற்சிக்குப் போட்டு வீட்ட வந்து அளக்கிற கதையள் தனிக்கணக்கு. உதில மனுசியும் பயிற்சிக்குப் போற குடும்பத்தாருக்குத்தான் புழுக வழியில்லை. பயிற்சியிடத்தில பீடி, சுருட்டுக்குத் தடையிருந்தாலும் நசுக்கிடாமப் பொத்திவச்சு அடிக்கிறவையும், பிடிபட்டபிறகு தண்டனையில கொட்டனைத் தூக்கிக்கொண்டு கத்திக்கத்தி ஓடுறவையுமெண்டு பம்பலாப் போகும் பொழுது.
'பிலாக்கன்' எண்டு புதுக்குடியிருப்பில ஒருத்தர் இருந்தவர். ஏன் அந்தப்பேர் வந்துதெண்டு தெரியாது. 'பிலாக்கண்ணை' எண்டுதான் கனபேர் கூப்பிடுறது. கிட்டத்தட்ட அம்பது வயசு வரும். நெடுங்கேணிப்பக்கத்து ஆள். ரெண்டு மூண்டு தரம் இடம்பெயந்து புதுக்குடியிருப்ப நிரந்தரமாக் கொண்டிட்டார். ஆள், தான் பெரிய வேட்டைக்காரன் எண்டு நிறையக் கதையள் சொல்லுவார். அவரைத் தெரிஞ்ச வேறயும் ரெண்டொருத்தர் அதை உறுதிப்படுத்தினதால நாங்களும் அவற்ற கதையள நம்புவம். ஆனா அவர் வேட்டையாடினதெல்லாம் நெடுங்கேணி, ஒதியமலைப் பக்கத்திலதான். கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு அவர் வேட்டைய விட்டு. ஆள் தன்ர குறிவைக்கிற திறமையத்தான் பெருசாச் சொல்லுவார். எந்த அமாவாசை இருட்டிலயும் சரசரப்புச் சத்தத்துக்கே வெடிவச்சு விழுத்துவன் எண்டெல்லாம் சொல்லுவார். துப்பாக்கி குறிபாக்கிற பயிற்சியிலயெல்லாம் அண்ணர் தான் திறமையாச் செய்யிறவரெண்டு கூட்டாளிப்பெடியளும் சொல்லுவாங்கள்.
தொகுதி தொகுதியாத் தான் சூட்டுப் பயிற்சியள் நடந்தது. நூறு பேருக்குக் கிட்ட ஒரு தொகுதியில வருமெண்டு நினைக்கிறன். ஓரிடத்துக்போய் ரெண்டுநாள் நிண்டு எல்லாம் முடிச்சிட்டு வாறது. பிலாக்கண்ணையின்ர தொகுதியும் வெளிக்கிட்டிட்டுது. சனத்துக்கெல்லாம் குறிபிடிக்குதோ இல்லையோ நாலு வெடிவச்சாச் சரியெண்டதுதான் நோக்கம். இயக்கத்துக்கும் அதுதான் திட்டம். சனம் சுட்டுப்பழகுதாமெண்ட கதை வெளியில அடிபடவேணுமெண்டதுதான் திட்டம். அதால, சனத்துக்கு தாங்கள் சுடுற குண்டு எங்கபோகுதெண்டோ தாங்கள் என்ன புள்ளியள் எடுக்கிறமெண்டதோ கவலையில்லை. ஆனா வீ்ட்ட வந்து அவிக்கிறது கொஞ்சம் நஞ்சமில்லை. அதோட சுடுற ஆளுக்கு மட்டும்தான் அவரின்ர புள்ளியள் சொல்லப்பட்டதால வீட்ட வந்து நல்லா வண்டில் விடக்கூடியமாதிரியிருந்திச்சு. கூட வந்தவங்கள்கூட ஒண்டும் சொல்ல ஏலாதெல்லோ?
பிலாக்கண்ணையின்ர ரீம் சுடப்போகேக்க பயிற்சி தாற ஆக்கள் குறிதவறக்கூடாதெண்டதில கொஞ்சம் கவனமெடுக்கத் தொடங்கீட்டினம் போலகிடக்கு. முதல் அம்பது மீட்டரிலயோ என்னவோ வச்சு ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அதில செந்தில் எண்ட கூட்டாளியொருத்தன் ரெண்டும் நல்ல அடி அடிச்சிட்டான். வாத்திமார்கூடப் பாராட்டினவையளாம். பிறகு கொஞ்சப்பேரை மட்டும் கூப்பிட்டு முதலிருந்ததைப்போல ரெண்டு மடங்கு பெரிசான Target வச்சு இன்னும் ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அவயள் முதல் சுட்ட ரெண்டும் வானத்துக்கோ பூமிக்கோ போயிட்டுதாம். இப்ப இலக்கைப் பெரிசாக்கி இன்னும் ரெண்டு குடுக்கினமாம். அப்பதான் பெடியள் பாத்திருக்கிறாங்கள், எங்கட பிலாக்கண்ணையும் அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிக்கிறாராம்.
தாங்களும் பக்கத்தில நிக்கப்போறம் எண்டு கேட்டு பிலாக்கண்ணை சுடேக்க பக்கத்தில நிண்டிருக்கிறாங்கள். முதல்குண்டு சுட்டாச்சு. ரெண்டாவது குண்டு சுடேக்க இலக்குக்கு முன்னால புழுதி கிழம்பீச்சாம். பெடியளும் சேந்துபோய்த்தான் இலக்கைப் பாத்திருக்கிறாங்கள். ஒண்டும் பிடிக்கேல.
"என்ன பிலாக்கண்ணை. மரியாதை போச்சு. உவன் செந்தில் அந்த சின்ன ராக்கெற்றுக்கே ரெண்டு நைன் அடிச்சிருக்கிறான். நீங்கள் உந்தப்பெரிய ராக்கெற்றுக்கே அடிக்கேலாம நிக்கிறியள்"
எண்டு கடுப்பேத்தியிருக்கிறாங்கள். அதுக்கு பிலாக்கண்ணை அடிச்ச லெக்சர்தான் பகிடி.
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."
எண்டு ஒரு குறள் சொல்லிப்போட்டு,
"முயலைக் கொண்ட அம்பிலும் பாக்க யானைக்கு எறிஞ்சு குறிதப்பின ஈட்டிக்குத்தான் மதிப்பு அதிகமெண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதுமாதிரிதான் உவன் செந்தில் சின்ன டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிச்ச குண்டிலும்பாக்க நான் பெரிய டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிக்காத குண்டுக்குத்தான் பெருமை அதிகம் தெரியுமோ?"
எண்டுபோட்டு
"மாஸ்டர் நீங்கள் என்ன சொல்லிறியள்?" எண்டு பயிற்சி குடுத்த ஆசிரியரையும் கேட்டிருக்கிறார். அவரும் சிரிச்சுக்கொண்டே
"ஓமண்ணை, அதெண்டாச் சரிதான். உடம்பில கொழுவிற குண்டைவிட முன்னுக்குப் புழுதி கிழப்பிறதைப் பாக்கத்தான் பீப்பயம் வரும்"
எண்டாராம்.
"பிலாக்கண்ணை, உதின்ர சரியான கருத்தென்னெண்டா...."
எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்ட செந்திலை நிப்பாட்டி,
"டேய், உனக்குத் திருக்குறளைப் பற்றி என்ன தெரியுமெண்டு கதைக்க வந்திட்டா?"
எண்டுபோட்டு கதையளக்க வெளிக்கிட்டார்.
அதுக்குப்பிறகு பிலாக்கண்ணையோட கதைச்சு வெல்ல ஏலாது.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
பிலாக்கண்ணை சொன்ன குறள் சரியோ பிழையோ தெரியாது. ஆனா அந்த இடத்தில ஒரு குறள் சொல்லிப்போட்டுத்தான் மனுசன் விளக்கம் குடுத்திருக்கிறார். நான் இப்ப பதிவெழுதேக்க குறளைச் சரியானபடி போட்டிருக்கிறன் எண்டதையும் சொல்லிறன்.
பிலாக்கண்ணை உப்பிடி எடுத்தோடன குறள் சொல்லிற ஆளில்லை. ஆனா அந்த இடத்தில குறள் சொல்லி விளக்கம் குடுத்ததை வைச்சு நாங்களா உய்த்தறிஞ்ச விசயம் இதுதான்:
"பிலாக்கண்ணை முந்தி தன்ர வேட்டைக்காலத்தில கனபேருக்கு உதே குறளைச் சொல்லியிருக்ககூடும்"
Labels: அலட்டல், அனுபவம், நட்சத்திரம், பகிர்தல், வன்னி
Sunday, April 16, 2006
பூராய நட்சத்திரம்.
தமிழ்மணத்திரட்டியில ஆளாளுக்குச் செய்யிற நட்சத்திர விளையாட்டைத்தான் நான் இந்தக் கிழமை செய்யப்போறன்.
சிலதுகள் திடீர்திடீரெண்டு வந்து அமையும். இதுவும் அப்பிடித்தான்.
இந்த முறை என்னட்ட அதிகம் எதிர்பார்க்காதையுங்கோ. நாளொரு பதிவு கட்டாயம் போடுவன். ஆனா அதுகள் எத்தினை பேருக்கு ரசிக்கத் தக்கதா இருக்கு, எத்தனை பேருக்குப் பிடிக்காமலிருக்கு, எத்தினை பேருக்கு எரிச்சலைத் தருது எண்டும் பாக்கவேணும்.
இந்த வலைப்பதிவு தொடங்கின காலத்தில அடிக்கடி எழுதினனான். இடையில குரற்பதிவுகள்கூடப் போட்டுக் கலக்கினனான். பிறகு ஏனோ தொய்வு வந்திட்டுது. [எத்தின சோலியத்தான் பாக்கிறது?;-( ] கிட்டத்தட்ட ஒண்டரை வருடங்களில வெறும் 77 பதிவுகள் மட்டும்தான் இந்த வலைப்பக்கத்தில எழுதியிருக்கிறன். எண்டாலும் துவங்கின நோக்கமோ திட்டமோ சரியாவரேல எண்டது மட்டும் உறுதி.
இனி உங்கள இந்தக் கிழமை நட்சத்திரப் பதிவுகளுக்கால சந்திக்கிறன்.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
சரி. இந்த வலைப்பக்கத்தின்ர பேரைப்பற்றி ஒரு விளக்கம் தந்துவிடுறன். அதுக்கு முதல் 'வன்னியன்' எண்டது புனைபெயர்தான் எண்டதையும் சொல்லிக்கொள்ளிறன். கனபேருக்குத் தெரியுமெண்டாலும் (முந்தி என்ர ஒவ்வொரு பதிவும் தமிழ்மணத்திரட்டியில திரட்டப்படேக்க, "புனைபெயர்தான்" எண்டதும் சேத்துத்தான் என்ர பேர் வரும்) புதுசா வந்தவைக்குத் தெரியாமலிருக்கலாம். பலர் தெரிஞ்சும் தெரியாதமாதிரி நசுக்கிடாமலும் இருக்கலாம். (நான் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறமாதிரி. ஆனாலும் பாருங்கோ அதில ஒரு 'இது' இருக்கு.)
"பூராயம்" எண்டது ஈழத்து வழக்குச்சொல்லாகத் தான் நான் நினைச்சு வச்சிருந்தன். ஆனா வலைப்பதிய வந்தபிறகுதான் உந்தச் சொல் கனபேருக்குத் (யாழ்ப்பாணத்தாருக்குக் கூட) தெரியாது எண்டது விளங்கீச்சு. எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் சர்வசாதாரணமாக் கதைக்கப்படுற சொல். பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது. இப்ப உந்த "பூராயம்" எண்ட சொல் அருகிக்கொண்டு போயிருக்குமெண்டு தான் நினைக்கிறன். வன்னியில 1998 இல இதழியல் சம்பந்தமா ஒரு பட்டறை நடந்திச்சு. முறையான பாடத்திட்டதோட குறுகிய காலத்துக்குள்ள ஒரு பாடநெறி முடிச்சவை. (அதை முடிச்சவையில ஒருபகுதியினர் போராளிகள்.) அதிலயிருந்து வெளிவந்த ஆக்கள் ஓர் இதழ் நடத்தினவை. அதுக்குப் பேர் "பூராயம்" எண்ட தகவலையும் இங்க பதிஞ்சு வைக்கிறன்.
சரி, இனி பூராயமெண்டா என்ன எண்டு பாப்பம்.
விடுப்புக்கள் அல்லது விண்ணாணங்கள் எண்டு சொல்லப்படுறதுகளுக்கு இணையா இதைச் சொல்லலாம். தமிழகத்தார்க்கு விளங்கிறமாதிரிப் பாத்தா உந்த 'கிசுகிசு' எண்டதுக்கு இணையாகவும் வரும். மற்றவர்களைப் பற்றியே கதைப்பது, மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கதைப்பது, தேவையில்லாததுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து அலட்டுவது எண்டு தொடங்கி இல்லாத பொல்லாத கதைகட்டுறதுகள் வரைகூட இதுகள் போகும். இதுகளெல்லாம் சேந்து பூராயம் எண்டு சொல்லலாம்.
"பூராயம்" விளங்கீச்சோ இல்லையோ அதை ஏன் "பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது" எண்டு முதற்பந்தியில சொன்னனான் எண்டு கட்டாயம் விளங்கியிருக்கும்.;-)
எங்கட ஊர்வழக்கங்களில உந்தப் பூராயப் பண்பு மேலோங்கியிருக்கும். கிராமப்பக்கங்களில ஆரேன் ஒரு புதுமுகத்தை ஒழுங்கைக்குள்ள பாத்தால் அது வேலிவழியால விடுகளுக்குப் பரவீடும். அந்த முகம் எதுக்கு வந்தது, ஆற்றை வீட்ட வந்தது, அவர் ஆர் எண்டெல்லாம் ஆராய்ஞ்சு முடிவுஎடுக்காமல் எங்கட சனம் சாப்பிடாதுகள். எங்கட ஊர்ப்பக்கம் சந்ததைக்குப் போறதெல்லாம் பொம்பிளையள்தான். காய்கறிச் சந்தைக்கோ மீன்சந்தைக்கோ போனா அங்கயொரு அரைமணித்தியாலச் சமாவுக்குப்பிறகுதான் வீடுவருவினம். எங்கட விட்டுக்குப் பக்கதிலயிருக்கிற கிழவி சந்தையால நேர எங்கடவீட்ட வருவா. வரேக்கயே "எடி றோசுமலர்!" எண்டு கூப்பிட்டுக்கொண்டே அதோட ஏதாவதொரு புதினத்தைச் சொல்லிக்கொண்டே வருவா. "இந்தா பொடி, இதக்கொண்டே மோளுட்டக் குடு" எண்டு தாற பைய நான்தான் வேண்டிக்கொண்டே அவையின்ர வீட்டில குடுக்கிறது. மனுசியத் திட்டிக்கொண்டே ஓட்டமாப்போய் ஓட்டமா வருவன். வேறயென்னத்துக்கு? அம்மம்மாவோட மனுசி கதைக்கிறதுகளக் கேக்கத்தான்.
பொழுதுபட செவமாலை சொல்லவெண்டு ஒவ்வொரு குறிச்சீக்கையும் ஒவ்வொரு இடத்தில சனம்கூடும். எங்கட வீட்டுக்குப் பக்கத்திலயிருக்கிற புளியமரத்தடியிலதான் ஒரு மாதா சுருவம் வச்சு செவமாலை நடக்கும். எனக்கு அங்கபோக கொள்ளை விருப்பம். செவம் சொல்லுறதுக்கில்லை. அதுக்குமுதல் ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிசம் நடக்கிற கூத்துக்களைக் கேக்கத்தான். ஆராற்றை பெடிபெட்டையள் ஆரோட சுத்துதுகள் எண்டது தொடக்கம் நிறைய விசயங்கள் அங்க அலசப்படும். அதவிட மாவிடிக்க வாற மனுசியோட நடக்கிற கதையள், செத்தவீடு, கலியாண வீடெண்டா கும்பலா இருந்து நடக்கிற கதையள் எண்டு எப்பவுமே எனக்கு இந்தப் பூராயப் பேச்சுக்கள் நல்லாப்பிடிக்கும்.
நான்கூட உந்தப் பூராயம் எண்ட பேர ஒருத்தரும் கண்டுகொள்ளிறாங்களில்லையே எண்டு கவலைப்பட்ட காலமும் இருந்திச்சு. ஆனா காருண்யன் கொன்பூசியஸ் எண்டு ஒருத்தர், கவிதைகளெல்லாம் நிறைய எழுதுவார், வலைப்பதிவாளராகவும் இருந்தவர், அவர் உந்தப் பேர் சம்பந்தமான ஆதங்கத்தைச் சொல்லியிருந்ததை அவரின்ர பதிவில பாத்தன். அவரும் பூராயமெண்டு தன்ர ஒரு வலைப்பதிவுக்குப் பேர் வைக்க விரும்பினதாயும், நான் அதைப்பாவிச்ச படியா 'விடுப்புக்களும் விண்ணாணங்களும்' எண்டு அதுக்குப் பேர் வச்சதாவும் சொல்லியிருந்தார்.
அடடா! ஒருத்தராவது பூராயத்தைப் புரிஞ்சிருக்கிறார் எண்டு பேச்சந்தோசம்.
இன்னொரு குறிப்பு: இது பூராயத்தையொட்டியதாக வரும் சில வினைச்சொற்கள் பற்றியது.
ஈழத்தில 'பறையிறது' எண்டும் ஒரு சொல்வழக்கிருக்கு. 'கதைக்கிறது' எண்டதுக்கு இணையாச் சொல்லிறது. கதைக்கிறது எண்டது 'பேசுறது' எண்ட கருத்தில வருது. ஆனா எங்கட பேச்சு வழக்கில இந்தச் சொற்களுக்கிடையில பொருள்ரீதியில வித்தியாசமிருக்கு.
'பேசுறது' எண்டா ஒருத்தருக்குத் திட்டிறது எண்டும் எங்கட பேச்சுவழக்கில பொருள். அச்சொல் சொல்லப்படும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து நாங்களே பொருளைத் தீர்மானிப்போம். 'மேடையில் பேசினார்' என்று வந்தால் அவர் உரையாற்றினார் என்ற பொருளை எடுத்துக்கொள்வோம். ஆனால் 'அப்பா பேசுவார்' என்றால் அப்பா திட்டுவார் என்று பொருள். இது "ஏசுதல்'" என்றும் வரும்.
'அப்பா பேசிப்போட்டார்', 'அம்மா பேசுவா', 'கொப்பரிட்ட பேச்சு வேண்டப்போறாய்' என்பவற்றில் திட்டுதல் என்ற பொருளில் வருகிறது.
அதேபோல 'கதைக்கிறது' என்றால் அளவளாவுதல், உரையாடுதல் என்று பொருள்படும். 'பறையிறது' என்பதும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தருகிறது. ஆனால் 'அரட்டையடித்தல்' என்ற பொருளிலும் இந்தப் 'பறைதல்' பாவிக்கப்படும்.
"உங்க என்ன பறைஞ்சு கொண்டிருக்கிறா?"
பூராயத்தோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லாக நான் பரிந்துரைப்பது 'பறைதல்'.
"உள்ளநாட்டுப் பூராயம் முழுக்கத் தெரியும், உதுமட்டும் தெரியாதோ?"
"எடியே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. உங்கயென்ன பூராயம் பறைஞ்சுகொண்டு நிக்கிறா?"
"மனுசீன்ர பூராயக்கதையக் கேக்க விசர்தான் வரும்"
சரி, பூராயத்தின்ர நட்சத்திரக் கிழமையில அடுத்தடுத்த பதிவுகளில சந்திப்பம்.
***ஆனா என்ர வாரம் பூராயக்கதையளா இராது எண்டு மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.
நன்றி.
Labels: அலட்டல், அறிமுகம், அனுபவம், கலந்துரையாடல், பதிவுகள்
Wednesday, April 05, 2006
தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை.
இப்பதிவு ஒருபோதும் சிங்களக் கடற்படையின் தமிழக மீனவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தப் போவதில்லை. முக்கியமாக, கொல்லப்படுபவர்களோ கைதுசெய்யப்படுபவர்களோ கூலிக்கு மாரடிக்கும் ஏழைகள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவ்விசயத்தில் என்தரப்பு அனுதாபம் அவர்களுக்குண்டு.
இந்தச் சிக்கலை அவர்களின் அரசியல்வாதிகளோ மக்களோ தீர்க்க வேண்டும். இதுமட்டில் அம்மக்களின் தலைவர்கள் எனச் சொல்லப்படுபவர்களின் போக்கு வருத்தமளிக்கக்கூடியது. ஒதே உதாரணம். இவ்வளவு ஆண்டுகாலம் எத்தனையோ மீனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இரண்டொரு வருடங்களுக்கு முன் இலங்கை வந்த இந்தியக் கடற்படைத் தளபதியொருவர் (சரியாக யாரென்று மறந்துவிட்டது.) கொழும்பில் வைத்து ஒரு செவ்வி கொடுத்துவிட்டுத் திரும்பினார். அதில், "தமிழக மீனவர்களைத் தாக்குவது சிங்களக் கடற்படையன்று, மாறாக புலிகள்தான் அவர்களைத் தாக்குகின்றனர்" என்று திருவாய் மலர்ந்து விட்டுத் திரும்பினார். நானறிய வை.கோ. மட்டும்தான் இதையெதிர்த்து ஒரு அறிக்கை விட்டாரென்று நினைக்கிறேன். (பலருக்கு அப்படியொன்று நடந்தது தெரியுமா? என்னால் அதற்குரிய சுட்டிகளைத் தேட முடியாது. இது நான் தாயகத்தில் நிற்கும்போது நடந்தது.) இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக மீனவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை.
தமிழக மீனவர்களைக் கொல்வதுதான் சிங்களக் கடற்படையின் முதன்மை நோக்கமென்று சொல்வதை (என் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்) என்னால் ஒப்பவே முடியாது. அது வேறுபல அரசியல்களைக் கொண்டுள்ளது. (ஆனால் இருதரப்பு மீனவர்களுமே சிங்களக்கடற்படையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை. போதை மருந்துக் கடத்தலுட்பட பலவிசயங்கள் இவற்றின் பின்னணியிலுள்ளன. அரச இயந்திரத்தின் மறைமுக - நேரடிச் சம்பந்தம் இவற்றிலுண்டு)
இன்றும்கூட மன்னார்க்கடலிலிருந்து வெறும் ஒருமைல் வரைக்கும் வந்து மீன்பிடிக்கும் தமிழகப்படகுகளை எதுவும் செய்யாமலே வேடிக்கை பார்க்கச் சிங்களக்கடற்படையால் முடிகிறது. வந்தியத்தேவன் சொல்லும் Trawlers படகுகள் வந்து வளத்தைக் கொள்ளையடிப்பதுடன் மீனவர்களின் வலைகளை அறுத்துச் செல்வதையும்கூட பல சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்த்தே வந்திருக்கிறது. அதையெதிர்த்து உண்ணாவிரதம் அது இது என்று பலகூத்தாடினால் அடுத்தமுறை சிலரைக் கைது செய்வார்கள்.
என் அவதானத்தின்படி இந்திய மீனர்வர்கள் சுட்டுக்கொல்லப்படுவது இலங்கைக் கரையோரத்திலன்று. மாறாக கச்சதீவை அண்டியோ எல்லைக்கோட்டை அண்டியோதான். மன்னார்க்கரை வரை வந்து ஆறுதலாக மீன்பிடித்துச் செல்கிறார்கள்.
சிலதடவைகள் கரையோர மீனர்வகளால் மட்டுமே சிலபடகுகளும் பல மீனவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை அடுத்தநாளே புலிகள் விடுவித்த சம்பவங்களுமுண்டு.
உண்மையில் Trawlers இல் வருபவர்கள் அதன் முதலாளிகள் கிடையாது. அவர்கள் கூலிக்கு வரும் தொழிலாளர்களே. தாங்கள் விரும்பவில்லையென்றாலும் கட்டாயம் மன்னார்க்கடலுக்குச் செல்லும்படி தம் முதலாளிகள் வற்புறுத்துவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள் (பிபிசி செவ்வியிலுட்பட)
இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் இரண்டொரு சந்திப்புக்கள்கூட நடந்துள்ளன. எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மன்னாரில் வைத்து "இனிமேல் உங்கள் பகுதிக்கு வரமாட்டோம்" என்று உறுதியளித்துவிட்டு நாடு திரும்பியதும், "அப்படியேதும் நாங்கள் வாக்குறுதி தரவில்லை, அவர்களின் கரைக்குப்போய்த்தான் மீன் பிடிக்க வேண்டியிருக்கிறது" என்று சொன்னார் பேச்சுக்கு வந்த பொறுப்பானவர். இது மிகுந்த சினத்தை மன்னார்க்கரை மீனவர்களிடம் ஏற்படுத்தியது. அதைவிட "இனிமேல் Trawlers பயன்படுத்த மாட்டோமெ"ன்று சொல்லிவிட்டுச் சென்றபின்னும் பலமுறை மன்னார் மீனவரின் வலைகள் அப்படகுகளால் அறுக்கப்பட்டுள்ளன. இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்று சொல்லியிருக்கிறோம், ஆனால் சிலர் அதை நடைமுறைப்படுத்துகிறார்களில்லை" என்று அந்தப் பொறுப்பானவர் பதிலளிக்கிறார்(பி.பி.சி செவ்வி).
இன்றும்கூட ஈழத்துத் தமிழ்மீனவனுக்கு ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க நிறையத் தடைகளுண்டு. நேரக்கட்டுப்பாடுகளுண்டு. குறிப்பிட்ட மணித்தியாலங்கள் கொடுத்து அதற்குள் கரையேறி விடவேண்டுமென்ற கட்டுப்பாடு இன்னும் பல இடங்களில் இருக்கிறது. இந்நிலையில் கரையோர வளத்தையே பெருமளவு நம்பியிருக்கும் மீனர்வர்களின் வளங்கள் வேறாட்களால் எடுத்துச்செல்லப்படுவதையோ, தமது மீன்பிடி உபகரணங்கள் அவர்களாற் சேதமாக்கப்படுவதையோ பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இன்றும் அப்படி வந்துபோகும்போது, "சிங்களவன் என்ன புடுங்கிறான்?" என்றுதான் மீனவர்களால் கேட்கப்படுகிறது. இதை ஈழத்துக்கரையோர மீனவனின் நிலையிலிருந்து பார்த்தால் ஓரளவு புரிபடக்கூடும்.
"தங்கள் கடலில் மீன்வளமில்லை, மன்னாரில்தான் அது கிடைக்கிறது" என்று சொல்வது சரியா என்று தெரியவில்லை. (இதை நான் சொல்லவில்லை. தமிழக மீனவர்களே ஊடகங்களிலும் பிபிசி உட்பட பன்னாட்டுச் செய்திச் சேவைகளிலும் சொல்லியுள்ளார்கள்.) அப்படித்தான் இருந்தாலும் மன்னாரில்தான் மீன்பிடிப்போம் என்று அடம்பிடிப்பதும் ஏற்புடையதன்று.
இதற்கெல்லாம் உடனடியா ஏதாவது தீர்வு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. என்ன தீர்வு என்றும் புரியவில்லை. தனியே இரு மீனவச் சமூகங்களும் மட்டும் பேசியும் எந்தத் தீர்வும் நடைமுறைக்கு வராது (ஏற்கனவே ஏற்பட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதுடன் மேலும் மேலும் விரிசல் வந்துகொண்டேயிருக்கிறது) அரசும் இதுவிசயத்தில் ஆக்கபூர்வமான முடிபுகள் எடுக்கப்போவதில்லை. இரு அரசுகளுமே தங்கள் தங்கள் சுயநலத்துக்காக இருதரப்பு மீனவர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன.
************************
கச்சைதீவுக்கண்மையில் அல்லது எல்லைக்கோட்டுக்கண்மையில் (குறிப்பாக சிறுபடகுகளில் வரும்) வைத்துத் தாக்கப்படும் மீனர்வர்கள் விசயத்தில் "அவர்கள் எல்லை தெரியாமல் வந்தார்கள்" என்று சொல்லலாம். ஆனால் Trawlers படகில் வருபவர்கள் விசயத்தில், அதுவும் மன்னார்க்கரையிலிருந்து ஒருமைல் வரை (இன்னும் நெருங்கினால் Trawlers தரைதட்டுமென்ற அளவுக்கு) வருபவர்கள் விசயத்தில் அப்படிச் சொல்ல முடியாது. (வேண்டுமானால் அம்மீனவர்களுக்கு எல்லைக்கோடு பற்றிய அறிவில்லையென்று மறவன்புலவு சச்சிசாதனந்தன் சொல்வதை ஏற்கலாம். எல்லாக்கடலும் அனுமதிக்கப்பட்டதென்ற புரிதல்தான் அவர்களுக்கிருக்க வேண்டும்.)
************************
மீனவப்பிரச்சினையுடன் சம்பந்தமற்றது.
இந்தியக் கடற்கரையிலிருந்து 470 கடல்மைல் தொலைவில் - பன்னாட்டுக் கடற்பரப்பில் வைத்து ஒரு கப்பலைத் தடுக்கவோ, கைது செய்யவோ, விசாரிக்கவோ, கட்டாயப்படுத்தி ஆயுதமுனையில் தம் நாட்டுக்கு அழைத்துச் செல்லவோ இந்தியக்கடற்படைக்கிருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதற்கப்பால், அப்படித் "துடியாட்டமாயுள்ள இந்தியக் கடற்படை, இருபதாண்டுகளாக தமது குடிமக்கள் கடலில் வைத்துக் கொல்லப்படும் விசயத்தில் -பலநேரங்களில் தங்கள் கடலெல்லைக்குள் வைத்தே அன்னியப்படையால் கொல்லப்படும் விசயத்தில் என்ன செய்கிறது?" என்று ரோசா கேட்ட நியாயமான ஒரு கேள்விக்கு ஒரு நியாயமான பதிலைச் சொல்லாது,
"ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும்,
தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள
வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது "
என்று சொல்லி தனது மனப்புழுக்கத்தைக் கொட்டப் பயன்படுத்திக்கொண்டார் வந்தியத் தேவன்.
இந்திய இராணுவப் பாசிசம் பற்றி (அதற்கெல்லாம் தனியொரு அவில்தாரின் அரிப்பு என்று தப்பிக்க முடிகிறது உங்களால்) இந்தியாவிலேயே உணர்ந்துகொள்ளுங்கள். சிக்கலென்னவென்றால் புலிகளும் கட்டளையிடும் தலைமைப்பீடம், அதன் தொடர்ச்சியான நிர்வாகக் கட்டமைப்புக்கொண்ட ஒரு நிறுவனம் என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ?
கட்டளைக்கு அடிபணிந்து, நிறுவனரீதியாக- உத்தரவு பெற்று எதைச்செய்தாலும் அது பாசிசமன்று. எல்லாம் ஜனநாயகமே.(ஈழத்தில் நடந்த கொலைகள், பாலியல் வன்புணர்ச்சி, சித்திரவதைகள், கட்டாயப்படுத்தி ஆட்சேர்த்துத் துப்பாக்கிமுனையில் சமர்க்களமனுப்பிக் கொன்றது.....எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்)
Labels: அரசியற் கட்டுரை, அனுபவம், மக்கள் துயரம்
Monday, October 03, 2005
புலிகளின் விமானப்படை.
புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள்.
ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகாரபூர்வமாகவே 1998 நவம்பரில் வெளிப்படுத்தியிருந்ததோடு மக்களின் காட்சிக்கும் கொண்டுவந்திருந்தார்கள். புலிகளின் விமானப்பறப்பைப் பார்த்தவர்களில் ஒருவனான எனது அனுபவமே இந்தப் பதிவு.
முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். முதன்முதலில் புலிகளால் வெளிப்படுத்தப்பட்ட பறப்பு, 1998 நவம்பர் மாவீரர் நாளுக்கு முள்ளயவளை மாவீரர் துயிலுமில்லத்தில் உலங்குவானூர்தி மூலம் பூத்தூவிய சம்பவமே. அதைக்கூட சிலர் மட்டுமே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இந்தப் பகிரங்க அறிவித்தலுக்கு முன்பேயே சிலருக்குப் புலிகளின் பறப்பு முயற்சியைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நானுமொருவன்.
இதில் என்னபெரிய விசயமிருக்கிறது என்று நிறையப் பேருக்குக் கேள்வியெழும்பலாம். புலிகளின் விமானம் பற்றி இத்தனைபேர் (அரசாங்கங்கள் உட்பட) வயித்தால போற அளவுக்குப் பிதற்றும்போது அம்மாதிரியொரு முயற்சியைப் பற்றிக் கேள்விப்படும் ஓர் ஈழத்தமிழன் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியுமா? முதன்முதலில் ரைட் சகோதரர்கள் பறந்தபோது அதைப்பார்த்த ஒருவனுக்கு ஏற்பட்ட உணர்விற்குச் சற்றும் சளைத்ததன்று புலிகளின் பறப்பைப் பார்த்த ஈழத்தமிழனின் குதூகலிப்பு. அந்தக் குதூகலிப்பை இன்று ஏழு வருடங்களின் பின் மீட்டுப்பார்க்கிறேன். இப்போதும் புல்லிரிக்கிறது.
1998 செப்ரெம்பர் மாதம் நடுப்பகுதி. புலிகளின் வான்பறப்பு முயற்சி பற்றி மக்களிடையே குறிப்பாக இளமட்டத்தில் சிலரிடையே அரசல் புரசலாகக் கதைகள் இருந்த காலம். 19 ஆம் திகதி நான் முல்லைத்தீவை அடுத்துள்ள சிலாவத்தைக் கிராமத்தில் நிற்கிறேன். மாலை ஐந்து மணியிருக்கும். வானில் உலங்கு வானூர்திச் சத்தம். அதுவும் தாழ்வாக பறப்பது போன்ற உணர்வு. அப்போதெல்லாம் உலங்குவானூர்தி அங்கால் பக்கம் வாறதேயில்லை. அது அபூர்வமான நிகழ்வுதான். நீண்டகாலத்தின்பின் உலங்குவானூர்திச் சத்தத்தைக் கேட்டோம். என்னோடு இன்னுமிரண்டு பேர் நின்றார்கள். பார்ப்பதற்கு வசதியாக வெட்டைக்கு வந்தோம்.
என்ன ஆச்சரியம்? தாழ்வாக ஓர் உலங்குவானூர்தி. கரைச்சிக்குடியிருப்பை அண்டிப் பறந்து கொண்டிருந்தது. இது நிச்சயம் சிறிலங்கா அரசாங்கத்தினதாக இருக்க முடியாதென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால்????
நெஞ்சுக்குள் இனம்புரியாத உணர்வு. 5 நிமிசத்தின் மேல் அதைப்பார்க்கவில்லை. இதை யாரிடமாவது சொல்லியாக வேண்டும். அதுவும் மற்றவர்கள் வழியாக அறியமுதல் நான்தான் அவர்களுக்குச் சொல்லும் முதல் ஆளாக இருக்க வேணும். நான் வந்த வேலை இன்னும் முடியவில்லை. அப்படியே சைக்கிளை மிதித்தேன் புதுக்குடியிருப்புக்கு. வரும்வழியில்தான் எத்தனை கற்பனைகள்?
"எமது வானூதிகள் குண்டுமாரி பொழிய எதிரிப்படைகள் சிதறுகிறது; எதிரியின் கட்டங்கள் பொடிப்பொடியாகிறது; மரங்களின்கீழ் ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு குப்புறப்படுத்திருக்கும் படையினர்; வெட்டையில் எந்தக் காப்புமில்லாமல் 'எமது' வான்தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் சுருண்டுவிழும் படையினர்; அடுத்தடுத்து விழும் முகாம்கள்; மிகக் குறைந்த இழப்புக்களுடன் மீட்கப்படும் எமது நிலங்கள்; என்று என் கற்பனை தறிகெட்டுப் போகிறது. இனியென்ன? நாங்களும் விமானப்படை வைத்துள்ள பலம் வாய்ந்த அமைப்புத்தான்."
புதுக்குடியிருப்புக்கு வந்துவிட்டேன். என் கூட்டாளிகள் யாரையும் உடனடியாகக் காணவில்லை. உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். மெதுவாகக் கதை கொடுக்கிறேன்.
"உங்கால முல்லைத்தீவுப் பக்கத்தால ஏதும் அறிஞ்சனியளே?"
"இல்ல. என்ன விசயம்?"
"ஒண்டுமில்ல.... ஹெலி ஏதோ பறந்ததாமெண்டு சனம் கதைக்குது..."
"என்னது ஹெலியோ? என்ன துணிவில வந்தவன்? அடிச்சு விழுத்தாம விட்டவங்களே?"
"சீச்சீ.. உது ஆமியின்ர ஹெலியில்லயாம்..."
ஒரு மாதிரிப் பார்த்தார்கள்.
"இயக்கத்தின்ர ஹெலியாம்"
"டேய்! உனக்கார் சொன்னது? சனம் சும்மா தேவையில்லாம கதைகட்டிவிடும். உதுகளக் காவிக்கொண்டு இஞ்ச வாறாய். நீ இண்டைக்கு முல்லைத்தீவு தானே போனனீ? நீ பாக்கேலயோ?"
"இல்ல இல்ல. நான் பாக்கேல... சனம் தான் கதைச்சிது."
எண்டு அவசரப்பட்டுச் சொன்னேன். பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது. அங்க ஒரு பிரச்சினை இருக்கு. கண்டபடி உந்தக் கதைகள் கதைச்சுக் கொண்டு திரிய ஏலாது. அப்பிடிக் கதைச்சாலும் ஆரேன் இனியில்லயெண்டு நம்பிக்கையான கூட்டாளியளோட தான். அதால நான் உந்தக்கதைய அதோட விட்டிட்டன். ஒருத்தரும் நம்பின மாதிரித் தெரியேல. எனக்கு உறுதியா அது புலிகளின்ர ஹெலிதான் எண்டு தெரிஞ்சிருந்திச்சு. சரி, எப்பவோ ஒருநாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே வேணும் எண்டு பேசாமல் பம்மிக்கொண்டு இருந்திட்டன்.
நான் ஹெலி பாத்தது ஒரு ஞாயிற்றுக் கிழமை. சரியா அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திலீபன் அண்ணையின்ர நினைவுநாள். அண்டைக்குத்தான் ஓயாத அலைகள்-2 என்ற பெயரில் கிளிநொச்சி நகர மீட்புக்கான பெருஞ்சமர் புலிகளால் தொடக்கப்பட்டது. சண்டை இரவு தொடங்கியவுடனேயே நான் புலிகளின் விமானப்படைப் பயன்பாடு பற்றி எதிர்பார்த்தேன். அதிகாலை கூட்டாளிகளுக்குச் சாடைமாடையாகச் சொன்னேன்.
"இந்த முறை விசேசமான சாமானெல்லாம் இயக்கம் பாவிக்கப்போகுது"
எண்டு சொன்னன். ஒருத்தருக்கும் நான் சொன்னது விசேசமாத் தெரியேலப் போல. அவங்கள் அலட்டிக்கொள்ளேல.
"இந்த முறை மேலாலையெல்லாம் அடிவிழும் ஆமிக்கு" எண்டன்.
இப்பிடியிப்பிடி சொல்லி ஒரு கட்டத்தில
"இயக்கம் வான்படையப் பாவிக்குமெண்டு நினைக்கிறன்" எண்டன். விழுந்து விழுந்து சிரிச்சாங்கள். அதோட நானும் சத்தம்போடாம வாயப்பொத்திக் கொண்டு இருந்திட்டன். உண்மையில புலிகள் அப்படியெதுவும் பாவிக்கவில்லை. இன்றுவரையும் பாவித்ததாகத் தெரியவில்லை. நான் பார்த்த ஹெலி யுத்தத்துக்குப் பயன்படுத்த முடியாதென்பது என் கணிப்பாயிருந்தாலும் எதிலும் உச்சப் பயன்பாட்டைப் பெறும் புலிகளின் திறன் என்னை அப்படிச் சிந்திக்க வைத்தது.
அதன்பின் வேறிடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் வான்பறப்பைப் பார்த்தவர்களோடு கதைக்கும்போது நான் பார்த்ததுக்கும் அவர்கள் பார்த்ததுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. சிலர் ஹெலி அல்லாமல் கிளைடர் ரகத்தைப் பார்த்ததை அறிந்தேன்.
அதன் பின் நவம்பர் மாவீரர் நாளில் வான்படை பூத்தூவியதுடன் புலிகளின்குரலில் அன்றிரவே பகிரங்கமாக வான்படை பற்றி அறிவிக்கப்பட்டது.
"அமிர்தலிங்கம் ஏந்திய வாளும் பிரபாகரன் உயர்த்திய ஹெலியும்" என்ற தலைப்பில் மறுவாரமே தினமுரசு கட்டுரை எழுதியது. சிறிலங்காவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இதுதான் பேச்சு. அலரிமாளிகைமுதல் கூட்டுப்படைத்தலைமையகம் வரை அனைத்திடங்களிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தப்பட்டன.
இன்று புதுப்புதுப் பெயர்களிலெல்லாம் புலிகளின் விமானப்படைப்பலம் பற்றிக் கதைக்கிறார்கள். உண்மையோ பொய்யோ தெரியாது. நான் பார்த்தது ஆரம்பகட்ட முயற்சி. உள்ளூர் உற்பத்தி. என்ன இருந்தாலும் அதுவொரு பாய்ச்சல்தான். அதன் தொடர்ச்சியான முன்னேற்றமும் வளர்ச்சியுமே இறுதி வெற்றிக்கான திறவுகோல்.
----------------------------------------------------------------------------------
இன்னொரு விசயம். இன்று புலிகளின் விமானத்தளம் இருப்பதாகச் சொல்லப்படும் காட்டுப்பகுதியானது நீண்டகாலமாக புலிகளின் தளம். நானறிய 1997 இல் இருந்து அக்காட்டுப்பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் புலிகளால் தடை செய்யப்பட்ட பிரதேசம். வன்னி தெரிந்தவர்களுக்கு, பழைய கண்டிவீதி என்ற பெயரிலுள்ள இராமநாதபுரம்-கரிப்பட்ட முறிப்புப் பாதை முன்பே பாவனைக்குத் தடுக்கப்பட்ட பகுதி. இன்று அந்தப் பகுதியைத்தான் புலிகளின் ஓடுதளம் இருப்பதாகவும் அவற்றைத்தாம் பரிசோதிக்க வேண்டுமென்று கேட்கின்றனர்.
நான் ஆசிப்பது இதைத்தான். இன்று பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் புலிகளின் விமானப்படை பற்றிக் கூறும் அத்தனைக் கதைகளும் (இவற்றிலிருக்கும் புளுகுகளையும் சாத்தியப்பாடற்ற விசயங்களையும் உணர்ந்து கொண்டிருந்தாலும்) உண்மையாக இருக்க வேண்டுமென்பதே.
-------------------------------------------------------------------------------
என்னை எழுது எழுது என்று நச்சரித்தவர்களுக்கு.......
தமிழ்ப்பதிவுகள்
Labels: அனுபவம், ஈழ அரசியல், படைபலம், வரலாறு
Sunday, September 18, 2005
'ஒழுங்கை' - குரற்பதிவு.
ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள செயலியை இயக்கிக் கேக்கலாம். செயலி தொழிற்படாவிடில் இங்கே சொடுக்கவும்.
குழைக்காட்டானின்ர படத்தைப் பாத்த உடன ஒழுங்கை ஞாபகங்கள் வந்திட்டுது.
அனேகமா சைக்கிளோ மோட்டச் சைக்கிளோ போற அளவில ஒழுங்கைகள் இருக்கும். இதுகள குச்சொழுங்கை எண்டும் சொல்லுவம். சில ஒழுங்கைகளுக்குள்ளால மாட்டுவண்டில், கார் கூடப் போய்வரலாம். அதுகள தனிய ஒழுங்கை எண்டு சொல்லுவம்.
அனேகமா ரெண்டு பக்கமும் வேலிஅடைக்கப்பட்டிருக்கும். அப்பிடி வேலியடைக்கப்பட்டிருக்கிற இடங்களில ஒழுங்கை எந்தநேரம் இணலுக்குள்ளதான் (நிழல் எண்டதின்ர பேச்சு வடிவம் தான் இணல்) இருக்கும். யாழ்ப்பாணத்தில அனேகமா பூவரசுதான் வேலிக்கதியாலா நிக்கும். அதுக்கடுத்தபடியா முள்முருக்கு அல்லது கிளுவை நிக்கும். எங்கயாவது அருந்தலா வாதனாராணி அல்லது சீமைக்கிளுவை (இதை யப்பான் மரமெண்டும் சொல்லிறானங்கள்) நிக்கும். உந்த ஒழுங்கை பிரிப்புகளில பெரிய காணிச்சண்டைகள் கூட வந்திருக்கு. சகோதரங்களுக்குள்ள வெட்டுக்குத்துகூட நடந்திருக்கு.
எங்கட ஊரில ஒழுங்கை கூட்டிற ஆக்களைக் காணலாம்.
தங்கட தங்கட வளவுகளுக்கு முன்னால இருக்கிற ஒழுங்கையின்ர பகுதிகளில கொட்டுப்பட்ட பூவரசம் அல்லது கிளுவைச் சருகுகளைக் கூட்டியள்ளுவினம். எனக்கு அப்பவே உந்தப் "பெண்டுகளின்ர" ஒழுங்கை கூட்டல் ஏனெண்டு விளங்கிறேல. கோடையில ஒழுங்கைக்குத் தண்ணிகூடத் தெளிச்சு வைப்பினம். வேலயில்லாத பிரச்சின எண்டு நான் நினைக்கிறது. பொழுது போக வேணுமெண்டு ஏதாவது செய்யிறதாத்தான் நான் நினைக்கிறது.
இப்ப யோசிச்சுப் பாக்கேக்க ஒருவிதத்தில அது நல்லதெண்டுதான் நினைக்கிறன். சும்மா வேலவெட்டியில்லாம சமைக்கிறதும் தோய்க்கிறதும் முடிஞ்சிட்டா பிள்ளையள் பள்ளிக்கூடத்தால வரும்வரைக்கும் அக்கம்பக்கத்தில சேந்து பூராயம் கதைக்கிறதெண்டுதான் கிராமங்களில பொழுதுபோறது. அப்ப எங்க உந்த தொலைக்காட்சிப்பெட்டியளும் மின்சாரமும். (அதுக்காக நானேதோ அம்பது வருசத்துக்கு முந்தின கதையக் கதைக்கிறன் எண்டு நினையாதையுங்கோ. வெறும் பதினஞ்சு வருசத்தயக் கதை) சிலவேளை அதிலயே சண்டைகள் வரும். சும்மாசும்மா கதையளக் கட்டுறதுக்கெல்லாம் எங்கட ஆக்களக் கேக்கவேணுமே? அந்தவிதத்தில இப்பிடியேதாவது செய்து வீண்வம்புகள விலைக்கு வாங்காமல் இருக்கிறது நல்லந்தானே? இண்டைக்கு எந்தநேரமும் ரி.விப் பெடடிக்கு முன்னால இருக்கிறதக்கூட உந்த விசயத்துக்காக நான் வரவேற்கிறன்.
ஆம்பிளையள் எங்கயாவது மதவடியில குந்தியிருப்பினம். இல்லாட்டி ஏதாவதொரு மரத்துக்குக்கீழ கடுதாசியோ தாயமோ விளையாடுவினம். கிராமப் பக்கங்களில அரசாங்க வேல செய்யாத ஆக்கள் வேலவெட்டியில்லாமல் ஓய்வாயிருக்கிற சந்தர்ப்பம் அதிகம்தானே. அனேகமா வெறியில்லாட்டி ஆம்பிளைகளுக்குள்ள சண்டைவாறது குறைவுதான்.
சரி எங்க விட்டன்?
ஆ.. ஒழுங்கை பற்றிக் கதைக்க வந்து என்னவோ கதைச்சுப்போட்டன். ஒழுங்கைகள் எண்டா கட்டாயம் தார் போடாமல் சாதாரணமாத்தான் இருக்கோணும். (அந்த நேரத்தில பெரிய பாதைகளே முந்தியொருக்கா தார் போட்டிருந்தது எண்ட அடையாளத்தோட மட்டுந்தான் இருந்திச்சு.) ஒழுங்கைகள் எப்பவும் நேர்ப்பாதையா இருக்கக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு போகவேணும். இதில ஒரு சிக்கல் இருக்கு. வேலிய உயத்தி அடைச்சிருந்தா முடக்குகளில எதிர்ப்பக்கம் வாறவங்களைத் தெரியாது. சைக்கிளில பெல் இருக்காதபடியா முடக்குகள் வரேக்க,
"பெல் இல்ல
பிரேக் இல்ல
அடிபட்டாக்
கேள்வியில்ல"
எண்டு ஒரு ராகத்தோட கத்திக்கொண்டுதான் திரும்புவம். எங்களுக்கு முதல் எதிர்ப்பக்கத்திலயிருந்து கத்தல் வந்தா நாங்கள் உடன வேலிக்கரைக்கு சைக்கிள விட்டிடோணும். சிலநேரங்களில அப்பிடிக் கத்துறதுக்கு வெக்கமாயிருந்தா, (ஆனேகமா எங்களோட படிக்கிற, அல்லது எங்களுக்குள்ள ஏதோவொண்ட உருவாக்கிற பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடிருக்கிற இடமாயிருக்கும்) அப்பிடியே சைக்கிளில எழும்பிநிண்டு வேலிக்குமேலால அந்த முடக்குப் பாதையப் பாத்திட்டுத் திரும்புவம்.
அதிலயும் சிக்கல் வந்திச்சு. இப்பிடித்தான் ஒரு முடக்கில நாங்கள் பள்ளிக்கூடத்தால வரேக்க எழும்பிப்பாத்திட்டுத் திரும்பிறனாங்கள். சைக்கிளில வரிசையாப் பவனிவாறநேரத்தில முன்னுக்குப்போறவன் மட்டும் அப்பிடி பாதையக் 'கிளியர்' பண்ணிப்போட்டுப் போனாச்சரிதானே? ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.
அந்த முடக்கில கத்துறதும் நாகரீகக் குறைவெண்டபடியா பேசாமல்தான் முடக்கால திரும்பினம். ஆனா ஒருநாள் எதிர்ப்க்கம் வந்த ஒரு சைக்கிளோட முன்னுக்குப்போனவன் மோதி, அடுத்தடுத்து மொத்தம் ஆறு சைக்கிளுகள் விழுந்தபிறகுதான் திருந்தினம். பிறகென்ன பழையபடி அந்த முடக்கில
'பெல் இல்ல..
பிறேக் இல்ல..."
உப்பிடி ஒழுங்கை பற்றிக் கனக்க கதைச்சுக் கொண்டே போகலாம். உங்களுக்குக் கேக்கிற பொறுமை வேணுமே?
அதால இதோட நிப்பாட்டுறன்.
'பூராயம்' எண்டு பேர் வச்சது தான் வச்சன். அந்தப்பேருக்கு ஏற்றமாதிரி ஒண்டும் எழுதேல எண்டமாதிரியொரு உணர்வு. பூராயம் ஒருத்தருக்கும் விளங்கேல எண்டஉடன நானும் பெரிசா அலட்டிக்கொள்ளேல. ஆனா காருண்யன் இந்தப் பூராயம் எண்ட பேரத் தனதாக்குறதுக்கு முயற்சி செய்து நான் முதலே அதைக் கையகப்படுத்திவிட்டதால மனமொடிஞ்சு 'விண்ணாணம்' எண்டு பேர வச்சத அறிஞ்சபிறகுதான் இந்தப்பேருக்கிருக்கிற 'மவுசு' தெரிஞ்சுது.
தமிழ்ப்பதிவுகள்
Labels: அலட்டல், அனுபவம், பதிவுகள்
Sunday, July 10, 2005
இரு நினைவு கூரல்கள்
நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
யார்யார் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நேற்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
Labels: அனுபவம், களவெற்றி, சமர், சமர் நினைவு, மக்கள் துயரம், வரலாறு
Sunday, June 12, 2005
சூகை தெரியுமா?
நாங்கள் வந்து ரெண்டு நாளில சின்ன பத்தையள வெட்டி ஒரு வெளியாக்கி அதில கூடாரங்கள் போட்டு இருந்தம். என்ன இருந்தாலும் அதுவும் ஒரு இனிமையான வாழ்க்கைதான். அனுபவித்தவைக்குப் புரியும். அப்ப எங்களோட அந்த இடத்து ஆக்கள் ரெண்டுமூண்டுபேரும் தங்கிறவை. ஒருநாள் இரவு. ஒரு குறிப்பிட்ட இடத்தில சனம் துள்ளிக்குதிக்குது. ரெண்டு மூண்டு சின்னனுகளும் அழுகிதுகள். என்னெண்டா எறும்புக் கடிச்சுப்போட்டுதாம்.
பாத்தா நிறைய கட்டெறும்புகள் குவியலா நிக்குதுகள்.
"உங்க பார், எவ்வளவு கட்டெறும்புகள்!" எண்டேக்கதான் சொன்னாங்கள் அது கட்டெறும்பில்லையாம், சூகையாம் எண்டு. நாங்கள் கட்டெறும்பு எண்டுறத இவங்கள் சூகை எண்டுறாங்கள் எண்டிட்டு படுத்தாச்சு.
அடுத்த நாள் பாத்தா அந்த இடத்தவிட்டு அதுகள் போகேல்ல. எக்கச்சக்கமா நிக்குதுகள். அதுகளக் கலைக்கிற முயற்சியல நாங்கள் நாலைஞ்சு பொடிப்பிள்ளைகள் இறங்கினம். அப்பதான் தெரிஞ்சுது அதுகளின்ர பலம். முதல் கடியோடயே விளங்கீட்டுது உதுகள் கட்டெறும்பு வகைக்குள்ள வராதெண்டு. என்ன செய்ய? உதுகள் அந்த வகைக்குள்ள வராதுகள் எண்டு கணிக்கிறதுக்குள்ள உயிர் போயிட்டுது. அப்பிடிக் கடி. ஒரு பத்துச் செக்கன்கூட இல்ல, போர்க்களத்திலயிருந்து வெளியில வாறதுக்கு. அதுக்குள்ள முப்பது முப்பந்தைஞ்சு எறும்பு காலில ஏறீட்டுது. அண்டைக்கே ஊர் ஆக்களப்பிடிச்சு சூகையைப் பற்றி அறிஞ்சன்.
யாழ்ப்பாணத்தில இப்பிடியொரு எறும்பைப் பாத்ததில்ல. பாக்க கட்டெறும்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா செயற்பாடுகளில மாற்றம். சூகையெண்ட சொல்லையும் நாங்கள் அங்க கேள்விப்படேல. சரி, இது வன்னியில இருக்கிற ஒரு வகையெண்டு நினைச்சிருந்தன். முந்தநாள் இயக்குநர் சேரனின்ர நிகழ்ச்சியொண்டைத் தொலைக்காட்சியில காணுற சந்தர்ப்பம் கிடைச்சுது. அதுல பாத்தா, அட எங்கட சூகை!
அவரும் சூகை எண்டுதான் சொல்லுறார். அப்ப தமிழ்நாட்டிலயும் இந்தச் சூகை இருக்கு. ஆனா இதே மோசமான சூகை தானோ எண்டது சந்தேகம்.
இனி சூகை பற்றி சில அனுபவங்கள். இத நாங்கள் 'கொமாண்டோஸ்' எண்டும் சொல்லுறனாங்கள். ஏனெண்டா அவ்வளவு வேகம். சூகை வரிசையாப் போய்கொண்டிருக்கிற இடத்தால வேகமா நீங்கள் நடந்து போனாக்கூட எப்பிடியும் உங்கட காலில ஏறீடும். கண்ணிமைக்கும் நேரத்தில ஏறிக்கடிச்சிடும். அந்தக்கடியை அனுபவிச்ச ஆக்களுக்குத்தான் அதின்ர வலி தெரியும். எங்கட நெருப்பெறும்பு, கட்டெறும்பெல்லாம் பிச்ச வாங்கோணும். அதவிட அது ஒரு இரைச்சல் போடும் பாருங்கோ. இரவில நல்ல நிசப்தமா இருந்தா அந்த இரைச்சல் கேட்கலாம். அவயள் பவனி வந்தா அந்த இரைச்சல் கட்டாயம் வரும். இரவில கொட்டிலுகளுக்குள்ள எல்லாம் அதுகள் வந்திடும். முதல் கொஞ்சநாள் கொட்டிலச் சுத்தி நெருப்புத்தணல் கொட்டி விடுறனாங்கள். பிறகு பழகிவிடும்.
இரவில வெளிச்சமில்லாமல் நடந்தா, முன்னுக்குப்போறவர் வேணுமெண்டே ஒரு இடத்தில நாலைஞ்சுதரம் கால உதைஞ்சுட்டுப்போவார். (உண்மையில சூகை இருந்திருக்காது). பின்னால வாற ஆக்களும் அந்த இடத்தில வேகமா துள்ளிப் போவினம். பிறகு அங்கால போய் சிரிக்கிறது.
எங்கயாவது பதுங்குகுழிகள் வெட்டினா கட்டாயம் சூகையின்ர தொல்லையிருக்கும். நிறைய நேரத்தை அது மினக்கெடுத்தும்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்ர ஒரு வருட வெற்றிநாளுக்கு நாங்கள் சந்திச்ச களப்போராளியள் சிலரோட கதைச்சம்.
"இஞ்ச உங்களுக்கு ஆகக் கஸ்டமாயிருக்கிற விசயம் எது?"
எண்டு அவயளக் கேட்டம். (எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், குடிதண்ணியில இருந்து எதிரியின்ர சினைப்பர் தாக்குதல்கள், சாப்பாட்டுப்பிரச்சினை எண்டு நிறைய சிக்கல்கள்.) ஆனா அவயள் சொல்லீச்சினம்:
"உவன் ஆமியக்கூட சமாளிச்சிடலாம். ஆனா உந்த சூகையத்தான் சமாளிக்க எலாது."
இப்பிடி சூகையின்ர நினைவுகள் கனக்க இருக்கு. சேரனின்ர நிகழ்ச்சியைப் பாத்த உடன, தமிழகத்திலயும் இந்த சூகை இருக்கெண்ட உடன இந்தப் பதிவ எழுத வேணும்போல இருந்திச்சு. அவ்வளவு தான்.
Labels: அலட்டல், அனுபவம், கலந்துரையாடல், பதிவர் வட்டம், வன்னி
Friday, March 11, 2005
வன்னியின் முதுகெலும்பு...வன்னியின் முகம்-3.
வணக்கம்!
முந்தைய பதிவொன்றில் இரணைமடுக்குளம் பற்றிச் சிறிது எழுதியிருந்தேன். அதுபற்றி மேலும் எழுதுவதாகவும் தெரிவித்திருந்தேன். சென்ற பதிவில் 'தி.தவபாலன்' அனுப்பிய இரணைமடுக்குளம் பற்றிய வரலாற்று ஆக்கத்தை வெளியிட்டிருந்தேன். சர்ச்சைக்குரிய விடயமொன்றையும் அதில் இணைத்திருந்தேன். அதாவது “125000 ஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.” என்ற தகவலே அது. அதுபற்றிக்கூட எவருமே கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. நிறையப் பேர் வாசிக்கவில்லையென்றே நினைக்கிறேன். எனக்கும்கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதனால்தான் அதனை அப்பதிவில் முதலில் சேர்க்கவில்லை. பின்னர்தான் அதனைச் சேர்த்தேன். இதுபற்றி விசயமறிந்தவர்கள் சொன்னால் நன்று. குறிப்பாகக் கண்ணன் போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
சரி, இக்குளத்தின் அணைக்கட்டு மட்டுந்தான் ஒரு நேரத்தில் வன்னியின் இரு பகுதிகளை இணைக்கும் ஒரே பாதையாக இருந்தது; மக்களுக்கான ஒரே பயணப்பாதையாகவும் இது இருந்தது என்றும் அதைப்பற்றிப் பின்னர் எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதன்படி இப்போது எழுதுகிறேன்.
வன்னியென்று இன்று சொல்லப்படும் பிரதேசம் யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையில் உள்ள பிரதேசம். கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் தொடங்கி வவுனியா ஊடாக மன்னார் வரை ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டிலிருந்து தெற்குப் பக்கமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். ஏறத்தாள இன்றிருக்கும் நிலைபோலவே 1997 இற்கு முன்பும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது. பக்கத்தில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசமாகவே இருந்தது (1998 வரை).
இந்த நிலையில் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலுள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குமிடையில் தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் நோக்கோடு கண்டிவீதியைக் கைப்பற்றவென்று நடத்தப்பட்ட படைநடவடிக்கைதான் ஜெயசிக்குறு. (அந்நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு தரைவழித்தொடர்பேதும் தென்னிலங்கைக்கு இருக்கவில்லை. கடல்வழி மட்டும்தான். அதுகூட கடற்புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.) கண்டிவீதி வன்னியை ஏறக்குறைய நடுப்பகுதியால் ஊடறுத்துச் செல்வதால், இப்பாதை கைப்பற்றப்பட்டால் வன்னி மேற்கு கிழக்கு என இரண்டு துண்டாகும் வாய்ப்பு உள்ளது.
சண்டை தொடங்கி விட்டது. மெதுவாக முன்னேறிய இராணுவம் புளியங்குளத்தில் கடுமையான சவாலை எதிர்கொண்டது. என்ன விலைகொடுத்தும் புளியங்குளத்தை இழப்பதில்லை எனப் புலிகள் திடமாகவே நின்றனர். இச்சண்டை ரஸ்யாவின் ஸ்டாலின்கிராட் போன்றது என அப்போது சிலரால் வர்ணிக்கப்பட்டது. மாதக்கணக்கில் முயன்றும் அரச படை கடும் தோல்வியைச் சந்தித்தது. கவசப்படை பாரியளவில் பயன்படுத்தப்பட்டது போலவே பாரியளவில் இழப்பையும் சந்தித்தது. நிறைய டாங்கிகள் நொருக்கப்பட்டன. நேரடியாக முன்னேறாமல் காடுகளுக்குள்ளால் இரகசிய நகர்வாக புளியங்குளத்தைச் சுற்றி வந்து கனகராயன்குளப்பகுதியில் கண்டிவீதியைக் கைப்பற்றினர் இராணுவத்தினர்.
இந்நிலையில் புளியங்குளத்தில் நின்ற அவ்வளவு போராளிகளும் முழுமையான முற்றுகைக்குள். உணவுகூட வினியோகமற்ற நிலை. ஆனால் இரண்டு நாட்கள் கூட இந்நிலை நீடிக்கவிடாமல். தம்மீதான முற்றுகையைத் தகர்த்ததோடல்லாமல் இராணுவத்தை அவர்களது பழைய நிலைகளுக்கே துரத்திவிட்டனர்.

வரைபடத்தில் பார்த்தீர்களானால் மாங்குளம் சந்திக்கும் கிளிநொச்சிச் சந்திக்குமிடையில் வன்னியின் கிழக்குப்பகுதிக்குப் பாதையெதுவும் பிரியவில்லை. அதாவது கண்டி வீதியிலிருந்து முல்லைத்தீவு சார்ந்த கிழக்குப் பகுதிக்கு பாதையெதுவுமில்லை. அத்தோடு மாங்குளத்திலிருந்து இரணைமடுக்குளம் வரை அடரந்த காடுகளைக்கொண்ட பகுதி. இந்நிலையில் ஒரேயொரு பாதை மட்டுமே வன்னியின் இரு பகுதிகளையும் இணைப்பதற்கு இருந்தது. அதுதான் இரணைமடுக்குளப் பாதை. (இது வரைபடத்தில் வராது. குளத்தின் அணைக்கட்டுத்தான் அந்தப் பாதை.)
கிளிநொச்சி இராணுவத்துக்கு மிக அண்மையாகவே இப்பாதை செல்கிறது. அதுவும் உயரமான அக்குளக்கட்டில் ஏறிநின்றால் ஆபத்தான இடமுங்கூட. ஆனால் இதைவிட்டால் வேறு பாதை எம்மக்களுக்கு இல்லை. வாகனப்போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தான பாதையாகவே இது இருந்தது. குளக்கட்டின் இரு பக்கமும் எந்தவித தடுப்புக்களுமில்லை. ஏறக்குறைய இரண்டு கி.மீ. நீளமுள்ள இவ் அணைக்கட்டில் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே. செல்ல முடியும். குளக்கட்டில் வாகனத்தை ஏற்றும்போது பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டுத்தான் தனிவாகனமாக மேலே ஏற்ற வேண்டும். பின் இறக்கும் போதும் அவ்வாறே பயணிகள் இல்லாமல் வெறும் வாகனத்தை இறக்க வேண்டும். இந்தக் குளக்கட்டில் சில தடவைகள் பயணிகள் பேருந்து உட்பட சில வாகனங்கள் உருண்டு விழுந்துள்ளன. பலர்
காயமடைந்துள்ளனர். இரண்டொருவர் இறந்துமுள்ளனர். மிக ஆபத்தான இப்பாதையை விட்டால் வேறு மார்க்கமில்லாததால் மக்களும் இதனூடாகவே பயணத்தை மேற்கொண்டனர்.
மாங்குளம் வரை இராணுவம் வந்துவிட்ட சந்தர்ப்பத்தில் வன்னி நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிந்தே விட்டது. “றோட்டுக்கு அங்கால, றோட்டுக்கு
இஞ்சால” என்று இரண்டு பிரிவாகவே மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டதுமல்லாமல் அந்தச் சொற்களாலேயே இடங்களை அடையாளப் படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். அனைத்துச் சேவைகளும் இரண்டு பிரிவாக பிரிந்தே இயங்கத்தொடங்கின.

இதற்கிடையில் இருக்கும் இந்த ஒரே பாதையையும் மூடிவிடுவதென்ற நோக்கோடு கிளிநொச்சியிலிருந்து இராணும் பல முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டது. எப்படியும் பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது. எல்லா முயற்சிகளும் மூர்க்கமான முறையில் முறியடிக்கப் பட்டாலும் இராணுவம் விடுவதாயில்லை.
இதற்கிடையில் புலிகள் முந்திக்கொண்டு கிளிநொச்சி நகரையே இராணுவத்திடமிருந்து கைப்பற்றிவிட்டனர். அதன்பின் இப்பாதைக்கு இருந்த ஆபத்து நீங்கிவிட்டது. பின் ஜெயசிக்குறுவில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட அனைத்துப்பகுதிகளும் புலிகளால் மீட்கப்பட்டபின் வன்னிக்கிருந்த ஆபத்து நீங்கிவிட்டது.
ஒரு நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு எப்படி கிழாலி நீரேரி இருந்ததோ, அதேபோல் சிலகாலம் இரணைமடுக்குள அணைக்கட்டு இருந்தது. ஆம், அதுமட்டுமே இருந்தது. அந்தவகையில் எம்வாழ்வின், போராட்டத்தின் அசைக்கமுடியாத ஒரு பாத்திரம்; சாட்சியம் தான் இந்த இரணைமடுக்குள அணைக்கட்டு.
Sunday, March 06, 2005
கொதி கிழப்பல்…
வணக்கம்!
அவர் கூறுவது இலங்கை வானொலியின் தேசிய சேவை பற்றித்தான் என்றாலும் அதன் மற்றைய கிளை ஒலிபரப்புக்கள் கூட சினமூட்டுபவையாகவே இருக்கிறன. அவர் தன்பத்தியில், குறிப்பிட்ட ஒரு கட்சியையும் சிலரையும் தாக்குவதைப்பற்றி எனக்குக் கருத்தில்லை.
அவர் வானொலி ஒலிபரப்புப் பற்றி கேட்கும் இரண்டு கேள்விகள் என்னை ஈர்த்தன.
பௌத்த மத சிந்தனை நாள்தவறாமல் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பவேண்டுமானால் ஏன் சிங்கள, ஆங்கில ஒலிபரப்புகளிலும் நாட்டின் ஒவ்வொரு மதத்தினது நற்சிந்தனைகளும் ஒலிபரப்பக் கூடாது?
- ஒவ்வொரு நாளும் இரவில் நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதத்தின் மெட்டு ஒலிபரப்பாகு முன்பு சமாதானத்தை வேண்டுகின்ற ஒரு பாடல் தவறாமல் ஒலிபரப்பாகிறது. சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளில் ஏன் சமாதானம், சாந்தி, சகோதரத்துவத்தை வற்புறுத்துகிற பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை?
எனக்கும் மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலமாக உண்டு. குறிப்பாக சமாதானப் பாடல் பற்றியது. ஏதோ தமிழருக்கு மட்டுந்தான் சமாதானத்தைப் போதிக்க வேண்டும்; அவர்கள் தான் சமாதானத்தின் அருமை தெரியாமல் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் அரசியற் கட்சிகளும் சில ஊடகங்களும் பொது நிறுவனங்களும் செயற்படுகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதும் தான் தாமதம், சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரைகள், ஊர்வலங்கள் என்று அமர்க்களப்பட்டது. எங்கு தெரியுமா? எல்லாம் வடபகுதி நோக்கி, குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி. தென்னிலங்கையிலிருந்து சமாதான ஊர்வலம் என்ற பேரில் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிள் விட்டினம். (இத வண்டில் விடுகிறது எண்டும் சொல்லலாம்). புத்த பிக்குமார் யாத்திரை போச்சினம். இவற்றில் மறைமுகப் பரப்புரை என்னவென்றால், தமிழரைச் சமாதான வழிக்குக் கொண்டு வருதல் என்ற பெயரில் அமைந்திருந்தன.
யாருக்கு யார் சமாதானம் பற்றிப் போதிப்பது? ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என இருந்தவை பின் அந்தச் சங்கம் இந்தச் சங்கம் என்ற பெயர்களில் யாழ்ப்பாணத்துக்கு சமாதான யாத்திரை வெளிக்கிட மனிசருக்கு கொதி வந்தது தான் மிச்சம். இவ்வளவத்துக்கும் முதல் சமாதான யாத்திரை துவங்கேக்க சீமெந்துக்கு முற்றுமுழுதா தடை எடுபடேல. உண்மையா சனத்துக்கு சரியான எரிச்சல்தான். வன்னிக்குள்ளால அவயள் போகேக்க மண்ட கொதிக்கும். நாங்கள் பேயன்விசரணெண்ட மாதிரி எங்களுக்கு நோட்டீசுகளும் தந்துகொண்டு பிரச்சாரம் செய்துகொண்டு போவினம். பிறகு அதுகள படம்பிடிச்சு எல்லா செய்தித் தாபனங்களும் போடும். இதத்தான் பேய்ப்பட்டம் கட்டிறதெண்டு சொல்லுறது. அவைக்கு தமிழீழ காவல்துறை பாதுகாப்புக் குடுத்துக்கொண்டு போயிருக்காட்டி ஊர்வலங்கள் யாழ்ப்பாணம் போய்ச்சேந்திருக்குமெண்டது ஐமிச்சம்தான்.
பிறகு யாத்திரைகள் ஓஞ்சு போச்செண்டாலும், இப்பவும் தமிழருக்கு சமாதானத்தை வலியுறுத்தல் அல்லது போதித்தல் என்ற தொனியில்தான் செயற்பாடுகள் இருக்கின்றன.
Labels: அனுபவம், ஈழ அரசியல்
Saturday, March 05, 2005
இரணைமடுக்குளம்... வன்னியின் முகம் ---2
வன்னிக்கு வந்தபிறகு நான் பாத்த முதல்குளம் இரணைமடுக்குளம் தான். ஒருநாள் விடியவெள்ளன போய் அணைக்கட்டில ஏறிநிண்டு பாத்தன். உதென்ன கடலோ எண்டு ஆச்சரியப்பட்டுப் போனன். பனிப்புகாரா இருந்ததால தொங்கல் எல்லை தெரியேல. கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தண்ணிதான். இடக்கிட பரவலாப் பட்ட மரங்கள். எவ்வளவு காலமா இதுகள் இந்தத் தண்ணிக்குள்ள நிக்குதுகளோ தெரியேல. குளம் உருவாக முதல்கொண்டு நிக்கத்தான் வேணும்.
நான் குளமெண்டா இவ்வளவு பெரிசா இருக்குமெண்டு ஒருக்காலும் நினைக்கேல. ‘வடபிராந்தியத்தில் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் தான்’ எண்டு பொதுஅறிவுச் சோதினைக்குப் படிச்சு வச்சிருந்தனான். இடைக்கிடை பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின்ர கண்காட்சியள் கருத்தரங்குகளிலயும் இதப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தனான். அவ்வளவுதான். யாழ்ப்பாணத்தின்ர ஆரியகுளத்தயும் அதப்போல சிலதுகளையும் தான் குளமெண்டு தெரிஞ்சு வச்சிருந்த எங்களுக்குக் குளமெண்டா அப்பிடியொண்டு தான் ஞாபகம் வரும். ஆனா வன்னியில அப்பிடியான நீர்த் தேக்கங்களுக்கு ‘மோட்டை’ எண்டு பேர் வச்சிருக்கினம்.
இந்தக் 'குள பிரமிப்பு' எனக்கு மட்டமில்ல, கனபேருக்கு நடந்திருக்கு. அதே மாதிரி முத்தையன்கட்டுக்குளம், கட்டுக்கரைக்குளங்களும் நல்ல விசாலமானதுதான். குளத்துத்தண்ணியில விவசாயம் செய்யிறதெண்டு புத்தகங்களில படிச்சிருந்ததோட சரி. ஆனா அத நேர பாக்கேக்க ஆச்சிரியமாத்தான் இருந்திச்சு. அப்பிடி குளத்திலயிருந்து வயலுக்குத் திறந்துவிடுகிற தண்ணி தான் சனத்துக்குக் குளிக்கிற இடமெண்டது முதலில அருவருப்பாவும் சங்கடமாயும் இருந்திச்சு. பிறகு அதுவும் பழகீற்றுது.
குளங்கள் வான் பாயேக்கயும் மேலதிகமா இருக்கிற தண்ணியத் திறந்து விடேக்கயும் போய் விடுப்புப் பாக்கிற சுகமே தனி. அதுவும் இரணமடுக்குளம் பாக்கிறதுக்கு அந்தமாதிரி. அப்பிடியான நாக்களில ஞாமான சனம் வந்து பாத்திட்டுப்போகும். படங்களும் எடுக்கிறனாங்கள். தண்ணி திறந்து விடேக்க மீனடிக்கிறதுக்கெண்டே ஒரு கூட்டம் அலையும். விடலயளோட நாங்களும் சேந்து அடிச்சிருக்கிறம்.
அஞ்சு மாசத்துக்கு முதல் நண்பனொருவன் சொன்னான் “டேய் இரணமடுக்குளமெல்லே வத்திப் போச்சு. நடுவில மட்டும் மோட்ட மாதிரி சொட்டுத்தண்ணி நிக்கிது”. எனக்கு ஆச்சிரியம். இரணமடுக்குளம் கூட வத்துமோ? அதென்னெண்டு சாத்தியம்? அவனிட்ட வடிவா விசாரிச்சதில, குளம் திருத்தவெண்டு வருசத்துவக்கத்திலயே தண்ணியெல்லாத்தையும் திறந்து விட்டாச்சு. அதுக்குப் பிறகு மழயுமில்ல. இப்ப முழுத்தண்ணியும் வத்திப்போச்சு. எண்ட தகவலுகள் கிடச்சுது.
“அது நல்லந்தானேடா, குளத்த திருத்தினா இன்னும் அஞ்சாறு அடித்தண்ணி சேத்து வக்கலாமில்லே” எண்டு சொன்னன்.
“திருத்தியிருந்தாத் தானே சந்தோசப்படுகிறதுக்கு. அங்க ஒரு வேலயும் நடக்கேல.” எண்டான்.
என்ன செய்யிறது? எல்லாம் எங்கட காலம். செய்தியளிலயும் இந்த வருச சிறுபோகம் செய்யேலாதெண்டு சொன்னாங்கள். எண்டாலும் குளம் முழுக்க வத்தியிருக்குமெண்டு என்னால நம்பமுடியேல. போய்ப் பாக்கவும் நேரமில்ல. ஆனா அவன் ரெண்டு போட்டோ அனுப்பினான். பாத்தா அப்பிடித்தான் இருக்கு. பச்சயான வெளியாக்கிடக்கு; அந்தப் பட்டுப்போன மரங்களெல்லாம் அப்பிடியே நிக்குது; நிறைய ஆடுமாடுகளும் மேஞ்சுகொண்டு நிக்குதுகள்; நடுவிலமட்டும் கொஞ்சத் தண்ணி நிக்கிது. குளத்தின்ர பரப்பளவில அது ஒரு துளிமாதிரித்தான். இவ்வளவு காலமும் தனக்குள்ள என்ன இருக்கிதெண்டு வெளியில தெரியாமல் பொத்திப் பொத்தி வச்சுக்கொண்டிருந்த குளம், பூடகமான குளம் எல்லாத்தையும் திறந்து காட்டீட்டிது. ஆனாப் பாருங்கோ அதப்பாக்கிற பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கேல. (சில காட்சிகள் சிலருக்கு ரசனை, சிலருக்கு வேதனை. அப்படித்தான் இக்குளத்தின் நிர்வாணமும். குறிப்பாக விவசாயிக்கு நரக வேதனை).
இந்தக்குளத்தில எனக்கு தீராத பாசமொண்டு இருக்கு. இரணைமடுக்குளம் எங்கட சனத்தின்ர வாழ்க்கையில பிரிக்க முடியாத குளம். ஒருநேரத்தில எங்கட சனத்த இணைச்சதே இந்தக்குளம் மட்டுந்தான். அது ஒண்டுதான் வன்னியின்ர ரெண்டு பகுதியயும் இணைச்சிருந்த ஒரே பாதை. இதப்பற்றிப் பிறகொருக்கா எழுதிறன்.
Friday, March 04, 2005
கூப்பிடு தூரம்… வன்னியின் முகம் ---1
உங்களெல்லாருக்கும் 'கூப்பிடு தூரமெண்டா' என்னெண்டு தெரிஞ்சிருக்கும். எனக்கு அதின்ர அர்த்தம் விளங்கின கதயத்தான் இப்ப நான் சொல்லப் போறன்.
யாழ்ப்பாணத்திலயிருந்து இடம்பெயர்ந்து வன்னி வந்தப்பிறகு ஓரளவு வாழ்க்கை நிலைக்க வெளிக்கிட்ட சமயம். (இதுக்கிடையில கிளிநொச்சி இடப்பெயர்வும் நடந்து முடிஞ்சிட்டுது) இந்த நேரத்திலதான் ஜெயசிக்குறு துவங்கிச்சு. (இது வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதை சமைப்பது எனும் நோக்கோடு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை). துவங்கினதெண்டா சும்மாயில்ல, பெரிய ஆர்ப்பாட்டமா, இதுதான் இறுதி யுத்தம் எண்ட அளவில துவங்கீச்சினம். ஜெயசிக்குறு எண்டா ‘வெற்றி நிச்சயம்’ எண்டு கருத்தாம். சனத்துக்கும் ஒண்டு விளங்கீற்றுது. இது சாதாரண சண்டையா இருக்காது; ரெண்டு தரப்புக்கும் இது முக்கியமான பிரச்சின; முந்தி மாதிரி பெடியள் லேசில பின்வாங்க மாட்டாங்கள் எண்டு எல்லாருக்கும் தெரியும். அதுக்கேத்த மாதிரித்தான் பரப்புரையளும் நடந்தது.
இப்பிடியே எல்லாரும் ‘ஆவலோட’ எதிர்பாத்திருந்த அதுவும் துவங்கீட்டுது. மே.13.1997 இல தாண்டிக்குளத்தில சண்ட துவங்கீற்றுது. பெடியளும் பெரிய ஆர்ப்பாட்டமா ஆயத்தமாய் நிண்டீச்சினம். மட்டக்களப்பிலயிருந்து 1000 பேர் சண்டைக்கு வந்திருக்கினம் எண்ட கதையில எங்கட சனம் கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சுதுகள். (இதுகளப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா நிறையக் கதைக்கலாம். நான் இப்ப விசயத்துக்கு வாறன்) சண்டை கொஞ்சம் தாண்டிக்குளம், ஓமந்தை எண்ட அளவோட இழுபட்டுக்கொண்டிருக்கேக்க எங்களுக்கொரு ஆச வந்தீச்சுது. கண்டி வீதியப் பிடிச்சு சண்டை நடக்கப் போகுது. இனி நிறைய இடங்கள் தரைமட்டமாகப் போகுது. அதுக்கிடையில ஒருக்கா எல்லா இடத்தையும் பாத்திட்டு வந்திடுவம் எண்டு ஒரு ஆச. (வாழ்க்கையில் நானெடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இதை இன்றுவரை கருதுகிறேன். இல்லாவிட்டால் இக்கிராமங்களின் உண்மை வனப்பை நான் பார்க்காமலே விட்டிருப்பேன்.)
எடுத்த முடிவின்படி ரெண்டு மூண்டு பெடியளாச் சேந்து மாங்குளத்திலயிருந்து சைக்கிளில வெளிக்கிட்டாச்சு. வன்னியில பாக்கப்போனா இது தூரமேயில்ல. (யாழ்ப்பாணத்தில பத்து மைல் சைக்கிள் ஓடுறது எண்டாலே பெரிய பிரயாணமுங்கோ. ஆனா வன்னியில 70 மைல் எண்டாலும் சாதாரண தூரம் தான்.) சைக்கிளில வெளிக்கிட்ட எங்களுக்கு அதிஸ்டம் அடிச்சுது. புலிகளின் வழங்கற்பிரிவைச் சேர்ந்த வாகனமொண்டு புளியங்குளத்துக்குப் போச்சு. அதில என்ர நண்பனுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் எங்களக் கூப்பிட்டார். அதிலயே போய் பின்னேரம் அதிலயே திரும்பி வாற திட்டத்தோட வாகனத்தில ஏறியாச்சு.. அந்த வாகனத்தில புளியங்குளம் வரைக்கும் போயாச்சு. இடத்த சுத்திப்பாத்திட்டு பின்னேரம் போல திரும்ப அந்த இடத்துக்கு வந்து அதே வாகனத்தில ஏறினாச்சரி.
புளியங்குளச் சந்தி சனநடமாட்டமில்லாமல் கிடந்திது. சந்திய மையமா வச்சி பலமான காவலரண்கள அமைக்கிற வேலையளில புலியள் இருந்தீச்சினம். அந்த நேரத்தில புளியங்குளத்திலயிருந்து 6 கி.மீ வரைக்கும் ஆமி வந்திருந்தான். புளியங்குள அணைக்கட்ட (புளியங்குளம் என்று குளமொன்று உள்ளது. அதனாலேயே இப்பெயர் அவ்விடத்துக்கு வந்தது என்று நினைக்கிறேன்) பிரதானமா வச்சு பலமான காப்பரண் வேலையள பெண்போராளியள் செய்து கொண்டு இருந்தீச்சினம். நாங்கள் அப்பிடியே குளக்கட்டால நடந்து இடங்களப் பாத்துக்கொண்டு வந்தம். உண்மையிலேயே அருமையான இடங்கள். இந்த இடமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில படப்போற பாட்ட நினச்சுப் பாத்தன். (இது இந்தப்பயண உணர்வுகள் பற்றிய பதிவில்லாததால் அப்பால் தாவுகிறேன்)
மதியமளவில் குளக்கட்டால திரும்பி வந்து கொண்டிருக்கேக்க திடீரெண்டு எங்களுக்கு நல்லாப் பழகிப்போன கூவல் ஓசை. அப்பிடியே பாஞ்சு விழுந்து படுத்திட்டம். வேறென்ன ஆமியடிச்ச செல் (எறிகணை) தான். எங்களிலயிருந்து 250 மீற்றரில முதலாவது விழுந்து வெடிச்சுது. மற்றதுகள் கொஞ்சம் விலத்தி விழுந்துது. அடி நிண்ட உடன எழும்பி வெளிக்கிட்டம். முதல் செல் விழுந்த இடத்தில கொஞ்சம் பரபரப்பு தெரிஞ்சுது. அது நாங்கள் கடந்து வந்த இடம் தான். அதில கொஞ்சப் பெண்போராளியள் நிண்டு பங்கர் வெட்டிக்கொண்டு நிண்டவை. என்ன நடந்திருக்குமெண்டு ஊகிக்க முடிஞ்சுது. ஆனா அதுக்குள்ள போகேல. அப்பிடியே சந்திக்கு வந்திட்டம். பாத்தது காணும் வெளிக்கிட்டுப் போவம் எண்டு முடிவெடுத்து எங்கள ஏத்தியந்த வாகனம் நிக்கிற இடத்துக்குப் புறப்பட்டாச்சு. அங்க போனப்பிறகுதான் தெரிஞ்சுது, அந்த எறிகணையில ஒராள் வீரச்சாவு, ரெண்டு பேர் காயமெண்டு. அதோட தள்ளி விழுந்த செல்லில ரெண்டு சனமும் காயம். இவையெல்லாரையும் ஏத்திக்கொண்டு போனது நாங்கள் போக நிண்ட வாகனம் தான்.
சரி, இனியென்ன செய்யிறது? வேற ஏதாவது வழி பாக்க வேண்டியதுதான். ‘உதுவழிய நிண்டா பெடியளின்ர வாகனம் வரும். கேட்டு ஏறிப்போகலாம்’ எண்டான் நண்பன். 'ஏத்துவினம் தான். அவங்களுக்கு சிலவேள அவசரமாயிருக்கலாம், இல்லாட்டி இடமில்லாமல் மட்டுமட்டா இருக்கலாம். ஏன் உதில கிட்டவாத்தானே கனகராயன்குளம். அதுவரக்கும் நடந்து போயிட்டா அங்கால வாகனம் கிடைக்கும்' எண்டு நான் சொன்ன யோசனைக்கு மற்றவங்களும் சரியெண்டு சொன்னதால நடையக் கட்டினோம். சத்தியமாச் சொல்லிறன் எனக்கு இடம் வலம் ஒண்டும் தெரியாது. இந்த றோட்டால நேர போனா மாங்குளம் வரும் எண்டதுமட்டும்தான் தெரியும். வரேக்கயும் உள்ளயிருந்துகொண்டு பம்பலடிச்சுக்கொண்டு வந்ததால இடங்களும் தூரமும் தெரியேல. ஏதோ கெதியா வந்த மாதிரித்தான் கிடந்தது. அந்த துணிவிலயே நான்நடக்க, நான் சொன்ன துணிவில நண்பரக்ளும் நடந்தீச்சினம். சன நடமாட்டமெண்டு பெரிசா இல்ல. இடக்கிட ஆராவது தென்பட்டீச்சினம். கொஞ்ச தூரம் போனப்பிறகு அதால வந்த ஒரு ஐயாவிட்ட கேட்டம்
‘ஐயா! கனகராயன் குளத்துக்கு இன்னும் கனதூரம் போகோணுமே?
“இல்லத்தம்பி, உதுல கூப்பிடு தூரத்தில தான்”
தொடர்ந்து நடந்தம். அந்தக் கூப்பிடு தூரம் வரேல.அதால வந்த இன்னொருத்தரிட்ட கேட்டம்.
‘ஐயா! கனகராயன் குளத்துக்கு இன்னும் கனதூரம் போகோணுமே?
“இல்லத்தம்பி, உதுல கூப்பிடு தூரத்தில தான்”
ஏதோ சிக்கலிருக்கிறதா மனசுக்குப் பட்டீச்சு. எண்டாலும் நடந்தம். கொஞ்ச தூரத்தில ஒரு சந்தி தெரிஞ்சுது. அடடா கனகராயன் குளம் சந்தி வந்திட்டுது எண்டு சந்தோசப்பட்டாலும் கூட ஒரு சந்தேகம். என்ன சந்தி பெரிசா ஆள்நடமாட்டமில்லாமல் கிடக்குது? கிட்ட வந்தோடன விளங்கீற்றுது உது கனகராயன்குளச்சந்தி இல்லயெண்டு. பின்ன என்ன சந்தி? எண்டு யோசிக்கேக்கயே அதில வந்த ஒருத்தரிட்ட கேட்டுத் தெரிஞ்சு கொண்டாச்சு அதுதான் புதூர்ச்சந்தியெண்டு. (இந்த இடங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள் எங்கள் பிரதேச அறிவைப்பற்றி) என்ன பதில் கிடைக்குமென்று தெரிஞ்சிருந்தும் அவரிட்டயும் கேட்டம் கனகராயன்குளம் எவ்வளவு தூரமெண்டு. வழமையான பதில்தான்
“உதில கூப்பிடு தூரத்திலதான்”
இதுக்கிடையில சாமானுகள் ஏத்திக்கொண்டுவந்த லாண்ட் மாஸ்ரர் ஒண்டில எங்களோட வந்த ஒருத்தன் ஏறிப்போயிட்டான். ஒருத்துனுக்கு மேல அதில ஏறேலாது எண்டது தான் நாங்கள் தொடர்ந்து நடக்கிறதுக்கு காரணம். அதுக்குப்பிறகு ஒருத்தரிட்டயும் எவ்வளவு தூரமெண்டு கேக்கவேயில்ல. நடந்து வந்து ஒருமாதிரி கனகராயன்குளச்சந்திக்கு வந்திட்டம். பிறகு ஒரு வாகனத்தில ஏறி மாங்குளம் வந்தாச்சு.
அண்டையோட இந்தக் ‘கூப்பிடு தூரத்தை” பற்றி நான் வச்சிருந்த அளவீடுகளெல்லாம் அழிஞ்சு போச்சு. (வாயால கூப்பிட்டா கேட்கக் கூடிய தூரம் எண்டு நினச்சிருந்தது என்ர பிழ தானோ?) பிறகு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு, விசுவமடு எண்டு நான் திரிஞ்ச இடங்களிலயெல்லாம் நல்ல சுவாரசியமான முறையில இந்த ‘கூப்பிடு தூரத்த’ அனுபவிச்சிருக்கிறன். அதுவும் முத்தையன் கட்டு அனுபவம் சரியான மோசம். 4 மைல் தூரத்தக் கூட கூசாமல் கூப்பிடு தூமெண்டு சொல்லுவினம்.
இண்டைக்கும் வன்னியிலயிருந்த யாழ்ப்பாண ஆக்கள் ஆரக்கேட்டாலும் உந்தக் கூப்பிடு தூரப் பம்பல் சொல்லுவினம். ஏனெண்டா எல்லாரும் என்னப்போல இந்த விசயத்தில அடிபட்டிருப்பினம். ஆனா சமீபகாலமா இந்த அளிவட பாவிக்கிறது குறஞ்சு போச்சுது போல கிடக்கு. யாழ்பபாணத்தார் நக்கலடிச்சுத்தான் குறைஞ்சு போச்சோ தெரியேல. வன்னியிலயே இருந்த ஆக்களுக்கு அது பெரிசாத் தெரியாது. ஆனாப் பாருங்கோ அந்த ‘உக்குட்டி’ இடத்தில இருந்து வந்தாக்களுக்கு வன்னியின்ர விசாலம் பிடிபட நிறையக் காலமெடுத்திச்சு. அடுத்த முறை இன்னொரு அனுபவத்தச் சொல்லுறன்.
எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொன்ன மாதிரியும் தெரியுது. என்ன செய்யிறது? என்னத்த சொல்ல வெளிக்கிட்டாலும் போர் எண்ட ஒண்டு இல்லாம சொல்லேலாது. என்னால இயன்ற வரைக்கும் அதுகளத் தவிர்க்கவே பாக்கிறேன். உதாரணமாக இந்தப் பதிவில நான் புளியங்குளத்தில பாத்த இடங்களயும் ஆக்களையும் சம்பவங்களையும் சொல்லவேயில்ல.
குறிப்பு: புளியங்குளம் யாருக்கும் தெரியாத ஒரு இடமாக இருந்தது. பின் ஜெயசிக்குறு காலத்தில் ஒவ்வொரு நாளும் அனைத்துச் சர்வதேச செய்தி நிறுவனங்களிலும் இடம்பெற்ற ஓர் ஊர். (இவ்வூரைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரச வானொலிச் செய்திகள் அடிக்கொரு தரம் சொல்லிக் கொள்ளும். எப்படி போனவாரம் கைப்பற்றின இடத்தை அடுத்த வாரமும் கைப்பற்றலாம் என்று யோசிக்கக் கூட திராணியற்றவர்களாகவே மக்களை அது கருதியது.) அவ்வளவு தூரம் பிரபல்யமானது. புலிகளின் புரட்சிக்குளம் எனச் ‘செல்லப்’ பெயரிடப்பட்ட அந்த இடத்தை சிறிலங்கா இராணுவத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பலிகொடுத்தும் மாதக்கணக்கில் முயன்றும் (ஏறத்தாள 4 மாதம்) கைப்பற்ற முடியவில்லை. புளியங்குளச் சமரின் 100 ஆவது நாள் வெற்றிவிழா கூட புலிகளாலும் மக்களாலும் கொண்டாடப்பட்டது.
Subscribe to Posts [Atom]