Monday, January 01, 2007

கிளாலிப் படுகொலையும் அது சார்ந்தவையும்

இன்று கிளாலிப் படுகொலையொன்றின் நினைவுநாள்.
1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும்.

முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம்.
***
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் 'கேரதீவு - சங்குப்பிட்டி' என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.

முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.

தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.


[பெரிதாய்ப் பார்க்க படத்திற் சொடுக்கவும்.]

தொடக்கத்தில் பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.

இந்நிலையில் மக்கள்மீதான தாக்குதலை நடத்தும் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதலொன்றை அதே கிளாலிக் கடற்பரப்பில் வைத்து நடத்தினர்.

26.08.1993 அன்று போக்குவரத்திலீடுபட்ட மக்களைத் தாக்கவென நாகதேவன்துறையிலிருந்து வந்த கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரு கரும்புலிப் படகுகள் கடற்படையினரின் இரு படகுகள் மீது மோதி அவற்றைத் தகத்து மூழ்கடித்தன. இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

அன்றுடன் கிளாலிக் கடற்பரப்பில் நிலைமை மாறியது. மக்களுக்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். மக்களைத் தாக்கவென வந்த கடற்படையினருடன் சில சண்டைகள் நடைபெற்றன. இக்கடல்வழிப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் சாள்ஸ், மக்களுக்கான பாதுகாப்புச் சமரொன்றில் அதே கிளாலிக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்தார்.




1993 நவம்பரில் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது 'தவளைப் பாய்ச்சல்' என்ற பேரில் பெரும் நடவடிக்கையொன்றை புலிகள் மேற்கொண்டு அத்தளத்தை அழித்துப் பின்வாங்கினர்.

அதன்பின் சீராக, ஆபத்தின்றி கிளாலிக் கடற்பயணம் தொடர்ந்தது. யாழ்-வலிகாம இடப்பெயர்வைத் தொடர்நது பெருமளவான மக்கள் வன்னிக்கு வந்ததும் இதே பாதைவழியாற்றான். 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரிடம் வீழும்வரை கிளாலிக் கடற்பரப்பால் பயணங்கள் ஆபத்தின்றி நடந்தவண்ணமேயிருந்தன.


_______________________
படங்கள்: அருச்சுனா, Google

Labels: , ,


Comments:
வன்னி,
பதிவுக்கு நன்றி. நல்லதொரு வரலாற்றுப் பதிவு. இப்படியான கட்டுரைகளுடன் அப்பகுதி வரைபடங்களையும் இணைத்தால் இப் பகுதி பூகோள அமைப்பைத் தெரியாத என் போன்ற ஈழத்தவர்களுக்கும் தமிழக உறவுகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

தீபாவளி, புதுவருடம் போன்ற விசேட தினங்களில் கூட சிங்கள அரச பயங்கரவாதிகளால் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

எமது மக்களின் நலனுக்காக கிளாலிப் பாதையைத் திறக்க வைக்க உயிர் நீத்த மாவீரர்கள் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோருக்கு என் வீர வணக்கங்கள்.

"மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் மிதக்கும்"


நன்றி.
 
வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் வேண்டுகோட்படி படமொன்று இணைத்திருக்கிறேன். கோடொன்றும் போட்டிருக்கிறேன்.
 
வன்னி,
படத்தை இணைத்ததற்கு மிக்க நன்றி.
ஒரு சின்னக் கேள்வி. நீங்கள் கோடு போட்டுக் காட்டியிருக்கும் இடம் கிளாலி -- நல்லூர் என்று இருக்கிறது. நல்லூர் என்பது எமது முருகன் ஆலயம் அமைந்த நல்லூர் இல்லை. வேறு நல்லூர் என்று நினைக்கிறேன், சரியா? இன்று தான் யாழ் மாவட்டத்தில் இன்னுமொரு நல்லூர் இருக்குதெண்டதை அறிந்தேன்.
 
கிளாலிப் படுகொலையின் பதினான்காம் ஆண்டு நினைவுநாளான இன்று இன்னொரு படுகொலை நடந்தேறியுள்ளது.
மன்னாரில் இலுப்பைக் கடவையில் வான்படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு கிராமமே அழிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் பதினைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மன்னாரிலிருந்து உதிவிக்கு விரைந்த நோயாளர் காவுவண்டியை படையினர் மறித்துத் திருப்பியனுப்பியுள்ளனர்.


15 civilians killed, 30 wounded in aerial bombardment
 
வெற்றி,

அது யாழ்ப்பாண கந்தன் புகழ் நல்லூர் அன்று. வேறு நல்லூர். புநகரி நல்லூர்.

ஆனால் இது யாழ்ப்பாணத்துள் வராது. பூநகரி சிறிலங்கா அரசாங்க நடைமுறைப்படி மன்னார் மாவட்டத்துள் வருகிறது.

இரண்டு இடத்திலும் ஒரேபேரில் ஊர்கள் இருக்கின்றன.
 
வன்னியன்!

இப்போது தான் தொலைக்காட்சியில் மன்னார்த்தாக்குதல் பற்றிய செய்தி பார்த்தேன்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புலிகள்முகாம் தாக்கப்பட்டதாக மீண்டும் ஒரு பொய்யுரைத்தமை அப்பட்டமாகத் தெரியும் வகையில் சிறுவர்கள் பலியாகியுள்ள காட்சிப் படங்கள் வந்துள்ளன.

என்ன ஒரு ஏமாற்று?...
 
மலைநாடான்,
வருகைக்கு நன்றி.

சிறிலங்கா அரசு வழமைபோல 'புலிகளின் முகாம்தான் தாக்கப்பட்டதாக' அறிவித்துள்ளது.
சர்வதேசம் வழமைபோல இருதரப்பையும் பேச்சுக்கு வரச்சொல்லி அறிக்கை விடுகிறது.
அரசை சற்று உறுக்கிக் கண்டிக்கக்கூட சர்வதேசத்துக்கு வாய் கூசுகிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]