Friday, April 28, 2006

சிவராம் கொல்லப்பட்டு ஓராண்டு நினைவு.

இலங்கையிலிருந்து எழுதிய பத்திரிகையாளன் தராகி என்ற 'மாமனிதர்' சிவராம் கொழும்பில் வைத்துக்கொல்லப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவுற்றது.

அன்னாரின் எழுத்துப்பணியைக் கெளரவிக்கி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால், "மாமனிதர்' விருது வழங்கப்பட்டது.

அவரது ஓராண்டு நினைவில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அன்னாரின் குடும்பத்துக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சிவராம், தினக்குரல் பத்திரிகையுடன் நடந்த ஒரு விவாதத்தில் எழுதிய வரிகள் இவை.



" நாளை எம்மீது முழுமையான போராக பாயும் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமன்றி போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக்கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சரி இலங்கையின் இராணுவச் சமநிலையை
சிங்களதேசத்தின் பக்கம் சாய்ப்பதிலேயே பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது கண்கூடு.


நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கால்நூற்றாண்டுக்கு மேலாக சட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.
அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன்.
"

சொன்ன மாதிரியே தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோதும் ஒழிந்து ஓடிவிடால் தொடர்ந்து எழுதி வந்த சிவராம், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது போலவே கொல்லப்பட்டார்.
அத்தோடு உரிமைகள் பெறுதல் தொடர்பான அவரது கூற்றும் எவ்வளவு உண்மையென்று இன்றும் புலப்படுகிறது.
****************
சிவராம் கொலையுண்டபோது, அவரோடு சேர்ந்து பணியாற்றிய சகவலைப்பதிவரது பதிவுகளில் வந்த பதிவுகளிவை.
உலகறிந்த ஊடகவியலாளன் உறங்கிவிட்டான்
செய்தியாளன் செய்தியானான்

சிவராம் எழுதிய சில கட்டுரைகளுக்கான இணைப்புக்கள்.
இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின்
அரசியல் மயமாக்கல் தேவை

இலங்கையின் தேசிய செல்வத்தைபங்கிட மறுக்கும் சிங்கள தேசம்
ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்
சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்
விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள
தேசம்
தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்
இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்

அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை
சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்
சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது
காலத்தின் தேவை அரசியல் வேலை
கருணா ஓடியது எதற்காக?
நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி
கருணாவுக்கு ஒரு கடிதம்

ISGA bashing: Much ado about nothing
Tigers dominate decades of Tamil militancy
ISGA entails concepts and structures of final solution
Strategic positioning vital for military advantage
Can the renegade Karuna deliver his Big Magic?
Karuna affair: The military connection

மேலும் பல ஆங்கிலக்கட்டுரைகளுக்கு....

நன்றி: தமிழ்நேசன்.

Labels: , ,


Tuesday, April 25, 2006

தொடரும் தாக்குதல்கள்.

முப்பதாயிரம் வரையான மக்கள இடப்பெயர்வு.

திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது இரண்டாவது நாளாக அரசடையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்)மாலையும் இன்று (புதன்)காலையும் நடத்தப்பட்ட வான்தாக்குதலிலும், தொடர்ச்சியாக நடத்தப்பட் கடற்தாக்குல், மற்றும் எறிகணை வீச்சுக்களினாலும் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நிறையப்பேர் காயமடைந்துள்ளதாகவும், சம்பூர் மருத்துவமனையில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களினால் முப்பதாயிரம் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனரென்றும் அவர்களைப் பராமரிக்கும் பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டால், பதிலுக்குத் தற்காப்புத் தாக்குதல் நடத்தவேண்டிய நிலைவருமென புலிகள் அறிவித்துள்ளனர்.

Labels: ,


இலங்கையில் மீண்டும் போர்?

சிறிலங்கா முப்படைத் தாக்குதலில் 13 பேர் பலி.
(தரவேற்றப்பட்டது)

இன்று இலங்கை நிலைமை மோசமடைந்து விட்டது.
நண்பகல் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் (தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது) இராணுவத்தினரில் எண்மர் கொல்லப்பட்டனர், இராணுவத்தளபதி சரத் பொன்சேகா உட்பட 27 பேர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பின் மாலை திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தியுள்ளன. சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளன. அத்தோடு கடற்படையினரும் பீரங்கித்தாக்குதலை இப்பகுதிகள் மீது நடத்தியுள்ளனர்.
தரையிலிருந்தும் எறிகணைத்தாக்குதல்கள் விடுதலைப்புலிகளின் பகுதி மீது நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஒரு நிழல்யுத்தம் நடந்து வந்துகொண்டிருந்தது. டிசம்பர் அனர்த்தங்களின் பின் சற்று ஓய்ந்திருந்த பிரச்சினை கடந்த ஒரு மாதமாக மீண்டும் தொடங்கியது. படையினரின் மீதான கிளைமோர் தாக்குதல்களும், புலிகளின் மீதான கிளைமோர் தாக்குதல்களும் நடந்த அதேவேளை, படையினரால் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வந்தனர்.

கொழும்பில் நடந்த தாக்குதலும், விடுதலைப்புலிகளின் பகுதிமீது வான்தாக்குதலுட்பட நடத்தப்பட்ட முப்படைத் தாக்குதலும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
*************************

திருகோண மலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரண்டாவது நாளாகவும் புதன்கிழமை காலை வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்தாக்குதலும் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வீசிய குண்டொன்று முஸ்லீம் கிராமம் ஒன்றின் மீதும் வீழ்ந்துள்ளது.

***********************
இதேவேளை செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் வைத்து பிரபல தமிழ் மருத்துவர் அருளானந்தம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
**********************
தொடர்புள்ள செய்திகள்:
SRI LANKA VIOLENCE ESCALATES
12 bodies of civilians recovered from Muttur east
Moulavi killed, 8 wounded in Wednesday Kfir strike

Labels: ,


Sunday, April 23, 2006

போய் வருகிறேன்.

நட்சத்திரக் கிழமையில் என் வலைப்பதிவுக்கு வந்து போன அனைவருக்கும் நன்றி.

சரியான ஆயத்தப்படுத்தலில்லாமல் இந்தக் கிழமையைக் கழித்தேன். நான் மினக்கெட்ட விசயமென்றால் பாடல்களை ஒழுங்குபடுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 15 பதிவுகள் வரை இந்தக்கிழமையில் என்னால் இட முடிந்துள்ளது. அனைத்துமே ஏதோவொரு வகையில் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவையாகவே இருந்துள்ளன.
இந்தக் கிழையில் நினைவுகூரத்தக்க சம்பவங்கள் நிறைய.
என் கிழமையை, கவிஞர் நாவண்ணன் அவர்களின் இறப்புச் செய்தியுடனேயே தொடக்க வேண்டியதாகப் போய்விட்டது.

அன்னை பூபதி நினைவுநாள்.
நாட்டுப்பற்றாளர் நாள்.
மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய நாள்.
பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட நாள்.
யாழ் குடாநாடு மீது சூரியக்கதிர்-2 எனப்பெயரிட்டு தாக்குதல் தொடங்கப்பட்ட நாள்.
ஆனையிறவு வெற்றிநாள்.
என்பன இக்கிழமையில் வந்த முக்கிய நாட்கள்.

நாளை, (24.04) தீச்சுவாலை முறியடிப்பு நினைவுநாள்.

என் நட்சத்திரக் கிழமையில் இவற்றைப் பற்றி எழுத முடிந்தது ஒருபுறம் நிறைவைத் தருகிறது. ஆனால் முழுமையான பதிவுகளைத் தரமுடியாமைக்கு வருத்தமுமுண்டு.
இம்முறை சில பாடல்களைத் தரவேற்றி ஒலிக்க விட்டேன்.
அக்கோப்புக்கள் வேலை செய்கிறதா இல்லையா என்றுகூட என்னால் அறிய முடியவில்லை. சரியாக வேலை செய்திருக்கும், உங்களிற் பலர் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
******************************

சந்தர்ப்பமளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், இதற்குக் காரணமாயிருந்த அந்தப் பெயர் தெரியாதவருக்கும் நன்றி.

மீண்டும், இக்கிழமையில் 'ஆதரவளித்த' அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

Labels: , , ,


வரலாற்றுக் குரற் பதிவுகள்.

குரற் பதிவுகள் போடாமல் எனது நட்சத்திரக் கிழமை முழுமை பெறாது. போதாததுக்கு அன்பர்கள் சிலரும் குரற்பதிவு போடச் சொல்லி ஒரே அரியண்டம். அதால பதிவு போடுறதெண்டு முடிவெடுத்திட்டன். ஒண்டில்ல, ரெண்டில்ல ஏழு ஒலிக்கோப்புக்கள். எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள்.

குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)




***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)


***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)


***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.


**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு


**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.

**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.


*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.

இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.

சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.

இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.

Labels: , , , , , ,


Saturday, April 22, 2006

டப்பாங்கூத்துப் பாடல்கள்

************நட்சத்திரப் பதிவு -12************
ஜெயசிக்குறு தொடங்கப்பட்டதின் பின்பு வன்னியில் தெருக்கூத்து அல்லது வீதிநாடகங்கள் எனப்படும் கலை மிகப்பரந்தளவில் எழுச்சி பெற்றது. புலிகளின் மிகமுக்கிய பரப்புரை ஊடகமாக அது இருந்தது. மக்கள் கலைஞர்களாலும், போராளிக் கலைஞர்களாலும் இவை அரங்கேற்றப்பட்டன. ஒலிபெருக்கிகள் ஏதுமின்றி நேரடியாகவே மக்களுடன் பேசும் நாடகங்கள் இவை.
இவை பற்றி சிறியதொரு பதிவை நட்சத்திரக் கிழமையில் எழுதலாமென்று நினைத்திருந்தாலும் முடியவில்லை.

இவ்வாறான வீதி நாடகங்களின் போது சில பாடல்கள் பாடப்பட்டன. அவைகள் பின் ஒலித்தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
அப்படி வந்த பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.

"டப்பாங்கூத்து பாட்டுத்தான்"
இப்பாடலைப் பாடியவர் 'குட்டிக்கண்ணன்' என்ற இளங்கலைஞர். அப்போது பத்தோ பதினொன்றோ தான் அவரது வயது.வன்னியெங்கும் சுழன்று திரிந்து பாடல்களைப் பாடுவார். நல்ல குரல் வளமுடையவர்.


"புலியாட்டம் ஆடு
பூபாளம் பாடு"

இதுவும் வீதி நாடகங்களில் பாடப்பட்டு மிகப்பிரபல்யமான பாடல்.
பாடியவரின் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஆளை நன்றாக ஞாபகம் இருக்கிறது.



புலம்பெயர்ந்தவர்கள் சிலருக்குக்கூட இப்பாடலை நேரடியாகக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

Labels: , ,


ஆனையிறவும் அந்த நாட்களும்...

(ஆனையிறவு பற்றிய நினைவலைகள்)
**********நட்சத்திரப் பதிவு - 11**********
உண்ணி வெட்டை. அந்த வெட்டையில் உண்ணிகளோடு பட்ட துயர் தாளாமல் நாம் இட்ட காரணப்பெயர் இது.

பரந்தனிலிருந்து இயக்கச்சி போகும்போது ஆனையிறவுப் பெயர்ப் பலகையைக் கடந்தவுடன் வடகிழக்குத் திசையில் பாருங்கள் நீண்ட நீர்ப்பரப்புக்கு அப்பால் திட்டாக ஒரு நிலம் தெரியும். அங்கே நாம் நின்றோம், 1992ஆம் ஆண்டின் கடுங்கோடை காலத்தில்.

ஆனையிறவை விடமாட்டோம் என்று சிறிலங்கா படையினரும், அவர்களை அங்கிருக்க விடவேமாட்டோம் என்று நாமும் வரிந்து கட்டிக்கொண்டு அந்த வெளியில் கிடந்தோம்.

எங்களுடைய கண்ணுக்கு இராணுவ நடமாட்டம் தெரியும். நாம் எழுந்து நடந்தால் எங்களையும் எதிரிக்குத் தெரியும். எனவே எழும்புவதில்லை. குந்தியிருந்து அவதானிக்க ஓர் அகழி. உணவுண்ண, ஓய்வெடுக்க அதனோடு இணைந்தபடி இன்னோர் அகழி. காலையிலிருந்து இருளும்வரை எங்களுடைய அனைத்துச் செயற்பாடுகளும் நடமாட்டங்களும் அந்த இரு அகழிகளுக்குள்ளே மட்டுமே. மூப்படைந்தோர் போல முதுகை வளைத்துத்தான் அகழிகளுள் நடந்தோம். நில மட்டத்தோடு விழிகளை வைத்துத்தான் கண்காணித்தோம். வீசுகின்ற காற்றில் செறிந்திருக்கும் உப்பு விழிகளோடு மோதி கண்ணீர் வடிந்துகொண்டிருக்கும். முகம், காது, கழுத்தெல்லாம் உப்புப் படிந்துவிடும். வழியும் வியர்வையைக் கையால் வழித்துத் துடைத்தோமோ, அவ்வளவுதான். உப்புப் படிவுகளால் முகம் உரசப்பட்டு உரசல்களில் உப்புப்பட்டு, தீப்பற்றி எரிவதுபோல் முகம் எரியும்.

மட்டுப்படுத்தப்பட்டளவு தண்ணீர் சிறு கொள்கலன்களுள்ளே இருக்கும். அளந்து குடிக்காமல் அவசரப்பட்டு குடித்துமுடித்தோமோ இருளும்வரை வாயுலரக் கிடக்கவேண்டியதுதான்.

வியர்க்கின்றது என்று வெளியில் எழுந்து உலாவமுடியாது. திறந்திருக்கும் அகழிகளில் கரந்துறையும் எங்களைச் சுடுவது வெயில் மட்டுமன்று . சூரியன் மேலுயர மேலுயர நிலம் வெப்பமடையத் தொடங்கும். சூடேறிய நிலம் வெளிவிடும் வெப்பத்தால் அகழிகளுக்குள் வெந்துபோய்க் கிடந்தோம்.


சற்றுத் தூரத்தே ஒரே ஓர் ஆலமரமும், எமக்கு அண்மையாக ஒருகாய்ந்த பூவரசு வேலியும் இருந்தது. அவற்றின் சருகுகள் காற்றிலே பறந்து நிலம் முழுவதும் பரந்து கிடந்தன. சருகுகளின் கீழே படைபடையாக உண்ணிகள் கிடந்தன. அவற்றின் இலக்கு எங்களுடைய கை, கால் விரல் இடுக்குகள் தொப்புள். எப்படித்தான் அவைஎம்மேல் ஏறுகின்றனவோ?

அணிந்திருக்கின்ற ஒற்றைஉடையைத் தொலைதூரக் கிணறொன்றுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை தவழ்ந்துபோய் தோய்த்துலரவிட்டு குளித்துமுடிய அதையே அணிந்துகொண்டு வருகின்ற எங்களுக்கு, ஒரேயொரு சிறு கொள்கலன் நீரோடு ஒருநாள் முழுவதும் வாழும் எங்களுக்கு இது பெரிய சோதனை.

உண்ணிகள் எம் இரத்தத்தை உறுஞ்சும்போது உண்டாகும் வலிதான் அவை எம்மீது ஏறி நிற்கின்றன என்று உணர்ந்தும். உண்ணியைப் பிடுங்கியெடுத்தால் கடிகாயத்திலிருந்து இரத்தம் வடியும். இருக்கின்ற ஒரு கொள்கலன் தண்ணீரை ஊற்றிக் கழுவவா முடியும்? கைகளால் துடைத்துவிட்டு நிமிர வேறோரு விரலிடுக்கில் புதிதாக வலி தெரியும். அந்த உப்புவெளியை மீட்க சிங்களப் படைகளோடு மட்டுமா போரிட்டோம்...?

********************************************
அந்தக் காலத்தில் ஆட்களின் தோற்றத்தைப் பார்த்து இவர் எந்தப்பகுதிக் காவலரணிலிருந்து வருகின்றார் என்று இனங்காணலாம். தோலின் நிறம் பெரியளவில் வேறுபடாமல், புத்துணர்வோடு நின்றால் அவர் பலாலிப் பகுதிக் காப்பரணிலிருந்து வந்தவராக இருக்கும். தலைமயிர் செம்படையாகி தோல் கறுத்து வரண்டு விழிகள் சிவப்பேறி பாதங்கள் பிளந்தபடி ஒருவர் வருகின்றாரா? ஐயம் வேண்டாம். அவர் ஆனையிறவிலிருந்துதான் வருகின்றார்.

பாலைவனப் பயணிகளாக எங்கள் வாழ்க்கை சிலகாலம் ஓடியது. இம்முறை எமக்கு ஒதுக்கப்பட்ட காப்பரண் பகுதியிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு தென்னந்தோப்புத் தெரிந்தது. ஆகா! அதுவே போதும்.

தென்னந்தோப்பிலே கிடந்த துரவிலிருந்துதான் எமக்குத் தேவையான நீரை எடுத்துவர வேண்டும். இன்று துரவுக்குப்போய் நீரள்ளிவருவது யார் என்று பலத்த போட்டியின் பின் முடிவெடுக்கப்படும். நீரள்ளப்போகின்ற இருவரும் துரவுத் தண்ணீரில் குளித்துவிட்டு தென்னைகளில் ஏறி இளநீர் பிடுங்கிக் குடித்துவிட்டுத்தான் வருவார்கள். இருள் பிரியமுன்னர் இத்தனையும் நடந்துவிடும்.

அதிகாலையில் அவர்கள் சுமந்துவரும் ஒருகலன் நீரில் ஒரு பகல் முழுவதும் நாங்கள் குடித்து உண்டபின் கைகழுவி (துரவு கிடைத்த பின்னர் மட்டும்தான். முன்னர் "கழுவுவது" என்ற கதையே கிடையாது) துரவுக்குப் போகாத ஏனையவர்கள் பல் தீட்டி, முகம் கழுவி இயற்கைக்கடன் கழிக்கப் பயன்படுத்தி மறுநாள் அதிகாலைதான் மறுபடி நீரள்ளப் போவோம்.

அன்று அரையிருட்டில் துரவுக்குப் போனவர்களுக்கு ஒர் அற்புதமான யோசனை பிறந்தது. திட்டம் உடனடியாக அரங்கேறியது. தேங்காய்கள் பிடுங்கி வீசப்பட்டன. தண்ணீருக்குப் பதிலாக இளநீரால் கலன் நிரப்பப்பட்டது. காப்பரனில் நின்றவர்களுக்குப் புழுகம் தாளவில்லை. அரிய திட்டமொன்றை அரங்கேற்றிய இருவரையும் ஏனையவர்கள் மெச்சிக்கொண்டார்கள். இளநீராலே பல் தீட்டி, முகம் கழுவி, கைகழுவி, கால்கழுவி தேவைக்கும் மேலாக குடிகுடியென்று குடித்துத் தள்ளினோம். இரவு மறுபடி போய் நீரள்ளி வரும் திட்டம்.

ஏற்கனவே இருந்ததால் அளவுக் கட்டுப்பாடு பற்றி எவரும் அச்சமடையவில்லை. வழமைபோல கலன் வெயிலுக்குள் கிடந்தது. எங்களுக்கே நிழல் இல்லை. நேரம் மதியத்தை நெருங்கத் தொடங்கியது. காப்பரணில் நின்றவர் கலனைச் சரித்து வாயில் ஊற்றினார். கடகடவென நாலைந்து மிடறு விழுங்கியவர் கடைசியாக வாயில் எஞ்சியதை பாய்ந்து துப்பினார். ‘கள்ளுக் குடிச்சமாதிரிக் கிடக்கு” அதெப்படி காலையில் இளநீராக இருந்தது மதியம் கள்ளாகும்? குடித்துப் பார்த்த எல்லோரும் முகத்தைச் சுளித்தார்கள். வெயில் ஏற ஏற இளநீர் நொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

புளித்த இளநீரைக் குடித்ததால் எல்லோருக்குமே நாவரண்டது. வாய் கழுவக்கூட நீரில்லை. எல்லாம் இனி இரவுதான். தண்ணீர் விடாயில் தாராளமாகக் குடித்தவருக்கு வயிறு குழப்பியது. இயற்கைக்கடன் கழிப்பதற்கும் இளநீர்தான், வேறு வழியேயில்லை. இருளும்வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும். கடும் யோசனையுடன் காப்பரணில் நின்றவரின் காலில் எதுவோ கடித்த வலி. குனிந்து பார்த்தால் எறும்புப் பட்டாளம் ஒன்று கலனை மூடியிருந்தது. ஒன்றிரண்டு இவரின் பாதங்களையும் சுவைபார்த்தன. துள்ளிக் குதித்து இடம்மாறி நின்று உற்றுப் பார்த்தால் தொலைவில் இருந்து நீண்ட வரிசையில் அந்தக் கரிய பெரிய எறும்புகள் வந்துகொண்டெயிருப்பது தெரிந்தது. அடுத்த இலக்கு நாங்கள்தான். குடிப்பது தவிர்ந்த ஏனைய வேலைகளுக்கு இளநீரைப் பயன்படுத்தியவர்களின் விழிகள் பிதுங்கின. எதைச் சொல்ல?

ஆனையிறவுக்காக நாம் பட்ட வலிகளில் எதைச் சொல்ல? எதை விட?
**************************************
இப்போது "பலவேகய-02" நடந்துகொண்டிருக்கிறது. ஆனையிறவுப் படைத்தளத்தை விரிவாக்கும் முயற்சியில் சிறிலங்கா இராணுவமும், தடுக்கும் முயற்சியில் நாமும் அந்த வெளியில் மறுபடி ஒரு பெருஞ்சண்டை. அன்றைய சண்டை அப்போதுதான் முடிந்தது. நல்ல பகல்வேளை. சண்டை செய்த களைப்பு, பசி, தாகம் எல்லாம் வாட்ட நடந்து வந்துகொண்டிருந்தோம்.

திடீரென வானத்தைக் கருமேகங்கள் மூடின. சடுதியில் மழை பெய்யத்தொடங்கியது. கையில் அகப்பட்ட காவோலைகளை (காய்ந்த பனையோலை) தலைக்கு மேலே குடையாகப் பிடித்தோம். மழையோ சிறு மழையல்ல. மாரிமழைபோலப் பொழிந்தது. காவோலையிலிருந்து வழிந்த நீரை ஏந்திக் குடிக்கத் தொடங்கியவரும், முகம் கழுவியவரும், ஓலையை எறிந்துவிட்டு ஆனந்தமாக நனைந்தவருமாக எங்களை நாங்கள் மறந்தோம்.

"மழைக்க நனையாதே. மழைக்க நனையாதே” என்று தூரத்தே ஒலித்த அணித் தலைவியின் குரல் இப்போது எங்களை நெருங்கியது. அவரும் நனைந்தபடி. எங்களுக்குச் சிரிப்புவந்தது, அவரும் சிரித்துவிட்டார். எல்லோரும் பலமாகச் சிரித்தோம். வருடத்தின் நடுப்பகுதியில் உடலை வரட்டும் கடுங்கோடையில் எப்படி இப்போது மழை பெய்கின்றது.? இயற்கைக்கு நன்றி சொன்னோம். மழை விட்டது. களைப்புப் பறந்த இடம் தெரியவில்லை. மீண்டும் நடந்தோம்.

வானிலே பேரொலி எழுந்தது. Y-12 (குண்டுவீச்சு விமானம்) வருகின்றது.
அருகிருந்த அலம்பல் பற்றைகளுள் எம்மை மறைத்துக்கொண்டோம். மிகப்பெரிய அணி இது. ஒரு குண்டு அருகில் விழுந்தால்கூட இழப்பு அதிகம்தான். ஓடி வேறிடத்தில் மறைய நேரமில்லை. காப்புகளுமில்லை.

எல்லோருடைய வாய்களும் Y-12 ஐச் சாபமிட்டன. அது ஒருதடவை தாழ்ந்து உயர்ந்தால் மூன்று குண்டுகள் ஆடியாடி வந்து வீழும். குண்டு வீழ்ந்து வெடித்த இடத்தில் தென்மராட்சியின் தென்னந்தோப்புக்களிடையே வெட்டப்பட்டுள்ள துரவுகள்போல் ஆழமும் அகலமுமான குழிகள் உருவாகும். எங்களிடையே அந்த மூன்றும் விழுந்தால் போர்முனையில் மகளீர் படையணியின் பலம் குறைந்துவிடும். ஒரு தடவை அது தாழ்ந்து உயர்ந்து சற்றுத்தொலைவில் குண்டுகள் விழுவது தெரிந்தது.

Y-12 இப்போது பெரிய வட்டமெடுத்துச் சுற்றத்தொடங்கியது.
“ இந்தச் சனியன் விழுந்து வெடிக்காதோ?”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. விழுந்துபோக! நாசமாய்ப்போக! எல்லோர் மனங்களும் சாபமிட்டன. உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தோம். தாழ்ந்து பறக்க எத்தனிக்கையில் அது வானில் வெடித்துச் சிதறி துண்டு துண்டுகளாக ஆடியாடி விழுந்துகொண்டிருந்தது.
நம்பவே முடியவில்லை.
சிரித்துக் கூக்குரலிட்டோம்.
கடுங்கோடையில் பெய்த குளிர் மழையில் மறுபடியும் நனைந்தோம்.

“இது விழுந்ததுபோல ஆனையிறவும் ஒருநாள் விழும்”
யாரோ ஒருத்தியின் குரல் கேட்டது. அது ஆன்ம வாக்கு. அண்ணனின் ஆற்றல் உணர்ந்தோரின் உள் மனக்குரல். இன்று எவருமேயில்லை அந்தப் பெருவெளியில். எதிரிகளுமில்லை, நாங்களுமில்லை. அறுநூறு வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல, மறுபடியும் ஆனையிறவு நிம்மதியாக.


மலைமகள்.
(மகளிர் படையணி)

நன்றி:
விடுதலைப் புலிகள். குரல்-123.
******************************
ஏற்கனவே 'படிப்பதிவுகள்' என்ற இன்னொரு வலைப்பதிவில் இடப்பட்ட பதிவுதான் இது. நாள் நேரம் கருதி இங்கே மீள் பிரசுரமாகிறது.

Labels: , , , , ,


ஆனையிறவு

**********நட்சத்திரப் பதிவு -10**********

இன்று ஆனையிறவுப் படைத்தளம் தமிழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் "வீழ்த்தப்பட முடியாத தளம்" என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.

1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, 'புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்' என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.

1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். 'ஆனையிறவு' என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.

ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. புநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.
அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.

ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.

1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி - ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.

உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் "ஆகாயக் கடல் வெளிச் சமர்" என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.

அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி "யாழ்தேவி" என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.

யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.

இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.
ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக அனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.

ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு - வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.

பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, 'முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்' என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.


தரையிறக்கத்துக்குத் தயாரான புலியணியினர்.
பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மாமுனைத் தரையிறக்கம்' புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.
முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

மாமுனையில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கிச் செல்கின்றன.

இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.

இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2001 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.

மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.
ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.

ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது.
ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.
****************************************
வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் 'ஆனையிறவு'தான். ஆனால் வந்த பதில், 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர்'.
***************************************
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.
***************************************
ஆனையிறவு வெற்றியையொட்டி நிறையப்பாடல்கள், கவிதைகள் எல்லாம் வந்துவிட்டன. நீங்கள் ஒரு பாடலைக் கேளுங்கள். எனக்குப்பிடித்த பாடல்.
பாடலைப் பாடியோர்: சாந்தன், சுகுமார்.

"அந்த மாதிரி" என்று இப்பாடலில் வரும் சொல்லுக்கு விளக்கம் பலருக்கத் தெரியாமலிருக்கலாம்.
'சூப்பர்" என்று சொல்லப்படுவதற்கிணையாக எங்கள் வழக்கிலுள்ள சொல் இதுவாகும்.

Labels: , , , , ,


Friday, April 21, 2006

யாழ் - இடப்பெயர்வு

*********நட்சத்திரப் பதிவு -09*********
இம்மாதம் பத்தொன்பதாம் திகதியுடன் யாழ்குடாநாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 19.04.1995 அன்றுதான் சூரியக்கதிர் -02 என்ற இராணுவ நடவடிக்கையை எதிரி தொடக்கினான். ஏற்கனவே சூரியக்கதிர் -01 நடவடிக்கை மூலம் வலிகாமத்தின் சில பகுதிகளையும், யாழ் நகர்ப்பகுதியையும் கைப்பற்றி வைத்திருந்தான்.
கைப்பற்றப்ப படாத மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றவே இரண்டாவதும் மூன்றாவதும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

முதலாவது நடவடிக்கையில் மக்களற்ற சூனியப்பிரதேசத்தையே இராணுவம் கைப்பற்றியது. மற்ற நடவடிக்கையில் மக்களோடு சேர்த்து நிலங்களையும் கைப்பற்றிக்கொண்டது.

முதலாவது நடவடிக்கையில் யாழ் நகர்ப்பகுதி விடுபட்ட நேரத்தில் வெளிவந்த தமிழீழ எழுச்சிப்பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.

சின்ன சின்ன கூடு கட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்



இன்னொரு பாடல்.
பொன்.கணேசமூர்த்தி எழுயதென்று நினைக்கிறேன்.
"புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது"




இரண்டு பாடல்களுமே மேஜர் சிட்டு வினால் பாடப்பட்டவை.

**********************
22.04 ஆகிய இன்றும்கூட மிக முக்கியநாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு மைல்கல். நாம் பெருவெற்றியொன்றைப் பெற்ற நாள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Labels: , , , ,


போராளிகளின் குறிப்புக்கள்.

********நட்சத்திரப் பதிவு -08********

உலக மட்டத்தில் போர்வீரர்களின் குறிப்புக்களுக்கிருக்கும் மரியாதையும் பெறுமதியும் உயர்வானவை. காலங்கடந்தும் வாழ்பவை. அவ்வீரர்களின் நாட்டிலோ சமூகத்திலோ மட்டுமன்றி உலகம் முழுதும் போற்றப்படும் போர்விரர்களின் எழுத்துக்கள் நிறைய உள்ளன. "ஸ்டாலின் கிராட்" போன்ற படைப்புக்கள் நிகழ்த்திய தாக்கம் யாவரும் அறிந்ததே.

இவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல ஈழப்போராட்ட அனுபவங்கள். அவர்களுக்கு "ஸ்டாலின் கிராட்", எங்களுக்கு 'இத்தாவில்'.
ஆனால் அவற்றை ஆவணப்படுத்துவதுதான் முக்கியம்.

புலிகளின் மிகப்பெரிய தரையிறக்கம் 'மாமுனைத் தரையிறக்கம்'. ஏறத்தாழ 1200 போராளிகளை, பல மைல்கள் நீளமான - எதிரியின் வலிமையான கடற்கரையரணைத் தாண்டி எதிரியின் பகுதிக்குள்ளேயே தரையிறக்கியது அந்நிகழ்வு. முழுப்பலத்துடனான எதிரியின் கடற்படையுடனான கடுமையான கடற்சண்டையின் மத்தியில் அவர்களுக்கான விநியோகத்தையும் செய்தது தமிழரின் கடற்படை. தரையிறங்கிய அணிகள் கண்டிவீதியை மறித்து சிறியதொரு கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டைபிடித்து அப்பகுதியைக் காப்பாற்றி வைத்திருந்தன. இத்தாவில் என்ற அப்பகுதியில் புலிகளின் அணி இருக்கும்வரை ஆனையிறவுக்கு ஆபத்து என்தையுணர்ந்த எதிரியின் மூர்க்கத்தனமான தொடர்தாக்குதல்களின் மத்தியிலும் அச்சிறுபகுதியை எதிரியிடம் இழக்கவில்லை. எதிரி இழந்ததோ அதிகம். இரட்டை இலக்கத்தில் இராணுவ டாங்கிகளை இழந்தது அரசபடை.

ஒரு சதுர மீற்றருக்கு ஓர் எறிகணை என்ற வீதத்தில் அச்சிறு பகுதி குண்டுகளால் துவைத்தெடுக்கப்பட்டது. இன்றும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் இத்தாவில் என்ற குறிப்பிட்ட பகுதியைக் கடந்துசெல்லும்போது அச்சண்டைக்குச் சாட்சியாக தலைதறிக்கப்பட்டபடி நிற்கும் தென்னைகளையும், வீதிக்கரையில் புலிகளால் தகர்க்கப்பட்ட டாங்கிகள் ஒன்றிரண்டையும் காணாமற் செல்ல முடியாது. தளபதி கேணல் பால்றாஜ் நேரடியாகவே தரையிறக்க அணியுடன் நின்று அவர்களை வழிநடத்தினார். மகிளிரணித் தளபதிகள் கேணல் துர்க்கா, கேணல் விதுசா போன்றோரும் நேரடியாக நின்ற களமது. இதோ பால்றாஜ் உயிரோடு பிடிபட்டாரென்று முழக்கமிட்டுக் கொக்கரித்தபடி செய்திக்காகக் காத்திருந்த கொழும்புக் கட்டளையகம் ஆனையிறவு பறிபோனதைத் தான் செய்தியாகப் பெற்றது. இதுபற்றி இக்பால் அத்தாஸ் விரிவாக எழுதியுள்ளாரென்று நினைக்கிறேன்.

இவ்விதத்தில், ஒப்பிட்டுச் சொல்லமுடியாத மாபெரும் சமர்க்களத்தையும் அதன் வெற்றியையும் பற்றி முறையான நூலொன்று இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவைதாம் உள்ளன. அதுவும் இத்தாவில் களத்தில் களமாடிய எல்லைப்படை வீரர்களைப் பதிவாக்கும்போது வெளிவந்த தகவல்களே கணிசமானவை.

அதன்பின்னரான காலங்களில் அக்களத்திலிருந்த முக்கியமானவர்கள் - தளபதிகள் உட்பட பலர் களச்சாவடைந்துவிட்டனர். லெப்.கேணல் இராசசிங்கன் என்ற தளபதி அச்சமரில் மிகமிக முக்கியமானவர். பின்னொரு நாள் இரணைமடுக் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்துபோனார். அவரோடு இத்தாவில் சமர்க்களத்தின் பெரியதொரு வரலாறும் மூழ்கிப்போனது.

பெரிய தொகுப்புக்கள் வராவிட்டாலும் தனிப்பட்டவர்களின் குறிப்புக்கள் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வெளிவந்தவற்றில் மிகமிக முக்கியப் படைப்பாக கப்டன் மலரவனின் "போர் உலா" என்ற புத்தகத்தைச் சொல்லலாம். முழுக்க முழுக்க அவரது கள அனுபவத்தைச் சொல்லும் படைப்பு அது. மாங்குளம் படைமுகாம் தகர்ப்புக்காக மணலாற்றுக்காட்டிலிருந்து "உருப்படி"யுடன் புறப்பட்டதிலிருந்து, அத்தாக்குதல் முடிந்து அடுத்த தாக்குதலான சிலாவத்தை புறப்படும் வரையான பதிவு அது. 'உருப்படி' என்பது அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்துக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த 'பசீலன் 2000' என்ற புலிகளின் சொந்தத் தயாரிப்பு எறிகணை செலுத்தி. மலரவன் அந்த எறிகணை செலுத்தி அணிக்குப் பொறுப்பாளனாகச் செயற்பட்டவர். அவர் எழுதி வைத்ததை அவர் வீரச்சாவடைந்த பின்பு (1992 இல் வளளாய்க் காவலரண் தகர்ப்பில்) வெளியிட்டார்கள். மிக இயல்பாகச் சொல்லப்பட்ட படைப்பு அது. இப்படைப்பு தொடர்பான எனது ஒரே விமர்சனம், "அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரச் சொல்லாடலை அப்படியே பதிவு செய்திருக்கலாம்" என்பதுதான். அருமையான நாவல் போன்ற வாசக அனுபவத்தைத் தரக்கூடியது.

இவற்றைப் போல் நிறையப் படைப்புக்கள் வெளிவர வேண்டும். முக்கியமாக தாக்குதலணித் தலைவர்களும் தளபதிகளும் நிறைய எழுத வேண்டும். இங்கிருக்கும் முக்கிய பிரச்சினை புலிகளின் தளபதிகள், அணித்தலைவர்கள் எல்லோருமே பாடசாலைக் கல்வியில் நிறைவானவர்களில்லையென்பது. அதாவது அரச இராணுவக்கட்டமைப்பில் அணித்தலைமைக்கு கல்வித்தகமை முக்கியமானது. ஆனால் புலிகளின் அணித்தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஏன் மூத்த தளபதிகள் என்று பார்த்தாற்கூட பெரும்பான்மையானோர் பாடசாலைக் கல்வியறிவில் முதிர்ச்சியானவர்களில்லை. தேர்ந்த, கவர்ச்சியான எழுத்துநடையுடன் அவர்களால் சம்பவங்களைக் கொண்டுவர முடியாதநிலையுண்டு. இது, ஏனைய நாட்டுப் போர்வீரர்களுடனும் அவர்களின் எழுத்துக்களுடனும் ஒப்பிடும்போது தெரியும் வித்தியாசப் பண்பென்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே எழுதக்கூடியவர்கள் என்ற நிலையில், இலக்கியத்திறம், கவர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொள்ளாமல் குறிப்புக்களைத் தொகுக்க முடியும்.

இதைவிட்டுப்பார்த்தால், எழுதுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லையென்பதுதான் முக்கிய சிக்கலென்பது என் கருத்து. பொட்டம்மான் மிகமிக அருந்தலாக எழுதிய வெகுசில ஆக்கங்கள் மிகமிகக் காத்திரமான படைப்புக்கள். லெப்.கேணல் இராஜன் பற்றிய 'குருதிச்சுவடுகள்', வெளிச்சம் பவழ இதழில் வெளிவந்த இரு ஆக்கங்கள் என்பவை நானறிந்தவை. அதிகம் பேசாமல், அதிகம் எழுதாமல் இருப்பதே தன்பணிக்குச் சிறந்ததென்று இருக்கிறாரோ என்னவோ?

புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல் புலேந்திரன் அவர்கள் 1984, 85 காலப்பகுதியில் வெறும் 25 பேருடன் திருமலைக் காடுகளில் அலைந்துதிரிந்து பணியாற்றிய நேரத்தில் காட்டுவாழ்க்கையை ஒளிப்பதிவாக ஆவணப்படுத்தியதை அறிந்தபோது ஆச்சரியமாயிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துடன் ஒளிப்பதிவுக் கருவிக்கான மின்கலங்களையும் காவித்திரிந்து ஆவணப்படுத்தியுள்ளார். அருவியில் குளிப்பது, கொக்குச் சுட்டு வாட்டுவது, காட்டுக்குள் பாட்டுப்பாடி கும்மாளமடிப்பது, தடிவெட்டிப் பரணமைப்பது, கொட்டில் போடுவது, தேன் எடுப்பது என்பதுட்பட அழகான இயற்கைக் காட்சிகள், பறவைகள், மிருகங்கள் என்வற்றையும் காட்சிப்படுத்தியதோடு தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என்பவற்றையும் வீடியோப் பதிவாக்கியுள்ளார். ஆனால் எழுத்தில் எதுவும் செய்யவில்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது.
*************************************

போராளிகளின் குறிப்புக்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன. ஈழநாதம் பத்திரிகையிலும், புலிகளின்குரல் வானொலியிலும் இவை வெளிவருவதுண்டு (நான் இவர்கள் படைக்கும் கவிதை, சிறுகதை நாடகம் போன்ற ஆக்கங்களைச் சொல்லவில்லை.) கரும்புலிகளிற் சிலர் இப்படி சம்பவக் குறிப்புக்களை எழுதியுள்ளதாக அறிகிறோம். எப்போதாவது அவை வெளிவருமென்ற நம்பிக்கையுண்டு.

வெளிவருகிறதோ இல்லையோ, போராளிகள் தங்களின் குறிப்புக்களை எழுதவேண்டும். என்றோ ஒருநாள் அவை உதவக்கூடும். முறையான தணிக்கையொன்றினூடாக அவை வெளியிடப்படவேண்டும்.
*************************************

இவ்வாறு, ஒருதாக்குதல் சம்பவம் பற்றி எழுதப்பட்ட போராளியின் குறிப்பொன்று இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறப்புக் கனரக ஆயுதமொன்றுடன் சென்று தாக்குதல் நடத்திவிட்டு வந்த சம்பவத்தைப்பற்றிய பதிவிது. சில எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் எனக்கு வாசிக்க அலுக்கவில்லை. சில போரியற் சொற்கள் சிலருக்குப் புரிபடாமற் போகலாம்.

Labels: , , , , ,


Thursday, April 20, 2006

மக்களுக்கான ஆயுதப்பயிற்சி.

*******நட்சத்திரப் பதிவு -07*******

கடந்த பதிவொன்றில், வன்னியில மக்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டதையும், அதன் உடனடிப் பயனைப் பற்றியும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.
முதலில் அத்தகைய பயிற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

1997 மே 13 அன்று தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படிப்படியாக வன்னியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நூறு நாட்களுக்கும் மேலாக முயன்றும் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் பக்கவாட்டுப்பகுதியால் காடுகளிற்பரவி புதியபுதிய போர்முனைகளைத் திறந்தனர். இறுதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியதோடு ஜெயசிக்குறு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. (இதற்குள் புலிகள் கிளிநொச்சியை மீட்டிருந்தனர்.) பின் ஒட்டுசுட்டானையும் இரகசிய நகர்வொன்றின்மூலம் சண்டையின்றியே இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

இந்நிலையில் வன்னியில் மக்களின் வாழ்விடங்கள் நெருங்கின. முக்கியமான இரு இடங்களை மையமாகக் கொண்டு மக்கள் இருந்தனர். புதுக்குடியிருப்பை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதிக்கு ஒருபுறம். மல்லாவியை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதியின் மறுபக்கம். வன்னியின் நிர்வாகம் (மக்களினதும் புலிகளினதும்) இரண்டு பகுதியாகப்பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கத்தொடங்கின. மனரீதியாக வன்னி கண்டிவீதிக்கு இருபுறமென்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் முக்கிய இரு இடங்களான புதுக்குடியிருப்பும் மல்லாவியும் எந்தநேரமும் இராணுவத்தினராற் கைப்பற்றப்படலாமென்ற நிலை வந்துவிட்டது. இரு இடங்களுமே இராணுவத்தினரிடமிருந்து சொற்ப தூரத்திலேயே இருந்தன. புலிகளின் போராட்டத்துக்கான முதன்மைத்தளம் முல்லைத்தீவுதான். அதுபோய்விட்டால் போராட்டமேயில்லை என்றநிலைதான்.


படத்தைப் பெரிதாக்க, படத்தின்மேல் அழுத்தவும்.
படம் பற்றிய விளக்கம் இறுதியாக உள்ளது.


ஒட்டுசுட்டானிலிருந்து எட்டி ஒருகால் வைத்தால் புதுக்குடியிருப்பு. வெறும் பத்துமைல்கள் தான். மறுவளத்தால் நெடுங்கேணியிலிருந்தோ ஒட்டுசுட்டானிலிருந்தோ முள்ளியவளை நோக்கிக் கால்வைத்தாலும் அப்படித்தான். புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களவனிடம் போய்விட்டால் முல்லைத்தீவே தமிழர்களிடமில்லை.

அதுபோல்தான் மல்லாவியும் மிகமிக அதிகமான ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. இனிமேல் மக்கள் இடம்பெயர இடமில்லையென்ற நிலைக்கு வன்னி இறுக்கப்பட்டது. இனி இராணுவம் முன்னேறினால் இடம்பெயர முடியாதென்ற நிலைக்குப் பெரும்பாலானவர்கள் வந்துவிட்டனர்.
அதேநேரம் களமுனையில் இராணுவத்தினரின் கை ஓங்கியிருப்பதாகப்பட்டது. உண்மையும் அதாகத்தான் இருந்தது. முக்கிய பிரச்சினை ஆட்பலம்.

எதிரி கிழக்குக் கடற்கரையான நாயாற்றிலிருந்து மேற்குக் கடற்கரையான மன்னார் வரை வளைந்துவளைந்து செல்லும் முன்னணிக் காப்பரண் வரிசையைக் கொண்டிருந்தான். எந்த இடத்திலும் அவன் முன்னேறி எதையாவது கைப்பற்றலாமென்ற நிலைதான் அப்போது இருந்தது. ஏனென்றால் இதுதான் இலக்கு என்று சிந்திக்கும் நிலையை அரசு இழந்து நீண்டநாட்களாகிவிட்டது. நாயாற்றுக்குள்ளால் முல்லைத்தீவுக்கு வருவதுமுதல் பள்ளமடுவால் பூநகரி பிடிப்பது வரை எந்த இடமென்றாலும் போதும் என்ற நிலைதான் இராணுவத்தின் நிலை. நூற்றுக்குமதிகமான மைல் நீளம் கொண்ட சமர்முனையை எதிர்கொள்வது புலிகளால் இயலாத காரியமாகவே தென்பட்டது. அதைவிட வடக்குப்பக்கமாக இருக்கவே இருக்கிறது பரந்தன் ஆனையிறவுத் தளம். அதிலிருந்தும் முன்னேற - குறிப்பாக இழந்த கிளிநொச்சியை மீட்க இராணுவம் முனைப்பாகவே இருந்தது.

இனிமேல் புலிகளால் முழுவீச்சாக எல்லா இடத்திலும் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது என்பதையும், மக்களால் இனியும் இடம்பெயர முடியாது என்பதையும் கணக்கிட்டது இராணுவம். மக்களைக் கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. (அதுவரை அது இடங்களை மட்டுமே கைப்பற்றியது) புதுக்குடியிருப்பையோ மல்லாவியையோ கைப்பற்றினால் பெருந்தொகை மக்கள் இராணுவப்பிடிக்குள் வந்துவிடுவார்கள், பின் புலிகளுக்கான ஆட்பலம் மிகமிகக் குறைந்துவிடும் என்றெல்லாம் கணக்குப்போட்டது. முக்கியமான லயனல் பலகல்ல பொறுப்பெடுத்தபின் பல முனைப்பான திட்டங்களைக் கொண்டுவந்தார். நடைபெற்ற சண்டைகளின் இழப்புக்களிலிருந்து மீள புலிகளுக்கு அவகாசமில்லாமல் தாக்கவேண்டுமேன்பதும் முக்கிய திட்டம்.

அழிவு நெருங்கிவிட்டது. மல்லாவியை விடவும் புதுக்குடியிருப்பு இருதரப்புக்குமே மிகமிக முக்கியமாயிருந்தது. ஏனென்றால் முல்லைத்தீவு விடுபட்டால் புலிகளின் கதை முடிந்துவிடுமென்பது தான்.

இந்தநிலையில்தான் மக்கள் பயிற்சி தொடக்கப்பட்டது. அது தொடங்கப்பட்டதை விட மிகமிக ஆர்ப்பாட்டமாக அது வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில் பயிற்சி தொடங்கப்பட்டபோது ஆண்கள் முன்னூறு அல்லது நானூறு மீட்டர்களும் பெண்கள் இருநூறு மீட்டர்களும் ஓடுவார்கள். பின் கையைச் சுற்றி, காலைச்சுற்றி கால்மணிநேரம் ஏதாவது செய்துவிட்டு திரும்புவதுதான் நடந்தது. பயிற்சிக்கான வரவுப் பதிவு கொண்டுவரப்பட்டது. இவ்வளவும் நடக்கும்போதே மக்கள் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்ற விம்பத்தைப் புலிகள் உருவாக்கி விட்டார்கள். தேர்ந்தெடுத்த சிலரை இராணுவ உடையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கிழமையில் ஆறுநாட்கள்கூட சில இடங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆனால் சுழற்சி முறையாதலால் ஒருவருக்கு இருதடவைகள் முறைவரும். ஏற்கனவே அமைப்பிலிருந்து விலகியவர்களைக் கொண்டு சிறப்பணியொன்று உருவாக்கி அவர்களுக்கு முதலில் சூட்டுப்பயிற்சியைத் தொடங்கினார்கள். இவ்வளவும் ஒரு மாதத்துக்குள்ளாகவே நடந்தன. பின் படிப்படியாக மற்றவர்களுக்கும் சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டது. முதல்தரம் கொடுத்தபோது அவர்கள் சரியானமுறையில் துப்பாக்கி பிடிப்பதில் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் மக்கள் எல்லோரும் சுட்டுப்பழகிவிட்டார்கள் என்ற கதை வெளியில் போகவேண்டுமென்பது முக்கியம். மக்களும் வஞ்சகமில்லாமல் ஒன்றைப் பத்தாக்கிக் கதைத்தார்கள்.

இராணுவம் என்னென்ன திட்டங்கள் போட்டு வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டது. சிலமாதங்களாக புதுக்குடியிருப்போ மல்லாவியோ ஏனைய மக்கள் வாழ்விடங்களோ எதிரியாற் கைப்பற்றப்படாமற் காப்பாற்றப்பட்டது. இராணுவம் இவற்றை நோக்கி சிறு முன்னேற்ற முயற்சியைக்கூட எடுக்கவில்லை. ஏற்கனவே முன்னேற்ற முயற்சிக்கென்று தயார்ப்படுத்தி வைத்திருந்த படைகளையும் கனரக ஆயுதங்களையும்கூட பழையபடி பின்னிலைகளுக்கு அனுப்பிவிட்டுப் பேசாமலிருந்தது. காரணம் இதுதான். ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் கூட்டத்தைக் கைப்பற்றி, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் விரும்பவில்லை.

இந்தக் குழப்பங்களுக்குள் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்டுத்தித் தம்மைப் பலப்படுத்திக்கொண்டனர் புலிகள். கூடவே முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு துணை இராணுவக் கட்டமைப்பாக மக்களையும் தயார்படுத்திவிட்டனர். முறையானபடி பயிற்சி நிறைவு விழாக்களைச் செய்து, அதிலேயே மக்கள் படையைக் கொண்டு மாதிரி முகாம் தகர்ப்பு போன்றவற்றைச் செய்து ஒரு படைக்கட்டமைப்புத் தன்மையை ஏற்படுத்தினர். மூத்த தளபதிகள் நேரிலே கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் சிறுசிறு அணிகளுடனும் நேரடியாகக் கதைத்துக் கள யதார்த்தத்தைச் சொல்லினர்.

மக்கள் களத்தில் ஆயுதத்துடன் பங்களிப்பதற்கான சூழல் வந்தபோது எதிரி சில நடவடிக்கைகளைச் செய்தான். அதாவது மக்கள் வாழிடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தை முற்றாகக் கைவிட்டது இராணுவம். இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தையும் முற்றாகக் கைவிட்டது. மாறாக புலிகளின் நிலைகள் மீது பாரிய தாக்குதலைச் செய்துவிட்டுப் பின்வாங்குவதுதான் அந்தத்திட்டம். (முன்பு புலிகள் செய்தது போல). வசந்த பெரேரா எனற தளபதி அப்போது பொறுப்பேற்று இரு நடவடிக்கைகளைச் செய்தார். அவைதாம், வோட்டர் செட் 1, 2.(watershed-1, -2)

இரண்டுமே திட்டமிட்டபடி இராணுவத்துக்கு வெற்றியளித்தன. புலிகளின் முன்னணிக் காப்பரண் வரிசையின் குறிப்பிட்ட பகுதியைத் தெரிந்தெடுத்து அதன்மீது ஆயிரக்கணக்கான ஆட்லறிக்குண்டுகளை ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு பின் தரைவழியால் தாக்கியழிப்பது. பின் பழையபடி தமது நிலைகளுக்கே திரும்புவதென்பது இத்திட்டம். அம்பகாமத்தில் நடத்தப்பட்ட வோர்ட்டர் செட்டின் இரு நடவடிக்கையுமே இராணுவத்துக்குப் பூரண வெற்றி. கணிசமான போராளிகள் அதில் கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி போராளிகளின் உடல்களை எடுத்துச் சென்று, பின் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்பி வைத்தது இராணுவம். (உடல்களை எதிரி கைப்பற்றுவதென்பது தொடக்க காலத்திலிருந்தே மிகப்பெரிய தோல்வியாக ஈழப்போராட்டத்தில் கருதப்பட்டு வந்துள்ளது.) தொடர்ந்தும் அப்பிடியான தாக்குதலைச் செய்வது இராணுவத்தின் திட்டம்.

அந்தநேரத்தில் மக்களிடத்திலும் குழப்பம். களத்தில் புலிகளின் கை முற்றாக விழுந்துவிட்டதானதொரு தோற்றம் தென்பட்டது.

ஆனால் புலிகள் முந்திக்கொண்டார்கள். எதிரி மூன்றாவது நடவடிக்கை செய்யமுன்பே புலிகள் ஓயாத அலைகள் - 3 ஐத் தொடங்கிவிட்டார்கள். இனி புலிகளால் எழுந்திருக்க முடியாது என்று (புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களும்) நினைத்திருந்தபோது களமுனை ஒரேநாளில் முற்றுமுழுதாக மாறியது. இரண்டரை வருடங்களாக எதிரியிடமிழந்த இடங்களை மட்டுமன்றி பதினைந்து வருடங்களின் முன் அத்துமீறிய சிங்களக்குடியேற்றத்தினால் இழந்த பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும்கூட ஐந்தே நாளில் மீட்டுவிட்டார்கள். இச்சமரிற்கூட மக்கள்படையின் பங்களிப்பு அளப்பரியது.
**************************
வன்னியும் புலிகளும் இத்தோடு முடிந்தார்களென்று எதிரி நினைத்திருந்த வேளையில் சாதுரியமாகத் தொடக்கப்பட்ட மக்கள் பயிற்சி ஈழப்போராட்டத்தில் முக்கிய மைல்கல். சண்டையேதுமின்றி, பயிற்சி கொடுத்ததன் மூலமே பெரியதொரு அழிவிலிருந்து ஈழப்போராட்டம் காப்பாற்றப்பட்டது. பின் பெரிய வெற்றிகளுக்கும் அப்பயிற்சியும் மக்கள் படையும் அளப்பரிய உதவியாயிருந்தன.
**************************
குறிப்பு: பெண்கள் பயிற்சியெடுக்கும் படங்கள் கிடைக்கவில்லை. பொறுமையாகத் தேடவில்லை.

படங்களுக்காக புதினத்துக்கு நன்றி.

***************************************
முல்லைத்தீவு வரைபடத்தில், நீலநிறத்தால் வட்டமிடப்பட்டிருப்பவைதான் புதுக்குடியிருப்பு, மல்லாவிப் பட்டினங்கள்.
சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு (மாங்குளத்திலிருந்த நாயாறுவரை) அன்றைய நேரம் இராணுவத்தினரின் முன்னணிக்காப்பரன் வரிசை.
இளஞ்சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு இராணுவக் காப்பரண் வரிசைதான். ஆனால் என்னால் சரியாக உறுதிப்படுத்த முடியாத கோடு. கிட்டத்தட்ட அவ்வாறுதான் வரும்.
இக்கோடுகளுக்கு வடக்குப்புறம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி.
இப்படம் சுனாமி சம்பந்தமான தளமொன்றிலிருந்து எடுக்கப்பட்டு என்னால் கோடுகள் கீறித் தரவேற்றப்பட்டது.
அனாமதேய அன்பரொருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்படம் சேர்க்கப்பட்டது.
இப்பதிவு சமரைப்பற்றிச் சொல்வதன்று. எனவே அதற்குள் அதிகம் செல்லவில்லை.
இவைபற்றி முன்பு எழுதிய சில பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று
வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

Labels: , , , ,


Wednesday, April 19, 2006

நாட்டுப்பற்றாளர்

******நட்சத்திரப் பதிவு -06******
ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , , , ,


மூன்றாம் கட்ட ஈழப்போர்

*****நட்சத்திரப் பதிவு - 05*****

"ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத
இன்னொருநாள் இன்று.
தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை
நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே 'சூரியக்கதிர்-01' என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது."

*************************
இன்றைய நாளுக்கு இன்னொரு முக்கியத்துவமுண்டு. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 'மூன்றாம் கட்ட ஈழப்போர்' தொடங்கியதும் இன்றைய நாளில்தான்.

1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது அரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.

இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த "ரணசுறு", "சூரயா" என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.

இவர்கள் பற்றிய நினைவுப்பாடலைக் கேளுங்கள்.

குரலுக்குச் சொந்தக்காரன் மேஜர் சிட்டு.







படங்களுக்கு நன்றி: அருச்சுனா.

Labels: , , , ,


Tuesday, April 18, 2006

அன்னை பூபதி.

****நட்சத்திரப் பதிவு -04 ****

"ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத
இன்னொருநாள் இன்று. தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே 'சூரியக்கதிர்-01' என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த
அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது."

************************
இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.


நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.

**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
இவர்களைப்பற்றியும் அதிகம் சொல்ல இருக்கிறது.
இன்னொரு பதிவிற் சொல்ல முயல்கிறேன்.
***************************************

படம்: தமிழ்நெட்

Labels: , , , , ,


குறிதவறிய சூடும் திருவள்ளுவரும்.

***நட்சத்திரப் பதிவு -03***

"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.
சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது."

வன்னியில நடந்த முசுப்பாத்தியொண்டைச் சொல்லலாமெண்டு நினைக்கிறன்.
நண்பர் வட்டத்துக்குள்ள நடந்த சம்பவம்.

1999 ஆம் ஆண்டு. வன்னியில இளந்தாரியள் எல்லாருக்கும் ஆயுதப்பயிற்சியள் நடந்த காலம். இளந்தாரியள் தானெண்டு இல்லாம கிழடுகட்டையள் கூட ஆர்வமா வந்து பயிற்சியெடுத்தவை. புலிகளின் அதிமுக்கியமான தந்திரமும், ஈழப்போராட்டத்தை மிகப்பெரிய தோல்வியிலிருந்தும் பொறியிலிருந்தும் காத்த உடனடி நடவடிக்கைதான் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி. (அதுபற்றிய சின்னதொரு பதிவை பிறகு எழுதுகிறேன். விரும்பியவர் வாசித்துச் செல்க. )

தொடக்கத்தில எல்லாச்சனத்துக்கும் பொதுவான சில உடற்பயிற்சியள் தான் நடந்தது. அப்ப கொட்டனுகளக் கொண்டு தொடங்கின பயிற்சி பிறகு துவக்கு வடிவுக்கு மெல்லமெல்ல மாறீச்சு. (இதுபற்றி அப்பா துவக்குச் செய்வார் எண்ட பதிவில எழுதியிருக்கிறன்)

பிறகு ஆக்களைத் தெரிஞ்செடுத்து சூட்டுப்பயிற்சியள்கூட குடுக்கத் துவங்கீச்சினம். அப்ப சனத்துக்குப் பேப்புழுகு, தாங்களும் துவக்குத் தூக்கிச் சுடுறமெண்டு. பயிற்சிக்குப் போட்டு வீட்ட வந்து அளக்கிற கதையள் தனிக்கணக்கு. உதில மனுசியும் பயிற்சிக்குப் போற குடும்பத்தாருக்குத்தான் புழுக வழியில்லை. பயிற்சியிடத்தில பீடி, சுருட்டுக்குத் தடையிருந்தாலும் நசுக்கிடாமப் பொத்திவச்சு அடிக்கிறவையும், பிடிபட்டபிறகு தண்டனையில கொட்டனைத் தூக்கிக்கொண்டு கத்திக்கத்தி ஓடுறவையுமெண்டு பம்பலாப் போகும் பொழுது.

'பிலாக்கன்' எண்டு புதுக்குடியிருப்பில ஒருத்தர் இருந்தவர். ஏன் அந்தப்பேர் வந்துதெண்டு தெரியாது. 'பிலாக்கண்ணை' எண்டுதான் கனபேர் கூப்பிடுறது. கிட்டத்தட்ட அம்பது வயசு வரும். நெடுங்கேணிப்பக்கத்து ஆள். ரெண்டு மூண்டு தரம் இடம்பெயந்து புதுக்குடியிருப்ப நிரந்தரமாக் கொண்டிட்டார். ஆள், தான் பெரிய வேட்டைக்காரன் எண்டு நிறையக் கதையள் சொல்லுவார். அவரைத் தெரிஞ்ச வேறயும் ரெண்டொருத்தர் அதை உறுதிப்படுத்தினதால நாங்களும் அவற்ற கதையள நம்புவம். ஆனா அவர் வேட்டையாடினதெல்லாம் நெடுங்கேணி, ஒதியமலைப் பக்கத்திலதான். கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு அவர் வேட்டைய விட்டு. ஆள் தன்ர குறிவைக்கிற திறமையத்தான் பெருசாச் சொல்லுவார். எந்த அமாவாசை இருட்டிலயும் சரசரப்புச் சத்தத்துக்கே வெடிவச்சு விழுத்துவன் எண்டெல்லாம் சொல்லுவார். துப்பாக்கி குறிபாக்கிற பயிற்சியிலயெல்லாம் அண்ணர் தான் திறமையாச் செய்யிறவரெண்டு கூட்டாளிப்பெடியளும் சொல்லுவாங்கள்.

தொகுதி தொகுதியாத் தான் சூட்டுப் பயிற்சியள் நடந்தது. நூறு பேருக்குக் கிட்ட ஒரு தொகுதியில வருமெண்டு நினைக்கிறன். ஓரிடத்துக்போய் ரெண்டுநாள் நிண்டு எல்லாம் முடிச்சிட்டு வாறது. பிலாக்கண்ணையின்ர தொகுதியும் வெளிக்கிட்டிட்டுது. சனத்துக்கெல்லாம் குறிபிடிக்குதோ இல்லையோ நாலு வெடிவச்சாச் சரியெண்டதுதான் நோக்கம். இயக்கத்துக்கும் அதுதான் திட்டம். சனம் சுட்டுப்பழகுதாமெண்ட கதை வெளியில அடிபடவேணுமெண்டதுதான் திட்டம். அதால, சனத்துக்கு தாங்கள் சுடுற குண்டு எங்கபோகுதெண்டோ தாங்கள் என்ன புள்ளியள் எடுக்கிறமெண்டதோ கவலையில்லை. ஆனா வீ்ட்ட வந்து அவிக்கிறது கொஞ்சம் நஞ்சமில்லை. அதோட சுடுற ஆளுக்கு மட்டும்தான் அவரின்ர புள்ளியள் சொல்லப்பட்டதால வீட்ட வந்து நல்லா வண்டில் விடக்கூடியமாதிரியிருந்திச்சு. கூட வந்தவங்கள்கூட ஒண்டும் சொல்ல ஏலாதெல்லோ?

பிலாக்கண்ணையின்ர ரீம் சுடப்போகேக்க பயிற்சி தாற ஆக்கள் குறிதவறக்கூடாதெண்டதில கொஞ்சம் கவனமெடுக்கத் தொடங்கீட்டினம் போலகிடக்கு. முதல் அம்பது மீட்டரிலயோ என்னவோ வச்சு ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அதில செந்தில் எண்ட கூட்டாளியொருத்தன் ரெண்டும் நல்ல அடி அடிச்சிட்டான். வாத்திமார்கூடப் பாராட்டினவையளாம். பிறகு கொஞ்சப்பேரை மட்டும் கூப்பிட்டு முதலிருந்ததைப்போல ரெண்டு மடங்கு பெரிசான Target வச்சு இன்னும் ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அவயள் முதல் சுட்ட ரெண்டும் வானத்துக்கோ பூமிக்கோ போயிட்டுதாம். இப்ப இலக்கைப் பெரிசாக்கி இன்னும் ரெண்டு குடுக்கினமாம். அப்பதான் பெடியள் பாத்திருக்கிறாங்கள், எங்கட பிலாக்கண்ணையும் அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிக்கிறாராம்.

தாங்களும் பக்கத்தில நிக்கப்போறம் எண்டு கேட்டு பிலாக்கண்ணை சுடேக்க பக்கத்தில நிண்டிருக்கிறாங்கள். முதல்குண்டு சுட்டாச்சு. ரெண்டாவது குண்டு சுடேக்க இலக்குக்கு முன்னால புழுதி கிழம்பீச்சாம். பெடியளும் சேந்துபோய்த்தான் இலக்கைப் பாத்திருக்கிறாங்கள். ஒண்டும் பிடிக்கேல.

"என்ன பிலாக்கண்ணை. மரியாதை போச்சு. உவன் செந்தில் அந்த சின்ன ராக்கெற்றுக்கே ரெண்டு நைன் அடிச்சிருக்கிறான். நீங்கள் உந்தப்பெரிய ராக்கெற்றுக்கே அடிக்கேலாம நிக்கிறியள்"
எண்டு கடுப்பேத்தியிருக்கிறாங்கள். அதுக்கு பிலாக்கண்ணை அடிச்ச லெக்சர்தான் பகிடி.

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
."
எண்டு ஒரு குறள் சொல்லிப்போட்டு,

"முயலைக் கொண்ட அம்பிலும் பாக்க யானைக்கு எறிஞ்சு குறிதப்பின ஈட்டிக்குத்தான் மதிப்பு அதிகமெண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதுமாதிரிதான் உவன் செந்தில் சின்ன டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிச்ச குண்டிலும்பாக்க நான் பெரிய டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிக்காத குண்டுக்குத்தான் பெருமை அதிகம் தெரியுமோ?"
எண்டுபோட்டு
"மாஸ்டர் நீங்கள் என்ன சொல்லிறியள்?" எண்டு பயிற்சி குடுத்த ஆசிரியரையும் கேட்டிருக்கிறார். அவரும் சிரிச்சுக்கொண்டே
"ஓமண்ணை, அதெண்டாச் சரிதான். உடம்பில கொழுவிற குண்டைவிட முன்னுக்குப் புழுதி கிழப்பிறதைப் பாக்கத்தான் பீப்பயம் வரும்"
எண்டாராம்.

"பிலாக்கண்ணை, உதின்ர சரியான கருத்தென்னெண்டா...."
எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்ட செந்திலை நிப்பாட்டி,
"டேய், உனக்குத் திருக்குறளைப் பற்றி என்ன தெரியுமெண்டு கதைக்க வந்திட்டா?"
எண்டுபோட்டு கதையளக்க வெளிக்கிட்டார்.

அதுக்குப்பிறகு பிலாக்கண்ணையோட கதைச்சு வெல்ல ஏலாது.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
பிலாக்கண்ணை சொன்ன குறள் சரியோ பிழையோ தெரியாது. ஆனா அந்த இடத்தில ஒரு குறள் சொல்லிப்போட்டுத்தான் மனுசன் விளக்கம் குடுத்திருக்கிறார். நான் இப்ப பதிவெழுதேக்க குறளைச் சரியானபடி போட்டிருக்கிறன் எண்டதையும் சொல்லிறன்.

பிலாக்கண்ணை உப்பிடி எடுத்தோடன குறள் சொல்லிற ஆளில்லை. ஆனா அந்த இடத்தில குறள் சொல்லி விளக்கம் குடுத்ததை வைச்சு நாங்களா உய்த்தறிஞ்ச விசயம் இதுதான்:
"பிலாக்கண்ணை முந்தி தன்ர வேட்டைக்காலத்தில கனபேருக்கு உதே குறளைச் சொல்லியிருக்ககூடும்"

Labels: , , , ,


Monday, April 17, 2006

திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்

வணக்கம்!

"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க
முடியாதநாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.

சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா –செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால்
கிழித்தெறியப்பட்டது."


இனி இன்றைய பதிவுக்கு வருவோம்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.



இதுவொரு மீள்பதிவு. ஏற்கனவே ஈழப்பாடல்கள் என்ற இதன் துணை
வலையிலிடப்பட்ட இடுகைதான். அதில் இடப்பட்டிருந்த பாடலிணைப்பு சிறிதுநாட்களிலேயே
செயலிழந்து விட்டது. இப்பேர்து புதிய பாடலிணைப்புடன் அதை மீள்பதிவாக இடுகிறேன்.
அண்மையில் நடந்த சம்பவங்கள், திருமலையின் நிலவரத்தையும், அதன் சிக்கல் தன்மையையும்
வெளிப்படுத்துகின்றன. "திருமலை எங்கள் இடம்" என்பதை இன்னுமின்னும் அழுத்திச்
சொல்லவேண்டிய காலத்துள் நிற்கிறோம். புத்தர் சிலை முளைத்தபோதே கடுமையானமுறையில்
அதை எதிர்கொள்ள வேண்டுமென்று நினைத்தவன் நான். இப்போது மாமனிதர் விக்னேஸ்வரன்
படுகொலையும் அதன்பின் அண்மைய படுகொலை-தீவைப்புச் சம்பவங்களும் என்று பல
நடந்துவிட்டன. இனி பதிவு.

* * * * * * *
*** *** *** *** *** *** ***
'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.

பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.

யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.

'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.

புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது.
அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.

"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?"
"ஆள் இப்ப தலைநகரில"
என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.

திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.

****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா?
அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா?
திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா?
புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன?
போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.
*****

இதோ, தலைநகர் மீதொரு பாடல்.
பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன்.
கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள்.
( சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)

பாடலைப் பாடியவர் எல்லோரினதும அபிமானத்துக்குரிய
மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது யார்? புதுவைதானே?
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.
********************************




கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.


கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


Labels: , , , ,


மக்களின் இலக்கியக்காரன்

****நட்சத்திரப் பதிவு - 01***
நட்சத்திரக் கிழமையின் முதற்பதிவு இப்படியொரு அஞ்சலிப்பதிவாயிருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் மரணமடைந்தார். கவிஞர் நாவண்ணன் என்ற பெயர் பெரும்பாலானோருக்குத் தெரியாமலிருக்கும். ஈழத்தைச் சார்ந்தவர்கள்கூட அனைவரும் அறிந்திருப்பரென்று நான் நினைக்கவில்லை. அவர் மறைவையொட்டி வந்த செய்தியொன்றைக் கீழே தந்து மேலும் தொடர்கிறேன்.
*******************************************
போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன்.
தமிழன் சிந்திய இரத்தம்,
கரும்புலி காவியம்,
இனிமைத் தமிழ் எமது,
ஈரமுது
உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட "வலியும் பழியும்" என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

செய்தி: புலிகளின் குரல்
*********************************

லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்.

கவிஞர் நாவண்ணனின் இலக்கியப்பணி நீண்டது. உண்மையில் அவரைக் கவிஞர் என்றுமட்டும் சொல்வதிலும்பார்க்க, பல்துறைக் கலைஞரென்றே சொல்லவேண்டும். அவ்வளவுக்கு பலதுறைகளில் ஈடுபாட்டுடன் உழைத்த மனிதர். 1985 ஆம் ஆண்டு சிங்கள அரசபடையாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வங்காலைக் குருவானவர் அருட்திரு மேரிபஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலான "தீபங்கள் எரிகின்றன" என்ற நூலின் மூலம்தான் எனக்கு நாவண்ணன் அறிமுகமானார்.
பின் "புலிகளின் குரல்" வானொலியிற் பணியாற்றிய காலத்தில் மிக வீச்சுடன் செயலாற்றினார். மிக அருமையான தாயகப்பாடல்களை எழுதியுள்ளார்.

"தமிழன் சிந்திய இரத்தம்" என்ற தொடர் ஈழத்தவர்களின் அவலங்களை ஆவணப்படுத்திய முக்கிய நிகழ்ச்சி. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றில் முக்கியமானது இத்தொகுப்புத்தானென்பேன். தனியே ஓர் இனப்படுகொலையையோ அல்லது ஒட்டுமொத்தமானவற்றையோ திரட்டிப் புள்ளிவிரவரங்களோடு தொகுப்பட்டவற்றைத்தாண்டி, தனிமனிதர்களின் அவலங்களை அவர்களின் குரலிலேயே ஆவணப்படுத்தியதும், போர் உக்கிரமடைந்தபின்னும் தனிமனிதர்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளின் சாட்சியத்தைப் பேணியதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

"மட்டக்களப்பில் குடும்பத்தோடு சேர்த்து வீடு கொழுத்தப்பட்டபோது சிறுவயதில் தப்பிய ஒருவன், தன் குடும்பம் முழுவதுமே அதில் கொல்லப்பட்டதாக நினைத்திருந்தவன், மணலாற்றுச்சண்டையில் தன் சகோதரியைப் போராளியாகவே சந்தித்த சம்பவங்கள் (இதன்மூலம் தமிழ்ச்சினிமாவின் சில சம்பவங்கள் சாத்தியமுள்ளவையென்று நம்பத்தலைப்பட்டவன் நான்) உட்பட ஏராளமானவற்றை ஆவணப்படுத்தியவர் நாவண்ணன். உண்மையில் கிழக்கு மக்களின் அவலங்களும் போராட்டப் பங்களிப்பும் வடக்கோடு ஒரேதளத்தில் வைத்துப் பார்க்க முடியாதென்ற தெளிவை எனக்குமட்டுமன்றி நிறையப் பேருக்குத் தந்தது அந்நிகழ்ச்சி. எல்லைப்புறத் தமிழர்கள்மேல் நடத்தப்பட்ட வன்முறைகளும் இடங்களைப் பறிகொடுத்து அவர்கள் வெளியேறியதும் பலர் வெளியேறாமலே வீம்பாக இருந்து மாண்டதும் உட்பட எல்லைப்புறத் தமிழர்களின் சிலபாடுகளையாவது வெளிக்கொணர்ந்த தொகுப்பு அது.

ஏற்கனவே 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பெயரில் கவிஞர் நாவண்ணன் புத்தகமொன்று வெளியிட்டிருந்தார். அதில் ஆயுதப்போராட்டம் வீரியமடைய முந்திய காலப்படுகொலைகளை ஆவணப்படுத்தியிருந்தார். பின் அதே பெயரில் ஒலிவடிவில் அவர் தொகுத்த தொகுப்புத்தான் புலிகளின் குரல் வானொலி நிகழ்ச்சி. இதுவரை அது புத்தகமாக வரவில்லையென்று நினைக்கிறேன். விரைவில் வரவேண்டும். அனாலும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடிக்குரற் சாடசியங்களடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அதைவிட 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றியும் அவரொரு சிறந்த தொகுப்பைச் செய்திருந்தார். கையெழுத்துப்பிரதியாக இரண்டொரு பக்கங்கள் வாசித்தேன். அது இன்றுவரை வெளிவரவில்லை. வெளிவராததற்கு இருக்கும் காரணம் நியாயமானது, என்றாலும் ஒருநாள் வெளியிடப்படுவதற்காகவேனும் அவர் தொகுத்துவைத்த அப்புத்தகத்துக்காக அவருக்கு நன்றி.

கரும்புலி காவியம் என்ற பெரும்பணியைச் செய்ய முடிவெடுத்தபின் அதற்கான தரவுகளுக்காக வன்னியின் மூலைமுடுக்கெங்கும் புழுதி குடித்து அலைந்த கவிஞரின் பாடுகளை நன்கு அறிவேன். இவையெல்லாமே காசு கிடைக்காத தொழில்கள். அவரது அலைச்சலுக்கோ அந்தக் காவியத்துக்கோ ஊதியமேதுமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் திருப்தியைத் தவிர வேறொன்றுமில்லை.

நாவண்ணனின் பாடல்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. வவுனிக்குளத் தேவாலயப் படுகொலையை நினைந்து உடனடியாகவே அவர் இயற்றி, திருமலைச் சந்திரன் பாடிய பாடலைக் கேட்டு உருகாதவர் யாருமிருக்க முடியுமா?

"
கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும். -எம்
சன்னங்கள் வென்றிட உம்தயை தாரும்."

(அதைத் தேடிப்பார்த்தேன். வலையிலும் இல்லை. என்னிடமிருக்கும் தொகுப்பிலுமில்லை.)

கவிஞர் நாவண்ணனின் "அக்கினிக் கரங்கள்" என்ற நூல் 01.03.2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இதுதான் அவரின் கடைசி நூலென்று நினைக்கிறேன்.

சூசைநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் நாவண்ணனுக்கு ஆறு பிள்ளைகள். ஐந்துபேர் பெண்கள். அவரின் ஒரேமகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) களத்திலே வீரச்சாவடைந்துவிட்டார்.
*******************


"
ஊர் கொடுத்தார் புலவருக்கு
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,
தெரு வெல்லாம் பவனி வர;
கார் நிறத்துக் கரி கொடுத்தார்;
காற்று விசைப் பரி கொடுத்தார்
"

என்று வியந்து தொடங்குகிறது அவரது "கரும்புலி காவியம்".

"காவியமாய் புதுப் புறம்பாடி" எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"

என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
*****************************

கவிஞர் நாவண்ணன் அவர்களின் கவிதையொன்று.
(நன்றி நூலகம்)

இவனா என் பிள்ளை!


அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து
"அச்சாப் பிள்ளை "யென "ஆய்தந்த பிள்ளை"
கம்பால் அடித்து கண்டித்து பின்னர்
கண்­ர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;
"வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே
வாய்காட்டாதே" யென்று வளர்த்திட்ட பிள்ளை;
பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு
வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!

இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக
இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை
விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை
வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;
பரட்டைத் தலைவான் படிப்புக்கு ஒளித்திடுவான்
பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;
முரட்டுத் துவக்கோடு 'சென்றி'யிலே நின்று
முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!

விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து
வேலைக்குக் கொடுத்தாலும் " இது என்ன
இதம்இல்லை வேண்டாம் எனக்கு" என்றுகூறி
எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.
பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று
படையலாய் அவித்த எதையேனும்
நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு
நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!

நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்
நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை
தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே
தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்
பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;
பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்
தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்
திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?

இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்
இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை
தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த
தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!
எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?
இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;
அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு
அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!

Labels: , , , , ,


Sunday, April 16, 2006

பூராய நட்சத்திரம்.

உப்பிடி நட்சத்திரமேதும் இருக்குதோ எண்டோ நான் எழுத்துப்பிழை விட்டிட்டன் எண்டோ யோசிக்க வேண்டாம்.

தமிழ்மணத்திரட்டியில ஆளாளுக்குச் செய்யிற நட்சத்திர விளையாட்டைத்தான் நான் இந்தக் கிழமை செய்யப்போறன்.

சிலதுகள் திடீர்திடீரெண்டு வந்து அமையும். இதுவும் அப்பிடித்தான்.
இந்த முறை என்னட்ட அதிகம் எதிர்பார்க்காதையுங்கோ. நாளொரு பதிவு கட்டாயம் போடுவன். ஆனா அதுகள் எத்தினை பேருக்கு ரசிக்கத் தக்கதா இருக்கு, எத்தனை பேருக்குப் பிடிக்காமலிருக்கு, எத்தினை பேருக்கு எரிச்சலைத் தருது எண்டும் பாக்கவேணும்.

இந்த வலைப்பதிவு தொடங்கின காலத்தில அடிக்கடி எழுதினனான். இடையில குரற்பதிவுகள்கூடப் போட்டுக் கலக்கினனான். பிறகு ஏனோ தொய்வு வந்திட்டுது. [எத்தின சோலியத்தான் பாக்கிறது?;-( ] கிட்டத்தட்ட ஒண்டரை வருடங்களில வெறும் 77 பதிவுகள் மட்டும்தான் இந்த வலைப்பக்கத்தில எழுதியிருக்கிறன். எண்டாலும் துவங்கின நோக்கமோ திட்டமோ சரியாவரேல எண்டது மட்டும் உறுதி.
இனி உங்கள இந்தக் கிழமை நட்சத்திரப் பதிவுகளுக்கால சந்திக்கிறன்.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***

சரி. இந்த வலைப்பக்கத்தின்ர பேரைப்பற்றி ஒரு விளக்கம் தந்துவிடுறன். அதுக்கு முதல் 'வன்னியன்' எண்டது புனைபெயர்தான் எண்டதையும் சொல்லிக்கொள்ளிறன். கனபேருக்குத் தெரியுமெண்டாலும் (முந்தி என்ர ஒவ்வொரு பதிவும் தமிழ்மணத்திரட்டியில திரட்டப்படேக்க, "புனைபெயர்தான்" எண்டதும் சேத்துத்தான் என்ர பேர் வரும்) புதுசா வந்தவைக்குத் தெரியாமலிருக்கலாம். பலர் தெரிஞ்சும் தெரியாதமாதிரி நசுக்கிடாமலும் இருக்கலாம். (நான் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறமாதிரி. ஆனாலும் பாருங்கோ அதில ஒரு 'இது' இருக்கு.)

"பூராயம்" எண்டது ஈழத்து வழக்குச்சொல்லாகத் தான் நான் நினைச்சு வச்சிருந்தன். ஆனா வலைப்பதிய வந்தபிறகுதான் உந்தச் சொல் கனபேருக்குத் (யாழ்ப்பாணத்தாருக்குக் கூட) தெரியாது எண்டது விளங்கீச்சு. எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் சர்வசாதாரணமாக் கதைக்கப்படுற சொல். பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது. இப்ப உந்த "பூராயம்" எண்ட சொல் அருகிக்கொண்டு போயிருக்குமெண்டு தான் நினைக்கிறன். வன்னியில 1998 இல இதழியல் சம்பந்தமா ஒரு பட்டறை நடந்திச்சு. முறையான பாடத்திட்டதோட குறுகிய காலத்துக்குள்ள ஒரு பாடநெறி முடிச்சவை. (அதை முடிச்சவையில ஒருபகுதியினர் போராளிகள்.) அதிலயிருந்து வெளிவந்த ஆக்கள் ஓர் இதழ் நடத்தினவை. அதுக்குப் பேர் "பூராயம்" எண்ட தகவலையும் இங்க பதிஞ்சு வைக்கிறன்.

சரி, இனி பூராயமெண்டா என்ன எண்டு பாப்பம்.
விடுப்புக்கள் அல்லது விண்ணாணங்கள் எண்டு சொல்லப்படுறதுகளுக்கு இணையா இதைச் சொல்லலாம். தமிழகத்தார்க்கு விளங்கிறமாதிரிப் பாத்தா உந்த 'கிசுகிசு' எண்டதுக்கு இணையாகவும் வரும். மற்றவர்களைப் பற்றியே கதைப்பது, மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கதைப்பது, தேவையில்லாததுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து அலட்டுவது எண்டு தொடங்கி இல்லாத பொல்லாத கதைகட்டுறதுகள் வரைகூட இதுகள் போகும். இதுகளெல்லாம் சேந்து பூராயம் எண்டு சொல்லலாம்.
"பூராயம்" விளங்கீச்சோ இல்லையோ அதை ஏன் "பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது" எண்டு முதற்பந்தியில சொன்னனான் எண்டு கட்டாயம் விளங்கியிருக்கும்.;-)

எங்கட ஊர்வழக்கங்களில உந்தப் பூராயப் பண்பு மேலோங்கியிருக்கும். கிராமப்பக்கங்களில ஆரேன் ஒரு புதுமுகத்தை ஒழுங்கைக்குள்ள பாத்தால் அது வேலிவழியால விடுகளுக்குப் பரவீடும். அந்த முகம் எதுக்கு வந்தது, ஆற்றை வீட்ட வந்தது, அவர் ஆர் எண்டெல்லாம் ஆராய்ஞ்சு முடிவுஎடுக்காமல் எங்கட சனம் சாப்பிடாதுகள். எங்கட ஊர்ப்பக்கம் சந்ததைக்குப் போறதெல்லாம் பொம்பிளையள்தான். காய்கறிச் சந்தைக்கோ மீன்சந்தைக்கோ போனா அங்கயொரு அரைமணித்தியாலச் சமாவுக்குப்பிறகுதான் வீடுவருவினம். எங்கட விட்டுக்குப் பக்கதிலயிருக்கிற கிழவி சந்தையால நேர எங்கடவீட்ட வருவா. வரேக்கயே "எடி றோசுமலர்!" எண்டு கூப்பிட்டுக்கொண்டே அதோட ஏதாவதொரு புதினத்தைச் சொல்லிக்கொண்டே வருவா. "இந்தா பொடி, இதக்கொண்டே மோளுட்டக் குடு" எண்டு தாற பைய நான்தான் வேண்டிக்கொண்டே அவையின்ர வீட்டில குடுக்கிறது. மனுசியத் திட்டிக்கொண்டே ஓட்டமாப்போய் ஓட்டமா வருவன். வேறயென்னத்துக்கு? அம்மம்மாவோட மனுசி கதைக்கிறதுகளக் கேக்கத்தான்.

பொழுதுபட செவமாலை சொல்லவெண்டு ஒவ்வொரு குறிச்சீக்கையும் ஒவ்வொரு இடத்தில சனம்கூடும். எங்கட வீட்டுக்குப் பக்கத்திலயிருக்கிற புளியமரத்தடியிலதான் ஒரு மாதா சுருவம் வச்சு செவமாலை நடக்கும். எனக்கு அங்கபோக கொள்ளை விருப்பம். செவம் சொல்லுறதுக்கில்லை. அதுக்குமுதல் ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிசம் நடக்கிற கூத்துக்களைக் கேக்கத்தான். ஆராற்றை பெடிபெட்டையள் ஆரோட சுத்துதுகள் எண்டது தொடக்கம் நிறைய விசயங்கள் அங்க அலசப்படும். அதவிட மாவிடிக்க வாற மனுசியோட நடக்கிற கதையள், செத்தவீடு, கலியாண வீடெண்டா கும்பலா இருந்து நடக்கிற கதையள் எண்டு எப்பவுமே எனக்கு இந்தப் பூராயப் பேச்சுக்கள் நல்லாப்பிடிக்கும்.

நான்கூட உந்தப் பூராயம் எண்ட பேர ஒருத்தரும் கண்டுகொள்ளிறாங்களில்லையே எண்டு கவலைப்பட்ட காலமும் இருந்திச்சு. ஆனா காருண்யன் கொன்பூசியஸ் எண்டு ஒருத்தர், கவிதைகளெல்லாம் நிறைய எழுதுவார், வலைப்பதிவாளராகவும் இருந்தவர், அவர் உந்தப் பேர் சம்பந்தமான ஆதங்கத்தைச் சொல்லியிருந்ததை அவரின்ர பதிவில பாத்தன். அவரும் பூராயமெண்டு தன்ர ஒரு வலைப்பதிவுக்குப் பேர் வைக்க விரும்பினதாயும், நான் அதைப்பாவிச்ச படியா 'விடுப்புக்களும் விண்ணாணங்களும்' எண்டு அதுக்குப் பேர் வச்சதாவும் சொல்லியிருந்தார்.
அடடா! ஒருத்தராவது பூராயத்தைப் புரிஞ்சிருக்கிறார் எண்டு பேச்சந்தோசம்.

இன்னொரு குறிப்பு: இது பூராயத்தையொட்டியதாக வரும் சில வினைச்சொற்கள் பற்றியது.
ஈழத்தில 'பறையிறது' எண்டும் ஒரு சொல்வழக்கிருக்கு. 'கதைக்கிறது' எண்டதுக்கு இணையாச் சொல்லிறது. கதைக்கிறது எண்டது 'பேசுறது' எண்ட கருத்தில வருது. ஆனா எங்கட பேச்சு வழக்கில இந்தச் சொற்களுக்கிடையில பொருள்ரீதியில வித்தியாசமிருக்கு.

'பேசுறது' எண்டா ஒருத்தருக்குத் திட்டிறது எண்டும் எங்கட பேச்சுவழக்கில பொருள். அச்சொல் சொல்லப்படும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து நாங்களே பொருளைத் தீர்மானிப்போம். 'மேடையில் பேசினார்' என்று வந்தால் அவர் உரையாற்றினார் என்ற பொருளை எடுத்துக்கொள்வோம். ஆனால் 'அப்பா பேசுவார்' என்றால் அப்பா திட்டுவார் என்று பொருள். இது "ஏசுதல்'" என்றும் வரும்.
'அப்பா பேசிப்போட்டார்', 'அம்மா பேசுவா', 'கொப்பரிட்ட பேச்சு வேண்டப்போறாய்' என்பவற்றில் திட்டுதல் என்ற பொருளில் வருகிறது.

அதேபோல 'கதைக்கிறது' என்றால் அளவளாவுதல், உரையாடுதல் என்று பொருள்படும். 'பறையிறது' என்பதும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தருகிறது. ஆனால் 'அரட்டையடித்தல்' என்ற பொருளிலும் இந்தப் 'பறைதல்' பாவிக்கப்படும்.
"உங்க என்ன பறைஞ்சு கொண்டிருக்கிறா?"

பூராயத்தோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லாக நான் பரிந்துரைப்பது 'பறைதல்'.

"உள்ளநாட்டுப் பூராயம் முழுக்கத் தெரியும், உதுமட்டும் தெரியாதோ?"
"எடியே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. உங்கயென்ன பூராயம் பறைஞ்சுகொண்டு நிக்கிறா?"

"மனுசீன்ர பூராயக்கதையக் கேக்க விசர்தான் வரும்"

சரி, பூராயத்தின்ர நட்சத்திரக் கிழமையில அடுத்தடுத்த பதிவுகளில சந்திப்பம்.
***ஆனா என்ர வாரம் பூராயக்கதையளா இராது எண்டு மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.

நன்றி.

Labels: , , , ,


Wednesday, April 12, 2006

நெடுந்தீவும் தமிழனின் தொன்மமும்

நெடுந்தீவும் தமிழனின் தொன்மமும் என் அனுபவமும் -மீள்பதிவு

நான்கு தினங்களின்முன் இடப்பட்ட பதிவிது. இடையிற் காணாமற்போய்விட்டது. சிலபடங்களையும் சேர்த்து சிறிது மாற்றத்தோடு மீண்டும் இடுகிறேன்.

இன்று எரிமலை இதழில் தி.தவபாலன் அவர்கள் எழுதிய கட்டுரையொன்று படிக்கக் கிடைத்தது.

அக்கட்டுரை நெடுந்தீவைப்பற்றியும் வெடியரசன் கோட்டை பற்றியும் சொல்கிறது.அத்தோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் பொருட்கள் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்பிடுகிறது.

ஈழத்து நிலப்பரப்பிலிருந்து ஆகக்கூடுதலான தூரத்தில் தள்ளியுள்ள தீவு நெடுந்தீவு என்று அறிந்து வைத்திருக்கிறேன். (இது சரியா? கச்சதீவு எம்மாதிரி?) ஈழத்தில் தொல்லியற் சோதனைகள் சரிவர நடக்கவில்லையென்றே தான் நினைக்கிறேன். இவற்றுக்கு போர் முதன்மைக்காரணம்.

யாழ்ப்பாணத்திற் பல இடங்களிலும்,
வன்னியில் மல்லாவி, ஆனைவிழுந்தான், அக்கராயன் போன்ற இடங்களிலும் அவ்வப்போது இப்படி ஏதும் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை தீவிர கவனம் பெறுவதில்லை; ஆராய்ச்சித் தொடர்ச்சி நடைபெறுவதில்லையென்றே நினைக்கிறேன்.

இதையொட்டி நான் கண்ட ஒரு சம்பவம் பற்றிச் சொல்லும் முயற்சியிது.

1999 இன் நடுப்பகுதி. அப்போது ஒட்டுசுட்டான் வரை சிங்கள இராணுவம் வந்துவிட்டது. எட்டி ஒருகால் வைத்தால் புதுக்குடியிருப்பு. வெறும் பத்துமைல்கள் தான். மறுவளத்தால் நெடுங்கேணியிலிருந்தோ ஒட்டுசுட்டானிலிருந்தோ முள்ளியவளை நோக்கிக் கால்வைத்தாலும் அப்படித்தான். புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களவனிடம் போய்விட்டால் முல்லைத்தீவே தமிழர்களிடமில்லை.

ஜெயசிக்குறு காலகட்டத்தில் ஓரிடத்தில் முன்னணி அரணொன்று உடைபட்டால் சிறிது தூரத்திலேயே அடுத்த காவலரன் வரிசையில் இராணுவம் மறிக்கப்பட்டுச் சண்டை பிடிக்குமளவுக்கு ஒழுங்குகள் இருந்தன. போகப்போக அது இல்லாது போய்விட்டது. காரணம் எதிரி கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக்கடற்கரை வரை (நாயாறு தொடக்கம் மன்னார்க்கரை வரை) நூறு மைல்களுக்குமதிகமான முன்னணிப்போர்முனையைத் திறந்து விட்டிருந்தான். அதைவிட யாழ்ப்பாணப் பக்கத்திலும் முன்னேற்றப் போர்முனையைத் திறந்து விட்டிருந்தான்.

வன்னியில் மக்களும் இணைந்து எல்லைக் காப்புச் செய்துகூட ஒருவரிசை முன்னணிக் காப்பரணையே ஒழுங்காகப் பேண முடியாத நிலையில்தான் அன்றைய ஆட்பலம் இருந்தது. இந்தநிலையில் ஒட்டுசுட்டானிலிருக்கும் புலிகளின் முன்னணிக் காப்பரணை இராணுவம் தாண்டிவிட்டால் நேரே புதுக்குடியிருப்புதான். இடையில் ஏதுமில்லை.

அந்தக்காலம்தான் வன்னி மக்களின் உச்சக்கட்டப் போராட்டப் பங்களிப்பின் காலம். சுழற்சி முறையில் எல்லைப்படையாகச் சென்று முன்னணிக் காவலரணிற் கடமையாற்றுவது, பின்னணியில் பதுங்கு குழிகள் அமைப்பது உட்பட தொடர்ச்சியான களப்பணிகள் என்று நடந்துகொண்டிருந்தது.

ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வரும்போது கற்சிலைமடு தாண்டியதும் மன்னாகண்டல் என்று ஓரிடம் வரும். அங்கு ஒரு பதுங்குகுழி அமைக்கும் வேலை நடந்தது. அவ்விடம் மக்கள் குடியிருப்பற்ற காட்டுப்பிரதேசம். ஆனால் மக்கள் புழக்கமுள்ள ஒட்டுசுட்டான்- புதுக்குடியிருப்பு வீதியிருக்கிறது. (அன்றைய நிலையில் அவ்வீதியும் வெறிச்சோடித்தான் இருக்கும்.)

அவ்விடத்தில் பெரியதொரு மேட்டுப்பகுதியிருக்கிறது. அந்த மேட்டுப்பகுதியில் சிறியதொரு பிட்டி (அதாவது அந்த மேட்டுப்பகுதியில் இன்னொரு சிறியமேடு). பிட்டியிலிருந்து ஒட்டுசுட்டான் பக்கமாகப் பார்த்தால் ஒரு சிறு மோட்டையும் (யாழ்ப்பாணத்திலென்றால் அதுவெல்லாம் பெரிய குளம்) அதையொட்டிய வெட்டையுமிருந்தது. அந்தப்பிட்டியில்தான் சண்டைக்கான ஒரு பதுங்குகுழி அமைக்கும் வேலையில் பொதுமக்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

பிட்டியில் தோண்டும்போது கருங்கற்கள் தென்பட்டன. பிறகு அக்கற்களில் சில வேலைப்பாடுகள் தென்பட்டன. அப்போது உசாராகி ஆழமாக்காமல் மண்ணை அகட்டிக் கிண்டியபோது அதுவொரு பெரிய கருங்கல் தொகுதியென்று தெரிந்தது. பின் இன்னும் முயற்சித்ததில் படிக்கட்டொன்று தெரிந்தது. படிகட்டின் இரு பக்கத்திலும் சிங்கமோ புலியோ என்று சொல்ல முடியாத (சரியான உருவம் இப்போது ஞாபகமில்லை) உருவமொன்று செதுக்கப்பட்டிருந்த ஞாபகம். அந்தப் பிட்டியிலிருந்து அந்தப்படிக்கட்டு இறங்கிச் செல்கிறது. (நான் பார்க்கையில் நாலு படிகள் வரை தெரிந்தன).

நான் செய்தியறிந்து அங்குச் சென்று பார்த்தேன். பிட்டியின் வேறு பகுதியிலும் சற்று ஆழத்தில் வேலைப்பாடுள்ள கருங்கல் வந்தது. பதுங்குகுழி வேலை அப்படியே நின்றுவிட்டது. அந்தவிடத்தில் மண் தோண்டுவதும் நின்றுவிட்டது. மண்ணைக் கிண்டியபடி பார்த்த அப்படிக்கட்டைக் கொண்டு கற்பனை செய்தால் அச்சிறுபிட்டி ஏதோவொரு பீடம் போன்று தோன்றும். அப்பீடத்தின் மேல் மண்படிந்து பிட்டியானது போன்ற தோற்றம். பிட்டி சுமார் இருபதடி உயரம் வருமென்று நினைக்கிறேன். பிட்டியின் கீழ்ப்பகுதியில் தோண்டும்போது சிறிய செங்கற்கிடங்கொன்று வந்தது.

அது பெரிதாகக் கவனப்படுத்தப்பட்டதாக நான் அறியவில்லை. உண்மையில் அது சாதாரண விசயமாகக்கூட இருக்கலாம். அன்றைய நிலையில்,
“உந்த வெட்டையக் கவர் பண்ணிறதுக்கு அருமையான இடம் மச்சான். ஆனா பங்கர் அடிக்கேலாமக் கிடக்கு”
என்றுதான் அதற்குப் பொறுப்பானவருக்குத் தோன்றியிருக்கும். அத்தோடு இன்னொரு சரியான இடத்தைத் தெரிவு செய்தவதிலும்தான் கவனம் இருந்திருக்கும்.

இன்னொரு விசயத்தையும் நான் அவ்விடத்திற் கவனித்தேன். அச்சிறு பிட்டியிருக்கும் மேட்டுப்பகுதியைச் சுற்றி ஆளுயரக் கருங்கல் அரணொன்று இருக்கிறது. ஆனால் அது முழுச்சுற்றாக அம்மேட்டுப்பகுதியைச் சுற்றி முடிவதாகத் தெரியவில்லை. எங்கே போகிறதென்றும் தெரியவில்லை. பார்க்க, அது தானாக வளர்ந்தது போன்றுதான் தோன்றும். ஆனால் நேர்த்தியாகக் கற்கள் அடுக்கப்பட்டு பின் அவை வளர்ந்தது போன்றுதான் இருக்கிறது.

அதைவிட முத்தையன்கட்டுக்குளத்தின் பின்பக்கமாக இதேபோன்று கருங்கல் அரண் செல்கிறது. அது அம்பகாமம் வழியாகத் தொடந்துகொண்டே செல்கிறது. அது ஏற்கெனவே நான் சொன்ன மன்னாகண்டல் அரணுடன் தொடர்புடையதா? அல்லது இடையிலிருந்து தொடங்குகிறதா என்றும் தெரியவில்லை. இவ்வரண் இருக்கும் பகுதிகள் முழுவதும் இன்றும் அடர்ந்த காடுகள்தான். மக்கள் வாழ்விடங்களுக்குள்ளால் அவை செல்லவில்லை. ஆனால் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையாக சில இடங்களிற் செல்கிறது.

அப்போதெல்லாம் இதுபற்றி யாரிடமும் கேட்கும் ஆவல்கூட இல்லை. அங்கிருக்கும் காட்டைக் கரைத்துக் குடித்த வேட்டைக்காரரிடம் இதுபற்றிக் கேட்டால் ஏதாவது தெரியவரும். குறிப்பாக மைல்கணக்கில் நீண்டிருக்கும் அக்கல்லணை இயற்கையாகத் தோன்றியதா அல்லது யாராவது “வேலை மினக்கெட்டு” செய்தார்களா என்று அறிய ஆவல். மன்னாகண்டல் மேட்டை பிறகும் கிண்டிப்பார்த்தார்களா? ஏதாவது புதிதாக இருந்ததா, அல்லது சாதாரண விசயந்தானா என்றும் அறிய ஆவல்.

வன்னியிற் கண்டெடுக்கப்பட்ட சில தொன்மப்பொருட்கள்.
அக்கராயன் மண் இலட்சினை

ஆனைவிழுந்தான் முது மனிதர் கலை
இன்னும் சில தொல்பொருட் படங்களுக்கு
http://www.eelavision.com/?gallery=5008

படங்கள்: ஈழவிசன்

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]