Wednesday, February 21, 2007

புலியாக நினைத்த நரியும் தமிழ்தெரியாத உணர்வுகளும்

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எண்டு பதிவு வந்திருக்கு.
நரி, நரியாகவே இருந்துவிடுவது நல்லதுதான்.
நரி புலிவேஷம் போடுறது உண்மையான புலிகளுக்கு ஆபத்து.

வன்னியனுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாதா எண்ட சொறிக்கேள்வி வேறு கேட்டிருக்கிறார்.
யாருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது?
"உணர்வுகள், தான் கேள்விப்பட்டவற்றைத் திரும்பத் திரும்ப உண்மைபோலச் சொல்கிறார்" என்றுதான் முன்னர் இட்ட பதிவில் எழுதியிருந்தேன். அதைக்கூட விளங்கிக்கொள்ள முடியவில்லை.இவருக்கு இவைபற்றி நேரில் ஏதும் தெரியாதென்பது நான் ஏற்கனவே விளங்கிக்கொண்ட விடயம்.
பெயரிலி தன் பின்னூட்டத்தில் என்ன எழுதினார் என்பதையே விளங்க முடியாமல், பதிவுபோட்டவர் என்னைப்பார்த்துக் கேட்கிறார் இக்கேள்வி.

முதலில் அவரின் பொய்களை மறுத்து எழுதிய கருத்துக்களுக்கு எந்தப்பதிலுமே அவரால் வைக்கப்படவில்லை. வைக்கவும் முடியாது. போகிற போக்கில் பிரபாகரன் அப்படி, புலிகள் இப்படி என்று பொய் சொல்லிவிட்டுப் போவதைத்தவிர அவரால் எதையும் எதிர்கொள்ள முடியாது. தான் சொன்ன தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இல்லை.
பிரபாகரன் வீட்டு நாய்க்கு இவரைப்பற்றித் தெரியும் என்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்?
அல்லது அந்த நாய்கூட தன் எதிராளிகளின் கூற்றை நம்பாது என்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்?
(மேற்குறிப்பிட்ட இருகேள்விகளையும் சேர்த்து வாசிக்கவும். பிறகு வன்னியனுக்குத் தமிழ்தெரியாது எண்டு இன்னொருக்காச் சொல்லக்கூடாது.)
தான் சொல்வதெல்லாம் உண்மை என்பதையா?

புலிகள் இயக்கத்தில் மதங்கள் கையாளப்படும் விதம்பற்றி இவ்வளவு எழுதியபின்னும் அதைப்பற்றி ஒரு பேச்சில்லை, ஆனால் மதம் இன்னும் முக்கியமாகவே இருக்கிறது என்று திரும்பவும் சொல்லிவிட்டுப் போகிறார்.

தனக்குத்தானே பின்னூட்டமிடுவது யாரென்று இங்கு எல்லோருக்கும் தெரியும். அதைவிட்டுவிடுவோம்.
அவரைப்போல இல்லாமல் நாங்கள் எல்லாப் பின்னூட்டங்களையும் வெளிய விடுறம் எண்டதுதான் அவருக்குப் பிரச்சினைபோல.
பெயரிலியின் பெயரிணைப்பு எந்தவலைப்பதிவுக்கும் இட்டுச்செல்லவில்லையென்றால் அவர் போலி, ஆனால் ஆரூரானுக்கு ஆதரவாக கும்மாங்குத்து குத்துபவர்களும் அப்படியே இருந்தாற்கூட அவர்களைக்குறித்து எக்கருத்துமில்லை.

நான் அவரின் பதிவிலே ஒரு பின்னூட்டமி்ட்டது உண்மை. 'நான் உங்களுக்கு மறுப்புப்பதிவொன்று இட்டுள்ளேன்' என்ற விவரத்தை ஒரு பின்னூட்டமாக அங்கு இட்டேன். அதை வலைப்பதிவுலகில் ஒரு நடைமுறையும்கூட. ஆனால் இந்தப் பதிவருக்கு அது வேறுமாதிரித்தெரிகிறது.
தனது பதிவிலிருந்து என்பதிவுக்கு ஆட்களை வரவைக்கவே நான் அந்தப்பின்னூட்டத்தை இட்டேனாம். தான் அதை வெளியிட மாட்டாராம்.
இவரது கதைப்படியே இருந்தாலும்கூட, தனது பதிவுக்கு மறுப்புப்பதிவொன்று இடப்பட்டுள்ளதென்பதையே மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதென்று மறைக்க முற்படும் இந்த மனநோயாளியைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நான் பதிவுபோட்ட காரணமே அவர் தனக்குப் பாதகமாக வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பதால்தான்.
கருத்துலக பாசிசத்தை நடத்திக்கொண்டு பெரிய கருத்துக்களம் நடத்துகிறாராம்.

இப்போது நிதர்சனத்தை புலியாதரவு என்றுவேறு அடுத்த கோமாளித்தனம் செய்ய முற்பட்டுள்ளார். நிதர்சனத்தை எதிர்ப்பவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் என்கிறார். நிதர்சன ஆதரவிலேயே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய மனநோய் பிடித்தவர் என்று. நிதர்சன ஆதரவுப்புத்தியோடே இயங்கும் இவரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?
நிபந்தனையின்றி நிதர்சனத்தை எதிர்ப்பவர்களின் நானுமொருவன்.
எங்களை புலியெதிர்ப்பாளராக்கிவிட்டு இந்தக் கோமாளிதான் புலியாதரவாகிவிட்டார்.

தனது பழைய பதிவுகளை வாசித்தால் தன்னைப் புரிந்துகொள்ளலாம். ஆம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பார்ப்பனீயத்தை காரசாரமாக எதிர்த்து எழுதிக்கொண்டிருதபோது எப்படி இடையில் தடம் மாறியது, பின் பார்ப்பனீயத்தை ஆதரிக்கவேண்டியதே ஈழத்தமிழர்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று எழுதுமளவுக்குப் போனது, இடையில் கிடைத்த இந்திய இந்துத்துவவாக்களின் ஏகோபித்த ஆதரவு, இன்று உணர்வுகள் என்ற வலைப்பதிவு இருக்கும் அரசியல் நிலை என்ன என்பவற்றைத் தெளிவாகவே பார்த்துக்கொண்டு வருகிறோம்.
ஆனால் ஆரூரான் மட்டும் பழையவற்றைத் தேட மாட்டாராம். வன்னியனைத் தேடுறதை விடுவம். பெயரிலி இவ்வளவு காலமும் என்ன எழுதினார், ஆறுமுகநாவலருக்காக அவர் இந்தியத் தனத்தோடு எவ்வளவு சண்டைபிடித்தார், ஈழத்தேசியத்தில் பெயரிலியின் நிலையென்ன என்பவற்றை அறியாமல் - அறிந்துகொள்ள விருப்பின்றி துரோகிப்பட்டம் கொடுக்கும்போது இந்த ஆராயும் தன்மை எங்குப்போனது? நிதர்சனப் புத்தியின் தொடர்ச்சிதானே?

முதலில் கருத்துச்சொன்னவர்களைக் குறிப்பிட்டு பதிவெழுதிறது நல்லது. அவரின்ர கடசிப்பதிவில சொல்லியிருக்கிறதுகள் ஏதோ பொத்தாம்பொதுவாச் சொல்லப்படுது. அதில சொல்லியிருக்கிற கருத்துக்கள் பல எனக்குரியதில்லை. ஆனா ஏதோ வன்னியனுக்குரிய மாதிரி எழுதப்பட்டிருக்கு. அவர் விமர்சிக்கிற கருத்துக்களை யார்யார் எழுதினார்கள் என்பதைத் தனித்தனியக் குறிப்பிட்டு விமர்சித்தால் நன்று. அதுவொரு ஒழுங்குமுறை.

பின்னூட்டங்களை மறுப்பது பதிவரின் உரிமையாம். அதை யாரும் கேள்விகேட்க முடியாதாம்.
ஐயா ராசா, அது உங்கள் உரிமைதான். நீங்கள் ஏதோ உங்கட வீட்டுப்பிரச்சினை பற்றிக் கதைச்சு நாங்கள் வந்து சும்மா உங்களோட தேவையில்லாமல் தனகிக்கொண்டிருக்கிறோம் எண்டோ நினைக்கிறியள்?
ஈழத்தவரின் அரசியல் பிரச்சினை இது. நீங்கள்மட்டும்தான் ஈழத்தவர் எண்டில்லை. நாங்களும்தான். நாங்கள் மட்டும்தான் எண்டில்லை. நீரும்தான்.
நீர் ஈழுத்தவர் சார்பா ஒரு கருத்துச் சொன்னால் - அதுவும் ஈழத்தவரின் கருத்து இதுதான் எண்டு நீர் அடிச்சுச் சொல்லேக்க அது மாற்றுக்கருத்து எங்களிட்ட இருக்கிறதால அதைச் சொல்லவேணும். அப்பிடியில்லாட்டி நீர் சொல்லிறதுதான் சரியெண்டு நிலைச்சிடும். அதைத்தான் நீரும் விரும்பிறீர்.
பின்னூட்டங்களை நிப்பாட்டிறதெண்டா முழுக்க நிப்பாட்ட வேணும். அதென்ன உமக்கு ஆதரவாயும் உமக்குப் பெரியளவில பாதகமாயில்லாதுகளாயும் பாத்து மட்டும் விடுறது?

முதல் பின்னூட்டத்தில போலி எண்டு விளிச்சதை விளக்கி அடுத்த பின்னூட்டம் போடக்கூட ஒருவனுக்கு அனுமதியில்லையெண்டால் பிறகென்ன மண்ணாங்கட்டிக்கு நீர் பதிவு நடத்திறீர்? நீர் ஒருத்தனைக் கண்டபடி திட்டலாம், ஆனா திட்டுவாங்கிறவன் தன்ர நியாயத்தைச் சொன்னால் அதை ஒளிச்சு வைச்சிடுறதோ? என்னப்பு நியாயம்?
இதுக்குள்ள பெரிசா விவாதம் நடத்த வந்திட்டார். அவருக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இன்னும் கொஞ்ச அனானிகள்.

தன்ர பின்னூட்டம் வெளிவராட்டி ஒருவன் நியாயம் கேட்கத்தான் செய்வான்.
தமிழ்மணத் திரட்டியில மட்டுறுத்தலைச் செய்யச்சொல்லி நிர்வாகம் அறிவித்தபோது, வலைப்பதிவு உரிமையாளர் தனக்குப்பிடிக்காத பின்னூட்டங்களை நிறுத்திவிடுவார் என்று சிலரால் சொல்லப்பட்டது. ஆனா நீர்தான் அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறீர்.
நல்லது தொடர்ந்து செய்யும்.

ஆனா உந்த புலியாதரவுப் பூச்சாண்டி காட்டி பேக்காட்டாதையும்.
அப்பிடியே வடிச்செடுத்த "யாழ்"த்தனத்தோட வந்திருக்கிறீர்.
(இதை யாழ்ப்பாணத்தனமென்றோ யாழ்.கொம் தனமென்றோ வசதிபோல் எடுக்கலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐயா இன்னொரு கேள்வி.
கேள்வியில்லை சவால் எண்டே வைச்சுக்கொள்ளும்.
இஞ்ச வலைப்பதிவுலகில ஈழத்தமிழர்கள் பலர் வலைப்பதிவு வைச்சிருக்கினம்.
இதில எத்தினைபேர் உம்மோட முழுக்க ஒத்துப்போயினம் எண்டு ஒருக்கா யோசிச்சுப்பாரும்.
ரெண்டுபேரைத்தவிர மிச்ச ஆக்கள் ஏதோவொரு விதத்தில முரண்பட்டுத்தான் நிக்கினம்.
அந்த ரெண்டுபேர்கூட (வெற்றி, மயூரேசன்) "ஈழத்தில சாதிப்பிரச்சினை முடிஞ்சுபோச்சு" எண்டு வண்டில் விடுறதிலதான் உம்மோட துணைநிற்கினம். மற்றும்படி அவர்களுக்கும் உம்மோட கருத்துவேறுபாடு நடந்திருக்கு.

பிறகெப்படியப்பன் நீர் சொல்லிறதுதான் ஈழத்தமிழரின்ர குரல் எண்ட நினைப்போட தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறீர்?
நிறையப்பேர் ஆதரித்தால்தான் அது சரியான கருத்தென்று நான் சொல்லவரவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அரசியற்பார்வையில்லை, எனக்கு மட்டும்தான் உண்டு என்று மமதையோடிருப்பதும் மற்றவர்க்கான கருத்துரிமையை மறுக்கும் பாசிசப்போக்கும் ஆபத்தானவை என்பதைச் சுட்டவும் உங்களை ஒரு சுயவிமர்சனத்துக்கு யோசிக்க வைக்கவுமே இது.
___________________________________
பூராயத்தில் பொதுவாக இப்படியான தனிநபர் சிக்கல் தொடர்பாகப் பதிவிடுவதில்லை.
இரண்டு வருடகாலத்தில் கறுப்பிக்கென்று ஒருபதிவும் சிறிரங்கனுக்கென்று ஒருபதிவும் இட்டுள்ளேன். இப்போது இந்தத் தொல்லை.

Labels: ,


Tuesday, February 20, 2007

ஆட்டக்கடிச்சு மாட்டக் கடிச்சு பிரபாகரனையும்...

உணர்வுகள் என்ற பதிவாளர் போகிறபோக்கில் பொய்யொன்றைப் பரப்பிவருகிறார்.
அதன்மூலம் தான் நினைப்பதை, தனது வாதத்தை நிலைநிறுத்த கீழ்த்தரமான முறையில் முயல்கிறார்.

"பிரபாகரன் வற்றாப்பளையில் பொங்காமல் எந்தப் போருக்கும் செல்வதில்லை" என்ற வடிகட்டின பொய்யொன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறார்.
இப்போது மடுமாதாவும் சேர்ந்துவிட்டா.

இது முற்றிலும் கடைந்தெடுத்த பொய்யென்பதைச் சொல்லிக்கொள்ளவே இந்த அவசரப்பதிவு.
எந்தப் போருக்குப் போவதற்கும் எங்கும் பொங்கல் நடத்தப்பட்டதில்லை.
கோயிலில் மந்திரித்த நூல் கட்டுவதற்குக்கூட சிலதுறைகளையும் சில செயற்றிட்டங்களிலுமுள்ள போராளிகளைத் தவிர்த்து யாருக்கும் அனுமதியில்லை.


நேர்த்திக்கடன் என்றபேரில் காவடிகூட எடுக்க முடியாது. அதற்கு முற்றாகத் தடை.
முழுநேரப் போராளிகளை விடுங்கள்.
ஊதியத்துடன் பணிபுரியும் துணைப்படையினருக்கிருக்கும் கட்டுப்பாடுகள் எவ்விதத்திலும் குறைந்ததில்லை. போராளிகள் போலவே புகைத்தல் மது என்பவற்றுக்கு மிக இறுக்கமான தடை இருப்பதுபோல் மத விடங்களுக்கும் இருக்கிறது. துணைப்படையில் பெரும்பான்மையானோர் குடும்பத்தலைவர்கள். குழந்தைக்கு நேர்த்தியென்றுகூட காவடி தூக்க முடியாது. ஏனென்றால் போராளிகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்றுத்தான் அவர்கள் துணைப்படையில் சேர்கிறார்கள். (இதை மதவுரிமை தலையீடு என்று சிலர் புலியெதிர்ப்பு நோக்கத்துக்காகச் சொல்லலாம்.)
இதுவும் மதச்சார்பின்மைதான்.
ஆனால் உண்மையை விட்டுவிட்டு எதிர்வளமாக கதை திருப்பப்படுகிறது.
மதச்சார்பின்மை என்பதை தனக்கேற்ற முறையில் வெளிப்படுத்துவது என்ன சார்பு?

தீபாவளியைத் தடைசெய்யாவிட்டாலும் அதற்கு எதிரான உணர்வு வெளிப்படையாகவே அங்கு இருக்கிறதே?
(தீபாவளிக்கும் சைவத்துக்கும் தொடர்பில்லையெண்டு ஒரு பதிவு வந்தால் மகிழ்ச்சி)


புதுவை இரத்தினதுரை நல்லூர்க்கந்தனை விளித்துப் போராட்டப் பாடல்கள் எழுதியவை வைத்து புலிகள் இயக்கத்தில் சைவத்தன்மையைக் கண்டுப் புல்லரித்துப் போனவர்கள் வன்னிக்கு வெளியே நிறைய இருக்கிறார்கள். புலத்தில் ஏராளம்பேர்.
ஆனால் அந்த மனுசன் பொதுவிலேயே சாமிகளையும் மதத்தையும் கிழிப்பதைப் பார்த்தவர்களுக்கு மயக்கமேதும் இருப்பதில்லை; பொதுவிலே பழித்தும் பாடலில் விளித்தும் எழுதும் தன்மையையும் புரிந்துகொண்டிருப்பார்கள்.


சரி, விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரான தமிழேந்தி, கல்விக்கழகப் பொறுப்பாளரான இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோருட்பட சிலர் மதம், ஆரியம், திராவிடம், பார்ப்பனீயம் பற்றி பொதுமேடைகளிற்கூட பேசியைவை எவையுமே உணர்வுகள் கேட்டிக்கவில்லையா? அவருக்குரிய தகவல் மூலங்கள்கூட அறிந்திருக்கவில்லையா? (நான் சொல்வது நிகழ்காலம்பற்றி). மேற்கூறியவர்கள் தீவிர தமிழ்ப்பற்றாளர்(வெறியர்?)கூட.
இவர்களிருவரின் கருத்தும்தான் புலிகளினதோ ஈழத்தமிழரினதோ கருத்தென்று நான் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. ஆனால் கருத்துலகில் செல்வாக்குச் செலுத்தும் மிக முக்கிய நபர்கள் அவர்கள்.

சுயமரியாதைத் திருமணங்கள் எங்களிடம் கிடையாது என்று உணர்வுகள் சொல்லிக்கொள்கிறார்.
போகட்டும்.
சுயமரியாதைத் திருமணம் என்பதை விட்டுவிவோம்.
தமிழ்த்தேசியத்தைத் தாங்கி நிற்பதாக, அதை வழிநடத்துவதாக நானும் உணர்வுகள் வலைப்பதிவு வைத்திருப்பவரும் கருதும் பிரபாகரனும் அவரது இயக்கமும் என்ன செய்கிறது?

போராளிகளின் திருமணங்கள் எப்படி நடக்கின்றன?
தாலி கட்டாமல் திருமணம் செய்வதையே வரவேற்பதாக போராளிகளை "பிரபாகரனின்" தலைமை ஏன் அறிவுறுத்துகிறது?
தாலியில்லாத திருமணங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் நடப்பது ஏன்?
ஏன் ஐயரோ மந்திரமோ வைத்து ஒரு திருமணம்கூட நடத்தப்படுவதில்லை?
கிறிஸ்தவ முறையில்கூட எந்தத்திருமணமும் நடப்பதில்லை?
போராளிகளின் திருமணங்கள் அனைத்திலும் மதம் முற்றாகப் புறக்கணக்கப்பட்டு நடத்தப்படுவது ஏன்?

இயக்கத்தில் திருமணம் முடிந்தபின் சம்பிரதாயமாக, குடும்பத்தவரின் அரியண்டத்தால் கோயிலுக்குப் போய் தாலி கட்டிய தளபதியொருவரை அமைப்பிலிருந்தே நிறுத்தவேண்டி வந்தது ஏன்?

இதுவொன்றும் தெரியாமல் உணர்வுகள் வலைப்பதிவு வைத்திருப்பவர் சும்மா உளறக்கூடாது.
தான் கேள்விப்பட்டதாக நினைப்பதைத் திரும்பத்திரும்பச் சொல்வதன்மூலம் தான் சொல்லும் தர்க்கங்களுக்கு வலுச்சேர்க்கவே இவர் முனைகிறார்.
தொடக்ககாலத்தில் நடந்த பிரபாகரனின் திருமணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதை எல்லாருக்கும் பொருத்திவிடுவது சரியன்று. இயக்கத்தில் காலத்துக்குக் காலம் நடைமுறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளது, தொடக்கத்தில் மாவீரரின் வித்துடல்கள் அனைத்தையும் எரிப்பதிலிருந்து பின் அனைத்தையும் புதைப்பதற்கு மாறியதுபோல.

குறிப்பிட்ட பதிவரின் ஏனைய கருத்துக்கள் தொடர்பில் எனக்கு எக்கருத்துமில்லையென்றபோதும் இப்படியான கூற்றுக்களை உடனேயே மறுக்கவேண்டிய தேவை - அதுவும் திரும்பத்திரும்பச் சொல்லும் நிலையில் - உள்ளதென்பதால் இம்மறுப்புப் பதிவு.

மற்றவர்கள் என்ன பூசுகிறார்களோ இல்லையோ, முதலில் நீங்கள் இப்படியான பொய்மையான பூச்சுக்களை நிறுத்துங்கள்.

மதச்சார்பின்னை என்பது எல்லா மதத்தையும் கும்பிடுவதாகச் சொல்லி நிறுவவேண்டியதில்லை. உண்மையாக இருக்கும் (பிரபாகரனின்) சார்பின்மையாக எதையும் கும்பிடாமல் இருப்பதைச் சொல்வதே சரி.

பிரபாகரனின் மாமனாரின் சைவத்தனத்தை மருமகனுக்கும் பொருத்துவதில் புலியெதிர்ப்பாளர்களும், புலியாதரவில் மிதமிஞ்சிய சைவத்தனமானவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடக்க காலத்திலே பிரபாகரன் மொட்டையடித்திருந்ததை, திருப்பதியில் மொட்டையடித்ததாக இன்றுவரை சொல்லிக்கொண்டு திரிவோருண்டு. இதையெல்லாம் மறுக்கும் விதமாக தான் எதிரிப்படையினரால் அடையாளப்படுத்தப்படாமலிருக்கவே மொட்டையடித்துத் திரிந்தேன் என பிரபாகரன் ஒளிச் செவ்வியில் சொல்லியிருக்கிறார்.
இதுபோல் இன்னும்பல கதைகள் கட்டப்பட்டு, பரப்பப்பட்டு உலாவருகின்றன.
பிரபாகரன் கிறித்தவத்துக்கு மாறிவிட்டார், மகனுக்குக் கிறித்தவப் பெயர் வைத்துவிட்டார், கிறித்தவ நாட்டுக்காகச் சண்டைபிடிக்கிறார் என்று இந்திய இந்துத்துவவாதிகள் புலம்புவதைப் போல்தான் இவையும்.

________________________________
ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று உணர்வுகள் (அவரோடு கூட்டுச் சேர்ந்து வெற்றி, மயூரேசன்) புலம்புவதைக்காண திகைப்பாக இருக்கிறது. அல்லது அவரே இறுதியாகச் சொன்னதுபோல், "எங்கள் அழுக்குகளை மற்றவர்க்குக் காட்டக்கூடாது" என்ற கோட்பாட்டின்படிதான் தனக்கே பொய்யென்று தெரிந்தும் தொடர்ந்து சொல்கிறாரோ?
இதே கண்ணோட்டத்தில்தான் தமது பதிவுப்பெயர்களினூடாக பின்னூட்டம் இட்டோரின் கருத்துக்களைக்கூட வெளியிடாமல் முடக்கி வைத்திருக்கிறாரோ என்னவோ?

களத்தைவிடவும் புலத்தில் அந்தச்சிக்கல் அதிகமிருப்பதைப் பார்க்கிறோம்.
தேசிய நாளிதழ்கள் என்று இலட்சக்கணக்கில் விற்பனையாகும் முன்னிணிப் பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களில் வராத சாதியா?
ஒழித்துவிட்டதாகச் சொல்லி பம்மாத்துப் பண்ணுவது என்ன அரசியல்?
அதை ஒளித்து வைக்கக்கூட முடியாதபடி முற்றியிருக்கிறது.
__________________________

நெடுங்காலமாகவே இணையத்தில் எழுதிவரும் பெயரிலி என்ற இரமணிதரனை ஈழ எதிர்ப்பாளனாகவும், துரோகியாகவும் (இச்சொல் தனது உண்மையான கருத்தையிழந்து கண்டகண்ட குஞ்சு குருமன்களாலும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்படுகிறது) அடையாளப்படுத்தி குறிப்பிட்ட பதிவர் எழுதுவது பெரிய வேடிக்கை.
மற்ற வலைப்பதிவுகளையும் வாசிக்க சிறிது நேரமொதுக்கினால் புண்ணியமுண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வலைப்பதிவில் தமிழ்மண திரட்டி நிர்வாகம் தன் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியை இந்த வலைப்பதிவுக்கு நிறுத்திக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தாமல் வரும் அனைத்துப்பின்னூட்டங்களும் வெளியிடப்படும்.
இதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேனாயினும் இப்பதிவில் இதைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் இருக்கிறது.

Labels: ,


Wednesday, May 31, 2006

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

சிறிரங்கன் சிக்கல் குறித்த பதிவு.

இப்பதிவு இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு முதன்மைச் சம்பந்தமில்லாதது. எவ்விதத்திலும் அதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இது உதவாது. எனவே ஏதோ விசயமிருப்பதாக நம்பி ஏமாற வேண்டாம்.
ஓர் எதிர்ப்புப் பதிவை இடவேண்டுமென்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை. அப்பிரச்சினையைத் திசைதிருப்பும், கொச்சைப்படுத்தும் எண்ணமுமில்லை. இந்தத் தெளிவோடு மேற்கொண்டு படியுங்கள்.

"இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கண்டிக்கிறேன்".

இதுவரை நான் 'உண்மையாயிருக்கும் பட்சத்தில்" என்ற சொற்றொடரைப் பாவிக்கவில்லை. ஆனால் இப்போது பாவிக்கிறேன்.
இச்சொற்றொடர் பாவித்த சிலர் மீது பொடிச்சி போன்றவர்களிடமிருந்து விழுந்திருக்கிறது சாத்து. நான் பாவிக்கவில்லையென்றாலும் அதே நிலைதான் எனதும் என்பதாலும், எதிர்வினை இல்லாமலே விட்டால் தாங்கள் சொன்னதுதான் சரியென்று சிந்திக்கத் தலைப்படுவதோடு(ஏற்கனவே சிறிரங்கன், ஜனநாயகம், இராயகரன் போன்றவர்களுக்கு எதிர்வினை இல்லாததால் அவர்கள் சொல்வது சரியென்றும் புலி அடிவருடிகளின் ஆற்றாமையென்றும் பி.கே சிவகுமார் சொல்லித் திரிந்தது போல) தொடர்ச்சியாக இதுபோன்ற இலவச அறிவுரைகளை / கண்டனங்களை என்போன்றவர்கள் சந்திக்க வேண்டிவருமென்பதாலும்,
இச்சிறு பதிவு.

மீண்டும் சொல்கிறேன்.
சிறிரங்கனின் விசயம் "உண்மையாயிருக்கும் பட்சத்தில்" எனது கண்டனமும் அவருக்கு என் ஆதரவுமுண்டு.
மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பதிவு எழுத வந்த காரணத்தை மட்டும் பார்த்துச் செல்கிறேன்.

இந்த 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என் சொற்றொடர் சிலராற் பாவிக்கப்பட்டது சிறிரங்கனின் இரண்டாம் பதிவுக்கு முன்பு என்பதை ஒரு தகவலாகச் சொல்லிவிட்டு மேற்கொண்டு செல்கிறேன்.
யாரும் ஒருவர் சொல்வதை உண்மையென்று அப்படியே நம்பி துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுவும் இப்படியான விசயங்களின் போது தங்களின் சந்தேகத்தைத் தெரிவிக்க குறைந்தபட்சமாக இப்படியொரு சொற்றொடரைப் பாவிப்பதை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதாலேயே அவர்கள் உண்மையில் அனுதாபம் தெரிவிக்காதவர்கள் ஆகிவிடுவார்களா? இப்படிச் சொல்லாமல் நேரடியாக வந்து சொல்பவர்களின் எத்தனை பேர் உண்மையில் சிறிரங்கனில் அக்கறையுள்ளவர்? புலியைச் சாட அருமையானதொரு சந்தர்ப்பமென்று வருபவர்கள் எத்தனை பேர்?

நிற்க, என்போன்றவர்கள் சிறிரங்கன் போன்றோரை எழுந்த மானத்தில் நம்ப முடியாமலிருப்பதற்கும், இப்படியான தருணங்களில் 'இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில்' என்று அடைமொழி போடுவதற்கும் வலுவான காரணங்களுண்டு. அவர் வலையுலகில் வந்தகாலம் முதல் வாசித்துவருபவன் என்ற முறையில் என் பட்டறிவு அதுதான்.

"புலிகளால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் போருக்கு வளர்க்கப்படும் வேள்விக் கிடாய்கள்" என்று சிறிரங்கன் எழுதினார். அதை விமர்சித்த போது, 'உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும். உலகம் முழுவதும் எனக்குத் தொடர்பிருக்கிறது' என்றுதான் பதில் வந்தது.
நேரே சம்பந்தப்பட்ட, அறிந்த, பழகிய விசயங்கள் மட்டில் இப்படியொரு பொய்யைச் சொன்னதையும் அதையே கேள்வியின்றி நிறுவியதையும் பார்த்துக்கொண்டு பேசாமலே இருக்க முடிந்தது. முல்லைத்தீவில் ஒரு சிறுவர் இல்லம் சுனாமியில் அகப்பட்டு அனைவருமே கொல்லப்பட்டதை, 'புலிக்காக வளர்க்கப்பட்டவர்கள் அழிந்தார்க்ள' என்று ஒருவித மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்ட ஊடகத்தின் தொடர்ச்சியாக்குமென்று நினைத்து விட்டாயிற்று.


மேற்படிச் செய்தியை உண்மையென்று நம்புவதாக நான் நினைக்கும் பொடிச்சி போன்றவர்களால் எந்தக் கேள்வியுமின்றி சிறிரங்கனின் கூற்றை நம்பமுடிவது சரியென்றால், நேரடி அனுபவத்தில் பொய்யென்று வலுவாகத் தெரிந்திருக்கும் என்போன்றவர்கள் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற அடைமொழியைப் போடக்கூடத் தகுதியில்லாமற் போயிற்றோ?

"காயடிக்கப்பட்ட போராளிகள், போராளிகளுக்குக் காயடித்தல்" என்று நானறிய இருமுறை சொல்லியுள்ளார். ஆனால் உந்த 'காயடிப்பு' எண்டதுல ஏதாவது உட்கருத்து, படிமம் எண்டு ஏதாவது கோதாரி இருக்கோ அல்லது நேரடியான அர்த்தம் தானோ எண்டு விளங்காததால (எனக்குக் கொஞ்சம் விளக்கம் குறைவுதான்.) அதைப்பற்றிக் கதைக்காமலே போறன்.

சிறிரங்கன் மட்டுமன்றி எந்தப் புலிவிமர்சகனையும நான் இதே கண்ணோட்டத்திற் பார்க்க வெளிக்கிட்டு பல மாதங்களாகிவிட்டன.
புலியை எதிர்த்துக் கருத்துச் சொல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதை வரவேற்கிறேன். ஆனால் ஏன் புளுகு மூட்டைகளை அவிழ்க்க வேண்டும். இது புலியெதிர்ப்புக் கருத்தாளிகளின் வங்குரோத்துத் தனத்தையல்லவா காட்டுகிறது?

தேனி போன்ற வடிகட்டின புளுகுத் தளங்களை விட வலைப்பதிவில் எழுதுபவர்களை நான் வித்தியாசப் படுத்தியே வைத்திருக்கிறேன். (தேனிக்கு எதிர்முனையில் நிதர்சனத்தை வைக்கலாமென்றாலும் நிதர்சனம் தேனியை நெருங்க முடியாதென்றே நினைக்கிறேன்)

"பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் உல்லாசமாகப் படிக்கிறார், அவருக்கு மகேஸ்வரன் தான் விசா எடுத்துக் கொடுத்தது" என்று ஒரு புளுகுப்பதிவு வருகிறது. அதில் ஒருவர், "அது பிழை, அவர் வன்னியில்தான் இருக்கிறார், போராளியாகவே இருக்கிறார்" என்று பதில் போட,
"அவர் வெளிநாடு போனாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அப்படிப் போகலாமா இல்லையா என்பதே இப்பதிவின் விவாதம்"
என்று ஒரு குத்துக்கரணம் அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

சிறிரங்கனின் பதிவிலேயே, "வன்னியன் போன்றவர்களுக்கு மூளை சுகமில்லை, அவர்களைச் சரியானபடி எங்காவது காட்டி வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும் ,சிறிரங்கனுக்கும் இராகரனுக்கும் தான் மூளை இருக்கிறது, அவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்தவர்கள்" என்றும் ஒருவர் சொல்லிவிட்டு அதைப் பிறகும் வந்து நிறுவுவார்.

"பிரபாகரனின் மனுசி ஐரோப்பா சுற்றுகிறாள்" என்று இன்னொரு பதிவர்.
அண்மையில் கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது சம்பந்தமான பதிவொன்றில் ஒருவர்,
'சும்மா இருங்கோடாப்பா, அங்க பால்ராச்சை சுத்தி வளைச்சுப் போட்டாங்களாம். ஆள் தப்பிறது கஸ்டம்தான்' என்ற பாணியிற் சொல்லிவிட்டுப் போகிறார். தாங்கள் நடக்க வேண்டுமென்று நினைக்கும் சம்பவங்களை உண்மைபோல சிருஸ்டித்து அள்ளிவிட்டுக்கொண்டு போவார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் புளுகுகளை அவர்களே நம்பத் தலைப்பட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பல சந்தர்ப்பங்களில் தேனி மனோபாவத்திலிருந்து மாற்றமில்லாத பதிவுகள் வரும். தேனி மனோபாவம் என்பதற்குப் பல காட்டுக்களைக் காட்ட முடியுமென்றாலும், சுனாமி நேரத்தில் புலிகளில் 2000 பேர் கொல்லப்பட்டனர் என்று தாங்களே உருவாக்கிச் செய்தி போட்டதும் தொடர்ச்சியா அதைச் சொல்லிக்கொண்டிருந்ததும், பிரபாகரன் இறந்துவிட்டாரென்ற கதையை அரசதரப்பே பின்வாங்கிவிட்ட நிலையிலும்கூட அது உண்மையென்று தொடர்ந்து சொல்லிவந்ததும், பிரபாகரன் நோர்வேத் தூதுவரைச் சந்தித்த பின்னும், தமிழ்ப் புத்திசீவிகளைச் சந்தித்து சுனாமி மீட்புப்பணி பற்றிக் கதைத்த பின்னும், "அது பிரபாகரன் இல்லை. அவரைப்போல ஒருவரை வெளிக்கிடுத்தித்தான் புலிகள் நாடகமாடுகின்றனர்" என்று தொடர்ந்து சொல்லும் மனோபாவத்தைச் சொல்லலாம்.

இவர்களில் யாராவது சிறிரங்கன் சொன்னதைப் போல ஒரு விசயம் சொல்லியிருந்தால் கட்டாயம் என்னிடமிருந்து கண்டனமும் ஆதரவும் வந்திருக்கும். ஆனால் 'இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு அல்லது அதே உணர்வோடுதான் அது வரும்.

மேற்கண்டவர்களில் இருந்து சிறிரங்கனை ஓரளவு தனித்துப் பார்க்கலாம்.
என் பார்வையில் பலநேரங்களில் குழப்பகரமான பார்வையைத் தருவார். ஒருவர் தான் இந்தப் பேரில் எழுதுகிறாரா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பங்கள் தருவார். அதாவது வாசிக்கும் பதிவைப்பொறுத்து உடனடியாகவே அதீத உணர்ச்சிவசப்பட்டு (ஆதரவாகவோ எதிராகவோ) கருத்துச் சொல்வார்.
ஒரேயொரு காட்டு:

ஒருமுறை walkman க்கு என்ன தமிழ்ச்சொல் சரிவரும் என்று டோண்டு அவர்களோடு விவாதம் தொடங்கி சில சொற்களைப் பரிசீலித்துக் கதைத்தார். பின்வந்த ஒரு நாளில் நட்சத்திரக்கிழமையில் வசந்தன் பதிவில் தனித்தமிழ் பற்றியும் புலிகளின் தமிழ்ப்படுத்தலை முழுதாக ஆதரித்தும் (ஓரளவு பரப்புரைப் பார்வையிலும்) எழுதப்பட்ட பதிவொன்றில்
"வசந்தன்,இது நீர்தாம் எழுதியதோ?உம்மிடம் இவ்வளவு காட்மான விசயமெல்லாமிருக்கோ?சும்மா படங்காட்டிவிட்டுப்போய்விடுவீரென நினைத்தேன்,ஆனால் நீர் பண்டிதனானாய். 1995இல் இதுபற்றி(தமிழ்ப்படுத்தல்)ஈழமுரசில் எழுதியுள்ளேன்.புலிகளின் தமிழ்ப்படுத்தலில் எனக்கும் உடன்பாடுண்டு.ரயிலுக்குத் தொடரூந்து எனும் வார்த்தை எவ்வளவு பொருத்தமாகவுள்ளது!இவை காலப்போக்கில் ஏற்கப்படும்."
என்று பின்னூட்டம் போட்டிருந்தார்.
நாலோ ஐந்தோ மணித்தியாலம் தான் கழிந்திருக்கும். கறுப்பி, சொற்களைத் தமிழாக்குவதையும், புலிகளின் தமிழாக்கத்தையும் நக்கலடித்து ஒரு பதிவு போட்டிருந்தார். உடனேயே அதில் சிறிரங்கன் பின்னூட்டம் போட்டார். முழுதும் கறுப்பிக்கு ஆதரவாக. அதில் வானொலி, தொலைக்காட்சி போன்ற சொற்களே தேவையற்றவை, நேரடியாக றேடியோ, ரெலிவிஷன் என்றே பாவிக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு வசந்தன் பதவில் வந்து மதிகந்தசாமி 'றேடியோ' என்று எழுதியிருந்ததைக் குறித்துக்காட்டி, 'பார்த்தீர்களா? றேடியோ எண்டுதான் சாதாரணமாகப் பாவிக்கிறோம். எணடபடியா வானொலி எண்டு சொல்லிறது தேவையில்லை. றேடியோ எணடே பாவிப்போம்' என்றார்.

walkman க்குத் தமிழ்ச்சொல் உருவாக்க விவாதம் நடத்தியவர், புலிகளின் தமிழ்ச்சொல்லாக்கத்தை ஆதரித்துப் பின்னூட்டம் போட்டவர், அதுபற்றி முன்பு ஈழமுரசில் எழுதியதாகச் சொன்னவர், சில மணித்தியாலத்தில் முற்றிலும் எதிர்மாறான கருத்தை - அதுவும் பல்லாண்டுகளாக வழக்கத்துக்கு வந்துவிட்ட வானொலியையும் தொலைக்காட்சியையும் தேவையற்ற சொல்லாக்கமென்று கறுப்பியின் பதிவிற் சொல்கிறார். இரண்டு பதிவிலும் இடப்பட்டவை அவரது கருத்துக்கள் என்பதைவிட இரு பதிவுகளும் அவருக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிகள் என்றுதான் சொல்லலாம்.

இதைவிட, தமிழ்மண -நந்தவன மாற்றத்தின் போது சிறிரங்கன் அடைந்த குழப்பம்; தொட்டதுக்கெல்லாம் தன் வலைப்பதிவை முடக்குகிறார்கள், தூக்குகிறாரகள், தனக்கெதிராகச் சதி செய்கிறார்கள் என்று பதிவுகள் போட்டது; பொடியன்கள் பிரச்சினையில் எல்லோரும் கோமாளிகளாகவும் நகைச்சுவையாகவும் கருதிக்கொண்டிருக்க சிறிரங்கன் மட்டும் குய்யோ முறையோ என்று குதித்தது; பின் டக்ளஸ் - இதயவீணை - பொடியன்கள் என்று ஒரு தொடர்பைக் கொண்டுவந்தது என்று பலவற்றுக்குள்ளால் இப்புரிதலைச் சொல்லிச் செல்லலாம்.

இவை சிறிரங்கனை இழுக்காகவல்ல. மாறாக இப்படியாகவற்றுக்குள்ளால் தான் சிறிரங்கன் பற்றிய என்போன்றவர்களின் புரிதல் தொடர்கிறதென்பதைச் சுட்டவே.

இப்படியாக நான் புரிந்து வைத்திருக்கும் சிறிரங்கனிடமிருந்து, (மற்றவர்கள் அப்படித்தான் புரிந்தார்களா என்று தெரியாது) வெளிவரும் எந்தக் கருத்தையும் இரட்டிப்புக் கவனத்தோடே எதிர்கொள்வேன், அது எனக்கோ என் தரப்புக்கோ ஆதரவானதென்றாலுங்கூட.
****************************

இங்கு நானெழுதிய எதுவும் சிறிரங்கனை மட்டந்தட்டவோ, கேலி செய்யவோ இல்லை. என்போன்றவர்களின் புரிதல் எப்படியாக இருக்கிறதென்பதைச் சுட்டவே. அதுகூட 'உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற ஒற்றைவரி பாவித்தவர்கள் மேல் சடுதியாக வைக்கப்பட்ட விமர்சனத்தாலேயே.

இதில் சிறிரங்கன் பொய் சொல்கிறார் என்றுகூடச் சொல்லத் தேவையில்லை. இத்தகவலில் இருக்கக் கூடிய தவறுகள், இயல்பாகவே சிறிரங்கனுக்கிருக்கும் சடுதியாக உணர்ச்சிவசப்படும், குழப்பமடையும் தன்மையால் வந்திருக்கக் கூடிய பயம் என்பவற்றையெல்லாம் ஒரு சகவலைப்பதிவர் யோசிக்கலாம். அதைவிட இயல்பாக இருக்கக்கூடிய சந்தேகங்களும் சேரும்.

இந்த நிலையில், சிறிரங்கனின் இரண்டாவது பதிவு வருவதற்கு முன்னர் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு ஒரு பதிவர் தன் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதில் என்ன பெரிய தவறைக் கண்டீர்கள்? 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒப்பாரி வேறு. இப்படிக் கேட்டதுக்கூடாக சிறிரங்கனின் கூற்றுமீது நான் சந்தேகம் கொள்ளத்தக்க காரணங்களாகக் கருதியவை மட்டில், நீங்கள் சிறிரங்கனின் கூற்றுக்களை உண்மையென்று முழுமனதாக நம்புவதாக எடுத்துக்கொண்டு, உங்களிடம் அவைபற்றிக் கேட்டு, இறுதியில் 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒரு கேள்வியோடு முடிக்கலாம். சிறிரங்கன் மட்டுமன்றி அதே வகைகுள் நான் அடக்குபவர்களின் கருத்தையும் தூக்கிக்கொண்டு கேட்கலாமோ? அப்படியென்றால்,

"அண்மைக்காலத்தில் இராணுத்தாற் கொல்லப்படுபவர்கள், புலிகளாகவோ புலிகளின் செயற்பாட்டாளராகவோ அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தெரிந்தெடுக்கப்படடே கொல்லப்படுகிறார்கள்"
என்ற கருத்து முதற்கொண்டு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.
இப்படியே மாறிமாறி ஒராளை ஒராள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
****************************
இதில் சம்பந்தப்பட்டவர்கள் வலைப்பதிவுலகுக்குப் பழையவர்கள் என்றபடியால் சுட்டியெல்லாம் போட வேண்டியதாக நான் நினைக்கவில்லை.

Labels: , ,


Sunday, April 23, 2006

போய் வருகிறேன்.

நட்சத்திரக் கிழமையில் என் வலைப்பதிவுக்கு வந்து போன அனைவருக்கும் நன்றி.

சரியான ஆயத்தப்படுத்தலில்லாமல் இந்தக் கிழமையைக் கழித்தேன். நான் மினக்கெட்ட விசயமென்றால் பாடல்களை ஒழுங்குபடுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட 15 பதிவுகள் வரை இந்தக்கிழமையில் என்னால் இட முடிந்துள்ளது. அனைத்துமே ஏதோவொரு வகையில் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவையாகவே இருந்துள்ளன.
இந்தக் கிழையில் நினைவுகூரத்தக்க சம்பவங்கள் நிறைய.
என் கிழமையை, கவிஞர் நாவண்ணன் அவர்களின் இறப்புச் செய்தியுடனேயே தொடக்க வேண்டியதாகப் போய்விட்டது.

அன்னை பூபதி நினைவுநாள்.
நாட்டுப்பற்றாளர் நாள்.
மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய நாள்.
பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட நாள்.
யாழ் குடாநாடு மீது சூரியக்கதிர்-2 எனப்பெயரிட்டு தாக்குதல் தொடங்கப்பட்ட நாள்.
ஆனையிறவு வெற்றிநாள்.
என்பன இக்கிழமையில் வந்த முக்கிய நாட்கள்.

நாளை, (24.04) தீச்சுவாலை முறியடிப்பு நினைவுநாள்.

என் நட்சத்திரக் கிழமையில் இவற்றைப் பற்றி எழுத முடிந்தது ஒருபுறம் நிறைவைத் தருகிறது. ஆனால் முழுமையான பதிவுகளைத் தரமுடியாமைக்கு வருத்தமுமுண்டு.
இம்முறை சில பாடல்களைத் தரவேற்றி ஒலிக்க விட்டேன்.
அக்கோப்புக்கள் வேலை செய்கிறதா இல்லையா என்றுகூட என்னால் அறிய முடியவில்லை. சரியாக வேலை செய்திருக்கும், உங்களிற் பலர் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
******************************

சந்தர்ப்பமளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், இதற்குக் காரணமாயிருந்த அந்தப் பெயர் தெரியாதவருக்கும் நன்றி.

மீண்டும், இக்கிழமையில் 'ஆதரவளித்த' அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

Labels: , , ,


Tuesday, June 14, 2005

ஈழப்போராட்டக் காரணிகள்.

வணக்கம்!
ஈழப்போராட்டம் ஏன் தொடங்கப்பட்டது, அது எப்படி வளர்ந்தது, இற்றை வரை அது எதிர்கொண்ட சவால்கள் எவை என்பன பற்றி விரிவாக எழுதப்பட வேண்டுமென்பது உண்மை. இந்தத் தேவையை மயூரன் அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கெனவே பெயரிலி இது பற்றி எழுத முயற்சிப்பதாகச் சொல்லியுள்ளார். அந்த வகையில் எனது மிகச்சின்ன முயற்சியிது.

முதலில் சிங்கள - தமிழ் இனமுறுகல் என்பது இன்று நேற்றுத் தொடங்கப்பட்டதன்று என்பது என் எண்ணம். இதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்களென்றே நம்புகிறேன். ஏறக்குறைய ஈராயிரம் -குறைந்தபட்சம் 1500 வருடங்களாகப் புகைந்து வருவது தான் இந்த இன முரண்பாடு. ஆயிரம் வருடங்களுக்கு முன்பேயே இலங்கையைத் தனிச்சிங்கள - பொளத்த நாடாக மட்டுமே அடையாளங்காட்டியும் மற்றவர்களை வந்தேறு குடிகளாகவும் துரத்தப்பட வேண்டியவர்களாகவும் கதை கட்டமைக்கப்பட்டு காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இடையில் இவ்வுணர்வு தொய்யும் போதெல்லாம் யாராவது வந்து எண்ணெய் ஊற்றி எரித்து விடுவார்கள். இன்றும் கூட தங்கள் வரலாற்று நூலாகச் சிங்களவர் அடையாளங்காட்டும் 'மகா வம்சம்' என்ற நூல் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

முதலில் மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக அடையாளங்காட்டுதலே சுத்த காட்டுமிராண்டித்தனமும் அயோக்கியத்தனமுமாகும். அப்படிப் பார்க்கப்போனால் இராமாயணம் மகாபாரதங்களைக்கூட யாரும் தமக்கேற்றபடி வரலாற்று நூற்களாகக் கட்டமைத்து எதையும் கதைக்க முடியும். காம வேட்கையுற்ற சிங்கமொன்றினால் உருவாக்கப்பட்டு ஒரே தாய்வயிற்றில் பிறந்த ஆண்-பெண் கூடி உருவாக்கப்பட்ட இனம் தான் இந்தச் சிங்கள இனமென்றும், புத்தரால் அவர்களுக்கெனச் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீவுதான் இந்த இலங்கை என்றும், அவர்களை அங்கே குடியேற்றுவதற்காக 'வாக்களிக்கப்பட்ட' தீவிலிருந்தவர்களை புத்தர் வெருட்டிக் கலைத்தார் என்றும் கதை சொல்கிறது மகாவம்சம். நிறைய மாயாஜாலச் சம்பவங்களைக் கொண்ட இந்நூல்தான் அவர்களின் வரலாற்று நூலாம். (இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் சில பகுதிகளை வன்னியில் வாசித்தேன். முழு மொழிபெயர்ப்புப் புத்தகத்தையும் வெளியிட்டுவிட்டார்களா தெரியவில்லை. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்)

இதன்பின் அவ்வப்போது தமிழர்களுக்கும் சிங்களவருக்குமிடையில் போர்கள் நடந்தன. போர்த்துக்கேய வருகைவரை தனித்தனி இராச்சியங்கள் இருந்துள்ளன. வெள்ளையரிடம் இறுதியாக இழக்கப்பட்ட இன்றைய மத்திய இலங்கையான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஒரு தமிழன் என்ற தகவல் வியப்பானது.
ஆகவே இந்த இனப்பிரச்சினையின் வேர் ஆயிரமாண்டுகளாக ஊட்டியூட்டி வளர்க்கப்பட்ட இனவெறியில் தங்கியுள்ளது. அதிகம் கிளறாமல் நான் சொல்லவந்த விசயத்துக்கு வருகிறேன்.

ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது எழுபதுகளில், அது முனைப்புப்பெற்றது எண்பதுகளின் தொடக்கத்தில். இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியான வன்முறைகளையும் அழிவையும் சந்தித்து வந்தார்கள். அவ்வப்போது நடந்த இனப்படுகொலைகள் (இனக்கலவரம் என்பது பிழையான சொல்லாடல்) இதற்குச் சான்று. அடக்குமுறைக்கு மொழி முக்கிய மூல காரணியானது. மொழி மூலமே முதன்மையான அடக்குமுறையை எதிர்கொண்டனர் தமிழர்கள். தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது முக்கிய விடயம். (அந்த நேரத்தில் எவன் தமிழனை அதிகமாக வதைக்கிறானோ, அல்லது வதைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறானோ அவனே தேர்தலில் வெல்வான் என்ற நிலையிருந்தது. அதன் உச்சபட்ச தேர்தல் வாக்குறுதியே '24 மணிநேரத்தில் தனிச்சிங்களச் சட்டம்' என்ற தேர்தல் கோசமும் அதைத் தொடர்ந்த வெற்றியும்.)



இந்த நேரத்தில் தமிழ் மாணவர்களை வதைக்கும், தமிழ் மக்களின் கல்வித்திறன் மேல் கைவைக்கும் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆயுதப்போராட்டப் பொறி பற்றுவதற்கான முதன்மைக்காரணியும் இதுவே. இச்சட்டம் குறிப்பாக இளம் தமிழ் மாணவரை நேரடியாகப் பாதித்தது. இச்சட்டம் மூலம் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு செய்த மோசடியும், அது எவ்வளவு தூரம் மாணவரைப் பாதித்தது என்பதையும் அது எவ்வாறு ஆயுதப்போராட்டத்துக்கு இட்டுச்சென்றது என்பதையும் அடத்த பதிவில் தருகிறேன்.

உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இனப்படுகொலைகள் பற்றி இங்கே எழுதத்தேவையில்லையென்று நினைக்கிறேன். சிங்களம் மட்டும் சட்டத்தின் கொடூர முகம் பற்றி வேறு யாரேனும் எழுதுங்களேன். நாங்கள் தான் வயதாற் சிறியவர்கள். புலிவிமர்சனத்தை மட்டும் கருப்பொருளாய் வைத்து பதிவு எழுதும் நேரத்தில் இப்படியாக ஆயுதப்போராட்டத்துக்கு முந்தைய நிலையினையும் நீங்கள் எழுதலாம் என எமது மூத்தவர்கள் சிலரைக் கேட்கிறேன். புலியைப்பற்றி எழுதப்போனால் தான் உங்களுக்குச்சிக்கல். இனச்சிக்கல்களின் தொடக்ககாலத்தைப்பற்றி நீங்கள் எழுதலாம் தானே.

Labels: , , , ,


Monday, June 13, 2005

வழமைகள் பொய்க்கும் புள்ளி.


அயுத உதவிகளும் ஈழத்தவனின் பெருமையும்.

வணக்கம்!
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற தொனியில் வலைச் சண்டை நடந்துவருகிறது. பிறகு வழமைபோலவே வேறு திசை நோக்கிச் செல்கிறது. அப்பதிவைப்பற்றி வாதிக்க எதுவுமில்லை. வை.கோ. சிறையிலடைக்கப்பட்டது சரியே என நிறுவும் அப்பதிவர் மேலும் சொல்லும் விசயங்கள் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, அவரின் துவேசத்தை. (தான் சரியாக வெளிப்படுத்தவில்லையெனச் சொல்லி அவர் தப்பிக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் சரியாகவே சொல்லியுள்ளார், எது தனது நிலைப்பாடு என.) சரி அதைவிட்டு நான் எழுதவந்த விசயத்துக்கு வருகிறேன். அப்பதிவைப் பார்த்தபோது, எனக்கு எழுந்த கருத்தொன்றைப் பதிவு செய்வதே இப்பதிவின் நோக்கம்.

வழமையாக 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியில் கடந்தகால உலக நடப்புக்கள் இருந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இத்தொனியைத் தெளிவாகக் காணலாம். ஏறத்தாள முழு விடுதலைப் போராட்டங்களும் (வெற்றி பெற்ற, பெறாத) பிற சக்தியின் அல்லது சக்திகளின் உதவியுடன் செயற்பட்டுள்ளன. (சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் வெளியில் தெரிந்தவரை இல்லை)

எரித்திரியப் போராட்டத்துக்கு ரஸ்யாவின் ஆதரவு. (இது பின்னர் எதிர்ப்பாக மாறியதும் வரலாறு.)
கியூபா அமெரிக்காவை எதிர்த்த போது ரஸ்யாவின் ஆதரவு.
வியட்கொங்குகளுக்கு சீனா உள்ளிட்டவைகளின் ஆதரவு.
ஐரிஸ்களுக்கு அமெரிக்கச் சக்திகளின் பின்னணி.
ஏன் இந்தியச் சுதந்திரப்போராட்டத்துக்கு (சுபாஸ் சந்திரபோசின்) யப்பான், இத்தாலி முதலிய வெளியாரின் ஆதரவு.
மேற்குறிப்பிட்டவைகள் ஆயுத, இராணுவ, பொருளாதார உதவிகள்.

இவையாவும் போராடுபவர்கள் மேல் கொண்ட அன்பினால் அன்று. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியினால் தான். இது முஹாஜுதீன்கள், தலிபான்கள் முதற்கொண்டு ஒசாமாபின்லேடன் வரைகூடப் பொருந்தியது. இது நாடுகளுக்கு உதவுவதிலும் உண்டு. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இக்கொள்கை எதிர்மாறாகக் கடைப்பிடிக்கப்டுகிறது. அதாவது எதிரிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தரப்புக்கு உதவுவது. முதன்மையான எதிரி மட்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவினான், எதிரியின் எதிரி நண்பன் என்ற தொனியை வைத்து. ஆம் பிரேமதாசா தான் அவர். பிரேமதாசா புலிகளுக்கு உதவியதைவிட இப்படியான நோக்கத்தை வைத்து வேறு சந்தர்ப்பங்கள் இல்லை. இங்கே இந்தியா ஆயுதங்களும் பயிற்சிகளும் தந்ததைச் சொல்லலாம். ஆனால் அது தொடர்ச்சியான நிகழ்வாய் இருக்கவில்லை. மேலும் ஆயுதங்களைத் திருப்பி வாங்கிவிட்டதாலும் இது பொருந்துமா என்ற கேள்வி உண்டு. எனினும் இலங்கையைத் தன் காலடியில் விழவைக்க இந்தியா ஆயுத உதவிகளும், பயிற்சிகளும் கொடுத்து குழுக்களை வளர்த்துவிட்டது என்பது உண்மை.

இங்கே எல்லா எதிரிகளும் சேர்ந்து ஈழத்தமிழருக்கெதிரான யுத்தத்துக்கு உதவினார்கள், உதவுகிறார்கள் என்பது ஒரு நகைமுரண். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை முதன்மைப் பங்காளிகள். எப்போதும் இரு துருவங்களான ரஸ்யாவும், இஸ்ரேலும் இவ்யுத்தத்தில் தீவிரமாக உதவி வழங்குபவர்கள். சிறிலங்காவின் வான், மற்றும் கடல் படை வலிமை இவ்விரண்டு நாடுகளிலுமே பெரிதும் தங்கியுள்ளது. போதாததுக்கு அமெரிக்கா, பிரிட்டன் என்பனவும் உள்ளடக்கம். குறிப்பாகப் புலனாய்வு வலைப்பின்னலில் யோசிக்காமல் அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து செயற்படுகின்றனர். இது இப்படியிருக்க எந்த நாடும் தமிழர் தரப்புக்கு உதவிகள் வழங்குவதில்லை.

ஈழப்போராட்டமென்பது இத்தனை எதிரிகளையும் சமாளித்துத்தான் வளர்ந்தது; வளர்கிறது. புலிகளின் கடல் வழி வினியோகத்தைத் தடுக்க சர்வதேச அளவில் முக்கிய நாடுகள் புலனாய்வு வழியிலும், கடலில் இந்தியா தன் நேரடிக் கண்காணிப்பிலும், நேரடி மோதலாலும் உதவகின்றன. இந்தியாவால் நேரடியாக மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் இதற்குச் சான்று. (கிட்டு உட்பட). தனியே சிறிலங்காவின் படைப்பலமோ பொருளாதார பலமோ ஈழப்போராட்டத்துக்கு ஒரு பொருட்டேயன்று என்பது வெளிப்படையான உண்மை.

எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் தமிழரை அழிக்க உதவி செய்கின்றனர். அதை வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கப்படுகிறார்கள் என்பது தான் வேதனையாயிருக்கிறது. இங்கே வலைப்பதிவிலும் அதுதான் நடக்கிறது. பலரின் ஆழ்மன எண்ணங்கள் அவர்களே அறியாமல் வெளிப்படுகின்றன.

வங்காளதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பரப்புரை செய்யப்படுகிறது. ஏன் கொடுத்தது என்பதற்கு விடை, அம்மக்கள் மேல் கொண்ட பாசத்தினாலாம். ஆனால் ஏன் கொடுத்தோம் என்பதற்கான சரியான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் ஒருவரின் வலைப்பதிவில் இப்படி வெளிப்படுகிறது பாருங்கள்:
"பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த" என்று விழிக்கிறார். நாம் போட்ட பிச்சையில் பிறந்த வங்கதேசம், நாம் போடும் கட்டளைகளைக் கேள்வியின்றி செய்ய வேண்டுமென்ற தொனியில் அவரது கருத்து இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத வகையில் பலரின் எண்ண ஓட்டங்களை அது வெளிப்படுத்துகிறது.

ஈழத்தவரைப்பார்த்தும் இப்படித்தான் சொல்ல நினைத்தீர்களோ தெரியாது. எனினும் ஆண்டாண்டுக்கும் அந்த இழிச்சொல்லைக் கேட்பதிலிருந்து தப்பிவிட்டோமென்ற நிம்மதியுண்டு. எந்த நாட்டினதும் உதவியுமின்றி, சொந்த மக்களினதும் புலம்பெயர்ந்தவர்களினதும் பலத்தால் மட்டுமே வளர்ந்த போராட்டம் என்று பெருமைப்பட எங்களுக்கு உரிமையுண்டு. குறிப்பாக பக்கத்து நாடுகளே அஞ்சும் வண்ணம் (இவற்றில் பெருமளவு மக்களைப் பேய்க்காட்ட வடிவமைக்கப்பட்ட அச்சங்கள்) கடல், வான் படைகளைக் கட்டமைத்த போராட்டம் என்பதில் பெருமையும் ஆணவமும் கொள்ள எங்களுக்கு இடமிருக்கிறது.

Labels: , ,


Sunday, June 12, 2005

சூகை தெரியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்திருந்த காலம். வந்த புதுசில காடு சார்ந்த ஓரிடத்திலதான் இருந்தம். அப்ப காட்டுக்குள்ள போறதெண்டா கொள்ளைப் பிரியம்; கூடவே பயமும். சிலர் கரடி நிக்கும் எண்டு பயப்படுத்தியிருந்தினம். எண்டாலும் காடு பாக்கிற சந்தோசம் விடுமோ? காடு பாக்கிறதைப்பற்றி பிறகு ஒருக்கா எழுதிறன்.

நாங்கள் வந்து ரெண்டு நாளில சின்ன பத்தையள வெட்டி ஒரு வெளியாக்கி அதில கூடாரங்கள் போட்டு இருந்தம். என்ன இருந்தாலும் அதுவும் ஒரு இனிமையான வாழ்க்கைதான். அனுபவித்தவைக்குப் புரியும். அப்ப எங்களோட அந்த இடத்து ஆக்கள் ரெண்டுமூண்டுபேரும் தங்கிறவை. ஒருநாள் இரவு. ஒரு குறிப்பிட்ட இடத்தில சனம் துள்ளிக்குதிக்குது. ரெண்டு மூண்டு சின்னனுகளும் அழுகிதுகள். என்னெண்டா எறும்புக் கடிச்சுப்போட்டுதாம்.

பாத்தா நிறைய கட்டெறும்புகள் குவியலா நிக்குதுகள்.
"உங்க பார், எவ்வளவு கட்டெறும்புகள்!" எண்டேக்கதான் சொன்னாங்கள் அது கட்டெறும்பில்லையாம், சூகையாம் எண்டு. நாங்கள் கட்டெறும்பு எண்டுறத இவங்கள் சூகை எண்டுறாங்கள் எண்டிட்டு படுத்தாச்சு.

அடுத்த நாள் பாத்தா அந்த இடத்தவிட்டு அதுகள் போகேல்ல. எக்கச்சக்கமா நிக்குதுகள். அதுகளக் கலைக்கிற முயற்சியல நாங்கள் நாலைஞ்சு பொடிப்பிள்ளைகள் இறங்கினம். அப்பதான் தெரிஞ்சுது அதுகளின்ர பலம். முதல் கடியோடயே விளங்கீட்டுது உதுகள் கட்டெறும்பு வகைக்குள்ள வராதெண்டு. என்ன செய்ய? உதுகள் அந்த வகைக்குள்ள வராதுகள் எண்டு கணிக்கிறதுக்குள்ள உயிர் போயிட்டுது. அப்பிடிக் கடி. ஒரு பத்துச் செக்கன்கூட இல்ல, போர்க்களத்திலயிருந்து வெளியில வாறதுக்கு. அதுக்குள்ள முப்பது முப்பந்தைஞ்சு எறும்பு காலில ஏறீட்டுது. அண்டைக்கே ஊர் ஆக்களப்பிடிச்சு சூகையைப் பற்றி அறிஞ்சன்.

யாழ்ப்பாணத்தில இப்பிடியொரு எறும்பைப் பாத்ததில்ல. பாக்க கட்டெறும்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா செயற்பாடுகளில மாற்றம். சூகையெண்ட சொல்லையும் நாங்கள் அங்க கேள்விப்படேல. சரி, இது வன்னியில இருக்கிற ஒரு வகையெண்டு நினைச்சிருந்தன். முந்தநாள் இயக்குநர் சேரனின்ர நிகழ்ச்சியொண்டைத் தொலைக்காட்சியில காணுற சந்தர்ப்பம் கிடைச்சுது. அதுல பாத்தா, அட எங்கட சூகை!
அவரும் சூகை எண்டுதான் சொல்லுறார். அப்ப தமிழ்நாட்டிலயும் இந்தச் சூகை இருக்கு. ஆனா இதே மோசமான சூகை தானோ எண்டது சந்தேகம்.

இனி சூகை பற்றி சில அனுபவங்கள். இத நாங்கள் 'கொமாண்டோஸ்' எண்டும் சொல்லுறனாங்கள். ஏனெண்டா அவ்வளவு வேகம். சூகை வரிசையாப் போய்கொண்டிருக்கிற இடத்தால வேகமா நீங்கள் நடந்து போனாக்கூட எப்பிடியும் உங்கட காலில ஏறீடும். கண்ணிமைக்கும் நேரத்தில ஏறிக்கடிச்சிடும். அந்தக்கடியை அனுபவிச்ச ஆக்களுக்குத்தான் அதின்ர வலி தெரியும். எங்கட நெருப்பெறும்பு, கட்டெறும்பெல்லாம் பிச்ச வாங்கோணும். அதவிட அது ஒரு இரைச்சல் போடும் பாருங்கோ. இரவில நல்ல நிசப்தமா இருந்தா அந்த இரைச்சல் கேட்கலாம். அவயள் பவனி வந்தா அந்த இரைச்சல் கட்டாயம் வரும். இரவில கொட்டிலுகளுக்குள்ள எல்லாம் அதுகள் வந்திடும். முதல் கொஞ்சநாள் கொட்டிலச் சுத்தி நெருப்புத்தணல் கொட்டி விடுறனாங்கள். பிறகு பழகிவிடும்.

இரவில வெளிச்சமில்லாமல் நடந்தா, முன்னுக்குப்போறவர் வேணுமெண்டே ஒரு இடத்தில நாலைஞ்சுதரம் கால உதைஞ்சுட்டுப்போவார். (உண்மையில சூகை இருந்திருக்காது). பின்னால வாற ஆக்களும் அந்த இடத்தில வேகமா துள்ளிப் போவினம். பிறகு அங்கால போய் சிரிக்கிறது.

எங்கயாவது பதுங்குகுழிகள் வெட்டினா கட்டாயம் சூகையின்ர தொல்லையிருக்கும். நிறைய நேரத்தை அது மினக்கெடுத்தும்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்ர ஒரு வருட வெற்றிநாளுக்கு நாங்கள் சந்திச்ச களப்போராளியள் சிலரோட கதைச்சம்.
"இஞ்ச உங்களுக்கு ஆகக் கஸ்டமாயிருக்கிற விசயம் எது?"
எண்டு அவயளக் கேட்டம். (எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், குடிதண்ணியில இருந்து எதிரியின்ர சினைப்பர் தாக்குதல்கள், சாப்பாட்டுப்பிரச்சினை எண்டு நிறைய சிக்கல்கள்.) ஆனா அவயள் சொல்லீச்சினம்:
"உவன் ஆமியக்கூட சமாளிச்சிடலாம். ஆனா உந்த சூகையத்தான் சமாளிக்க எலாது."

இப்பிடி சூகையின்ர நினைவுகள் கனக்க இருக்கு. சேரனின்ர நிகழ்ச்சியைப் பாத்த உடன, தமிழகத்திலயும் இந்த சூகை இருக்கெண்ட உடன இந்தப் பதிவ எழுத வேணும்போல இருந்திச்சு. அவ்வளவு தான்.

Labels: , , , ,


Friday, May 06, 2005

ஏற்றம்!

இவற்றைப் பார்த்துவிட்டு,
இன்னாருக்குப் போட்டியாகத்தான் இதைப் போட்டதாக நினைக்க வேண்டாம்.
அன்னாரோடு போட்டி போட யாராலும் முடியாது.




Labels: ,


Sunday, May 01, 2005

தராகி வலைப்பதிவு.

வணக்கம்!
படுகொலை செய்யப்பட்ட தராகி எனப்படும் மாமனிதர் சிவராமின் பெயரில் வலைப்பதிவொன்று மதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சிவராம் எழுதிய ஆக்கங்கள், அவரது செவ்விகள், ஒலி ஒளிப்பதிவுகள் என்பன சேர்க்கப்படும் திட்டமுண்டு. அவரைப் பற்றிப் பிறர் எழுதியவையும் சேர்க்கப்படும். இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட இம்முயற்சி மேலும் சிறப்பாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

http://taraki.yarl.net
அதில் சிவராமின் ஒளிப்பதிவுகள் வலையேற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாம் அரசபடைகளாற் குறிவைக்கப்பட்டுள்ளதை அவரே சொல்கிறார்.

Labels: , ,


Thursday, March 17, 2005

முற்போக்கும் வயிற்றுப் போக்கும்...

வெங்கட்டின் பதிவில் கறுப்பி பின்னூட்டமிட்டதை வைத்து இப்பதிவு எழுதப்படுகிறது. வெங்கட்டின் பதிவிலேயே எழுதியிருக்கலாம். ஆனால் அது அவ்விவாதத்தின் கோணத்தை மாற்றிவிடும் என்பதால் இங்கே பதிகிறேன்.

சாதிக் கொடுமை ஒழிப்பு சாத்தியப்படும் என்று நம்பி வேலையில் இறங்குவோம்” என்று வெங்கட் சொன்னதற்கு, கறுப்பி சொல்கிறார்.

//இந்தக் கொடுமை தீரும் என்று தாங்கள் கனவு கண்டால் உங்களை
நான் கோழை என்றுதான் சொல்லுவேன்
.
//

இவர் என்ன சொல்ல வருகிறார்? மாற்றங்கள் வரும் என்று நம்பமுடியாதா? அப்படியானால் பெண் விடுதலை என்பதுகூட சாத்தியமற்ற வெறுங்கனவோ? சாத்தியமற்ற வெறுங்கனவுகளுக்காகத் தான் நீங்களும் மற்றவர்களும் மாய்ந்துமாயந்து கதைக்கிறீர்களோ? பெண்ணியவாதியாயும் முற்போக்குவாதியாயும் உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொண்டு இப்படிக் கதைக்கலாமா? முற்போக்கு என்ற பெயரில் மற்றவர்களுக்கு நீங்கள் தருவது வாழ்வு பற்றியதும் மாற்றங்கள் பற்றியதுமான அவநம்பிக்கைகளையா? பிறகெதற்குப் பெண்விடுதலை, மாற்றுச் சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள்? நடக்காத வெறுங்கனவுகளைச் சுமந்து கொண்டு ஏன் திரிகிறீர்கள்? சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று நம்பும் வெங்கட்டை நீங்கள் கோழை என்றால், பெண்ணியம், தமிழில் நல்ல சினிமா என்றெல்லாம் எதிர்பார்ப்போடு எழுதும் உங்களை எப்படித் திட்டுவது?

இதற்குப் பதிலாக "சாதி வேறுபாடு ஒழிக்கவே முடியாது, ஆனால் மற்றவை மாறக்கூடியன" என்று சொல்ல வருகிறீர்களா? சாதிவேறுபாடு மனித இனத்திற்குப் பொதுவான அம்சமன்று. எல்லா இடங்களிலும் இப்பிரச்சினை பூதாகாரமாக இல்லை. குறிப்பிட்ட சில நாடுகளில், இனங்களில் மட்டுமே உள்ள பிரச்சினை. ஆனால் பெண் அடக்குமுறையென்பது மனித இனத்திற்கே பொதுவானது. அது தன் சந்ததிகளினூடு தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவது. மேலும் உடல் ரீதியான வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டதால் இலகுவில் மாற்றமடைய முடியாத அடித்தளத்தைக் கொண்டது தான் பெண்ணிய அடக்குமுறை. சாதிவேறுபாடுகள் தோன்றமுதலே, மனித இனத்தோற்றத்தின் போதே தோன்றிவிட்ட பெண் அடக்குமுறையை, அழிக்கவே முடியாது என்பதற்கு தர்க்க ரீதியல் வலுவான காரணிகளைக் கொண்ட பெண் அடிக்குமுறையை முறியடித்து பெண்விடுதலை பெற முடியுமென்று நீங்கள் கருதினால், ஏன் சாதிமுறை ஒழிய முடியாது? எல்லோரும் பெண்விடுதலை பற்றி ஆவலோடு கதைத்துக்கொண்டிருப்பது அது பெறப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான். யாருக்கும் தெரியாது எப்போது பெண் முழுவதும் விடுதலையாவாள் என்று. குறைந்த பட்சம், சாத்தியமா என்பதுகூட எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அதைவிட இலகுவான சாத்தியமுள்ள (பார்க்க: பெண்விடுதலையோடு ஒப்பிட்டுத்தான்) சாதிவிடுதலை பற்றி ஒருவர் நம்பிக்கை கொள்ளல் பெண்விடுதலை பேசும் உங்களுக்கு நகைப்பாக இருக்கிறது.

சாதி விடுதலை சாத்தியமென்பது என் வலுவான நம்பிக்கை. (மேலை நாடுகளில் ஆண்டுக்கணக்காக வாழ்ந்து விட்ட உங்களுக்கு இதன்மீது நம்பிக்கை வராதது நான் சற்றும் எதிர்பார்க்காதது). என் வன்னி அனுபவத்தின் அடிப்படையில் இது ஒழிக்கப்படும் என்று நம்புகிறவன் நான். அங்கே எல்லோரும் தான் பதுங்குகுழி வெட்டினோம். எல்லைக்குப் போனோம். போரின்போது இடம்பெயர்ந்தோம். ஒன்றாகவே உணவுண்டோம். ஒன்றாகவே அடிவாங்கினோம். ஒன்றாகவே செத்துப்போனோம். வெற்றிகளின் போது ஒன்றாகவெ மகிழ்தோம். அவலங்களின் போது யாரும் அங்கு சாதிபார்த்து வாழவில்லை. உள்ளுக்குள் அந்த மனப்பான்மை பலருக்கு இருந்தாலும் வெளியில் அவர்களால் காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலை. இளஞ்சமுதாயம் ஏறத்தாள முழுமையான சாதிபற்றின மனமாற்றத்துக்கு வந்திருந்தது. சாதி பார்க்கப்படும் ஒரே சந்தர்ப்பமாக இருந்த திருமணபந்தம் கூட மாறிவிட்டது. ஒப்பீட்டளவில் பல கலப்புத்திருமணங்கள் நடந்தன. அதற்கு புலிகளும் தமிழீழக் காவல்துறையினரும் துணைநின்றனர். காதலுக்கு புலிகள் அதிகளவு ஆதரவளிப்பதாக ஒரு விமர்சனம் எம்மக்களிடையே உண்டு. ஆனால் அவர்கள் சாதி மற்றும் மதங்களைக் கட்டுப்படுத்த காதல் திருமணங்களை ஒரு காரணியாகப் பார்க்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் விரிவாக இன்னொரு பதிவிலிடுகிறேன். இப்படி வன்னியில் எனக்கு சாதிஒழிப்பு மீதான நம்பிக்கை வலுவடைந்தது. ஆனால் நீண்ட இடைவெளியின்பின் சொந்த ஊர் (யாழ்ப்பாணம்) சென்றபோது அங்கே என்னிடம் “பொடியளில வெள்ளாளரோ கரையாரோ அதிகமா இருக்கினம்?” என்று கேட்கப்பட்ட போது என் மனக்கோட்டையில் சில கற்கள் சரிந்து விழுந்தன. அந்த நம்பிக்கை வீதம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முற்றாகபப் போய்விடவில்லை. என்ன… கொஞ்சக் காலம் கூடுதலாக எடுக்கும். ஆனால் தமிழகம் பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சாதிச்சான்றிதழ் பாவனையிலிருக்கும் நாட்டில், சாதி ரீதியாகவே கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அடையாளங்காணப்படும் நாட்டில், இன்னும் தலித் இலக்கியம் என இலக்கியங்களும் வந்துவிட்ட நாட்டில் (கவனிக்க: இவை தவறென்று சொல்லவில்லை. அது வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியது) எல்லோரும் சமனென்று வர எவ்வளவு காலமெடுக்கும் எனச் சொல்லத் தெரியவில்லை.

முன்னர், நம்பிக்கை கொண்ட வெங்கட்டை கோழை என்றவர் பின்னர் கீழே ஓரிடத்தில் சொல்கிறார்:
//நம்பிக்கைதான் வாழ்க்கை//
இது எப்பிடி இருக்கு?

//தங்கள் வாழ்க்கை குடும்பம் செழிப்பாகவே இருக்கப்
போகின்றது. அதற்குத் தாங்கள் பார்ப்பனாகப் பிறந்தது ஒரு காரணம் இல்லையா?
//
வெங்கட் யார், என்ன செய்கிறார், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. வாசித்த அளவில் முக்கியமான ஒரு அறிவிலாளர் என்பது புரிகிறது. மேற்குறிப்பிட்ட ஒரு வசனம் மூலம் ஒருவரின் உழைப்பு, படிப்பு, பிரயாசை எல்லாவற்றையும் சாதியொன்றின் பெயரில் அடக்கி விட்டார் கறுப்பி. தன் திறமைக்குக் கடவுளைக் காரணம் காட்டுபவனைக் கண்டாலே கோபம் வருகிறது. அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகளை விரித்தபோது முதலில் அவரெழுதிய கவிதையைப் பார்த்ததுமே கோபம் தான் வந்தது. சிறுவயதில் வறுமையின் பிடிக்குள் சிக்கி, அதற்குள்ளிருந்து தன் உழைப்பால் முன்னேறிய ஒரு வழிகாட்டி அவர். தான் சிகரத்தை அடைந்தது தன் தாயின் கண்ணீரால் என்று தாயைப் போற்றுகிறார். மெத்தச்சரி. ஆனால் அதோடு சேர்த்துக் கடவுளின் கிருபையையும் காரணமாகச் சொன்னவர், தன் முயற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால் தன் திறமையையும் உழைப்பையும் சொல்லாமல் வானத்தைப் பார்த்துக் கைகாட்டுவது பிடிக்கவில்லை. அதுபோலவே கறுப்பியும் ஒற்றைப்படையாக ஒரு காரணம் கூறுகிறார். எனக்குப் பார்ப்பான்களின் வாழ்க்கைத் தரம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அவர்களிலும் ஏழைகள் இருக்கக் கூடுமென்றே எண்ணுகிறேன். எனவேதான் சாதியைக் காட்டி ஒருவரது செல்வத்தையோ திறமையையோ குறிப்பிட்டு அவரது திறமையை ஒளிப்பது சரியன்று எனச்சொல்ல வந்தேன். இந்த வாதமெல்லாம் முற்போக்கானவையாகத் தெரியவில்லை.

//யாரோ செய்த பாவம்,"கர்மா" போன்றவற்றில் எனக்கு
நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?
//
கர்மா பற்றி நம்பிக்கையில்லாத “முற்போக்காளராகிய” நீங்கள், பார்ப்பான்களைக் கொலை செய்வதற்கு அதே கர்மாவை துணைக்கழைக்கிறீர்கள். வெங்கட் அப்பாவியான தன் பக்கத்துவீட்டுக்காரர் கொலை செய்யப்பட்டதாகச் சொன்னதற்குத்தான் இப்படி கருத்துச் சொல்லியுள்ளீர்கள் என்று கருதுகிறேன். பார்ப்பான் இப்படியான சமூகத்தை உருவாக்கியது எப்போது? அல்லது செத்துப்போன அந்த அப்பாவிப் பக்கத்து வீட்டுக்காரரும் அதற்குள் அடங்குவாரா?

சரி! உங்கள் கருத்துப்படி கொலைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது விடிவுக்காக கொலை செய்வது பிழையே இல்லை என்பது உங்கள் கருத்து. இங்கே தான் நான் உங்கள் மீது விமர்சனம் வைக்கிறேன். முற்போக்கு என்ற முகமூடி போட்ட படியே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்கள். இது சரியா? அதுவும் சம்பந்தமில்லாத ஒருவரைப் பழிவாங்கக் கொல்வதை ஆதரிப்பது. (நான் தான் முற்போக்கு என்பதைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளேனோ தெரியாது) இதே முற்போக்கு முகமூடிகளைப் போட்டுக்கொண்டு புலிகளின் செயல்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தற்பாதுகாப்புக்காக, தமது இருத்தலுக்காக, தமது நோக்கத்துக்காக (பல்லாயிரம் மக்களின் விடுதலை சார்ந்தது) செய்யப்படுபவை என நியாயப்படுத்தக் கூடிய கொலைகளையே சாடிக்கொண்டிருக்கும் முற்போக்காளர்களின் பார்வை உங்ளைப் போல்தான் இந்த இடத்தில் (வெங்கட்டின் இடத்தில்) செல்லுமா?

புலிகளில் 2000 பேர் சுனாமியில் இறந்துவிட்டதாகவும் அதன் தலைமை ஆட்டங்கண்டுள்ளதாகவும் தாமே செய்தியை உற்பத்தி செய்துவிட்டு, பின் “புலிகள் பலவீனமாயுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழருக்கு உரிமையைப் பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் இனிச் சந்தர்ப்பமே இல்லை” என்று “புத்திசாலித்தனமாக” அரசியல் போதிக்கும், தம்மைத்தாமே முற்போக்காளர்கள், சோசலிச வாதிகள், இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலைப்பாடுகளில் நாம் “யதார்த்தமான, சரியான” மதிப்பீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் முற்போக்காளராகவும் பெண்ணியவாதியாகவும் தன்னை அடையாளங்காட்டும் கறுப்பி கொலைகளை ஆதரிக்கிறார். அதுவும் சம்பந்தப்படாதவர்களைக் கொலை செய்தல். தலித் விடுதலைக்கு கொலை பயன்படுமோ இல்லையோ, கொலை செய்து விடுதலை பெற வேண்டிய (குறைந்த பட்சம் உயிர்வாழவாவது கொலை செய்தே ஆகவேண்டிய) தேவையிலிருக்கிற ஈழ நிலைப்பாட்டை எப்படி இதே முற்போக்காளர்கள் பிழையெனச்சொல்லலாம்?

கறுப்பி! ஈழத்துப் பாடல்களையே வன்முறை போதிக்கிறது என்பதால் தடை செய்யவேண்டும், பிடுங்க வேண்டுமென்று வாதித்த நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் வெங்கட்டின் பதிவில் உங்கள் ஆழ்மனத்திலுள்ளதைக் கொண்டு வந்துவிட்டீர்கள். அந்த விதத்தில் வெங்கட்டின் பதிவுக்கு நன்றி.


இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஒரு முற்போக்காளராக இருப்பதால் உங்கள் பார்வையைக்கொண்டே முற்போக்காளர்களை எதிர்கொள்ளலாமா? முற்போக்குச் சித்தாந்தத்திலே கொலைகள் பற்றிய பார்வை என்ன? மரணதண்டனை பற்றின உங்கள் பார்வை என்ன? முற்போக்கு முகமூடிகள் கொலையை ஆதரித்தால் அதை எல்லா இடத்திலும் அவர்களே சொல்லும் நியாயங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். மாறாக தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த முகமூடியும் முற்போக்கும் தேவையில்லை.
(முகமூடியென்பது முகத்தை மறைக்கவன்று, உள்ளத்தை மறைக்க)


Labels: ,


Wednesday, March 16, 2005

"பாவனை" பண்ணல்' ...பெட்டைக்குப் பின்னூட்டம்

நேற்று இரவு பெட்டைக்குப் பின்னூட்டமிட எழுதியது. ஆனால் நிறைய நேரம் செலவழித்தும் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. (அதென்னவோ தெரியேல. பொடிச்சியளெண்டா என்ர கணிணிக்கு அலர்ஜி வந்திட்டுது போல. நேற்று ஷ்ரேயாவின் தமிழ் முயற்சிக்குப் பின்னூட்டமிடவும் சரியாக் கஸ்டப்பட்டனான். மொடர்ன்கேர்ள் விதிவிலக்கு) மற்றவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பின்னூட்டத்தைத் தவிர வேறேதுவும் வரவில்லை. எனவே எனது பின்னூட்டத்தை என் பதிவில் இடுகிறேன். பெட்டையின் பதிவில் இட முடிகிறபோது இதை அழித்துவிடுவேன். பின்னூட்டமாக இட எழுதியதால் விரிவாக எழுதவுமில்லை; இப்போது அவசரமாகப் பதிவதால் திருத்தங்களேதும் செய்யவுமில்லை.

பொடிச்சி!

அவசியமான பதிவு. வன்னியில் பல பெயர்களில் (வின்சன்ற் ஜோசப், அருளாளன், இன்னும் பிற..) மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் எழுதும் ஒருவர் ஒருக்கிறார். குழல் என்ற பெயரில் ஆபிரிக்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். மேலும் (சிங்களம் உட்பட) 60 க்கும் மேற்பட்ட படைப்புக்கள், கையேடுகள் என்று மொழிபெயர்த்து வெளியிட்டவர். சொந்த ஆக்கமாகவும் தமிழில் சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.

இப்போதும் முழுநேர மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் அவரோடு எனக்குப் பழக்கமுண்டு. அவர் ஆபிரிக்கக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் போது சந்தித்துக் கதைத்தேன். அப்போது "ஏன் நீங்கள் தமிழில் படைப்புக்கள் எழுதுவதைக் குறைத்து விட்டீர்கள்" என்று நான் கேட்டபோது, படைப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பதைவிட இலகுவானது. எல்லாரும் அதத்தானே செய்யினம்? ஆனா எங்கட தேவை இப்ப மொழிபெயர்ப்புக்களில பெரிதும் தங்கியிருக்கு" என்று விளக்கிக் கொண்டு வந்தவர், இறுதியாகச் சொன்னார்:

'வரவேற்பு இல்லாவிட்டாலும் படைப்பாளியாக யாரும் இருந்துவிட்டுப் போகலாம்.
ஆனால் மொழிபெயர்ப்பாளனாக யாரும் "பாவனை" பண்ண முடியாது'



.

Labels: , ,


Saturday, March 12, 2005

பெயரை மாற்றவா?...-ஒரு கருத்துக் கணிப்பு.

வணக்கம்!

வன்னியன் எண்ட புனைபேரில 'பூராயம்' எண்ட இந்தப் பகுதிய நடத்திக்கொண்டு வாறன். புனைபெயரில எழுத வேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கு இருக்கேலதான். சும்மா ஒரு விளையாட்டுத் தனத்திலதான் இப்பிடிச் செய்தனான். இப்ப வன்னியன் எண்ட பேரோட வீரமான ஒருத்தரும் பதிவு வச்சிருக்கிறார். அங்க கொஞ்சம் சீரியசான விவாதங்கள் நடக்குது. இதுக்க நானும் வன்னியன் எண்டு பேர் வச்சுக்கொண்டிருக்கிறது கொஞ்சம் சங்கடமாயிருக்கு.

அதால ஏற்கெனவே என்ர சொந்தப் பேரில வச்சிருக்கிற வலைப்பக்கத்த மாதிரி இதயும் அதே பேரிலயே பதிவு செய்யலாமெண்டு நினைக்கிறன். இதில சில சிக்கலுகளும் இருக்கு. என்ன... முந்தின பின்னூட்டங்களில வன்னியன் எண்டு இருக்கும். மற்றாக்களும் வன்னியன் எண்டே என்ன விளிச்சிருப்பினம். இப்ப திடீரெண்டு மாத்தினா புதுசா வாற ஒராளுக்கு இது குழப்பத்தத் தான் தரும். அதோட தமிழ்மணம் பதிவுகளிலயும் ஏதேனும் பிரச்சின வருகிதோ தெரியேல. அதால என்ன செய்யிறதெண்டு யோசிக்கிறன்.

உண்மையில என்ர மற்றப் பதிவ விட வித்தியாசமா எழுதுவோம் எண்டுதான் இதத் துவக்கினனான். ஆனா நினைச்ச மாதிரி இன்னும் சரியா வரேல. என்ன மாதிரி கொண்டுபோறது எண்டும் தெரியேல. இப்போதைக்கு சும்மா சளாப்பிக் காலத்தக் கடத்தலாம்.

அதுக்குள்ள ஏதோ ஒரு வீறாப்பில சந்திரவதானா அக்காவிட்ட (அக்கா எண்டு சொன்னாக் கோவிக்க மாட்டியள்தானே) “நான் ரெண்டு பேரில எழுதிறன். ஏலுமெண்டாக் கண்டுபிடியுங்கோ பாப்பம்” எண்டு சவாலும் விட்டிட்டன். இப்ப எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம் தானே. எதுக்கும் மனுசி வந்து பின்னூட்டம் குடுக்க முதல் பேர மாத்திறது உசிதமெண்டு நினைக்கிறன்.

இருந்தாலும் வாசகரிண்ட (அப்பிடி ஆராவது இருக்கிறியளோ?) விருப்பத்தத்தான் எதிர்பாக்கிறன். உங்கட கருத்துக்கள எழுதுங்கோ.

Labels:


Sunday, February 20, 2005

உண்மையின் எண்ணங்கள்...

வணக்கம்!
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் வன்னியே விடுதலைப்போராட்டத்தின் அச்சாக இருந்து வருகிறது. அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை வன்னியே முதன்மைப் போர்க்களமாகவும் இருந்து வந்துள்ளது. அதன் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முக்கியமான அம்சங்கள். ஏறக்குறைய அனைத்து வெளித்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு கடுமையான பொருளாதாரத்தடை, மருந்துத்தடை என்பவற்றோடு போராடி நமிர்ந்த நிலமது. அத்தகைய காலகட்டத்தில் செய்திஊடகங்களின் பாராமுகம் வேறு தமிழரைச் சினக்க வைத்தது. பி.பி.சி. உட்பட பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் வன்னியின் நிலைமைகளை இருட்டடிப்புச் செய்தோ திரிபுபடுத்தியோ செய்திகள் வெளியிட்டன. இலங்கை வானொலியின் தரவை வைத்துக்கொண்டு சொல்லும் செய்தி வேறு எத்தகையதாயிருக்கும்? இந்த நேரத்தில்தான் வெளிநாடொன்றிலிருந்து எமது செய்திகளை எம்மிடையே நடப்பவற்றைத் தெரிவிக்க வானொலியொன்று செயற்பட்டு வந்தது. அதுதான் “வெரித்தாஸ்” வானொலி.

“உண்மை ஓங்குக” என்ற மகுட வாக்கோடு வரும் அவ்வானொலி ஈழத்தமிழர் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டது. அத்தனைத் துன்பத்துள்ளும் இரவு 7.30 க்கு வானொலிக்கருகில் கூடிவிடும் கூட்டம். வானொலி கேட்க மின்கலம் இல்லை. சைக்கிள் டைனமோவைச் சுற்றி வானொலி கேட்கும் வழக்கமே அன்று இருந்தது. புலிகளின் குரலும் வெரித்தாஸ் வானொலியும் கேட்பது அம்மக்களுக்கு இன்றியமையாத ஒரு செயற்பாடு.

செய்திகளில் உண்மையும் நேர்மையும் கொண்டிருந்த அவ்வானொலியின் ஏனைய நிகழ்ச்சிகளும் தரமானவையே. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் “உண்மையின் எண்ணங்கள்” கேட்பதற்கு ஆவலோடு இருப்போம். அவ்வானொலியின் பணிப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பர் அவர்களின் கம்பீரக் குரலும் அவ்வசீகரத்துக்குக் காரணம். அவரின் நேர்மையும் கண்ணியமும் என்னை மட்டுமல்ல அனைத்து மக்களையும் கவர்ந்தது. தான் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையைக் கூட அவர் விமர்சிக்கத் தவறவில்லை. அவ்வானொலி வன்னிச் சிறுவர் சிறுமியர்களுக்கென சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி புலம் பெயர்ந்த தமிழரிடம் நிதி திரட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரனையுடன் அருட்திரு கருணரத்தினம் அடிகளாரின் மூலமாக செய்த தொண்டு காலத்தால் மறக்க முடியாதது. அச்சிறுவர்களைப் பற்றியதும் அப்போதைய வன்னி நிலைமை பற்றியதுமான அவரது பேச்சுக்கள் உணர்ச்சிமயமானவை.

யுத்த நிறுத்தத்தின் பின் அவர் வன்னிக்கு வந்திருந்தார். பல இடங்களையும் பார்வையிட்டார். விடுதலைப்புலிகளின் வரி சேகரிப்பு முறை பற்றி ஒரளவு விமர்சனமும் அவர்களின் சோதனை முறைபற்றி அதிருப்தியும் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையானவர். ஜெகத் கஸ்பார் அடிகளார் என்றால் எம்மக்களுக்குக் கொள்ளைப் பிரியம். அவர் வெரித்தாஸ் பணிப்பாளர் பதவியிலிருந்து மாற்றலானபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர் எம்மக்கள். அவரைப் பற்றியும் அவரது வெரித்தாஸ் ஆற்றிய பங்கு பற்றியும் ஏராளமாகச் சொல்லலாம்.

இங்கே நான் அவரைப்பற்றியும் வெரித்தாஸ் பற்றியும் கூற வந்ததன் நோக்கம் வேறு. அதற்கான தேவையொன்று வந்துவிட்டது. காஞ்சி பிலிம்ஸின் பதிவிலே அவரைப் பற்றி எழுதப்பட்ட அவதூறான பிரச்சாரத்தைப் பார்த்தபின் சும்மா இருக்க முடியவில்லை. அப் பதிவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேணுமா என்று யோசித்ததுண்டு. எனினும் தாங்கமாட்டாமல் இப்பதிவை எழுதுகிறேன்.

//அந்த பாதிரியாரின் இஷ்ட உணவு பற்றி ஒரு பிலிப்பைன்ஸ் நன்பர் கூரியது. 15முதல் 17 நாட்கள் அவயம்(அடைகாப்பது)வைத்த கோழி முட்டையை சுடுதண்ணீரில் இட்டு வேகவைத்து உரித்து பின்னர் உண்பது தான். அதாவது முழுவதுமாக முட்டையினுள் குஞ்சு வளர்ந்த நிலைஇ அதே நேரத்தில் அந்த பிஞ்சு ஜீவணுக்கு உரோமம்(இறகுகள்) முளைதிறுக்காது. //

இப்படி எழுதுகிறார் அந்தக் காஞ்சி பிலிம்ஸ். எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு. நானறிந்த அப்பாதிரியார் அப்படியில்லை என்று என்னால் அடித்துக் கூறமுடியும். ஈழத்தமிழர்கள் அறிந்த ஜெகத் கஸ்பார் அடிகளும் அப்படியில்லை. இதை எழுதியவருக்கு முதலில் முட்டை அடை வைத்துப் பழக்கமிருக்கிறதா தெரியவில்லை. (அடை வைத்து குஞ்சு உருவான முட்டையொன்றை 17 நாட்களில் உடைத்துப் பாரும் அது எப்படியிருக்கிறதென்று.) இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிட்டான் என்ற தொனியில் சொல்லியிருக்கும் அவரது சொற்றொடர் அருவருக்கத்தக்கது. மாமிசம் உண்பதே பிழையென்று கூறுவது வேறுவகை. ஆனால் கோழி உண்பது பிரச்சினையில்லை, 17 நாள் அடைகாத்து வந்த குஞ்சு உண்பதுதான் பிரச்சினை (அவர் சொல்லும் கதை உண்மையென்று ஒரு பேச்சுக்கு எழுத்துக்கொண்டால் கூட )என்று சொல்ல வருகிறாரா? அபாண்டமாக இப்படி ஒருவர் மேல் பழிபோடுவதன் மூலம் என்ன சாதிக்க முயல்கிறார்?

அடுத்து ஒரு விடயமும் சொல்கிறார். தனது பணத்திலிருந்து 80 இலட்சம் வரை செலவழித்தேன் என்று ஜெகத் கஸ்பார் சொல்லியுள்ளார். அது பற்றிக் கேள்வி கேட்பது சரி. எப்படி ஒரு பாதிரியாருக்கு 80 இலட்சம் வந்தது என்பது சர்ச்சைக்குரியதுதான். பாதிரியாரொருவர் தனிப்பட அப்படிப் பணம் வைத்திருக்க முடியாதுதான். அவர் தமிழ் மையம் என்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். அந்தப் பணம் அவ் அமைப்புக்குரியதாயிருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை அவர் பகிரங்கமாய் வெளியிட்டதால் அவர் சார்ந்த திருச்சபைக்குக் கூட பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். அதைவிட வருமான வரித்துறை என்ன செய்கிறது? கறுப்புப் பணம் வைத்திருப்பவன் எப்படி அதைப் பகிரங்கமாகச் செலவு செய்து கணக்கும் காட்டுவான்? சரி அந்த 80 இலட்சம் பற்றிக் கேள்வி கேட்பது சரிதான். ஆனால் அதுபற்றி அவர் கூறுகிறார்:

//ஒரு பாதரியாரான இவருக்கு என்பது லட்சம் எங்கிருந்து வந்தது. வெரித்தாஸ் வானொலியில் கிடைத்த சம்பளப் பணமா? அல்லது ஈழத்து ஆதரவற்ற பிஞ்சு முகங்களை ஐரோப்பிய தமிழ் தொலைக் காட்சிகளில் காட்டி திரட்டிய கருப்புப் பணமா?//

இவர் என்னவும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் ஈழத்துப் பிஞ்சு முகங்களுக்கு அவர்காசு சேர்க்கும்போது அள்ளிக்கொடுத்த மக்களுக்கு இதன்மூலம் இவர் காட்ட விரும்பும் பூச்சாண்டி என்ன? கறுப்புப் பணமென்று எதைச்சொல்கிறார்?

ஏன் வெளிநாடுகளில் போய் இசையமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். எனக்கும் அந்தக் கேள்வியுண்டு. ஆனால் அதற்கு இளையராஜா “அவர்களின் (வெளிநாட்டு இசைவல்லுநர்களின்) நேரந்தவறாமை, பொறுப்புணர்ச்சி என்பனவே காரணம்” என்று கூறுகிறார்.

திருவாசம் இசையமைத்தது பற்றி எனக்கு எந்த எதிர்க்கருத்தோ ஆதரவுப் பார்வையோ இல்லை. ஆனால் ஒரு சினிமாப் படம் எடுப்பதை விட அல்லது பார்ப்பதை விட இது உயர்ந்ததாக எண்ணுகிறேன். அவ்வளவே.

அவர் சாதிபற்றியும் காஞ்சிமடம் பற்றியும் இந்துமதம் பற்றியும் எழுதிவரும் பதிவுகளைப்பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை. அது எனக்குப் புரியாத விசயமும் கூட. அதை விமர்சிக்க வேண்டியவர்களும் பேசாமலிருப்பதாகவே படுகிறது. தான் சொல்வதெல்லாம் சரி என்று அந்நபர் தொடர்ந்து செய்யக் கூடாது என்பதற்காகவே என்தரப்பிலிருந்து இப்பதிவு.

***காஞ்சி பிலிம்ஸின் பதிவையே அப்படியே படியெடுத்துத் தடித்த எழுத்தில் ஒட்டியுள்ளேன். அதில்வரும் எழுத்துப்பிழைகளுக்கு நான் பொறுப்பல்லன்.

Labels: ,


Friday, February 18, 2005

அவசர உதவி...

முந்தி (90 இன் ஆரம்பத்தில்) யாழ்ப்பாணத்தில சிங்கள அரசு குண்டு போடுறதுக்கு Y-08, Y-12 எண்ட விமானங்கள பயன்படுத்தினது. அதுகள் போடும் குண்டுகள் வித்தியாசமாயிருந்தது. மனிசரக் கொல்லுறது, பயப்படுத்திறது மட்டுமில்லாமல் வேற அரியண்ட வேலையளையும் அந்தக் குண்டுகள் செய்யும். மலம் அள்ளியந்து கொட்டுறான் எண்டு அப்ப சனம் கதச்சது. நானும் ரெண்டு மூண்டு முற அதுக்க மாட்டுப்பட்டிருக்கிறன். நாத்தமெண்டா அப்பிடித்தான் ஒரு நாத்தம். ஆனா அது உண்மையில மலமோ இல்லாட்டி அப்பிடி நாத்தம் தாற இரசாயனம் ஏதும் கலந்து குண்டு செய்யிறவனோ தெரியேல. ஆனா தாங்கேலாத அவஸ்தை.

இப்ப என்ர சந்தேகத்துக்கு வாறன். அந்த குறிப்பிட்ட ரெண்டு விமானத்துக்கும் எங்கட சனம் "சகடை" எண்டு பேர் வச்சுதுகள். (சின்னச் சகடை, பெரிய சகடை). ஏன் அந்தப்பேர் வந்தது எண்டு இண்டை வரைக்கும் தெரியாது. ஏதாவது காரணம் இருக்கத்தான் வேணும். ஆனா அதப்பற்றி அப்பவும் சரி அதுக்குப்பிறகும் சரி ஆராயவேயில்லை. இப்ப இந்தப் பேர் ஆராய்ச்சிக்கு அவசியம் வந்திட்டுது. நேற்றுப் பாத்த திருப்பாச்சி படத்தில "சனியன் சகடை" எண்டு வில்லனொருவன் வாறான். (வாற வில்லனுகளுக்குள்ள முதன்மை வில்லன் அவன்தான்) அவனுக்குப் பாருங்கோ அந்த "சகடை" எண்ட பேர் பாவிச்சிருக்கிறாங்கள். அந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் எண்டு அறிய ஆவலாயிருக்கு. வில்லனுக்கு வச்சபடியா அந்தச் சொல்லிண்ட விளக்கமும் எங்கட சனம் விமானத்துக்கு வச்ச பேரின்ர விளக்கமும் ஒத்துப்போகலாம். சகடை எண்ட சொல் தமிழ்நாட்டிலயும் பாவிக்கினம் எண்ட உடன அதப்பற்றியறியிற ஆவல் வந்திட்டுதுங்கோ.

இப்ப இது அவசரமான, அவசியமான (தலைப்புப் பொருந்தீட்டுது தானே) ஆராய்ச்சியா இருக்கிறதால வலைப்பதியும் மொழியறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் (வலைப்பதியிற எல்லாருமே இதுக்குள்ள அடக்கம்) இதுக்கு உதவ வேணுமெண்டு கேக்கிறன். படம் போட்டு ஆராய்ச்சி பண்ணுற ஆக்களும் தான். (என்ன அவசரமெண்டு ஆரென் கேட்டா இதுசம்பந்தமா புத்தகமொண்டு எழுதிறன் எண்டு சொல்லலாம்).

நன்றி.
-வன்னியன்-

Labels: ,


Wednesday, February 16, 2005

மன்மத பாணம்...

வணக்கம்!
மன்மதராசா பற்றி கறுப்பி எழுதியதும் பதிலாக பெயரிலி எழுதியதும். கறுப்பியின் பதிவில் பின்னூட்டம் இடப்போன நேரத்தில் அதுகொஞ்சம் நீண்டு விட்டதால் இங்கே தனிப்பதிவாக அதை இடுகிறேன். (மன்மதன் திரைப்படத்தை விட ஈழத்துப்பாடல்கள் ஆபத்தானவை என்கிற ரீதியில் கறுப்பி எழுதியிருந்தார்.)

கேட்பதன் மூலமும் பார்ப்பதன்மூலமும் அடையும் தாக்கத்திற்கிடையில் வித்தியாசமுண்டா? பின்னையது சற்றுக் கூடுதலான தாக்கத்தைத்தரும் என்றே நினைக்கிறேன். சமமானதுதான் என்றே எடுத்துக்கொள்வோம், அதெப்படி பாடல்கள்மூலம் ஏற்படும் தாக்கம் படங்கள் மூலம் இல்லாமற்போகும். ஒன்றில் இரண்டுமே அவர்களுக்கு விளையாட்டாய் இருக்கும். அல்லது இரண்டுமே தாக்கத்தை விளைவிப்பவையாயிருக்கும். இரண்டுமே சிறுவர்களால் புரிந்து கொள்ளப்பட்டால் ஏற்படும் தாக்கம் வித்தியாசமானது. கறுப்பி சொல்வதுபோல் பாடல்களைக் கேட்பதால் சிறுவர்கள் ஆயுதம் தூக்கினால் அது ஈழத்திலேதான். (புலம் பெயர்ந்த நாட்டிலல்ல) ஏனென்றால் பாடல்களில் தெளிவாகவே சொல்லப்படுகிறது யாரைக் கொல்ல வேண்டுமென்றும் எங்கே தூக்க வேண்டுமென்றும். இன்னொரு விசயம், கறுப்பி சொல்லும் கலாச்சாரத்திலிருந்து (This is my mom’s boy friend) ஒருவன் பாடல்களைக் கேட்டு ஆயதம் தூக்குவது சாத்தியப்படுமா? ஆயதம் தூக்க அவ்வளவு காரண காரியங்கள் இருந்தும் யாருமே ஈழத்தில் பாடல்களை மட்டும் கேட்டு ஆயதம் தூக்கியதில்லை. (பாடல்கள் ஓர் உந்துசக்தியே தவிர அதுமட்டுமே காரணியாகமுடியாது). ஆனால் படங்களில் சொல்லப்படும் வன்முறைக்கான காரணிகள் அவர்களின் காலடியிலேயே நடப்பவை. எங்குமே அவை சாத்தியப்படக்கூடியவை.

இரண்டுமே தவறு, இரண்டையுமே தடைசெய்ய முயற்சிக்க வேண்டுமென்று கூறுவது ஒருவகை. ஆனால் மன்மதன் பிரச்சினையில்லை, ஈழத்துப்பாடல்கள்தான் பிரச்சினை அவற்றைத் தடைசெய்ய முயற்சிக்க வேண்டுமென்று கூறுவது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. தரமிழந்த சினிமாப்பாடல்களைக் கூடத்தான் சிறுவர்கள் பாடி ஆடுகிறார்கள். இவர்கள் கல்யாணம் கட்டிக்கொண்டு ஓடிப்போகப்போகிறார்கள் என்று எவர் கவலைப்பட்டார்? ஆயுதம் தூக்கி வங்கி கொள்ளையிடவோ வழிப்பறி செய்யவோ இன்னும் என்னென்னவெல்லாமோ செய்யத் தூண்டும் சூழலை விட (திரைப்படங்கள் உட்பட) ஈழத்துப்பாடல்கள் ஆயுதம் தூக்க உந்துகிறது எனச்சொல்வது கேலிக்கிடமானது.
அட! விடுதலைப்புலிகளுக்கும் கூடவா இது பிடிபடாமற்போனது. பேசாமல் காசு தரச்சொல்லி நிறையப்பாட்ட வெளியிட்டா இப்ப குடுக்காட்டியும் அந்தப்பாட்டக் கேட்டு வளருற பிள்ளையள் பின்னொரு காலத்தில அள்ளியள்ளிக் குடுப்பினமெல்லே.

Labels: ,


Sunday, February 13, 2005

வணக்கம் அன்பர்களே!

வணக்கம் அன்பர்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது. நான் இப்பகுதியில் எழுதப்போகும் சில பதிவுகள் பலருக்குப் பிடித்தமில்லாமற் போகலாம். எனினும் நான் கண்ட கேட்ட சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் அனுபவங்களையும் பதியப்போகிறேன் (எப்போதாவது இருந்து விட்டுத்தான்).
உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கலாம்.
-வன்னியன்-

Labels: ,


உங்களோடு சில நிமிடங்கள்..

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே!
பூராயம் உங்களை வரவேற்கிறது.
பூராயம் என்பதன் சரியான அர்த்தம் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இது ஆக்கபூர்வமான பகுதியாக இருக்கும்.

-வன்னியன்-

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]