Sunday, February 20, 2005

உண்மையின் எண்ணங்கள்...

வணக்கம்!
யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் வன்னியே விடுதலைப்போராட்டத்தின் அச்சாக இருந்து வருகிறது. அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை வன்னியே முதன்மைப் போர்க்களமாகவும் இருந்து வந்துள்ளது. அதன் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தமிழர் விடுதலைப்போராட்டத்தின் முக்கியமான அம்சங்கள். ஏறக்குறைய அனைத்து வெளித்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு கடுமையான பொருளாதாரத்தடை, மருந்துத்தடை என்பவற்றோடு போராடி நமிர்ந்த நிலமது. அத்தகைய காலகட்டத்தில் செய்திஊடகங்களின் பாராமுகம் வேறு தமிழரைச் சினக்க வைத்தது. பி.பி.சி. உட்பட பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் வன்னியின் நிலைமைகளை இருட்டடிப்புச் செய்தோ திரிபுபடுத்தியோ செய்திகள் வெளியிட்டன. இலங்கை வானொலியின் தரவை வைத்துக்கொண்டு சொல்லும் செய்தி வேறு எத்தகையதாயிருக்கும்? இந்த நேரத்தில்தான் வெளிநாடொன்றிலிருந்து எமது செய்திகளை எம்மிடையே நடப்பவற்றைத் தெரிவிக்க வானொலியொன்று செயற்பட்டு வந்தது. அதுதான் “வெரித்தாஸ்” வானொலி.

“உண்மை ஓங்குக” என்ற மகுட வாக்கோடு வரும் அவ்வானொலி ஈழத்தமிழர் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டது. அத்தனைத் துன்பத்துள்ளும் இரவு 7.30 க்கு வானொலிக்கருகில் கூடிவிடும் கூட்டம். வானொலி கேட்க மின்கலம் இல்லை. சைக்கிள் டைனமோவைச் சுற்றி வானொலி கேட்கும் வழக்கமே அன்று இருந்தது. புலிகளின் குரலும் வெரித்தாஸ் வானொலியும் கேட்பது அம்மக்களுக்கு இன்றியமையாத ஒரு செயற்பாடு.

செய்திகளில் உண்மையும் நேர்மையும் கொண்டிருந்த அவ்வானொலியின் ஏனைய நிகழ்ச்சிகளும் தரமானவையே. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் “உண்மையின் எண்ணங்கள்” கேட்பதற்கு ஆவலோடு இருப்போம். அவ்வானொலியின் பணிப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பர் அவர்களின் கம்பீரக் குரலும் அவ்வசீகரத்துக்குக் காரணம். அவரின் நேர்மையும் கண்ணியமும் என்னை மட்டுமல்ல அனைத்து மக்களையும் கவர்ந்தது. தான் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையைக் கூட அவர் விமர்சிக்கத் தவறவில்லை. அவ்வானொலி வன்னிச் சிறுவர் சிறுமியர்களுக்கென சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி புலம் பெயர்ந்த தமிழரிடம் நிதி திரட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரனையுடன் அருட்திரு கருணரத்தினம் அடிகளாரின் மூலமாக செய்த தொண்டு காலத்தால் மறக்க முடியாதது. அச்சிறுவர்களைப் பற்றியதும் அப்போதைய வன்னி நிலைமை பற்றியதுமான அவரது பேச்சுக்கள் உணர்ச்சிமயமானவை.

யுத்த நிறுத்தத்தின் பின் அவர் வன்னிக்கு வந்திருந்தார். பல இடங்களையும் பார்வையிட்டார். விடுதலைப்புலிகளின் வரி சேகரிப்பு முறை பற்றி ஒரளவு விமர்சனமும் அவர்களின் சோதனை முறைபற்றி அதிருப்தியும் கொண்டிருந்தார். பழகுவதற்கு இனிமையானவர். ஜெகத் கஸ்பார் அடிகளார் என்றால் எம்மக்களுக்குக் கொள்ளைப் பிரியம். அவர் வெரித்தாஸ் பணிப்பாளர் பதவியிலிருந்து மாற்றலானபோது பெரிதும் ஏமாற்றமடைந்தனர் எம்மக்கள். அவரைப் பற்றியும் அவரது வெரித்தாஸ் ஆற்றிய பங்கு பற்றியும் ஏராளமாகச் சொல்லலாம்.

இங்கே நான் அவரைப்பற்றியும் வெரித்தாஸ் பற்றியும் கூற வந்ததன் நோக்கம் வேறு. அதற்கான தேவையொன்று வந்துவிட்டது. காஞ்சி பிலிம்ஸின் பதிவிலே அவரைப் பற்றி எழுதப்பட்ட அவதூறான பிரச்சாரத்தைப் பார்த்தபின் சும்மா இருக்க முடியவில்லை. அப் பதிவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேணுமா என்று யோசித்ததுண்டு. எனினும் தாங்கமாட்டாமல் இப்பதிவை எழுதுகிறேன்.

//அந்த பாதிரியாரின் இஷ்ட உணவு பற்றி ஒரு பிலிப்பைன்ஸ் நன்பர் கூரியது. 15முதல் 17 நாட்கள் அவயம்(அடைகாப்பது)வைத்த கோழி முட்டையை சுடுதண்ணீரில் இட்டு வேகவைத்து உரித்து பின்னர் உண்பது தான். அதாவது முழுவதுமாக முட்டையினுள் குஞ்சு வளர்ந்த நிலைஇ அதே நேரத்தில் அந்த பிஞ்சு ஜீவணுக்கு உரோமம்(இறகுகள்) முளைதிறுக்காது. //

இப்படி எழுதுகிறார் அந்தக் காஞ்சி பிலிம்ஸ். எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு. நானறிந்த அப்பாதிரியார் அப்படியில்லை என்று என்னால் அடித்துக் கூறமுடியும். ஈழத்தமிழர்கள் அறிந்த ஜெகத் கஸ்பார் அடிகளும் அப்படியில்லை. இதை எழுதியவருக்கு முதலில் முட்டை அடை வைத்துப் பழக்கமிருக்கிறதா தெரியவில்லை. (அடை வைத்து குஞ்சு உருவான முட்டையொன்றை 17 நாட்களில் உடைத்துப் பாரும் அது எப்படியிருக்கிறதென்று.) இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிட்டான் என்ற தொனியில் சொல்லியிருக்கும் அவரது சொற்றொடர் அருவருக்கத்தக்கது. மாமிசம் உண்பதே பிழையென்று கூறுவது வேறுவகை. ஆனால் கோழி உண்பது பிரச்சினையில்லை, 17 நாள் அடைகாத்து வந்த குஞ்சு உண்பதுதான் பிரச்சினை (அவர் சொல்லும் கதை உண்மையென்று ஒரு பேச்சுக்கு எழுத்துக்கொண்டால் கூட )என்று சொல்ல வருகிறாரா? அபாண்டமாக இப்படி ஒருவர் மேல் பழிபோடுவதன் மூலம் என்ன சாதிக்க முயல்கிறார்?

அடுத்து ஒரு விடயமும் சொல்கிறார். தனது பணத்திலிருந்து 80 இலட்சம் வரை செலவழித்தேன் என்று ஜெகத் கஸ்பார் சொல்லியுள்ளார். அது பற்றிக் கேள்வி கேட்பது சரி. எப்படி ஒரு பாதிரியாருக்கு 80 இலட்சம் வந்தது என்பது சர்ச்சைக்குரியதுதான். பாதிரியாரொருவர் தனிப்பட அப்படிப் பணம் வைத்திருக்க முடியாதுதான். அவர் தமிழ் மையம் என்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். அந்தப் பணம் அவ் அமைப்புக்குரியதாயிருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை அவர் பகிரங்கமாய் வெளியிட்டதால் அவர் சார்ந்த திருச்சபைக்குக் கூட பதில் சொல்லித்தானே ஆகவேண்டும். அதைவிட வருமான வரித்துறை என்ன செய்கிறது? கறுப்புப் பணம் வைத்திருப்பவன் எப்படி அதைப் பகிரங்கமாகச் செலவு செய்து கணக்கும் காட்டுவான்? சரி அந்த 80 இலட்சம் பற்றிக் கேள்வி கேட்பது சரிதான். ஆனால் அதுபற்றி அவர் கூறுகிறார்:

//ஒரு பாதரியாரான இவருக்கு என்பது லட்சம் எங்கிருந்து வந்தது. வெரித்தாஸ் வானொலியில் கிடைத்த சம்பளப் பணமா? அல்லது ஈழத்து ஆதரவற்ற பிஞ்சு முகங்களை ஐரோப்பிய தமிழ் தொலைக் காட்சிகளில் காட்டி திரட்டிய கருப்புப் பணமா?//

இவர் என்னவும் சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால் ஈழத்துப் பிஞ்சு முகங்களுக்கு அவர்காசு சேர்க்கும்போது அள்ளிக்கொடுத்த மக்களுக்கு இதன்மூலம் இவர் காட்ட விரும்பும் பூச்சாண்டி என்ன? கறுப்புப் பணமென்று எதைச்சொல்கிறார்?

ஏன் வெளிநாடுகளில் போய் இசையமைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். எனக்கும் அந்தக் கேள்வியுண்டு. ஆனால் அதற்கு இளையராஜா “அவர்களின் (வெளிநாட்டு இசைவல்லுநர்களின்) நேரந்தவறாமை, பொறுப்புணர்ச்சி என்பனவே காரணம்” என்று கூறுகிறார்.

திருவாசம் இசையமைத்தது பற்றி எனக்கு எந்த எதிர்க்கருத்தோ ஆதரவுப் பார்வையோ இல்லை. ஆனால் ஒரு சினிமாப் படம் எடுப்பதை விட அல்லது பார்ப்பதை விட இது உயர்ந்ததாக எண்ணுகிறேன். அவ்வளவே.

அவர் சாதிபற்றியும் காஞ்சிமடம் பற்றியும் இந்துமதம் பற்றியும் எழுதிவரும் பதிவுகளைப்பற்றி எனக்கு எந்தக் கருத்துமில்லை. அது எனக்குப் புரியாத விசயமும் கூட. அதை விமர்சிக்க வேண்டியவர்களும் பேசாமலிருப்பதாகவே படுகிறது. தான் சொல்வதெல்லாம் சரி என்று அந்நபர் தொடர்ந்து செய்யக் கூடாது என்பதற்காகவே என்தரப்பிலிருந்து இப்பதிவு.

***காஞ்சி பிலிம்ஸின் பதிவையே அப்படியே படியெடுத்துத் தடித்த எழுத்தில் ஒட்டியுள்ளேன். அதில்வரும் எழுத்துப்பிழைகளுக்கு நான் பொறுப்பல்லன்.

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: -/.

undefined

1.9 21.2.2005
 
This comment has been removed by a blog administrator.
 
/17 நாள் அடைகாத்து வந்த குஞ்சு உண்பதுதான் பிரச்சினை/
this is one of the ways Chinese eat egg. What a big deal?!
 
எழுதிக்கொள்வது: சௌந்தர்.

அன்புள்ள நண்பருக்கு,

நானே அந்த பதிவு பற்றி மறுமொழி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். வார இறுதியில் கூட அலுவலக வேலை தொடர்ந்துவிட்டது. நான் உங்கள் கருத்தை அமோதிக்கிறேன். மேலும், திருவாசகத்திற்கு ஏன் வெளிநாட்டில் இசை என்பதிற்கு பதில் 'பாதர்' அவர்களின் ஜெயா தொலைக்காட்சிப் பேட்டியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். சுருக்கமாக இங்கே: 'சிம்பொனியில் திருவாசகம்' என்பது ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்பது போல். ஒன்று - சிம்பொனி. இரண்டு: தமிழ் மொழி. உலக அளவில் சிறந்த இசை வடிவமாக கருதப்படும் 'சிம்பொனி' இசை முறையில் தமிழ் இசைக்கப்படுகிறது. முதல் ஆசிய மொழி. அப்படி உலக அளவில் செல்லும் போது ஒரு சினிமா பாடலுக்குப் பதில் சிறந்த இலக்கியத்திலிருந்து பாடல் எடுத்துக் கொள்வது. இங்கே அது பக்தி இலக்கியமாகி விட்டது அவ்வளவு தான்.

'பாதர்' அவர்களின் ஜெயா தொலைக்காட்சி பேட்டியின் ஒலி வடிவம் இங்கே:
http://www.tis-usa.com/media/gasper%20jegath%20speech--001.mp3
http://www.tis-usa.com/media/gasper%20jegath%20speech--002.mp3

நன்றி.
சௌந்தர்.
http://soundar.blogsome.com

0.35 21.2.2005
 
எழுதிக் கொள்வது வன்னியன்.

நன்றி பெயரிலி!
அவர் காஞ்சி மடத்தை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டுதான் கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரை விமர்சித்துள்ளார். அப்படிச் சாப்பிடுவதைப்பற்றி எனக்கும் எந்த ஆட்சேபனையுமில்லை. ஆனால் பொதுவாகவே இப்படியானவற்றை அருவருப்பாகவே நோக்கும் நான் சார்ந்த சமூகத்தில் இது ஏற்படுத்தும் தாக்கத்தை நினைத்தே அதை ஆதரித்து எழுதவில்லை. நான் கூட முதலை பாம்பு குரங்கு என்று தின்னக்கூடிய அனைத்தையும் என் நண்பர்களோடு வன்னியில் தின்றுவிட்டேன். ஆனால் இதை என் வீட்டாரிடம் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னபோது நான் அடைந்த அனுபவம் வித்தியாசமானது. அத்தோடு அப்பாதிரியார் அப்படியில்லை என்றே சொல்ல வந்தேன்.

அடுத்து நன்றி சௌந்தர். உங்கள் இணைப்புக்களுக்கு மிக்க நன்றி.
 
எழுதிக்கொள்வது: mullai

சரியான நேரத்தில் சொல்ல வேண்டிய கருத்து.சொல்லி
விட்டீர்கள்.எதுக்குமே சேறூ பூசுவது தவறூ.

7.6 22.2.2005
 
எழுதிக்கொள்வது: sri

i நெநன உழில

10.51 5.8.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]