Sunday, June 12, 2005

சூகை தெரியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்திருந்த காலம். வந்த புதுசில காடு சார்ந்த ஓரிடத்திலதான் இருந்தம். அப்ப காட்டுக்குள்ள போறதெண்டா கொள்ளைப் பிரியம்; கூடவே பயமும். சிலர் கரடி நிக்கும் எண்டு பயப்படுத்தியிருந்தினம். எண்டாலும் காடு பாக்கிற சந்தோசம் விடுமோ? காடு பாக்கிறதைப்பற்றி பிறகு ஒருக்கா எழுதிறன்.

நாங்கள் வந்து ரெண்டு நாளில சின்ன பத்தையள வெட்டி ஒரு வெளியாக்கி அதில கூடாரங்கள் போட்டு இருந்தம். என்ன இருந்தாலும் அதுவும் ஒரு இனிமையான வாழ்க்கைதான். அனுபவித்தவைக்குப் புரியும். அப்ப எங்களோட அந்த இடத்து ஆக்கள் ரெண்டுமூண்டுபேரும் தங்கிறவை. ஒருநாள் இரவு. ஒரு குறிப்பிட்ட இடத்தில சனம் துள்ளிக்குதிக்குது. ரெண்டு மூண்டு சின்னனுகளும் அழுகிதுகள். என்னெண்டா எறும்புக் கடிச்சுப்போட்டுதாம்.

பாத்தா நிறைய கட்டெறும்புகள் குவியலா நிக்குதுகள்.
"உங்க பார், எவ்வளவு கட்டெறும்புகள்!" எண்டேக்கதான் சொன்னாங்கள் அது கட்டெறும்பில்லையாம், சூகையாம் எண்டு. நாங்கள் கட்டெறும்பு எண்டுறத இவங்கள் சூகை எண்டுறாங்கள் எண்டிட்டு படுத்தாச்சு.

அடுத்த நாள் பாத்தா அந்த இடத்தவிட்டு அதுகள் போகேல்ல. எக்கச்சக்கமா நிக்குதுகள். அதுகளக் கலைக்கிற முயற்சியல நாங்கள் நாலைஞ்சு பொடிப்பிள்ளைகள் இறங்கினம். அப்பதான் தெரிஞ்சுது அதுகளின்ர பலம். முதல் கடியோடயே விளங்கீட்டுது உதுகள் கட்டெறும்பு வகைக்குள்ள வராதெண்டு. என்ன செய்ய? உதுகள் அந்த வகைக்குள்ள வராதுகள் எண்டு கணிக்கிறதுக்குள்ள உயிர் போயிட்டுது. அப்பிடிக் கடி. ஒரு பத்துச் செக்கன்கூட இல்ல, போர்க்களத்திலயிருந்து வெளியில வாறதுக்கு. அதுக்குள்ள முப்பது முப்பந்தைஞ்சு எறும்பு காலில ஏறீட்டுது. அண்டைக்கே ஊர் ஆக்களப்பிடிச்சு சூகையைப் பற்றி அறிஞ்சன்.

யாழ்ப்பாணத்தில இப்பிடியொரு எறும்பைப் பாத்ததில்ல. பாக்க கட்டெறும்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா செயற்பாடுகளில மாற்றம். சூகையெண்ட சொல்லையும் நாங்கள் அங்க கேள்விப்படேல. சரி, இது வன்னியில இருக்கிற ஒரு வகையெண்டு நினைச்சிருந்தன். முந்தநாள் இயக்குநர் சேரனின்ர நிகழ்ச்சியொண்டைத் தொலைக்காட்சியில காணுற சந்தர்ப்பம் கிடைச்சுது. அதுல பாத்தா, அட எங்கட சூகை!
அவரும் சூகை எண்டுதான் சொல்லுறார். அப்ப தமிழ்நாட்டிலயும் இந்தச் சூகை இருக்கு. ஆனா இதே மோசமான சூகை தானோ எண்டது சந்தேகம்.

இனி சூகை பற்றி சில அனுபவங்கள். இத நாங்கள் 'கொமாண்டோஸ்' எண்டும் சொல்லுறனாங்கள். ஏனெண்டா அவ்வளவு வேகம். சூகை வரிசையாப் போய்கொண்டிருக்கிற இடத்தால வேகமா நீங்கள் நடந்து போனாக்கூட எப்பிடியும் உங்கட காலில ஏறீடும். கண்ணிமைக்கும் நேரத்தில ஏறிக்கடிச்சிடும். அந்தக்கடியை அனுபவிச்ச ஆக்களுக்குத்தான் அதின்ர வலி தெரியும். எங்கட நெருப்பெறும்பு, கட்டெறும்பெல்லாம் பிச்ச வாங்கோணும். அதவிட அது ஒரு இரைச்சல் போடும் பாருங்கோ. இரவில நல்ல நிசப்தமா இருந்தா அந்த இரைச்சல் கேட்கலாம். அவயள் பவனி வந்தா அந்த இரைச்சல் கட்டாயம் வரும். இரவில கொட்டிலுகளுக்குள்ள எல்லாம் அதுகள் வந்திடும். முதல் கொஞ்சநாள் கொட்டிலச் சுத்தி நெருப்புத்தணல் கொட்டி விடுறனாங்கள். பிறகு பழகிவிடும்.

இரவில வெளிச்சமில்லாமல் நடந்தா, முன்னுக்குப்போறவர் வேணுமெண்டே ஒரு இடத்தில நாலைஞ்சுதரம் கால உதைஞ்சுட்டுப்போவார். (உண்மையில சூகை இருந்திருக்காது). பின்னால வாற ஆக்களும் அந்த இடத்தில வேகமா துள்ளிப் போவினம். பிறகு அங்கால போய் சிரிக்கிறது.

எங்கயாவது பதுங்குகுழிகள் வெட்டினா கட்டாயம் சூகையின்ர தொல்லையிருக்கும். நிறைய நேரத்தை அது மினக்கெடுத்தும்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்ர ஒரு வருட வெற்றிநாளுக்கு நாங்கள் சந்திச்ச களப்போராளியள் சிலரோட கதைச்சம்.
"இஞ்ச உங்களுக்கு ஆகக் கஸ்டமாயிருக்கிற விசயம் எது?"
எண்டு அவயளக் கேட்டம். (எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், குடிதண்ணியில இருந்து எதிரியின்ர சினைப்பர் தாக்குதல்கள், சாப்பாட்டுப்பிரச்சினை எண்டு நிறைய சிக்கல்கள்.) ஆனா அவயள் சொல்லீச்சினம்:
"உவன் ஆமியக்கூட சமாளிச்சிடலாம். ஆனா உந்த சூகையத்தான் சமாளிக்க எலாது."

இப்பிடி சூகையின்ர நினைவுகள் கனக்க இருக்கு. சேரனின்ர நிகழ்ச்சியைப் பாத்த உடன, தமிழகத்திலயும் இந்த சூகை இருக்கெண்ட உடன இந்தப் பதிவ எழுத வேணும்போல இருந்திச்சு. அவ்வளவு தான்.

Labels: , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: இளைஞன்

சூகை: கரிய சிற்றெறும்பு வகை, யானை என்று அகராதியில் போட்டிருக்கு. :-)

13.45 12.6.2005
 
AnoinMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|இன்று புதிய பதமொன்றை உங்களால் அறிந்துகொண்டேன். நன்றி|
 
இளைஞன்!!
நான் சொல்லுறதில சந்தேகப்பட்டுத்தானே அகராதி பாத்தனீர்?
அனோனிமசு!
பின்னூட்டத்துக்கு நன்றி.
அது சரி தமிழகத்தில் இச்சொல் பாவனையிலிருக்கிறதைப் பற்றி ஒருத்தருமே கதைக்கேலயே?
 
விபரிப்பு அருமை.
ஒரு படம் போட்டீர்கள் என்றால் நன்று.
 
எழுதிக்கொள்வது: yaro

நல்ல பதிவு.சேரன் சூகையைப் பற்றி என்ன சொன்னவர்? அதை விட்டுட்டியளே...

22.58 14.6.2005
 
எழுதிக்கொள்வது: டிசே

நானும் இந்த 'சூகையை' முதன்முதலாக இப்பத்தான் கேள்விப்படுகின்றேன். என்ன நிறத்தில் இருக்கும்? உம்மளைக் 'கடி'த்துத் தொல்லை தரக்கூட ஒரு வகையான எறும்பு இருந்திருக்கின்றது என்பதுவும் எனது முக்கிய செய்திதான் :-).



16.41 12.6.2005
 
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
சேரன் சூகையைப் பற்றி பெரிதாக எதுவும் சொல்லவில்லை. தம் சிறுவயதுப் பருவத்தை நினைவு கூரும்போது, குறிப்பிட்ட மரத்தடியில் நிறைய சூகை இருக்குமென்றும், அது தங்களைக் கடிப்பது பற்றியும் சொல்லியிருந்தார்.

சூகை பார்ப்பதற்கு கட்டெறும்புதான். (கட்டெறும்பு எப்படியிருக்குமென்று கேட்காதீர்கள்) முதலில் பார்ப்பவருக்கு கடிவாங்கும் வரையில் வித்தியாசம் தெரியாது. படம் கைவசமில்லை. இனிமேல்தான் எடுத்துப்போட வேணும்.

டி.சே!
என்னில அப்பிடியென்ன கோபம்?
நான் உம்மோட றாத்த வாறதில்லையே?

உங்களுக்குத் தெரியாமலிருக்கிறதில ஆச்சரியமில்ல. கொஞ்சக்காலமா வன்னியில இருந்தனான் எண்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கிற சக வலைப்பதிவாளர் ஒருத்தரிட்ட மின்னஞ்சல் மூலமா சூகை பற்றிக் கேட்டன். மனுசன் தெரியாது எண்டிட்டார். என்னப்பா வன்னியில இருந்தனீர், சூகை தெரியாது எண்டுறீர் எண்டு கேக்க, தாங்கள் கொட்டிலில இருக்கேலயாம். பலஸ் இல இருந்தவையாம்.
மண்ணாங்கட்டி, வன்னியில எந்த இடத்துக்குப் போனாலும் இத அறியாமல் இருக்க முடியாது. எனக்கென்னவோ அம்மான் நல்லாக் கயிறு விடுறார் போல கிடக்கு.
 
அடடா., நல்ல போருங்க அந்த எறும்புக்கு., ஒரு மாதிரி கருஞ்சிவப்பு நிறத்துல இருக்கும். கடிச்சுதுன்னா., தடிச்சுப் போயிறும். கட்டெறும்ப விட கொஞ்சம் சின்னதா இருக்கும். அய்ய பேர் மறந்து போச்சே. அதுசரி., பாம்புக்கு மட்டுமல்ல எறும்புக்கும் படை நடுங்கும்னு சொல்லுங்க.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]