Wednesday, March 16, 2005
"பாவனை" பண்ணல்' ...பெட்டைக்குப் பின்னூட்டம்
நேற்று இரவு பெட்டைக்குப் பின்னூட்டமிட எழுதியது. ஆனால் நிறைய நேரம் செலவழித்தும் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. (அதென்னவோ தெரியேல. பொடிச்சியளெண்டா என்ர கணிணிக்கு அலர்ஜி வந்திட்டுது போல. நேற்று ஷ்ரேயாவின் தமிழ் முயற்சிக்குப் பின்னூட்டமிடவும் சரியாக் கஸ்டப்பட்டனான். மொடர்ன்கேர்ள் விதிவிலக்கு) மற்றவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பின்னூட்டத்தைத் தவிர வேறேதுவும் வரவில்லை. எனவே எனது பின்னூட்டத்தை என் பதிவில் இடுகிறேன். பெட்டையின் பதிவில் இட முடிகிறபோது இதை அழித்துவிடுவேன். பின்னூட்டமாக இட எழுதியதால் விரிவாக எழுதவுமில்லை; இப்போது அவசரமாகப் பதிவதால் திருத்தங்களேதும் செய்யவுமில்லை.
பொடிச்சி!
அவசியமான பதிவு. வன்னியில் பல பெயர்களில் (வின்சன்ற் ஜோசப், அருளாளன், இன்னும் பிற..) மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் எழுதும் ஒருவர் ஒருக்கிறார். குழல் என்ற பெயரில் ஆபிரிக்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். மேலும் (சிங்களம் உட்பட) 60 க்கும் மேற்பட்ட படைப்புக்கள், கையேடுகள் என்று மொழிபெயர்த்து வெளியிட்டவர். சொந்த ஆக்கமாகவும் தமிழில் சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.
இப்போதும் முழுநேர மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் அவரோடு எனக்குப் பழக்கமுண்டு. அவர் ஆபிரிக்கக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் போது சந்தித்துக் கதைத்தேன். அப்போது "ஏன் நீங்கள் தமிழில் படைப்புக்கள் எழுதுவதைக் குறைத்து விட்டீர்கள்" என்று நான் கேட்டபோது, படைப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பதைவிட இலகுவானது. எல்லாரும் அதத்தானே செய்யினம்? ஆனா எங்கட தேவை இப்ப மொழிபெயர்ப்புக்களில பெரிதும் தங்கியிருக்கு" என்று விளக்கிக் கொண்டு வந்தவர், இறுதியாகச் சொன்னார்:
'வரவேற்பு இல்லாவிட்டாலும் படைப்பாளியாக யாரும் இருந்துவிட்டுப் போகலாம்.
ஆனால் மொழிபெயர்ப்பாளனாக யாரும் "பாவனை" பண்ண முடியாது'
.
Labels: ஈழ இலக்கியம், உலக இலக்கியம், பதிவர் வட்டம்
நன்றி வன்னியன். என்னுடைய கணிணிக்கே நான் என்றால் அலேர்ஜுதான். அதை விடுங்கள், எனக்குச் சுவாரசியமாய் இருக்கிற விடயம்,
"யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்."
இந்தப் புத்தகம் (Exodus by Leon Uris) என்னிடம் சில மாதங்களாகக் கிடக்கிறது. நண்பி ஒருவர் படித்துவிட்டு கட்டாயம் படிக்குமாறு சொல்லியும் புத்தகத்தின் தடிப்புக் காரணமாய் படிக்க ஆர்வம்வராமல் கிடக்கிறது. எனினும் கதைச் சுருக்கம் கேட்டு அதில் நிறைய பிரச்சினை/விமர்சனம் உண்டு, படித்துவிட்டு நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்' ஐ முன்வைத்து எழுத விருப்பமுங்கூட; சிலவேளை எழுதலாம் ஆனால் அந்த 599 பக்க நூலை ஈழத்தில் ஒருவர் மொ.பெயர்த்திருக்கார் என்பது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது (இந்தப் புத்தகமாய்த்தான் இருக்கவேண்டுமென்பது ஊகம்). அரசியல் கொள்கைகள் எல்லாவற்றையும் முடியுமாய் ஆக்கிறது. புதிய தகவல் எனக்கு, அதற்கு நன்றி.
18.33 16.3.2005
நீங்கள் சொல்வது மெத்தச்சரி. கொள்கைகள் சில அசாத்தியங்களைச் செய்ய வைக்கும். அவர் வெளியே தெரியாத பல மொழிபெயர்ப்புக்களைச் செய்துள்ளார். இம்மொழிபெயர்ப்புப் பற்றி வெளியில் தெரியாதது வேதனையாய்த் தானிருக்கிறது. உண்மையில் மூலப்பிரதியைக் கொண்டாடிய அளவுக்கு அதன் தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டாடவில்லை (தமிழ் வடிவத்தினூடகவே அறிந்தாலும்) என்பது விசித்திரமானது. உண்மையில் அவர் தன்னலமற்ற, புகழைத் தேடிப்போகாத அற்புதமான மனிதர். ஐம்பதைத் தாண்டிவிட்ட அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார்.
சொல்ல மறந்துவிட்டேன். குழல் என்பவர் யாழ்ச்சமரில் வீரச்சாவடைந்த அவரது ஒரே மகள்.
மறக்காமல் இந்தத் தகவல்களை எனது பதிவில் இடுங்கள், வாசிப்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும். நானும் ஈழத்தவர்களில் ஏ.ஜே.கனகரத்னா போன்றவர்களை விட்டுவிட்டேன்..
இந்தத் தகவல்கள் எனக்குப் புதிது. பலருக்கும் புதிதாவே இருக்கும்.
நன்றி ஈழநாதன், பொடிச்சி! இந்நூல் யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோது வெளியிடப்பட்டது. ஆனால் யாழ்ப்பாண புத்திஜீவி வர்க்கத்துக்கே இந்நூல் பற்றித் தெரியாது. அதைவிட "ஈழநாத" வெளியீடுதானே? என்ற ஏளன மனோபாவமும் இருக்கிறது. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை. பதிப்பகத்தின் பிரபலம் இன்று முக்கியமானது.
மன்னிக்க வேண்டும். இப்போது உடனடியாக படைப்புக்ளின் பெயரேதும் ஞாபகமில்லை. விடயங்கள் தெரிந்தால் பதிகிறேன்.
19.33 17.3.2005
மேலும் மேற்குறிப்பிட்ட பதிவும் அதற்கு நீங்கள் இட்ட பின்னூட்டங்களும் அந்தந்தப் பெயர்களிலேயே பொடிச்சியின் பதிவில் பின்னூட்டமாகக் கொடுத்துவிட்டேன்
மேலும் மேற்குறிப்பிட்ட பதிவும் அதற்கு நீங்கள் இட்ட பின்னூட்டங்களும் அந்தந்தப் பெயர்களிலேயே பொடிச்சியின் பதிவில் பின்னூட்டமாகக் கொடுத்துவிட்டேன்.
வன்னியன்!
நான் கேள்விப்பட்ட அளவில் அவர் ஒரு போராளி என்று அறிந்தேன். உண்மையா? இல்லாவிட்டால் இவர் வேறு அவர் வேறா?
1.1 30.3.2005
இந்தப் புத்தகம் என்னுடைய 96,97 களில் வாசித்தது.. இப்போது வாசிக்க வேண்டும் என்ற Google தேடலில் அது இங்கு கொண்டு வந்து விட்டிருக்கறது..
ஆங்கில மூலப்புத்தகம் கிடைக்கிறது.. மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் எங்கேனும் எடுக்கமுடியுமாயின் தெரியப்படுத்தவும்...
நன்றி.
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]