Friday, April 21, 2006

போராளிகளின் குறிப்புக்கள்.

********நட்சத்திரப் பதிவு -08********

உலக மட்டத்தில் போர்வீரர்களின் குறிப்புக்களுக்கிருக்கும் மரியாதையும் பெறுமதியும் உயர்வானவை. காலங்கடந்தும் வாழ்பவை. அவ்வீரர்களின் நாட்டிலோ சமூகத்திலோ மட்டுமன்றி உலகம் முழுதும் போற்றப்படும் போர்விரர்களின் எழுத்துக்கள் நிறைய உள்ளன. "ஸ்டாலின் கிராட்" போன்ற படைப்புக்கள் நிகழ்த்திய தாக்கம் யாவரும் அறிந்ததே.

இவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல ஈழப்போராட்ட அனுபவங்கள். அவர்களுக்கு "ஸ்டாலின் கிராட்", எங்களுக்கு 'இத்தாவில்'.
ஆனால் அவற்றை ஆவணப்படுத்துவதுதான் முக்கியம்.

புலிகளின் மிகப்பெரிய தரையிறக்கம் 'மாமுனைத் தரையிறக்கம்'. ஏறத்தாழ 1200 போராளிகளை, பல மைல்கள் நீளமான - எதிரியின் வலிமையான கடற்கரையரணைத் தாண்டி எதிரியின் பகுதிக்குள்ளேயே தரையிறக்கியது அந்நிகழ்வு. முழுப்பலத்துடனான எதிரியின் கடற்படையுடனான கடுமையான கடற்சண்டையின் மத்தியில் அவர்களுக்கான விநியோகத்தையும் செய்தது தமிழரின் கடற்படை. தரையிறங்கிய அணிகள் கண்டிவீதியை மறித்து சிறியதொரு கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டைபிடித்து அப்பகுதியைக் காப்பாற்றி வைத்திருந்தன. இத்தாவில் என்ற அப்பகுதியில் புலிகளின் அணி இருக்கும்வரை ஆனையிறவுக்கு ஆபத்து என்தையுணர்ந்த எதிரியின் மூர்க்கத்தனமான தொடர்தாக்குதல்களின் மத்தியிலும் அச்சிறுபகுதியை எதிரியிடம் இழக்கவில்லை. எதிரி இழந்ததோ அதிகம். இரட்டை இலக்கத்தில் இராணுவ டாங்கிகளை இழந்தது அரசபடை.

ஒரு சதுர மீற்றருக்கு ஓர் எறிகணை என்ற வீதத்தில் அச்சிறு பகுதி குண்டுகளால் துவைத்தெடுக்கப்பட்டது. இன்றும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் இத்தாவில் என்ற குறிப்பிட்ட பகுதியைக் கடந்துசெல்லும்போது அச்சண்டைக்குச் சாட்சியாக தலைதறிக்கப்பட்டபடி நிற்கும் தென்னைகளையும், வீதிக்கரையில் புலிகளால் தகர்க்கப்பட்ட டாங்கிகள் ஒன்றிரண்டையும் காணாமற் செல்ல முடியாது. தளபதி கேணல் பால்றாஜ் நேரடியாகவே தரையிறக்க அணியுடன் நின்று அவர்களை வழிநடத்தினார். மகிளிரணித் தளபதிகள் கேணல் துர்க்கா, கேணல் விதுசா போன்றோரும் நேரடியாக நின்ற களமது. இதோ பால்றாஜ் உயிரோடு பிடிபட்டாரென்று முழக்கமிட்டுக் கொக்கரித்தபடி செய்திக்காகக் காத்திருந்த கொழும்புக் கட்டளையகம் ஆனையிறவு பறிபோனதைத் தான் செய்தியாகப் பெற்றது. இதுபற்றி இக்பால் அத்தாஸ் விரிவாக எழுதியுள்ளாரென்று நினைக்கிறேன்.

இவ்விதத்தில், ஒப்பிட்டுச் சொல்லமுடியாத மாபெரும் சமர்க்களத்தையும் அதன் வெற்றியையும் பற்றி முறையான நூலொன்று இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவைதாம் உள்ளன. அதுவும் இத்தாவில் களத்தில் களமாடிய எல்லைப்படை வீரர்களைப் பதிவாக்கும்போது வெளிவந்த தகவல்களே கணிசமானவை.

அதன்பின்னரான காலங்களில் அக்களத்திலிருந்த முக்கியமானவர்கள் - தளபதிகள் உட்பட பலர் களச்சாவடைந்துவிட்டனர். லெப்.கேணல் இராசசிங்கன் என்ற தளபதி அச்சமரில் மிகமிக முக்கியமானவர். பின்னொரு நாள் இரணைமடுக் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்துபோனார். அவரோடு இத்தாவில் சமர்க்களத்தின் பெரியதொரு வரலாறும் மூழ்கிப்போனது.

பெரிய தொகுப்புக்கள் வராவிட்டாலும் தனிப்பட்டவர்களின் குறிப்புக்கள் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வெளிவந்தவற்றில் மிகமிக முக்கியப் படைப்பாக கப்டன் மலரவனின் "போர் உலா" என்ற புத்தகத்தைச் சொல்லலாம். முழுக்க முழுக்க அவரது கள அனுபவத்தைச் சொல்லும் படைப்பு அது. மாங்குளம் படைமுகாம் தகர்ப்புக்காக மணலாற்றுக்காட்டிலிருந்து "உருப்படி"யுடன் புறப்பட்டதிலிருந்து, அத்தாக்குதல் முடிந்து அடுத்த தாக்குதலான சிலாவத்தை புறப்படும் வரையான பதிவு அது. 'உருப்படி' என்பது அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்துக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த 'பசீலன் 2000' என்ற புலிகளின் சொந்தத் தயாரிப்பு எறிகணை செலுத்தி. மலரவன் அந்த எறிகணை செலுத்தி அணிக்குப் பொறுப்பாளனாகச் செயற்பட்டவர். அவர் எழுதி வைத்ததை அவர் வீரச்சாவடைந்த பின்பு (1992 இல் வளளாய்க் காவலரண் தகர்ப்பில்) வெளியிட்டார்கள். மிக இயல்பாகச் சொல்லப்பட்ட படைப்பு அது. இப்படைப்பு தொடர்பான எனது ஒரே விமர்சனம், "அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரச் சொல்லாடலை அப்படியே பதிவு செய்திருக்கலாம்" என்பதுதான். அருமையான நாவல் போன்ற வாசக அனுபவத்தைத் தரக்கூடியது.

இவற்றைப் போல் நிறையப் படைப்புக்கள் வெளிவர வேண்டும். முக்கியமாக தாக்குதலணித் தலைவர்களும் தளபதிகளும் நிறைய எழுத வேண்டும். இங்கிருக்கும் முக்கிய பிரச்சினை புலிகளின் தளபதிகள், அணித்தலைவர்கள் எல்லோருமே பாடசாலைக் கல்வியில் நிறைவானவர்களில்லையென்பது. அதாவது அரச இராணுவக்கட்டமைப்பில் அணித்தலைமைக்கு கல்வித்தகமை முக்கியமானது. ஆனால் புலிகளின் அணித்தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஏன் மூத்த தளபதிகள் என்று பார்த்தாற்கூட பெரும்பான்மையானோர் பாடசாலைக் கல்வியறிவில் முதிர்ச்சியானவர்களில்லை. தேர்ந்த, கவர்ச்சியான எழுத்துநடையுடன் அவர்களால் சம்பவங்களைக் கொண்டுவர முடியாதநிலையுண்டு. இது, ஏனைய நாட்டுப் போர்வீரர்களுடனும் அவர்களின் எழுத்துக்களுடனும் ஒப்பிடும்போது தெரியும் வித்தியாசப் பண்பென்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே எழுதக்கூடியவர்கள் என்ற நிலையில், இலக்கியத்திறம், கவர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொள்ளாமல் குறிப்புக்களைத் தொகுக்க முடியும்.

இதைவிட்டுப்பார்த்தால், எழுதுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லையென்பதுதான் முக்கிய சிக்கலென்பது என் கருத்து. பொட்டம்மான் மிகமிக அருந்தலாக எழுதிய வெகுசில ஆக்கங்கள் மிகமிகக் காத்திரமான படைப்புக்கள். லெப்.கேணல் இராஜன் பற்றிய 'குருதிச்சுவடுகள்', வெளிச்சம் பவழ இதழில் வெளிவந்த இரு ஆக்கங்கள் என்பவை நானறிந்தவை. அதிகம் பேசாமல், அதிகம் எழுதாமல் இருப்பதே தன்பணிக்குச் சிறந்ததென்று இருக்கிறாரோ என்னவோ?

புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல் புலேந்திரன் அவர்கள் 1984, 85 காலப்பகுதியில் வெறும் 25 பேருடன் திருமலைக் காடுகளில் அலைந்துதிரிந்து பணியாற்றிய நேரத்தில் காட்டுவாழ்க்கையை ஒளிப்பதிவாக ஆவணப்படுத்தியதை அறிந்தபோது ஆச்சரியமாயிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துடன் ஒளிப்பதிவுக் கருவிக்கான மின்கலங்களையும் காவித்திரிந்து ஆவணப்படுத்தியுள்ளார். அருவியில் குளிப்பது, கொக்குச் சுட்டு வாட்டுவது, காட்டுக்குள் பாட்டுப்பாடி கும்மாளமடிப்பது, தடிவெட்டிப் பரணமைப்பது, கொட்டில் போடுவது, தேன் எடுப்பது என்பதுட்பட அழகான இயற்கைக் காட்சிகள், பறவைகள், மிருகங்கள் என்வற்றையும் காட்சிப்படுத்தியதோடு தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என்பவற்றையும் வீடியோப் பதிவாக்கியுள்ளார். ஆனால் எழுத்தில் எதுவும் செய்யவில்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது.
*************************************

போராளிகளின் குறிப்புக்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன. ஈழநாதம் பத்திரிகையிலும், புலிகளின்குரல் வானொலியிலும் இவை வெளிவருவதுண்டு (நான் இவர்கள் படைக்கும் கவிதை, சிறுகதை நாடகம் போன்ற ஆக்கங்களைச் சொல்லவில்லை.) கரும்புலிகளிற் சிலர் இப்படி சம்பவக் குறிப்புக்களை எழுதியுள்ளதாக அறிகிறோம். எப்போதாவது அவை வெளிவருமென்ற நம்பிக்கையுண்டு.

வெளிவருகிறதோ இல்லையோ, போராளிகள் தங்களின் குறிப்புக்களை எழுதவேண்டும். என்றோ ஒருநாள் அவை உதவக்கூடும். முறையான தணிக்கையொன்றினூடாக அவை வெளியிடப்படவேண்டும்.
*************************************

இவ்வாறு, ஒருதாக்குதல் சம்பவம் பற்றி எழுதப்பட்ட போராளியின் குறிப்பொன்று இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறப்புக் கனரக ஆயுதமொன்றுடன் சென்று தாக்குதல் நடத்திவிட்டு வந்த சம்பவத்தைப்பற்றிய பதிவிது. சில எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் எனக்கு வாசிக்க அலுக்கவில்லை. சில போரியற் சொற்கள் சிலருக்குப் புரிபடாமற் போகலாம்.

Labels: , , , , ,


Comments:
எல்லாவகையான எல்லாப்பக்கங்களும் ஒரு போராட்டம் குறித்து ஆவணப்படுத்ததப்பட வேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிடுகின்ற- முறைசார் கல்வி பெற்றிருந்தால்தான் படைப்பு செழுமை பெறும் என்பதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளமுடியும் என்று தெரியவில்லை. ஏற்கனவே முன்பும் சில இடங்களில் குறிப்பிட்டமாதிரி, பெண் படையணியின் -மாலதி படையணி- வரலாற்றைக் கூறும் 'வேருமாகி விழுதுமாகி' மிக அருமையான ஒரு ஆவணம். போர்ச் சூழ்லில் ஒரளாவு வாழ்ந்திருந்தாலும் முன்னணி தளத்தில் எப்படி எல்லாம் போர் நடைபெறுகின்றது என்று அந்தப் புத்தகத்தை வாசித்துதான் அதிகம் அற்நிது கொண்டேன். மலரவனின் நூலை யாழில் இருந்தபோது வாசித்திருக்கின்றேன். ஆரம்பகால கொரில்லா வாழ்வை ஆவணப்படுத்துகின்றது என்றவகையில் அதுவும் முக்கியமான புத்தகமே.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டி.சே.
முறைசார் கல்வியால்மட்டும்தான் படைப்பு செழுமை பெறுமென்று சொல்லவரவில்லை. படைப்பைச் செய்வதற்கு முறைசார் கல்வி ஓர் உந்துதல் என்பதே நான் சொல்ல வந்தது. அதாவது தன்னால் தன் குறிப்புக்களை எழுத முடியுமென்ற நம்பிக்கை. முறைசார் கல்வியில் தேர்ச்சியற்றவர்கள் இதை நினைத்தே (சிலர் இதைச் சாட்டியே) எழுதப் பின்நிற்கும் நிலை.

மற்றும்படி முறைசார் கல்வியைப் பெறாதவர்கள் சிறந்த படைப்பாளிகளாக உள்ளதை, வெளியிலும் சரி, போராட்டத்துள்ளும் சரி சுட்டிக்காட்ட நிறையப்பேர் இருக்கிறார்கள். நான் சொல்ல வந்தது, எழுதுபவர்களுக்கு இருக்கும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும் அதன்வழியாகத் தொடரும் பின்னடிப்புமே.
 
டி.சே, நீங்கள் சொன்ன மாலதி படையணி வரலாறு போல, சாள்ஸ் அன்ரனிப் படையணிக்கும் வந்துள்ளது. அவை கூட்டு முயற்சிகள் என்பதுடன் குறிப்பிட்ட படையணியின் வரலாற்றைச் சொல்லும் படைப்பு. அதேபோல் தாக்குதல் விவரணங்களும் வெளிவந்துள்ளன. விடுதலைப் புலிகள் பத்திரிகையை எடுத்துக்கொண்டால் முக்கியமான தாக்குதல்கள் பல முழுமையான விவரணமாக வந்துள்ளன. நான் எதிர்பார்ப்பது போர் வீர்ர்கள் தங்கள் தங்களது அனுபவங்களை சிறுசிறு குறிப்புக்களாகவேனும் எழுத வேண்டுமென்பதையே.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]