Thursday, August 30, 2007
வன்னியனும் வரலாற்றுத் தொடர்ச்சியும்.
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.
யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.
முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுறாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என மாற்றப்பட்டது.
ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?
அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசு நடந்துவந்தது.
வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாகக் குறிப்புக்களுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி இன்று மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டு நிற்கிறது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்துள்ளது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளன.
தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்கு சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் விழுந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளையுமே பயன்படுத்தி வந்தார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார். அவர் இறந்தது பண்டாரவன்னியின் நினைவுநாளாக ஓகஸ்ட் 25 ஆம் நாள்.
விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் சங்கரும் கேணல் ராயுவும் முக்கியமானவர்கள்.

புலிகளின் ஆட்லறிப்படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதல் சம்பவத்திலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். இன்றுவரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே உள்ளது.
யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே நிறையதரம் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி.
இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.
ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்பு அளவிட முடியாதபடி உள்ளது.
தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருக்கும் 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்திதாம்.
அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.
விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக 'சிறுத்தைகள்' என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்த சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகி சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.
இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நாளிலேயே -25.08.2002 அன்று சாவடைந்தார்.
மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொடர்புடைய சுட்டி: கேணல் ராயு
Labels: களவெற்றி, சமர் நினைவு, நினைவு, படைபலம், மாவீரர், வரலாறு
Thursday, April 19, 2007
அன்னை பூபதி
அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.
இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.

நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.
இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.
இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************
ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.
ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.
**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
***************************************
படம்: தமிழ்நெட்
Labels: ஆதரவாளர், நினைவு, மக்கள் எழுச்சி, மாவீரர், வரலாறு
Wednesday, February 07, 2007
கெளசல்யன், சந்திரநேரு நினைவு தினம்
07.02.2005 அன்று வன்னியிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த இவர்களின் வாகனம் மீது புனானைப் பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவத் தரப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் கெளசல்யன், சந்திரநேரு ஆகியோரோடு மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ஆம் லெப். விதிமாறன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
லெப்.கேணல் கெளசல்யன் அவர்கள் சுனாமி அனர்த்தத்தின்பின்னான கிழக்கு மாகாண மீள் கட்டமைப்புக்கு அரும்பங்காற்றியவர். தமிழ் - முஸ்லீம் உறவைச் சீர்செய்ததில் முக்கிய பங்கு இவருக்குண்டு. மிகச்சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்த இவரைத் தீர்த்துக்கட்டுவதில் எதிரிகள் மிக மும்முரமாக இருந்தார்கள்.
இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவுக்கு, பின்னர் மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியத்துக்காக இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த அனைவருக்கும் எமது அஞ்சலி.
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், நினைவு, மாவீரர்
Sunday, February 04, 2007
தியாகி திருமலை நடராஜன் நினைவு
1957 ஆம் ஆண்டு பெப்ரவரி நாலாம் நாளன்று சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தியாகி திருமலை நடராஜனுக்கு எம் அஞ்சலி.
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், நினைவு, மக்கள் எழுச்சி
Monday, January 01, 2007
"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..."- விடுபட்ட குறிப்புகள்
கடந்துபோன 2006 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இராணுவ, இலக்கியத் துறைகளில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. முக்கியசரிவுகள் பற்றிச் சிலகுறிப்புக்கள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன.
ஈழத்து இலக்கியத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இழப்புக்களில் வன்னி சார்ந்த இரு படைப்பாளிகளும் அடங்குவர்.
1. கவிஞர் நாவண்ணன்
2006 சித்திரையில் சுகவீனம் காரணமாக வன்னியில் இறந்த படைப்பாளி.

தொடக்கத்தில் ஏதோவொரு விதத்தில் தமிழ் மிதவாதக் கட்சிகளோடும் சக்திகளோடும் தொடர்பிருந்த கவிஞர் நாவண்ணன் பின் ஆயுதப்போராட்டத்தோடும் தன்னை ஒத்திசைவாக்கியதோடு, அப்போராட்டம் தனியொரு இயக்கத்தால் சுவீகரிக்கப்ட்டபின் அவ்வியக்கத்தோடும் ஐக்கியமானார்.
இயக்கத்தோடு ஐக்கியமாக முன்பே அவரெழுதிய படைப்புக்கள் முக்கியமானவை.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பேரில், 1957 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை நூலாக்கித் தொகுத்திருந்தார். அதைவிட மக்களுக்காக வாழ்ந்து ஆதிக்கத்தை எதிர்த்ததால் சிங்களப்படையினரால் தன் பங்குக்குரிய கோயிலடியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலை 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.
புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக - கிட்டத்தட்ட தொடக்கம் முதலே தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொன்னூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடரை வானொலியில் வழங்கினார். ஏற்கனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளைத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக்குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற கவிஞர் நாவண்ணனின் தொகுப்பு, தனியொரு இயக்கத்தைத் தாண்டி, ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கெனப் படைக்கப்பட்ட முக்கிய படைப்பு.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பேரில் எழுதினார். அதன் முதற்றொகுதி முடித்த நிலையில்தான் மரணமடைந்தார்.
"காவியமாய் புதுப் புறம்பாடி" -எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
அக்காவியத்துக்கான அவரது உழைப்புப் பெரியது.
தனியொரு இயக்கம் சம்பந்தப்பட்டதென்றாலும் ஈழப்போராட்டத்தில் கரும்புலி காவியம் முக்கியமான படைப்பு மற்றும் ஆவணம்.
கவிஞர் நாவண்ணன் அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞரும்கூட.
இவரது ஒரே மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்)போராட்டத்தில் இணைந்து களமொன்றில் வீரச்சாவடைந்தார்.
நாவண்ணன் பற்றி சிறிது விரிவான பதிவு:
மக்கள் இலக்கியகாரன்
2. கவிஞர் பொன்.கணேசமூர்த்தி
2006 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தன் பெரும்பாலான படைப்புக்களை விடுதலைப்போராட்டம் சார்ந்தும் - அதேசார்பில் விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தும் அமைத்துக் கொண்டவர். வாழ்க்கையை ஓட்ட, வங்கி ஊழியத்தைத் தொழிலாகக் கொண்டவர். கவிதை, பாடல் என்பவற்றாலேயே அதிகம் அறியப்பட்டாலும் அவற்றைத் தாண்டி பல கலைவடிவங்களில் கால்பதித்தவர்.
மிகவெற்றிகரமான நாடக நெறியாளர். இவரின் இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக அரங்கேறிய 'சந்தனக்காடு' நாடகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. இவர் எழுதிய 'இலங்கை மண்' என்ற 'இராவணனை நாயகனாகக் கொண்ட' நாடகமும் அவ்வாறே.
பல பட்டிமன்றங்களை திறம்பட நடத்தியுள்ளார். வில்லிசைக் கலையிலும் தடம்படித்தவர்.
இவரின் கவியரங்குகள் 'குறிப்பிட்ட' மக்களிடத்து மிகப்பிரசித்தம்.
யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னிக்கு ஓடிவந்த நேரத்தில்
நடத்தப்பட்ட, 'நாங்கள் பலமிழக்கவில்லை; தோல்வியுறவில்லை; இதுவொரு தந்திரோபாயப் பின்வாங்கல்;விரைவில் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்றவாறான பலதரப்பட்ட பரப்புரைகளைவிட பொன்.கணேசமூர்த்தியின் 'புலியொரு காலமும் பணியாது' என்ற ஒரேயொரு பாடல் தந்த நம்பிக்கை மிகமிக அதிகம்.
இவரது இரண்டாவது மகன் வன்னிக்குள்ளேயே இனந்தெரியாத நோயொன்றுக்குப் பலியான வேதனையை நாவலாக்கினார். மூன்றாவது மகன் போராட்டத்திலிணைந்து 1996 ஆம் ஆண்டு படையினருடன் மோதி வீரச்சாவடைந்திருந்தான்.
__________________
மேற்குறிப்பிடப்பட்ட இரு படைப்பாளிகளும் வெளிப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க இலக்கியங்களேதும் படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாம் வாழ்ந்த சமூகத்தில், சுற்றத்தில் நடப்பவற்றையும் அச்சமூகத்துக்குத் தேவையானவற்றில் ஏதோ சிறுபகுதியையென்றாலும் பதிவாக்கியிருக்கிறார்கள். களத்தில் தமது மகன்களை இழந்திருக்கிறார்கள். இதுவொரு தகுதியல்லவென்றாலும் எதை எழுதினார்களோ, எந்த அரசியலைப் பேசினார்களோ அதையே செய்துகொண்டிருந்தார்கள்; எழுதுவதில் குற்றவுணர்வின்றி இருந்திருக்கிறார்கள்.
இவர்களிருவரும் வன்னியைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் அச்சொல்லினூடு அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணமுண்டு.
___________________
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆளுமைகளின் இழப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. எண்ணூற்றுச் சொச்சம் போராளிகளை இந்த ஆண்டில் இழந்திருந்தாலும் கேணல் இறமணன், லெப்.கேணல் மகேந்தி போன்ற மூத்த தளபதிகளதும், லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் குஞ்சன், லெப்.கேணல் அக்பர் போன்றவர்களதும் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியாதவை.
________________________________
2006 இல் இழக்கப்பட்ட சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு:
அலைஞனின் அலைகள்: குவியம்: புலம்-20: "முன்னொரு காலத்தே ஒரு தவறணை...'- குறிப்புகள்"
தலைப்பின் பெரும்பகுதி அவரிடமிருந்து கடன்பெற்றதே.
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், ஈழ இலக்கியம், நினைவு, வரலாறு
Sunday, December 17, 2006
திருச்சித்தமிழனுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று "அப்துல் ரவூப்" என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.
இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.
இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.
இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு 'இனி' என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.
"சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா" என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது.
எம் நிலைப்பாடும் அதுவே.
ஆனாலும் உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை.
திருச்சிச் சகோதரனுக்கு எம் அஞ்சலி.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், செய்தி, நினைவு
Monday, November 20, 2006
புலிகளின் குரல் - பதினாறாண்டு நிறைவு.
இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது.
அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது.
பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள்.
அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத் தொடங்கினார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1989. அப்போது 'மாவீரர் வாரம்" என்று ஒருவாரம் நினைவுகூரப்படும். அவ்வாரத்தின் இறுதிநாள்தான் மாவீரர் நாள் ஆகும்.
அதன்படி நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இவ்வாரம் நினைவுகூரப்படும். முன்பு மாவீரர் நாள் தீபம் ஏற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்து பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் தொடங்கும்போதுதான் புலிகளின் குரல் வானொலி சேவையும் தொடங்கப்பட்டது. 21.11.1991 அன்று தொடங்கப்பட்ட புலிகளின் குரல் வானொலிச் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம்பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்ட்டதுடன் காலைச் சேவையும் இடம்பெறுகிறது.
அருமையான நிகழ்ச்சிகள் பல இவ்வானொலியில் ஒளிபரப்பப்பட்டன. பல படைப்பாளிகளின் முதற்களமாக இவ்வானொலி நிகழ்ச்சிகளே இருந்தன. பலரை வளர்த்துவிட்ட பெருமை இவ்வானொலிக்குண்டு.
தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் இவ்வானொலி செய்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்களை இவ்வானொலி மூலமே வழங்கினர் புலிகள். இதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள் -3 தொடங்கியபோது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி சமர் செய்து நிலங்களை மீட்க இவ்வானொலியே உதவியது. எவ்வெவ் பகுதி மக்கள் எங்கெங்கு செல்லவேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ்வானொலி மூலம் வழங்கப்பட்டதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.
சிறிலங்காப் படையினருக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் புலிகளின்குரலின் சிங்கள சேவையும் பின்னர் தொடங்கப்பட்டது.
புலிகளின் குரல் சேவை கடந்துவந்த பாதை மிகமிகக் கடுமையானது. அடிக்கடி விமானத்தாக்குதலுக்கும் எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது வேறிடம் என்றநிலையில்தான் இச்சேவை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து தென்மராட்சியில் கிடைத்த நேரத்தில் அவசரமான வீதிக்கரையிலேயே வைத்து ஒலிபரப்புச் செய்தார்கள். வன்னிவரும்வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.
வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்துப்பட்ட சம்பவம்கூட நடந்தது.
பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளானாலும் தப்பிப்பழைத்து தொடர்நது ஒலிபரப்பு நடைபெற்று வந்தது. நிறையத் தடவைகள் இடம்மாறியிருந்தது புலிகளின்குரல். யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்தது புலிகளின்குரல். அண்மையில் கொக்காவிலில் சிறிலங்கா வான்படை அக்கோபுரத்தின்மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழித்திருந்தது.
கடும் சவால்களை எதிர்கொண்டு போராட்டத்தில் காத்திரமான பங்காற்றி வந்த "புலிகளின் குரல் நிறுவனம்" இன்று தனது பதினாறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
நீண்ட இக்கடின பயணத்தில் தோளோடு தோள் நின்று உழைத்த கலைஞர்கள், ஊழியர்கள், போராளிகள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
தொடர்ந்தும் அவர்கள் தம் பணியைத் திறம்பட செய்ய வாழ்த்தும் ஆசியும்.
புலிகளின் குரலின் இணையமுகரி: http://www.pulikalinkural.com
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், நினைவு, வரலாறு
Thursday, October 26, 2006
புலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: நாதன் - கஜன்
சரியாகப் பத்து வருடங்களின் முன்பு பிரான்சின் பாரீஸ் நகரில் வைத்து இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

லெப்.கேணல் நாதன் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடங்கப்பட்டதன் அடித்தளம். நீண்டகாலமாக பன்னாட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தவர். அனுபவம் வாய்ந்த மூத்த போராளி.
கப்டன் கஜன், ஈழமுரசு பத்திரிகையை நடத்தி வந்தவர்.
மேற்குலக நாடொன்றில் திட்டமிட்டுக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இவர்கள்.
இவர்களின் பத்தாமாண்டு நினைவில் இவர்களுக்கு எமது அஞ்சலிகள்.
Wednesday, October 04, 2006
பன்னிரு வேங்கைகள் நினைவாக....
தமிழீழக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, பின் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் நிலை வந்தபோது அவர்கள் நஞ்சருந்தி 05.10.1987 அன்று வீரச்சாவடைந்தார்கள்.
எட்டு நாட்களின் முன்தான் இந்தியப்படைகளுக்கெதிராக பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து தியாகி திலீபன் உயிர் நீத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த இப்பன்னிரு வேங்கைகளின் சாவுகள் தமிழர் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின.
இவ் வேங்கைகளின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவுநாளான இன்று அவர்கள் நினைவாக வெளிவந்த பாடலொன்றை இங்குத் தருகிறேன்.

______________________________________
பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Monday, September 25, 2006
கேணல் சங்கர் - நினைவுநாள்

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், புலிகளின் விமானப்படை உருவாக்கம், மற்றும் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டு உழைத்தவருமான கேணல் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளும் இன்றாகும்.
வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் அரசபடையின் ஆழ ஊடுருவும் படையணி நடத்திய கிளைமோர்த் தாக்குதில் இவர் கொல்ப்பட்டார் (26.09.2001).
இவரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடலொன்றை இங்கே தருகிறேன்.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: நினைவு, மாவீரர், வரலாறு
Monday, July 31, 2006
ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு
இன்று அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
எனது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணையின் சிறப்புத் தொகுப்பொன்று செய்ய எண்ணியிருந்தேன். நேரம் போதாமை மற்றும் முக்கிய இரண்டொரு பாடல்கள் இல்லாமை காரணமாக முடியவில்லை. இதுவரை வெளியிட்டவற்றில் சிட்டண்ணையின் பாடல்களை ஒரு தொகுப்பாக இட எண்ணுகிறேன்.
சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.
Labels: ஒலி, கவிதை, நினைவு, மாவீரர்
Saturday, July 15, 2006
சீலன் பற்றி பிரபாகரன் - வீடியோப்பதிவு
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின் 23 ஆவது நினைவு நாள். அவர் பற்றிய குறிப்புக்கள், ஆக்கங்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
தலைவர் பிரபாகரன் நேரடியாக அவரைப் பற்றிச் சொல்லியவற்றிலிருந்து மூன்று சிறுதுண்டுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவை விடுதலைத் தீப்பொறித் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை.
இப்பதிவில் வீடியோ வேலை செய்யவில்லையெனில் கூகிள் தளத்துக்கே சென்று பார்வையிடக்கூடியவாறு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.
திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?
எவ்வாறு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்?
என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.
வீடியோ இணைப்பு
பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.
தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார்.
சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.
வீடியோ இணைப்பு
சீலனின் இறுதி நாள் பற்றி.
சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி பிரபாகரன் விவரிக்கிறார்.
கூகிள் இணைப்பு
Labels: ஒலி, ஒளி, நினைவு, மாவீரர், வரலாறு
Friday, July 14, 2006
சீலன் எனும் ஆளுமை பற்றி பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.
நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.
ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகளைத் தரவிறக்கஞ் செய்ய விரும்புபவர்களுக்கு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.
திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:
சீலனின் விளையாட்டுத்தனங்கள்:
சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:
சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:
தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:
தரவிறக்க விரும்புவோர் இவ்விணைப்புக்களைப் பாவிக்கவும். (ஒவ்வொன்றும் அண்ணளவாக700 KB)
பதிவு ஒன்று
பதிவு இரண்டு
பதிவு மூன்று
பதிவு நான்கு
பதிவு ஐந்து
பதிவு ஆறு
இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.
நன்றி: விடுதலைத் தீப்பொறி-II
Labels: நினைவு, மாவீரர், வரலாறு
Tuesday, July 04, 2006
அத்திவாரக் கற்கள்
பொதுவாக யாருக்குமே தம் பெயர் புகழடைவதில் மகிழ்ச்சியுண்டு. தம் பெயரைப் பிரபலப்படுத்திப் புகழடைய பெரும்பான்மையானோர் பின்னிற்பதில்லை. வாழும்போது மட்டுமில்லை, இறந்தபின்னும் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டுமென்ற விருப்பம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. இது மனித இயல்பு.
ஈழப்போராட்டத்தில், தம் உயிர்களை ஈந்தவர்கள் பலவிதமானவர்கள். அவர்களுக்களிற் பெரும்பான்மையோருக்கு உரிய கெளரவம் வழங்கப்படுகிறது. வீரமரணமடைந்தவர்களுக்குக் கல்லறைகளுண்டு. வித்துடல் கிடைக்காதவர்களுக்கு நடுகற்களுண்டு. அவர்கள் பற்றிய வரலாறுகள், குறிப்புக்களுண்டு. அவர்கள் பெயர்களில் வீதிகள், விளையாட்டரங்கங்கள், கல்விச்சாலைகள் எனப் பலவுண்டு. மாவீரர்களாக இராணுவ நிலைகளுடன் அவர்களின் பெயர்விவரங்கள் வெளியிடப்படும். பெற்றோர், குடும்பத்தினர் கொளரவிக்கப்படுவார்கள்.
இதேபோல் வெளித்தெரியாத பல தியாகங்களும் ஈழப்போராட்டத்திலுண்டு. வாழும்போதுமட்டுமன்றி, சாகும்போதும் தம் சுயத்தை அழித்துச் சென்றவர்கள் அவர்கள். அவர்களின் பெயர்கள் மாவீரர் பட்டியலில் வரா. அவர்களைப் போராளியாக யாருக்கும் தெரியாது. வாழ்ந்த சுவடும் தெரியாது; செத்த சுவடும் தெரியாது. தாய்க்குக்கூட தன் பிள்ளையைத் தெரியாது. அவர்களையறிந்த சிலருக்கு மட்டுமே அவர்களைப் பற்றியும் என்ன நடந்ததென்பது பற்றியும் தெரியும். அது அவர்களோடே இருந்துகொள்ளும். இறந்த பின்னும் தங்கள் பெயர்களை வெளித்தெரியாதபடி மறைத்தவர்கள் அவர்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் அத்திவாரக்கற்களே. எதிரியின் குகைக்குள் அவனது அத்திவாரத்தை அசைத்தவர்கள். இவர்களின் ஒவ்வொரு சாவும் போராட்டத்தின் பெரிய பாய்ச்சலே.
இவர்களின் வாழ்க்கையே வித்தியாசமானது. அவர்களின் இறுதிநாட்கள் பெரும்பாலும் போர்ச்சூழலுளிருந்திருக்காது. ஆடம்பரமான, பகட்டான, தடம்புரள ஏதுவான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் உல்லாச உலகத்துள்ளும் மனம்பிரளாது பாதைமாறாது காரியத்திற் கண்ணாயிருந்தவர்கள்.
இதுவரை வீரச்சாவடைந்து வெளியிடப்பட்ட 275 வரையான கரும்புலிகளோடு இந்நாளில் இவர்களையும் நினைவு கூர்வோம்.
இவர்கள்
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்"
இவர்களை நினைத்து இருபாடல்களை இங்கே பதிவிடுகிறேன்.
முதற்பாடல்:
"வாய்விட்டுப் பெயர்சொல்லி அழமுடியாது - வெறும்
வார்த்தைகளால் உம்மை தொழமுடியாது.
தாய்க்குத் தன் பிள்ளையின் முகம்தெரியாது -எங்கள்
தலைமுறை உங்கள் பெயர் அறியாது."
இதைவிட அழகாக யாராற் சொல்லிவிடமுடியும்?
-------------------------
அடுத்த பாடல்,
"ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்"
____________________________
இதுவோர் மீள்பதிவு.
தமிழ்ப்பதிவுகள்
Labels: அரசியற் கட்டுரை, சமர் நினைவு, நினைவு, மாவீரர், வரலாறு
Sunday, June 11, 2006
சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்
10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.
அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.
Labels: செய்தி, துயர் பகிர்தல், நினைவு, மக்கள் துயரம்
Friday, April 28, 2006
சிவராம் கொல்லப்பட்டு ஓராண்டு நினைவு.
அன்னாரின் எழுத்துப்பணியைக் கெளரவிக்கி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால், "மாமனிதர்' விருது வழங்கப்பட்டது.
அவரது ஓராண்டு நினைவில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அன்னாரின் குடும்பத்துக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சிவராம், தினக்குரல் பத்திரிகையுடன் நடந்த ஒரு விவாதத்தில் எழுதிய வரிகள் இவை.
" நாளை எம்மீது முழுமையான போராக பாயும் என்பதில் சந்தேகமில்லை."
அதுமட்டுமன்றி போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக்கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சரி இலங்கையின் இராணுவச் சமநிலையை
சிங்களதேசத்தின் பக்கம் சாய்ப்பதிலேயே பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது கண்கூடு.
நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கால்நூற்றாண்டுக்கு மேலாக சட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.
அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன்.
சொன்ன மாதிரியே தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோதும் ஒழிந்து ஓடிவிடால் தொடர்ந்து எழுதி வந்த சிவராம், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது போலவே கொல்லப்பட்டார்.
அத்தோடு உரிமைகள் பெறுதல் தொடர்பான அவரது கூற்றும் எவ்வளவு உண்மையென்று இன்றும் புலப்படுகிறது.
****************
சிவராம் கொலையுண்டபோது, அவரோடு சேர்ந்து பணியாற்றிய சகவலைப்பதிவரது பதிவுகளில் வந்த பதிவுகளிவை.
உலகறிந்த ஊடகவியலாளன் உறங்கிவிட்டான்
செய்தியாளன் செய்தியானான்
சிவராம் எழுதிய சில கட்டுரைகளுக்கான இணைப்புக்கள்.
இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின்
அரசியல் மயமாக்கல் தேவை
இலங்கையின் தேசிய செல்வத்தைபங்கிட மறுக்கும் சிங்கள தேசம்
ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்
சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்
விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள
தேசம்
தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்
இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்
அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்
அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை
சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்
சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது
காலத்தின் தேவை அரசியல் வேலை
கருணா ஓடியது எதற்காக?
நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி
கருணாவுக்கு ஒரு கடிதம்
ISGA bashing: Much ado about nothing
Tigers dominate decades of Tamil militancy
ISGA entails concepts and structures of final solution
Strategic positioning vital for military advantage
Can the renegade Karuna deliver his Big Magic?
Karuna affair: The military connection
மேலும் பல ஆங்கிலக்கட்டுரைகளுக்கு....
நன்றி: தமிழ்நேசன்.
Labels: ஆதரவாளர், நினைவு, மாவீரர்
Sunday, April 23, 2006
வரலாற்றுக் குரற் பதிவுகள்.
குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)
***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)
***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)
***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.
**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு
**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.
**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.
*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.
இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.
சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.
இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.
Labels: ஈழ அரசியல், ஒலி, கலந்துரையாடல், நினைவு, பகிர்தல், மாவீரர், வரலாறு
Friday, April 21, 2006
யாழ் - இடப்பெயர்வு
இம்மாதம் பத்தொன்பதாம் திகதியுடன் யாழ்குடாநாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 19.04.1995 அன்றுதான் சூரியக்கதிர் -02 என்ற இராணுவ நடவடிக்கையை எதிரி தொடக்கினான். ஏற்கனவே சூரியக்கதிர் -01 நடவடிக்கை மூலம் வலிகாமத்தின் சில பகுதிகளையும், யாழ் நகர்ப்பகுதியையும் கைப்பற்றி வைத்திருந்தான்.
கைப்பற்றப்ப படாத மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றவே இரண்டாவதும் மூன்றாவதும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
முதலாவது நடவடிக்கையில் மக்களற்ற சூனியப்பிரதேசத்தையே இராணுவம் கைப்பற்றியது. மற்ற நடவடிக்கையில் மக்களோடு சேர்த்து நிலங்களையும் கைப்பற்றிக்கொண்டது.
முதலாவது நடவடிக்கையில் யாழ் நகர்ப்பகுதி விடுபட்ட நேரத்தில் வெளிவந்த தமிழீழ எழுச்சிப்பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.
சின்ன சின்ன கூடு கட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்
இன்னொரு பாடல்.
பொன்.கணேசமூர்த்தி எழுயதென்று நினைக்கிறேன்.
"புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது"
இரண்டு பாடல்களுமே மேஜர் சிட்டு வினால் பாடப்பட்டவை.
**********************
22.04 ஆகிய இன்றும்கூட மிக முக்கியநாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு மைல்கல். நாம் பெருவெற்றியொன்றைப் பெற்ற நாள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
Labels: ஈழ அரசியல், நட்சத்திரம், நினைவு, மக்கள் துயரம், வரலாறு
போராளிகளின் குறிப்புக்கள்.
உலக மட்டத்தில் போர்வீரர்களின் குறிப்புக்களுக்கிருக்கும் மரியாதையும் பெறுமதியும் உயர்வானவை. காலங்கடந்தும் வாழ்பவை. அவ்வீரர்களின் நாட்டிலோ சமூகத்திலோ மட்டுமன்றி உலகம் முழுதும் போற்றப்படும் போர்விரர்களின் எழுத்துக்கள் நிறைய உள்ளன. "ஸ்டாலின் கிராட்" போன்ற படைப்புக்கள் நிகழ்த்திய தாக்கம் யாவரும் அறிந்ததே.
இவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல ஈழப்போராட்ட அனுபவங்கள். அவர்களுக்கு "ஸ்டாலின் கிராட்", எங்களுக்கு 'இத்தாவில்'.
ஆனால் அவற்றை ஆவணப்படுத்துவதுதான் முக்கியம்.
புலிகளின் மிகப்பெரிய தரையிறக்கம் 'மாமுனைத் தரையிறக்கம்'. ஏறத்தாழ 1200 போராளிகளை, பல மைல்கள் நீளமான - எதிரியின் வலிமையான கடற்கரையரணைத் தாண்டி எதிரியின் பகுதிக்குள்ளேயே தரையிறக்கியது அந்நிகழ்வு. முழுப்பலத்துடனான எதிரியின் கடற்படையுடனான கடுமையான கடற்சண்டையின் மத்தியில் அவர்களுக்கான விநியோகத்தையும் செய்தது தமிழரின் கடற்படை. தரையிறங்கிய அணிகள் கண்டிவீதியை மறித்து சிறியதொரு கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டைபிடித்து அப்பகுதியைக் காப்பாற்றி வைத்திருந்தன. இத்தாவில் என்ற அப்பகுதியில் புலிகளின் அணி இருக்கும்வரை ஆனையிறவுக்கு ஆபத்து என்தையுணர்ந்த எதிரியின் மூர்க்கத்தனமான தொடர்தாக்குதல்களின் மத்தியிலும் அச்சிறுபகுதியை எதிரியிடம் இழக்கவில்லை. எதிரி இழந்ததோ அதிகம். இரட்டை இலக்கத்தில் இராணுவ டாங்கிகளை இழந்தது அரசபடை.
ஒரு சதுர மீற்றருக்கு ஓர் எறிகணை என்ற வீதத்தில் அச்சிறு பகுதி குண்டுகளால் துவைத்தெடுக்கப்பட்டது. இன்றும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் இத்தாவில் என்ற குறிப்பிட்ட பகுதியைக் கடந்துசெல்லும்போது அச்சண்டைக்குச் சாட்சியாக தலைதறிக்கப்பட்டபடி நிற்கும் தென்னைகளையும், வீதிக்கரையில் புலிகளால் தகர்க்கப்பட்ட டாங்கிகள் ஒன்றிரண்டையும் காணாமற் செல்ல முடியாது. தளபதி கேணல் பால்றாஜ் நேரடியாகவே தரையிறக்க அணியுடன் நின்று அவர்களை வழிநடத்தினார். மகிளிரணித் தளபதிகள் கேணல் துர்க்கா, கேணல் விதுசா போன்றோரும் நேரடியாக நின்ற களமது. இதோ பால்றாஜ் உயிரோடு பிடிபட்டாரென்று முழக்கமிட்டுக் கொக்கரித்தபடி செய்திக்காகக் காத்திருந்த கொழும்புக் கட்டளையகம் ஆனையிறவு பறிபோனதைத் தான் செய்தியாகப் பெற்றது. இதுபற்றி இக்பால் அத்தாஸ் விரிவாக எழுதியுள்ளாரென்று நினைக்கிறேன்.
இவ்விதத்தில், ஒப்பிட்டுச் சொல்லமுடியாத மாபெரும் சமர்க்களத்தையும் அதன் வெற்றியையும் பற்றி முறையான நூலொன்று இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவைதாம் உள்ளன. அதுவும் இத்தாவில் களத்தில் களமாடிய எல்லைப்படை வீரர்களைப் பதிவாக்கும்போது வெளிவந்த தகவல்களே கணிசமானவை.
அதன்பின்னரான காலங்களில் அக்களத்திலிருந்த முக்கியமானவர்கள் - தளபதிகள் உட்பட பலர் களச்சாவடைந்துவிட்டனர். லெப்.கேணல் இராசசிங்கன் என்ற தளபதி அச்சமரில் மிகமிக முக்கியமானவர். பின்னொரு நாள் இரணைமடுக் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்துபோனார். அவரோடு இத்தாவில் சமர்க்களத்தின் பெரியதொரு வரலாறும் மூழ்கிப்போனது.
பெரிய தொகுப்புக்கள் வராவிட்டாலும் தனிப்பட்டவர்களின் குறிப்புக்கள் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வெளிவந்தவற்றில் மிகமிக முக்கியப் படைப்பாக கப்டன் மலரவனின் "போர் உலா" என்ற புத்தகத்தைச் சொல்லலாம். முழுக்க முழுக்க அவரது கள அனுபவத்தைச் சொல்லும் படைப்பு அது. மாங்குளம் படைமுகாம் தகர்ப்புக்காக மணலாற்றுக்காட்டிலிருந்து "உருப்படி"யுடன் புறப்பட்டதிலிருந்து, அத்தாக்குதல் முடிந்து அடுத்த தாக்குதலான சிலாவத்தை புறப்படும் வரையான பதிவு அது. 'உருப்படி' என்பது அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்துக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த 'பசீலன் 2000' என்ற புலிகளின் சொந்தத் தயாரிப்பு எறிகணை செலுத்தி. மலரவன் அந்த எறிகணை செலுத்தி அணிக்குப் பொறுப்பாளனாகச் செயற்பட்டவர். அவர் எழுதி வைத்ததை அவர் வீரச்சாவடைந்த பின்பு (1992 இல் வளளாய்க் காவலரண் தகர்ப்பில்) வெளியிட்டார்கள். மிக இயல்பாகச் சொல்லப்பட்ட படைப்பு அது. இப்படைப்பு தொடர்பான எனது ஒரே விமர்சனம், "அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரச் சொல்லாடலை அப்படியே பதிவு செய்திருக்கலாம்" என்பதுதான். அருமையான நாவல் போன்ற வாசக அனுபவத்தைத் தரக்கூடியது.
இவற்றைப் போல் நிறையப் படைப்புக்கள் வெளிவர வேண்டும். முக்கியமாக தாக்குதலணித் தலைவர்களும் தளபதிகளும் நிறைய எழுத வேண்டும். இங்கிருக்கும் முக்கிய பிரச்சினை புலிகளின் தளபதிகள், அணித்தலைவர்கள் எல்லோருமே பாடசாலைக் கல்வியில் நிறைவானவர்களில்லையென்பது. அதாவது அரச இராணுவக்கட்டமைப்பில் அணித்தலைமைக்கு கல்வித்தகமை முக்கியமானது. ஆனால் புலிகளின் அணித்தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஏன் மூத்த தளபதிகள் என்று பார்த்தாற்கூட பெரும்பான்மையானோர் பாடசாலைக் கல்வியறிவில் முதிர்ச்சியானவர்களில்லை. தேர்ந்த, கவர்ச்சியான எழுத்துநடையுடன் அவர்களால் சம்பவங்களைக் கொண்டுவர முடியாதநிலையுண்டு. இது, ஏனைய நாட்டுப் போர்வீரர்களுடனும் அவர்களின் எழுத்துக்களுடனும் ஒப்பிடும்போது தெரியும் வித்தியாசப் பண்பென்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே எழுதக்கூடியவர்கள் என்ற நிலையில், இலக்கியத்திறம், கவர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொள்ளாமல் குறிப்புக்களைத் தொகுக்க முடியும்.
இதைவிட்டுப்பார்த்தால், எழுதுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லையென்பதுதான் முக்கிய சிக்கலென்பது என் கருத்து. பொட்டம்மான் மிகமிக அருந்தலாக எழுதிய வெகுசில ஆக்கங்கள் மிகமிகக் காத்திரமான படைப்புக்கள். லெப்.கேணல் இராஜன் பற்றிய 'குருதிச்சுவடுகள்', வெளிச்சம் பவழ இதழில் வெளிவந்த இரு ஆக்கங்கள் என்பவை நானறிந்தவை. அதிகம் பேசாமல், அதிகம் எழுதாமல் இருப்பதே தன்பணிக்குச் சிறந்ததென்று இருக்கிறாரோ என்னவோ?
புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல் புலேந்திரன் அவர்கள் 1984, 85 காலப்பகுதியில் வெறும் 25 பேருடன் திருமலைக் காடுகளில் அலைந்துதிரிந்து பணியாற்றிய நேரத்தில் காட்டுவாழ்க்கையை ஒளிப்பதிவாக ஆவணப்படுத்தியதை அறிந்தபோது ஆச்சரியமாயிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துடன் ஒளிப்பதிவுக் கருவிக்கான மின்கலங்களையும் காவித்திரிந்து ஆவணப்படுத்தியுள்ளார். அருவியில் குளிப்பது, கொக்குச் சுட்டு வாட்டுவது, காட்டுக்குள் பாட்டுப்பாடி கும்மாளமடிப்பது, தடிவெட்டிப் பரணமைப்பது, கொட்டில் போடுவது, தேன் எடுப்பது என்பதுட்பட அழகான இயற்கைக் காட்சிகள், பறவைகள், மிருகங்கள் என்வற்றையும் காட்சிப்படுத்தியதோடு தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என்பவற்றையும் வீடியோப் பதிவாக்கியுள்ளார். ஆனால் எழுத்தில் எதுவும் செய்யவில்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது.
*************************************
போராளிகளின் குறிப்புக்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன. ஈழநாதம் பத்திரிகையிலும், புலிகளின்குரல் வானொலியிலும் இவை வெளிவருவதுண்டு (நான் இவர்கள் படைக்கும் கவிதை, சிறுகதை நாடகம் போன்ற ஆக்கங்களைச் சொல்லவில்லை.) கரும்புலிகளிற் சிலர் இப்படி சம்பவக் குறிப்புக்களை எழுதியுள்ளதாக அறிகிறோம். எப்போதாவது அவை வெளிவருமென்ற நம்பிக்கையுண்டு.
வெளிவருகிறதோ இல்லையோ, போராளிகள் தங்களின் குறிப்புக்களை எழுதவேண்டும். என்றோ ஒருநாள் அவை உதவக்கூடும். முறையான தணிக்கையொன்றினூடாக அவை வெளியிடப்படவேண்டும்.
*************************************
இவ்வாறு, ஒருதாக்குதல் சம்பவம் பற்றி எழுதப்பட்ட போராளியின் குறிப்பொன்று இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறப்புக் கனரக ஆயுதமொன்றுடன் சென்று தாக்குதல் நடத்திவிட்டு வந்த சம்பவத்தைப்பற்றிய பதிவிது. சில எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் எனக்கு வாசிக்க அலுக்கவில்லை. சில போரியற் சொற்கள் சிலருக்குப் புரிபடாமற் போகலாம்.
Labels: அனுபவம், ஈழ இலக்கியம், நட்சத்திரம், நினைவு, மாவீரர், வரலாறு
Tuesday, April 18, 2006
அன்னை பூபதி.
"ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத
இன்னொருநாள் இன்று. தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே 'சூரியக்கதிர்-01' என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த
அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது."
************************
இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.
அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.
இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.
இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.

நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.
இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.
இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************
ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.
ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.
**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
இவர்களைப்பற்றியும் அதிகம் சொல்ல இருக்கிறது.
இன்னொரு பதிவிற் சொல்ல முயல்கிறேன்.
***************************************
படம்: தமிழ்நெட்
Labels: அரசியற் கட்டுரை, ஆதரவாளர், நினைவு, மக்கள் எழுச்சி, மாவீரர், வரலாறு
Subscribe to Posts [Atom]