Monday, November 20, 2006

புலிகளின் குரல் - பதினாறாண்டு நிறைவு.

தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அதிகாரபூர்வ வானொலிதான் புலிகளின் குரல்.
இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது.
அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது.
பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள்.

அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத் தொடங்கினார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1989. அப்போது 'மாவீரர் வாரம்" என்று ஒருவாரம் நினைவுகூரப்படும். அவ்வாரத்தின் இறுதிநாள்தான் மாவீரர் நாள் ஆகும்.
அதன்படி நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இவ்வாரம் நினைவுகூரப்படும். முன்பு மாவீரர் நாள் தீபம் ஏற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்து பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டது.

1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் தொடங்கும்போதுதான் புலிகளின் குரல் வானொலி சேவையும் தொடங்கப்பட்டது. 21.11.1991 அன்று தொடங்கப்பட்ட புலிகளின் குரல் வானொலிச் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம்பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்ட்டதுடன் காலைச் சேவையும் இடம்பெறுகிறது.

அருமையான நிகழ்ச்சிகள் பல இவ்வானொலியில் ஒளிபரப்பப்பட்டன. பல படைப்பாளிகளின் முதற்களமாக இவ்வானொலி நிகழ்ச்சிகளே இருந்தன. பலரை வளர்த்துவிட்ட பெருமை இவ்வானொலிக்குண்டு.

தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் இவ்வானொலி செய்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்களை இவ்வானொலி மூலமே வழங்கினர் புலிகள். இதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள் -3 தொடங்கியபோது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி சமர் செய்து நிலங்களை மீட்க இவ்வானொலியே உதவியது. எவ்வெவ் பகுதி மக்கள் எங்கெங்கு செல்லவேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ்வானொலி மூலம் வழங்கப்பட்டதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.

சிறிலங்காப் படையினருக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் புலிகளின்குரலின் சிங்கள சேவையும் பின்னர் தொடங்கப்பட்டது.

புலிகளின் குரல் சேவை கடந்துவந்த பாதை மிகமிகக் கடுமையானது. அடிக்கடி விமானத்தாக்குதலுக்கும் எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது வேறிடம் என்றநிலையில்தான் இச்சேவை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து தென்மராட்சியில் கிடைத்த நேரத்தில் அவசரமான வீதிக்கரையிலேயே வைத்து ஒலிபரப்புச் செய்தார்கள். வன்னிவரும்வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.
வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்துப்பட்ட சம்பவம்கூட நடந்தது.

பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளானாலும் தப்பிப்பழைத்து தொடர்நது ஒலிபரப்பு நடைபெற்று வந்தது. நிறையத் தடவைகள் இடம்மாறியிருந்தது புலிகளின்குரல். யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்தது புலிகளின்குரல். அண்மையில் கொக்காவிலில் சிறிலங்கா வான்படை அக்கோபுரத்தின்மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழித்திருந்தது.

கடும் சவால்களை எதிர்கொண்டு போராட்டத்தில் காத்திரமான பங்காற்றி வந்த "புலிகளின் குரல் நிறுவனம்" இன்று தனது பதினாறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
நீண்ட இக்கடின பயணத்தில் தோளோடு தோள் நின்று உழைத்த கலைஞர்கள், ஊழியர்கள், போராளிகள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.

தொடர்ந்தும் அவர்கள் தம் பணியைத் திறம்பட செய்ய வாழ்த்தும் ஆசியும்.

புலிகளின் குரலின் இணையமுகரி: http://www.pulikalinkural.com

_____________________________________________

Labels: , ,


Comments:
தக்க நேரத்தில் நினைவுப் பதிவுகளைத் தருகிறீர்கள்.
உங்கள் சேவைக்கு நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]