Sunday, December 31, 2006

தீர்ப்பெழுதும் திடத்தை அருள்வீராக

"சலிக்காமல் வழிநடக்கும்
சக்தியினை எமக்கருளும்;
செல்லும் வழிகளை
செம்மைப்படுத்தி வையும்;
பாய்ச்சல் நிகழ்கையிலே
பக்கத்தில் துணையிருந்து
காற்றுச் சங்கூதும்;
வெற்றியோடு மீளும்போது
எம்மைப் பெருமைப்படுத்தும்"



என்று வீரரை வேண்டியவர் பொன்.கணேசமூர்த்தி.

_____________________________________________

Labels: , , ,


Monday, July 31, 2006

ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு.
இன்று அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.



போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.


[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
எனது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணையின் சிறப்புத் தொகுப்பொன்று செய்ய எண்ணியிருந்தேன். நேரம் போதாமை மற்றும் முக்கிய இரண்டொரு பாடல்கள் இல்லாமை காரணமாக முடியவில்லை. இதுவரை வெளியிட்டவற்றில் சிட்டண்ணையின் பாடல்களை ஒரு தொகுப்பாக இட எண்ணுகிறேன்.

சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.


Labels: , , ,


Saturday, April 22, 2006

டப்பாங்கூத்துப் பாடல்கள்

************நட்சத்திரப் பதிவு -12************
ஜெயசிக்குறு தொடங்கப்பட்டதின் பின்பு வன்னியில் தெருக்கூத்து அல்லது வீதிநாடகங்கள் எனப்படும் கலை மிகப்பரந்தளவில் எழுச்சி பெற்றது. புலிகளின் மிகமுக்கிய பரப்புரை ஊடகமாக அது இருந்தது. மக்கள் கலைஞர்களாலும், போராளிக் கலைஞர்களாலும் இவை அரங்கேற்றப்பட்டன. ஒலிபெருக்கிகள் ஏதுமின்றி நேரடியாகவே மக்களுடன் பேசும் நாடகங்கள் இவை.
இவை பற்றி சிறியதொரு பதிவை நட்சத்திரக் கிழமையில் எழுதலாமென்று நினைத்திருந்தாலும் முடியவில்லை.

இவ்வாறான வீதி நாடகங்களின் போது சில பாடல்கள் பாடப்பட்டன. அவைகள் பின் ஒலித்தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
அப்படி வந்த பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.

"டப்பாங்கூத்து பாட்டுத்தான்"
இப்பாடலைப் பாடியவர் 'குட்டிக்கண்ணன்' என்ற இளங்கலைஞர். அப்போது பத்தோ பதினொன்றோ தான் அவரது வயது.வன்னியெங்கும் சுழன்று திரிந்து பாடல்களைப் பாடுவார். நல்ல குரல் வளமுடையவர்.


"புலியாட்டம் ஆடு
பூபாளம் பாடு"

இதுவும் வீதி நாடகங்களில் பாடப்பட்டு மிகப்பிரபல்யமான பாடல்.
பாடியவரின் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஆளை நன்றாக ஞாபகம் இருக்கிறது.



புலம்பெயர்ந்தவர்கள் சிலருக்குக்கூட இப்பாடலை நேரடியாகக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

Labels: , ,


Monday, April 17, 2006

திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்

வணக்கம்!

"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க
முடியாதநாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.

சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா –செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால்
கிழித்தெறியப்பட்டது."


இனி இன்றைய பதிவுக்கு வருவோம்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.



இதுவொரு மீள்பதிவு. ஏற்கனவே ஈழப்பாடல்கள் என்ற இதன் துணை
வலையிலிடப்பட்ட இடுகைதான். அதில் இடப்பட்டிருந்த பாடலிணைப்பு சிறிதுநாட்களிலேயே
செயலிழந்து விட்டது. இப்பேர்து புதிய பாடலிணைப்புடன் அதை மீள்பதிவாக இடுகிறேன்.
அண்மையில் நடந்த சம்பவங்கள், திருமலையின் நிலவரத்தையும், அதன் சிக்கல் தன்மையையும்
வெளிப்படுத்துகின்றன. "திருமலை எங்கள் இடம்" என்பதை இன்னுமின்னும் அழுத்திச்
சொல்லவேண்டிய காலத்துள் நிற்கிறோம். புத்தர் சிலை முளைத்தபோதே கடுமையானமுறையில்
அதை எதிர்கொள்ள வேண்டுமென்று நினைத்தவன் நான். இப்போது மாமனிதர் விக்னேஸ்வரன்
படுகொலையும் அதன்பின் அண்மைய படுகொலை-தீவைப்புச் சம்பவங்களும் என்று பல
நடந்துவிட்டன. இனி பதிவு.

* * * * * * *
*** *** *** *** *** *** ***
'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.

பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.

யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.

'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.

புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது.
அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.

"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?"
"ஆள் இப்ப தலைநகரில"
என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.

திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.

****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா?
அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா?
திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா?
புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன?
போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.
*****

இதோ, தலைநகர் மீதொரு பாடல்.
பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன்.
கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள்.
( சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)

பாடலைப் பாடியவர் எல்லோரினதும அபிமானத்துக்குரிய
மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது யார்? புதுவைதானே?
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.
********************************




கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.


கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


Labels: , , , ,


Wednesday, March 22, 2006

கப்டன் வாமகாந்தின் கவிதைகள் - 1.

"கப்டன் வாமகாந்த்" என்ற தென்தமிழீழப் போராளிக் கலைஞனின் கவிதைகள் "வீழுமுன் சில வரிகள்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. காலொன்றைச் சமர்க்களத்தில் இழந்தாலும் அயராது பணிசெய்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி சிலகாலமே ஆன நிலையில் மட்டக்களப்பில் பண்ணையொன்றில் தோழர்களுடன் இருந்போது எதிரிகளால் கொல்லப்பட்டவர்.
**********************************
வீழுமுன் சிலவரி..

என் கால்கள் வலியன.
நான்
வாழ்வையிழக்கலாம்.
என் பாதம் பதித்த சுவடுகள்
இந்த மண்ணில் நிலைக்கும்.

நாளைய தூண்களில்
நல்வழிகாட்டலாய்....
என் பாதம் பதித்த சுவடுகள்
தேசத்தின் நிலையாக
தீ சுமந்து நிற்கும்
புதியவேதமாய்.
புழுதி சுமந்த காற்றில்
மூச்சுக் கலந்துபோக
வலிய என் பாதங்களாக
முளைத்த இனமொன்று
முட்டி மோதியெழுந்து
தடையாக எழும்
கரங்களைத் தகர்க்கும்.
***
வாமகாந்தன், சமர்க்களமொன்றில் தனது காலை இழந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
****************

மனிதப்புதையல்கள்

அகழ்ந்தெடுக்கப்பட்டதாய்
செய்திகள் வரும்.
இவள்
என்றும்போலவே
கதறிப் புலம்புவாள்.
ஒட்டிய வயிறு கொண்ட
குழந்தைகள் தடுமாறும்.

நகர்க்கிணற்றில்,
தெருப்புதரில்,
மலக்குழியிலென
மனிதக் கூடுகள்
மீளும் போதெல்லாம்
இவள் ஓடுவாள்.

அடையாளம் இருக்காது
அவளவன் தானென
இனங்காடட
எதைக் காண்பிப்பாள்?
நாளையும்
இதயத்தில் இடியிறங்க
செய்திகள் வரும்.
அதிலும் இவள் துணைவன்
இல்லாதிருக்கலாம்.
********************
இதை வாசித்தபோது, கிளிநொச்சி நகரம் புலிகளால் மீட்கப்பட்டபின் நாளாந்தம் அங்கிங்கென்று கண்டுபிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காணவெனக் காத்திருந்தவர்களைத்தான் ஞாபகம் வந்தது. நூற்றுக்குமதிகமான பொதுமக்கள் கிளிநொச்சி இராணுவத்தினரால் காணாமற்போகச் செய்யப்பட்டரென்பதும் அவர்களிற் பெருமளவானோரின் எலும்புக்கூடும் பின் மலசல கூடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டனவென்பதும் அனுபவங்கள்.


Labels: ,


Friday, July 01, 2005

கால்கள் பற்றி ஆதவனின் 3 கவிதைகள்

அந்த நிலவும் அவளும்...

தெளிந்த நிலவில்
நட்சத்திரங்கள் கூடிய ஒரு பொன்னிரவில்
உண்மையில்-
'வா ஓடிப்போவோம்'
என்றாள் என் மைதிலி.

வருகிறேன் செல்லமே!
காலம் பூராவும்
இதற்காகத்தானே காத்துக் கிடந்தேன்.
என் மைதிலியே!
ஒரேயொரு திருத்தம்

என்னால் ஓட முடியாது.
ஏற்பாயா?


கால்கள் பற்றி மேலும் சில வரிகள்...

நண்பனே!
நினைவு கொள்கிறாயா
நாம் கிளித்தட்டு விளையாடியதை?

ஒரு கோட்டில்...
சமாந்தரமாய் இருகால்களும் நிற்கவேண்டும்
அப்போதுதான் 'அடி' சரி.

இப்போது நிற்க முடிகிறதா உன்னால்?

உணர்வு எங்கோ போகிறது.
கால்கள் எங்கோ போகிறது.
எனது கால்கள் எனக்கே சொந்தமில்லை.
யாரோ வைத்தகால்; அப்படித்தானே?

இருக்கட்டுமேன்...
அதனாலென்ன?
இதயத்தையும் உணர்வையுமா
இழந்து தொலைத்தேன் நான்?

ஒரு கோட்டில் சமாந்தரமாய்
என்னுடைய 'எல்லாமுமே' நிற்கும்.
நான் அடிக்கிற 'அடி' சரிதான்.


ஓசையின் உறுதி

செவ்வரத்தம் பூவுக்கும்
காலடிகளின் சத்தம் கேட்கிறதாம்...
ஆரோ ஒரு அயல்நாட்டு விஞ்ஞானி
ஆய்வுசெய்து சொல்கிறான்.

என் காலடியோசை
என் நிலமெங்கும் கேட்கும் என்பதற்கு
விஞ்ஞானிகளின்
ஆய்வு ஒன்றும் தேவையில்லை.

நீ புதைத்த மிதிவெடியில்
போகவில்லையடா என் கால்கள்
நான் வரிந்த
இதய உறுதியில் போயிற்று.
இதய அடிகளின் சத்தம் இருக்கும்வரை
என் காலடியோசை
உன்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.

க. அதவன்.

நன்றி
வெள்ளி நாதம்.

Labels: ,


Thursday, April 07, 2005

வெலிக்கடை முகட்டிலிருந்து (கவிதை)

வெலிக்கடை முகட்டிலிருந்து வெள்ளை உலகத்திற்கு

நாடித் துடிப்புக்களின் விகிதம்
நாளுக்கு நாள் குறைவுற்று
என்றோ ஒருநாள்
முற்றாய்
முடங்குவது உறுதி.


வலிகளினால் அலறியலறி
வாய் உமிழ் நீரற்று
கண்ணர்ப் பெருக்கோடி
அதுவும் வற்றும்.
எனினும்
முடியாதது வதைகள்.

வதைகள்-
நாளிகை,
நாட்களெனக் கடந்து
விடாப்பிடியாயும்,
மாறா வினாக்களோடும்,
விசித்திரமாகவும்,
வித்தியாசமாகவும் தொடரும்.

காரணமற்ற கைதுக்குப் பின்னரான
காலப் பதிவுகளில்…
கலைந்து போன என் கூடு
கருகிப்போன உறவுகள்
கல்லாகிப்போன மனது.
இது ஞாபகமற்ற வருடத்து
நான்காவது தவணை நாள்.

நம்பிக்கையற்று,
நான்கு நபர்களுடன் பிணைக்கப்பட்டு
நான் போகிறேன்.

வெளியிலே...
வெலிக்கடைக் கூரையேறிக்
குரல் கொடுக்கிறான் ஒருவன்.

வெள்ளை உலகமே…
வெந்து போன இந்த உள்ளத்தையும்
வெளிறிய உடலையும்
ஒரு தடவை பாருங்கள்.

நான் மதிக்கப்படவில்லை.
நான்கு சுவருக்குள் இன்றும்
மிதிக்கப்படுகிறேன்.
ஏனெனில்,
நான் ஒரு தமிழன்.
----------------------------------------------------------------

நண்பன் நா.கானகன் எழுதிய கவிதையொன்று வெள்ளிநாதத்தில் கண்டேன். நண்பனின் கவிதையை இங்கே தந்துள்ளேன்.
நன்றி வெள்ளி நாதம்.

Labels: ,


Tuesday, March 08, 2005

அவர்கள் பார்வையில்... –மகளிர் தினக் கவிதை.

வணக்கம்!

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈழத்துப் பெண்கவிஞை ஒருத்தியின் கவிதையொன்றைப் பதிகிறேன். இது 1987 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” எனும் தொகுப்பில் “அ.சங்கரி” இன் கவிதையொன்று.

அவர்கள் பார்வையில்
எனக்கு
முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவுமில்லை.

அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.

சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமையாகும்.

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கு
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரை
இதுவே வழக்கம்.

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]