Monday, July 31, 2006
ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு
இன்று அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
எனது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணையின் சிறப்புத் தொகுப்பொன்று செய்ய எண்ணியிருந்தேன். நேரம் போதாமை மற்றும் முக்கிய இரண்டொரு பாடல்கள் இல்லாமை காரணமாக முடியவில்லை. இதுவரை வெளியிட்டவற்றில் சிட்டண்ணையின் பாடல்களை ஒரு தொகுப்பாக இட எண்ணுகிறேன்.
சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.
Labels: ஒலி, கவிதை, நினைவு, மாவீரர்
பாடலைக் கேட்டேன்.
நீங்கள் இப்படி ஒவ்வொரு விடயமாகத் தொகுத்துக் கொண்டு வருவது மிகவும் நல்ல பணி.
தொடர்ந்தும் செய்யுங்கள்.
சிட்டுவின் பாடல்களை மட்டுமே அறிந்திருந்த எனக்கு சிட்டு பற்றிய குறிப்புக்கள் பெரும் பரிசு.
பணிதொடருங்கள்.
நன்றி!
செந்தழல் ரவி,
மலைநாடான்,
அகிலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அகிலன்,
"மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை" பாட்டு வர்ணஇராமேஸ்வரன் குழுவினரோடு பாடியதல்லவா?
அப்படித்தான் நான் அறிந்துவைத்திருக்கிறேன்.
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]