Friday, July 01, 2005

கால்கள் பற்றி ஆதவனின் 3 கவிதைகள்

அந்த நிலவும் அவளும்...

தெளிந்த நிலவில்
நட்சத்திரங்கள் கூடிய ஒரு பொன்னிரவில்
உண்மையில்-
'வா ஓடிப்போவோம்'
என்றாள் என் மைதிலி.

வருகிறேன் செல்லமே!
காலம் பூராவும்
இதற்காகத்தானே காத்துக் கிடந்தேன்.
என் மைதிலியே!
ஒரேயொரு திருத்தம்

என்னால் ஓட முடியாது.
ஏற்பாயா?


கால்கள் பற்றி மேலும் சில வரிகள்...

நண்பனே!
நினைவு கொள்கிறாயா
நாம் கிளித்தட்டு விளையாடியதை?

ஒரு கோட்டில்...
சமாந்தரமாய் இருகால்களும் நிற்கவேண்டும்
அப்போதுதான் 'அடி' சரி.

இப்போது நிற்க முடிகிறதா உன்னால்?

உணர்வு எங்கோ போகிறது.
கால்கள் எங்கோ போகிறது.
எனது கால்கள் எனக்கே சொந்தமில்லை.
யாரோ வைத்தகால்; அப்படித்தானே?

இருக்கட்டுமேன்...
அதனாலென்ன?
இதயத்தையும் உணர்வையுமா
இழந்து தொலைத்தேன் நான்?

ஒரு கோட்டில் சமாந்தரமாய்
என்னுடைய 'எல்லாமுமே' நிற்கும்.
நான் அடிக்கிற 'அடி' சரிதான்.


ஓசையின் உறுதி

செவ்வரத்தம் பூவுக்கும்
காலடிகளின் சத்தம் கேட்கிறதாம்...
ஆரோ ஒரு அயல்நாட்டு விஞ்ஞானி
ஆய்வுசெய்து சொல்கிறான்.

என் காலடியோசை
என் நிலமெங்கும் கேட்கும் என்பதற்கு
விஞ்ஞானிகளின்
ஆய்வு ஒன்றும் தேவையில்லை.

நீ புதைத்த மிதிவெடியில்
போகவில்லையடா என் கால்கள்
நான் வரிந்த
இதய உறுதியில் போயிற்று.
இதய அடிகளின் சத்தம் இருக்கும்வரை
என் காலடியோசை
உன்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.

க. அதவன்.

நன்றி
வெள்ளி நாதம்.

Labels: ,


Comments:
நல்லாருக்கு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]