Monday, April 17, 2006

திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்

வணக்கம்!

"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க
முடியாதநாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.

சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா –செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால்
கிழித்தெறியப்பட்டது."


இனி இன்றைய பதிவுக்கு வருவோம்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.



இதுவொரு மீள்பதிவு. ஏற்கனவே ஈழப்பாடல்கள் என்ற இதன் துணை
வலையிலிடப்பட்ட இடுகைதான். அதில் இடப்பட்டிருந்த பாடலிணைப்பு சிறிதுநாட்களிலேயே
செயலிழந்து விட்டது. இப்பேர்து புதிய பாடலிணைப்புடன் அதை மீள்பதிவாக இடுகிறேன்.
அண்மையில் நடந்த சம்பவங்கள், திருமலையின் நிலவரத்தையும், அதன் சிக்கல் தன்மையையும்
வெளிப்படுத்துகின்றன. "திருமலை எங்கள் இடம்" என்பதை இன்னுமின்னும் அழுத்திச்
சொல்லவேண்டிய காலத்துள் நிற்கிறோம். புத்தர் சிலை முளைத்தபோதே கடுமையானமுறையில்
அதை எதிர்கொள்ள வேண்டுமென்று நினைத்தவன் நான். இப்போது மாமனிதர் விக்னேஸ்வரன்
படுகொலையும் அதன்பின் அண்மைய படுகொலை-தீவைப்புச் சம்பவங்களும் என்று பல
நடந்துவிட்டன. இனி பதிவு.

* * * * * * *
*** *** *** *** *** *** ***
'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.

பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.

யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.

'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.

புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது.
அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.

"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?"
"ஆள் இப்ப தலைநகரில"
என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.

திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.

****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா?
அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா?
திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா?
புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன?
போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.
*****

இதோ, தலைநகர் மீதொரு பாடல்.
பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன்.
கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள்.
( சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)

பாடலைப் பாடியவர் எல்லோரினதும அபிமானத்துக்குரிய
மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது யார்? புதுவைதானே?
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.
********************************




கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.


கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


Labels: , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: டிசே

போட்ட பாடல் அருமை. இன்றைய காலத்துக்கு தேவையான பாடலும் கூட.

0.16 18.4.2006
 
எழுதிக்கொள்வது: ARUNAN

அருமையான பதிவுக்கு பாடல் நல்ல அணி சேர்த்திருக்கிறது.இப்பதிவுடன் கோணமலையில் புலிக்கொடி பறக்கவிட்டதற்காக உயிர்நீத்த நடராஜனின் தகவலையும் சேர்த்து ஒரு ஆவணப்பதிவாக்கவும்.
நன்றி

6.55 18.4.2006
 
அருமையான நட்சத்திரப் பதிவு.

//கோணமலையில் புலிக்கொடி பறக்கவிட்டதற்காக உயிர்நீத்த நடராஜனின் தகவலையும்//
அருணன், திருமலை நடராசனை பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவலைத் தாருங்கள்.
 
வன்னியன்!
நீங்கள் இப்பதிவினை முன்னர் இட்டபோது எழுந்த ஆர்வத்திலேயே நான் அறிந்தவற்றை திருகோணமலை தொடரிலிலே எழுதிவருகின்றேன். அந்த வகையில் எனக்கு உந்து சக்தியான பதிவு இது.
அருண்!
திருமலை நடராசன் பற்றி அறிந்து கொள்ள அனேகம்பேர் ஆவலாக உள்ளனர்.. நீங்கள் அறிந்ததை அறியத்தாருங்கள்.
 
எழுதிக்கொள்வது: theevu

குரைகடலோதம் நித்திலங் கொழிக்கும்
கோணமாமலையமர்ந்தாரே

சம்பந்தரை சம்பந்தப்படுத்தாதது ஏனோ?

18.12 16.4.2006
 
டி.சே,
அருணன்,
சிறிதரன்,
மலைநாடான்,
தீவு,
கருத்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி.

அருணன்,
நீர் கதைய விட்டிட்டு உம்மட வலைப்பதிவில பழையபடி எழுதத்தொடங்கும்.

தீவு,
சம்பந்தரைச் (நீங்கள் சொன்ன சம்பந்தரைத்தான் நானும் சொல்லிறன்) சம்பந்தப்படுத்தாததுக்கு மன்னியுங்கோ.
எனக்கு உந்த விசயங்கள் தெரியாதெண்டு எடுத்துக்கொள்ளுங்கோ.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]