Wednesday, April 12, 2006

நெடுந்தீவும் தமிழனின் தொன்மமும்

நெடுந்தீவும் தமிழனின் தொன்மமும் என் அனுபவமும் -மீள்பதிவு

நான்கு தினங்களின்முன் இடப்பட்ட பதிவிது. இடையிற் காணாமற்போய்விட்டது. சிலபடங்களையும் சேர்த்து சிறிது மாற்றத்தோடு மீண்டும் இடுகிறேன்.

இன்று எரிமலை இதழில் தி.தவபாலன் அவர்கள் எழுதிய கட்டுரையொன்று படிக்கக் கிடைத்தது.

அக்கட்டுரை நெடுந்தீவைப்பற்றியும் வெடியரசன் கோட்டை பற்றியும் சொல்கிறது.அத்தோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியற் பொருட்கள் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்பிடுகிறது.

ஈழத்து நிலப்பரப்பிலிருந்து ஆகக்கூடுதலான தூரத்தில் தள்ளியுள்ள தீவு நெடுந்தீவு என்று அறிந்து வைத்திருக்கிறேன். (இது சரியா? கச்சதீவு எம்மாதிரி?) ஈழத்தில் தொல்லியற் சோதனைகள் சரிவர நடக்கவில்லையென்றே தான் நினைக்கிறேன். இவற்றுக்கு போர் முதன்மைக்காரணம்.

யாழ்ப்பாணத்திற் பல இடங்களிலும்,
வன்னியில் மல்லாவி, ஆனைவிழுந்தான், அக்கராயன் போன்ற இடங்களிலும் அவ்வப்போது இப்படி ஏதும் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை தீவிர கவனம் பெறுவதில்லை; ஆராய்ச்சித் தொடர்ச்சி நடைபெறுவதில்லையென்றே நினைக்கிறேன்.

இதையொட்டி நான் கண்ட ஒரு சம்பவம் பற்றிச் சொல்லும் முயற்சியிது.

1999 இன் நடுப்பகுதி. அப்போது ஒட்டுசுட்டான் வரை சிங்கள இராணுவம் வந்துவிட்டது. எட்டி ஒருகால் வைத்தால் புதுக்குடியிருப்பு. வெறும் பத்துமைல்கள் தான். மறுவளத்தால் நெடுங்கேணியிலிருந்தோ ஒட்டுசுட்டானிலிருந்தோ முள்ளியவளை நோக்கிக் கால்வைத்தாலும் அப்படித்தான். புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களவனிடம் போய்விட்டால் முல்லைத்தீவே தமிழர்களிடமில்லை.

ஜெயசிக்குறு காலகட்டத்தில் ஓரிடத்தில் முன்னணி அரணொன்று உடைபட்டால் சிறிது தூரத்திலேயே அடுத்த காவலரன் வரிசையில் இராணுவம் மறிக்கப்பட்டுச் சண்டை பிடிக்குமளவுக்கு ஒழுங்குகள் இருந்தன. போகப்போக அது இல்லாது போய்விட்டது. காரணம் எதிரி கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக்கடற்கரை வரை (நாயாறு தொடக்கம் மன்னார்க்கரை வரை) நூறு மைல்களுக்குமதிகமான முன்னணிப்போர்முனையைத் திறந்து விட்டிருந்தான். அதைவிட யாழ்ப்பாணப் பக்கத்திலும் முன்னேற்றப் போர்முனையைத் திறந்து விட்டிருந்தான்.

வன்னியில் மக்களும் இணைந்து எல்லைக் காப்புச் செய்துகூட ஒருவரிசை முன்னணிக் காப்பரணையே ஒழுங்காகப் பேண முடியாத நிலையில்தான் அன்றைய ஆட்பலம் இருந்தது. இந்தநிலையில் ஒட்டுசுட்டானிலிருக்கும் புலிகளின் முன்னணிக் காப்பரணை இராணுவம் தாண்டிவிட்டால் நேரே புதுக்குடியிருப்புதான். இடையில் ஏதுமில்லை.

அந்தக்காலம்தான் வன்னி மக்களின் உச்சக்கட்டப் போராட்டப் பங்களிப்பின் காலம். சுழற்சி முறையில் எல்லைப்படையாகச் சென்று முன்னணிக் காவலரணிற் கடமையாற்றுவது, பின்னணியில் பதுங்கு குழிகள் அமைப்பது உட்பட தொடர்ச்சியான களப்பணிகள் என்று நடந்துகொண்டிருந்தது.

ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வரும்போது கற்சிலைமடு தாண்டியதும் மன்னாகண்டல் என்று ஓரிடம் வரும். அங்கு ஒரு பதுங்குகுழி அமைக்கும் வேலை நடந்தது. அவ்விடம் மக்கள் குடியிருப்பற்ற காட்டுப்பிரதேசம். ஆனால் மக்கள் புழக்கமுள்ள ஒட்டுசுட்டான்- புதுக்குடியிருப்பு வீதியிருக்கிறது. (அன்றைய நிலையில் அவ்வீதியும் வெறிச்சோடித்தான் இருக்கும்.)

அவ்விடத்தில் பெரியதொரு மேட்டுப்பகுதியிருக்கிறது. அந்த மேட்டுப்பகுதியில் சிறியதொரு பிட்டி (அதாவது அந்த மேட்டுப்பகுதியில் இன்னொரு சிறியமேடு). பிட்டியிலிருந்து ஒட்டுசுட்டான் பக்கமாகப் பார்த்தால் ஒரு சிறு மோட்டையும் (யாழ்ப்பாணத்திலென்றால் அதுவெல்லாம் பெரிய குளம்) அதையொட்டிய வெட்டையுமிருந்தது. அந்தப்பிட்டியில்தான் சண்டைக்கான ஒரு பதுங்குகுழி அமைக்கும் வேலையில் பொதுமக்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

பிட்டியில் தோண்டும்போது கருங்கற்கள் தென்பட்டன. பிறகு அக்கற்களில் சில வேலைப்பாடுகள் தென்பட்டன. அப்போது உசாராகி ஆழமாக்காமல் மண்ணை அகட்டிக் கிண்டியபோது அதுவொரு பெரிய கருங்கல் தொகுதியென்று தெரிந்தது. பின் இன்னும் முயற்சித்ததில் படிக்கட்டொன்று தெரிந்தது. படிகட்டின் இரு பக்கத்திலும் சிங்கமோ புலியோ என்று சொல்ல முடியாத (சரியான உருவம் இப்போது ஞாபகமில்லை) உருவமொன்று செதுக்கப்பட்டிருந்த ஞாபகம். அந்தப் பிட்டியிலிருந்து அந்தப்படிக்கட்டு இறங்கிச் செல்கிறது. (நான் பார்க்கையில் நாலு படிகள் வரை தெரிந்தன).

நான் செய்தியறிந்து அங்குச் சென்று பார்த்தேன். பிட்டியின் வேறு பகுதியிலும் சற்று ஆழத்தில் வேலைப்பாடுள்ள கருங்கல் வந்தது. பதுங்குகுழி வேலை அப்படியே நின்றுவிட்டது. அந்தவிடத்தில் மண் தோண்டுவதும் நின்றுவிட்டது. மண்ணைக் கிண்டியபடி பார்த்த அப்படிக்கட்டைக் கொண்டு கற்பனை செய்தால் அச்சிறுபிட்டி ஏதோவொரு பீடம் போன்று தோன்றும். அப்பீடத்தின் மேல் மண்படிந்து பிட்டியானது போன்ற தோற்றம். பிட்டி சுமார் இருபதடி உயரம் வருமென்று நினைக்கிறேன். பிட்டியின் கீழ்ப்பகுதியில் தோண்டும்போது சிறிய செங்கற்கிடங்கொன்று வந்தது.

அது பெரிதாகக் கவனப்படுத்தப்பட்டதாக நான் அறியவில்லை. உண்மையில் அது சாதாரண விசயமாகக்கூட இருக்கலாம். அன்றைய நிலையில்,
“உந்த வெட்டையக் கவர் பண்ணிறதுக்கு அருமையான இடம் மச்சான். ஆனா பங்கர் அடிக்கேலாமக் கிடக்கு”
என்றுதான் அதற்குப் பொறுப்பானவருக்குத் தோன்றியிருக்கும். அத்தோடு இன்னொரு சரியான இடத்தைத் தெரிவு செய்தவதிலும்தான் கவனம் இருந்திருக்கும்.

இன்னொரு விசயத்தையும் நான் அவ்விடத்திற் கவனித்தேன். அச்சிறு பிட்டியிருக்கும் மேட்டுப்பகுதியைச் சுற்றி ஆளுயரக் கருங்கல் அரணொன்று இருக்கிறது. ஆனால் அது முழுச்சுற்றாக அம்மேட்டுப்பகுதியைச் சுற்றி முடிவதாகத் தெரியவில்லை. எங்கே போகிறதென்றும் தெரியவில்லை. பார்க்க, அது தானாக வளர்ந்தது போன்றுதான் தோன்றும். ஆனால் நேர்த்தியாகக் கற்கள் அடுக்கப்பட்டு பின் அவை வளர்ந்தது போன்றுதான் இருக்கிறது.

அதைவிட முத்தையன்கட்டுக்குளத்தின் பின்பக்கமாக இதேபோன்று கருங்கல் அரண் செல்கிறது. அது அம்பகாமம் வழியாகத் தொடந்துகொண்டே செல்கிறது. அது ஏற்கெனவே நான் சொன்ன மன்னாகண்டல் அரணுடன் தொடர்புடையதா? அல்லது இடையிலிருந்து தொடங்குகிறதா என்றும் தெரியவில்லை. இவ்வரண் இருக்கும் பகுதிகள் முழுவதும் இன்றும் அடர்ந்த காடுகள்தான். மக்கள் வாழ்விடங்களுக்குள்ளால் அவை செல்லவில்லை. ஆனால் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையாக சில இடங்களிற் செல்கிறது.

அப்போதெல்லாம் இதுபற்றி யாரிடமும் கேட்கும் ஆவல்கூட இல்லை. அங்கிருக்கும் காட்டைக் கரைத்துக் குடித்த வேட்டைக்காரரிடம் இதுபற்றிக் கேட்டால் ஏதாவது தெரியவரும். குறிப்பாக மைல்கணக்கில் நீண்டிருக்கும் அக்கல்லணை இயற்கையாகத் தோன்றியதா அல்லது யாராவது “வேலை மினக்கெட்டு” செய்தார்களா என்று அறிய ஆவல். மன்னாகண்டல் மேட்டை பிறகும் கிண்டிப்பார்த்தார்களா? ஏதாவது புதிதாக இருந்ததா, அல்லது சாதாரண விசயந்தானா என்றும் அறிய ஆவல்.

வன்னியிற் கண்டெடுக்கப்பட்ட சில தொன்மப்பொருட்கள்.
அக்கராயன் மண் இலட்சினை

ஆனைவிழுந்தான் முது மனிதர் கலை
இன்னும் சில தொல்பொருட் படங்களுக்கு
http://www.eelavision.com/?gallery=5008

படங்கள்: ஈழவிசன்

Labels: , ,


Thursday, March 10, 2005

இரணைமடுச் சரித்திரம்...


இரணைமடுக் குளத்தைப் பற்றிய நிறையத் தகவல்களோடு இம்முறை நானுங்களைச் சந்திக்கிறேன்.
இவ்வாக்கம் ஊடகவியலாளர் தி.தவபாலன் அவர்களால் எழுதப்பட்டது. வன்னியில் புலிகளின்குரல் வானொலியில் கடமையாற்றும் இவர் தந்தனுப்பிய இரணைமடுக்குளம் பற்றிய ஆக்கத்தினை இங்கே பதிகின்றேன்.
இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.
ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் நீர்ப்பாசன பிரிட்டிஸ் பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.
இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரௌன் ஈடுபட்டார். இவர் தற்போது கிளிநொச்சி நகரிலுள்ள 'ரை' ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த 'ரை' ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் எம்மக்களின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902ல் ஆகும்.
1920 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.
1977ல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.
இடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் இடதுகரையில் ஊட்டக்குளமான கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதனிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இப்பொழுது மீளவும் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு நடக்கின்றது.இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது. 1990 உடன் இது செயலிழந்தது. மீளவும் அது இயங்கவில்லை. இதனால் திருவையாறு இன்றும் வரண்டு கிடக்கின்றது.
வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன. திருவையாறு ஏற்றுப்பாசனத்தை நம்பிய 1004 ஏக்கர் நிலங்கள் வரண்டு வாடுகின்றன. இரணைமடு நீருக்காக காத்திருக்கின்றது. இந்த ஏற்றுப்பாசனம் நிகழுமாயின் திருவையாறு பெரும் விளைச்சல்மிகு நிலமாக மாறும்.
-நன்றி தி.தவபாலன்-
தி.தவபாலன் எழுதியதில் விடுபட்ட முக்கிய தகவலொன்று:
125000 ஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.
prehistory of srilanka
by Dr.siran.u.deraniyagala

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]