Sunday, September 18, 2005

'ஒழுங்கை' - குரற்பதிவு.

ஒழுங்கா இருப்பது ஒழுங்கை.
ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள செயலியை இயக்கிக் கேக்கலாம். செயலி தொழிற்படாவிடில் இங்கே சொடுக்கவும்.




குழைக்காட்டானின்ர படத்தைப் பாத்த உடன ஒழுங்கை ஞாபகங்கள் வந்திட்டுது.
அனேகமா சைக்கிளோ மோட்டச் சைக்கிளோ போற அளவில ஒழுங்கைகள் இருக்கும். இதுகள குச்சொழுங்கை எண்டும் சொல்லுவம். சில ஒழுங்கைகளுக்குள்ளால மாட்டுவண்டில், கார் கூடப் போய்வரலாம். அதுகள தனிய ஒழுங்கை எண்டு சொல்லுவம்.

அனேகமா ரெண்டு பக்கமும் வேலிஅடைக்கப்பட்டிருக்கும். அப்பிடி வேலியடைக்கப்பட்டிருக்கிற இடங்களில ஒழுங்கை எந்தநேரம் இணலுக்குள்ளதான் (நிழல் எண்டதின்ர பேச்சு வடிவம் தான் இணல்) இருக்கும். யாழ்ப்பாணத்தில அனேகமா பூவரசுதான் வேலிக்கதியாலா நிக்கும். அதுக்கடுத்தபடியா முள்முருக்கு அல்லது கிளுவை நிக்கும். எங்கயாவது அருந்தலா வாதனாராணி அல்லது சீமைக்கிளுவை (இதை யப்பான் மரமெண்டும் சொல்லிறானங்கள்) நிக்கும். உந்த ஒழுங்கை பிரிப்புகளில பெரிய காணிச்சண்டைகள் கூட வந்திருக்கு. சகோதரங்களுக்குள்ள வெட்டுக்குத்துகூட நடந்திருக்கு.

எங்கட ஊரில ஒழுங்கை கூட்டிற ஆக்களைக் காணலாம்.
தங்கட தங்கட வளவுகளுக்கு முன்னால இருக்கிற ஒழுங்கையின்ர பகுதிகளில கொட்டுப்பட்ட பூவரசம் அல்லது கிளுவைச் சருகுகளைக் கூட்டியள்ளுவினம். எனக்கு அப்பவே உந்தப் "பெண்டுகளின்ர" ஒழுங்கை கூட்டல் ஏனெண்டு விளங்கிறேல. கோடையில ஒழுங்கைக்குத் தண்ணிகூடத் தெளிச்சு வைப்பினம். வேலயில்லாத பிரச்சின எண்டு நான் நினைக்கிறது. பொழுது போக வேணுமெண்டு ஏதாவது செய்யிறதாத்தான் நான் நினைக்கிறது.

இப்ப யோசிச்சுப் பாக்கேக்க ஒருவிதத்தில அது நல்லதெண்டுதான் நினைக்கிறன். சும்மா வேலவெட்டியில்லாம சமைக்கிறதும் தோய்க்கிறதும் முடிஞ்சிட்டா பிள்ளையள் பள்ளிக்கூடத்தால வரும்வரைக்கும் அக்கம்பக்கத்தில சேந்து பூராயம் கதைக்கிறதெண்டுதான் கிராமங்களில பொழுதுபோறது. அப்ப எங்க உந்த தொலைக்காட்சிப்பெட்டியளும் மின்சாரமும். (அதுக்காக நானேதோ அம்பது வருசத்துக்கு முந்தின கதையக் கதைக்கிறன் எண்டு நினையாதையுங்கோ. வெறும் பதினஞ்சு வருசத்தயக் கதை) சிலவேளை அதிலயே சண்டைகள் வரும். சும்மாசும்மா கதையளக் கட்டுறதுக்கெல்லாம் எங்கட ஆக்களக் கேக்கவேணுமே? அந்தவிதத்தில இப்பிடியேதாவது செய்து வீண்வம்புகள விலைக்கு வாங்காமல் இருக்கிறது நல்லந்தானே? இண்டைக்கு எந்தநேரமும் ரி.விப் பெடடிக்கு முன்னால இருக்கிறதக்கூட உந்த விசயத்துக்காக நான் வரவேற்கிறன்.

ஆம்பிளையள் எங்கயாவது மதவடியில குந்தியிருப்பினம். இல்லாட்டி ஏதாவதொரு மரத்துக்குக்கீழ கடுதாசியோ தாயமோ விளையாடுவினம். கிராமப் பக்கங்களில அரசாங்க வேல செய்யாத ஆக்கள் வேலவெட்டியில்லாமல் ஓய்வாயிருக்கிற சந்தர்ப்பம் அதிகம்தானே. அனேகமா வெறியில்லாட்டி ஆம்பிளைகளுக்குள்ள சண்டைவாறது குறைவுதான்.

சரி எங்க விட்டன்?
ஆ.. ஒழுங்கை பற்றிக் கதைக்க வந்து என்னவோ கதைச்சுப்போட்டன். ஒழுங்கைகள் எண்டா கட்டாயம் தார் போடாமல் சாதாரணமாத்தான் இருக்கோணும். (அந்த நேரத்தில பெரிய பாதைகளே முந்தியொருக்கா தார் போட்டிருந்தது எண்ட அடையாளத்தோட மட்டுந்தான் இருந்திச்சு.) ஒழுங்கைகள் எப்பவும் நேர்ப்பாதையா இருக்கக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு போகவேணும். இதில ஒரு சிக்கல் இருக்கு. வேலிய உயத்தி அடைச்சிருந்தா முடக்குகளில எதிர்ப்பக்கம் வாறவங்களைத் தெரியாது. சைக்கிளில பெல் இருக்காதபடியா முடக்குகள் வரேக்க,

"பெல் இல்ல
பிரேக் இல்ல
அடிபட்டாக்
கேள்வியில்ல"
எண்டு ஒரு ராகத்தோட கத்திக்கொண்டுதான் திரும்புவம். எங்களுக்கு முதல் எதிர்ப்பக்கத்திலயிருந்து கத்தல் வந்தா நாங்கள் உடன வேலிக்கரைக்கு சைக்கிள விட்டிடோணும். சிலநேரங்களில அப்பிடிக் கத்துறதுக்கு வெக்கமாயிருந்தா, (ஆனேகமா எங்களோட படிக்கிற, அல்லது எங்களுக்குள்ள ஏதோவொண்ட உருவாக்கிற பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடிருக்கிற இடமாயிருக்கும்) அப்பிடியே சைக்கிளில எழும்பிநிண்டு வேலிக்குமேலால அந்த முடக்குப் பாதையப் பாத்திட்டுத் திரும்புவம்.

அதிலயும் சிக்கல் வந்திச்சு. இப்பிடித்தான் ஒரு முடக்கில நாங்கள் பள்ளிக்கூடத்தால வரேக்க எழும்பிப்பாத்திட்டுத் திரும்பிறனாங்கள். சைக்கிளில வரிசையாப் பவனிவாறநேரத்தில முன்னுக்குப்போறவன் மட்டும் அப்பிடி பாதையக் 'கிளியர்' பண்ணிப்போட்டுப் போனாச்சரிதானே? ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.

அந்த முடக்கில கத்துறதும் நாகரீகக் குறைவெண்டபடியா பேசாமல்தான் முடக்கால திரும்பினம். ஆனா ஒருநாள் எதிர்ப்க்கம் வந்த ஒரு சைக்கிளோட முன்னுக்குப்போனவன் மோதி, அடுத்தடுத்து மொத்தம் ஆறு சைக்கிளுகள் விழுந்தபிறகுதான் திருந்தினம். பிறகென்ன பழையபடி அந்த முடக்கில
'பெல் இல்ல..
பிறேக் இல்ல..."

உப்பிடி ஒழுங்கை பற்றிக் கனக்க கதைச்சுக் கொண்டே போகலாம். உங்களுக்குக் கேக்கிற பொறுமை வேணுமே?
அதால இதோட நிப்பாட்டுறன்.

'பூராயம்' எண்டு பேர் வச்சது தான் வச்சன். அந்தப்பேருக்கு ஏற்றமாதிரி ஒண்டும் எழுதேல எண்டமாதிரியொரு உணர்வு. பூராயம் ஒருத்தருக்கும் விளங்கேல எண்டஉடன நானும் பெரிசா அலட்டிக்கொள்ளேல. ஆனா காருண்யன் இந்தப் பூராயம் எண்ட பேரத் தனதாக்குறதுக்கு முயற்சி செய்து நான் முதலே அதைக் கையகப்படுத்திவிட்டதால மனமொடிஞ்சு 'விண்ணாணம்' எண்டு பேர வச்சத அறிஞ்சபிறகுதான் இந்தப்பேருக்கிருக்கிற 'மவுசு' தெரிஞ்சுது.

Labels: , ,


Comments:
எல்லாம் சொன்னனியள்; ஒழுங்கையளுள்ளை சைக்கிள் பெடல் மிதிக்கிற காலைத் துரத்துற நாயளை விட்டுப்போட்டியளே :-(
 
அடடே பெயரிலி,
முக்கியமான விசயத்தை மறந்துபோனேன். எல்லாம் அவசரத்தில எழுதிப் பதிஞ்சது. யோசிச்சா நிறையக் கதைக்க வரும்.

நாய் கலைக்கேக்க ரெண்டு காலையும் தூக்கி பாரில வச்சுக்கொண்டு போறது. நாய் கலைக்குமெண்டு நாங்கள் ஏற்கெனவே தீர்மானிச்சிருக்கிற இடங்கள் வருதெண்டா ஏலுமட்டும் உளக்கி வேகமாப் போவம். அப்பதானே காலத்தூக்கி வச்சா நாய் களைச்சுப்போய் நிக்குமட்டும் சைக்கிள் ஓடும்.

சில நாயள் சைக்கிள் நிக்குமட்டும்கூடத் துரத்திக்கொண்டு வரும்.
வேலியடைக்கேக்க நாய் பூந்துவாறதுக்கெண்டே பொட்டுக்கள் விட்டு வேலியடைக்கிறவையோ எண்டு எனக்கு இப்பவும் கடுமையான ஐயமிருக்கு.
 
பூராயத்திட அர்த்தம் இப்பத்தான் புரியுது...
பேச்சு வழக்குத் தமிழ் நல்லா இருந்தது.
 
பெயரிலி ரெம்ப அனுபவப்பட்டிருக்கிறார் போல! சரி இந்த ஊர்ப்புதினத்தையம் கொஞ்சம் பாருங்கோவன்!
 
This comment has been removed by a blog administrator.
 
பொடிச்சி, பின்னூட்டத்துக்கு நன்றி.
முதற்பின்னூட்டம் வரமுதலே தனிமடலில 'பொண்டுகள்' எண்டதுக்குக் கண்டனம் வந்திட்டுது.
நான் உங்கள் தரவளியளியிட்ட இருந்தும் கடுமையா ஏதாவது வருமெண்டு எதிர்பாத்தன். பரவாயில்ல. (பொடிச்சியெண்டும் பெட்டையெண்டும் பேருகள வச்சுக்கொண்டு நீங்களென்னெண்டு இதுகள எதிர்க்கலாம்?;-)
 
Hi,
It's wonderful post.
I love your voice.
Keep it up.
with regards,

Seelan.
 
உங்க பாட்டு 'பெல் இல்ல..."
நல்லாருக்கு!
 
அண்ணேன்ரை சயிக்கிளுக்கு பெல்லில்லை பிறேக் இல்லை மக்காட்டில்லை அடிச்சா பல்லில்லை. எண்டெல்லா பாடல் வரவேணும் என்ன நீங்கள் பிழையா படிக்கிறியள்.
 
நல்லாருக்கு.

முன்பு ஒஸ்திரேலியாவில் இருந்து வசந்தனும் சயந்தனும் இம்மாதிரியான குரல் பதிவுகளைச் செய்துகொண்டிருந்தார்கள். வசந்தனை (இப்போதெல்லாம் அம்மாதிரியான பதிவுகள் செய்வதில்லை என்று சொல்லிப்) பேசிக்கொண்டிருந்தேன்.

இம்மாதிரியான குரல் பதிவுகளை நீங்களாவது விடாமல் தொடருங்கள்.

பெயரிலி சொன்ன விதயங்களையும் சேத்துச் சொல்லுங்களேன்.

ஒண்டு இங்கயும் சொல்லிர்ரன். இந்தக் குரல் பதிவுகளைக் கேக்கக்கேக்கத்தான் எனக்கு மறந்துபோன வார்த்தைகள் எல்லாம் நினைவுக்கு வருது! அதுக்காக நன்றி. :)
-மதி
 
எழுதிக்கொள்வது: kulakaddan

வன்னியன், நல்லா இருக்கு. பாட்டு பெல் இல்லை பெறெக் இல்லை, அடிபட்டா பல் இல்லை எண்டு தான் பாடுறனாங்கள்.
நாய் கலைக்க காலை தூக்கி வைக்கிறது, கை விட்டிடு ஓடுறது........... இன்னும் இருக்கு போல சொல்ல

23.11 18.9.2005
 
கருத்திட்டவர்களுக்கு நன்றி.
நளாயினி, குழைக்காட்டான்,
எனக்கு நல்லா ஞாபகமிருக்கு.
எங்கட ஊரில
"பெல் இல்ல பிறேக் இல்ல
அடிபட்டாக் கேள்வியில்ல"
எண்டுதான் கத்துறது.(இதப் பாட்டு எண்டு சொல்லிறியள். அடுக்குமா?)

'கேள்வியில்ல' எண்டா அடிபட்டவர் எந்த முறைப்பாடும் செய்ய ஏலாது. அது அவரின்ர பிழைதான் எண்டு கருத்துவரும்.
சிலவேள எங்கட ஊர்க்கார் பெரிய சண்டியரா இருக்கிறபடியா இப்பிடிக் கத்தினாங்களோ தெரியாது.
 
கைய விட்டிட்டு ஓடுறதெல்லாம் அந்தக்காலம். என்ர பதினஞ்சு வயசுவரைக்கும்தான் அப்பிடியெல்லாம் விளையாட்டுக் காட்டினன். இப்ப அப்பிடி கைய விட்டுட்டு ஓட ஏலாது. ஓடிப்பாத்தன். முடியவேயில்ல.

மதி, தங்கமணி ஆகியோருக்கு நன்றி.
 
கடுமையா ஏதாவது வருமெண்டு எதிர்பாத்தன். பரவாயில்ல. (பொடிச்சியெண்டும் பெட்டையெண்டும் பேருகள வச்சுக்கொண்டு நீங்களென்னெண்டு இதுகள எதிர்க்கலாம்?//

அதெல்லாம் நல்லா எதிர்க்கலாம். :-)
பெண்டுகள் எண்டிறதுக்கு ஆண்பால் என்ன எண்டு கேட்க நினைத்தேன்.
 
நல்ல பதிவு. ஊரிலிருந்த நினனவுகளைக் கிளறிவிட்டது. பொடிச்சி குறிப்பிட்டமாதிரி எனக்கும் இப்பத்தான் 'பூராயத்தின்' அர்த்தம் விளங்கியது. நன்றி.
.....
அய்யா, உமக்கு அந்த மாதிரிக் குரல் அய்யா. தொடர்ந்து உமது குரலில் பதிவு செய்து இன்னும் பல பதிவுகளை இங்கே போடும். தமிழில் வாசிக்கத் தெரியாத துணை கிடைத்தால் உமது பதிவு பிரயோசனமாயிருக்கும் என்பதும் இன்னொரு காரணம் :-))).
 
//பெண்டுகள் எண்டிறதுக்கு ஆண்பால் என்ன எண்டு கேட்க நினைத்தேன்.//

உதென்ன பொறுக்கியின்ர பதிவில நடந்தமாதிரிக் கிடக்கு.
பெண்>பெண்டு>பெண்டுகள் எண்டு வந்திருந்தா,
ஆண்>ஆண்டு>ஆண்டுகள் எண்டெல்லோ வரும்?

அது வருசத்தைக் குறிக்கிறதாப்போடும்.
பேசாமல், பெண்டன்>பெண்டன்கள்> எண்டு பாவிக்கலாம்.

போற போக்கைப்பாத்தா உந்தச்சொல்லைப் பாவிச்சே ஓர் எதிர்ப்படைப்பு செய்வியள் போல கிடக்கு.

செய்யுங்கோ. எனக்கு, பெட்டை, பெடிச்சி, பெடியன் எல்லாம் செல்லமாச் சொல்லுறமாதிரித்தான் கிடக்கு, காதலியொருத்தி காதலைனை 'டா' போட்டுச் சொல்வதைப்போல.
 
வாருமையா டி.சே!

//தமிழில் வாசிக்கத் தெரியாத துணை கிடைத்தால் உமது பதிவு பிரயோசனமாயிருக்கும் என்பதும் இன்னொரு காரணம்//

அண்ணர், ஏற்கெனவே ஒழுங்குபண்ணிப்போட்டுக் கதைவிடுற மாதிரிக்கிடக்கு.
ஆனா துணையிட்ட தமிழில கதைக்க வேண்டியதெல்லாம் நான் என்ர குரலில பதிஞ்சு தாறது அவ்வளவு நல்லாயிருக்காது.
எண்டபடியா எனக்கு ஐஸ் வைக்காமல் நீரும் குரல் பதிவுகள்போடும்.
 
டி.சே க்கு,

உம்மட குரல் எப்பியிருக்கெண்டு நாங்கள் சொல்லுறம்.

இன்னொரு விசயம். பாட்டுப்பாடுறதோ, செய்தி வாசிக்கிறதோ எண்டாப் பரவாயில்லை. குரல் வளம் வேணுமெண்டு சொல்லலாம். சும்மா கதைக்கிறதுக்கு என்ன குரல் வளம் வேண்டிக்கிடக்கு. அதுவும் 'பறையிறதுக்கு' என்ன குரல்வளம் வேண்டிக்கிடக்கு? (கதைக்கிறதுக்கும் பறையிறதுக்குமுள்ள மெல்லியவித்தியாசம் உங்களுக்குத் தெரியுமெண்டு நினைக்கிறன். என்ர ஒலிப்பதிவு பறையிறதெண்டு எடுக்கலாம்)
 
குரற் பதிவைக் கண்டு பிடிச்சிட்டன்!!

//எல்லாம் சொன்னனியள்; ஒழுங்கையளுள்ளை சைக்கிள் பெடல் மிதிக்கிற காலைத் துரத்துற நாயளை விட்டுப்போட்டியளே :-( //

அதே!
 
நன்றி ஷ்ரேயா,
கண்டு பிடிக்க சரியாக் கஸ்டப்பட்டிருப்பியள் போல கிடக்கு.
 
வளாயோ? பளாயோ?
 
கலாநிதி வாங்கோ வாங்கோ.
நீங்களும் என்ர கேஸ் போலத்தான் கிடக்கு.

உந்த 'வளாயும்' (சில இடங்களில 'பளாயும்' எண்டும் சொல்லுறது) எண்ட சொல் எனக்கு நல்ல கிட்டவாக் கிடக்கு.
வசந்தன் பதிவிலயிருக்கிற அப்பக்கோப்பை எண்ட சொல்லுக்குச் சொந்தக்காரச் சொல்லு.

இலங்கையில தான் இப்பவும் இருக்கிறியளோ?
ஏற்கெனவே யாஹு கணக்கு வச்சருந்தால் www.geocities.com இல ஒரு கணக்குத் துவங்கி அங்க உங்கட ஒலிப்பதிவைத் ஏத்திப்போட்டு பதிவில அதின்ர இணைப்பைக் குடுத்துவிடலாம்.
வேயும் ஏதாவது இலவசச் சேவைத்தளங்கள் இருக்கலாம்.

ஈழத்தவரில கனபேர் இப்பிடி ஒலிப்பதிவுகள் செய்யவேணுமெண்டது என்ரவிருப்பம். இல்லாட்டி இதுதான் ஈழத்தமிழ் எண்டு ஏற்கெனவே இருக்கிற ஒற்றை நிலைப்பாடு இன்னும் இறுக்கமாயிடும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]