Saturday, March 05, 2005

இரணைமடுக்குளம்... வன்னியின் முகம் ---2

வணக்கம்!

வன்னிக்கு வந்தபிறகு நான் பாத்த முதல்குளம் இரணைமடுக்குளம் தான். ஒருநாள் விடியவெள்ளன போய் அணைக்கட்டில ஏறிநிண்டு பாத்தன். உதென்ன கடலோ எண்டு ஆச்சரியப்பட்டுப் போனன். பனிப்புகாரா இருந்ததால தொங்கல் எல்லை தெரியேல. கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் தண்ணிதான். இடக்கிட பரவலாப் பட்ட மரங்கள். எவ்வளவு காலமா இதுகள் இந்தத் தண்ணிக்குள்ள நிக்குதுகளோ தெரியேல. குளம் உருவாக முதல்கொண்டு நிக்கத்தான் வேணும்.

நான் குளமெண்டா இவ்வளவு பெரிசா இருக்குமெண்டு ஒருக்காலும் நினைக்கேல. ‘வடபிராந்தியத்தில் மிகப்பெரிய குளம் இரணைமடுக்குளம் தான்’ எண்டு பொதுஅறிவுச் சோதினைக்குப் படிச்சு வச்சிருந்தனான். இடைக்கிடை பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின்ர கண்காட்சியள் கருத்தரங்குகளிலயும் இதப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தனான். அவ்வளவுதான். யாழ்ப்பாணத்தின்ர ஆரியகுளத்தயும் அதப்போல சிலதுகளையும் தான் குளமெண்டு தெரிஞ்சு வச்சிருந்த எங்களுக்குக் குளமெண்டா அப்பிடியொண்டு தான் ஞாபகம் வரும். ஆனா வன்னியில அப்பிடியான நீர்த் தேக்கங்களுக்கு ‘மோட்டை’ எண்டு பேர் வச்சிருக்கினம்.

இந்தக் 'குள பிரமிப்பு' எனக்கு மட்டமில்ல, கனபேருக்கு நடந்திருக்கு. அதே மாதிரி முத்தையன்கட்டுக்குளம், கட்டுக்கரைக்குளங்களும் நல்ல விசாலமானதுதான். குளத்துத்தண்ணியில விவசாயம் செய்யிறதெண்டு புத்தகங்களில படிச்சிருந்ததோட சரி. ஆனா அத நேர பாக்கேக்க ஆச்சிரியமாத்தான் இருந்திச்சு. அப்பிடி குளத்திலயிருந்து வயலுக்குத் திறந்துவிடுகிற தண்ணி தான் சனத்துக்குக் குளிக்கிற இடமெண்டது முதலில அருவருப்பாவும் சங்கடமாயும் இருந்திச்சு. பிறகு அதுவும் பழகீற்றுது.

குளங்கள் வான் பாயேக்கயும் மேலதிகமா இருக்கிற தண்ணியத் திறந்து விடேக்கயும் போய் விடுப்புப் பாக்கிற சுகமே தனி. அதுவும் இரணமடுக்குளம் பாக்கிறதுக்கு அந்தமாதிரி. அப்பிடியான நாக்களில ஞாமான சனம் வந்து பாத்திட்டுப்போகும். படங்களும் எடுக்கிறனாங்கள். தண்ணி திறந்து விடேக்க மீனடிக்கிறதுக்கெண்டே ஒரு கூட்டம் அலையும். விடலயளோட நாங்களும் சேந்து அடிச்சிருக்கிறம்.

அஞ்சு மாசத்துக்கு முதல் நண்பனொருவன் சொன்னான் “டேய் இரணமடுக்குளமெல்லே வத்திப் போச்சு. நடுவில மட்டும் மோட்ட மாதிரி சொட்டுத்தண்ணி நிக்கிது”. எனக்கு ஆச்சிரியம். இரணமடுக்குளம் கூட வத்துமோ? அதென்னெண்டு சாத்தியம்? அவனிட்ட வடிவா விசாரிச்சதில, குளம் திருத்தவெண்டு வருசத்துவக்கத்திலயே தண்ணியெல்லாத்தையும் திறந்து விட்டாச்சு. அதுக்குப் பிறகு மழயுமில்ல. இப்ப முழுத்தண்ணியும் வத்திப்போச்சு. எண்ட தகவலுகள் கிடச்சுது.
“அது நல்லந்தானேடா, குளத்த திருத்தினா இன்னும் அஞ்சாறு அடித்தண்ணி சேத்து வக்கலாமில்லே” எண்டு சொன்னன்.
“திருத்தியிருந்தாத் தானே சந்தோசப்படுகிறதுக்கு. அங்க ஒரு வேலயும் நடக்கேல.” எண்டான்.

என்ன செய்யிறது? எல்லாம் எங்கட காலம். செய்தியளிலயும் இந்த வருச சிறுபோகம் செய்யேலாதெண்டு சொன்னாங்கள். எண்டாலும் குளம் முழுக்க வத்தியிருக்குமெண்டு என்னால நம்பமுடியேல. போய்ப் பாக்கவும் நேரமில்ல. ஆனா அவன் ரெண்டு போட்டோ அனுப்பினான். பாத்தா அப்பிடித்தான் இருக்கு. பச்சயான வெளியாக்கிடக்கு; அந்தப் பட்டுப்போன மரங்களெல்லாம் அப்பிடியே நிக்குது; நிறைய ஆடுமாடுகளும் மேஞ்சுகொண்டு நிக்குதுகள்; நடுவிலமட்டும் கொஞ்சத் தண்ணி நிக்கிது. குளத்தின்ர பரப்பளவில அது ஒரு துளிமாதிரித்தான். இவ்வளவு காலமும் தனக்குள்ள என்ன இருக்கிதெண்டு வெளியில தெரியாமல் பொத்திப் பொத்தி வச்சுக்கொண்டிருந்த குளம், பூடகமான குளம் எல்லாத்தையும் திறந்து காட்டீட்டிது. ஆனாப் பாருங்கோ அதப்பாக்கிற பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கேல. (சில காட்சிகள் சிலருக்கு ரசனை, சிலருக்கு வேதனை. அப்படித்தான் இக்குளத்தின் நிர்வாணமும். குறிப்பாக விவசாயிக்கு நரக வேதனை).

இந்தக்குளத்தில எனக்கு தீராத பாசமொண்டு இருக்கு. இரணைமடுக்குளம் எங்கட சனத்தின்ர வாழ்க்கையில பிரிக்க முடியாத குளம். ஒருநேரத்தில எங்கட சனத்த இணைச்சதே இந்தக்குளம் மட்டுந்தான். அது ஒண்டுதான் வன்னியின்ர ரெண்டு பகுதியயும் இணைச்சிருந்த ஒரே பாதை. இதப்பற்றிப் பிறகொருக்கா எழுதிறன்.

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: சயந்தன்

இரணைமடு குளம் இரு குறிப்புக்கள்

இதன் கிழக்குப் பக்கமாகத் தான் 'அமெரிக்க ரக சரக்கு விமானங்கள் வந்து இறங்கக் கூடியளவிலான விசாலமான புலிகளின் விமான ஓடுபாதை இருக்கிறது என்று இலங்கை அரசு கூறுகிறது.

புலிகளுக்கும் அரசுக்கும் பேச்சு வார்த்தை ஆரம்பமான காலத்தில் புpகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் இருந்து மாலைதீவு ஊடாக கடல் விமானத்தில் இரணைமடு நீர்த்தேக்கத்தில் தான் வந்து இறங்கினார்.

15.26 6.3.2005
 
ஓமோம். அது இப்ப எங்கட சர்வதேச விமான நிலையம். நான் சொல்லிறது பாலா அண்ண வந்து இறங்கின இடத்த. அப்ப அந்தப் பகுதியில தண்ணிக்க நிண்ட மரங்கள வெட்டியெடுக்க பெடியள் சரியாக் கஸ்டப்பட்டவை. இப்ப தண்ணி வத்திநிக்கேக்கயெண்டா சுகமா வெட்டியிருக்கலாம்.
-வன்னியன்-
 
இரணைமடுக்குளம் வன்னியின் வளம்.அதனைப்பற்றிய உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
 
எழுதிக்கொள்வது: seelan

//இப்ப தண்ணி வத்திநிக்கேக்கயெண்டா சுகமா வெட்டியிருக்கலாம்.
//
தண்ணி வத்தினாப் பிறகு மரத்தை வெட்ட இலகு தான்.. ஆனால் அதுக்குப் பிறகு கடல் விமானம் எதிலை வந்து இறங்கிறது... ? ஹிஹி ஹி...

20.31 6.3.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]