Monday, July 10, 2006

மூன்று நினைவு கூரல்கள்

வயிறெரிந்து வெந்ததும், பகைவிரட்டி வென்றதும்


நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.

1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.

ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.

ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.

எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.

எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.

(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)

மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.

மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு நினைவுநாள் நேற்று.

***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.

“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.

அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
***********************************************

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் நூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.





பாடல் கேட்க முடியாவிட்டால் இங்கே தரவிறக்கிக் கேளுங்கள்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.

Labels: , , , , ,


Comments:
நவாலிப்படுகொலைகள் ஈழவரலாற்றில் மறக்கமுடியாத நாள். இந்தக்காலகட்ட்டத்தில் கொழும்பில் -நான் வசித்துக்கொண்டிருந்தபோது- இந்த விடயம் குறித்து அவ்வளவாய் விவாதிக்கப்பட்டதாய் நினைவினில்லை என்கின்றபோது வெளி உலகம் இதையெல்லாம் அக்கறையுடன் காது கொடுத்து கேட்டிருக்குமா என்ன :-(((?
.....
சண்டிலிப்பாயில் அகதியாய் இடம்பெயர்ந்து பிறகு கொழும்புக்கு வந்திருந்த உறவினர் ஒருவர் மூலந்தான் 'புலிப்பாய்ச்சல்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். திருப்பி அடித்து, கைப்பற்றிய இடங்களை துரிதமாய் மீளக்கைப்பற்றிய ஓயாத அலைகளுக்கு எல்லாம் முன்னோடியாய் இந்தத் தாக்குதலை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். அளவெட்டி சண்டிலிப்பாய் பகுதிகளில் ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள் பற்றி, 'முன்னேறிப் பாய்வதென்ன அம்மா' என்ற பாடல் வந்தாயும் நினைவுண்டு (நீங்கள் இணைத்துள்ள பாடல்களை தற்சமயம் கேட்க முடியாது இருக்கின்றது. நீங்களும் இந்தப்பாடலை பதிவில் சேர்த்திருக்கக் கூடும்). இந்த 'புலிப்பாய்சல்' நிகழ்வில்தான் படைப்பாளி அமரதாஸும் பங்குபற்றி காலில் காயமடைந்திருந்தார்.
 
டி.சே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இன்றும்கூட 140 பேர் ஒரேயடியாகக் கொல்லப்பட்டார்கள் என்றால் நம்ப ஆட்களில்லை. ஆனால் எமக்கு இது நேரடி அனுபவம்.

புலிப்பாய்ச்சல் என்ற முறியடிப்புச் சமர் சரியான வேவுத் தகவல்கள்கூட இல்லாமல் அவசரமாக நடத்தப்பட்ட ஓர் உடனடி நடவடிக்கை. வழக்கமாக நிலவு வெளிச்சமுள்ள காலங்களில் புலிகள் எந்த வலிந்த தாக்குதலையும் செய்வதில்லை. (இது இரவுத்தாக்குதல் தொடுக்கும் எல்லோருக்கும் பொருந்தும்) ஆனாலும் அதைக்கூடப் பொருட்படுத்தாது அவ்வெதிர்ப்பு நடவடிக்கை நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் முழுஅளவில் ஒரு சமரைச் செய்ய புலிகள் இயக்கம் தயாராக இருக்கவில்லை. மணலாற்றில் பாரிய ஒரு சமருக்கான ஆயத்தங்களில் இருந்தது இயக்கம்.
வன்னிசென்ற அணிகளைக்கூட மீளப்பெற்றுத்தான் முறியடிப்புச் சமரை நடத்தினர்.
இந்த முறியடிப்பு மூலம் புலிகள் வன்னியில் தங்களை நிலைப்படுத்த போதிய காலஅவகாசம் கிடைத்தது எனலாம்.
 
முன்னேறிப்பாய்வதென்ன அம்மா?
நீ பின்னாலே ஓடுவதேன் சும்மா?

என்ற பாடல் அந்த நேரத்தில் மிகப்பிரபலம்.
பொப்பிசைப் பாடல்போன்று இருக்கும் இப்பாடலைப் பாடியவர் போராளி லோறன்ஸ்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]