Wednesday, July 27, 2005

வவுனியா பேராளர் பிரகடனம்.

இலங்கையில் மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்கிற சர்வதேச கோட்பாடுகளில் அடிப்படையில் தமிழர்கள் நடாத்துகிற இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று வவுனியா பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.


தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வவுனியா பிரகடன விவரம்:

தென்னிலங்கையில் இன்று பயங்கரமான சிங்கள பௌத்த பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. இது தமிழ்பேசும் மக்களின் சனநாயக வழியில் அமைந்த எந்தவொரு தீர்வுக்குமான கதவுகளையும் முற்றாக மூடியுள்ளது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ்பேசும் மக்களாகிய நாம் இன்று அடைந்துள்ள அவலமானதும் ஆபத்தானதுமான நிலையை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தையும் அங்கீகாரத்தையும் கோருகின்றோம்.

தமிழ்பேசும் மக்களாகிய நாம் இலங்கையினை ஐரோப்பியர் ஆக்கிரமிக்க முன்னர் தனியரசாக இருந்து வந்துள்ளோம். 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கையில் ஒற்றையாட்சி முறையைப் புகுத்தியபோது தமிழர் தாயகம் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டது.

அப்பொழுது அது தன் இறைமையை இழந்ததையும், அதன்பின் 1948 இல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர் வெளியேறியபோது தமிழ்பேசும் மக்களின் இறைமையை எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்களவரிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு சிங்களச் சமூகம் முறையற்ற வகையில் பெற்றுக்கொண்ட இறைமையின் மூலம் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி மிக அநாகரிகமான முறையில் தமிழ்பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். குடியுரிமை சட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தனிச்சிங்கள சட்டத்தின் மூலம் மொழியுரிமையும், வேலைவாய்ப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.

கல்வித்தரப்படுத்தல் சட்டம் மூலம் கல்வி உரிமை மறுக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பன மூலம் முழு மனித உரிமையும் மறுக்கப்பட்டது.

எமது பாரம்பரிய வாழ்விடங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக நிலச் சூறையாடலுக்குட்பட்டு எமது குடித்தொகைப் பரம்பல் முற்றாகச் சிதைக்கப்பட்டது.

இவ்வாறாகத் தமிழ்பேசும் மக்களாகிய எமது வாழ்வுரிமை பறிக்கப்பட்டது.

சட்டங்கள் மட்டுமன்றி இலங்கையின் அரசியல் யாப்புக்களுமே இனவாத ஒடுக்குமுறைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டன.

சோல்பரி ஆணைக்குழுவின் அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட 29 ஆவது பிரிவு பின்னர் 72 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறிலங்கா சோசலிச சனநாயகக் குடியரசு யாப்பின் மூலம் நீக்கப்பட்டது.

இந்த யாப்பில் பௌத்த மதம் அரசாங்க மதமாக்கப்பட்டு இன ஒடுக்குமுறைக்கான யாப்பு வடிவமாக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பிலும் இது மேலும் தீவிரமாக்கப்பட்டது. எனவே நீதி வழங்கப்பட வேண்டிய அரசியல் யாப்பு அநீதியின் உறைவிடமானது.

இத்தகைய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தமிழ்பேசும் மக்களின் அப்போதைய அரசியல் தலைமை அங்கீகரிக்கப்பட்ட நாகரீகமான அரசியல் வழிமுறைகளையும் மென்முறைப் போராட்ட வடிவங்களையும் கைக்கொண்டது.

அவற்றினைத் தணிவிக்கும் முகமாகச் சிங்கள ஆட்சியாளர்கள் ஒப்பந்தங்கள் செய்வதையும் பின் அவற்றினைக் கிழித்தெறிவதையும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

1957 ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தையும்

1965 ஆம் ஆண்டு டட்லி - செல்வா உடன்படிக்கையையும்

இதற்குச் சான்றாக வைக்கின்றோம்.

இவ்வாறாக மென்முறைப் போராட்ட வடிவங்களைக் கைக்கொண்ட பொழுது எம்மக்கள் மீது மிக மோசமாக வன்முறைகள், இனப்படுகொலைகள், பாலியல் கொடூரங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் 70 களின் முற்பகுதியில் ஆயுதம் தாங்கிய தமிழ் மக்களின் தற்காப்புக்கும் விடுதலைக்குமான போராட்டத்துக்கு தமிழர் தரப்பு நிர்ப்பந்திக்கப்படுகிறது.

எனவே, அமைதிவழியில் அரசியல் தீர்வுகளை எட்டுவது இயலாது என்பதை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைகள், 1976ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

பின்னர் அரசியல் அரங்கில் அதற்கான மக்கள் ஆணையை 1977 ஆம் அண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டனர்.

ஆயுதம் தாங்கி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் தமிழ் மண்ணையும் தமிழ்பேசும் மக்களையும் ஆழமாக நேசிக்கும் ஆற்றல் மிகுந்த சிறந்த ஒரு தேசியத் தலைவரையும் ஒரு மரபுவழிப் போரை நடத்தவல்ல படையணிகளையும் கண்டு நிமிர்ந்தெழுந்தோம்.

இதன்மூலம் இலங்கையில் ஒரு தனித்தேசிய இனமாகத் தமிழ்மக்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்னும் உண்மையை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தோம்.

இப்போராட்ட காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பும் இன அழிப்பும் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டன.

கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சுகள், எறிகணை வீச்சுக்கள், ஆகியன பாடசாலைகளிலும் மக்கள் குடியிருப்புக்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் அடிக்கடி நடத்தப்பட்டு எமது மக்கள் பச்சிளம் பாலகர் முதல் முதியோர் வரை கோரமாகப் பலியெடுக்கப்பட்டனர்.

பலவிதமான இராணுவ நடவடிக்கைகளாலும் சொந்த மண்ணிலிருந்து தமிழ்மக்கள் இடம்பெயர்க்கப்பட்டு, அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டனர். இத்தகைய அரச பயங்கரவாதக் கொடூரங்களையெல்லாம் 'அரசு' என்ற முகத்திரை கொண்டு சர்வதேச சமூகத்திற்கு முன் சிங்கள பௌத்த பேரினவாதம் மூடி மறைத்தது.

ஆயினும், எமது விடுதலைப் போராட்டம் ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றிகளைக் குவித்தது. இந்த வெற்றிகளின் பின்னால் தமிழ்மக்கள் அனைவரும் பொங்கு தமிழர்களாய் கிளர்ந்தெழுந்து தேசிய விடுதலைப்போருக்குத் தோள்கொடுத்தனர்.

இந்த வரலாற்றுப் போக்கில் தமிழர் தாயகத்தில் தமிழ்பேசும் மக்களுக்கு என்றொரு நடைமுறை அரசுக்கான கட்டுமானங்கள் நேர்த்தியான முறையில் கட்டியெழுப்பப்படுகின்றன.

இந்நிலையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை யுத்தத்தினால் வெல்லமுடியாது என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்து கொண்டது. சமகாலத்தில் சர்வதேச சமூகம் இவ் இன முரண்பாட்டை அமைதிவழியில் தீர்ப்பதற்கான வாய்ப்பை எமது தேசியத் தலைமையிடம் கோரியது.

எமது தேசியத் தலைமை தாமாக முன்வந்து யுத்தநிறுத்தம் செய்துகொண்டது.

வேறு வழியின்றியும் சர்வதேச அழுத்தம் காரணமாகவும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தநிறுத்த உடன்பாடு செய்ய முன்வந்தது.

அதன்படி 22.02.2002 ஆம் நாளில் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும் கையொப்பமிட்டு ஒரு யுத்தநிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடாத்தப்பட்டன. இப்பேச்சுக்களின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களைச் சிங்கள அரசு நடைமுறைப்படுத்தத் தவறியது. இதனால் நேரடிப் பேச்சுக்கள் நின்றுபோக இடைக்கால யோசனையாக இடைக் காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு முன் வைக்கப்பட்டது.

இதுபற்றியும் தொடர்ந்து பேச சிறிலங்கா அரசு முன்வராததால் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்வதற்கான சாத்தியங்கள் முற்றாக அருகிப்போயின.

இவ்வாறாக கடந்த மூன்றரை ஆண்டுகளாய் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வுக்கான எதிர்பார்ப்புகள் யாவும் பொய்த்துப் போய்விட்டன. சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் வளம் நிறைந்த எமது சொந்த நிலங்களும் செல்வம் கொழிக்கும் எமது கடல் வளமும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ளது.

இறுதியாக உலகை உலுக்கிய ஆழிப்பேரலைப் பேரழிவுக்குப் பின்னரும் சிங்கள மேலாதிக்கப் போக்கு மாறவில்லை என்பதை ஆழிப்பேரலை நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு நேர்ந்த விபத்து நிரூபித்தது.

மனிதப் பேரழிவு அவலங்களால்கூட சிங்கள பௌத்த பேரினவாத வெறிக்குள் இறுகிப்போயிருக்கும் நெஞ்சுகளை மாற்றமுடியாது என்பதனை உலகம் கண்டு கொண்டுள்ளது.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பதவிக்கான போட்டியில் சிங்கள அதிகார வர்க்கம் முற்றாகச் சிக்கியுள்ளது. மீண்டும் ஒரு யுத்தத்தின் மூலம் தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதற்கான படைக்கலப் பெருக்க நடவடிக்கைகளையும் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் அவர்கள் செய்து வருகின்றார்கள்.

இவை யாவும் சமாதான நடைமுறைக்கான சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான எந்தவொரு தீர்வையும் முன்னெடுக்க மாட்டார்கள் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கின்றோம்.

இந்த உண்மைகளை சர்வதேச சமூகமும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கால நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொண்டிருக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

இந்த உண்மை நிலையின் காரணத்தினால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்களாகச் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

எனவே எமது தாயக நிலத்தையும் கடலையும் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவம் எமது மண்ணை, கடலை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என்றும்,

எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலைவிதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும்,

அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் இவ் எழுச்சிப் பிரகடனத்தின் மூலம் முன்வைக்கும்

அதேவேளை,

தமிழ்பேசும் மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமையையும் சுதந்திர வாழ்வையும் ஏற்றுக்கொண்டு எமது மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்பவற்றின் அடிப்படையில் எம்மையும் எமது இறைமைக்கான போராட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்தை நாம் கோருகின்றோம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையில் தமிழீழத் தனி அரசே தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் வவுனியா பிரகடனமோ தமிழீழத் தனிஅரசு கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழத் தேசிய இனம் நடத்துகிற தமிழர்களின் இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்து உரிய நீதி வழங்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு பேரெழுச்சியோடு தொடங்கியது!!

வவுனியா மாநாட்டைச் சீர்குலைக்க சிங்களப் படை சதி: வவுனியாவில் குண்டுவெடிப்பு!!

சர்வதேச சமூகமே தலையிடு அல்லது போரின் மூலம் உரிமையை வெல்வோம்: ஜோசப் ஆண்டகை
விழாப்படங்களைக் காண



மீண்டும் ஓர் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டால் அது இந்த நாடு முழுவதையும் அதிரச்செய்யும் - பெ.சந்திரசேகரன்

பேராளர் மாநாட்டின் சகல நோக்கங்களும் வெற்றியடைய தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து

வவுனியா பேராளர் மாநாட்டில் பெருந்திரளானோர் பங்கேற்பு
நன்றி: புதினம், சங்கதி.

Labels: , ,


Comments:
பிரகடனத்தை வலைப்பதிவில் வெளியிட்டமைக்கு நன்றிகள்!
 
வாசித்ததுக்கும் கருத்திட்டதுக்கும் நன்றி தங்கமணி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]