Monday, July 18, 2005

ஓயாத அலைகள்: -வெற்றிகளின் ஆணிவேர்...

ஓயாத அலைகள் வெற்றிநாள்.

இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின் பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.

ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.

இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்து. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.

கடலில் ரணவிறு என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முலலைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.

அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடிhயமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.

எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.

தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை; தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.

அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)

இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.

இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.

முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த வருட சுனாமி அனர்த்தத்தின்போது.

இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.

ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.

முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.

--------------------------------------------------------
இதையொட்டிய சம்பவமொன்று:

முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்;ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).


கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.

கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.

Labels: , , , ,


Comments:
னல்ல விவரமா எழிதியிருக்கு.
இன்னும் விரிவா எழதுங்கோ.
sasitharan.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]