Sunday, June 10, 2007

தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.

இன்று தாண்டிக்குளச் சண்டையின் வெற்றிநாள்.

கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது.

13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.

முன்னணிப்பகுதியான ஓமந்தையை அப்படியே விட்டுவிட்டு, பின்தளமான தாண்டிக்குளத்தின் மீது புலிகள் புலிகள் தாக்குதலை நடத்தினர். ஓரிரவு மட்டுமே நடத்தப்பட்ட இவ்வதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதோடு, படையினரில் வினியோகத்துக்கான ஆயுதக்களஞ்சியமொன்று வெடித்துச் சிதறியிருந்தது. புலிகளால் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அரசவான்படையின் MI-25 தாக்குதல் உலங்குவானூர்தியொன்று புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதல் மூலம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அதன் தொடக்கத்தின்போதே ஆட்டம்காணத் தொடங்கியது. மூர்க்கமான முன்னேற்ற முயற்சிகள் சிறிதுகாலம் பிற்போடப்பட்டன. அதன்பின் சீரான இடைவெளிகளில் அவ்வப்போது ஜெயசிக்குறு இராணுவத்தினர் மீது புலிகளின் வலிந்த அதிரடித்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதலில் மூன்று கரும்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். புலிகளால் உரிமைகோரப்பட்டதன் அடிப்படையில் முதலாவது பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி இத்தாக்குதலில்தான் வீரச்சாவடைந்தார். அவருடனிணைந்து மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

கரும்புலிகள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலை 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் கேட்கலாம்.
திருவுடலில் வெடிசுமந்து

இத்தாக்குதலில் அம்மூன்று கரும்புலிகளோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.
கரும்புலிகளின் புகைப்படங்கள்




படங்கள்: அருசு்சுனா

Labels: , , , , ,


Comments:
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]