Wednesday, March 28, 2007

பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு

26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.

குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.

குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.

சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.

ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.

தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.

பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படங்கள் அருச்சுனா

Labels: , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]