Tuesday, August 16, 2005

அங்கயற்கண்ணி

உங்களுக்கு அங்கயற்கண்ணியைத் தெரியுமா?
அவள் ஒரு பெண்.
யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமொன்றிற் பிறந்தவள்.
புஸ்பகலா துரைசிங்கம் என்ற இயற்பெயருடையவள்.

பின்னொருநாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிணைந்து அங்கயற்கண்ணி ஆனாள்.
16.08.1994 அன்று காங்கேசன்துறைமுகத்தில் எதிரியின் பாரியக் கட்டளைக் கப்பலொன்றைத் தகர்த்து வீரச்சாவடைந்தாள்.
'அபிதா' என்ற பெயருடைய இக்கப்பல் முன்னரும் ஒருதடவை கரும்புலித்தாக்குதலுக்குள்ளாகி சேதங்களுடன் தப்பியிருந்தது. இம்முறை முற்றாக மூழ்கிவிட்டது.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் கடற்கரும்புலி இவளே.
கப்டன் அங்கயற்கண்ணி.
நீண்டதூர நீந்திச்சென்று கடற்கலமொன்றைத் தகர்த்து, சாதித்தாள்.
பெண்களின் போராட்டப் பங்களிப்பின் இன்னொரு பரிமாணம்தான் அவள்.
இன்றைய நாளில் அவளை நினைவுகூர்வோம்.
அங்கயற்கண்ணி பற்றிய மேலதிக விவரங்களுக்கு
----------------------------------------

வெற்றித்திலகமிட்டு கணவனையும் பிள்ளைகளையும் போருக்கு அனுப்பிய பெண்களையே காலம் முழுவதும் பேசியநாம்,
அங்கயற்கண்ணிகளையும்
நளாயினிகளையும்
யாழினிகளையும்
மாலதிகளையும்
பூபதியையும் பேசுவதில்லை.
---------------------------------------

நன்றி:- அருச்சுனா இணையத்தளம்.

Labels: , ,


Comments:
வன்னியன் நினைவூட்டலுக்கு நன்றி. தற்கொலைத்தாக்குதல்கள் குறித்து இன்றைய பொழுதில் வேறுவிதமான கருத்துக்கள் உண்டெனினும் (அதுகூட இல்லாவிட்டால் மேலைத்தேய நாடொன்றில் வாழ்வதில் ஒரு அர்த்தமும் இல்லை என்பதாகிவிடும் :-)). கிளாலிக்கடல் தாண்டுகையில் இலங்கை நேவி தாக்காமல் பாதுகாப்பு வழங்கியது கரும்புலிகளின் படகு என்பதை மறந்து, உயிர் தப்பி சொகுசான இடத்தில் இருந்து இனி விமர்சனங்களை வைக்கலாம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

ஆகக்குறைந்தது கரும்புலிகளய் போகின்றவர்கள், 'மூளைச்சலவை செய்யப்பட்டு காபாலம் நீக்கி வெடிமருந்து நிரப்பி' அனுப்பப்படும் இயந்திரங்களாய் இருக்கின்றவர்கள் என்று எழுதப்படும் கவிதைகளை/கதைகளையாவது மறுப்பதற்கான காரணங்கள் என்னிடத்தில் உண்டு என்று நம்புகின்றேன்.

அங்கயற்கண்ணி, தனது இலக்குத் தேடி அலையும்போது, தனது நண்பிகளிடம் கூறுவாராம். நான் கப்ப்லை அடிக்கும்போது நல்லூர் திருவிழா நடக்கின்ற காலமாய் இருக்கவேண்டும். எனென்றால் அப்பத்தான் அம்மா கடலை விற்று காசு வைச்சிருப்பா. நீங்கள் என்னுடைய இறப்புச் செய்தி கொண்டுபோகும்போது அவாவால் உங்களுக்கு ஒழுங்காய் சோறு சமைத்து சாப்பாடு பரிமாற முடியும் என்று (அவ்வளவு கடும் வறுமை அவரின் குடும்பத்தில்). இன்னும் பலாலி விமானத்தளத் தாக்குதலுக்கு கரும்புலியாய் சென்ற ஒருவன், இறுதிப் பொருளாய் தனது காதலிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துத் தான் போயிருக்கின்றான்.

இது தவிர, எழுத்தில் பதிவு செய்யப்படாமல் வாய்மொழி மூலம் கேட்ட கதைகள் பலவும் இருக்கிறது. அதில் ஒன்று, அரச கட்டுப்பாடுப் பகுதியில் தனது இலக்குக்காய் காத்திருக்கையில், (இலக்குக்காய் காத்திருந்த காலத்தில் பழக்கமான) சிறுமியும் அந்தபோழுதில் வந்துவிட, இலக்குத் தவறினாலும் பரவாயில்லை என்று சிறுமியோடு கதைத்து சற்றுத் தொலைவில் இருந்த கடைக்குப் போய் தனக்கு சாமான் வாங்கி வர அனுப்பிவிட்டுதான் இலக்கோடு வெடித்துச் சிதறியிருக்கின்றான். பிறகு அந்தச்சிறுமி, தன்னைச் சாகாமல் காப்பாற்றிய அந்த அண்ணா இறந்த நிலத்தின் மண்ணைப் பத்திரப்படுத்தி, இந்தச் 'சமாதான' காலத்தில் வன்னியில் அதைக்கொண்டுவந்து கொடுத்து அழுதுவிட்டுதான் போயிருக்கின்றது.

இந்த 'வெடி மருந்து இயந்திரங்களுக்கும்' சாகும் இறுதிக் கணத்திலும் கொஞ்சம் மனிதாபிமானம் இருந்திருக்கின்றது என்பதைச் சுட்டத்தான் இந்த ஒரு பின்னூட்டம். நன்றி.
 
லேசர் கைடட் ஏவுகணைகளோ, ஆளில்லா விமானங்களோ அல்லது F16 பயன்படுத்தியோ நீங்கள் அப்பாவிகளைக் கொன்றிருந்தால் அது யுத்த தர்மம். மனித உரிமை. வியாபாரத்துக்கு வியாபாரம்...

-பொன்னார் மேனியன்
 
டி.சே.
நன்றி.
'இன்னொரு போர்முகம்' என்று இப்படி 'வெளிவராத' கரும்புலிகளைப்பற்றி எழுதப்பட்ட சிறு புத்தகமொன்றிருக்கிறது. அதில் இப்படி எதிரியின் பகுதிக்குள் தாக்குதல் நடத்திய சிலரைப்பற்றிய பதிவுகள் உள்ளன. ஏனோ தெரியவில்லை பிறகு அவர்களைப்பற்றி எழுதுவது நின்றுவிட்டது. வெளிச்சம் பவளமலரில் பொட்டம்மான் எழுதிய இரு நிகழ்வுகளை வாசித்திருக்கிறீர்களா? தந்தையொருவரைப்பற்றியும் தாயொருத்தியைப் பற்றியும் எழுதப்பட்ட உண்மைச்சம்பவங்கள்.

மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்று ஒரு சொல்லில் எங்கோ பதுங்கியிருந்துகொண்டு சொல்பவர்களுக்குப் பதில்சொல்ல ஏதுமில்லை. ஆண்டுக்கணக்கில் எங்களோடே வாழ்ந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து போனவர்கள். எங்களைவிட எவனுக்கு அவர்களைப்பற்றி அதிகம் தெரியும்?
பெற்றவர்க்குத் தெரியாததை, கூடப்பிறந்தவர்க்குத் தெரியாததை எங்கோ இருந்துகொண்டு சிலர் சொல்கிறார்கள்.

மதத் தீவிரவாதமாகப் பார்க்கப்பட்டுவந்த தற்கொலைத்தாக்குதல்கள் ஒரு இனவிடுதலைக்கான வடிவமாகப் பார்க்கப்படத் தொடங்கியது ஈழப்போராட்டத்தினால்தான்.
பின்னூட்டத்துக்கு நன்றி.

பொன்னார் மேனியன்,
'கருத்துக்கு' நன்றி.
நீங்கள் சொல்பவையெல்லாம் எங்களிடம் கிடைக்கும்போது எங்கள் தரப்பில் அநியாய உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]