Thursday, December 22, 2005

எதை வைத்துப் பேச்சுவார்த்தை?

இலங்கை இனச்சிக்கலில் அமைதிப் பேச்சுக்கள் மட்டிலான இன்றைய தலையாய சிக்கல்கள் என்னவென்றால்;
எவ்விடயத்தைப் பற்றிப் பேசுவது, மற்றும் எங்குப் பேசுவது?
(பேச்சுக்கள் தொடங்குவதற்குள்ள தடைகள் பற்றி இங்கே சொல்லப்படவில்லை. பேச்சு என்று வரும்போது இருதரப்புமே அது பற்றிச் சொல்லும் கருத்துக்கள்தான் இவைகள்)

இவற்றில் எங்குப் பேசுவது என்பதை வைத்துப் பாரிய அரசியல் விளையாட்டு தற்போது நடந்து வருகிறது. ஆசியநாடொன்றில் தான் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டுமென சிங்கள அரசுதரப்பு விடாப்பிடியாக நிற்க, மறுபக்கத்தில் புலிகள், ஐரோப்பிய நாடொன்றில்தான் பேச்சுக்கள் - குறிப்பாக நோர்வேயில் முதற்கட்டப் பேச்சு நடத்தப்பட வேண்டுமென நிற்கின்றனர். இப்போதுவரை, இருதரப்பும் மீளமீள தமது நிலைப்பாட்டை இன்னுமின்னும் உறுதியாக்கி வருகின்றனர்.

இப்போது நாம் "எதைப்பற்றிப் பேசுவது" என்ற சிக்கலைச் சற்றுப் பார்ப்போம். பேச்சுக்களில் முதற்கட்டமாகவும் அவசரமாகவும் ஆராயவேண்டியதாக இருதரப்புமே சொல்லிக்கொள்வது ஒன்றைப்பற்றித் தான். அது 2002 இன் தொடக்கத்தில் இருதரப்புக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட, இப்போதும் நடைமுறையில் இருப்பதாக நம்பப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றியது. முதற்கட்டப்பேச்சு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பற்றியதாகவே இருக்கவேண்டுமென இருதரப்பும் கூறுகின்றன. அதுவும் உடனடியாக அது பற்றிப்பேச வேண்டுமெனவும் கூறுகின்றன. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டில் எதைப்பற்றிப்பேசுவது என்பதில்தான் இருதரப்புமே முரணாக நிற்கின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசதரப்பும், மாற்றத்தேவையில்லை, அதை அமுல்படுத்துவது பற்றிப்பேச வேண்டுமென புலிகள் தரப்பும் சொல்லி வருகின்றன.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசதரப்பு ஏன் விடாப்பிடியாக நிற்கிறது? அது மாற்றப்படத் தேவையில்லை, அமுல்படுத்தப்பட வேண்டுமென புலிகள் தரப்பு ஏன் விடாப்பிடியாக நிற்கிறது?

இருதரப்புக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தைப் பார்த்தால், ஒப்பீட்டளவில் புலிகளுக்கு அதிக சாதகங்களும் அரச தரப்புக்கு அதிக பாதகங்களும் உள்ளதாகத் தெரியும். முக்கியமான ஒரு சரத்து, மக்கள் வாழ்விடங்கள், பாடசாலைகள், கோயில்களில் இருந்து படைநிலைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்பது. இன்றுவரை அது முழுதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரைவாசியாவது நடைமுறைப்படுத்தப்பட்டதா எனவும் தெரியவில்லை. அதாவது கடந்த நான்கு வருடங்களாக புரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய பகுதியொன்று படைத்தரப்பால் முழுதாக நிறைவேற்றப்படாமலுள்ளது. விலக்கிக் கொள்ளப்பட்ட படைநிலைகள்கூட மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளன. மீண்டும் பாடசாலை வளவுகளுக்குள் காவலரண்கள் வந்துகொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் வலிகாமத்தில் பெரும்பகுதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் தான். நிறையக் கோயில்களும் பாடசாலைகளும் இராணுவ முகாம்களாகவே உள்ளன. யாழ்க் குடாநாட்டுக்குள்ளேயே ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் இடம்பெயர்ந்தவர்களாக 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
அரச திணைக்களத் தகவற்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் 24178 குடும்பங்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தைவிட ஏனைய பிற மாவட்டங்களிலும் இதே நிலைமைதான். வவுனியாவில் 3114 குடும்பத்தினர் உள்மாவட்டத்திலேயே இடம்பெயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மன்னார் மாவட்டத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி படையினர் விலகவேண்டடிய 213 பொதுவிடங்கள் இன்னும் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்றன. கிழக்கிலங்கையிலும் இதுதான் நிலைமை.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசதரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
கிட்டத்தட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு முன்பு சிங்கள அரசபடைகள் இருந்த நிலைக்கு (பின்பு புலிகளால் கைப்பற்றப்பட்டவைகளை விட) இராணுவம் செல்ல நேரிடும். இவ்விடயம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோதே பலராற் சொல்லப்பட்டது.

ஆனால் நடைமுறைப்படுத்தப்படாத இந்த நடைமுறை மட்டில் நடுவன் நாடும் மற்றவர்களும் மென்போக்கையே கடைப்பிடித்தனர். யாழ் மாநகர சபைப்பகுதியை விட்டு இராணுவத்தை வெளியேறச் சொல்லி இடையிடையே அழுத்தம் கொடுத்த போது, முன்னாள் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்கள் சொன்னார்:

"எழும்பு எழும்பெண்டா அவங்களும் எங்கதான் போறது? உப்பிடிக் கதைச்சா ஆனையிறவையெல்லாம் நாங்கள் அவங்களிட்ட திருப்பிக் குடுக்க வேண்டி வருமெல்லோ?"

வக்காலத்து வாங்கும் சிறந்த வக்கீல்த்தனமான வாதம் அவருடையது.
அடுத்து, பொருளாதாரத் தடை சம்பந்தமானது. ஒப்பந்தப்படி அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருளாதாரத்தடை முற்றாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஓரளவுக்கு வடக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் கிழக்கில் படைத்தரப்பால் இது சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு இன்னும் பொருளாதாரத்தடை நிலவுகிறது, அல்லது பொருட்கள் மட்டுப்படுத்தப்படுகிகின்றன. இடையிடையே அத்தியாவசியப்பொருட்களுக்குக்கூட தடைகள் விதிக்கப்படுவதும், பின் சிலநாட் போராட்டங்களின்பின் அனுமதிக்கப்படுவதும் வழமையாக இருந்தது. இதற்கு, வடக்குக் கிழக்குக்கு இடையிலான ஊடகங்களின் முக்கியத்துவ வேறுபாடும் முக்கிய காரணம். கண்காணிப்புக் குழுவும் பெரியளவுக்கு இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இவற்றைவிடவும், அரசபடைகளைவிட ஏனைய குழுக்களின் ஆயுதக்களைவு விடயத்திலும் பல சிக்கல்கள். போராளிகளின் அரசியற்பணியும் அவர்களின் பாதுகாப்பும் எனப் பல விசயங்களில் இப்போதும் சிக்கல்.
பயங்கரவாதத் தடைச்சட்டமும், அதையொட்டிய கைதுகளும்கூட ஒப்பந்தத்தில் கூறப்பட்ட சரத்தை மீறும் செயல்களே. மீன்பிடித்தொழில் மீதான கட்டுப்பாட்டுகள், தடைகள் என்பனவும் (ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இடங்களைவிடவும் இராணுவம் பாரியதொரு அழுத்தத்தை மீன்பிடித்தொழில் மீது கொண்டுள்ளது) புரிந்துணர்வு ஒப்பந்த மீறலே.

உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்துச் சரத்துக்களும் நடைமுறைப்படுத்தப்படும்போது புலிகளின் கை ஓங்கும் என்பது வெளிப்படை. இந்நிலையில் ஒப்பீட்டளவில் தமக்குச் சாதகமாகவும், அரசதரப்புக்குப் பாதகமாகவும் இருப்பதாகத் தாங்கள் கருதும் ஒப்பந்தத்தை மாற்றயமைக்கப் புலிகள் தயாரில்லை. மாறாக அதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசதரப்பை அழுத்துவதே அவர்களின் முக்கிய நோக்கம்.

மறுவளத்தில், தமக்குப் பாதகமாகவும் புலிகளுக்குச் சாதகமாகவும் இருப்பதாக தாங்களும் கருதும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதைவிட அதில் திருத்தங்கள் கொண்டுவரவே அரசதரப்பு முயல்கிறது.

சரி, இவ்வளவுதூரம் பாரதூரமான ஓர் ஒப்பந்தத்தில் அரசதரப்பு ஏன் கைச்சாத்திட வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பானது. அதற்கு அவ்வொப்பந்தம் உருவாக்கப்பட்ட காலத்தைக் கருத்திற்கொள்ள வேண்டும். அத்தோடு இரண்டு முக்கிய காரணங்களையும் கவனத்திற் கொள்ளலாம்.
இவை பற்றிய பதிவை அடுத்ததாக இடுகிறேன்.
--------------------------------------------

புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ் வடிவம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆங்கில வடிவம்.

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: சீலன்

தொடரட்டும் உங்கள் பதிவு.


21.54 23.12.2005
 
வன்னியன் அந்த இரண்டு விசயங்களையும் கெதியாக எழுதுங்கோ!ஏலவே வந்தபோது எதுவும் எழுத முடியவில்லை-கொஞ்சம் மப்பு.இப்போது படிக்கும்போது ஏதோ விசயமான கட்டுரையொன்றுக்கான அத்திவாரம்போலதாம் கிடக்கு.மிகுதியையும் படித்தால்தாம் 'நமது'எதிர்காலத்துக்கான தீர்வை எங்ஙனம் முன்வைத்தல்-பெறுதலென்று விவாதிக்க முடியும்.இத்தகைய தீர்வில் மக்களின் அடிப்படை வாழ்வு சீர் பெறுவதற்கு இராணுவம் தனது முகாம்களிலிருந்து வெளியேறித் தனது பழைய(1975 நிலைக்கு)நிலைக்குப் போய்விடணும்.இதன்மூலம் மக்கள் வாழ் சூழல் மிகவும் இயல்பு நிலையை அடையும்.இது அவசியமான பணி.இத்தகைய நிலைமையில்தாம் எந்த வகையான பேச்சு வார்த்தையும் வெற்றியளிக்கும்.
 
சிறிரங்கன்,
உங்களுக்கு நக்கல் நன்றாக கைவருகிறது.

தமிழ்மக்களுக்கான தீர்வு பற்றி நான் எதுவும் எழுதப்போவதில்லை. இராணுவம் 75 இன் முன்னான நிலைக்குத் திரும்பிப்போவதைப்பற்றி நான் ஏதும் சொல்லவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதையே அதற்குள்ளால் சொல்ல வந்தேன்.

ஆனால் நீங்களோ இன்னும் பலரோ, இராணுவம் முடங்குவதூடாக புலிப்பாசிசத்தின் பிடியில் தமிழ்மக்கள் போவார்கள் என்றும், அதற்காகவேனும் இராணுவம் பின்வாங்கக்கூடாது என்றுகூடச் சொல்லலாம். அல்லது இராணுவம், புலிகள் இருதரப்பையும் மக்களைவிட்டு மறைத்துவைத்து மக்களைச் சுயமாக எழுபதுகளுக்கு முன்பிருந்ததைப்போல சிங்கள அரசின்கீழ் இயல்பாக இயங்க விடாலாம் என்ற கருத்தையும் முன்வைக்கலாம். இன்னும் அதைத்தாண்டி, தமிழ்மக்களின் சுயமான புரட்சியமைத்தல் என்றோ, தமிழ் - சிங்களப் பாட்டாளிகளின் ஒன்றிணைந்த புரட்சியூடாக புதிய சிறிலங்காவை அமைத்தல் என்றோகூட இருக்கலாம்.

நான் எழுதப்போகும் (நீங்கள் ஆவலோடு காத்திருப்பதாகச் சொல்லும்) அந்த இரண்டு காரணங்கள்கூட உங்களுக்கு விருப்பமில்லாதவையாக இருக்கலாம். எனது எழுத்துக்கள் எந்த வாதத்தையும் தோற்றுவிக்காது. அப்படித் தோற்றுவிக்க அதில் எதுவுமில்லை. நீங்கள் எதிர்பார்ப்பதைப்போல் இது 'விசயமான' கட்டுரையன்று. ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டில் இருதரப்பும் இப்படி விடாப்பிடியாக நிற்கிறார்கள் என்பதைப் பற்றிய பதிவு மட்டுமே இது. உலகத்தாற் கண்டுகொள்ளாமலே விடப்பட்ட அரசதரப்பின் பாரிய மீறல் மீதான ஆதங்கமும் சேர்ந்துகொண்டது. அவ்வளவுதான். அதற்கு மேலில்லை.
எனினும் வாசித்துக் கருத்தெழுதியதுக்கு நன்றி.
 
எழுதிக்கொள்வது: theevu

இன்றைய நிலையில் எதை வைத்து பேச்சுவார்த்தை என்பதை விட எங்கே பேச்சு வார்த்தை என்பதே தடுக்குப்படும் விடயமாக உள்ளது..

என்னைப்பொறுத்தவரை சிங்களத்துடன் கதைக்க புலிகளுக்கு விடயம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன்.

எனினும் உங்கள் அடுத்த புகுதியையும் எதிர்பார்க்கிறேன்.அதற்கிடையில் இலங்கையில் சுழ்நிலை மாறாதிருக்கவேண்டும்

1.25 24.12.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]