Monday, April 18, 2005

அன்னை பூபதி

இன்று அன்னை பூபதியின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள். யார் அந்த அன்னை பூபதியென்று பலருக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெளிவிக்கும் நோக்கமும் எனக்கில்லை. அவரின் தியாகம் பற்றின மிக மேலோட்டமான பதிவே இது.

இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் குடிகொண்டிருந்த நேரம். விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலப்பகுதி. இந்த நேரத்தில் அன்னையர் முன்னணி எனும் அமைப்பு இந்திய இராணுவத்துக்கு எதிரான தமது சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன் உச்ச வடிவமாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடங்கினர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அந்தப்போராட்டம் ஆரம்பித்தது. உண்ணாவிரதம் இருந்தவர் அன்னை பூபதி எனப்படும் பூபதி கணபதிப்பிள்ளை.

அவர் வைத்த கோரிக்கைகள் இரண்டு.
1. இந்திய இராணுவம் உடனடியாய் யுத்தத்தை நிறுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து அவர் தனது உண்ணா நோன்பை 19.03.1988 அன்று ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக வேறும் சிலர் அப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இடையில் அவர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டார். பூபதியம்மாவுக்கும் மிரட்டல்களும் ஆசைகாட்டல்களும் வந்தன. எனினும் மனந்தளராது அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டம் நடத்தினார் அன்னை. உணவெதுவும் உட்கொள்ளாது தண்ணீர் மட்டுமே அருந்தி 31 நாட்களின் பின் 19.04.88 அன்று உயிர் நீத்தார் அன்னை. இந்திய அரசுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து இழக்கப்பட்ட இரண்டாவது உயிர் அது. ஏற்கெனவே திலீபன் பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாது இருந்து உயிர்நீத்திருந்தான்.

இப்போராட்டம் இந்திய அரசால் செவிமடுக்கப்படும் எனும் நம்பிக்கை இல்லாதிருந்தும்கூட (ஏற்கெனவே திலீபன் விசயத்தில் நடந்தது) போராட்டம் நடத்தப்பட்டது. ஈழத்தமிழர் போராட்டத்தில் ஆயுதரீதியில் மட்டுமன்று, அகிம்சையிலும் பெண்களின் சம பங்களிப்பு இதன் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. பொதுசனமாயிருந்து அன்னை செய்த போராட்டம் மிக முக்கியமானது; பெறுமதியானது. இந்நாளில் அத்தாயை நினைவு கூர்கிறோம்.

இந்த நாளையே தேசவிடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த நாட்டுப் பற்றாளர்களை நினைவுகூரும் நாளாகவும் நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாகிய இன்று அவர்களையும் நினைவுகூர்கிறோம்.

நாட்டுப்பற்றாளரின் சேவைகள் அளவிட முடியாதவை. பல சந்தர்ப்பங்களில் போராளிகளைவிடவும் சிக்கலானதும் ஆபத்தானதும் துயரமானதுமான வாழ்க்கையைக் கொண்டவர்கள். நிம்மதியற்ற எத்தனையோ இரவுகளைக் கழித்தவர்கள். உணவுகளற்ற பொழுதுகளைக் கடந்தவர்கள். எனினும் ஓயாது உழைத்தவர்கள். தான் மட்டுமன்றி தமது குடும்பத்தையும் துன்பத்தை எதிர்கொள்ள வைத்தவர்கள். சித்திரவதைகளை அனுபவித்தவர்கள். வெளிச்சொல்ல முடியாத பல தியாகங்களைப் புரிந்தவர்கள்.

ஒரு போராளி தன்னிடமிருக்கும் ஆயுதத்தை நம்பியிருப்பான். பிடிபடும்போது தற்கொலை செய்ய சயனைட்டை நம்பியிருப்பான். இறந்தாலும் அது அவனோடே போய்விடும். ஆனால் பொதுமகனாயிருக்கும் ஒருவனுக்கு இவையில்லை. மாறாக குடும்பம் இருந்தது. உழைக்க வேண்டியிருந்தது. இவற்றையும்தாண்டி போராட்டத்துக்குச் சேவை செய்தனர். போராளிகளுக்குப் பசியாற்றியவர்கள் இவர்கள். ஆயதங்கள் கொண்டுவந்து தந்தவர்கள் இவர்கள். காவலிருந்தவர்கள் இவர்கள். மருந்துகட்டியவர்கள் இவர்கள். கடல்கடந்து காயம் மாற்றியவர்கள் இவர்கள். தகவல்கள் தந்து களத்திலும் உதவியவர்கள் இவர்கள். ஆக அவர்களை மறக்க முடியாது.

ஆனால் இப்படியான நிறையப்பேரின் தகவல்கள் முழுவதுமாக இல்லாமலிருக்கும். ஆரம்ப கால நாட்டுப்பற்றாளர்களில் நிறையப் பேரின் விவரங்கள் தவற விடப்பட்டிருக்கும். பட்டியலிலில்லாத அந்தப் பற்றாளருக்கும் எமது வீரவணக்கம்.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: மகிழன்

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்


8.7 19.4.2005
 
எழுதிக்கொள்வது: vasi

undefined

11.7 19.4.2005
 
எழுதிக்கொள்வது: அருணன்

ஈழத்தமிழர் போராட்டத்தில் ஆயுதரீதியில் மட்டுமன்றுஇ அகிம்சையிலும் பெண்களின் சம பங்களிப்பு இதன் மூலம் நிலைநிறுத்தப்பட்டது.

என்ற வரிகள் இன்றைய காலகட்டத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.இனடறை மேற்குலக ஊடகங்கள் போதைப்பொருள் கடத்தியவனுக்கு கொடுக்கும் செய்திவிரிவாக்கமும் செய்திசேகரிப்பும் ஒரு போராட்ட இயக்கமான புலிகளுக்கோ அவர்களால் நிலைநாட்டப்பட்டுள்ள சாதனைகளுக்கோ அந்தப்போராட்டத்தின் சக்திக்கோ கொடுப்பதாக தெரியவில்லை.

ஆனால் ஐழப்போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்றும் சாதனைத்தாயே!





23.14 20.4.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]