Saturday, April 23, 2005

தீச்சுவாலை முறியடிப்புச் சமர்.

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப் படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.

அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓரு இராணுவ நகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில் ஆனையிறவு நோக்கி பயங்கர ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்த நிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி "அக்கினி கீல" அதாவது 'தீச்சுவாலை' என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. பல இராணுவ வல்லுநர்கள் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாள இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவு என்பது தான் அந்த திட்டம். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்த பகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர் கொண்ட அந்த சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் முழுமையாக அவர்களின் முழுக்காவலரணையும் அவர்களால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச் சூட்டு வலிமை அரச படைக்கும் வெளியுலகுக்கும் ஏன் தமிழ் மக்களுக்கும் கூட தெரிந்தது அந்தச் சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில் எந்த நேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்ட படி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளை விட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான். வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடு கொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டு போட்டு தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப் பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.

இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு தமது இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்து விட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன். பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரனும் அதனைச் சூழ கிடந்த ஏறத்தாள இருபது இராணுவ உடல்களும். தாம் முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அந்த பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. (இதுகளைப் பற்றி எழுத வெளிக்கிட்டா எக்கச் சக்கமா எழுதலாம்.) பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போ களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

அந்தச் சண்டை தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. இன்றைய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல். நாளை தீச்சுவாலை முறியயடிப்புச் சமர் ஆரம்பித்ததன் நான்காம் ஆண்டு நிறைவு. இந்த நேரத்தில் அம்முறியடிப்புச் சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: பதிவாளர்

//முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அந்த பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. (இதுகளைப் பற்றி எழுத வெளிக்கிட்டா எக்கச் சக்கமா எழுதலாம்.)//

விரிவாக எழுதுங்கள்

10.48 23.4.2005
 
எழுதிக்கொள்வது: Kulakaddan

வன்னியன் மிக நல்ல பதிவு. நிச்சயமாக அனைவரும் அறியவேண்டியதும் கூட.

17.18 23.4.2005
 
எழுதிக்கொள்வது: மதி கந்தசாமி

நல்ல பதிவு. பெண்களைப்பற்றியும் விரிவாக எழுதுங்கள் வன்னியன்

-மதி

11.29 23.4.2005
 
வன்னியன்,
இதை நல்ல பதிவென்று சொல்லக்கூட முடியுமா என்று தெரியவில்லை. எவ்வளவு பயங்கர அனுபவங்களிடையே எல்லாம் நீங்கள் வாழ்ந்திருக்கின்றீர்கள் (நான் போர்ப்புலத்தை விட்டு விலகி பத்துவருடங்கள் ஆகின்றன). இப்படியான பதிவுகள் விரிவாக எழுதப்படவேண்டும். லெப். கேணல் சுதந்திரா பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இவரைப் போலத்தான் இன்னொரு பெண் லீடர், சாவகச்சேரியைப் புலிகள் கைப்பற்றி பிறகு இராணுவம் திரும்பித் தாக்கிக் கைப்பற்றியபோது, என்னுடைய பிள்ளைகள் இதைப் பிடிக்கத்தான் இறந்துபோனார்கள். நான் சாகும்வரை இராணுவம் இதைப்பிடிக்கமாட்டேன் என்று புலிகளின் தலைமை பின்வாங்கச்சொன்னபோதும், செவிமடுக்காது சமர்க்களத்தில் நின்று மரணித்திருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஜெயசுக்குறுச் சமர்தான் பெண்களின் திறமையைத் தனித்துவமாய் முதன்முதலாய் வெளிப்படுத்தியதென்று வாசித்தவளவிலும், விதுஷா, மலைமகள் போன்றவர்களிடம் நேரில் கதைத்தளவிலும் அறிந்துகொண்டேன். தீச்சுவாலையில் multi barrel artillery (பல குழல் ஏவுகணை) மிக அதிகளவில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதும் என்றும் அதனால் புலிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதென்றும் அறிந்தேன். விபரம் சரியா?
 
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
டி.சே.! நீங்கள் சொன்ன பல்குழல் ஏவுகணை செலுத்தி பற்றி பல கதைகளுண்டு. அது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புலிகளால் தான் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் பயன்பாட்டின் பின்பேயே அரசபடைகள் அவற்றைக் கொள்வனவு செய்தன. ஏதோ அந்த ஆயுதங்கள் இல்லாததுதான் தமது தோல்விக்குக் காரணமென்று ஒரு கதையை விட்டார்கள். அதே போல் அந்த ஆயுதம் (40 குழல்களைக் கொண்டது. ஒரே நேரத்தில் 40 எறிகணைகளை சீரான இடைவெளிகளில் விழுந்து வெடிக்க வைக்கும். ஆனால் ஒரே நேரத்தில் 40ம் புறப்படாது. சில நொடிகள் வித்தியாசத்தில் புறப்படும் என்பது நானறிந்த தகவல்) பயன்பாட்டுக்கு வந்தபோதும் பயங்கரமான பிரச்சாரத்தைச் செய்தார்கள். இனி எல்லாம் முடிந்து விட்டது. புலிகளின் கதை அழிந்து விட்டது போன்ற பிரச்சாரம் அது. பொதுமக்களும் நன்றாக வெருண்டுதான் போனார்கள். ஆனால் பிரச்சாரப் படுத்திய அளவுக்கு போர்க்களத்தில் அவை சாதித்தவையா என்றால் இல்லையென்பது தான் பதிலாக அமையும். போராளிகளை இதுபற்றிக் கேட்ட போது, தாங்கள் ஆரம்பத்தில் இதை நினைத்துக் கவலைப்பட்டதாகவும், ஆனால் பெரியளவு தொல்லையை அவை தரவில்லையென்றும் சொன்னார்கள். ஆனால் ஓரிருமுறை அந்த எறிகணைத்தாக்குதலுக்குள் அகப்பட்ட சம்பவத்தை வைத்துப் பார்த்தால் உளரீதியாகப் பயப்படுத்துவதைத் தவிர பெரிதாக அது செய்யவில்லை. அது கூவிக் கொண்டு வரும் சத்தம் மிகப் பயங்கரமாக இருக்கும். ஒப்பீட்டளவில் சாதாரண ஆட்லறி எறிகணைகளைப் போல் சேதங்கள் ஏற்படுத்துவதில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பரவலாக பல எறிகணைகள் ஒரே நேரத்தில் விழுவதுதான் அதன் ஒரே சிறப்பு.

இவற்றால் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் புலிகளுக்கு பெரிய தொல்லையாக அமையவில்லை என்றுதான் அவர்களோடு கதைத்த அளவில் நான் புரிந்து கொண்டேன். ஆனால் தீச்சுவாலைச் சமரில் இராணுவத்தால் ஏராளமான அளவில் இது பயன்படத்தப் பட்டது என்பது உண்மையே. கண்டி வீதியில் கூட விழுந்திருந்தன. ஆனால் பாதையைத் தடை செய்யுமளவிற்கு இல்லை. ஒப்பீட்டளவில் இதன் விலை மிகமிக உயர்ந்தது. அக ஓரளவிற்கு மேல் இராணுவத்தால் அவற்றை ஏவ முடியாது என்பதும் உண்மை.
 
vanniyan

this is karupy

good man.

Saturday night, I am @ the party. just checking. keep writing

//பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது.\\
 
எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்

நல்ல பதிவு ஒண்ட செய்திருக்கிறீங்கள் வசந்தன். வாழ்த்துகள்.

மரணங்கள் மலிந்த பூமி என்று யாரோ சொன்ன ஞாபகம்.

எங்கள் மண்ணின் சோகத்தையே இன்னும் நாங்கள் அறிந்துகொள்ள நிறைய உண்டு என்பதை உணர்த்திய பதிவு.

16.19 24.4.2005
 
எழுதிக்கொள்வது: kulakaddan

வன்னியன் பாதிப்பு குறைவு என்று சொல்ல முடியபது. உதாரணம் சாவகச்சேரி கைதடி நுணாவில் மட்டுவில் நாவற்குழி என அனைத்து ஊர்களையும் நேரில் பார்த்தவன். பல்குழல் எறிகணைகள் சாவகச்சேரிக்கு ஏவப்படும் போது தலைக்கு மேலால் அவை கூவிச்செல்வதை கண்டவன். சாவகச்சேரியை கிரோசிமாவுடன் ஒப்பிட்டு பேசவைத்தது பல்குழல் வீச்சின் தாக்கம். போரியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வாஸ்தவமான உண்மை. ஆனால் தென்மராட்சியின் பனை தென்னை வீடுகள் என அனைத்தும் தரைமட்டமாக கரணம் பல்குழல் எறிகணைகள்.
அருணனின் பதிவும் சற்றே அதை தொட்டு செல்கிறது.

14.0 24.4.2005
 
குளக்காட்டான்!
நான் போர்க்களத்த வச்சுத்தான் மல்ரி பரலின்ர தாக்கத்தைப் பற்றிக் கதைச்சனான். டி.சே. அப்பிடித்தான் கேட்டார். அதோட வன்னியில சனத்திட்ட அதின்ர விளையாட்டுக்கள் குறைவு. மல்ரி பரல் தாக்கம் களத்துக்குப் போன ஆக்கள விட மற்றாக்களுக்குக் குறைவுதான். ஆனா நீங்கள் சொன்ன இடங்களெல்லாம் அதால சரியாத்தான் பாதிக்கப்பட்டிருக்கு. முகமாலைக்கு முதல் வாற இத்தாவில்ப் பகுதியப் பாத்தாத் தெரியும். தென்னையளில மல்ரிபரலின்ர கோரத்தாண்டவம். அதுதான் புலிகளின் தரையிறக்க அணி பாதையைக் கட்டுப்படுத்தி வச்சிருந்த இடம்.
 
எழுதிக்கொள்வது: Colvin

கட்டுரையை மேலும் விரிவாக்கியிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கக் கூடும்.

7.17 1.10.2006
 
கொல்வின்,
வருகைக்கு நன்றி.
அதென்னெண்டு பழைய பதிவைத் தோண்டி எடுத்தியள்?
அன்னியலோகத்தின்ர "Featured post of the day from archive!" வசதியிலயும் வரேல.

பதிவைஇன்னும் விரிவாக்கிறதா?
;-)
 
வன்னி,
வரலாற்றுக் குறிப்புக்கு மிக்க நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]