Saturday, May 21, 2005
J.V.P.--- சமகாலப் பார்வை.
தம்கருவிலே தம்மையே கருவறுக்க தாமே கருக்களைக் காவுவோர் -2 -
க.வே.பாலகுமாரன்-
J.V.P. புரட்சி செய்ய முயன்ற ஒவ்வொரு முறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டும் எதிர்மறை நிலையெடுத்ததே அவர்கள் வரலாறாகிவிட்டது.
இதன் முதற்பாகம் இங்கே.
இப்போது தமது மூன்றாவது எழுச்சிக் காலகட்டத்துள் ஜே.வி.பியினர் பிரவேசித்துள்ளனர். 1971ஆம் ஆண்டு காட்டிய அதே முனைப்போடு அதே தமிழ்மக்கள் மீதான காழ்ப்போடும் அன்றும் அப்போதிருந்ததைவிட உறுதியான கட்டமைப்போடும் அதிகரித்த செல்வாக்கோடும் இன்று அவர்கள் செயற்படுகின்றனர்.
நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியல் மயப்பட்டும் சில விடயங்களிற்கு மிகச் சரியான நிலைப்பாடோடும் அவர்கள் செயற்படுவதாக மாமனிதர் சிவராம் போன்றோரே கருதுமளவு அவர்கள் தீவிரமாக இன்று இயங்கி சிங்களத்தின் மரபுசார்ந்த கட்சிகளை முடக்கிவிட்டுள்ளனர். எனவே இன்று எழுந்துள்ள கேள்வி இம்முறையாவது அவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவார்களா? இல்லவே இல்லை.
அவர்கள் ஒரு அரசியல் விபத்து. அவர்களைப் பார்த்துக் கலங்கவோ, கற்கவோ என்னவுள்ளது? என கேட்பாருமுள்ளனர். எனவே உண்மை நிலையென்ன? இலக்கை அடைவார்களா? அல்லது ஏலவே இரண்டுதடவை நிகழ்ந்தது போன்று விபரீதத்தினை உருவாக்கப் போகின்றார்களா? வரலாறு சொல்லும் செய்தியென்ன? ஜே.வி.பியின் வரலாற்றினை எழுதியோர் சொல்வதென்ன?
'சிறிலங்கா: ஒரு தோற்ற புரட்சி" என்கிற நூலில் பயங்கரவாதம் அதன் முறியடிப்பு என்கிற மேற்குலகின் மிக விருப்பத்திற்குரிய துறைகளில் ஈடுபட்டு பிரபலமானவரான றோகன் குணரத்தின ஜே.வி.பியின் 1989ஆம் ஆண்டு வன்முறைக்காலம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'சர்வதேச அளவில் 20ம் நூற்றாண்டின் ஈவு இரக்கமற்ற குழுக்களில் ஜே.வி.பியும் ஒன்று. சிறிலங்காவின் மக்கள் வாழ்விலே முன்னெப்போதுமில்லாத அச்சத்தையும் ஒப்பிட முடியாதளவு பயங்கரவாதத்தையும் அது செலுத்தியது." அப்படி என்னதான் ஜே.வி.பி செய்தது என்கிற கேள்விக்கான பதில் மிகுந்த அவலத்தை, கலக்கத்தினை, வெறுப்பினை, அச்சத்தை ஏற்படு த்தவல்லது.
அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்ற தடம்புரண்டு தயக்கமின்றி எதனையும் செய்ய ஜே.வி.பி ஆயத்தமாக இருப்பதையும் இருக்கிற அதிகாரத்தை காப்பாற்ற எந்த அளவு அரச பயங்கரவாதத்தினையும் பிரயோகிக்க மரபுசார் சிறிலங்கா அரசியலாளர் எவ்விதத் தயக்கமுமின்றி செயற்படுவர் என்பதையும் 1989ம் ஆண்டின் வரலாறு நிரூபித்தது. எமக்கு மீண்டும் நினைவிற்கு வருவது "வரலாற்றின் அதிசயம் என்னவென்றால் அது திரும்பத் திரும்ப நிகழ்வதுதான் 'திரும்பிப்பார். எதிர்காலமென்று ஒன்றில்லை. ஏனெனில் இந்தக் காலமே எதிர்காலமாக உன்முன் வந்து நிற்கின்றது" என்கின்ற கூற்றுக்களே.
எனவே இம்முறை நடக்கப்போவது என்னவென்பதை நாம் இப்போதே உணர்கின்றோம். இத் துன்பியல் நிகழ்வுகள் சிங்கள மக்கள் மீது இடியாக இறக்கப்போகும் பேரிடர்களை நினைத்து உண்மையிலே நாம் வேதனைப்படுகின்றோம். இவ் வரலாற்றினை மீளவும் வாசிக்கும்பொழுதும் எழுதும்பொழுதும் இழக்கப்பட்ட, இழக்கப்படுகின்ற வாய்ப்புக்களையெண்ணி மேலும் மனத்துயர் அடைகின்றோம். ஏலவே நடந்த கிளர்ச்சிகளின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. 1971ம் ஆண்டு ஏப்பிரல் கிளர்ச்சியின் விளைவுகள் 15,000 உயிர்கள் இழக்கப்பட்டதும் இலங்கையின் பொருண்மியம் பின்னடை வைச் சந்தித்ததும் 400 மில்லியன் பெறுமதியான அரசாங்க சொத்துக்கள் அழிக்கப்பட்டதும்தான்.
மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஜே.வி.பியினர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் 390 பேர்வரை சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் றோகண உட்பட ஐவருக்கு ஆயுட்கால தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கதை இத்தோடு முடியவில்லை. 1988, 89களில் ஜே.வி.பியினர் செய்த இரண்டாவது கிளர்ச்சியின் விளைவுகள் எண்ணிலடங்காதவை.
1987ம் ஆண்டின் பின்னரைப் பகுதியில் நாளாந்தம் சராசரி 10பேர்வரை கொல்லப்பட்டனர். 1988 டிசம்பரின் பின் அது நாளாந்தம் 100 பேர் வரை யானது. அரச பயங்கரவாதமும் ஜே.வி.பியினரின் பயங்கரவாதமும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு 70-80 ஆயிரத்திற்கும் இடைப்பட்டோர் உயிர்களைப் பறித்ததாகக் கருதப்படுகின்றது. அரசாங்க உடமைக்கேற்பட்ட சேதவிபரமோ மிகப் பாரியவை. 9000மில்லியன் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றினைவிட சோமவன்ச தவிர்ந்த றோகண, உபதிஸ்ஸ கமநாயக்க, கீர்த்தி விஜயபாகு போன்ற அனைத்து ஜே.வி.பியினரின் மத்திய குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இவற்றினைவிட ஜே.வி.பியினரின் இரண்டாவது கிளர்ச்சி விளைவித்த மனவடுக்கள் சிறிலங்கா வரலாற்றின் மிகமிக இருண்ட பக்கங்கள். இரண்டாவது கிளர்ச்சி தாம் இனி ஒருபோதும் இராணுவ ரீதியாக செயற்பட்டு அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முடியாதென்பதையாவது ஜே.வி.பியினருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். இத்தனை இழப்பும் ஜே.வி.பியினருக்கு எதனையாவது உணர்ந்தியிருக்கின்றதா? எதுவுமேயில்லை.
எப்படியாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் மட்டும் அவர்கள் குறி மேலும் இறுக்கமடைந்ததைத் தவிர. இதற்குக் காரணமென்ன? இதற்கான பதிலை றோகன் தனது நூலில் தருகின்றார். பொதுவாக சிங்கள அரசியலாளர் குறித்தும் சிறிலங்காவின் எதிர்காலம் குறித்தும் தனது நூலின் முடிவிலே அவர் புகழ்பெற்ற ஐரோப்பிய தத்துவஞானியான ஜோர்த் சத்நாயானாவின் (geroge satnayana) கூற்றினை மேற்கோள் காட்டுகிறார். "வரலாற்றின் பாடங்களை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டிருக்கின்றார்கள்."
1988, 89ஆம் ஆண்டு நிகழ்வுகளை இங்கே மீள் நினைவூட்டிப் பார்ப்பதன்மூலம் சிறிலங்காவில் இனிமேல் நடக்கப்போகும் இழுபறியின் உச்சத்தை 2500 ஆண்டு காலமாக வளர்த்தெடுத்த பூதத்திற்கு இவர்கள் யாவரும் இரையாகப்போகும் வினாசத்தை எம் மக்கள் உணர்வர். அந்தப் பொழுதே தமிழ்பேசும் மக்களின் விடிவின் பொழுது. சிங்கள அரசியலாளனின் முண்ணான் எலும்பு மையத்திற்குள் பிரவேசித்த சன்னமாக, மூளைக்குள் புகுந்துவிட்ட அகற்றமுடியாத நச்சுக் கிருமியாக தொண்டைக்குள் சிக்கிவிட்ட கூர்முள்ளாக ஜே.வி.பி மாறிவிட்டது. ஆறுவருட சிறைவாசத்தின் பின் 1977 நொவம்பர் 20ஆம் திகதி சுதந்திர மனிதனாக றோகண வெளியில் வருகின்றார்.
எவ்வாறு அவர் வெளியில் வந்தார்? 1977ம் ஆண்டு ஏனைய தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று பதவியேறிய ஜே.ஆர் நிரந்தர மன்னனாக முடிசூட முடிவெடுத்தார். சுதந்திரக் கட்சியை முற்றாக அழிக்க ஜே.வி.பியினரை வெளியில் விடுவதே பொருத்தமென நினைத்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். றோகணவை வெளியில் விடாதிருந்தால் அவர் இன்னொரு மண்டேலாவாகியிருப்பார் என பகிடி வேறு விட்டார்.
அவர் எதிர்பார்த்தது நடந்தது; எதிர்பார்க்காததும் நடந்தது. சுதந்திரக் கட்சியோடு ஜே.வி.பி முழுதாக முரண்பட்டது. அவர் எதிர்பார்த்தது. ஆனால் ஜே.வி.பியினரின் ஏறுமுக வளர்ச்சி அவரால் பொறுக்கமுடியாதது. 1987இல் ஒரு உடன்பாட்டின் பொழுது ஜே.வி.பியோடு மறைமுக உடன்பாட்டிற்கு சுதந்திரக் கட்சியினர் வந்ததும் ஜே.ஆர் முழுத்தோல்வியை இறுதியில் சந்தித்ததும் 'கெடுவான் கேடு நினைப்பான்" கதையின் மறுவடிவம்தான்.
அளவிற்கு மீறிய சாணக்கியம் ஜே.ஆரை இறுதியில் அரசியற் சாக்கடைக்குள் தள்ளியது. ஜே.வி.பியினரின் இரண்டாம் கிளர்ச்சிக்கு வழி வகுத்தது. 1983, யூலை 31ஆம் திகதி ஜே.வி.பியினரை ஜே.ஆர் தடைசெய்தார். அரசாங்கத்தினைக் கவிழ்க்க சதி, யூலைக் கலகத்திற்கு பொறுப்பு என்பது இந்தச் சாட்டு. ஆனால் 1989களில் உண்மையிலே அரசாங்கத்தினை அவர்கள் கவிழ்க்க முயன்றனர்.
தனது அரசியல் இருப்பிற்காக தான் சார்ந்த சமூகத்தின் நிறைவேறாத கனவுகளின் ஏற்றத்தாழ்வின் வறுமையில் பிள்ளைகளையே பகடையாக அவர் பயன்படுத்த முயன்றமை வரலாற்றின் பாரிய தவறு. இதனை ஜே.ஆர் இறக்கமுன்னர் தன்னிடம் ஏற்றுக்கொண்டதாக றோகன் கூறுகின்றார். எனவே 1983-87ஆம் ஆண்டிற்கிடைப்பட்ட காலகட்ட தலைமறை செயற்பாட்டின் வீச்சின் விளைவாக 1987களில் பலம்பெற்று ஆயத்த நிலையை ஜே.வி.பியினர் அடைந்தனர். பெருமளவு நிதியை கொள்ளைகள் மூலம் கையகப்படுத்தினர்.
உள்வீட்டு உதவியோடு கணிசமான ஆயுதங்களை சேகரித்தனர். DJV என பிற்காலத்தில் பெருமச்சத்தோடு சிங்களவரால் அறியப்பட்ட தேசப்பிரேமி சனதா வியாபாரய (மக்கள் தேசப்பற்று இயக்கம்) தமது இராணுவப் பிரிவினை கட்டியெழுப்பினர். தமக்கும் தமது தந்தையர் தாய்மாருக்கும் சிங்கள முதலாளிய ஆட்சியாளர் செய்த அநீதிகளுக்குப் பழிவாங்க பெருமளவு அச்சமூட்டும் வன்முறை வடிவங்களைக் கைக்கொண்டனர். அச்சமூட்டி செயற்கையாக மக்களை தம்பக்கம் சேர்க்கலாமென எண்ணினர். ஜே.வி.பியினரின் போக்கு எப்போதுமே மாறும் நிலைமகளுக்கேற்ப தமது கருத்தியலை மாற்றி புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்து அதன்மூலம் தமது இலக்கை அடைய முயல்வது என்பது இப்போது அவர்கள் பற்றிய ஆய்வுகளின் முடிவு. இதற்கேற்ப தமிழ்மக்கள் மனதுணர்வினை புறம்தள்ளி ஒடுக்கி இறுக்கினர். முற்றிலும் விருப்பமில்லாமல் வேண்டாவெறுப்பாக இல - இந்திய உடன்பாட்டில் கைச்சாத்திட ஜே.ஆரின் இரண்டக கையறுநிலையைப் பயன்படுத்தினர். (இப்பொழுது சந்திரிக்கா அம்மையாரினதும் நிலையுமிதுவே. புலிகளோடு வேண்டாவெறுப்பாக இணைந்து செயற்படுவது பற்றிய கருத்தும் அதனை ஜே.வி.பினர் பயன்படுத்துவதும் பழைய கதைதான்).
இம்முறை இந்திய ஏகாதிபத்திய விரிவாக்க எதிர்ப்புக் கருத்தியலால் புண்பட்ட சிங்கள தேசப்பற்றின் உணர்வுகளை நன்கு கிளறினர். எனவே இந்திய எதிர்ப்புவாதம் பேரினவாதம் இரண்டையும் சம விகிதத்திற் கலந்து இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் 'ஏவல் நாய்களுக்கு எதிராக" கிளர்ந்தெழுந்து ஒருவகை ஒத்துழையாமை இயக்கத்தினை நடத்தி 1989 யூலை மாதமளவில் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டம் ஆயத்தமானது. இதற்கான வெளியரங்கம், ஊடரங்கு, கடையடைப்பு, அரசாங்க நிருவாகச் செயலிழப்பு, அச்சமூட்டும் வன்முறைவடிவப் பிரயோகம் என விரிந்தது.
இவ்வாறாக 1989களில் இன்னொரு அரசாங்கமாக ஜே.வி.பி மாறியது. தமது இறுதிக்கட்ட நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினரை குறிப்பிட்ட திகதிக்குள் (1989 ஆகஸ்ட் 20) பதவி விலகுமாறு இறுதியறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதனை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்கிற அவர்கள் அச்சுறுத்தல் நடைமுறையில் இராணுவத்தினரின் உறவுகளை கொல்லுமளவிற்குச் சென்றது.
ஆனால் ஜே.வி.பியினர் எதிர்பார்த்தது இம்முறையும் நடக்கவேயில்லை. மாறாக நடந்ததென்ன? 1989 நவம்பர் 12ம் திகதி உலப்பனை தோட்ட வீட்டில் மறைந்திருந்த றோகண கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து சோமவன்ச தவிர்ந்த மத்தியகுழுவினர் யாவரும் கொல்லப்படுகின்றனர். மீண்டும் நிறைவேறாத கனவுகளுக்காக செயற்கையான கிளர்ச்சி நிலையைத் தோற்றுவிக்க அச்சமூட்டி அணிதிரட்டிய சிங்களத்தின் புதல்வர்கள் தம் குருதியால் தம் தேசத்தைக் கழுவினர். ஆயினும் நிறைவேறாத புரட்சியின் கனவுகள் அவர்கள் கண்களிலே இறந்தபின்னும் ஒளிர்கின்றது. எனவே இவர்கள் கொள்கை மூன்றாவது புரட்சியை (?) நடத்த சோமவன்ச மட்டும் இரண்டாம் தடவையும் உயிர்தப்பி விடுகின்றார்.
இவரைக் காப்பாற்றி இந்தியா கொண்டுசென்று பின் அவர் பிரான்சு செல்ல உதவியது இந்திய உளவமைப்பான 'றோ" என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியது.
பல்வேறு காரணங்களால் இரண்டாம் புரட்சியும் தோற்றாலும் இவர்கள் உடனடி அழிவுக்கு ஜனாதிபதி பிறேமதாசா கைக்கொண்ட தனிமைப்படுத்தும் உத்தியே காரணம். இவ்வுத்தியை உணர்ந்த புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் ஜே.வி.பியினரால் இதைத் தடுக்கமுடியவில்லை. இந்திய எதிர்ப்புவாதத்தினை தானே கையாலெடுத்து புலிகளோடு இணக்கத்திற்கு வந்து பிறேமா ஜே.வி.பியினரின் அழிவிற்கு வழிவகுத்தார். எனவே சிங்கள சமூகத்தின் அடிப்படை முரண்பாட்டினை ஜே.வி.பியினர் பிரதிபலித்தாலும் வரலாற்றின் இயங்குவிதிகளை அவர்கள் புரியவில்லை. அவர்கள் என்றும் புரியமாட்டார்கள் என்பதற்கு இம்முறை அவர்கள் அரசியலுத்திகள் சான்றாகவுள்ளன.
எனவே இப்பொழுது சோமவன்சவின் முறை. வெளுத்துக்கட்டுகின்றார். 1971இல் புரட்சியில் தொடங்கிய பயணம் அமைச்சரவையில் வந்துநிற்கின்றது. 1964 சண்முகதாசனின் கட்சிக்குள் ஊடுருவத் தொடங்கிய உத்தி சிறிலங்கா சுதந்திரக்கட்சியைப் பணயக் கைதியாக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிங்கள பேரினவாதப் பயணமோ இப்போது PNM எனப்படும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தில் வந்துநிற்கின்றது. ஆனால் தாம் புரட்சி செய்ய முயன்ற ஒவ்வொரு முறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டும் எதிர்மறை நிலையெடுத்ததே அவர்கள் வரலாறாகிவிட்டது. எனவே இம்முறையோ அவர்கள் எதிர்நிலைச் செயற்பாடு சர்வதேசத்தின் முன் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டின் நியாயத்தினை உணர்த்தவும் வரலாற்றின் ஆபூர்வ தருணங்களில் எடுக்கப்படும் அரியதொரு முடிவிற்கு அவர்கள் வந்தடையவும் வழியை பிறப்பித்ததுமாக அமைந்துவிட்டது. உலகின் முதல் மனிதப் பேரழிவாக வருணிக்கப்படும் சுனாமி ஆழிப்பேரலை அழிவுகூட எம்மை மாற்றமுடியாது என்பதை எவ்வளவு தெளிவாக உரத்து உலகிற்குக் கூறிவிட்டீர்கள். எனவே நாம் செய்கின்றோம் 'நன்றி". நண்பர்களே அடுத்த முறையாவது உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எம்முடன் நிழல்போரை நிறுத்திவிட்டு நேரடியாக உங்கள் எதிரிகளோடு மோதுங்கள். ஏனெனில் எங்கள் தலைகளை அடுத்தமுறை உருட்ட வாய்ப்பிராது. அம்முறை நாங்கள் அருகிலிருக்க மாட்டோம். 'அண்டை நாட்டிலிருப்போம்".
-------------------------------------------------------------------
நன்றி: சித்திரை-வைகாசி மாத 'விடுதலைப்புலிகள்" ஏடு
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல், விமர்சனம்
Subscribe to Posts [Atom]