Thursday, June 23, 2005

குழந்தைகளின் உலகம்.


“இந்த மரத்தின்ர விளிம்புகள் பச்சை நிறமா இருக்கு. இது இங்க நிண்டபடி வானத்துக்கு உயந்துகொண்டு போகுது. காத்து கடந்துபோகேக்க அதோட ரகசியம் பேசுது.
‘எங்கெங்க போனனீயெண்டு எனக்குச் சொல்லு; என்னென்ன கண்டனீ; என்னால அரக்க ஏலாது; ஏனெண்டா என்ர வேருகள் என்னை நிலத்தோடக் கட்டிப்போட்டிருக்குதுகள்; நெடுக இஞ்சதான் நிக்கவேணும்' எண்டு அந்த மரம் காத்திட்ட கேக்குது.
அதுக்குக் காத்து மரத்தோட ரகசியமா கதைக்கும்.
‘நான் ஒரு இடத்தில நிக்கமாட்டன்; என்னால அப்படி நிக்க ஏலாது; நான் போய்.. போய்.. போய்க் கொண்டேதான் இருப்பன்; உன்னோட நிண்டு கதைக்க ஏலாது’
எண்டு சொல்லிப்போட்டு சிரிச்சுக்கொண்டே போகுது.
அதுக்கு மரம்,
‘உன்னோட வர விருப்பமாயிருக்கு; இப்பிடியே நிக்க எரிச்சலாயிருக்கு; நீ எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய்@; ஆனா நான்….ஓ’
எண்டு பெருசா அழுகுது.”

இது சிறுவனொருவனின் மரமொன்றைப்பற்றிய விவரணம். இன்று சஞ்சிகையொன்றைப் படித்தேன். அதில் “மூடுபனிக்குள் ஒரு தேடல்” என்ற பெயரில் தமிழாக்கத்தொடர் நவீனமொன்று வெளிவருகிறது. அதன் ஐம்பதாவது அத்தியாயம் தான் நான் வாசித்த பகுதி. அதில் கதைசொல்லி ஒரு சிறுவனோடு உரையாடுகிறார். வாசித்தஅளவில் அவன் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாயிருக்க வேண்டும். அவன் பெயர் ‘டிப்ஸ்’.
ஜேன், ஹெடா, ஜேக், மில்லி, போன்ற பாத்திரங்கள் வருகின்றன.

டிப்ஸ் குறிப்பிட்ட அந்த மரத்தை மிகவும் நேசிக்கிறான். தோட்டக்காரன் ஜேக் அவனுக்குச் சொல்கிறான்,
‘இது 200 வருசமா இஞ்ச நிக்குது, ஆனா ஒருத்தரும் உன்னைப்போல இந்த மரத்தை நேசிக்கேல’.
அம்மரத்தின் கிளைகள் வீட்டுச் சுவரைத் தொடுகிறது என்று அக்கிளைகளை வெட்டிவிடும்படி டிப்ஸின் தந்தை தோட்டக்காரனைக் கேட்க, அவனும் கிளைகளை வெட்டுகிறான். தன் யன்னலின் பக்கமிருக்கும் கிளையை வெட்ட வேண்டாமெனக் கெஞ்சும் டிப்சுக்காக ஜேக் (தோட்டக்காரன்) அதை வெட்டாமல் விடுகிறான். ஆனால் தந்தை விடாப்பிடியாக நிற்க, ஜேக்,
‘கிளை சுவரில் தேய்க்காதவாறு, அனால் டிப்ஸ் எட்டித் தொட்டு விளையாடக் கூடியதாக விட்டு வெட்டிவிடுவாதாகச்’ சொல்கிறான்.
ஆனால் தந்தை விடாப்பிடியாக அக்கிளையை முழுவதுமாக வெட்டுவிக்கிறார்.

அந்தக் கிளை தன்னைத் தொடுவதாலேயே (கவனிக்க: தான் கிளையைத் தொடுவதாகச் சிறுவனாற் சொல்லப்படவில்லை) தன்தந்தைக்கு எரிச்சல் என்று தனக்குள் அனுமானித்துக்கொள்கிறான். தான் டிப்சுக்காக நிறைய விளையாட்டுப் பொருட்கள் வைத்திருப்பதாச் சொல்லி அவற்றைக் கொடுக்கிறார் தந்தை. அத்தனையும் செயற்கை விளையாட்டுப் பொம்மைகள். முதற்பார்வையிலேயே அவற்றில் வெறுப்பையும், மரக்கிளை மீதான நேசிப்பையும் சிறுவன் வெளிப்படுத்துகிறான். வெட்டப்பட்ட அக்கிளைநுனியை ஜேக் சிறுவனிடம் கொடுக்கிறான்.

இவ்வளவும் போன வருசம் நடந்ததாகவும் தான் இப்போதும் அக்கிளையை வைத்திருப்பதாகவும் அதை வேறு யாரும் தொடவிடுவதில்லையென்றும் கதைசொல்லிக்குச் சொல்கிறான் சிறுவனான டிப்ஸ். (சமயத்தில் அதைத் தொட்ட யாருக்கோ கடித்துவிட்டதாவும் சொல்கிறான்) அவன் வெளியுலகத்தையும் அம்மரத்தையும் ரசித்த அந்த யன்னலும் முற்றாகப் பூட்டப்படுகிறது.

சிறுவனின் நெருங்கிய நண்பன் தோட்டக்காரனான அந்த ஜேக் மட்டுமே. சிறுவனே சொல்கிறான்,
“ஜேக்கை விட எனக்கு நண்பர்கள் இல்லை. மற்ற மனுசரவிட எனக்கு மரங்களும் காக்கா, குருவி போல பறவையளுந்தான் சிநேகிதங்கள்.”

அத்தனையும் குழந்தை மனதொன்றில் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவன் ஒரு பாட்டை முனுமுணுக்கிறான். இது எங்க படிச்சனியள்? என்று கேட்கப்படும் கேள்வியில்தான் அனைத்தும் தொடங்குகிறது. வழமையாக குழந்தைகள் போலவே, ரீச்சர் பற்றித் தொடங்கி அப்படியே சுத்தி மரம்பற்றி, ஜேக் பற்றி, கிளை வெட்டப்பட்டது பற்றியென்று எல்லாக் கதையும் வருகிறது. இடையில் கதைசொல்லி வேறு கதைக்குத் தாவினாலும், சிறுவன் மரத்தைப்பற்றியே கதைக்கிறான்.

இது எந்தப் புத்தகத்தின் தமிழாக்கமோ தெரியவில்லை. மூலப்புத்தகத்தின் பெயர் போடப்படவில்லை. மொழி பெயர்ப்பவர், வின்சன்ட் ஜோசப். இவர்தான் எக்ஸோடஸ் எனும் இஸ்ரேலியர் பற்றிய புத்தகத்தைத் தமிழில் ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்று மொழியாக்கம் செய்தவர். இவரைப்பற்றி முன்பும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இந்த மொழியாக்கத்தில் அச்சிறுவனின் சிந்தனைகள், மொழி நடை, கதை சொல்லும் பாங்கு என்பன நன்கு பிடித்துள்ளது. தங்களுக்குள் பெரியளவு வேற்றுமைகள் இல்லையெனவும், பெரியவர்களிடத்தில் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகமாக உள்ளது என்பது போலவும் ஓரிடத்தில் சொல்கிறான். அவன் பாவிக்கும் வார்த்தைகள், ‘வளந்த பொம்பிளையள், வளந்த ஆம்பிளையள்’. இது ஓர் உளவியல் நவீனம் என்று தலைப்புப் போடப்படுகிறது. நவீனம் முழுவதும் குழந்தைகளின் உளவியல்தான் நிறைந்திருக்குமென்று படுகிறது.

இலையுதிர்க் காலத்தில் உதிராமல் மீதியாயிருந்த ஓர் இலை, தன்னை ஏன் ஒருத்தரும் கூட்டிக்கொண்டு போக வரேல எண்டு அழுகுதாம். காத்து வந்து அந்த இலையை உலகம் முழுக்கக் கூட்டிக்கொண்டு போகுதாம். கடசியா தன்ர முற்றத்திலயே வந்து இறக்கிவிட்டுட்டுப் போச்சுதாம். நல்லாக் களைச்சுப்போன அந்த இலையை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சிருக்கிறதாக கதைசொல்லிக்கு அவன் சொல்கிறான். மேலும் அந்த இலை எங்கெங்கெல்லாம் போய் வந்திருக்குமெண்டு யோசிச்சு அந்தந்த நாடுகளப்பற்றியெல்லாம் தான் அறிந்துகொள்வதாகவும் சொல்கிறான்.

குழந்தைகளின் கதையாடல் நன்றாக இருக்கிறது. ஒரு மழலை கதைக்கும் போது ஆசையாகக் கேட்டுக்கொண்டிருப்போமே, அதே சுவாரசியத்தோடு இந்தப் பகுதியைப் படித்தேன். இது அந்தத் தொடரின் ஐம்பதாவது பகுதி. முழுவதும் படிக்கக் கிடைக்காதா என்று ஏக்கமாயிருக்கு.

இது வன்னியிலிருந்து வரும் ஈழநாதத்தின் வார சஞ்சிகையான வெள்ளி நாதத்தில் வந்திருந்தது. வெள்ளி நாதத்தைப் பார்க்கும்போது மனத்துக்கு இனிமையாக இருக்கிறது. மிகத்தரமான வடிவில் வருகிறது. நிறைவான ஆக்கங்கள், எந்த வியாபார சமரசமுமில்லாமல் வெளிவருகிறது. இதுபற்றிக்கூட நேரமிருந்தால் எழுத வேண்டும்.

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

வன்னியன் நல்லபதிவு.குழந்தைகளின் உலகை விரிவாகச் சொல்லும் நிலைதோன்ற வேண்டும்.

16.37 23.6.2005
 
எழுதிக்கொள்வது: இளைஞன்

உண்மைதான்.

எமது சமூகத்தில் குழந்தைகளுக்கான இலக்கியம், அல்லது குழந்தைகளின் இலக்கியம் என்பது அரிதாகவே காணப்படுகின்றது.

இவைபோன்றவை படைப்புகள் மேலும் தொடரவேண்டும். நல்லபதிவு வன்னியன்.

17.1 23.6.2005
 
அருமையான பதிவு. வெள்ளிநாதம் வெளியூரில் (நாட்டில்) கிடைக்குமா ?
 
நல்லதொரு பதிவு வன்னியன்.
சிறுவயதில் Rani/Muthu/Lion comics வாசித்து பிறகு வாண்டுமாமாவில் மூழ்கி, அப்படியே ராதுகா பதிப்பங்கள் பதிப்பித்த ரஷ்ய புத்தகங்களில் திளைத்து....ம்...அது ஒரு காலம்.
 
வன்னியன்,
சோக்கான நடையும், கற்பனையும்.
நல்லாயிருப்பீர். பூராயம் பாத்துத் திரியேக்க இதன் மூலத்தின் பெயரையும் அறிந்து சொல்லுமன்.

வலைப்பதிவர் வேறு யாருக்காவது மொழியாக்கம் செய்த வின்சென்ட் உடன் தொடர்பிருந்தால் அவரிடம் கேட்டு மூலப்புத்தகத்தின் பெயரை எங்கள் எல்லாருக்கும் அறியத்தரலாமே. (மூலம் ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழியாயின் என்னைப்போன்றவர்கள் வின்சென்ட் புத்தகமாக வெளியிடும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]