Tuesday, December 20, 2005

யாழ்ப்பாணத்தில் இன்றும் இராணுவம் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இராணுவத்தினரது வன்முறைகள் அதிகரித்தவண்ணமுள்ளன. நேற்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மற்றும் மாணவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய இராணுவம் இன்றும் பல்கலைக்கழகத்துள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பௌதீகத்துறை பீடாதிபதி மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் மாணவர் கௌரி செந்தூரன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.


இதேவேளை, கல்லூரியின் முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் காவல்துறையின் வாகனம் மீது முற்பகல் 11.30 மணியளில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லெறிந்ததாக இராணுவத்தரப்பினர் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன், வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------

இதேநேரம் இன்று முச்சக்கரவாகனச் சாரதிகள்மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் படையினரால் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஓட்டோ சாரதியை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த ஓட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக யாழ். நகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் தங்களது வாகனங்களுடன் யாழ். நகரில் குவிந்தனர்.

ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி ஆகியவற்றை ஓட்டோ சாரதிகள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் ஓட்டோ சாரதிகள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
நூற்றுக்கும் மேலதிகமான படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்தை இராணுவத்தினர் போர்க்களமாக்கினர். இந்தத் தாக்குதலில் ஓட்டோ சாரதிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகின.

இராணுவத்தினரின் இந்த வன்முறைச் செயல்களால் யாழில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே மணற்காடு, குடத்தனை, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
---------------------------------------------

புங்குடுதீவில் தர்சினி என்ற இளம்பெண்ணொருவர் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
--------------------------------------------
செய்திகள்: புதினம், தமிழ்நெற்

Labels: ,


Comments:
கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் இன்று மாலை விடுவிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]