Friday, December 23, 2005

எதை வைத்துப் பேச்சுவார்த்தை? -இரண்டாம் பாகம்

முதற்பாகம்
முதற்பதிவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் புலிகளுக்குச் சார்பானதாகவும் அரசதரப்புக்குப் பாதகமானதாகவும் இருப்பதாகச் சொல்லியிருந்தேன். அப்படியானால் ஏன் அரசதரப்பு இதற்கு ஒத்துக்கொண்டது என்ற வினாவோடு முடித்ததிருந்தேன். அதன் தொடர்ச்சி இதோ.

முதலாவது தமிழர் தரப்பின் பலம்.
இதை ஏற்றுக்கொள்ளப் பலருக்குப் பிடிக்காமலிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, இந்தாபார் யாழ்ப்பாணம் இன்னும் சில நாட்களில் புலிகளின் கையில் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நேரம்; சிங்கள இராணுவத்தால் இனி தப்பியோடுவதைவிட வேறு வழியில்லையென்றுகூட பலராற் சிந்திக்கப்பட்ட நேரம்; இந்தியா இராணுவத்தினரை பத்திராக அப்புறப்படுத்த வேண்டுமென அதிகாரபூர்வமாக கோரிக்கைவிடப்பட்டு, இந்தியாவும் ஓரளவு சாதகமாக முடிபு தெரிவித்திருந்த நேரம். பின்னர் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ, புலிகள் தங்கள் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியிருந்தனர். இராணுவம் மீண்டும் குறிப்பிட்ட பிரதேசங்களைக் கைப்பற்ற, புலிகள் பின்வாங்கினதோடு யாழ்க்குடாநாட்டிலுள்ள படையினரின் பாதுகாப்பு தற்காலிகமாக உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அரசபடையின் போர்வலு உயர்ந்ததாகவும் புலிகள் விழுந்ததாகவும் யாரும் நினைத்துவிட முடியாதபடி அடுத்துவந்த காலங்கள் அமைந்தன.

புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை அரசதரப்பு நிராகரித்தாலும் புலிகள் அதை நான்கு மாதங்களுக்கு விடாமற் கடைப்பிடித்தனர்.(இந்த, புலிகளின் யுத்த நிறுத்த காலப்பகுதியில் அரசபடைகள் முன்னேறி சில இடங்களைப் பிடித்தன.) அதன் முடிவில் சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த படைப்பலத்துடன் இதுவரையில்லாதவொரு படைநடவடிக்கையை "அக்னி கீல - தீச்சவாலை" என்ற பெயரில் 20,000 இராணுவத்தினரை நேரடியாக் களத்திலிறக்கி இராணுவம் செய்தது. 4 நாட்கள் நடந்த தொடர்ச்சியான சண்டையின் முடிவில் இராணுவம் தன் மாபெரும் ஆட்பல ஆயுதபல இழப்புக்களோடு மனோபலத்தையும் முற்றாக இழந்திருந்தது. ஓர் அங்குலத்தைத் தானும் கைப்பற்ற முடியவில்லை. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் முன்னதாகவே கொழும்பிலிருந்து பத்திரிகையாளர்களை பலாலிக்கு வரவழைத்து வெற்றிச் செய்தியை அளிக்கவும் கைப்பற்றிய இடங்களைக் காட்டவும் காத்திருந்தனர் தளபதிகள். ஆனால் இராணுவத்தினரின் கொடூரமான இழப்பைத்தான் அவர்களால் பதிவுசெய்ய முடிந்தது. அத்தோடு அத்தோல்வி வழமையை விட அதிகமாகச் சிங்கள மக்களையும் உலகையும் சென்றடைந்தது. இனி புலிகளைப் போரில் வெல்ல முடியாதென்ற அளவுக்கு இராணுவம் வந்துவிட்டது. கிட்டத்தட்ட அடுத்த 8 மாதங்களுக்கு - புரிந்துணர்வு ஒப்பந்தம் வரை, வேறெந்த இராணுவ நடவடிக்கையையும் சிங்களப் படை செய்யவில்லை.

அதன்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுநாயக்க விமானப்படைத்தளத் தகர்ப்பு நடந்தது. கிட்டத்தட்ட ஐம்பது வீதத்துக்குமதிகமான விமானப்படைப் பலம் சிதைக்கப்பட்டதுடன் சிறிலங்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றது. எப்போதுமே இராணுவப்பலச் சிதைவைவிட சிறிலங்காவின் பொருளாதாரச் சிதைவுதான் தமிழர்தரப்புக்கு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இங்கும், ஏற்கெனவே ஒடிந்துபோயிருந்த இராணுவப்பலம், இத்தாக்குதலோடு மேலும் நொடிந்துபோனதுடன், நாட்டின் பொருளாதாரமும் சிதைந்தது. இந்நிலையில் எப்பாடுபட்டாவது ஒரு யுத்தநிறுத்தம் வேண்டுமென்பது சிங்களத்தரப்பின் தேவை. நாட்டின் மீளவைக்க என்ன விலைகொடுத்தும் ஒரு யுத்த நிறுத்தம் தேவைப்பட்டது சிங்களத்தரப்புக்கு. புலிகளுக்கும் இது தேவைப்பட்டதாயினும் அவர்களைவிட யுத்தநிறுத்தத்தின் தேவை சிங்களத்தரப்புக்கே பலமடங்கு அதிகம். புலிகளும் சிங்கள அரசின் நிலையை நன்கு புரிந்திருந்தார்கள். ஆட்சிமாற்றத்துடன் அதுவும் கைகூடி வந்தது.

இரண்டாவதாக நாம் சொல்லக்கூடியது:
புலிகளை யுத்தத்தைவிட்டு வரச் செய்து அரசியல் நீரோட்டத்தில் கலக்க வைத்து, கால இழுத்தடிப்பின் மூலம் போராட்டத்தை மழுங்கச் செய்வது. இது வேறும் பல போராட்டங்களில் நடந்ததுதான். கால இழுத்தடிப்பின்மூலம் போராட்ட உணர்வைக் குன்றச் செய்தல், போராளிகளைக் குறைத்தல் என்பனவுட்பட பல படிப்படியான காரணிகளால் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்தல் என்பது உலகமும் சிங்களத் தலைமையும் (ரணிலும்) எதிர்பார்த்தது. அக்காரணிக்கு முன்னால் புலிகளுக்குக் கிடைப்பதாகக் கருதப்படும் சலுகைகள் பெரிதானதாகத் தெரியாமலிருந்திருக்கலாம். அத்தோடு இராணுவ நிலைகளை மக்கள் வாழ்விடங்களைவிட்டுக் களைவதென்பதை, சும்மா பேருக்கு நடைமுறைப்படுத்தினாற் போதும், முழுவதும் நிறைவேற்றத் தேவையில்லையென முன்பே திட்டமிட்டு (அத்திட்டம்தான் இன்றுவரை நடந்துவருகிறது) இதை ஒப்புக்கொண்டிருக்கலாம். இவற்றைவிட எப்போதும் உலகத்தில் அரசதரப்பு இருக்கும் ஆதரவையும் சலுகைகளையும் கொண்டே இதைச் சமாளித்துவிடலாமென்றும் கருதியிருக்கலாம். (இதுவும் நடந்துவரும் அப்பட்டமான உண்மை)
-------------------------------------------

இவற்றில் முதலாவது காரணம் மிக முக்கியமான காரணமென்பதால் புலிகளால் தாங்கள் விரும்பியபடி அவ்வொப்பந்த உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்துள்ளது. அவ்வொப்பந்தம் பல திருத்தங்களுக்குட்பட்டே இறுதிவடிவம் தயாரானது. சில இடங்களில் நேரடியாகத் தங்களைக் கட்டுப்படுத்தாதவாறு புலிகள் பார்த்துக்கொண்டார்கள். ஆயுதக் கொள்வனவு பற்றி நேரடியாக எந்தப் பகுதியும் ஒப்பந்தத்தில் இல்லை. 'தாங்கள் ஆயுதக்கொள்வனவைச் செய்வதை ஒப்பந்தம் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்று புலிகளும்', 'இல்லையில்லை - இலங்கையின் இறையாண்மை என்ற பதத்துக்குள்ளால் ஆயுதக்கொள்வனவு ஒப்பந்த மீறலே' என அரசாங்கமும் பிறிதொரு நேரத்தில் வாதிட்டன. அந்த அளவுக்கு ஒப்பந்தத்தில் தங்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய சரத்துக்களை இடம்பெறாமற் செய்வதில் புலிகள் வெற்றி பெற்றார்கள்.

அன்று தங்களின் பலத்தால் ஆதிக்கம் செலுத்தி ஒப்பீட்டளவில் அதிக சாதங்களைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாற்றும் எண்ணம் புலிகளுக்கு இல்லை. அதேநேரம் இவ்வொப்பந்தத்தை மாற்றாமல் நடைமுறைப்படுத்த அரசதரப்பும் ஒருபோதும் தயாரில்லை.
எனவே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசபடைகளை மிகமிக இறுக்கத்துள் தள்ளுவதுடன் இராணுவரீதியிலும் அரசியல்ரீதியும் தம்மைப் பலப்படுத்தப் புலிகள் நினைக்கிறார்கள். அதனால்தான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக உடனடியாக பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டுமெனக் கோருகிறார்கள். இன்று நடக்கும் வன்முறைகளுக்கும் அதையே சாட்டாக வைத்து இக்கோரிக்கையை இன்னும் வலுவாக்குகிறார்கள் புலிகள். இதில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே. இப்போதைய நிலையில் முதற்கட்டப் பேச்சுக்கூட நடத்தப்படாமல் எல்லாம் முறிந்துபோகவே சாத்தியம் அதிகமுண்டு.
------------------------------------------------
நிற்க, இடையில் ஒரு கட்டத்தில் 'புரிந்துணர்வு ஒப்பந்தத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக தாங்கள் பேச்சுக்குத் தயார்' என்று புலிகள் அறிவித்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம் தான். ஆனால் சில வாரங்களுள் சுதாரித்துக்கொண்டு பழைய நிலைமைக்கு வந்துவிட்டார்கள். ஏன் அச்சமயத்தில் அப்படிச் சொன்னார்கள் என்று பார்த்தால், அது கதிர்காமர் கொல்லப்பட்ட நேரம். அவர் கொல்லப்பட்ட மூன்றாவதோ நாலாவதோ நாள் புலிகள் இப்படியொரு அறிவிப்பை விட்டார்கள் - விட்டார்கள் என்பதைவிட விடவைக்கப்பட்டார்கள் என்பது பொருந்துமென்று நினைக்கிறேன். அவர்கள்மேல் கடும் அழுத்தமொன்று அந்த நேரத்தில் இருந்திருக்கவேண்டுமென்பது யாவரும் இலகுவில் ஊகிக்கக்கூடியதே. ஆனாலும் ஏன் இலங்கை அரசு அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறியதென்று புரியவில்லை. இப்போது மகிந்த ஆட்சிக்கு வந்தபின் புலிகளின் நிலையில் இன்னும் இறுக்கம் அதிகரித்துள்ளது.
--------------------------------------------
இதுமட்டில் தனிப்பட என்னுடைய கருத்து:
என்னைப் பொறுத்தவரை இறுக்கம்தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.
சிலர் விட்டுக்கொடுப்புத்தான் சமாதானத்தைத் தருமென்று வாதிடலாம். முதலில் சமாதானமென்று எதைச் சொல்கிறார்களென்பது என்னுடைய கேள்வி. அதைவிட யார் விட்டுக்கொடுக்க வேண்டுமென்பது அடுத்த கேள்வி.
உலகின் முன் கடைப்பிடிப்பதாகச் சொல்லி ஒத்துக்கொண்ட விடயங்களில் பலவற்றை(க்) கடந்த நான்கு வருடங்களாக அப்பட்டமாகவே மீறிவருகிறது அரசதரப்பு. புலிகளும் இடையிடையே மீறினார்களென்றாலும், அந்தந்த நேரங்களில் (சில சமயங்களில் தவறான நேரங்களிலும்) தேவைக்கு அதிகமாகவே புலிகள்மேல் கண்டனங்களையும் அழுத்தங்களையும் அள்ளிக்கொட்டிய நடுவர்களும் உலகமும் அரசதரப்பின் மீறலில்மட்டும் இதுவரை அழுத்தமோ கண்டனமோ தெரிவிக்காதது (ஏன் என்று கேட்க நான் முட்டாளில்லை. உலகத்தை நடுநிலைமையாகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தருமென்று நம்பும் நிலையிலும் நானில்லை) முக்கிய அவதானம்.
சிலவேளை அவர்களும்கூட,
"எழும்பு எழும்பு எண்டா அவங்களும் எங்கதான் போறது?" என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ?
---------------------------------------------
புலிகளின் ஒப்பந்த மீறல் பற்றியும் யாராவது எழுதுங்களேன்?
---------------------------------------------
புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்வடிவம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆங்கிலவடிவம்

Labels: ,


Comments:
This comment has been removed by a blog administrator.
 
சர்வதேச சமூகமும் தமிழர் - சிங்களவர் தரப்பும் அனுசரணையாளராக ஏற்றுக் கொண்ட நோர்வே நாட்டில் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான முதல் கட்டப் பேச்சுகளை நடத்த வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையேயான சந்திப்பில் இனை தெரிவித்தார்.

மேலும் செய்திக்கு
 
எழுதிக்கொள்வது: sj

ளத

11.19 25.12.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]