Sunday, December 25, 2005

ஈழத்தில் நடப்பவை....

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமேயெனப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிலர் இது கருணா குழுவின் வேலையென்று சொல்கின்றனர்.

இதுதொடர்பாகக் கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளனர் புலிகள். மேலும் அவருக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" விருது இன்று மாலை வழங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்ட மூன்றாவது மாமனிதர் விருதுக்குரியவர் ஜோசப் பரராசசிங்கம். ஏற்கெனவே இக்காலப்பகுதியில் பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான தராகி எனப்படும் சிவராம் மற்றும் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோர் கொல்லப்பட்டவர்களாவர்.
-----------------------------------------

மன்னாரில் அண்மையில் நடைபெற்ற கடற்படை மீதான தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினரால் பேசாலைப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். நால்வர் காணாமற்போயிருந்தனர். அவ்வாறு காணாமற்போன நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் இன்று அப்பகுதி மக்களாற் கண்டுபிடிக்கப்பட்டனர்.
4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி), கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மற்றும் மாணவி அந்தோனிக்கா ஆகியோரே வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரே இக்கொலைகளுக்குக் காரணமென மக்கள் கருதுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுற்றிவளைப்பிற் கைதுசெய்யப்பட்டவர்கள் பலத்த அடிகாயங்களோடு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பேசாலை - தலைமன்னார்ப் போக்குவரத்தை கடற்படையினர் முற்றாகத் தடைசெய்துள்ளது.
------------------------------------

யாழ்ப்பாணத்தில் கோட்டைப்பகுதியில் நேற்று நடந்த மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஐவரை தாம் சுட்டுக் கொன்றிருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்தோடு ஐவரின் சடலங்களையும் இராணுவம் யாழ். மருத்துவமனையில் ஒப்படைந்திருந்தது.

ஆனால் இன்றுகாலை அச்சடலங்களில் ஒன்று தன் மகனுடையதென்று அவரின் தாயார் அடையாளம் காட்டியுள்ளார். தனது மகன் யாழ். மத்திய கல்லூரியின் இரவுக் காவலாளியாக வேலை பார்ப்பவரென்றும், மாலை இரவுணவை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்ற மகன் திரும்பி வரவில்லையென்றும் தெரிவித்துள்ளார். அவரது சடலம் யாழ் மத்திய கல்லூரிச் சுற்றாடலில் இருந்தே யாழ்.வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏனைய நால்வரும்கூட அப்பாவிகளாக இருக்கலாமென்ற ஐயம் நிலவுகிறது.

இதேவேளை யாழ்த் தாக்குதல்களுக்கு உரிமைகோரும் 'பொங்கியெழும் மக்கள் படை' இன்று எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த ஐவரும் அப்பாவிகளென்றும், அவர்களுக்கும் தாக்குலுக்கும் சம்பந்த்மில்லையென்றும் தெரிவித்துள்ளதோடு, அப்பாவிகளைக் கொன்று அவர்கள்மேல் பழிபோடும் இராணுவத்தின் இச்செயலுக்குப் பதிலடியாக 50 இராணுவத்தினரை தாம் கொல்லப்போவதாக அவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகவச்சேரியிலும் நேற்று இளம்பெண்ணொருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியிருந்தார்.
-----------------------------------

புரிந்துணர்வு ஒப்பந்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் மோசமான நிலையில் இது மேலும் வன்முறைகளைத் தூண்டிவிடுமென்ற அச்சம் நிலவுகிறது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அலுவலகத்துள் அத்துமீறி நுழைய முற்பட்டார்கள் என்றும், வன்முறையைத் தூண்டிவிட்டார்களென்றும் கூறியுள்ள அவர்கள், அப்படிச் செய்பவர்கள் சிலரேயென்றும் அவர்களைக் கண்டறிந்து இராணுவம் கைதுசெய்ய வேண்டுமென்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்கள்.
-------------------------------------------


இதேவேளை, யாழ். இராணுவ வன்முறைகளுக்கு எதிர்ப்பு- நாளை முதல் அரச பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். அது தொடர்பான விரிவான செய்தி:

யாழில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்கள் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய தொழிற்சங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசியல்வாதிகளின் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையானது, தமிழின அழிப்பை பல்வேறு வழிமுறைகளிலும், சமாதானம் என்ற வெற்று முழக்கத்தை எழுப்பிக்கொண்டு பேரினவாத ஒடுக்குதலின் உச்சக்கட்டமாகிய தமிழின அழிப்பிற்கான போருக்கு மிகநுட்பமாக திட்டமிட்டு தயாராகிவிட்டது.
இதன் முதற்கட்டமாக கொடுமையான வன்முறைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.


தாமே உறுதிப்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுலாக்காமல் விடுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகமான தந்திரமாகும். அத்துடன் பேரினவாத்திற்கு ஏற்ற வகையில் இராணுவ நோக்கில் தமக்கு சாதகமாக உடன்படிக்கையை வளைத்து விடவும் திட்டமிடப்படுகின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடிநாதமாக விளங்குவது மக்களது இயல்பு வாழ்க்கையே.

இதனை எவ்வகையிலும் சிதைத்து தமிழ்மக்கள் மீது வன்முறைகளையும், அச்சுறுத்தலையும் பிரயோகிப்பது தமிழ்மக்கள் மீதான போரின் முதற்கட்டமாகும்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின், நிழலாகத் தொடர்ந்த தமிழின விரோதக் செயற்பாடுகள், தமிழர் தாயகமெங்கும் இராணுவ வன்முறை வெளிப்பாடாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
கீழே தரப்படும் சம்பவங்கள் பேரினவாதத்தின் கொடுரத்தை தெளிவாக்குகின்றன.

  • அண்மையில் புத்தூர் கிழக்கில் குடும்பப் பெண் மீதான படையினரின் பாலியல் வல்லுறவுக்கான முயற்சியும் அதனைத் கண்டித்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதலும்,
  • நீர்வேலியில் விவசாயிகள் இருவர் கொல்லப்பட்டமை,
  • தேசப்பற்றும் சமூகப்பற்றும் கொண்ட வீடியோ கடை உரிமையாளர் உட்டபட கல்லூரி அதிபர்கள் இருவர் கொல்லப்பட்டமை,
  • மிருசுவிலில் சிறுமி மீதான பாலியல் முயற்சி,
  • புங்குடுதீவில் தர்சினி என்னும் இளம்பெண் கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை,
  • இப்பெண்ணின் உறவினருடன் பெற்றோருக்கு ஆதரவு கூற செல்ல முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்,
  • பல்கலைக்கழகச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு பொது மக்களும் மாணவர்களும் தாக்கப்படுதலை கண்டித்து போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவிவிடம் முறைப்பாடு செய்ய அமைதியான முறையில் ஊர்வலத்தில் சென்ற யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மீதான காட்டுமிராட்டித்தனமான தாக்குதலையும், துப்பாக்கிச்சூட்டினையும் படையினர் மேற்கொண்டமை.
  • ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் (இதே நாளன்று இனவெறி கொண்ட சிங்களத் தேசப்பற்றாளர் இயக்கம் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்ய வேண்டும் என்று கூறி கொழும்பில் நடாத்திய ஊர்வலத்திற்கு படையினர் ஒத்துழைப்பையும் பாதுகாப்பினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது).
  • இதற்கு அடுத்த நாள் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு நடாத்தியமை.
  • முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சாரதிகள் மீது யாழ் நகரத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதல், அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டமை.
  • தமது விளையாட்டு மைதானத்தினூடாக படையினர் பாதுகாப்பு அரணை அமைத்த போது ஹாட்லிக் கல்லுரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தபோது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள்.
  • நல்லூர் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றலின் பின்னர் வீடு திரும்பிய மாணவர்கள் மீது தாக்குதல்.
  • தனியார் காணிகளின் ஊடாக வேலி பிரித்து சென்று வீடுகளில் உட்புகுந்து மோசமான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அடித்து துன்புறுத்துவதோடு அவர்களை உடற்சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்துவது.
  • பரவலாக யாழ். குடாநாடெங்கும் மக்ளது சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறாக வழிமறிப்புக்கள், வீதித் தடைகள், உடற்சோதனை, தன்னிச்சையான கைதுகள், கண்மூடித்தமான தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்தல்.
  • பணிபுரிந்து வீடு திரும்பும் ஆண் அரச ஊழியர்கள் உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்படுதல்.
  • படையினரின் இத்தாக்குதல் செயற்பாடுகளின் போது குண்டர்கள் போன்று கொட்டன்கள், சைக்கிள் செயின், கத்திகள் ஆகியவற்றுடன் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு காடைத்தனம் புரிகின்றமை.
  • இராணுவ புலனாய்வுத் துறையினராலும், தேசத்துரோகக் குழுக்களாலும் திட்டமிடபட்ட வகையில் இராணுவ உயர் மட்டத்தினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படுகின்ற தேசப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள்.

இவற்றில் இருந்து எமக்கு தெளிவுபடுவது என்னவெனில், தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற தந்திரோபாயத்தை சிறிலங்கா அரசின் சார்பில் படைத்தரப்பு கையாள்கிறது என்பதாகும்.

சிறிலங்கா அரசாங்கமும், அதன் ஏவலர்களுமாகிய இராணுவக் குண்டர்களின் இச்சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
மக்களது இயல்பு குறித்தோ அல்லது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தோ முடங்கிவிட்ட சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்தோ சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிஞ்சித்தேனும் அக்கறையில்லை என்பதை அனைத்துலகத்தினது கவனத்திற்கும் கொண்டுவரவேண்டிய தேவை தமிழ்மக்களாகிய எமக்கு உள்ளது.


தமிழ்மக்கள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும், சுதந்திரமாகவும், தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா பேரினவாதம் தடையாக உள்ளது என்பதை பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களாகிய நாமே வெளிக்கொணர வேண்டும் என்ற பொறுப்பு எமக்கு உள்ளது.
சிங்கள அரசினதும் அதன் படைகளினதும் இத்தகைய அராஜக செயற்பாடுகள் யாவும் இன்று இங்கு போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வியை மக்களாகிய எம்மிடத்தில் தோற்றுவித்துவித்துள்ளது.
ஒரு சமூகத்தின் அதிஉயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழத்தின் துணைவேந்தருக்கு இங்கு கௌரவமும், பாதுகாப்பும் இல்லையெனில் சாதாரண மக்களின் கௌரத்திற்கும், பாதுகாப்பும் என்ன உத்தரவாதம் என்ற நியாயமான கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.


சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கும், அண்டிப்பிழைக்கும் தேசத்துரோகக் குழுக்கள் எமது மண்ணில் இருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும்.
அத்துடன் பொதுமக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு குந்தகமாக உள்ளதால் மக்களால் வெறுக்கப்படுகின்ற இராணுவக் காவலரண்கள் நீக்கப்பட வேண்டும்.
சிங்களப் படைகளின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயல்பு வாழ்க்கையையும், மனித கௌரவத்தையும் வென்றெடுக்க வேண்டும்.எமது பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்களாகிய நாம் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக மேற்கொள்ள உள்ளோம்.
வரும் திங்கட்கிழமை 26.12.2005 முதல் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக செய்வது என்ற என்ற தீர்மானத்தை யாழ். மாவட்டத்தில் இயங்குகின்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகிய நாம் எடுத்துள்ளோம்.
இப்புறக்கணிப்பிற்கான ஒத்துழைப்பை அரச பணியாளர்கள் மற்றும் அனைவரும் வழங்குமாறு வேண்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------------------------

மேற்குறிப்பிட்டவைகள் செய்திகளாக மட்டுமே தரப்பட்டுள்ளன.

Labels: ,


Comments:
தொகுத்து தந்திருக்கிறீர்கள் நன்றி.
வன்னியன்.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கரிகாலன்.
 
CAN YOU ATTACH VAIKO SPEECH TO THIS BLOG

THANK YOU
 
எழுதிக்கொள்வது: ஈழநாதன்

வன்னியன் கொல்லப்பட்டவர் இந்துக் கல்லூரி இரவுக்காவலாளி அல்ல.மத்திய கல்லூரி இரவுக்காவலாளி.அவர் கல்லூரிக்குள் வைத்துச் சுட்டொக்கொல்லப்பட்ட பின்னர் சடலம் வெளியே கொண்டுவந்து போடப்பட்டதாகச் சொல்கிறார்கள்



13.30 26.12.2005
 
ஆமாம் ஈழநாதன், அது மத்தியகல்லூரிதான். அவர் வேலைபார்க்கும் இடத்துக்கருகிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட தடயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தவறைத் திருத்திவிட்டேன்.
நன்றி.

அதேநேரம் இன்னொருவர் மானிப்பாயைச் சேர்ந்த குடும்பஸ்தர் என்றும் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

வை.கோவிக் பேச்சுக்கான உரல்கள் இதோ.
பாகம் ஒன்று
பாகம் இரண்டு
நன்றி தமிழ்நாதம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]