Friday, May 12, 2006
கடலில் நடந்த கலவரம்
தப்பிச் செல்லல் பற்றி வெளிவந்த செய்திகளின் படி பார்த்தால் ஏதோ உட்குத்து (நன்றி குழலி மற்றும் வலைப்பதிவுகள்) இருக்கும் போல் தெரிகிறது.
ஒன்றில் புலிகளே தப்பிச் செல்ல விட்டிருக்க வேண்டும். அல்லது உடனடியாகவே பல அழுத்தங்கள் புலிகள் மேல் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன இருந்தாலும் 700 இராணுவத்தினருடன் ஒரு கப்பலைத் தகர்ப்பதென்பது உலகளவில் பாரதூரமான விசயம். யாழ்ப்பாணத்தைப் புலிகள் நெருங்கிய 2000 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடந்தது நினைவுக்கு வருகிறது.
இதைவிட புலிகளின் சண்டைப்படகுகளினதும் அந்தக் கப்பலினதும் வேகத்தைக் கருத்திற்கொண்டால் தப்பிச் செல்லல் சாத்தியமேயற்றதென்று உணரலாம்.
அதைவிட, தம்மீது கடற்படை தாக்கியதாலேயே தாம் திருப்பித்தாக்கியதாகப் புலிகள் சொல்கின்றனர். புலிகள் தரப்பில் நாலு பேர் பலியாகியதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். அதாவது தற்காப்புத் தாக்குதலில்தான் இரு டோறாப்படகுகளும் தாக்கப்பட்டன என்பது புலிகளின் வாதம். இந்நிலையில் கப்பலைச் சுற்றிவளைப்பதோ கைப்பற்றுவதோ தகர்ப்பதோ பெரிய விசயமாகிவிடும்.
அல்லது, கப்பல் சுற்றிவளைக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது புலிகளுடன் பாதுகாப்புக் கலங்கள் மோதும்போதே ஏனைய பாதுகாப்புக் கலங்களுடன் கப்பல் அழ்கடல் நோக்கிச் சென்றிருக்க வேண்டும். இந்நிலையில் கப்பல் சுற்றிவளைக்கப்பட்டது என்ற கதை மிகையானது. பார்க்கப்போனால் இதுதான் உண்மைபோலுள்ளது. ஆழ்கடலுகுச் சென்ற கப்பலுக்கு இந்தியப்படை உதவிக்கு வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவை நடந்தபின் வழமைபோல (இது யுத்தம் நடந்த காலத்து 'வழமைபோல'. கிட்டத்தட்ட யுத்தம் தொடங்கி விட்டதை உணர்த்துகிறது) சம்பந்தமில்லாமல் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அரசபடை. கிளிநொச்சியில் வந்து மூன்றுமுறை வான்தாக்குதலைச் செய்துள்ளதுடன் கிழக்கில் எறிகணைத்தாக்குதலையும் நடத்தியுள்ளது. இதில் கிளிநொச்சியில் வான்படைத்தாக்குதல் நடந்தது முக்கியமானது. என்னதான் போலியானதென்றாலும் உலகுக்கு கிளிநொச்சிதான் புலிகளின் தலைமையகம். ஆக, புலிகளின் தலைமையகம் மீதே அரசபடை வான்தாக்குதல் நடத்திவிட்டது. (ஏன் கிளிநொச்சியில் நடத்தாமல் திருமலையில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது என்று கொஞ்சா நாட்கள் முன் யாரோ குழம்பியது போலிருந்ததே?)
வழக்கம்போல கண்காணிப்புக்குழு புலிகளின் கடல் நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கைவிட்டுள்ளது. புலிகளும் பதில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கடலில் கடற்படை மீதான தாக்குதலை மட்டும் கண்காணிப்புக்குழு கண்டித்ததையும், அதைத்தொடர்ந்து அரசபடை மக்கள் குடியிருப்புக்கள் மீது மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்திய வான், தரைத்தாக்குதல்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையென்பதையும் சுட்டிக்காட்டிய புலிகள், கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடற்படை மீது தாக்குதல் நடந்தபோது அக்கலங்களில் கண்காணிப்புக் குழுவினரும் இருந்ததாகச் செய்திகள் வந்துள்ளன. அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கண்காணிப்புக்குழு காட்டமான அறிக்கை வெளியிட்டது. ஆனால் புலிகள் தரப்போ, ஏற்கனவே பலமுறை, கண்காணிப்புக் குழுவினரை கடற்படையினரின் கலங்களில் பயணிக்க வேண்டாமென்று அறிவுறுத்தியதாகச் சொல்கிறது, கண்காணிப்புக்குழுவும் புலிகளால் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஒத்துக்கொண்டது.
கண்காணிப்புக்குழு கடற்படையினரின் கலங்களில் பயணிப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடனே என்று சொல்லும் புலிகள், தாங்கள் கடற்பயணங்கள் மேற்கொண்டபோது அவ்வாறான பாதுகாப்பு ஏதும் கண்காணிப்புக்குழுவால் தரப்படவில்லையென்கின்றனர். எனவே படையினருக்கும் கண்காணிப்புக்குழு பாதுகாப்பு வழங்கக் கூடாதென்று சொல்லும் புலிகள், தங்கள் நடவடிக்கைகளில் கடற்படை குறுக்கிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்பதைப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்படியான சந்தர்ப்பங்களில் சேதங்களைத் தவிர்க்கும் முகமாக கடற்படையினரின் கலங்களில் கண்காணிப்புக் குழுவினரைப் பயணிக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனாலும் கண்காணிப்புக்குழுவினர் தொடர்ந்தும் கடற்படையினரது கலங்களில் பயணம் செய்து வந்துள்ளனர்.
******************************
இவை பற்றி எனது கருத்துக்களை அடுத்த பதிவாக விரிவாக எழுதுகிறேன்.
இப்போது ஒரு பாடலைக் கேளுங்கள்.
படங்களுக்கு நன்றி: அருச்சுனா
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், செய்தி
Subscribe to Posts [Atom]