Friday, May 12, 2006

எங்கள் கடல் எங்களுக்கானது.

மே பதினோராம் திகதி சிறிலங்காக் கடற்படையினர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை நிலைமை மோசமடைந்துள்ளது. அதேநேரம் தீர்க்கமான ஓர் அணுகுமுறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
சிறிலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இரு டோறாப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், 700 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கப்பலொன்று (கண்காணிப்புக் குழுவின் உதவியால்) தப்பியுள்ளது. இது சிங்கள அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கியமானதொரு செய்தி.

புலிகளுக்குக் கடலில் உரிமையில்லை என்று புதிதாக கண்காணிப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகள் பயிற்சி செய்யவோ கடற்பயணங்கள் செய்யவோ அவர்களுக்கு அனுமதியோ உரித்தோ இல்லையென்றும் சர்வதேச நடைமுறைகளின்படி கடற்பகுதி மீதான உரிமை அந்நாட்டுக்கே சொந்தமென்று அவ்வறிக்கை கூறுகிறது.

சர்வதேச நடைமுறைப்படி பார்த்தால், புலிகளுடன் பேசுவது கூடத்தான் இறைமைப்பிரச்சினை. அரச கட்டுப்பாட்டுப் பகுதி போலவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியையும் அங்கீகரிக்கும்போது கடற்பகுதியையும் அங்கீகரிக்கத்தானே வேண்டும்? மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புலிகளுக்கான கடல் தடையைப் பற்றி எந்தச் சரத்துமில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்றிலிருந்தே புலிகள் தங்களுக்கா கடலாதிக்கத்தைத் தெளிவாகச் சொல்லி வருகிறார்கள். அவ்வப்போது சலசலப்பு வந்தாலும் பிரச்சினை பெரிதாகாமல் அமுங்கிவிடும்.

அதைவிட சிறிலங்கா அரசும் கண்காணிப்புக்குழுவும் இவ்வளவுகாலமும் புலிகளின் கடல் இறைமையை அங்கீகரித்தே வந்துள்ளன. புலிகளின் படகுகள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் பயணித்துள்ளன. புலிகளின் பயணத்துக்கு கடற்பயணம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக (ரணில் பாராளுமன்றத்தில் தோற்கும்வரை) இருந்து வந்துள்ளது.
அதைவிட கண்காணிப்புக்குழுத் தலைவரும் சிலதடவைகள் கடற்புலிகள் கடலில் பயிற்சி செய்வது தொடர்பாக சாதகமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அப்போதெல்லாம் புலிகளுக்கிருந்த கடல் இறைமை இப்போது திடீரென இல்லாமற் போனதேன்?
****************************
புலிகளின் கடற்படையின் ஆதிக்கமுள்ள, கடற்பரப்பு உள்ளது. இதை இன்றுவரை சிறிலங்கா அரசும் ஒத்துக்கொண்டு புலிகளின் மறைமுகமான அனுமதியுடன்தான் தன் போக்குவரத்தைச் செய்துவருகிறது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரும்வரைக்கும் முல்லைத்தீவுக் கரையிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்குள் சிறிலங்காவின் கடற்படைக் கப்பல் தொடரணி சென்றதேயில்லை. புலிகள் திருகோணமலைத் துறைமுகத்தையும் தாண்டித்தான் கிழக்கிற்கான அவர்களது பயணங்களை மேற்கொண்டார்கள். அந்தப்பெரிய கடற்படைத் தளத்தைத் தாண்டிச் செல்லும் புலிகளின் கடற்படையை அவர்களால் அழிக்க முடிந்ததில்லை.

மாறாக யாழ்ப்பாணத்துக்கான படையினரின் வினியோகத்தை கடற்புலிகள் மிகமிக நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தனர். அடிக்கடி தொடரணி மீது தாக்குதலை நடத்துவது, சமயங்களில் பாரிய கப்பல்கைளத் தகர்ப்பது, சண்டைப்படகுகளைத் தகர்ப்பது என்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் மக்களைப் பயணக்கைதிகளாக வைத்து கப்பலில் இராணுவத்தினரை ஏற்றியிறக்கியது சிறிலங்காக் கடற்படை. 'City of Trinco' என்ற கப்பல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் யாழ்பபாண - திருகோணமலை மக்கள் போக்குவரத்துக்கென்று பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒருமுறை செஞ்சிலுவைச் சங்கக் கொடியைப் பறக்கவிட்டபடி 1300 இராணுவத்துடன் இக்கப்பல் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்றது. இடைவழியில் புலிகளால் வழிமறிக்கப்பட்டு அது மக்களின் போக்குவரத்துக் கப்பலென்று தாக்காமல் விடுவிக்கப்பட்டது. (பின் செஞ்சிலுவைச் சங்கம் இச்சம்பவத்தை ஒத்துக்கொண்டது).



ஆனையிறவுக்கான் மாபெரும் தரையிறக்கச் சண்டையின்போது கூட சிறிலங்காக் கடற்படையால் தரையிறக்கத்தைத் தடுக்கவும் முடியவில்லை, கடல்வழி வினியோகத்தை மட்டுமே நம்பியிருந்த தரையிறங்கிய அணிகளுக்கான வினியோகத்தையும் தடுக்க முடியவில்லை.

இப்படியிருந்தது தான் சிறிலங்காக் கடற்படை. (தயா சந்தகிரி பொறுப்பேற்றதன்பின் கொஞ்சம் முன்னேறி கடற்புலிகளுக்கு நிகரான நிலைக்கு இறுதிநேரத்தில் வந்திருந்தது சிறிலங்காக் கடற்படை. )

இப்படியிருந்த கடற்படை, இன்றுவரை சுதந்திரமாக முல்லைத்தீவைத் தாண்டிச் சென்று வருகிறது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவுக் கரைக்கே வந்து சேட்டை விட்ட காலங்களுமுண்டு. ஒப்பந்தம் கைச்சாத்தாகி கொஞ்சக் காலத்தின்பின் முல்லைத்தீவுக் கரையிலிருந்து இரண்டு மைல்வரைகூட வந்து மீனவருடன் சொறிந்துவிட்டுச் சென்றது சிறிலங்காக் கடற்படை டோறாக்கள். பலரைத்தாக்கியது. படகுகளை இடித்து மூழ்கடித்தது. முன்பெல்லாம் அறுபது, எழுபது கிலோமீற்றர்களுக்குள் நெருங்காதவர்கள் பின் கரைவரை வந்து சேட்டை விட்டனர். ஒரு கட்டத்தில் கடற்கரை வாழ் மக்கள், 'உடனடியாக யுத்தத்தைத் தொடங்குங்கள்' என்று புலிகளுக்கு மனு அனுப்பிய நிலைவரை வந்தது.



ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இன்றுவரை புலிகளின் மறைமுக அனுமதியுடன்தான் சிறிலங்காக் கடற்படை நடமாடுகிறது. அதாவது புலிகள் தாக்கமாட்டார்கள் என்ற உறுதிமொழியோடு புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக் கடலைப் பாவித்து வருகிறது.
ஆனால் புலிகளுக்கு இதுநாள்வரை அங்கீகரிக்கப்பட்டிருந்த போக்குவரத்து முறையை கண்காணிப்புக்குழுவும் அரசாங்கமும் மறுக்கிறது.
முதலில் கடல்வழிப் பயணத்தைச் செய்துவந்த புலிகளுக்கு அரசாங்கமே வான்வழியை ஒழுங்கு செய்து தந்தது. நீண்டகாலம் அதுதான் நடந்து வந்தது. பின் அவ்வழியை அரசாங்கம் மறுத்தபோது, புலிகள் தங்களது கடல்வழிப் பயணத்தைத் தொடர முடிவெடுத்தனர். அப்போது அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் இலங்கையின் போக்கு பெரும் சிக்கலுக்குள்ளானது.

இந்நிலையில் தாங்கள் கடற்பயணங்களை மேற்கொள்வோம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டனர் புலிகள். அண்மையில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையில் இரு பயணங்களைப் புலிகள் மேற்கொண்டதும், இடையில் கடற்படை வழிமறித்தபோதும் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக பயணத்தை முடித்ததும் குறிப்பிடத்தக்கது.



புலிகளுக்கான போக்குவரத்து முறைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களைப் பேச்சுக்கு வா என்று சர்வதேசமும் சிறிலங்கா அரசாங்கமும் அழைக்கிறது. கிழக்குத் தளபதியோடு கலந்துரையாட ஏதுமில்லையென்ற நிலை இருந்தாலும்கூட புலிகள் அப்படியான சந்திப்பொன்றை ஏற்படுத்தவே முனைகின்றனர். அதன்மூலம் தமக்கான தடைகளிலிருந்து விடுபடுதல் அவர்களது நோக்கம்.

இந்நிலையில் சிங்களத்தரப்புக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழர் தர்பபிலிருந்து தெளிவான பதிலொன்று சொல்லப்பட வேண்டும்.

புலிகளுக்கான பயண வசதிகளை மறுத்துக்கொண்டு,
புலிகளுக்கான கடல் இறைமையை மறுத்துக்கொண்டு, சிங்களத்தரப்பு புலிகள் பகுதியூடாக எப்படிப் பயணம் செய்ய முடியும்?
புலிகளுக்கான கடல் இறைமை மறுக்கப்பட்டால்
சிங்களத்துக்கான கடல் இறைமையும் மறுக்கப்படும்.
புலிகள் கடலில் பயணம் செய்ய முடியாவிட்டால் சிங்களப்படையும் கடலில் பயணம் செய்ய முடியாது.
இந்தச் செய்தி உரத்துச் சொல்லப்பட வேண்டும். அதற்கான முதற்படியே இந்த கடற்படைமீதான தாக்குதல்.

தரையைப் போலவே கடலும் ஒரு பிரதேசம் தான். அதன்மீதான உரிமையும் இறைமையும் தரையைப் போலவே முக்கியமானது. என்ன விதப்பட்டும் அதன்மீதான ஆதிக்கத்தைத் தமிழர் தரப்பு இழந்துவிடக்கூடாது. இற்றை வரையான போராட்ட வெற்றிகளுக்கும் மீட்சிக்கும் கடற்பலமே முதன்மைக் காரணம். புலிகளைப் பார்த்துப் பயப்படுபவர்களும் அதன் கடற்பலத்தைத்தான் முதன்மைப்படுத்துகின்றனர்.

இதைவிடவும் சிறிலங்காக் கடற்படையை முடக்குவதற்கு முக்கிய தேவையொன்று இருக்கிறது. இன்று எடுத்ததுக்கெல்லாம் மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிடுகிறது இராணுவம். அதுமட்டுமன்றி அப்பாதையை வைத்துப் பேரம் பேசுகிறது இராணுவம். ஒரு கிழமைக்கு முன்னர், வவுனியா வழியாக யாழ்ப்பாணம் செல்லும் நெடுஞ்சாலையை மூடிவைத்துவிட்டு, நோர்வேத் தரப்பு ஊடாக புலிகளிடம் பேரம் பேசியது இராணுவம். அதாவது யாழ்ப்பாணத்தில் மக்கள் கதவடைப்பு, எழுச்சி நடவடிக்கைகளைக் கைவிட்டால் தாம் பாதையைத் திறப்பதாக புலிகளுடன் பேரம் பேசியது இராணுவம். பாதை மூடியது தெளிவான யுத்தநிறுத்த மீறல் என்பதைவிட, அந்தப் பேரத்துக்கு நடுநிலையாளர்கள் தூது போனதுதான் ஆச்சரியம். புலிகளின் தெளிவான மறுப்புக்குப்பின் பாதையைத் திறந்துவிட்டார்கள்.

இந்நிலையில் சிங்கள இராணுவத்தின் கேவலமான இன்னொரு பேரம் பேசல் ஞாபகம் வருகிறது.
1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம். ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையை திடீரென மூடிவைத்தார் அப்போதைய இராணுவத்தளபதி லயனல் பலகல்ல. மூடிவைத்துவிட்டு அவர் பகிரங்கமாகப் பேரம் பேசினார். என்ன பேசினார் தெரியுமா?
"புலிகள் அப்போதைய தங்கள் நிலையிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்."
அடப்பாவி!
ஜெயசிக்குறு என்று பெயரிட்டு யாழ்ப்பாணம் வரையான பகுதியைப் பிடிப்பதுதானே உங்கள் இலக்கு?

நீங்கள் சண்டை பிடித்துக் கைப்பற்ற வேண்டியதை, இப்படி மக்களைப் பகடைக்காயாக்கி புலிகளிடமிருந்து இனாமாகப் பெற்றுவிடலாமென்று முடிவெடுக்க உங்களுக்கெல்லாம் வெட்கமேயில்லை.
ஆனால் புலிகள் இணங்கவில்லை. அந்தப் பேரம் நடந்துகொண்டிருந்தபோதே 'ஓயாத அலைகள் -2' என்று பெயரிட்டு கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

இப்படி மக்களின் போக்குவரத்துப் பாதையை மூடி பேரம் பேசுவது இராணுவத்துக்கு வழக்கமாகிவிட்டது. இன்றும் அதைத் தொடர்ந்துகொண்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் மக்களுக்கான போக்குவரத்தை நிறுத்திப் பேரம் பேசுவதற்குச் சரியான மாற்று, புலிகளின் கடற்பகுதியூடான சிங்களக் கடற்படையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான். எங்கே வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.

*******************************
கண்காணிப்புக் குழுவினர் சிங்களப் படையினருக்குப் பாதுகாப்பாக வலம் வருவது தொடர்பாக புலிகள் கேட்ட கேள்வி நியாயமானதே. கடற்படையினருடன் அவர்களின் கலங்களில் பயணம் செல்ல வேண்டாமென்றும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென்றும் கண்காணிப்புக்குழுவுக்கு ஏற்கனவே புலிகள் எழுத்து மூலம் அறிவித்துவிட்ட நிலையில் தொடர்ச்சியாக கண்காணிப்புக் குழுவினர் கடற்படையினருக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புலிகளின் அடுத்த கடற்பயணத்தில் (அனுமதியற்ற பயணம்) தங்கள் படகுகளில் தங்களுக்குப் பாதுகாப்பாக வரும்படி கண்காணிப்புக் குழுவைப் புலிகள் கேட்டிருக்கிறார்கள்.
***************************


உரத்துச் சொல்வோம், எங்கள் கடல் எங்களுக்கானது.

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: Logan

நல்ல பதிவு.எழுத்தைப் பெரிதாக்க முடியாதா?
நல்ல படங்கள். நன்றி.

10.47 13.5.2006
 
வசந்தன் நல்ல நேரத்தில் எழுதப்பட்ட பதிவு. நன்றி!
 
மக்களுக்காக தான் புலிகள் பொறுத்துப்போகிறார்கள்.
பொங்கியெழுந்தால்.......,
பொறுமையிழந்தால்......,
பார்க்கத்தானே போகிறோம் சீண்டுவார்
படப்போகும் பாட்டை!!!!!!!.

அன்புடன்,
துபாய் ராஜா.
 
எழுதிக்கொள்வது: thenisai

arumaiyaana pathivu

21.43 25.5.2006
 
எழுதிக்கொள்வது: thenisai

எழுதிக்கொள்வது: thenisai

arumaiyaana pathivu

21.43 25.5.2006

21.53 25.5.2006
 
arumaiyaana pathivu
 
பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]