Friday, September 29, 2006

யாழ்தேவி முறியடிப்பு

'யாழ்தேவி' என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும்.

28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய பெரும் படைநகர்வொன்றை சிறிலங்கா அரசபடை செய்தது. அந்தப் படை நடவடிக்கைக்கு அரசு சூட்டிய பெயரும் "யாழ்தேவி" தான்.

இராணுவம் முன்னேற எடுத்துக்கொண்ட நிலப்பகுதி தமிழர் சேனைக்குச் சாதகமற்ற பகுதி. முதன்மைச் சாலையான A-9 பாதையூடாக முன்னேறாமல் கடற்கரைப் பக்கமாக, முழு வெட்ட வெளிக்குள்ளால் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டது. அந்த வெட்டையில் இராணுவத்தை எதிர்த்து கடும்சமர் புரிவதென்பது புலிகளுக்கு மிகவும் பாதகமான நிலை. ஆனாலும் புலிகள் அச்சமரை எதிர்கொண்டனர்.

அந்த நடவடிக்கை நடந்தபோது புலிகள் பெரியதொரு வலிந்த தாக்குதலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான 'தவளைப் பாய்ச்சல்' நடவடிக்கைக்கான ஆயத்தமே அது. அணிகள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருந்த சமயம் எதிரி புதிய களமுனையொன்றைத் திறந்திருந்தான். எப்படியும் இந்த முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை இருந்தது.
தவளைப் பாய்ச்சலுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த அணிகளை ஒருங்கிணைத்து தளபதி பால்ராஜ் முறியடிப்புத் தாக்குதலை நடத்துகிறார்.

புலோப்பளை வெட்டையில் புலியணிகள் மிக நன்றாக உருமறைத்துப் பதுங்கியிருந்தன. எந்தக் காப்புமற்ற வெட்டவெளி. முன்னேறிய படையினர் அன்று காலையும் தொடர்ந்து முன்னேறினர். பதுங்கியிருந்த புலியணிகளை அவர்கள் காணவில்லை. அவ்வளவு திறமையான உருமறைப்பு. கைகலப்பு நடக்குமளவுக்கு மிக நெருக்கமாக வந்தபின் இராணுவத்தினர் மீது புலியணிகள் கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. உச்சபட்ச திகைப்புத் தாக்குதலாக அமைந்த அந்த அதிரடியில் நிலைகுலைந்தது சிறிலங்கா அரசபடை. அவர்கள் சுதாரித்து அணிகளை ஒழுங்கமைத்து புலிகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்குள் கணிசமான இராணுவத்தினரை இழந்திருந்தனர்.

தன்னை மீளமைத்துக்கொண்ட இராணுவம் தொடர்ந்தும் மிக மூர்க்கமாகத் தாக்கியபடி முன்னேறியது. புலோப்பளை வெட்டையில் மிகக்கடுமையான சமர் நடந்தது. அரசபடையினரின் முக்கிய பலமாகக் கருதப்பட்ட டாங்கிகளில் இரண்டை புலிகள் அழித்தனர். எதிரித்தரப்பில் இழப்புகள் அதிகமாகிக்கொண்டு வந்தது. இறுதியில் தனது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு பழையபடி இயக்கச்சிக்கே திரும்பியது இராணுவம்.

வெற்றிகரமாக அந்த "யாழ்தேவி" நடவடிக்கை புலிகளால் அன்று முறியடிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி திட்டமிட்டபடி பூநகரி மீதான தமது பாய்ச்சலையும் நடத்தினர் புலிகள்.
புலோப்பளைச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. அதாவது முழுமையாக தமக்குச் சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்.

இதில் கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ் /நாயகன் உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________________

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: thuyawan

பால்ராஜ் அண்ணானின் தலைமையில் நடந்த தாக்குதல் தொடர்பாக சிவராமும் கட்டுரை தீட்டியிருந்தார். பதிவுக்கு நன்றி வன்னியன்.

அந்த்த தாக்குதலில் இராணுவத்துக்கு இழப்பு எவ்வளவு என்று சொல்லமுடியுமா?

10.13 30.9.2006
 
வருகைக்கு நன்றி தூயவன்.
இராணுவத் தரப்பு இழப்புப் பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால் கடும் இழப்பைச் சந்தித்தது என்பது உண்மை.
அந்நடவடிக்கையில் புலிகளால் அழிக்கப்பட்ட டாங்கிதான் பின்னர் முத்திரைச் சந்தியில் இருந்த கிட்டு பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]