Tuesday, February 20, 2007

ஆட்டக்கடிச்சு மாட்டக் கடிச்சு பிரபாகரனையும்...

உணர்வுகள் என்ற பதிவாளர் போகிறபோக்கில் பொய்யொன்றைப் பரப்பிவருகிறார்.
அதன்மூலம் தான் நினைப்பதை, தனது வாதத்தை நிலைநிறுத்த கீழ்த்தரமான முறையில் முயல்கிறார்.

"பிரபாகரன் வற்றாப்பளையில் பொங்காமல் எந்தப் போருக்கும் செல்வதில்லை" என்ற வடிகட்டின பொய்யொன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறார்.
இப்போது மடுமாதாவும் சேர்ந்துவிட்டா.

இது முற்றிலும் கடைந்தெடுத்த பொய்யென்பதைச் சொல்லிக்கொள்ளவே இந்த அவசரப்பதிவு.
எந்தப் போருக்குப் போவதற்கும் எங்கும் பொங்கல் நடத்தப்பட்டதில்லை.
கோயிலில் மந்திரித்த நூல் கட்டுவதற்குக்கூட சிலதுறைகளையும் சில செயற்றிட்டங்களிலுமுள்ள போராளிகளைத் தவிர்த்து யாருக்கும் அனுமதியில்லை.


நேர்த்திக்கடன் என்றபேரில் காவடிகூட எடுக்க முடியாது. அதற்கு முற்றாகத் தடை.
முழுநேரப் போராளிகளை விடுங்கள்.
ஊதியத்துடன் பணிபுரியும் துணைப்படையினருக்கிருக்கும் கட்டுப்பாடுகள் எவ்விதத்திலும் குறைந்ததில்லை. போராளிகள் போலவே புகைத்தல் மது என்பவற்றுக்கு மிக இறுக்கமான தடை இருப்பதுபோல் மத விடங்களுக்கும் இருக்கிறது. துணைப்படையில் பெரும்பான்மையானோர் குடும்பத்தலைவர்கள். குழந்தைக்கு நேர்த்தியென்றுகூட காவடி தூக்க முடியாது. ஏனென்றால் போராளிகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்றுத்தான் அவர்கள் துணைப்படையில் சேர்கிறார்கள். (இதை மதவுரிமை தலையீடு என்று சிலர் புலியெதிர்ப்பு நோக்கத்துக்காகச் சொல்லலாம்.)
இதுவும் மதச்சார்பின்மைதான்.
ஆனால் உண்மையை விட்டுவிட்டு எதிர்வளமாக கதை திருப்பப்படுகிறது.
மதச்சார்பின்மை என்பதை தனக்கேற்ற முறையில் வெளிப்படுத்துவது என்ன சார்பு?

தீபாவளியைத் தடைசெய்யாவிட்டாலும் அதற்கு எதிரான உணர்வு வெளிப்படையாகவே அங்கு இருக்கிறதே?
(தீபாவளிக்கும் சைவத்துக்கும் தொடர்பில்லையெண்டு ஒரு பதிவு வந்தால் மகிழ்ச்சி)


புதுவை இரத்தினதுரை நல்லூர்க்கந்தனை விளித்துப் போராட்டப் பாடல்கள் எழுதியவை வைத்து புலிகள் இயக்கத்தில் சைவத்தன்மையைக் கண்டுப் புல்லரித்துப் போனவர்கள் வன்னிக்கு வெளியே நிறைய இருக்கிறார்கள். புலத்தில் ஏராளம்பேர்.
ஆனால் அந்த மனுசன் பொதுவிலேயே சாமிகளையும் மதத்தையும் கிழிப்பதைப் பார்த்தவர்களுக்கு மயக்கமேதும் இருப்பதில்லை; பொதுவிலே பழித்தும் பாடலில் விளித்தும் எழுதும் தன்மையையும் புரிந்துகொண்டிருப்பார்கள்.


சரி, விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரான தமிழேந்தி, கல்விக்கழகப் பொறுப்பாளரான இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோருட்பட சிலர் மதம், ஆரியம், திராவிடம், பார்ப்பனீயம் பற்றி பொதுமேடைகளிற்கூட பேசியைவை எவையுமே உணர்வுகள் கேட்டிக்கவில்லையா? அவருக்குரிய தகவல் மூலங்கள்கூட அறிந்திருக்கவில்லையா? (நான் சொல்வது நிகழ்காலம்பற்றி). மேற்கூறியவர்கள் தீவிர தமிழ்ப்பற்றாளர்(வெறியர்?)கூட.
இவர்களிருவரின் கருத்தும்தான் புலிகளினதோ ஈழத்தமிழரினதோ கருத்தென்று நான் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. ஆனால் கருத்துலகில் செல்வாக்குச் செலுத்தும் மிக முக்கிய நபர்கள் அவர்கள்.

சுயமரியாதைத் திருமணங்கள் எங்களிடம் கிடையாது என்று உணர்வுகள் சொல்லிக்கொள்கிறார்.
போகட்டும்.
சுயமரியாதைத் திருமணம் என்பதை விட்டுவிவோம்.
தமிழ்த்தேசியத்தைத் தாங்கி நிற்பதாக, அதை வழிநடத்துவதாக நானும் உணர்வுகள் வலைப்பதிவு வைத்திருப்பவரும் கருதும் பிரபாகரனும் அவரது இயக்கமும் என்ன செய்கிறது?

போராளிகளின் திருமணங்கள் எப்படி நடக்கின்றன?
தாலி கட்டாமல் திருமணம் செய்வதையே வரவேற்பதாக போராளிகளை "பிரபாகரனின்" தலைமை ஏன் அறிவுறுத்துகிறது?
தாலியில்லாத திருமணங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் நடப்பது ஏன்?
ஏன் ஐயரோ மந்திரமோ வைத்து ஒரு திருமணம்கூட நடத்தப்படுவதில்லை?
கிறிஸ்தவ முறையில்கூட எந்தத்திருமணமும் நடப்பதில்லை?
போராளிகளின் திருமணங்கள் அனைத்திலும் மதம் முற்றாகப் புறக்கணக்கப்பட்டு நடத்தப்படுவது ஏன்?

இயக்கத்தில் திருமணம் முடிந்தபின் சம்பிரதாயமாக, குடும்பத்தவரின் அரியண்டத்தால் கோயிலுக்குப் போய் தாலி கட்டிய தளபதியொருவரை அமைப்பிலிருந்தே நிறுத்தவேண்டி வந்தது ஏன்?

இதுவொன்றும் தெரியாமல் உணர்வுகள் வலைப்பதிவு வைத்திருப்பவர் சும்மா உளறக்கூடாது.
தான் கேள்விப்பட்டதாக நினைப்பதைத் திரும்பத்திரும்பச் சொல்வதன்மூலம் தான் சொல்லும் தர்க்கங்களுக்கு வலுச்சேர்க்கவே இவர் முனைகிறார்.
தொடக்ககாலத்தில் நடந்த பிரபாகரனின் திருமணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதை எல்லாருக்கும் பொருத்திவிடுவது சரியன்று. இயக்கத்தில் காலத்துக்குக் காலம் நடைமுறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளது, தொடக்கத்தில் மாவீரரின் வித்துடல்கள் அனைத்தையும் எரிப்பதிலிருந்து பின் அனைத்தையும் புதைப்பதற்கு மாறியதுபோல.

குறிப்பிட்ட பதிவரின் ஏனைய கருத்துக்கள் தொடர்பில் எனக்கு எக்கருத்துமில்லையென்றபோதும் இப்படியான கூற்றுக்களை உடனேயே மறுக்கவேண்டிய தேவை - அதுவும் திரும்பத்திரும்பச் சொல்லும் நிலையில் - உள்ளதென்பதால் இம்மறுப்புப் பதிவு.

மற்றவர்கள் என்ன பூசுகிறார்களோ இல்லையோ, முதலில் நீங்கள் இப்படியான பொய்மையான பூச்சுக்களை நிறுத்துங்கள்.

மதச்சார்பின்னை என்பது எல்லா மதத்தையும் கும்பிடுவதாகச் சொல்லி நிறுவவேண்டியதில்லை. உண்மையாக இருக்கும் (பிரபாகரனின்) சார்பின்மையாக எதையும் கும்பிடாமல் இருப்பதைச் சொல்வதே சரி.

பிரபாகரனின் மாமனாரின் சைவத்தனத்தை மருமகனுக்கும் பொருத்துவதில் புலியெதிர்ப்பாளர்களும், புலியாதரவில் மிதமிஞ்சிய சைவத்தனமானவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடக்க காலத்திலே பிரபாகரன் மொட்டையடித்திருந்ததை, திருப்பதியில் மொட்டையடித்ததாக இன்றுவரை சொல்லிக்கொண்டு திரிவோருண்டு. இதையெல்லாம் மறுக்கும் விதமாக தான் எதிரிப்படையினரால் அடையாளப்படுத்தப்படாமலிருக்கவே மொட்டையடித்துத் திரிந்தேன் என பிரபாகரன் ஒளிச் செவ்வியில் சொல்லியிருக்கிறார்.
இதுபோல் இன்னும்பல கதைகள் கட்டப்பட்டு, பரப்பப்பட்டு உலாவருகின்றன.
பிரபாகரன் கிறித்தவத்துக்கு மாறிவிட்டார், மகனுக்குக் கிறித்தவப் பெயர் வைத்துவிட்டார், கிறித்தவ நாட்டுக்காகச் சண்டைபிடிக்கிறார் என்று இந்திய இந்துத்துவவாதிகள் புலம்புவதைப் போல்தான் இவையும்.

________________________________
ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று உணர்வுகள் (அவரோடு கூட்டுச் சேர்ந்து வெற்றி, மயூரேசன்) புலம்புவதைக்காண திகைப்பாக இருக்கிறது. அல்லது அவரே இறுதியாகச் சொன்னதுபோல், "எங்கள் அழுக்குகளை மற்றவர்க்குக் காட்டக்கூடாது" என்ற கோட்பாட்டின்படிதான் தனக்கே பொய்யென்று தெரிந்தும் தொடர்ந்து சொல்கிறாரோ?
இதே கண்ணோட்டத்தில்தான் தமது பதிவுப்பெயர்களினூடாக பின்னூட்டம் இட்டோரின் கருத்துக்களைக்கூட வெளியிடாமல் முடக்கி வைத்திருக்கிறாரோ என்னவோ?

களத்தைவிடவும் புலத்தில் அந்தச்சிக்கல் அதிகமிருப்பதைப் பார்க்கிறோம்.
தேசிய நாளிதழ்கள் என்று இலட்சக்கணக்கில் விற்பனையாகும் முன்னிணிப் பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களில் வராத சாதியா?
ஒழித்துவிட்டதாகச் சொல்லி பம்மாத்துப் பண்ணுவது என்ன அரசியல்?
அதை ஒளித்து வைக்கக்கூட முடியாதபடி முற்றியிருக்கிறது.
__________________________

நெடுங்காலமாகவே இணையத்தில் எழுதிவரும் பெயரிலி என்ற இரமணிதரனை ஈழ எதிர்ப்பாளனாகவும், துரோகியாகவும் (இச்சொல் தனது உண்மையான கருத்தையிழந்து கண்டகண்ட குஞ்சு குருமன்களாலும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்படுகிறது) அடையாளப்படுத்தி குறிப்பிட்ட பதிவர் எழுதுவது பெரிய வேடிக்கை.
மற்ற வலைப்பதிவுகளையும் வாசிக்க சிறிது நேரமொதுக்கினால் புண்ணியமுண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வலைப்பதிவில் தமிழ்மண திரட்டி நிர்வாகம் தன் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியை இந்த வலைப்பதிவுக்கு நிறுத்திக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தாமல் வரும் அனைத்துப்பின்னூட்டங்களும் வெளியிடப்படும்.
இதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேனாயினும் இப்பதிவில் இதைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் இருக்கிறது.

Labels: ,


Comments:
சுடச்சுடப் பதிவு போட்டிருக்கிறீர்கள்.
நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன்.

திருமலையான்
 
A post very very needed to show the uglyness of the liers.
 
உண்மை நிலையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி வன்னியன். தனக்கெதிராக எழுதப்படும் பின்னூட்டங்களை அவர் அனுமதிப்பதில்லை என்பதனோடு தனக்குத்தானே முதுகில் தட்டுவதுபோல தனக்குத்தானே பின்னூட்டிக்கொள்வது அவரது வழமை.
ஒரு தடவை அவருடைய பக்கத்திற்குப் போய்க் கருத்துச் சொன்னவர்கள் மறுதடவை அந்தப் பக்கமே போகமாட்டார்கள். அவ்வளவு 'நாகரிகமான'மனிதர் அவர். அவருடைய உளறல்களை, தான் கவனிக்கப்பட வேண்டுமென்பதற்காக அவர் கிளப்பிவிடும் சர்ச்சைகளை, தூண்டும் பிரிவினைகளை தமிழ்மணம் ஏன் கண்டுகொள்ளாதிருக்கிறது என்பது குறித்து எனக்கு உள்ளார்ந்த வருத்தமுண்டு. ஈழத்தமிழர்கள்-இந்தியத்தமிழர்கள் என்று சிண்டு முடிந்துவிடப் பார்க்கிறார். போதாததற்கு தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் வேறு. இவ்வாறானவர்களை ஒரு வாக்கெடுப்பு நடத்தி விலக்கிவைப்பதே செய்யவேண்டியது.
 
உணர்வுகள் என்ற போலிப்பதிவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோசத்தோடு சைவ வேளாள மனநிலையில் இருந்து விசம் கக்கும் பதிவுகளைத்தான் இடுகின்றார். மோசமான முறையில் முஸ்லிம் எதிர்ப்பு (முஸ்லீம்கள் தனி இனமாக இருப்பதில் அவருக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை) க் கொண்டு சைவச் சத்தி எடுக்கும் அவரது பதிவுகளில் அவரது கருத்துத் தளம்பல்களையோ, முரண்களையோ சுட்டிக் காட்டினாலோ, அவரது கருத்தின் முகமூடிகளை கிழித்தெறியும் விதமாய் எழுதினாலோ, அவர் ஒருபோதும் அதனை வெளியிடுவதில்லை.

விரல் சூப்பும் குழந்தைகள் வலைப் பதிய வருவதில் உள்ள சிக்கல்களில் இதுவும் ஒன்றாயினும் மொத்த ஈழத்தவரின் கருத்துக்கள் என்ற வகையில் கும்மியடிக்கும் அவரின் நச்சுக்களுக்கெதிராக சக ஈழத்தவர் என்ற வகையில் எமது மறுப்புக்களைச் சொல்வது அவசியம்.

ஆபாசமான அல்லது கருத்துக்களுடன் சம்பந்தப்படாத தனி நபர் மீதான தாக்குதல்க் கருத்துக்களை தவிர்த்தல் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் தான் மாய்ந்து மாய்ந்து கிறுக்கித் தள்ளிய எழுத்துக்களை கேள்விக்குறியாக்கி விடுமோ எனக் கருதும், அவருக்கு இருக்கின்ற உளச் சிக்கலை தோலுரிக்கும், அவரின் யாழ்ப்பாண வேளாள மனோபாவத்தை அவரின் பதிவகளிலிருந்தே சுட்டும் கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

புலி ஆதரவுப் போர்வையை ஒருவர் போர்த்துக் கொண்டு விட்டார் என்பதற்காக அவரை அரவணைத்துப் போக வேண்டும் என்ற எண்ணம் ஈழ மக்களுக்கு கொஞ்சமும் கிடையாது.

மிக அண்மையில் தனது சைவத் திமிரைக் காட்ட பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் உதாரணத்திற்கு இழுத்தபோதே இவர் இன்னொரு நிதர்சனம் .கொம் என்று புரிந்து விட்டது.

புலிகள் தமிழர் பண்டிகை என்ற முறையில் பொங்கல் கொண்டாடுவது தவிர வேறெந்த சைவப் பண்டிகைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

புலிகள் அமைப்பில் தமிழர் பண்பாடும் சைவமும் பிரித்தே நோக்கப்படுகின்றன. புலிகளின் திருமண நிகழ்வுகளில் சைவ ஆகம விதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தாலி கூட வரவேற்கப் படுவதில்லை. மணமகனுக்கு ஒரு கைக்கடிகாரம் அணிவதும் மணமகளுக்கு ஒரு மோதிரம் அணிவதுமே பொதுமை. ,

இவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம் இது தான். ஈழத்தை வெறும் யாழ்.கொம் ஊடாகவோ உணர்வுகள்.கொம் ஊடாகவோ நிதர்சனம் .கொம் ஊடாகவோ கண்டு கொள்ளாதீர்கள். அனுபவங்கள் எழுத்தக்களை தீர்மானிக்கின்றன என்ற பீலா அவரின் அனுபவம் எத்தகையது என்பதைச் சொல்கிறது.

இப்பதிவுக்கு எதிர்வினையாக விரைவில் உணர்வுகளில், கழுவியின் கழிவுகள் என்ற பெயரில் அவர் ஒரு பதிவு எழுதலாம். ஏற்கனவே உணர்வுகள் தளத்தில் கொழுவியை கழுவி என அவர் விளித்துள்ளார். அது கூட உவன் சீவுறவன், உவன் மீன்பிடிக்கிறவன் என மனிதரைத் தொழில் முறையில் இழிவு படுத்தி வக்கிரத்தை வெளிச்சிந்துகின்ற யாழ்ப்பாண வெள்ளாள சாதித் திமிரின் ஒரு நீட்சிதான்.
 
உணர்வே இல்லாத உணவுகளின் மட்டமான பதிவுகளுக்கு நீங்கள் அதிகமாக உணர்சிவசப்படக்கூடாது:-))
 
புதுவை எழுதிய நல்லைக் கந்தன் பாடல்கள் ஆரம்பத்தில் புலிகளின் குரலில் ஒலிபரப்பாயின. ஆயினும் அது மதச் சார்பற்ற ஒரு அமைப்புக்குச் சரியானதல்ல என புலிகளின் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டு பின்னர் அவற்றை ஒலிபரப்பக் கூடாதென பிரபாகரன் உத்தரவிட்டுள்ளமை கனடாவில் இருந்து கொண்டு ஈழத்தைக் காணும் அறிவிலிப் பெருமகனாருக்குப் புரியாது.
 
he is a fraud, known to majority of lankans. ignore him
 
பூராயம்,

இவரின் நேற்றைய பதிவுக்கிட்ட ஒரு பின்னூட்டத்தை இன்னமும் விடவில்லை. "ரமணி என்பவர் இவர் சொல்லும் "I said that because your blogger ID doesn't lead to any blog. It seems that you have hid your blog. That mean you don't want to reveal your blog and it could be a blog just made to comment" காரணத்துக்காக, ஒரு போலி என்றே வைத்தாலுங்கூட, அதே காரணங்களைக் கொண்டு போலி என்று காட்டக்கூடிய ஹனுமான், ரூபன் ஆகியோரின் பின்னூட்டங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதேனோ?" என்று கேட்ட பின்னூட்டத்தினை விடமாட்டாராம். இவரை ஆதரிக்கும் கரு. மூர்த்தியோ இன்னமும் வெகுசுத்தமான ஆள். இரண்டு இடுகைகள் பதிந்திருக்கின்றார். அதற்குப் போலியாகவே இருப்பது மேல்.
இந்த மாதிரியான வேலையைப் பார்க்கும்போது, நான் இவருக்கு எழுதிய அவசரப்பின்னூட்டத்தைக்கூட முழுமையாக வாசிக்காமல், இராஜராஜசோழன் என் குஞ்சியப்பன் என்று நிறுவ வெளிக்கிடும் மோட்டுத்தனத்துக்கு இருத்தி வைச்சு உரைப்பதா, இல்லை மலையேறி உதைப்பதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறன். பின்னூட்டங்களை விடாமல், ஒளிச்சு வைச்சு கள்ளன் பொலிஸ் விளையாடும் குரங்குத்தனத்தின்ற பதிவிலை போய்ப் பின்னூட்டம் விடுகிறதாயில்லை. உதுக்கு அங்கே அவரே சொந்தமாயும் இலங்கைத்தமிழிலே எழுதுகிறேனெறு அரைகுறையாட்டம் ஆடும் அமேதிப்படைக்காவலாளிகளுமே பதிலைப் போட்டுக்கொள்ளட்டும்.
ஒண்டு தானாய் விளங்கோணும்; அல்லது, மற்றவன் சொல்லியாச்சும் விளங்கோணும். இரண்டும் சரிவராட்டி என்ன செய்யிறது?
நந்திக்கொடி ஏன் வந்ததென்று விளக்கம் கொடுக்கிறார். ஆனால், நான் என்ன சொன்னேனென்று சரியாக வாசிக்கவில்லை. புலிக்கொடி பிரபாகரன் வைத்தது (இராஜராஜ)சோழனின் தொடர்பினாலென்று இவர் நிறுவி, சோழரின் வாரிசு ஈழத்தமிழரென்றால், ஏன் நந்திக்கொடியை வைத்து பல்லவரின் வாரிசுகள் ஈழத்தமிழரென்று நிறுவமுடியாதெனக் கேட்டேன். அதை விளங்கிக்கொள்ளாமல், நந்திக்கொடிக்கலம்பகம் எழுதுகிறார்.
சோழருடன் வந்த படையினரின் (இவர்கள் சோழ அரசகுலத்தினைச் சேர்ந்தவர்கள் அல்லர்) வழி வந்தவர்களுக்கும் சோழகுலத்திலே வழி வருவதற்குமான வித்தியாசத்தைப் பற்றிச் சொன்னால், கணபதிப்பிள்ளையின் வரலாற்று நூல் வியாக்கியானம் கொடுக்கிறார்; இவ்வியாக்கியானம் எங்கே இராஜராஜசோழனின் வாரிசு ஆரூரன் என்று நிறுவுகிறதோ எனக்கென்றால் வெளிச்சமில்லை. இதுக்கு வேண்டுமானால், இராசநாயகம் முதலியாரின் வரலாற்று நூலைத் தேடியெடுத்து நான் விளக்கம் எழுதுறதோ?
 
என்ன நிறையப்பேர் அனாமதேயமாகவே வந்திருக்கிறீர்கள்?

கருத்துச்சொன்ன அனானிகளுக்கு நன்றி.

கொழுவி,
பின்னூட்டங்களை வெளிவிடாத சிக்கல் மிகப்பாரதூரமானது.
அப்பதிவர் ஈழத்தவரின் ஒட்டுமொத்தக் குரலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டும் கருதிக்கொண்டும் கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான மறுப்புப்பின்னூட்டங்களை வெளிவிடாமல் தணி்க்கை செய்வது மிகக்பெரிய வன்முறை மட்டுமன்றி, ஈழத்தமிழர் அனைவரின் சார்பாகவும் தான்சொல்வதே சரியென்று நிறுவமுயலும் ஒற்றைத்தன்மையைக் கொண்டது.
இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது.

அவரின் பதிவுக்கு ஒரு மறுப்புப்பின்னூட்டம் போடவே முதலில் நினைத்தேன். ஆனால் ஏற்கனவே இருக்கும் பட்டறிவு அதற்கு இடம்தரவில்லை.
முன்பும் இவருக்கு மறுப்புப்பதிவு எழுத நினைத்து, நாங்கள் பதிவெழுதுவதாலேயே இவரை முக்கியத்துவப்படுத்துகிறோம் என்ற புரிதலோடு அதைக் கைவிட்டிருந்தேன்.
திராவிட சக்திகளை ஒன்றுக்கும் உதவாததாகச் சொல்லி, பார்ப்பனச் சக்திகளே அதிகாரத்திலிருப்பதால் அவர்கள்பக்கம் ஈழத்தவர்கள் சாயவேண்டுமென்று எழுதியபோது இது நடந்தது.
இவர் பயன்பாடற்றதாகச் சொல்பவர்கள் இல்லையென்றால் இன்று பிரபாகரனும் இல்லை; புலிகள் இயக்கமுமில்லை. எழுபதுகளின் தொடக்கத்தில் பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வளர்த்துவிட்ட ஜனார்த்தனன் உட்பட்டவர்கள் ஏதோவொரு விதத்தில் 'திராவிடம்' என்ற சொல்லோடு தம் அரசியலைத் தொடர்புபடுத்திக்கொண்டிருந்தவர்கள். பெ.மணியரசன், ஜெகதீசன் முதற்கொண்டு வெளியே அதிகம் தெரியாத இன்னும் பலரைச் சொல்லலாம். புலிகள் இன்றுவரை மானசீகமாக அன்பு வைத்திருப்பதும் அவர்களிடத்தில்தான்.
இவர்சொல்லும் பார்ப்பனர் யாரும் அன்றும்சரி, இன்றும்சரி போராட்டத்துக்குப் பக்கபலமாக நின்றதில்லை.
வரலாற்றையும் அனுபவத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு காற்றடிக்கும்பக்கம் சாய்வதென்றால் எங்கள் முந்திய தலைவர்கள்போல் சிங்களவனோடயே சாய்ந்திருக்கலாம்.
இது விரிவாக எழுதவேண்டிய பதிவாயினும், அதை எழுதப்போவதில்லையாதலால் இங்கு மெலிதாகத் தொட்டுச் செல்கிறேன்.

அப்படியொரு மறுப்பைப் பதிவாக்கி அவர்மீது ஒளிபாய்ச்ச வேண்டாமென்று பேசாமலிருந்தால், நிலைமை மோசமாகப்போகிறது. பிரபாகரன் பொங்கும் கதை வந்தபோதும் மறுப்பெழுத எண்ணிவிட்டுப் பேசாமலே இருந்துவிட்டேன்.
இப்போதுபார்த்தால் அதேகதை மீண்டும்மீண்டும் சொல்லப்படுகிறது.

பதிவுகள் வைத்திருப்பவர்கள் இனி மறுப்புக்களை இயன்றவரை பதிவாக்குவது நன்று. பின்னூட்டத் தணிக்கைக்கு மாற்று நடவடிக்கை பற்றியும் யோசிக்க வேண்டும்.
_________________________________
கொழுவி, புலிகளின் திருமணம் பற்றிய உங்கள் கருத்தில் பிழையுண்டு.
மணமகளுக்கு மோதிரம் அணிவிக்கப்படுவதில்லை.
 
ஈழம்குறித்த வேறுசில பார்வைகளைத் தந்தது. நன்றி.
 
பெயரிலி,
எனது பெயரை பூராயம் என்றே மாற்றிவிட்டீர்களா?
சரி, எந்தப் பேரில் கூப்பிட்டால்தான் என்ன?

உங்கள் வரவுக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.
பின்னூட்டங்களை ஒளிப்பதற்கு கொழுவி மாற்று நடவடிக்கையொன்று செய்கிறார்.
பார்ப்போம் எதுவரை போகிறதென்று.

இப்பதிவுக்குக்கூட ஓர் அலட்டல் பதிவுதான் அங்குப் பதிலாக இடப்பட்டுள்ளது.
இதில் சொல்லப்பட்ட எந்த மறுப்புக்கும் அங்கே பதிலில்லை.
மாறாக காழ்ப்புணர்வுடன் வலையைப் பிராண்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு பதிவுக்குத் தொடர்புடையதாக -அதுவும் மறுப்புப்பதிவொன்று - இட்டால் குறிப்பிட்ட முதற்பதில் ஓர் இணைப்புடன்கூடிய பின்னூட்டமிடும் வலையுலக வழமையைக்கூட விளங்கிக்கொள்ள முடியாமல் குளறிக்கொண்டு திரிகிறார்.
இவர்களுடன் வாதிடுவதற்கு என்ன இருக்கிறது?
 
--ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று உணர்வுகள் (அவரோடு கூட்டுச் சேர்ந்து வெற்றி, மயூரேசன்) புலம்புவதைக்காண திகைப்பாக இருக்கிறது. அல்லது அவரே இறுதியாகச் சொன்னதுபோல், "எங்கள் அழுக்குகளை மற்றவர்க்குக் காட்டக்கூடாது" என்ற கோட்பாட்டின்படிதான் தனக்கே பொய்யென்று தெரிந்தும் தொடர்ந்து சொல்கிறாரோ?--

சுட்டி குடுங்க. படிக்க வேண்டும்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]