Wednesday, June 06, 2007

தொண்டரமைப்புக்கள் மீதான அரச பயங்கரவாதம்

நான்கு நாட்களின் முன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர் இருவர் கொல்லப்பட்டனர். இவர்கள் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள். இச்சம்பவம் வழமைபோலவே உடனடி அதிர்ச்சியலைகளைக் கிழப்பி பின் படிப்படியாக அமுங்கிக்கொண்டிருக்கிறது.

இக்கொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை அமைப்பை அழைப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். பன்னாட்டுக் குழு பற்றிய பேச்சு வருவது இதுதான் முதற்றடவையன்று. ஏற்கனவே தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 'மாமனிதர்' ரவிராஜ் கொலை, மூதூரில் பன்னாட்டு நிறுவனப் பணியாளர் கொலை என்பவற்றிலெல்லாம் இதே கூத்துத்தான் நடந்தது. வந்தவர்களும் புதைத்த பிணங்களை மீளத் தொண்டியெடுத்து ஏதோ செய்துவிட்டு, இறுதியில் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லையென்றுவிட்டுப் போனவர்கள்தாம். இப்போது மீண்டும் பன்னாட்டுக்குழு விசாரணை என்ற கண்துடைப்பு. 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்பதுபோல வெளிப்படையான உண்மைகளை மறைக்க விசாரணைக்குழு என்ற பித்தலாட்டம் காட்டுவது 'அரசுகளுக்கே' உரிய பொதுமையான தந்திரம்.

இங்கு, பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது தொடர்பில் எமக்கு மாற்றுக்கருத்தும் மிகக்கடுமையான விமர்சனமும் உண்டு. அவை மிகத்திட்டமிட்ட முறையில் தீவிரமான ஓர் அரசியலோடு பணியாற்றுபவை. பெரும்பாலான நேரங்களில் விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் பாதகமான செயற்பாடுகளையே செய்பவை. உலகின் வேறுசில பகுதிகளில் நடந்தது, நடப்பது போல் இவர்களின் வாகனங்கள் வருவதைக்கண்டதும், தேவனின் தூதர்களைக்கண்டதைப்போல் பின்னாலே கத்திக்கொண்டு ஓடுவதும், தெண்டனிட்டுப் பொருட்கள் வாங்குவதும் ஈழத்தில் என்றும் நடந்ததில்லை. அப்படியொரு மயக்கம் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மேல் இல்லாமலிருந்ததற்கு முக்கிய காரணம் "தமிழர் புனர்வாழ்வுக் கழகம்". எல்லா நேரத்திலும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிக்கொண்டிருப்பது இவ்வமைப்புத்தான்.

இடப்பெயர்வு நேரங்களில் சில பிளாஸ்ரிக் வாளிகள், பாய்கள், தற்காலிகக் கூடாரங்கள் என்பவற்றை வாங்கியதைவிட, ஈழத்தமிழர்கள் மனமார பன்னாட்டு அமைப்புக்களுக்கு நன்றி சொல்லவேண்டிய ஒரு கடமைப்பாடு உண்டென்றால், அது பொதுமக்கள் கொல்லப்படுவதையும் கொல்லப்பட்ட எண்ணிக்கையையும் உலகுக்கு உறுதிப்படுத்த எங்கள் பகுதியிலிருக்கும் ஒரே சக்தி இவர்கள் என்பதுதான். தமிழர்களின் அவலங்களை இந்த அமைப்புக்கள் சொல்லும்போதுதான் ஓரளவாவது நம்பத் தலைப்பட்டார்கள். ஆனால் அந்தப்பணியைக்கூடச் செய்ய விடாமல் தடுத்துவருகிறது இப்போதைய சிங்கள அரசு. வாகரையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியற்றுப் பட்டினியால் வாடியபோதும், தொடர்ந்த எறிகணைவீச்சில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வசதியற்றுத் தவித்தபோதும், கொத்துக்கொத்தாக குண்டுவீச்சில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், அப்பகுதிக்கான வினியோகத்தைத் தடுத்தது மட்டுமன்றி பன்னாட்டுத் தொண்டுநிறுவனங்களின் செயற்பாடுகளையும் அப்பகுதியில் முடக்கி வைத்திருந்தது சிறிலங்கா அரசாங்கம். தொண்டுநிறுவனங்களுக்கான முழுமையான செயற்பாட்டுத் தடையை விதித்திருந்தது அரசு. இவர்களும் தங்களுக்கு அங்குச் செல்ல அனுமதியில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துக்கொண்டிருந்துவிட்டார்கள்.

அதேபோல் நீண்டகாலம் தமிழர்பகுதியில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொண்டர்கள் சிலரை கட்டாயப்படுத்தி நாடுகடத்தியது தற்போதைய அரசாங்கம். இதில் மருத்துவக்குழுவொன்றும் அடங்கும். போரினால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஒரு சிறு உதவிதன்னும் கிடைக்கக்கூடாதென்பதில், அங்குள்ள அவலங்கள் வெளியுலகத்துக்குத் தெரியக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இயங்கியது ராஜபக்ஷ அரசு. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான தமிழர்புனர்வாழ்வுக் கழகம் மீதும் கைவைத்தது. புனர்வாழ்வுக் கழகத்துக்குரிய அலுவலகங்கள், களஞ்சியங்கள் என்பன அடிக்கடி தாக்கிச் சேதமாக்கப்பட்டதோது அங்கிருந்த பொருட்களும் அரசபடையால் கொள்ளையிடப்பட்டன. வங்கிக் கணக்கிலிருந்த புனர்வாழ்வுக் கழகத்துக்கான இலட்சக்கணக்கான ரூபாய் நிதியைச் சூறையாடியது அரசு. இலட்சம் பேரைப் பராமரித்துக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்துக்கான நிதியைச் சூறையாடியது மூலம் மிகப்பெரும் அவலமொன்றைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது அரசு.

இன்றும் பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களுக்குச் சுதந்திரமான செயற்பாடுகள் அனுமதிக்கப்படவில்லை. என்னேரமும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்ற எச்சரிக்கை அரசாலும் அரசிலுள்ள கட்சிகளாலும் வெளிப்படையாகவே விடுக்கப்படுகின்றன. பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர்கள் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். கடந்தவருடம் மூதூரில் பதினேழு பணியாளர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமுட்பட நிறைய நடந்துவிட்டன. உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசகூலிப்படையான கருணா கும்பலால் தமிழர்புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் பலர் கடத்தப்பட்டு, பின் சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில் மிகுதி அனைவரும் கொல்லப்பட்டனர். அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் யாருமே பணியாற்ற முடியாதபடி உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமக்கு எதுவுமே தெரியாதமாதிரி அரசு நடித்துக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஏராளமான சம்பவங்களின் தொடர்ச்சியாக நான்கு நாட்களின்முன் கொழும்பில் வைத்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப்பணியாளர்கள் இருவர் கடத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைகளிலும், சூத்திரதாரிகள் யாரென எல்லோருக்கும் தெரியும். இக்கொலைகள் நீண்டதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமே. கல்வியாளர்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள், மாணவர்கள் என பலரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரும் கொலைப்பட்டியலோடு அரச இயந்திரம் செயற்படுகிறது. கடந்த ஆவணியில் காணாமற்போன அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தை கொலைசெய்யப்பட்டுவிட்டாரென்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல தமிழரின் சுயநிர்ணயத்துக்காகக் குரல் கொடுத்த பெளத்த பிக்கு ஒருவர் கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெயர் விவரங்களோடு வெளிப்படையாகவே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்கள். உயிர் ரீதியான மிகப்பெரும் அச்சுறுத்தலை அரசகட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் என்ற ஒரு காரணத்தாலேயே தனது பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் மறைக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறது. அதே காரணத்தைக்கொண்டு சில முட்டாள்களால் அரசாங்கத்தை நல்லதோர் அமைப்பாகச் சித்தரிக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறதோடு, போராடும் தரப்புக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ஆயுதத்தைக் கீழே போடுங்கள்; பேசித் தீருங்கள்; அகிம்சை வழிக்கு வாருங்கள்; என்று உபதேசம் செய்யவும் முடிகிறது.


பின்னிணைப்பு:
Tamilnet: ICRC pays homage to slain employees

தொடர்புடையதாக மலைநாடான் எழுதிய இடுகை:

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..

தன் நண்பன் கொல்லப்பட்டதைக் குறித்து சந்திரன் எழுதிய இடுகை:
மலிந்து போன இறப்புக்கள்........

Labels: , ,


Comments:
வன்னியன்!

மிக விரிவான பார்வை. பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பின்னால் உள்ள அரசியல் குறித்த சந்தேகம், இத்தகைய கொலைகளின்போது அவர்கள் காட்டும் மெத்தனத்தில் வலுவாகிறது. இதுவே இரு வெள்ளையர்களோ, வெளிநாட்டவரோ, கடத்தப்பட்டிருந்தால், அல்லது கொலை செய்யப்பட்டிருந்தால் இவர்கள் அணுகுமுறை வேறாகத்தானிருக்கும்.

பதிவுக்கு நன்றி.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]