Monday, November 23, 2009

புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும்

தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது.

இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அவ்வியக்கத்தைத் தப்பிப் பிழைக்க விடுவதில்லையென்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சக்திகள் விடாது முயற்சிப்பதை அறிய முடிகிறது. இயக்கம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொடர் சவால்களில் மிகப் பிந்தியதும் மிகவும் பாரதூரமான விளைவுகளைத் தரக்கூடியதுமான சிக்கல்தான் களத்திலிருந்து தளபதி ராம், நகுலன் போன்றோர் வெளியிடுவதாக வந்து கொண்டிருக்கும் அறிக்கைகள்.

இப்போது ராம், நகுலன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் அல்லது அவர்கள் வெளியிடச் சொன்னதாகச் சொல்லப்பட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் தனிப்பட்டவர்களோடு செய்து கொள்ளும் உரையாடல்களும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கைக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. சிலநாட்களின் முன்னர் குறிப்பிட்ட தளபதிகளும் பொறுப்பாளர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, தடுப்பு முகாமிலிருந்தவாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே ஓர் அறிக்கை மறுபுறத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

இறுதியாக தளபதி ராமினால் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் பொறுப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் சாடி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி, சொத்துக்கள் என்பன பேசப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமெனவும், தற்போது தாயகத்திலுள்ள போராளிகள் தொடர்பாகவோ, கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாகவோ, முகாம்களிலிலுள்ள மக்கள் தொடர்பாகவோ அக்கறையற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்களில் சில தமிழ்மக்களிடமும் உள்ள அபிப்பிராயங்களே. இதனால் மிக இலகுவாக இவை தமிழ்மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் செயற்குழுவுக்கும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் குறைக்க வழிசெய்யும் நிலையிலுள்ளன. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மிகக்கவனமாக அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஒருவகையில் இந்த அடியை வாங்க புலிகள் தகுதியானவர்களே. மறுபுறத்தில் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தளதிகளான இராம், நகுலன் உட்பட்டோர் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியமை ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை மக்களிடம் மறைத்து இவ்வளவு நாளும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தளபதி ராம் அனுப்பிய அவரின் தனிப்பட்ட அறிக்கையைக் கூட செயற்குழுவின் சார்பில் பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். தளபதி ராமோடு தொலைத் தொடர்பு வழியான தொடர்பினைக் கொண்டிருந்தார்கள்.

தமது பிடியிலிருந்த ராமையும் நகுலனையும் இன்னும் சில முக்கிய பொறுப்பாளர்களையும் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத் தரப்பு எஞ்சிய புலிகள் அமைப்பின் செயற்குழுவோடும் செயற்பாட்டாளர்களோடும் விளையாடிக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் (கே.பி யின் கைதுக்குப் பின்னர்) இவைகள் தெரிந்தும்கூட தமக்கு எதுவும் தெரியாதது போல புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இயக்கத்தின் சொத்துக்கள், நிதி வழங்கல் வழிமுறைகள், செயற்பாட்டாளர்கள் பற்றி சாடைமாடையாகக் கதைபிடுங்க அவர்களும், அத்தருணங்களில் இலாவகமாகத் தப்பி இவர்களுமென இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இவ்வளவு காலம் நீண்டிருந்ததே ஆச்சரியம்தான்.

இப்போது மாவீரர் நாளையொட்டி இந்தக் கண்ணாமுச்சி விளையாட்டு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் தமிழ்மக்களுக்கான புலிகளின் மாவீரர்நாள் செய்தி ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. அவ்வறிக்கையில் சொல்லப்படும் விடயங்களில் தமது நோக்கத்தைத் திணிக்க முயன்று தோற்றுப் போன நிலையில் சிறிலங்கா அரசதரப்பு தனது தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதன்படி மாவீரர் நாளுக்கான உரை வழமைபோல் இடம்பெறும் என்ற அறிவிப்பு தளபதி ராமின் பெயரால் நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழுவால் விடுக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் எச்சரிக்கையடைந்து கொண்டன. சில ஊடகங்கள் மட்டும் அதை வெளியிட்டு, பின்னர் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க அவ்வறிக்கையை நிறுத்திக் கொண்டன.

இனிமேலும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர முடியாத நிலையில்தான் புலிகள் இயக்கம் உண்மையை ஊடகங்களுக்குத் தெரிவித்தது. அதை சில ஊடகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிட்டன. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்ததைப் போல் மறுதரப்பிலிருந்து உணர்ச்சிமயமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது. முதலில் இராணுவ, புவியியல் நிலைமைகளைக் கொண்டு சிலவற்றை ஊகிக்க முற்படுவோம்.

மே மாதம் 18 ஆம் நாளோடு வன்னி முழுவதும் சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்தது. அதற்கு முன்பே தளபதி ராம், நகுலன் ஆகியோரோடு சில நூறு போராளிகள் அம்பாறையை மையமாக வைத்துச் செயற்பட்டு வந்தார்கள். அம்பாறையில் இருந்த புலிகளின் இராணுவக் கட்டமைப்பைச் சிதைக்க சிறிலங்கா அரசபடை தன்னாலான முயற்சிகளை எடுத்தது. கஞ்சிக் குடிச்சாறு வனப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டைகளை நடத்தியதும், அங்கே பல சண்டைகள் நடந்ததும் நாமறிந்ததே.

இந்நிலையில் வன்னிப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர் மிகப்பெரிய ஆளணிவளத்தோடிருந்த சிறிலங்கா இராணுவம் தனது அடுத்த நடவடிக்கையாக கிழக்கின் காடுகளில் இருக்கும் தளபதிகளையும் போராளிகளையும்தான் வேட்டையாடியிருக்கும். வன்னியில் உக்கிரச் சமர் நடந்துகொண்டிருந்தபோதே தனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி வளத்தோடு அம்பாறைக் காடுகளில் தேடுதல் வேட்டையிலீடுபட்ட அரசபடை, பின்னர் அப்படியெதுவும் செய்யாது பேசாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியின் அழிவுக்குப்பின்னர் அம்பாறைக் காடுகளில் சண்டைகள் நடந்ததாக இருதரப்பிலிருந்தும் தகவல்களில்லை. சுமார் ஆறுமாதகாலமாக தளபதி ராமையும் ஏனையவர்களையும் செயற்பட விட்டுக்கொண்டு அரசபடை பேசாமலிருந்தது என்பது நம்புவதற்குக் கடினமே.

இதே காரணத்தை வன்னியிலும் பொருத்திப் பார்த்து நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும். வன்னிக் களத்திலே தலைவரோ முக்கிய தளபதி யாரேனுமோ இறக்காமல் தப்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கோ காடுகளுள்தான் மறைந்திருக்கிறார்கள் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் சிறிலங்கா அரசபடை இவ்வளவு காலமும் பேசாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தளபதிகளல்லாதவர்களைக் கொண்ட மிகச் சிறு அணிகள் சிலவேளை தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டேயன்றி வேறு சாத்தியங்களில்லை. இந்திய இராணுவக் காலப்பகுதியை உதாரணப்படுத்தும் காலம் இதுவன்று. சிறிலங்கா அரசபடையினரின் ஆட்பலம், நவீன வசதிகளைக் கொண்ட நுட்பப் பலம் என்பன இன்றைய நிலையில் மிகமிக உயர்ந்த நிலையிலேயே உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மேற்படிச் சந்தேகம் இப்போதன்று, முன்பே விடயம் தெரிந்தவர்களால் கதைக்கப்பட்டதுதான். காடுகளில் சண்டை நடப்பதாகத் தன்னும் செய்திகளைக் கசிய விடுவதன் மூலம் தமது சூழ்ச்சிக்கான நம்பகத்தன்மையைப் பேண அரசு முயற்சிக்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை எங்கள் மேல்!

சரி, இனி தற்கால விடயத்துக்கு வருவோம்.
ராமின் பெயரால் வெளியிடப்பட்ட, வெளியிடப்படும் அறிக்கை பலரிடையே சலனத்தை எற்படுத்தியிருக்கிறதென்பது வெளிப்படை. முன்னாள் இயக்க உறுப்பினர்களாகவும் தற்போதைய செயற்பாட்டாளராகவுமுள்ளவர்கள் கூட இவ்வறிக்கையை நம்பத் தலைப்பட்டுள்ளார்கள் என்பது வேதனையே. பதிவர் சாத்திரியும் அவர்களுள் ஒருவர். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பலவற்றை நாமும் பேசுகிறோம்தான். அதற்காக தவறான இடத்திலிருந்து வருமோர் அறிக்கைக்கு நாம் ஆதரவு வழங்கி எதிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகாமலிருப்பது முக்கியமானது. அதுவும், இதற்கு முந்திய அறிக்கையில், மாவீரர் தினத்தில் கொள்கை விளக்க அறிக்கை வெளிவரும் என்றுகூடப் போடாமல், 'உரை' நிகழ்த்தப்படும் என்று எழுதப்பட்ட பின்னரும் அவ்வறிக்கையை நம்புவது ஏனோ தெரியவில்லை. தலைவரின் இடத்திலிருந்துகொண்டு உரை நிகழ்த்தக்கூடியவராகத் தன்னைக் கருதிக் கொள்பவரில்லை ராம் என்பது அவரையறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியொன்று வந்தால் மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அடுத்த கேள்வி.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமாகவும், நேர்மையாகவும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட இந்த இராணுவ இழப்பென்பது திடீரென ஏற்பட்ட ஒன்றன்று. அதற்கான அத்திவாரம் முன்பே போடப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடும் திறமையோடு எதிரியால் நகர்த்தப்பட்ட காய்களும், அவற்றை முறியடிக்கத் தவறிய எமது தவறும் முக்கியமானவை. வன்னியின் வீழ்ச்சிக்கு முன்பே எமக்கான ஆப்பை இறுக்கிவிட்ட எதிரியின் நகர்வுகள், அதில் பகடைக்காயாக்கப்பட்ட எமது போராளிகள், பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிட வேண்டும். நேர்மையாகவும் தீவிரமாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த தளபதி ராம் போன்றவர்கள் எவ்வாறு சூழ்ச்சியின் வலையில் சிக்கவைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள், ஏனையவர்கள் எப்படி பிடித்துக் கொடுக்கப்பட்டார்கள், முழுவிருப்போது எதிரியியோடு இணைந்து பணியாற்றிய துரோகிகள் யார் என்பவனவற்றையும் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டிய நேரமிது. இனியும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு வேலைக்குதவாது.

எமது ஈழவிடுதலைப் போராட்டம் இனி எப்படிப் போகுமென்பது தெரியவில்லை. அதை ஒற்றைமாடாக இழுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் என்ன கதியாகுமென்று தெரியவில்லை. ஆனால் (குறைந்தபட்சம்) அவ்வியக்கத்துக்கு ஒரு பொறுப்புண்டு. நடந்ததைச் சொல்லுங்கள். புலனாய்வுப் பகுதியில் எதிரியை முறியடிப்பதில் தோற்றுவிட்டோம். அனால் என்ன நடந்ததென்பதையாவது மறைக்காமல் சொல்வது இயக்கத்தின் கடமை.

உண்மையைச் சொல்வதால் மக்கள் எம்மைவிட்டுப் போய்விடுவார்களென்ற பயம் வெகுளித்தனமானது. 'பொய்யைச் சொல்லுங்கள், கூட வருகிறோம்; உண்மையைச் சொன்னால் ஓடிப்போகிறோம்' என்று சொல்லும் மக்களை இழுத்துக் கொண்டு எங்கே போவது?

எமது இயக்கத்தின் மீதான எதிரியின் சூழ்ச்சித் திட்டங்களும், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும், அதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள், பலிக்கடா ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களுமடங்கிய விரிந்த அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து எதிர்பார்க்கிறோம்.

Labels: , , ,


Comments:
//
உண்மையைச் சொல்வதால் மக்கள் எம்மைவிட்டுப் போய்விடுவார்களென்ற பயம் வெகுளித்தனமானது. 'பொய்யைச் சொல்லுங்கள், கூட வருகிறோம்; உண்மையைச் சொன்னால் ஓடிப்போகிறோம்' என்று சொல்லும் மக்களை இழுத்துக் கொண்டு எங்கே போவது?//

ஈழப்போராட்டம் பற்றிய மிக ஆழமான ஒரு கருத்து இது.

ஆனால் நீங்கள் விளிக்கும், வேண்டிக்கொள்ளும் புலிகள் அமைப்பு எது என்று தான் புரியவில்லை.

இலங்கையில் உள்ளவர்கள் என்றால், பெரும்பாலும் தடுப்பு/புனர்வாழ்வு/விசாரணை முகாமில் தான் உள்ளனர்.

வெளிநாட்டில் என்றால் அதான் பார்க்கிறோமே..

வெளிநாட்டிலுள்ள எந்தவொரு தலைமையையும் நம்பும் நிலைக்கா இன்றைக்கு மக்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்?

களத்தில் சிந்திய மக்களதும் போராளிகளதும் ரத்தத்தை கூவி விற்று யாவாரம் செய்து பிழைத்துக்கொண்டவர்கள்தான் இவர்கள் எல்லோரும் என்பதை இன்று காலம் தோலுரித்துக் காட்டி வருகிறது.
 
புலத்துப் புலிகள் அனைவரையும் ஒரே கூட்டில் அடைத்துவிட முடியாது மயூரன். நேர்மையான, உண்மையான போராளிகளும் இருக்கவே செய்கிறார்கள். அதைவிட வன்னியின் கடைசிப் பொழுதுகளில் வெளியேற்றப்பட்டவர்கள் - குறிப்பாக எமது போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணத்தைச் சொல்லத் தகுந்தவர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்திருப்பதை அறிகிறோம். எனவே நம்பிக்கையானவர்கள் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
 
நன்கு சொத்துச்சேர்த்துக்கொண்ட, வெளிநாட்டு உளவு நிறுவனங்களோடு நெருக்கமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற, பலமான கடத்தல் வலைப்பின்னல்கள் உடைய பெரும் புள்ளிகளாக இருக்கும் புலத்துப் புலிப்பிரதிநிதிகளே மிகச் சக்திவாய்ந்த தரப்புக்களாக இன்று புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்.

இந்தத் தரப்புக்களுக்கு வெளியே இருக்கக்கூடிய ஏதோ ஒருவகையில் மக்களுக்கு நேர்மையான புலி உறுப்பினர்கள் இவர்களால் எல்லா வகையிலும் ஓரங்கட்டுப்படுவர்.

அதற்கும் மேலாக, களத்தில் நின்ற மக்களும் புலி உறுப்பினர்களும் இவர்களது இருப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய என்னத்தைச்சொன்னாலும் செய்தாலும் துரோகிப்பட்டம் கட்டப்பட்டு, அரச உளவாளி முத்திரை குத்தப்பட்டு பிரசாரம் செய்யப்படுவர்.

எனவே மக்களுக்கு உண்மையைச் சொல்லக்கூடிய "உத்தியோகபூர்வப்" புலி அமைப்பு என்று ஒன்று இருப்பதற்கான எந்தச் சூழலும் கிடையாது.
 
புலிகளின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துக்களைல் தம் பொறுப்பில் உள்ள அனைத்தையும் பொதுவான நம்பிக்கை நிதியம் ஒன்றில் வைப்பிட்டு, சட்டரிதியாக அதனை மகக்ளுடைமை ஆக்கி, உலத் தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி போன்ற பணிகளுக்குச் செலவிடும்படிச் செய்துவிட்டு,

இறுதி நேரத்தில் பிரபாகரனையும் தலைவர்களையும் அத்தனையாயிரம் மக்களையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்துச் சித்திரவதை செய்து கொலை செய்யத் தம்மை யார் தூண்டினார்கள் என்பதை உலகத்தமிழரிடம் சொல்லி பொதுவாழ்க்கைக்கு, தமிழ் மக்களுக்கான அரசியற் பணிகளுக்கு தம்மை எவர் அர்ப்பணிக்கிறாரோ அவரையே நேர்மையான புலத்துப்புலி என்று என்னால் கொள்ள முடியும்.
 
நேர்மையான ஒரு பார்வை.. என் மனதிலும் உள்ள பல கருத்துக்கள் கேள்விகள் இங்கே காணப்படுவதைப் பார்க்கிறேன்.

எனினும் எங்கள் விமர்சனங்கள் கணக்கிலேடுக்கப்படுமா?

முன்பெல்லாம் புலிகளை வாழ்த்தி எழுதியவர்கள் பலர் இன்று நடுநிலைவாதிகளாக மாறியுள்ளதையும், கண்மூடித் தனமாக எதிர்பதையும் காணும்போது சிரிப்பே எஞ்சுகிறது..
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]