Tuesday, February 15, 2005

வ.ஐ.ச.ஜெயபாலனும் ஜெயசிக்குறு காவியமும்...

வணக்கம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனை உங்களிற் பலபேருக்குத் தெரிந்திருக்கும். அவரை ஒருமுறை சந்தித்த அனுபவத்தையே இங்கே பதிகிறேன். அவர் வன்னி வந்து நின்றபோது புதுக்குடியிருப்பில் தற்செயலாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் எப்படியென்றால் எனக்குத் தெரிந்த ஒருவர் அவரோடு கதைக்க வேண்டும் (பேட்டியெடுத்தல் என்று சொல்ல முடியாது) என்று புறப்பட்டபோது அவரோடு ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

இருவருக்குமே ஜெயபாலனைத் தெரியாது. பத்திரிகைகளின் மூலமாக அறிந்திருக்கிறோமே தவிர அவரின் படைப்புக்களை அதிகம் வாசித்ததும் கிடையாது. (அவரின் பல படைப்புக்கள் பேசப்பட்டன என்பதும் குறிப்பாக “நெடுந்தீவு ஆச்சிக்கு” தமிழகத்திலே அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் என்பதும் தெரிந்திருந்தன) அந்த நேரத்தில் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த இரண்டொரு கவிதைகளையும் அறிந்திருந்தோம்.

அவர் வந்திருக்கிறார் என்று அறிந்து ஒரு மணிநேரத்திலேயே சென்றுவிட்டோம். அச்சந்திப்பு சும்மா ஒரு படைப்பாளனைச் சந்திக்கும் ஆர்வம் தானேயொழிய வேறெதுவுமில்லை. இவ்வளவுக்கும் நாம் இருவரும் படைப்பாளிகளோ விமர்சகர்களோ இலக்கியவாதிகளோ அல்லர். குறிப்பாகச் சொல்லப்போனால் ஜெயபாலனின் படைப்புக்களை நாம் வாசித்தே இருக்கவில்லை. (அவர் எழுதிய நெடுங்கவிதை வடிவிலான ஒரு நாவல்; பெயர் தெரியவில்லை. பாலியாற்றையும் ஒரு காதலியையும் போராட்ட ஆரம்ப காலத்தையும் கலந்து வந்திருந்தது. 1986இல். அதை மட்டுமே படித்திருந்தோம். “செக்குமாடு” எனக்குப்பிடித்திருந்தாலும் அதை இவர்தான் எழுதினார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.) எல்லோருக்கும் இருக்கும் பிரபல்யமான படைப்பாளியொருவரைச் சந்திக்கும் குறுகுறுப்பு மட்டுமே இதற்குக் காரணம்.

அரையடி நீளக்குடுமி வைத்திருந்தார். அன்பாக வரவேற்றார். பேச்சு இயல்பாகவே தொடங்கியது. ஈழத்து இலக்கியப் போக்குப் பற்றிக் கொஞ்சம் கதைத்தார். கவிதையில் முன்னேறிய அளவுக்கு பிற இலக்கியவடிவங்களில் முன்னேற்றமில்லை என்றார். புலம்பபெயர்ந்த இலக்கியச் சூழ்நிலை பற்றிச்சொன்னார். அடுத்த தலைமுறை தமிழ் தவிர்ந்த பிற மொழிகளில் இலக்கியங்களைப் படைக்கும்; அவற்றிற் குறிப்பிட்டளவு ஈழத்தைப்பற்றியதாக இருக்கும் என்றார். போராட்ட காலத்தில் வன்னியிலோ யாழ்ப்பாணத்திலோ உருவான படைப்புக்களை தான் படிக்கவில்லையாதலால் அவை பற்றிக் கருத்துக் கூற முடியாது; ஆனால் கருணாகரன் நிலாந்தன் போன்றோர் தரமான படைப்பாளிகளாக வெளியே அடையாளங் காணப்படுகிறார்கள் என்றார்.

இலக்கிய உலகில் அவரது தொடர்புகள், படைப்பாளிகளுடனான உறவுகள் என்று கதை மாறியபோது, சில படைப்பாளிகளைப்பற்றிச் சொன்னார். குறிப்பாக ஜெயக்காந்தனைப்பற்றி அதிகம் கதைத்தார். அவரின் படைப்புக்களைப் போலவே தலையிலும் கனம் அதிகம் என்றார். (தலைக்கனத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்). இலக்கியத்தைப்பற்றி எம்மோடு அதிகம் கதைக்க முடியாததால் சினிமா பற்றி கொஞ்சம் கதைத்தார். வன்னியில் சினிமாப்படங்கள் மீதான தணிக்கை சம்பந்தமாக விமர்சனம் செய்தார். நல்ல படங்களை வெளியிடுவதன் அவசியத்தைச் சொன்னதோடு சில படங்களை எடுத்துக்காட்டினார் (குட்டி, முகம், ஹேராம்) நல்ல சினிமா வன்னியில் உருவாக வேண்டுமென்பதைச் சொன்னார்.

நாம் அவரின் வன்னி வருகையை வழமை போல புலம்பெயர்ந்தவர்களின் வருகை போலவே நினைத்திருந்தோம். ஆனால் தான் வந்த காரணம் மிக முக்கியமானதென்று கூறினார். அதாவது தான் ஜெயசிக்குறு மீதான ஒரு காவியம் எழுதப் போவதாகவும் அதற்காகவே தான் வன்னி வந்துள்ளதாகவும் கூறினார். ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை தான் தமிழரின் மிகப்பெரிய வெற்றி என்றும் அது நிச்சயம் சரியான விதத்தில் பதியப்படவேண்டும் என்றும் கூறினார்.

பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது. அவரின் முஸ்லீம் மக்கள் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டோம். ஏனெனில் முஸ்லீம் பிரச்சினை பற்றி இவர் அதிகமாகவே கதைப்பவர் என்று முன்னரே கேள்விப்பட்டிருந்தோம். மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் கதைத்தார். “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். எல்லாவற்றையும் மறந்து இனி நல்ல உறவைப் பேணுவோம் என்று எழுந்தமானமாக சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது நீண்ட கால அடிப்படையில் பயன் தரப்போவதுமில்லை. இருதரப்புமே நடந்தவைகளைப்பேசி விமர்சனப்பாங்கோடு அணுகி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இருதரப்புமே தம்மால் மற்றவர்க்கு இளைக்கப்பட்ட தீமைகளை ஏற்றுக்கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்” என்று சொன்னார். தமிழர் தரப்பிலேயே கூடுதல் தவறிருப்பது போன்ற பார்வை அவரிடமுள்ளதாகத் தோன்றுகிறது. (நேரடியாகக் கூறுவதில் அவருக்குள்ள சங்கடம் தெரிந்ததே)

யாழ்பாண மேலாதிக்க வாதத்தைப்பற்றிக் காட்டமான விமர்சனம் கொண்டிருந்தார். எனினும் அவர் எழுதிய காலப்பகுதிக்கும் தற்போதிருக்கும் காலப்பகுதிக்குமிடையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டியபோது, அதை ஏற்றுக்கொண்டார். எனினும் முழுமையான மனமாற்றத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். அவரின் வாதங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை அடிப்படையாக வைத்தே இருந்தது.

அவர் படைப்பாளி என்பதற்கப்பால் விடுதலைப்புலிகளல்லாத மாற்றுப் போராட்ட இயக்கமொன்றின் முன்னை நாள் உறுப்பினர் என்ற வகையில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். இயன்றவரை பதிலளித்தார். ஆனால் இடையிலேயே தான் வெளியேறி விட்டதாக அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். மாற்றுக் குழுக்கள் மீதான விடுதலைப்புலிகளின் தடையும் அக்குழுக்கள் ஒழிக்கப்பட்டமையும் குறித்து கேட்டபோது, “இக்கேள்வி வெளிநாடுகளில் அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் கேள்வி. எப்போதும் என் பதில் இதுதான். இது தவிர்க்க முடியாதது. ஒரு நிலையில் ஏதோ ஒரு தலைமை தான் போராட்டத்தைப் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை வரும். அப்படி வந்த நிலையில் தான் புலிகள் முந்திக்கொண்டார்கள். இல்லாவிட்டால் ஏனைய இயக்கங்களும் இதையே தான் செய்திருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் முந்தியதால் இற்றை வரையான போராட்டம் நடந்தது. வேறெவரும் முன்னெடுத்திருந்தால் பாதியிலேயே திசை திரும்பியிருக்கும்.” என்று பதிலளித்தார்.

ஆரம்பத்தில் தனிநாடு தேவையில்லையென்ற சோசலிசப் பாதையில்தான் தான் இருந்ததாகவும் யாழ் நூல் நிலைய எரிப்பின் பின் தான் தனிநாடு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாகவும் கூறினார். எனினும் ஆரம்பகால கதைகளின்போது சற்று இடறுப்படுவது போல தெரிந்தது.
விடுதலைப்புலிகளின் போர்த் தந்திரத்தையும் விமர்சித்தார். தான் ஒரு பூகோளவியலாளன் என்ற அடிப்படையில் சில கருத்துக்களைச் சொல்ல முடியுமென்று சொன்னதோடு மட்டுமன்றி, யாழ்ப்பாண பூகோள அமைப்புக்கு ஏற்றமாதிரி எப்படிச் சண்டை பிடிக்க வேண்டுமென்றும் மனிதர் விளக்க ஆரம்பித்துவிட்டார். அது எமக்குத் தேவையில்லாததால் அத்தோடு அவ்விடயத்தைக் கைவிட்டோம். அனேகமாக அவரிடம் மாட்டிய புலி உறுப்பினர் யாருக்காவது வகுப்பு நடந்திருக்கும்.

அவரிடம் அவரைப்பற்றி வேறு சில கதைகள் கேட்க இருந்தாலும் கேட்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று முறை சந்திப்பு நடந்திருந்தால் கேட்டிருப்போம். (அவர் பொட்டம்மானை விடுதலைப்புலிகள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக சஞ்சிகையொன்றில் ஒருமுறை கூறியதாக கதைகள் அடிபட்டதுண்டு. மேலும் தனிப்பட்ட சில சம்பவங்கள்) பிரியும் போது என் நண்பன் அவனது ஞாபக் கையேட்டை நீட்டியபோது “ஈழம் என் தொட்டில்; இலங்கை என் முற்றம்; தெற்காசியா என் வீடு; உலகம் என் கிராமம்” என்று எழுதினார். (இவ் வசனத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம். நினைவில் வைத்து எழுதுகிறேன்.)

இச்சந்திப்பு 2002 நடுப்பகுதியில் நடந்தது. ஏறக்குறைய ஆறு மாதத்தின் பின்பு பளை முகாம் தகர்ப்பு வெற்றி விழாவில் இவரைக் கண்டேன். ஒரு குடும்பத்தோடு நின்றிருந்தார் (மனைவி பிள்ளைகளாக இருக்க வேண்டும்) அவரைக்கண்ட மகிழ்ச்சியிலும் ஜெயசிக்குறு காவியம் பற்றி அறியும் ஆவலிலும் அவரைச்சந்தித்து என்னைத்தெரிகிறதா என்று கேட்டபோது, உற்றுப்பார்த்து விட்டு “இல்லையே தம்பி நீங்கள் ஆர்” என்றார். எனக்குச் சீ... என்று விட்டது. எனினும் என்னை அறிமுகப்படுத்தாமல் சாமாளித்து விட்டு வந்து விட்டேன். பிறதொரு நாளில் நோர்வேயைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அவரைப்பற்றிச் சொன்னபோது சிரிப்புத்தான் வந்தது.
அதாவது அவரும் ஜெயபாலனும் ஒன்றாக பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள் (பேருந்து என்று தான் நினைக்கிறேன்.) அப்போது ஜெயபாலன் அவர் இறங்க வேண்டிய தரிப்பிடத்துக்கு முன்னருள்ள தரிப்பிடத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார். பின்னொரு நாள் அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது சிரித்த படியே சொன்னாராம்: “இது கனதரம் நடக்கிறது. ஏதேனும் யோசினையில நாலஞ்சு தரிப்பு தாண்டி இறங்கி நடந்து வாறத விட கிட்டவாகவே நினைப்பு வாற இடத்திலயிருந்து இறங்கி நடக்கிறது பிரச்சினையில்லத் தானே

இப்போது நான் அறிய நினைப்பவை: ஜெயபாலன் ஜெயசிக்குறு காவியம் எழுதுகிறாரா? அவர் அதை எழுதுவதற்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்புக் கிடைக்கிறது. ஏனெனில் விடுதலைப்புலிகளின் தயவில்லாமல் அவரால் எதுவுமே எழுதமுடியாது. ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர் அக்காவியத்தை எழுதுவதைப்பற்றி கடுமையான சர்ச்சை நிலவக்கூடும். வேறு யாராவது அதை எழுத முயல்கிறார்களா? என்ன இருந்தாலும் பதிவாக்கப்பட வேண்டிய மிகமுக்கிய காலப்பதிவு அது.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: Kangs(கங்கா)

//ஜெயபாலன் ஜெயசிக்குறு காவியம் எழுதுகிறாரா? அவர் அதை எழுதுவதற்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்புக் கிடைக்கிறது. ஏனெனில் விடுதலைப்புலிகளின் தயவில்லாமல் அவரால் எதுவுமே எழுதமுடியாது. ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர் அக்காவியத்தை எழுதுவதைப்பற்றி கடுமையான சர்ச்சை நிலவக்கூடும். வேறு யாராவது அதை எழுத முயல்கிறார்களா? என்ன இருந்தாலும் பதிவாக்கப்பட வேண்டிய மிகமுக்கிய காலப்பதிவு அது//

உங்கள் கேள்விதான் எனக்கும்?
நீங்கள் கதைத்ததை பற்றி இங்கு எழுதியதற்கு நன்றி.

17.36 15.2.2005
 
உங்கள் கேள்விதான் எனக்கும்?
நீங்கள் கதைத்ததை பற்றி இங்கு எழுதியதற்கு நன்றி.
 
எழுதிக்கொள்வது: ஒரு பொடிச்சி

I posted this before, it didn't got published! so I post this again:

நீங்கள் குறிப்பிட்ட அந்த நூல் 'ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்."
"வ.ஐ.ச.ஜெயபாலன் நிறைய 'காவியங்கள்' எழுதுவார்" என வம்புக்கு சொல்லலாம்தான். ஆனால் தமிழ்கூறும் நல்லுலகத்திற்காய் ஜெயபாலனிடம் இருப்பது அவரது வன்னிப்பின்புலத்தில்-நிலபிரபுத்துவக் குடும்ப மீறல்- இளங்கால இடதுசாரிச் சார்பு - மாற்றம் -> தமிழர் தேசியப் போராட்டம்-'' இடம்பெற்ற சமூக மற்றும் அவரது சுயவரலாற்று நூல்தான். (திண்ணையில் வந்த'சேவல் கூவிய நாட்கள்' ஒரு தரமான பிரதி). மற்றப்படி - நோர்வேயிலிருந்து ஒருவர் போயா 'ஜெயசுக்குறு காவியம்' எழுவேண்டும்?!

11.40 16.2.2005
 
This comment has been removed by a blog administrator.
 
தகவலுக்கு நன்றி பொடிச்சி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]