Friday, May 27, 2005

நீதி வென்றது???

பிந்துனுவெவ படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை.

"இதற்கெல்லாம் சட்டம் சரிவராது என்றால் சன்னம்தான் சரிவரும் என்று முடிவெடுப்பதில் தவறென்ன? அந்த நிலைமையைத் தோற்றுவித்தவர் யார்? "

சிறிலங்காவில் பிந்துனுவெவ எனும் இடத்தில் சிறைச்சாலையொன்று உள்ளது. அங்கு சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 27 இளைஞர்கள் ஒரே இரவில் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 17 வயதுக் “குழந்தையும்” அடங்கும். அதில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 41 பேரில் நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 2003 இல் தீர்ப்பளிக்கப்பட்டது. நேற்று அவர்களின் தண்டனைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. சட்டத்தரணிகளின் கூற்றுப்படி இனி மேல்முறையீடு செய்ய ஏதுநிலைகளில்லை. ஐ.நா. வில் மனுச்செய்யலாம் என்கிறார்கள். எதிர்பார்த்த முடிவுதான்.


இதுபோலவே ராஜபக்ச எனும் இராணுவ வீரனும் அவனுடன் சேர்ந்த மேலும் மூவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைவழக்கில் இத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னாலுள்ள மற்ற விதயங்கள் அப்படியே அடங்கிப்போய்விட்டன. அந்த இராணுவ வீரன் “தன் மேலதிகாரிகள் கொன்ற 400 பேர் வரையான சடலங்ளை தான் செம்மணியிற் புதைத்திருக்கிறேன்” என்று நீதிமன்றில் வைத்துச் சாட்சியம் சொல்லியும், எந்தப் பயனுமில்லை. இன்றுவரை யாழ்ப்பாணத்தில் 1996 இல் இராணுவத்தாற் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன எழுநூறு வரையான இளைஞர் யுவதிகளின் முடிவுகள் தெரியாது. அவர்களில் ஆக 16 பேர் மட்டும் கொல்லப்பட்டு விட்டார்களென்று ஆணைக்குழு கூறியுள்ளது. (மிகச்சாதாரணமாப் போய்விட்டது அந்தக்கொலைகள்) எட்டு வருடங்களாக அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறவோ அதைப்பற்றி அரசுக்கு அழுத்தங்கொடுக்கவோ எவரும் தயாரில்லை. மனித உரிமை பேசும் அமைப்புக்களும் நாடுகளும் வாளாவிருக்கின்றன. ஏறத்தாள அனைவரும் இறந்துவிட்டனர் என்ற நிலைமைக்கு அந்தப் பெற்றோர்கள் வந்து விட்டனர்.
வன்னியில் மன்னார்கடலிலும் முல்லைத்தீவுக் கடலிலும் அடைந்துவந்த சடலங்கள் சிலவற்றைக் கண்டெடுத்த போதே எமக்குப் புரிந்து விட்டது, அவை யாழில் கைதுசெய்யப்பட்ட சிலரினதுதான் கடலில் கொண்டுபோய் வீசப்பட்டிருக்கின்றனவென்பது. அப்பட்டமான ஒரு மனித அழிவை எல்லோரும் வேடிக்கை பார்த்துநிற்கும் கொடுமை இது. இதற்கு அரசியல் வழியில் நீதிகிடைக்குமென்பதெல்லாம் வெறும் பகற்கனவு. அவர்கள் கொல்லப்படவில்லையென்றால் எங்கே வைத்திருக்கிறார்கள்? எழுநூறு பேர் என்பது மிகச்சிறிய கணக்குப்போலும். அல்லது ஏதாவது படித்துப் பட்டம்பெற்றவர்களாயும் மனித உரிமைபற்றிக் கதைத்தவர்களாயுமிருக்க வேண்டும்போலும். இல்லை புலிகளை எதிர்த்து ஏதாவது கதைத்திருந்தால் இவ்விடயத்தில் ஏதாவது செய்யலாமென்று நினைக்கிறார்கள்போலும்.

இப்போது பிந்துனுவெவ படுகொலைகள் பற்றிய தீர்ப்பு இன்னொருமுறை நீதியை நிலைநாட்டியிருக்கிறது. அப்பட்டமான ஒரு படுகொலையைச் சாதாரணமாக முடித்துவிட்டார்கள். சிறைச்சாலைக்குள்ளேயே அனைவரும் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளார்கள். தப்பிய பலர் வாக்குமூலமும் கொடுத்துவிட்டார்கள். நீதிமன்றில் குற்றவாளிகளில் நால்வருக்கு மரணதண்டனையும் விதித்துவிட்டார்கள். இப்போது அனைத்தையும் திருப்பிவிட்டார்கள். அப்போ அந்தக் கொலைகளுக்கு முடிவென்ன? எதுவுமில்லை. ஆத்திரமடைந்த சில பொதுமக்களால் அந்தப் 27 பேரும் கொல்லப்பட்டார்கள். அவ்வளவே. இதில் குற்றம்சாட்டவோ தண்டனையளிக்கவோ எதுவுமில்லை.

2003 இல் இந்நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்ட போது ஈழநாதத்தில் 'பிரபுத்திரன்' எழுதிய பத்தியில் “இத்தண்டனை வெறும் கண்துடைப்புத்தான். இன்னும் இருவருடத்தில் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான பேரங்கள் பேசி முடிந்தபின்புதான் இத்தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தண்டனை மூலம் தமிழர்கள் மேல் மேலும் அரசபயங்கரவாதம் தன் கோரமுகத்தைக் காட்டப்போகிறது.” என்று எழுதப்பட்டிருந்தது. எவ்வளவு சரியான வார்த்தைகள்? 90 இல் காரைநகர் கற்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் இளைஞன் ஒருவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது சிறிலங்கா நீதிமன்றம். அவர்களின் நோக்கம் தெளிவானது. அதைப்பார்த்து வாய்மூடியிருக்கும்- ஆனால் ஒருதரப்புக்கு மட்டும் மனிதநேயத்தையும், ஜனநாயகத்தையும் போதிக்கும் சக்திகளின் நோக்கமும் தெளிவானது.

நீங்களே சொல்லுங்கள், இத்தனைக்குப்பிறகும் ஒருவனுக்கு (அவன் அடக்கட்படும் தமிழனாயிருக்கும் பட்சத்தில்) ஜனநாயகத்திலும் நீதியமைப்பிலும் நம்பிக்கை வருமா? பிந்துனுவெவப் படுகொலைக்கு என்ன முடிவு?

நீதிமன்றம் அவர்களைத் தண்டனையிலிருந்து மீட்டுவிடலாம். ஆனால் அவர்களால் மீள முடியாது. எங்காவது வெளிநாடு சென்று வாழ்வது உத்தமம். இன்றேல் தண்டனை அவர்களைத் தேடிவரும். இதற்கெல்லாம் சட்டம் சரிவராது என்றால் சன்னம்தான் சரிவரும் என்று முடிவெடுப்பதில் தவறென்ன? அந்த நிலைமையைத் தோற்றுவித்தவர் யார்? தோற்றுவித்துக்கொண்டிருப்பவர்கள் யார்?

இதே சிறைப்பொறுப்பதிகாரி ‘இனந் தெரியாதவர்களால்’ கொல்லப்படும்போது பல உலக நாடுகளும் அமைப்புக்களும் கூக்குரல் இடப்போவது மட்டும் உறுதி. அவர்களுக்கென்ன வாங்கும் சம்பளத்திற்குக் கூப்பாடு போடவேண்டியது கடமை. இதே சம்பவத்திற் கொல்லப்பட்ட 17 வயதுக் “குழந்தை” பற்றி எந்த அக்கறையும் அவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் இதே காரணிகளிலிருந்து தன்னையும் தான் சார்ந்தவர்களையும் காக்க ஆயுதமேந்தும் “குழந்தை” மட்டுந்தான் அவர்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். ஏனெனில் அவர்கள் உயிரை இழப்பதொன்றும் பெரிய விசயமில்லை. தமது 'சிறுபராயத்தை' இழக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை. அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. (இன்னும் குழந்தை என்ற சொல்லைத் தமிழில் இவர்களைக் குறிக்கப் பாவித்துக்கொண்டிருக்கும் பண்டிதர்களைக் குறித்தும் கேட்கிறேன்)

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.abc.net.au/ra/news/stories/s1379012.htm
http://www.news.tamilcanadian.com/news/2000/12/20001203_5.shtml
http://www.tamilcanadian.com/pageview.php?ID=2105&SID=257
http://www.tamilcanadian.com/page.php?index=342
http://www.news.tamilcanadian.com/news/2001/09/20010928_1.shtml

Labels: , ,


Comments:
Bindunuwewa_massacre/
 
ஒளித்துப்பிடித்து
 
மேற்கூறியது நானே
 
இணைப்புக்களுக்கு நன்றி பெயரிலி.
ஒழித்துப்பிடித்து நான் ஏற்கெனவே தரவிறக்கிப் பார்த்த படம். அதை வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
 
பதிவுக்கு நன்றிகள் வன்னியன். இங்கே பேபி பிரிகேடுகளைப் பற்றிபேசத்தெரிந்த (கற்றுக்கொடுக்கப்பட்ட) பலருக்கு பேபி படுகொலைகளைப் பற்றி பேச நா எழாது. அவ்வாறு சிந்திப்பதுதான், மார்க்சிய, காந்திய வழிவந்த அறவழி.அவ்வாறுதான் தமிழர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதுதான் தமிழக ஊடக மையங்களைப் பற்றியிருக்கும் சக்திகளின் விருப்பமும் கூட.

அவ்வளவு ஏன் இங்கேயேயும் ஸ்டென்ஸ் பாதிரியார் கொலைவழக்கில் சத்தமே இல்லாமல் கொலையாளி தூக்குஇல் இருந்து விடுவிக்கப்பட்டான், மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதெற்கெல்லாம் யார் காரணம், அதன் பின் உள்ள நோக்கம் என்ன என்று கேட்போமானால் நாம் சமூக நல்லினக்கத்தை குலைக்கிறோம், சாதி உணர்வை எழுப்புகிறோம் என்றெல்லாம் so called நடுநிலையாளர்களும், அன்பு வழி மட்டுமே சிந்திப்பவர்களும் அழுது புலம்புவார்கள்!
 
பின்னூட்டத்துக்கு நன்றி தங்கமணி.
ஒருவன் பயங்கரவாதியென்று பிடித்து வைக்கப்படவும் சித்திரவதை செய்து கொல்லப்படவும் அவனது "குழந்தைத்தனம்" பிரச்சினையாக இருந்ததில்லை. அப்படிக்கொல்லப்படும்போது அவன் "குழந்தையாக" பார்க்கப்படுவதுமில்லை. ஆனால் தன்னைக்காத்துக்கொள்ள முற்படும்போதுதான் அவன் குழந்தையாகிறான்.
கொல்லப்பட்ட பாதிரியாரின் வழக்குச்செய்தியையும் பார்த்தேன்.

பின்னூட்டமிட்ட சாராவுக்கும் நன்றி. ஏதோ எம்மால் முடிந்தது குறைந்தபட்சம் இந்தப் பதிவிடுதலே.
 
எழுதிக்கொள்வது: Eelavan

அவசியமான பதிவு.
நன்றி.

13.23 29.5.2005
 
ஹ்ம். இந்தப் பின்னூட்டம்தான் ஈழப் போராட்டத்துக்கு என்னால் கொடுக்க முடிந்த தார்மீக ஆதரவு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]